Powered By Blogger

கேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்



தியாகி பகத் சிங் கடிதங்கள் கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்
தொகுப்பும் தமிழும்: தோழர் .சிவகுமார்



புரட்சி என்பது இரத்தவெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்ளவதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. 'புரட்சி' என்பதன் மூலம் ,வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றப்படவேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம் .

விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும் அவர்தம் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் வரை இந்தப் போர் தொடரும்; தொடர வேண்டும். அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளிகளாக இருக்கலாம் அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள் மற்றும் இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம் அல்லது கலப்பற்ற இந்திய முதலாளிகளாகக் கூட இருக்கலாம். அவர்கள் தங்களது நயவஞ்சகமான சுரண்டலை பிரிட்டிஷ் மறறும் இந்தியக் கலப்பு அரசு இயந்திரத்தைக் கொண்டோ கலப்பற்ற இந்திய அரசு இயந்திரத்தைக் கொண்டோ நடத்தி வரலாம்.. இந்தப்போர் தொடர்ந்தே தீரும்.. அது ஒரு புதிய உத்வேகத்துடனும் பின்வாங்காத உறுதியுடனும் சோஷலிசக் குடியரசு நிறுவப்படும் வரையிலும் இந்தப்போர் எங்களோடு தொடங்கவுமில்லை;எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை. வரலாற்று நிகழ்வுப் போக்குகளினதும் இன்று நிலவும் சுழ்நிளைகளினதும் தவிர்க்க முடியாத விளைவே இப்போர்".
- தியாகி பகத் சிங்
இந்த நூல் நெம்புகோல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரதி தேவைப்படுவோர் தொடர்ப்புகொள்ள
தோழர் .சிவகுமார்
அலைபேசி : 9443080634


முன்னுரை
“புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை - விதைக்கப் படுகிறார்கள்” என்று காலங்காலமாக சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா ? விதைக்கப்பட்ட அந்த புரட்சியாளர்களின்  வேர்களை பற்றிக் கொண்டு, இன்றைய காலகட்டத்தின் அநீதிகளை எதிர்த்துப் போராடும் புதிய புரட்சியாளர்கள் தானாகவே உருவாகி விடுவார்களா?  நிச்சயம் உருவாக முடியாது.  இங்கே அப்புரட்சியாளர்களோடு அவர்களது கொள்கைகளும் சேர்த்துப் புதைக்கப்பட்டிருக்கையில் அது எப்படி நடக்கும் ! புதைக்கப்பட்ட - மறைக்கப்பட்ட அவர்களது கொள்கைகள், கருத்துக்களின் சாரத்தை உட்கொண்டு ஜீரணிக்கும் ஒரு தலைமுறையில் இருந்து மட்டுமே அத்தகைய புதிய புரட்சியாளர்கள் உருவாகி வரமுடியும்.

இந்தியாவில் இதுவரை புதைக்கப்பட்ட எண்ணிறந்த புரட்சியாளர்களுள் ஆளும் வர்க்கங்களின் மனதில் இப்போது நினைத்தாலும் பயபீதியை கிளப்பிக் கொண்டிருக்கும் புரட்சியாளர், தியாகி. பகத்சிங் மட்டுமே என்று சொன்னால் அது மிகையில்லை.  ஏனெனில் அவர் கொண்டிருந்த புரட்சிகரக் கொள்கைகள் அப்படிப்பட்டவை.  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பகத்சிங்கை தூக்கிலிட்டே தீரவேண்டும் என்று அத்தனை உறுதியாக இருந்ததற்குக் காரணம் அவர் செய்த செயல்கள் அல்ல.  அவர் முன்வைத்த கொள்கைகளே.   காந்தியடிகளும் அவர் பின்னாலிருந்த தேசியவாதிகளும் பகத்சிங்கையும் அவரது கொள்கைகளையும் “அவர் ஒரு பயங்கரவாதி - வன்முறையாளர்” என்று ஒரு வரியில் நிராகரித்ததற்குக் காரணமும் அவர் செய்த செயல்கள் அல்ல.  சுதந்திர இந்தியாவின் ஆட்சியதிகாரம், இந்திய முதலாளிகளின் கைகளுக்கு போகக் கூடாது ;  இந்தியாவின் தொழிலாளர்கள் - விவசாயிகளின் கைகளுக்கே செல்லவேண்டும் என்று கூறிய பகத்சிங்கின் கொள்கைகளே அவர்களை அவ்விதம் செய்யத் தூண்டியது.  இன்றைய ஆளும் வர்க்கமும் தவிர்க்க முடியாமல் பகத்சிங்கின் பெயரைச் சொல்ல நேர்ந்தாலும், மறந்தும் கூட அவர் கொள்கைகளைச் சொல்லாமல் மறைப்பதற்குக் காரணமும் அதுவே.   

