Saturday, September 1, 2012

வழக்கு எண் 18/9 ஆர்ப்பாட்டமின்றி உள்ளத்தை உருக்கும் யதார்த்தமான சமூக விமர்சனம்


திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதும் நண்பர் ஒருவர் ஒருமுறை அவரைத் தனது திரைப்படத்திற்கு உரையாடல் எழுதுமாறு கேட்டுக் கொண்ட இயக்குனரோடு நடந்த உரையாடலைச் சுவையோடு கூறிக்கொண்டிருந்தார்.

அவர் திரைப்படம் எழுத வேண்டியிருந்த திரைக்கதையில் பாத்திரங்களாக வரும் கதாநாயகனும் வில்லனும் ஒரே கல்லூரியில் படிக்கக் கூடியவர்கள். அவர்களுக்கிடையில் குணநலன்களில் பெரிய வேறுபாடு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. என்னவோ கதாநாயகிக்கு கதாநாயகனைப் பிடிக்கிறது; மற்றவனைப் பிடிக்கவில்லை. உரையாடல் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட எனது நண்பருக்கு அவளுக்கு ஏன் கதாநாயகக் கல்லூரி மாணவனை மட்டும் பிடிக்கிறது. வில்லனாக வரும் கல்லூரி மாணவனை ஏன் பிடிக்கவில்லை என்பது புரியவில்லை.


இயக்குனரிடம் அது ஏன் அப்படி என்று அவர் கேட்க, அது அப்படித்தான் என்று இயக்குனர் கடுப்புடன் கூறியிருக்கிறார். இறுதியாக அத்திரைப்படத்திற்கு அவர் உரையாடல் எழுதவில்லை.

இதை நாம் ஏன் இங்கு கூறுகிறோம் என்றால் மிகவும் உயர்வாகவும் உன்னதப்படுத்தப்பட்டும் கூறப்படும் காதல் இருவருக்கிடையில் எதை மையமாக வைத்து உண்டாகிறது என்பது விடைகூற முடியாத ஒரு கேள்வியாகவே பலரால் முன்வைக்கப் படுகிறது. கேட்டால் அதனால் தான் காதலுக்குக் கண்ணில்லை என்று கூறுகிறோம் என்று கூறுகின்றனர்.

உண்மையான காதல், நட்பின் தன்மை

உண்மையான காதல் கருத்தொற்றுமையையும் ஒரே வகையான மனித மதிப்புகளைப் போற்றுபவராக இருவரும் இருப்பதையும் மையமாகக் கொண்டு வருவது. அத்தகைய காதல் தான் எந்த வகையான பிரச்னைகளையும் சம்பந்தப்பட்ட இருவரையும் உறுதியுடன் சந்திக்கும் விதத்தில் வழிநடத்துவது.

அதைப் போன்றதே நட்பும். மிகவும் சிரமமான சூழ்நிலையில் ஒன்று சேர்ந்து வாழ நேரும் இருவருக்கிடையிலேயே பெரும்பாலும் உண்மையான நீடித்து நிற்கக்கூடிய ஒருவருக்கொருவர் சிரமங்கள் நேரும் நிலையில் உதவக் கூடிய நல்ல நட்பு உருவாகிறது. அதை ஒருவகைப் போராட்ட ஒற்றுமை என்றும் கூறலாம்.

மற்றவகை நட்பெல்லாம் நட்பு என்ற பெயரில் அதற்கு பல தன்மைகளை பலருடைய பலசமய அனுபவங்களை ஏற்றி வைத்துக் கூறுவதால் உருவாவது. நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சமூக ரீதியாக மனதில் ஊன்றிப் பதிக்கப்படும் விசயங்களை மையமாக வைத்து கடைப்பிடிக்கப்படுவது.

மனிதர்களின் குணங்களும் இயல்புகளும் அவர்களுக்கு பிறவியிலிருந்து வருவதில்லை. பிடிவாதம், வக்கிரம் போன்ற எதிர்மறைக் குணங்களும் கூட அந்தக் குணங்களைக் கொண்டிருப்பவர்கள் சில வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழ்வதின் அல்லது வாழ நேர்வதின் காரணமாக அவர்களிடம் ஏற்படுபவையே அன்றி பரம்பரைக் குணங்களாக வருபவை அல்ல.
பொதுவாக நமது திரைப்படங்களில் பகுத்தறிவுடன் ஒத்துப்போகாத உணர்ச்சிமயமான காட்சிகள் ஆங்காங்கே நிச்சயம் இருக்கவே செய்யும். அதைப்போல் நம்ப முடியாத சில விசயங்களும் தவிர்க்க முடியாமல் திரைப்படங்களில் இடம் பெற்றேயிருக்கும். நம்ப முடியாத சில காட்சிகளை அப்படத்தில் வைத்திருப்பது ஒட்டுமொத்தத்தில் படம் அதன் மையக்கருத்தை அழுத்தமாக முன்வைப்பதற்கு உதவுமென்றால் அவை குறித்த அவநம்பிக்கை மேலோங்காமல் அமுக்கி வைத்துவிட வேண்டும் என்று திரைப்பட விமர்சகர்கள் கூறுவர். இப்படிப்பட்ட காட்சிகளும் சம்பவங்களும் சராசரி திரைப்படங்களில் மட்டுமல்ல சராசரித் தன்மையைத் தாண்டிய பல படங்களிலும் கூட இருப்பதை நாம் பார்க்க முடியும்.

சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் குறிப்படத்தக்க வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படம் மிகப்பெருமளவிற்கு இப்படிப்பட்ட போக்குகள் இல்லாததாக இருப்பதை பார்க்க முடிந்தது. இதுவரை பார்த்த தமிழ்ப் படங்களிலேயே அதிகபட்ச யதார்த்தத்துடன் எடுக்கப்பட்ட படமாக அது மனதிற்குப்பட்டது.
இன்றைய சமூக யதார்த்தத்தை அதில் நிலவும் சுரண்டலை, ஒடுக்கு முறையை, சட்டத்தைப் பாதுகாப்பதற்கென்று நியமிக்கப் பட்டிருப்பவர்களே செய்யும் அப்பட்டமான சட்ட விரோதச் செயல்களை, மாணவர் இளைஞர் மத்தியில் வளர்ந்து வரும் கலாச்சார சீரழிவுகளை, தொழிற்சாலைகளாக மாறிவரும் கல்வி நிறுவனங்கள் மிக உயர்ந்த விதத்தில் நடத்தப்படுவதாகக் காட்டப்படும் போலித் தனத்தை, அரசியல் வாதிகளின் கைப்பாவைகளாகச் செயல்படும் காவல்துறையை, பண வலிமையால் குற்றவாளிகள் குற்றமற்றவர்களாகவும் குற்றமற்றவர்கள் குற்றவாளிகளாகவும் சித்தரிக்கப்படும் கொடுமையை மிக இயல்பாகவும் யதார்த்தமாகவும் சித்தரிக்கும், பெரிய தோரணை எதுவுமின்றி ஆழமாகச் சமூக அவலத்தை பார்ப்பவர் மனதில் பதியச் செய்யும் திரைப்படமாக அது தலைநிமிர்ந்து நிற்கிறது.

தமிழகத்தில் அவ்வப்போது பிற மாநிலங்களில் இருந்து அழைத்து வந்து கொத்தடிமைத் தனமாக வேலை வாங்கப்பட்டவர்கள் என்று பலரைக் குறிப்பாகச் சிறுவர்களை விடுவித்து வருவதும் அவர்களை விடுவித்த காவல்துறை அதிகாரிகள் அவர்களோடு நின்று எடுத்துக்கொண்ட புகைப் படங்கள் பத்திரிக்கைகளில் வருவதையும் பார்த்திருக்கிறோம்.

அவ்வாறு கொத்தடிமைச் சுரண்டலில் சிறுவர்களை ஈடுபடுத்தும் தொழில்களில் ஒன்று முறுக்கு போன்ற சிற்றுண்டிகளைப் பெரிய அளவில் தயாரித்து பல மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காகப் பிற மாநிலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதலாளிகளால் நடத்தப்படும் தொழில்களாகும். அவ்வாறு கொத்தடிமைகளாக நடத்தப்பட்டவர்கள் என்று பலர் விடுவித்துவீட்டிற்கு அழைத்துவரப் பட்டாலும் அவர்களில் பலர் அதே இடங்களுக்கோ அல்லது அதையொத்த வேறு இடங்களுக்கோ சிலகாலம் கழித்து மீண்டும் வேலைக்குச் செல்லும் அவலம் வழக்கமாக நாம் தமிழகத்தில் கண்ணுறும் சமூகக் காட்சியாகும்.

கொத்தடிமைகள் விடுவிக்கப் பட்டனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளிவருவது நிர்வாகமும் காவல்துறையும் இயங்குகிறது என்று காட்டுவதற்குப் பத்திரிக்கைகளுக்குப் போதுமானது. அடுத்து என்ன நடக்கிறது என்பது தமிழ்நாட்டின் சமூக வாழ்க்கையில் சொல்லப்படாத அவலக் கதையாகவே தொடர்ந்து கொண்டுள்ளது.

கொத்தடிமைச் சுரண்டல்

இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு ஏஜெண்டுகள் மூலமாக வேலைக்குச் செல்லும் பிள்ளைகளில் பெரும்பாலோர் கூலி விவசாயிகள், விவசாயத் தொழிலாளரின் பிள்ளைகளே. ஏனெனில் விவசாயமும் கடன் தொல்லையும் உடன் பிறந்தவை. அப்படிப்பட்ட சூழலில் ஒத்திக்கு ஒரு நிலத்தை எடுத்து அதில் விவசாயம் செய்து, விவசாயம் பொய்த்த நிலையில் கடன் வயப்பட்டவர்களாக ஆகும் பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்த ஒருவனின் கதையே இப்படத்தின் திரைக்கதை.

கடன் வயப்பட்ட அவனது பெற்றோரைக் கடன் கொடுத்தோர் நடத்தும் விதத்தைச் சகித்துக் கொள்ள முடியாது இதுபோன்ற கொடுமையானதொரு தொழிற்சாலையில் அச்சிறுவன் வேலைக்குச் சேர்கிறான். அல்லும் பகலும் கொடும் சுரண்டலுக்கும் அடி உதைக்கும் ஆட்பட்டு உழைத்தும் கடனை அடைக்க முயலும் அவனது கனவு நிறைவேறாமல் போகிறது.
அதுபோல் ஒருமுறை வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களை வெளியில் விட மனமில்லாதவர்களாகவே இத்தகையத் தொழிற்சாலைகளை நடத்தும் முதலாளிகள் உள்ளனர். அந்த மனநிலையின் காரணமாக அச்சிறுவனின் பெற்றோர் ஒரு விபத்தில் மரணமடைந்துவிட்ட செய்தியைக் கூட அவனிடம் கூறாமல் அவனது முதலாளி மூடிமறைக்கிறார். ஈவிரக்கமற்ற முதலாளியின் கொடும் செயல் அதே தொழிற்சாலைக்கு இதையொத்த சூழ்நிலையில் வேலைக்கு வரும் உள்ளூர்ப் பையன் ஒருவன் மூலம் கதாநாயகனுக்குத் தெரிய வருகிறது.

