Thursday, January 26, 2012

முல்லை-பெரியாறு அணை பிரச்னை: கேரள மற்றும் தமிழக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் வர்க்கத்தின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்


தமிழக மற்றும் கேரள மக்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களுக்கிடையில் கடுமையான வெறுப்பையும் பூசலையும் உருவாக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் போக்குகள் முல்லை பெரியாறு அணையினை மையமாக வைத்துத் தற்போது இரண்டு மாநிலத்தையும் சேர்ந்த அரசியல் வர்க்கத்தினரால் கிளப்பிவிடப் படுகிறது. 

தங்களது தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளக் கூடிய கட்சிகளும் இணைந்துள்ளன. 

Saturday, January 14, 2012

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கான அனுமதியின் பின்னணியும் எதிர்க்கட்சி அரசியலுக்கு அது பயன்படுத்தப்படும் விதமும்


சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 51 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை அனுமதிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் ஒருங்குதிரண்டு அம்முடிவுக்கு எதிரான தங்களது எதிர்ப்புக் குரலை விண்ணதிர முழக்கிக் கொண்டுள்ளன. நாடாளுமன்றம் இதை மையமாக வைத்து முடக்கப்பட்டுவிட்டது. 

இதற்கான எதிர்ப்புக் குரல் பல மாநில அரசாங்கங்களிடமிருந்தும் பெரிய அளவில் கிளம்பியது. காங்கிரஸ் கூட்டணியில் இப்போது வரை இடம் பெற்றிருக்கும் மம்தா பானர்ஜி கூட இதை எதிர்த்தார். தமிழக முதல்வரும் இதை அனுமதிக்கப் போவதில்லை என்று எவ்வகைத் தயக்கமுமின்றி அறிவித்தார். 

அவசர நிலையின் போது சிறை சென்ற தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் முன்னாள் முதல்வரின் கருத்துக்கள்


சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் அந்திமந்தாரை என்ற ஒரு திரைப்படம் வெளிவந்தது. அது அந்த ஆண்டின் சிறந்த தமிழ்மொழித் திரைப்படமாக மத்திய அரசால் கருதப்பட்டு அதற்கான விருதும் அப்படத்திற்கு வழங்கப்பட்டது. 

அந்தப்படம் விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் அவருடைய வாழ்வின் கடைசிக் காலத்தில் படும் சிரமங்கள் குறித்தது. அவர் போற்றிப் பராமரித்த மதிப்புகளுக்கும் கருத்துக்களுக்கும் இன்றைய சமூகத்தில் எவ்வாறு இடமில்லாமல் போய்விட்டது என்பதை விளக்கும் கதை. 

அதில் ஒரு காட்சியில் அரசியல் வாதி ஒருவரின் முறை தவறிய செயலை எதிர்த்து அறவழியில் போராடும் அவருக்கும் அந்த அரசியல் வாதிக்கும் இடையிலான உரையாடல் ஒன்று வரும். அந்த உரையாடலில் அந்த அரசியல்வாதி அவரிடம் இத்தனை ஆண்டுகாலம் சிறையில் இருந்தவன் என்று நீ மட்டும் பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை; நானும் கூடச் சிறை சென்றவன்தான் என்று கூறுவான். 

மக்கள் மீது தருணம் பார்த்துத் தாக்குதல் தொடுத்துள்ள தமிழக அரசு


உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த போது நகத்தில் இட்ட மை உலர்வதற்கு முன்பாகவே தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசு தாங்கொண்ணாச் சுமைகளைத் தமிழக மக்களின் மேல் சுமத்தியுள்ளது. இதுவரை கண்டும் கேட்டும் இராத அளவிற்குப் பேருந்துக் கட்டண உயர்வு மிக அதிக அளவிற்கு பால் விலை உயர்வு ஆகிய உயர்வுகளை அறிவித்துள்ளது. வெகு விரைவில் மின் கட்டண உயர்வும் வரும் என்று கூறியுள்ளது. 