இந்திய மண்ணில் “புரட்சி நீடூழி வாழ்க” என்று முழங்கிய அந்த முதல் குரலுக்குச் சொந்தக்காரரான பகத்சிங்கின் உருவத்தை நினைத்தாலே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு குலை நடுக்கமெடுத்தது.  அதனால் தான் பகத்சிங்கின் இறந்த உடலை அவர் பெற்றோர்களுக்குக் கூட தரமறுத்து, பல துண்டுகளாக வெட்டிச் சிதைத்து, மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தி, அரைகுறையாய் எரிந்த துண்டங்களை சட்லெஜ் நதியில் வீசியெறிந்து தனது பயத்தையும் வெறியையும் தணித்துக் கொண்டது பிரிட்டிஷ் அரசாங்கம்.  பகத்சிங்கின் அழகிய உடலைச் சிதைத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடூரச் செயல் நடந்து முடிந்து 75 ஆண்டுகள் ஓடிவிட்டன.  ஆனால் பகத்சிங்கின் கொள்கைகளையும் கருத்துக்களையும் சிதைக்கும் கொடுமை இன்றும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.  ஆங்கில ஆட்சியாளர்களும் அஹிம்சைவாதிகளும், பகத்சிங் ஒரு பயங்கரவாதி - வன்முறையாளர் என்று சொல்லிச் சொல்லி மக்களுக்கும் அவருக்கும் இடையே எழுப்பிவைத்த சீனப் பெருஞ்சுவரை ஒத்த அறியாமைச்சுவர் இன்றும் வலுவுடன் நிற்கிறது.  

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட 1931ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி அவரது முதலாண்டு நினைவுதினமான 1932 மார்ச் மாதம் முடிய, ஓராண்டிற்குள் பகத்சிங் வரலாறு பற்றி தமிழில் வெளிவந்து தடைசெய்யப்பட்ட நூல்கள் மட்டும் பதினொன்று.நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பகத்சிங்கைப் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் போதுமான அளவிற்கு இல்லையென்றாலும் - பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன.  ஆனால் இவையெல்லாம் பகத்சிங் பற்றிய நூல்களேயொழிய, பகத்சிங்கின் கருத்துக்கள் மற்றும் கொள்கை களைச் சொல்லும் நூல்கள் அல்ல.  பகத்சிங்கைப் பற்றிய நூல்களும் கூட அவரது கொள்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படவில்லை.

உதாரணத்திற்கு 1931 மார்ச் இறுதியில் வெளியாகி ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆறு பதிப்புகள் கண்ட எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர் எழுதிய “வீரத் தியாகி சர்தார் பகத்சிங்” எனும் நூலைக் கூறலாம்.   பகத்சிங்கின் தியாகத்தை உயர்வாக சித்தரிக்கும் அந்நூல் “ஈசுவர வடிவமாக உள்ள ஜீவராசிகளிடம் அன்பு கொள்ளுதலே தேச பக்தி எனப்படும் ... காந்தியடிகள் ஏக நாயகனாக விளங்குகிறார்.  அவரது வழியைப் பின்பற்றி நடப்போரே உண்மையில் தேசபக்தர் ஆவர்” என்று கூறி முடிக்கிறது.  ஆக பகத்சிங்கின் கொள்கை என்ன என்பது சாதாரண மக்களிடம் கொண்டு செல்லப்படாமலேயே நின்று விட்டது.