அதனால் கொதிப்படைந்து அந்த முதலாளியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்னை வந்து சேருகிறான் கதையின் நாயகனாக வரும் சிறுவன். பசியிலும் களைப்பிலும் மயங்கி நடைபாதையில் விழுந்துவிட்ட அவனை வாழ்க்கைச் சூழ்நிலைகளின் காரணமாக விலைமாது ஆக்கப்பட்ட பெண் ஒருத்தி உணவு கொடுத்து ஆதரித்து அவனுக்கு தெருவோரத் தள்ளுவண்டி உணவுக் கடை ஒன்றில் வேலையும் வாங்கித் தருகிறாள்.

சினிமா போன்ற நவநாகரீகக் கலை வடிவங்களின் ஆதிக்கத்தால் அழிந்து வரும் கிராமியக் கலையான கூத்து அழிந்து போனதால் வேறு வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு சிறுவன் இவனுக்குத் துணையாக அந்தத் தெருவோரக் கடையில் அதன் முதலாளியால் வேலைக்குச் சேர்க்கப்படுகிறான். இத்தகைய சூழ்நிலையில் சிரமகரமான அவர்களது வாழ்க்கை அவர்களை ஒன்று சேர்க்கிறது; நல்ல நண்பர்களாக அவர்கள் ஆகின்றனர்.

அதே தெருவில் தந்தையை இழந்து வீட்டு வேலை செய்து பிழைக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு இளம் பெண் தன் தாயுடன் வசிக்கிறாள். பொதுநல நோக்குடன் வாழ்ந்த அவளது தந்தையின் பாதிப்பு அவளிடம் பெருமளவு இருக்கிறது. ஒரு இளம் பெண்ணைத் தந்தையில்லாத சூழ்நிலையில் ஒழுக்கமாக வளர்க்க நினைக்கும் தாயின் எச்சரிக்கை உணர்வு அவளை எரிந்து விழும் கெடுபிடித் தன்மை கொண்டவளாக ஆக்கிவிடுகிறது.

தாயின் கெடுபிடிகள் தந்தையின் தாக்கத்தினால் அவளது மனதில் மலர்ந்து மணம் வீசும் மனிதாபிமானத்தைத் தடுத்துவிட முடியவில்லை. அதனால் அண்டை வீட்டில் தாய் தந்தையரால் கைவிடப்பட்டு மூதாட்டி ஒருத்தியின் பராமரிப்பில் வளரும் மனநோயுற்ற சிறுவன் ஒருவனைப் பொறுமையுடன் பராமரிக்கும் வேலையையும் அவள் செய்கிறாள்.

அந்தப் பெண்ணிற்கும் தெருவோர உணவுக் கடையில் வேலை செய்யும் கதாநாயகனுக்கும் ஏற்படும் முதல் சந்திப்பே மோதலை மையமாக வைத்து வருகிறது. அடுத்தடுத்து அவன் குறித்து நல்லதொரு அபிப்பிராயம் அவளுக்கு ஏற்படாத விதத்தில் இயல்பாகவே பல சம்பவங்கள் நடக்கின்றன. தனக்கு முதலில் உதவி செய்த விலைமாதுவாக வரும் பெண் பணத்திற்காகச் சிரமப்படும் சூழலில் அவளுக்குப் பண ரீதியாக உதவப்போய் அதைப் பார்த்துவிடும் அப்பெண்ணின் தயாரால் அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு தாய் மகள் இருவரும் அவனை வெறுக்கின்றனர்.

இந்தக் கதைக்கு இணைக் கதையாக கணவன் மனைவி இருவருமே அலுவலக வேலைக்குச் செல்லும் ஒரு நகர்ப்புறக் குடும்பத்தின் கதை வருகிறது. நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறி அதன் மூலமாக அவர்களது ஒரே பெண்ணை வாழ்க்கையின் உயர்நிலைக்குக் கொண்டுவர அந்த மத்தியதர வர்க்கத் தம்பதிகள் விரும்புகின்றனர்.

செல்போன் வைத்துக் கொள்வது படிப்பைப் பாதிக்கும் என்று கருதும் கண்டிப்பான தந்தை; அவளை எப்படியாவது உரிய சூழலை உருவாக்கி அதிக மதிப்பெண் பெற்றுத் தேறச்செய்ய வேண்டும் என்று கருதும் தாய்.

உயர் மத்தியதர வர்க்கக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்க நேர்வதால் பருவக் குறுகுறுப்பு மனதில் தோற்றுவிக்கும் கிலேசங்களுக்கும் இடம் கொடுத்து நவநாகரீகமாக இருக்க வேண்டும் என்ற தனது உள்ளக்கிடக்கையைப் பெற்றோருக்குப் பெருமளவு தெரியவராமல் தனியாக தான் வீட்டில் இருக்கும் வேளையில் எல்லாம் ஆடியும் பாடியும் அழகுற அங்க அவையங்களை அசைத்துப் பார்த்தும் சந்தோசம் அடைந்து கொள்ளும் பள்ளி மாணவிஎன்ற இந்தக் குடும்பத்தின் கதை ஏழை எளியவரின் வாழ்க்கையிலிருந்து மாறுபட்ட ஒன்றாகப் படத்தில் முன்வைக்கப் படுகிறது.