காத்திருந்து ஏற்றிய சுமை

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியான மாணவர்களுக்கு லேப் டாப் வழங்குவது, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாகவே அரிசி வழங்குவது போன்றவற்றைச் செயல்படுத்தத் தொடங்கி ஒரு மக்கள் ஆதரவு அரசாங்கமாகத் தன்னைக் காட்டிக் கொண்ட அ.இ.அ.தி.மு.க. அரசு அந்தப் பின்னணியில் உள்ளாட்சித் தேர்தல்களையும் நடத்தியது. 

பாப்பையாவின் பட்டிமன்றம்: ஒரு அலசல் – A. ஆனந்தன்


சமூகம் சரியானதாக இல்லாவிடில் குடும்பம் சரியானதாக இருக்க முடியாது : இதனை மறுப்பவர்கள் அவர்களையும் அறியாமல் ஆளும் வர்க்கத்தின் கருத்து உற்பத்தியாளர்களாவதைத் தவிர்க்க முடியாது

நமது ஊடகங்களில் மிக அதிகம் மக்கள் மனதில் செல்வாக்கு செலுத்துவதாக இருப்பது மின்னணு ஊடகங்கள். அதில் தொலைக்காட்சியின் செல்வாக்கு மிக அதிகமாக மக்களின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது.  காட்சி ஊடகங்களில் தற்போதைய இளைய தலைமுறை ரசிப்பது பெரும்பாலும் திரைப்படம் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளே. ஊடகங்களில் வரும் செய்திகள் மற்றும் சமூகம் குறித்த நிகழ்ச்சிகளைப் பார்ப்போர் மிகப் பெரும்பாலும் நடுத்தர வயதினரே. அவர்களில் அலுவலகங்களில் வேலை செய்வோர் குறிப்பிடத்தக்க பகுதியினர் ஆவர். மத்தியதர வர்க்க அலுவலகம் செல்வோரைப் பொறுத்தவரையில் அவர்கள் குறிப்பிட்ட எந்த அமைப்பையும் சேராதவர்களாக இருந்தால் தொலைக்காட்சிச் செய்தி ஊடகங்களின் கருத்தே அவர்களது கருத்தாக ஆகி வருகிறது. 

ஊழலுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்து மக்களைத் திரட்டியவர் ஜே.பி. ஆட்சியைப் பிடிக்க ஊழல் முழக்கத்தை கையிலெடுக்கும் அத்வானி


திருடன் ஒருவன் பலர் அவனை விரட்டும் போது ஒரு கட்டத்தில் விரட்டுபவர்களுக்குத் தெரியாமல் அவர்களோடு சேர்ந்து கொண்டு திருடன் திருடன் என்று அவனும் கூறிக்கொண்டு ஓடித் தப்பிக்கும் காட்சியை அடிக்கடி திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். நமது நாட்டின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால் அக்காட்சி தான் நினைவிற்கு வருகிறது. 

பி.ஜே.பி. கட்சியின் முக்கிய தலைவரும் குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதல்வருமான திரு நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல விரும்பிய போது அவருக்கு அமெரிக்க அரசு விசா கொடுக்க மறுத்தது. அது மட்டுமல்ல அக்கட்சியின் மிக முக்கிய தலைவரான எல்.கே.அத்வானி அவர்கள் லண்டன் சென்ற போது அங்கு கடுமையான மக்களின் எதிர்ப்புகளை அவர் சந்திக்க வேண்டிருந்தது. அப்போது அவர் வெளிப்படையாகவே இந்தியாவில் அவரது கட்சியினரால் நிகழ்த்தப்பட்டதாகக் கருதப்பட்ட சம்பவங்களுக்காக மன்னிப்புக் கோரினார். 