பகத்சிங் தூக்கிலிடப்பட்டு ஏறத்தாழ 55 ஆண்டுகள் முடிந்த பின்னரே முதன் முதலாக பகத்சிங்கின் எழுத்துகள் ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தது.   இந்த அரிய பணி பகத்சிங்கின் சக தோழரும் பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பின் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவருமான தோழர். சிவவர்மா அவர்களால் செய்து முடிக்கப்பட்டது.  பகத்சிங்கின் கொள்கைகளை விளக்கும் அவரது தேர்ந்தெடுக்கப் பட்ட படைப்புகளுடன் வெளிவந்த அந்நூல் ஆங்கிலத்தில் இருந்ததால் சாதாரண உழைக்கும் மக்களுக்கு அவர் கருத்துக்கள் போய்ச் சேரவில்லை.  அது ஆங்கில அறிவு பெற்ற அறிவுஜீவிகளின் தளத்திலேயே நின்றுபோனது.  தனது இரு கண்பார்வையும் மறைந்துவிட்ட நிலையில் அந்நூலை வெளிக்கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்ட தோழர். சிவவர்மாவின் நோக்கம் முழுமையாக நிறைவேறாமல் போய்விட்டது.  

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பகத்சிங்கின் ஒரே படைப்பு அவரது “நான் ஏன் நாத்திகன்” என்ற கட்டுரை மட்டுமே.  அதுவும் தோழர் ப. ஜீவானந்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்கு முன்னர் காங்கிரஸிலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தபோது (1934) வெளியிடப்பட்டது.  அதன் பிறகு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.  அக்கட்டுரை அதனை வெளியிட்ட சுயமரியாதை இயக்கத்தின் நாத்திகக் கொள்கைக்கு உடன்பாடாக இருந்ததாலேயே அது மொழி பெயர்த்து வெளியிடப் பட்டுள்ளது.  அந்நூலின் முதற்பதிப்பின் முன்னுரையிலேயே “தோழர் பகத்சிங்கின் அரசியல் கொள்கை முழுவதும் நமக்கு உடன்பாடல்ல” என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

பகத்சிங்கின் நாத்திகக் கொள்கைகளை தமிழில் மொழிபெயர்த்து வழங்க வேண்டியது நம் கடமை என்பதை அக்கொள்கையோடு உடன்பாடுடைய சுயமரியாதை இயக்கத்தினர் மிகச் சரியாகவே உணர்ந்து செயல்பட்டுள்ளனர்.  அப்படியானால் அவரது அரசியல் கொள்கைகளை தமிழ்நாட்டு மக்களுக்கு மொழி பெயர்த்துச் சொல்ல வேண்டியது நம் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயம் யாருக்கு இருக்கிறது என்பது இயல்பாகவே எழும் கேள்வி.  

பகத்சிங் தன் இடையறாத போராட்ட வாழ்க்கையினூடே உருவாக்கி வளர்த்த கம்யூனிச வேர்களைப் பற்றிக் கொண்டு, இன்றைய ஆளும் வர்க்கமாகிய இந்திய முதலாளி வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படையாக, உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றை இந்திய மண்ணில் இனிமேல்தான் கட்டியமைக்க வேண்டும் என்ற  வரலாற்றுக்கடமை எந்த இயக்கத்திற்கு இருக்கிறதோ அவர்களே பகத்சிங்கின் கொள்கைகளை உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.  அத்தகையதொரு இயக்கம் என்ற அடிப்படையில் கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (C.W.P), தமிழ்நாடு கிளை ஆங்கிலத்தில் நமக்குக் கிடைத்த பகத்சிங்கின் எழுத்துகளை முழுமையாக தமிழில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட வேண்டும் என்று 2003 மார்ச் 23ல் முடிவு செய்தது.