அவர்கள் வசிக்கும் குடியிருப்பில் கூடுதல் வசதிகள் கொண்டதொரு வீட்டில் எப்படியாவது மிகவும் வசதியாக வாழ வேண்டும் என்ற சீரழிந்த நகர்ப்புறத்தனம் கொண்ட முன்னால் தகாத தொழில் செய்து பிழைத்தவளும் பின்னர் அதுபோன்ற வகைகளில் ஈட்டிய பணத்தைக் கொண்டு தனியார் பள்ளி ஒன்று நடத்திச் சம்பாதித்துச் சமூக அந்தஸ்த்தை ஈட்டியவளுமான பெண் ஒருத்தி வசித்து வருகிறாள்.

அமைச்சர்கள் போன்றவர்களுக்குப் பெண்களை வினியோகிக்கும் வேலை பார்த்தவளாக இருந்த அவளுக்கு இயல்பாகவே ஒரு குறிப்பிட்ட அமைச்சருடன் நெருக்கமான தொடர்பு உள்ளது. அவளுக்குப் பள்ளி செல்லும் வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கும் தந்தை இல்லை. தாயும் அவனுமே தனியாக வசிக்கின்றனர். பணம் இன்னும் பெரும் பணம் ஈட்ட வேண்டும் என்ற மனநிலை கொண்ட அவளால் யதார்த்தமாகவே அவளது பையனின் வளர்ச்சியில் செலுத்த வேண்டிய கவனத்தைச் செலுத்தி அவனை முறையாக வளர்க்க முடியவில்லை.

பணம் சம்பாதிப்பதற்காக எதையும் செய்யலாம் என்ற முதலாளித்துவ சமூக நியதியின்படி முறைகேடாகச் சம்பாதிக்கப்பட்ட அந்தப் பணத்தை சம்பாதிப்பதில் எந்த சிரமும் எடுத்துக் கொள்ளாமல் செலவு மட்டும் செய்யும் வாய்ப்பினைப் பெற்று அதனால் சீரழிந்தவனாக அவளது மகன் வளர்கிறான். பள்ளி செல்வதற்கே சொகுசு கார், விலை உயர்ந்த செல்போன், தாயின் கோளாறுகளை இலைமறை காயாக அறிந்து கொண்டதனால் அவள்மீது எள்ளளவு கூட மரியாதை இல்லாமல் போய் பணம் காய்க்கும் மரமாக மட்டும் அவளைக் கருதிப் பணம் பறிக்கும் மனநிலை, அதனைத் தாறுமாறாகச் செலவு செய்து அதன்மூலம் சக மாணவர்களிடையே ஒரு முக்கியத்துவத்தைத் தேடிக் கொள்ளும் போக்கு என்ற பின்னணியில் அவன் வளர்கிறான்.

கலாச்சாரச் சீரழிவு
ஆண் பெண் இருவருக்கிடையில் ஏற்படும் காதல் உணர்வு உண்மையில் அழகானது. அது உருவாவதன் அடிப்படை பாலுணர்வேயாகும். மனித சமூகம் மட்டுமே அந்தப் பாலுணர்வை முறைப்படுத்தி வகைப்படுத்தி நாகரீகமாக வெளிப்படுத்துவதாக உள்ளது. அதன்மூலம் அந்த உறவின் அந்தரங்கம் பராமரிக்கப்படுகிறது. பணத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகச் சூழலும், செல்போன் தொழில் நுட்பத்தின் மிகவேகமான வளர்ச்சியும், சமூக மதிப்புகள் பள்ளிகளில் மாணவர்களிடையே வலியுறுத்தப்படாத போக்கும் ஒன்று சேர்ந்து அத்தகைய அந்தரங்கங்கள் குறித்ததொரு அநாகரீகக் குறுகுறுப்பு பள்ளி மாணவரிடம் கூட ஏற்படுகிறது.
சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களது அந்தரங்கத் தோற்றங்களைப் படமாக்கி மாணவர் பலருக்குக் காட்டி அதன்மூலம் மற்றவர்கள் அனைவரிடமும் இல்லாத தனித்திறமை தன்னிடம் இருப்பதாகக் காட்டிக் கொண்டு அதன்மூலம் முக்கியமானவனாகச் சக மாணவர்களிடையே வலம் வருகிறான் அந்தப் பணக்காரப் பையன். அவ்வாறு அவன் படம் பிடித்த காட்சிகளைக் கண்டு ரசிக்கும் விகார ரசனைக்கு ஆட்பட்டவர்களில் பலர் அவனது மேட்டுக்குடி மாணவ நண்பர்களாக உள்ளனர்.

இந்தப் பின்னணியில் வலிந்து சென்று அதே குடியிருப்பில் வசிக்கும் அந்தப் பள்ளி மாணவியோடு அவன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறான். அவளது தந்தையால் தடை செய்யப்பட்ட செல்போன் போன்ற வசதிகளை ஆடம்பரமாக பயன்படுத்த வல்லவனாக அவன் இருப்பது அவனை அவளுக்குக் கருது பொருளாக ஆக்குகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு சந்தேகம் கேட்கும் சாக்கில் வீட்டிலும் வெளியிலும் அவளது தோற்றத்தைப் பல விரசமான கோணங்களில் படம் பிடித்து சக மாணவர்களிடம் காட்டிச் சந்தோசமடைகிறான் அந்த மனநோயாளி.

சக மாணவர்களின் அவன் குறித்த இந்த விசயங்களின் பாலான எதிர்பார்ப்பு அதிகமாக அதிகமாக இன்னும் அதிகப்பணம் செலவு செய்து அவளை அரை நிர்வாணக் கோலங்களில் அவளையும் அறியாமல் நிற்கச் செய்து படம் பிடிக்கிறான். வெளிப்படையாக நல்லவன் போல் நடித்து அவளைக் கவரவும் செய்கிறான்.