Friday, January 13, 2012

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்: ஒரு ஆய்வு


கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தற்போது ஒரு முக்கியத் திருப்பத்தை எட்டியுள்ளது. அதனை எதிர்த்த போராட்டம் எந்த வகையான எதிர்ப்பும் இன்றி அவ்வட்டாரத்தைச் சேர்ந்த பல கிராம மக்களின் ஆதரவுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது அதற்கு ஆதரவு இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கமும் சில மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் அதிபர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்ற பெயரில் அணுமின் நிலையம் உடனடியாகத் துவக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக் குரலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

அணுஉலையை எதிர்த்த போராட்டத்திற்கான ஆதரவு மேத்தா பட்கர், அருந்ததிராய் அது தவிர ஓய்வு பெற்ற அணு விஞ்ஞானிகள் சிலர் போன்றோரிடமிருந்து முதலில் வந்தது. அப்போதெல்லாம் அணுஉலைக்கான ஆதரவுக் குரல்கள் அந்த அணுமின் நிலையத்தைச் சேர்ந்த இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடமிருந்தே வந்து கொண்டிருந்தன. தற்போது அனைவராலும் அறியப்பட்ட விஞ்ஞானியும் நமது முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் போன்றவர்களிடமிருந்தும் அணுஉலைக்கு ஆதரவான குரல்கள் வரத் தொடங்கியுள்ளன. 

நாட்டிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்குயிலே...


மாபெரும் ஆங்கில நாடக ஆசிரியரான வில்லியம் ஷேக்ஸ்ப்பியர் தனது நாடகம் ஒன்றில் கூறினார் இந்த உலகம் ஒரு நாடக மேடை அதில் வசிப்பவர் அனைவரும் நடிகர்கள் என்று. அவர் ஒரு ஆழமான பொருளுடன் அந்தக் கருத்தைக் கூறினார். அதாவது நாடகங்களில் ஒவ்வொரு காட்சியும் வேகம் வேகமாக மாறிக் கொண்டேயிருக்கும். அதைப்போல் தான் இந்த உலகில் நடக்கும் நிகழ்வுகளும் கூட. அவற்றில் முக்கியப் பங்காற்றும் மக்களும் நாடக நடிகர்கள் போல் காட்சிக்குக் காட்சி மாறக்கூடியவர்களே என்று கூறினார். 

ஆனால் அவரது கூற்றில் பொதிந்துள்ள ஆழமான தத்துவார்த்த அம்சத்தை எடுத்துவிட்டு இந்த உலகத்தை ஒரு நாடக மேடை என்று ஒரு மலிவான அர்த்தத்தில் அதாவது கூத்து மேடை என்று பார்த்தால் அதற்கு என்ன பொருளுண்டோ அத்தகைய மேடையாக நமது இந்திய நாடு ஆகிக் கொண்டுள்ளது. அதில் தேர்ந்த கதாபாத்திரங்களாக நமது அரசியல் வாதிகளும், அமைச்சர்களும் உள்ளனர். 

மார்க்கண்டேய கட்ஜூ அவர்களின் காட்சி ஊடகக் கவுன்சில் பரிந்துரை குறித்த நமது பார்வைஇந்தியப் பத்திரிக்கைக் கவுன்சிலின் தலைவரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ அவர்கள் சமீபத்தில் பத்திரிக்கைகளுக்கு எழுதிய ஒரு கட்டுரையில் எழுத்து ஊடகங்களுக்கு எவ்வாறு பத்திரிக்கைக் கவுன்சில் உள்ளதோ அதுபோல் காட்சி ஊடகங்களுக்கும் காட்சி ஊடகக் கவுன்சில் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்; ஏனெனில் அவை சமூகத்தின் முன்னேற்றத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பல செய்திகளைத் தருவனவாக ஆகிவிட்டன என்று கூறியுள்ளார். 

பொறியியல் தொழிலாளருக்கு ஓர் அறைகூவல்


பொறியியல் கல்வி பெற்றிருந்தும் வேலையின்றியும் கட்டுபடியான சம்பளமின்றியும் அல்லல்படும் தொழிலாளருக்கு ஓர் அறைகூவல் - இஞ்னியரிங் ஒர்க்கர்ஸ் யூனிட்டி சென்டர் சார்பாக
                                                      - தோழர் கதிரேசன் (பொறுப்பாளர் சி.ஒ.ஐ.டி.யு.)