அம்முடிவினை செயல்படுத்த முனைந்த போது ஆங்கிலத்தில் சிவவர்மாவின் ‘தியாகி பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப் பட்ட படைப்புகள்’ என்ற நூல் மட்டுமே நமக்கு ஆதார நூலாகக் கிடைத்தது.  அந்நூலில் இடம் பெற்றிருந்தவற்றை முதலில் மொழிபெயர்க்கத் துவங்கினோம்.  அந்நூலில் இல்லாத பகத்சிங்கின் எழுத்துகள் பலவும் டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் சமன்லாலின் ‘பகத்சிங்கின் முழு ஆவணங்கள் தொகுப்பு’ எனும் ஹிந்தி நூலில் இருப்பதாக நமது வட இந்தியத் தோழர்கள் மூலம் அறிந்தோம்.  அவற்றில் சிவவர்மாவின் ஆங்கிலப் பதிப்பில் இல்லாத படைப்புகளை ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரும் பொறுப்பை நமது நாக்பூர் தோழர். கிஷோர் ஜாம்தார் ஏற்றுக்கொண்டார்.  அவ்வாறே மதக்கலவரங்கள் பற்றியும் தீண்டாமைக் கொடுமை பற்றியும் பகத்சிங் எழுதிய இரு கட்டுரைகளை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இ-மெயில் மூலம் நமக்கு அனுப்பி வைக்கவும் செய்தார்.  

இதற்கிடையே பகத்சிங்கின் எழுத்துகள் வேறு எதுவும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என இன்டர் நெட் மூலம் நாம் தொடர்ந்து தேடிக் கொண்டும் இருந்தோம்.  நமது மொழிபெயர்ப்புப் பணி ஏறத்தாழ முடிவடைந்து விட்ட நிலையில், 2006 மார்ச் மாதம் வாக்கில் இன்டர்நெட் வலையில் பகத்சிங்கின் புதிய நூல் ஒன்று அதிர்ஷ்டவசமாக நமக்குச் சிக்கியது.  குருஷேத்ரா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் K.C. யாதவ் மற்றும் பகத்சிங்கின் உறவினர் பாபர்சிங் ஆகியோரால் ஆங்கிலத்தில் தொகுத்து வெளியிடப்பட்ட ‘விடுதலை மணம் - பகத்சிங்கின் படைப்புகள்’ எனும் நூலே அது.  உடனடியாக இ-மெயில் மூலம் அப்புத்தகத்தை வரவழைத்தோம்.  நாக்பூர் தோழர் கிஷோரின் மூலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய சிரமம் இனி தேவை யில்லை என்றாகி விட்டது.  K.C. யாதவின் நூல்களில் கிடைத்த மற்ற எழுத்துகளையும் விரைவாக தமிழில் மொழிபெயர்த்து நமது நூலை ஏறத்தாழ முழுமை பெற்ற ஒரு நூலாக மாற்றினோம்.

மொழிபெயர்ப்புப் பணி நடந்து கொண்டிருந்தபோது இடையில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் 1987ல் எழுதிய ‘பகத்சிங்கும் இந்திய அரசியலும்’ என்ற நூல் கிடைத்தது.  அது அடிப்படையில் பகத்சிங்கைப் பற்றிய வரலாற்று நூல் என்றாலும் பின்னிணைப்பாக பகத்சிங்கின் கடிதங்களில் 7 கடிதங்கள் மட்டும் தமிழில் மொழி பெயர்த்து வழங்கப்பட்டிருந்தன.   அவை பெரும்பாலும் பகத்சிங்கின் உணர்ச்சி பூர்வமான கடிதங்களேயன்றி, அவரது கொள்கைகளை விளக்குபவையாக இல்லை.  ஆனால் அந்நூலின் இறுதியில் “சிவவர்மா தொகுத்து வெளியிட்டுள்ள பகத்சிங்கின் கடிதங்களும் அறிக்கைகளும் தமிழில் கொண்டு வரப்படுமானால், மேலும் தமிழ் மண்ணிற்கு நல்ல செய்திகள் வந்து சேரும்” என்றும் பேராசிரியர் எழுதியிருந்தார்.  பகத்சிங்கின் எழுத்துகளை தமிழில் முழுமையாக மொழிபெயர்த்து வெளியிட வேண்டியது நமது வரலாற்றுக் கடமை என்ற நமது முந்தய எண்ணம் மேலும் வலுப்பெற்றது.