அது எதிர்பாராத விதமாக அவளது கவனத்திற்கு வந்தவுடன் அவள் அந்தப் படங்கள் அடங்கிய மெமரி கார்டை அவனது செல்போனிலிருந்து எடுத்து விடுகிறாள். தனது உண்மையான தோற்றம் வெளிப்பட்டு விட்டதால் தனக்குப் பிரச்னைகள் வரும் என்ற பயத்தில் ஒருபுறமும் சக மாணவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாதவனாக நாம் ஆகிவிட்டோமே என்ற ஆதங்கம் மறுபுறமுமாகச் சேர்ந்து அவனை வெறி கொண்டவனாக ஆக்குகிறது. அவ்வெறி ஒருகட்டத்தில் காரால் மோதி அவளை கொலை செய்யும் அளவிற்கு அவனைக் கொண்டு செல்கிறது.

மிரட்டுவதிலும் கொலை முயற்சியிலும் தோல்வியடைந்த அவன் அவளுக்கு எப்படியாவது பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக அவளது முகத்தில் ஆசிட் விசப்போய் அது எதிர்பாராத விதமாக கதவைத் திறந்த வீட்டு வேலை செய்யும் கதாநாயகியாக வரும் ஏழைப் பெண்ணின் முகத்தில் பட்டு விடுகிறது.

வீசியது யார் என்பது தெரியாத நிலையில் ஆசிட் வீசப்பட்ட வேலை செய்யும் பெண்ணின் மீது மானசீகமாகக் காதல் வயப்பட்டிருந்த தெருவோர உணவுக் கடையில் வேலைசெய்யும் ஏழைச் சிறுவனின் மேல் காவல்துறையின் சந்தேகக்கண் படுகிறது. குற்றமற்ற அவன் மீது காவல்துறை சந்தேகப்படுகிறது என்பதை அறிந்து கொண்ட அந்த பள்ளி மாணவி மனச்சாட்சியின் உறுத்தலினால் உந்தப்பட்டு காவல்துறையினரிடம் தானே சென்று இதுகுறித்து அவனை மட்டுமல்ல இந்த பணக்காரப் பையனையும் விசாரிக்க வேண்டும் என்று துணிவுடன் கூறுகிறாள்.

இந்த விசயத்தைத் தெரிந்து கொண்ட காவல்துறை அதிகாரி அதனை விசாரிக்கும் போக்கில் அங்கிருந்து பெரும் பணம் பெயர்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அந்தப் பையனின் தாயான பணக்காரப் பெண்ணை மிரட்டி அவளை அமைச்சரை அணுகச் செய்கிறான். அமைச்சரோ அனைத்து விசயங்களிலும் அமைச்சருக்கு உறுதுணையாக இருந்து கொலைக்குற்றம் போன்றவற்றிலிருந்து கூட அவரைக் காப்பாற்றிவிட்ட அந்த காவல்துறை அதிகாரியை அணுகுமாறு அவளிடம் கூற அதன்மூலம் ஒரு வீடுகட்டும் அளவிற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரூபாய்களை அவளிடமிருந்து லஞ்சமாக அந்தக் காவல்துறை அதிகாரி பெறுகிறான்.

பணத்தைப் பெற்றுக் கொண்டு எந்தவகையான பின்பலமும் இல்லாத தெருவோரக் கடையில் வேலை செய்யும் இளைஞனிடம் திறமையாகப் பேசி அவனது நேர்மை மற்றும் தியாக உணர்வைப் பயன்படுத்தி மூளைச் சலவை செய்து அக்குற்றத்தை அவனையே ஒப்புக்கொள்ள வைக்கிறான்.

அவ்வாறு அவனை ஒப்புக்கொள்ள வைப்பதற்கு அவர் கையாளும் தந்திரம் குற்றத்தை அந்தப் பணக்காரப் பையனே செய்திருந்தாலும் அவன் பணத்தைச் செலவு செய்து வெளியில் வந்துவிடுவான்; அதனால் இவன் நேசிக்கும் பெண்ணின் முகத்தில் ஏற்பட்ட கோரம் மாறப் போவதில்லை; அதற்குப் பதிலாகக் குற்றத்தை இவன் ஒப்புக் கொண்டால் அவன் வழக்கிற்குச் செலவு செய்யும் பணத்தை வாங்கி அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அவளது கோரமான முகத்தைச் சரிசெய்ய முடியும் என்று கூறி அவனை ஒப்புக்கொள்ளச் செய்கிறான்.
இந்த விசயம் கதாநாயனுடன் ஒரே கடையில் வேலை செய்து அதன் பின்னர் அவனிடமிருந்து பிரிந்து வேறொரு கடைக்கு வேலைக்குச் சென்ற பின்னரும் அவனது நட்பைப் பேணும் கூத்தாடி நண்பனுக்குத் தெரியவருகிறது. தெரிந்தவுடன் சிறையில் சென்று தனது நண்பனைச் சந்தித்து முழு விபரங்களையும் அறிந்து கொண்ட அவன் ஆசிட் வீசப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்று விசயங்களைத் தெளிவாக்குகிறான்.

