Wednesday, May 2, 2012

உரிமையுடன் வேண்டுகிறோம்

மாமேதை மார்க்ஸ் -ம் எங்கெல்ஸ்-ம் கம்யூனிசக் கருத்தோட்டத்தை முன் வைத்த போது அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்; வழக்குகள் பல அவர்கள் மீது தொடுக்கப்பட்டன. அப்போது வெறும் இருவராக மட்டும் இருந்த அவர்கள் கூறினர் "எங்கள் இருவரையும் கண்டு முதலாளித்துவ உலகம் அஞ்சுகிறது" என்று. அத்தகைய வலிமை மிக்கதாக அவர்கள் முன்வைத்த தத்துவம் இருந்தது. பொருளாதாரம், வரலாறு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தையும் விஞ்ஞான பூர்வமாக அலசி ஆராய்ந்த விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக அது விளங்கியது.

இந்தத்துறை குறித்த பார்வை மார்க்சியத்திற்கு இல்லை என்று எந்தத் துறையையும் கூற முடியாது. சமூகம் தற்போதிருக்கும் நிலையே நிரந்தரமானது என்று கருதிய அனைத்துக் கருத்துக்களும் அவர்கள் முன்வைத்த அசைக்க முடியாத வாதங்களால் நொறுக்கித் தகர்க்கப்பட்டன.  மாறுதல் ஒன்றே மாறாத விதி என்ற அடிப்படையில் மாற்றத்தை அங்கீகரிப்பதாக அவர்களது தத்துவம் இருந்ததால் அது வரட்டுச் சூத்திரங்களின் தொகுப்பாக இல்லை  பிடிவாதவாதமாகவும் ஆகவில்லை. அவர்களது கருத்தாய்விற்கு உட்படாதவையாக அவர்கள் காலத்தில் வெளிவந்த அரசியல், பொருளாதார , விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என எவையும் இல்லை.

அத்தகைய மகத்தான பாரம்பரியம் அவர்களது பொருத்தமிகு சீடர்களால் பலகாலம் தொடர்ச்சியாகக் கட்டைப்பிடிக்கப்பட்டது. மனிதனையும் சமூகத்தையும் அடிப்படையில் மாற்ற அவர்கள் முன்னெடுத்த மகத்தான பணி சிக்கல் சிரமமின்றித் தொடரவில்லை. அவர்களது பணியில் பின்னடைவுகள் பல இருக்கவே செய்தன. ஆனால் அப்பின்னடைவுகள் அனைத்தும் அடிப்படையில் நடைமுறை சார்ந்தவை. அடிப்படையில் அத்தத்துவம் இன்றுவரை சரியாக மட்டுமல்ல மிகச்சரியாகவே உள்ளது ; அது மனித சமூகத்தில் வர்க்கங்கள் அந்த வர்க்க பேதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு, வர்த்தகம், கடன் ஆகியவை உள்ளவரை பொருத்தமுடையதாகவே நிச்சயம் இருக்கும். பின்னடைவுகளை ஆய்வு செய்து அவற்றிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொண்டு அத்தத்துவம் வளர்ந்தது. இறுதியாக அது சந்தித்த மிகப்பெரும் பின்னடைவு சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசம் வீழ்ந்த நிலையில் அது எதிர்கொண்ட பின்னடைவாகும். அதிலிருந்தும் படிப்பினை எடுத்துக் கொண்டு அத்தத்துவம் நிச்சயம் வளரும். வெல்லற்கரிய கருத்தாயுதமாக விளங்கி பாட்டாளி வர்க்க இயக்கத்தை அது நிச்சயம் வலுப்படுத்தும்.

அத்தகைய தத்துவத்தை உரிய முறையில் உயர்த்திப் பிடிக்க , அது வழங்கும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டு இன்றைய சமூக நிகழ்வுகளை ஆய்வு செய்ய சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, அதனை இன்றைய வளர்ச்சிப் போக்குகளுக்கு உகந்த வகையில் செழுமைப்படுத்த இன்று பத்திரிக்கைகள் இல்லை. அதற்காக என்று ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கைகளும் அவற்றை ஆரம்பித்த அமைப்புகள் தடம் புரண்டதால், அந்தப் பாதை விலகலை நியாயப் படுத்துவதற்காக எழுதத் தொடக்கி சீர்திருத்த மற்றும் திருத்தல்வாதச் சரக்குகளை விற்பனை செய்யும் விளம்பரப் பிரசுரங்களாக ஆகிவிட்டன.

இந்நிலையில் மார்க்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் மகத்தான பணியினை தன்னால் இயன்ற அளவு செய்யும் இதழாக ' மாற்றுக் கருத்து இருமாத இதழ்' வந்து கொண்டுள்ளது. பத்திரிக்கை நடத்த வேண்டுமென்றால் அதற்கு அத்தியாவசியம் விளம்பரம் என்றாகிவிட்ட இன்றைய நிலையில் சமரச வாதத்திற்கும், விளம்பரம் தருவோருக்குப் பல்லிளிக்கும் முதுகெலும்பற்ற எழுத்துக்கும் எள்ளளவு கூட இடம் கொடுக்காது அந்த இதழ் நடத்தப்படுகிறது. இவ்வாறு ஒரு வரலாற்றுப் பணியினைச் சிரமேற்கொண்டு செய்து கொண்டிருக்கும் அந்த இதழ் இடைவெளியின்றி வெளிவரத் தங்களாலியன்ற நன்கொடை வழங்குவது உண்மையை உயர்த்திப் பிடிக்க விரும்புவோரின் தலையாய கடமையாகும். அக்கடமையினை ஆற்ற முன்வருமாறு பாட்டாளி வர்க்க சகோதரத்துவ உரிமையோடு வேண்டிக் கொள்கிறோம்.

புரட்சிகர வாழ்த்துக்களுடன்

ஆசிரியர் குழு
மாற்றுக்கருத்து

1 comment:

  1. hello sir/madam
    i read your post interesting and informative. i am doing research on bloggers who use effectively blog for disseminate information.i glad if u wish to participate in my research. if you are interested please contact me through mail. thank u

    ReplyDelete