தொடர்ந்து, 2004 செப்டம்பரில் எஸ்.ஏ. பெருமாள் அவர்களின் ‘பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள்’ எனும் நூல் வெளிவந்த போது பகத்சிங்கின் எழுத்துகள், எவ்வித காலதாமதமுமின்றி உடனடியாக தமிழில் கொண்டுவரப்பட வேண்டியது எத்தனை அவசர அவசியம் என்பதை உணர்ந்து கொண்டோம்.  ஏனெனில் அந்நூலில் பகத்சிங்கின் ஒன்பது கட்டுரைகள் மட்டுமே மொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும் அவை முழுமையாக கருத்துச் சேதமின்றி மொழிபெயர்க்கப்படவில்லை.  அவற்றை மொழிபெயர்த்த எஸ்.ஏ. பெருமாள் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் இன்றைய அரசியல் நிலைபாடுகளுக்கு பல ‘தர்ம சங்கடங்களை’ ஏற்படுத்தக் கூடிய பகத்சிங்கின் பல பத்திகள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தன.  அவை ஒவ்வொன்றையும் மேற்கோள்காட்டி இதை நாம் நிலை நாட்ட முயலாமல், அம்மொழி பெயர்ப்பையும் நம் மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து, உண்மையை தாங்களே உணர்ந்து கொள்ளும் பெரும் பொறுப்பை நம் வாசகர்களுக்கே விட்டுவிடுவோம். ஆனால் பகத்சிங்கின் கருத்துகளையும் கொள்கைகளையும் சிதைப்பவர் களும் இருட்டடிப்பு செய்பவர்களும் எதிரணியில் உள்ள ஆளும் வர்க்கங்கள் மட்டுமல்ல என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொண்டோம்.  

பகத்சிங் சொன்னதை இருட்டடிப்பு செய்பவர்கள் ஒருபுறமிருக்க, பகத்சிங் சொல்லாததை அவர் சொன்னதாக ஏற்றிவைத்துக் கூறும் பகத்சிங் பக்தர்களும் இருக்கிறார்கள்.  “இந்திய விடுதலை அஹிம்சையிலா ? புரட்சியிலா ? - காந்தியாருடன் பகத்சிங் நடத்திய தத்துவப் போர்” என்ற நீண்ட தலைப்பில் கோவை ஈஸ்வரன் மொழிபெயர்ப்பில் மனிதன் பதிப்பகம் (23 மார்ச் 2005) வெளியீட்டில் ஒரு சிறிய புத்தகம் எனக்குக் கிடைத்தது.  பகத்சிங் எழுதிய இன்னொரு ஆவணம் நமக்குக் கிடைத்துள்ளது என்ற மகிழ்ச்சியில் உள்ளே திறந்து பார்த்தால், அது பகத்சிங் எழுதியதே அல்ல.  அது காந்திஜியின் “வெடிகுண்டின் வழிபாடு” எனும் கட்டுரைக்கு தத்துவார்த்த மறுப்புரையாக பகத்சிங்கின் சக தோழர் பகவதி சரண் வோரா எழுதிய “வெடிகுண்டின் தத்துவம்” எனும் கட்டுரை.  பகத்சிங்கின் பெயரில் அக்கட்டுரை வெளிவரவேண்டும் என்பதற்காக அதன் முன்னுரையில் “இந்த ஆவணம் பகவதி சரண், யஷ்பால் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு சிறையிலிருந்த பகத்சிங், தலைமறைவாய் இருந்த ஆசாத் ஆகியோரால் சரி செய்யப்பட்டது” என்பதாக வலிய பகத்சிங்கின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.  இந்த ஆவணம் சிறையில் இருந்த பகத்சிங்கிடம் சரிபார்க்கப்பட்டது என்று யூகிப்பதற்குக்கூட ஆதாரம் எதுவுமில்லை.  ஏன் இந்த நேர்மையற்ற செயல் ?  பகத்சிங்கின் மேல் இருக்கும் அதீத ஈர்ப்பா ? பகத்சிங் உண்மையில் எழுதியவற்றையே நம்மால் முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலையில், அவர் எழுதாததை அவர் எழுதியதாகச் சொல்லி மக்களை ஏன் ஏமாற்ற வேண்டும் ? தவிர, பகத்சிங்கை ஆளும் வர்க்கம் இருட்டடிப்பு செய்கிறது என்று கூறிக்கொண்டே, பகத்சிங்கின் சக தோழரான பகவதி சரண் வோராவை பகத்சிங்கின் பெயராலேயே இருட்டடிப்பு செய்வது என்ன நியாயம் ?