அநீதிக்கு அடிபணிந்து போகாதே என்ற தனது தந்தையின் அறிவுரையை மனதிற்குள் பேணும் அந்தப்பெண் அதனால் வெகுண்டெழுந்து திசை திருப்பிவிட்டு வழக்கைத் திறமையாக முடித்துவிட்டோம் என்ற பெருமிதத்துடன் நீதிமன்றத்தை விட்டு வெளிவரும் காவல்துறை அதிகாரியை அணுகித் தான் பேச விரும்பியவற்றை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதிக் கொடுத்து அவன் அதனைப் படித்துக் கொண்டிருக்கும் போதே மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து அவன் முகத்தில் ஊற்றி விடுகிறாள். அதற்காகக் காவல் துறையினரால் காட்டுத்தனமாக அவள் தாக்கப்படுவது வழக்கறிஞர், பத்திரிக்கையாளர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

தாய்மை

தெருவோரக் கடையில் வேலை செய்யும் கதாநாயகன், வீட்டு வேலை செய்யும் கதாநாயகியாக வரும் அந்தப் பெண்ணின் தோற்றப் பொழிவினால் முதலில் கவரப்பட்டாலும் அவள் மனநோயுற்ற அந்த சிறுவனை பராமரிக்கும் பாங்கைக் கண்ட பின்பே அது ஆழமான அழகான அன்பாக மாறுகிறது. அந்த நிராதரவான சிறுவனின் இடத்தில் தன்னையும் தான் பார்க்க முடியாமலேயே தன் இன்னுயிரை இழந்த தாய் தன்னைப் பராமரித்த விதத்தையும் அவன் அவளிடம் பார்க்கிறான்.

உயர்ந்த காதல் உணர்விற்கு ஒரு முக்கிய அடிப்படை பெண்களிடம் இருக்க வேண்டிய தாய்மை உணர்வாகும். அந்தத் தாய்மை உணர்வு இன்றைய பணத்தாசை பிடித்த சமூகத்தில் தனது பிள்ளைகளோடு முடிந்துவிட்ட ஒரு சுயநல உணர்வாக ஆகிவிட்டது. உண்மையில் அது தன்னலம் தாண்டிய அனைவரிடமும் காட்டப்பட வேண்டிய மேலானதொரு உணர்வாகும். அதனை அடிப்படையாக வைத்தே தமிழில் நாம் அனைத்துப் பெண்களையும் அம்மா என்று அழைக்கிறோம்.

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் ஏதாவதொரு வீட்டிற்குச் சென்று குடிக்கத் தண்ணீர் கேட்டால் பல தாய்மார்கள் பசியுடன் இருக்கிறோம் என்று கருதி அவர்கள் வீட்டில் அப்போது இருக்கும் அவர்கள் உண்ணும் கூழ் போன்ற உணவுப் பொருளைக் கரைத்து வேண்டுமானால் தரவா என்று கேட்பர். அத்தகைய தாய்மை உணர்வு அவனது காதலுக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.

அவளது பலராலும் போற்றப்படும் நல்ல சுபாவம்; விலை மதிப்புள்ள மோதிரம் அவள் வீட்டு வேலை செய்யும் இடத்தில் கிடைத்த போது விலை மதிப்புள்ள பொருளாயிற்றே அதனைத் தானே வைத்துக் கொள்ளலாமே என்ற சபலம் சிறிதுமின்றி அதை அவளது எஜமானியிடம் திருப்பிக் கொடுக்கும் நேர்மையை பிறர் சொல்ல அவன் கேட்பது; அவள் பொருள் வாங்கும் கடைக்காரர் உட்பட அனைவரும் கூறக் கேட்கும் அவளது நவீன சமூகத்தின் படாடோபத்திற்கும் அவளது வயதிற்கே உரித்தான சபலங்களுக்கும் இரையாகாத ஒழுக்கம்; தன்னடக்கம் ஆகிய அனைத்து நற்குணங்களும் சேர்ந்தே அவனை அவள் பால் ஈர்க்கிறது. இந்த அவர்களது காதலின் அடித்தளம் மிக இயல்பாக செயற்கையான காட்சி ஜோடனை எதுவுமின்றி முன்வைக்கப் படுகிறது.

சூழ்நிலை தீர்மானிக்கும்

தாய் தந்தை இருவரையும் இழந்துவிட்ட நிலையில் தனது தேவைகள் மிகக் குறைவாக இருப்பதால் கதாநாயகன் சம்பளமாகப் பெறும் பணம் அவனிடம் மீந்து விடுகிறது. தான் நிராதரவான நிலையில் மயங்கி விழுந்த போது தனக்கு உதவிய அவன் ரோசி அக்கா என்று அழைக்கும் அந்த விலைமாதிற்காவது உதவட்டும் என்று அவன் பணம் கொடுப்பது. தனது நண்பனிடம் உள்ள கலை ஆர்வமும் திறமையும் தெரிந்த நிலையில் அவனை சினிமாத் துறையில் எப்படியாவது புகுத்திவிட வேண்டும் என்பதற்காக தனக்குத் தெரிந்த புகைப்படம் எடுப்பவர் மூலம் படம் எடுத்து அவன் உயர்விற்கு வழிவகுக்க நினைப்பது; அதுமட்டுமின்றித் தனது நண்பனை அவன் வேறு கடைக்குச் சென்ற பின்பு சந்திக்கும் வேளையில் இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் நீ வைத்துக்கொள் என்று அவனிடம் கூறுவது. அனைத்திற்கும் மேலாகத் தான் நேசித்த பெண்ணின் முகம் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காக 10 ஆண்டுகால சிறை தண்டனையை மிகச் சாதாரணமாக அனுபவிக்க முன்வருவது ஆகிய அனைத்தும் சமூகம் எத்தனை சீரழிந்து போனாலும் இப்படிப்பட்ட ஒருசிலர் இருக்கவே செய்கின்றனர் என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது.

அவன் செய்த தியாகமும் அவனுக்கென்று யாரும் எதுவும் இல்லாத நிலையே அவன் அத்தகைய தியாகத்தைச் செய்வதற்கான புறச் சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்துள்ளது என்ற அடிப்படையில் நியாயப்படுத்தப் பட்டுள்ளது.