தங்களது பிள்ளைகளைப் பொறியியல் கல்வி கற்றவர்களாக ஆக்கிய பெற்றோர் பூரித்திருந்த காலம் என்று ஒன்று இருந்தது. பொறியியல் கல்வி வழங்கிவிட்டால் அப்பிள்ளைகள் குறித்துக் கவலைப்பட ஏதுமில்லை; அவர்களின் எதிர்காலம் நிச்சயமானதாக ஆகிவிடும் என்று அவர்கள் கருதினர். ஆனால் இன்று பொறியியல் பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்ற மாணவர்களின் நிலை தலைகீழாக மாறியுள்ளது.

போராட்ட களத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்


தொழிலாளர் உரிமைக்குரல் வெளியில் வராவண்ணம் குரல்வளை நெறிபடும் சூழ்நிலையில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வளர்ந்துவரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்


நமது நாட்டின் தொழிலாளர் இயக்கங்களைப் பொறுத்தவரையில் தற்போது நிலவுவது ஒரு இருண்டகாலமே. உலகமயம் நிலவும் இன்றைய சூழலில் அந்நிய முதலீடுகளை வரவேற்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறோம் என்ற பெயரில் விஷேசப் பொருளாதார மண்டலங்கள் என்று மண்டலங்களை அரசாங்கங்கள் உருவாக்கியுள்ளன. 

அவற்றிற்குப் பல்வேறு விஷேசச் சலுகைகள் மற்றும் உரிமைகளையும் அரசு வழங்கிவருகிறது. இச்சூழலில் தொழிலாளர் இயக்கங்கள் அரசால் நேரடியாகவும் அரசியல் கட்சிகளால் மறைமுகமாகவும் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

94-வது நவம்பர் தினம்: தேனி நகரில் பொதுக்கூட்டம்இந்த ஆண்டு நவம்பர் தினம் நவம்பர் 20-ம் நாளன்று தேனி நகரில் ஒரு பொதுக்கூட்டம் மூலம் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. தேனியில் சி.டபிள்யு.பியின் செயல்பாடுகள் தொடங்கி ஒருசில ஆண்டுகளே ஆன நிலையில் தேனித் தோழர்கள் இப்பொதுக்கூட்ட ஏற்பாட்டினை பெருமகிழ்ச்சியுடனும் பெரும் முயற்சியுடனும் மேற்கொண்டனர். தேனி வட்டாரப் பொதுமக்களும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குத் தேவையான நிதி உதவியினைத் தந்து பேருதவி புரிந்தனர். 

தேனி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பகவதி அம்மன் கோவில் திடலில் அழகுற அமைக்கப்பட்டிருந்த மேடையில் மார்க்சிய ஆசான்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் படங்கள் அலங்கரிக்க அக்கூட்டம் நடைபெற்றது. 

தோழர் சங்கர் குஹா நியோகியின் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு:

உழைக்கும் வர்க்க அணிகளின் முன் நிறுத்தும் உயர்ந்த படிப்பினைகள்கடந்த அக்டோபர் 30 அன்று ஹிந்து நாளிதழில் 5கால் யானை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அந்தக் கட்டுரை 20 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஒரு தொழிற்சங்கத் தலைவர் குறித்தது. 

புரட்சி, சமூகமாற்றம் என்றெல்லாம் பலவாறு பேசும் எந்த அமைப்பினாலும் நினைவு கூரப்படாத வரலாறு அவருடையது. அவரது வரலாறு  தொழிலாளருக்காகப் பாடுபட்ட ஒருவரின் தனிப்பட்ட ஒரு வித்தியாசமான வரலாறு மட்டுமல்ல. இந்திய முதலாளி வர்க்கம் எத்தனை கொடுமையானது, இந்திய அரசு எந்த வர்க்கத்தினுடையது என்பதையும் தெளிவாக அம்பலப்படுத்திய வரலாறும் ஆகும்.