பகத்சிங் தன் வாழ்நாள் முழுவதும் தான் தவறாக சித்தரிக்கப் படுவதற்கும், தனது கருத்துக்கள் திரித்துக் கூறப் படுவதற்கும், தவறான கருத்துக்களோடு தன் பெயர் தொடர்புபடுத்தப் படுவதற்கும் எதிராக இறுதிவரை போராடினார்.   இன்று அப்போராட்டத்தை அவரது பெயரால் நாம் தொடர வேண்டியுள்ளது. இன்று பகத்சிங்கின் தியாகத்தைப் புகழ்பவர் களாலேயே அவர் தவறாக சித்தரிக்கப்படுகிறார் என்பதே வேதனைக்குரிய உண்மையாகும்.
பகத்சிங்கின் தத்துவார்த்த அறிவின் உயரம் மக்களுக்குத் தெரியாது என்ற நிலைமையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி, பகத்சிங்கின் தியாகத்தை போற்றுபவர்களும் கூட பகத்சிங் பற்றிய தவறான சித்திரத்தை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர்.  “அன்று இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி தலைமறைவாக செயல்பட்டு வந்ததால், பகத்சிங்கிற்கு அக்கட்சியுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் (Communication cape  ) போய்விட்டது ; இருந்திருந்தால் பகத்சிங் அன்றே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந் திருப்பார்” என்ற தவறான கருத்து பரவலாக பரப்பப்பட்டு நிலை பெற்றுள்ளது.  பேராசிரியர். சுப. வீரபாண்டியனும் தனது “பகத்சிங்கும் இந்திய அரசியலும்” எனும் நூலில் (பக்கம் 79) இதனையே நிலைநாட்டு கிறார்.  ஆனால் சற்று நிதானமாக பகுத்தாராய்ந்து பார்த்தால் இந்த முடிவு முற்றிலும் அடிப்படையற்றது என்பது தெளிவாகிவிடும்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சியில் இரகசியமாக செயல்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல ; பகத்சிங்கின் புரட்சிகர இயக்கமும் தான்.  தலைமறைவு இயக்கங்கள், தங்களுக்குள் இரகசியமாக தொடர்பு வைத்துக்கொண்டு இயங்க முடியும் எனும் போது, மற்ற இயக்கங்களுடன் அதே வழிமுறையில் ஏன் அவர்களால் தொடர்பு கொள்ள முடியாது ? உண்மையில் பகத்சிங்கிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பல முக்கியத் தலைவர்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருந்து வந்தது என்பதே உண்மை.  அவர்களுக்கு இடையே நேரடித் தொடர்பு இருக்கவில்லை என்ற பரவலான நம்பிக்கை என்பது பகுத்தறிவுக்கு உட்படுத்தப்படாத ஒரு மூடநம்பிக்கையே.  (இம்மூட நம்பிக்கை, முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் என்று நம்பப்படுபவர் களிடமிருந்து உருவானதால் இதனை “புரட்சிகரமான மூடநம்பிக்கை” என்று வேண்டுமானால் அழைத்துக் கொள்வோம்).