மிகவும் புத்திசாலியாக வரும் அவனது நண்பன் சமயோஜிதமாகவும் நெளிவுசுளிவாகவும் இருக்கத் தெரிந்தவனாக இருந்த போதிலும் தனது நண்பனின் குணநலனைப் போற்றி அவனுடன் எப்போதும் நட்புடன் இருக்க விரும்பும் தனது விருப்பத்தைத் தெரிவிப்பதும், அவன் குறித்து கவலையுடன் நான் எப்படியும் பிழைத்துக் கொள்வேன் ஆனால் உனக்கு உண்மையைத் தவிர வேறெதையும் பேசத் தெரியாது நீ எப்படிப் பிழைக்கப் போகிறாய் என்பது தான் என் கவலை என்று கூறுவதும் இறுதியில் காவல்துறை அதிகாரி இழைத்த கொடுமையைத் தெரிந்து கொண்டவுடன் அவன் முகத்தில் தானே திராவகம் ஊற்ற நினைத்ததை கதாநாயகி திராவகம் ஊற்றிய செய்தி வந்தவுடன் நீ செய்யாதிருந்திருந்தால் நான் இதைச் செய்திருப்பேன்என்று கூறுவதும் அவனை மிகவும் உயர்த்திக் காட்டுகிறது.
கதாநாயகியாக வரும் வேலைக்காரப் பெண்ணிற்கு அநீதியை எதிர்க்கும் ஆர்வமும் மனஉறுதியும் எவ்வாறு வந்தது என்பது அவளது தந்தையின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பாலான ஈடுபாட்டைக் கோடிட்டுக் காட்டுவதன் மூலம் நியாயப்படுத்தப் பட்டுள்ளது. அவர் வைத்திருந்தவையாக லெனினது அரசும் புரட்சியும் என்ற நூலும் போகிற போக்கில் பார்ப்பவர் பார்வையில் படும் வண்ணம் மிக இயல்பாகக் காட்டப்படுகிறது.

கணவனை இழந்து குடும்பத் தலைவன் இன்றி வயதிற்கு வந்த பிள்ளையை வளர்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்தப் புறச்சூழலே கதாநாயகியின் தாயைக் கெடுபிடியானவளாகவும் எதெற்கெடுத்தாலும் எரிச்சல் படுபவளாகவும் ஆக்கியுள்ளது என்பதில் தொடங்கி கதையில் வரும் அனைத்துச் சம்பவங்களும் அவை நிகழ்வதற்கு ஏற்ற புறச் சூழ்நிலைகள் எடுத்துக்காட்டப் படுவதன் மூலம் நியாயப்படுத்தப் படுகின்றன.

அவள் காவல்துறை அதிகாரி மேல் திராவகம் ஊற்றும் முடிவிற்கு வந்ததும் கூட அதையொத்த ஒரு நிகழ்வு பீஹாரில் ஓரிடத்தில் நடந்ததாக வந்த செய்தியை ஒட்டித்தான் என்று அக்காட்சியும் கூட நியாயப்படுத்தப் பட்டுள்ளது. திராவகம் ஊற்றும் எண்ணம் பணக்காரப் பள்ளிப் பையனுக்கு வந்ததோடு தொடர்புடைய விதத்தில் தான் அவன் ஏமாற்ற நினைக்கும் பள்ளி மாணவியிடம் கேட்கும் சந்தேமான ஆர்கானிக், இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி குறித்த சந்தேகமும் முன்வைக்கப் படுகிறது.

காவல்துறை அதிகாரியும் பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு அவரது மனக் கண்ணில் தோன்றும் வரை ஓரளவு நியாயமான மனநிலையோடு இருப்பராகவே காட்டப்படுகிறார். அதைப் பிரதிபலிக்கும் விதத்தில் தான் அவன் முன்னால் வேலை செய்த முறுக்குக்கடை அதிபரின் மேல் அவன் நினைத்த விதத்தில் அவன் தாய் தந்தையரின் மரணச் செய்தியை மறைத்த குற்றத்திற்காக கொதிக்கும் எண்ணெயை ஊற்றியிருக்க வேண்டும் என்று ஒருகட்டத்தில் கூறுகிறார். பின்னர் பணம் கிடைக்கும் வாய்ப்புப் பிரகாசமாக ஆன பின்பே நிரபராதியைக் குற்றவாளியாக்கும் கொடுமையைச் செய்யும் நிலைக்கு வருபவனாக அவன் சுட்டிக்காட்டப் படுகிறான்.

அடிப்படையில் சமூக விமர்சனம் என்ற ரகத்தைச் சேர்ந்ததாக வரும் இந்தத் திரைப்படம் சமூகச் சூழ்நிலைகளைப் பார்ப்பவர் மனதில் பதியும் விதத்தில் தத்ரூபமாகப் பதிவு செய்கிறது. விவசாயிகளின் அவலநிலை, சிறுதொழில் நிறுவனங்கள் என்று கருதப்படும் நிறுவனங்களில் நிகழும் குழந்தை உழைப்பு மற்றும் கொடூரமான சுரண்டல், அவர்கள் வேலை செய்யும் கொடுமையான வேலைச் சூழ்நிலை அடுப்பு போன்றவை அமைந்திருக்கும் விதம் தான் விழுந்தாலோ தன்மேல் தெறித்தாலோ முற்றாக வெந்து போகச் செய்யும் அளவிற்கு கொதிக்கும் எண்ணெய் நிறைந்த பாத்திரங்கள், தான் விரும்பிய விதத்தில் வேலை செய்யவில்லை என்பதற்காக தயவு தாட்சண்யமின்றி சிறுவர்கள் முதலாளியாலும் அவனது வேலையாட்களாலும் அடித்து நொறுக்கப்படும் கொடுமை ஆகிய அனைத்தும் மிகுந்த பொருத்தத்தோடு தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

வேலைக்காக வேறு மாநிலம் செல்லும் அச்சிறுவன் வேலைக்கு அழைத்துச் செல்லும் ஏஜெண்டின் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அவனது பள்ளியில் சகமாணவர்களால் படிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாடல் பள்ளிச் சுவர்களில் பள்ளி செல்லும் வயதினர் அனைவரையும் பள்ளிக்கு அனுப்புவோம் என்று எழுதப்பட்டிருக்கும் முழக்கம் ஆகியவை அனைவரும் பள்ளி செல்வதற்கான வாய்ப்பினை உருவாக்காமல் அதுபோன்ற முழக்கங்களை மட்டும் எழுதி வைப்பது எத்தனை வேசதாரித்தனம் என்பதை நாசூக்காகச் சுட்டிக் காட்டுகிறது.

சமூகக் கொடுமைகளைப் பார்த்துப் பார்த்துச் சகித்துப்போய் ஒன்றும் செய்யாமல் எந்தக் கொடுமை மற்றும் அவலத்தையும் வேடிக்கை பார்க்கும் கையாளாகாதவர்களாக எப்படி நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மாறிவிட்டனர்; அவர்களிடம் மனிதாபிமான உணர்வு கூட எவ்வாறு அற்றுப் போய்விட்டது என்பது மயங்கிக் கிடக்கும் ஒரு சிறுவனுக்கு தாங்கள் மதியம் உண்பதற்காக வைத்திருக்கும் உணவைக்கூடக் கொடுக்க முன்வராத அலுவலகம் செல்வோரின் போக்கின் மூலம் வெளிப்படுத்தப் படுகிறது.

இலக்கணம் மீறிய கவிதை
கதையில் விலைமாதுவாக வரும் ரோசி ஜெயகாந்தனின் இலக்கணம் மீறிய கவிதையாக மினிக்கிறாள். அவளைக் காட்டும் போதெல்லாம் இணையில்லா சகாய மாதா என்ற பாடல் உருக்கமாகப் பின்னணியில் ஒலிக்கப்படுவது உருவகத் தன்மையுடன் அவள் செய்யும் தொழிலை வைத்து அவளை எடை போடாதீர்கள் என்பதை மென்மேலும் கோடிட்டுக் காட்டுகிறது.

மென்மையின் படப்பிடிப்பாக வரும் அக்காட்சிக்கு நேர் எதிரிடையாக வருவது கதாநாயகனின் நண்பனாக வரும் கூத்தாடிச் சிறுவனின் கூர்மையான உரையாடல்களாகும். கஞ்சா விற்பவனை எவ்வாறு கண்டுபிடிக்கப் போகிறோம் என்று தடுமாறும் கதாநாயகனுக்கு காவல்துறைச் சேர்ந்த ஒருவர் அரைகுறை ஆடையுடன் அமர்ந்து எதையோ விற்றுக் கொண்டிருப்பவனுடன் பேசும் காட்சியைப் பார்த்தவுடன் இனிப் பிரச்னையில்லை என்று கூறி நேர அவனிடம் அழைத்துச் செல்வது, எவ்வாறு இவன்தான் கஞ்சாவிற்பவன் என்று அறிந்து கொண்டாய் என்ற கேள்விக்கு விடை பகரும் விதத்தில் கருவாடு இருக்கும் இடத்தில் தானே பூனை இருக்கும்என்று கூறுவது ஆகியவை காவல்துறையினருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் இருக்கக் கூடிய நெருக்கத்தைக் கூர்மையாகச் சுட்டிக் காட்டுகிறது.

அறைகூவல்
இறுதியில் கதாநாயகி காவல்துறை அதிகாரியின் முகத்தில் திராவகத்தை வீசும் முன்பு கொடுக்கும் கடிதம் ஒரு கவிதையாக மட்டுமல்ல அறைகூவலாகவும் அமைந்துள்ளது. கடைசியாகச் சிறையில் சந்திக்கும் கதாநாயகியை கதாநாயகன் பார்த்து கூறும் வசனமான எவ்வளவு காலம் ஆனாலும் உனக்காக நான் காத்திருப்பேன் என்று கூறுவது பார்ப்பவர் மனதிற்குப் பெரிதும் இதமளிப்பதாக உள்ளது.

ஒட்டுமொத்தத்தில் இந்தத் திரைப்படம் சமூகச் சூழலை யதார்த்தமான விதத்தில் சித்தரித்து அதில் மாற்றப்பட வேண்டிய விசயங்கள் எத்தனை உள்ளன என்பதைப் பட்டியலிட்டு அவற்றிற்கு எதிரான மனநிலையைக் கலை நயத்துடன் உருவாக்கும் வேலையைத் திறம்படச் செய்து ஒரு உண்மையான கலையின் நோக்கத்தைச் சிறப்புடன் நிறைவேற்றுகிறது.
காதல், கல்லூரி போன்ற நல்ல திரைப்படங்களின் வரிசையில் புது மெருகுடன் சமூகத் தாக்கமுள்ள இப்படத்தைத் தந்து தமிழ் திரையுலகத்திற்கு அணி சேர்த்துள்ள இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு மாற்றுக்கருத்து தனது மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. ஆம், இதுபோன்றதொரு நல்ல படத்தைப் பார்ப்பதற்காக எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்.

No comments:

Post a Comment