பகத்சிங்கின் கான்பூர் தோழர்களுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களாயிருந்த மௌலானா ஹசரத் மொஹானி, சத்ய பக்த, ராதா மோகன் கோகுல்ஜி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சோகன் சிங் ஜோஸுடன் பகத்சிங்கிற்கு 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாகவே நேரடித்தொடர்பு இருந்துள்ளது.  1928ம் ஆண்டு முழுவதும் பகத்சிங், சோகன் சிங்குடன் இணைந்து கீர்த்தி இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்து செயல்பட்டுள்ளார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான முஷாபர் அகமது 1924ல் முதல் கான்பூர் போல்ஷ்விக் சதிவழக்கில் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று, பின்னர் உடல்நிலை மோசமானதால் 1925 இறுதியில் விடுதலை செய்யப்பட்டார்.  விடுதலையான பின்னர் அவர் 1926ல் கான்பூரில் சக தோழர் அப்துல் மஸ்ஜித் வீட்டில் தங்கியிருந்தபோது,  நவஜவான் பாரத் சபாவின் தலைவராக 18 வயது பகத்சிங் தன்னை மரியாதை நிமித்தம் சந்தித்து விட்டு சென்றதை அவர் நினைவு கூர்வதாக, சமன்லால் எழுதுகிறார்.  

1928 மார்ச்சில் நடைபெற்ற நவஜான் பாரத் சபாவின் ஒரு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.ஏ.  டாங்கேயும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் பிலிப்ஸ்  பிராட்டும் இணைந்து உரையாற்றினார்கள் என்று அரசாங்க கோப்புகளின் ஆதாரத்துடன் பேராசிரியர் சுப. வீரபாண்டியனே எழுதுகிறார்.  மேலும் அதே அரசாங்க கோப்பில் ‘கீர்த்தி’ இதழ் ஆசிரியர் சோகன் சிங் ஜோஷ் இச்சபையின் அமிர்தசரஸ் கிளைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்றும் இவ்விரு இயக்கங்களும் இணைந்து 1928 ஆகஸ்ட் மாதம் ‘ரஷ்ய நண்பர்கள் வாரம்’ கொண்டாட முடிவு செய்தனர் என்றும் இரகசிய அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. முத்தாய்ப்பாக, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் நவஜவான் பாரத் சபாவிற்கும் நெருக்கம் கூடிக் கொண்டே இருந்தது என்றும் பிரிட்டிஷ் அரசாங்க கோப்புகள் தெரிவிக்கின்றன. 

எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான தலைவர் களுடன் ஆரம்பம் முதற்கொண்டே நேரடித் தொடர்பு வைத்திருந்த பகத்சிங், அத்தலைவர்களுடன் அக்கட்சியுடனான தனது கொள்கை மாறுபாடுகள் பற்றி விவாதித்திருக்கமாட்டார் என்று நாம் எப்படிக் கூறமுடியும்.  நிச்சயம் விவாதித்திருப்பார்.  அவ்வாறு விவாதித்ததன் காரணமாகத்தான் 1931 ல் ‘கனவுலகம்’ எனும் கவிதை நூலுக்கு எழுதிய விமர்சனக் கட்டுரையில் “எனது எல்லா முயற்சிகளுக்குப் பின்னரும்கூட நாம் எதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம் என்பது பற்றிய தெளிவான கொள்கைகளை உடைய எந்தவொரு புரட்சிகரக் கட்சியையும் என்னால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று பகத்சிங்கால் அறுதியிட்டுக் கூற முடிந்திருக்கிறது.  இந்த முடிவுக்கு அவர் வந்ததனால் தான் அவர் 1931 பெப்ரவரியில் சிறையிலிருந்து “இளம் அரசியல் தொண்டர் களுக்கு” எழுதிய கடிதத்தில் இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்கிறார்.

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இந்திய மண்ணில் கம்யூனிசக் கொள்கைகளை மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்ட கட்சி ; பகத்சிங்கின் HSRA புரட்சிகரக் கட்சி மார்க்சியத்தை தவறாகப் புரிந்து கொண்ட கட்சி ; அவர்கள் மார்க்சியத்தை சரியாக புரிந்து கொண்டிருந்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருப் பார்கள்” என்ற தவறான அபிப்ராயம் நமது மனதின் அடி ஆழத்தில் பதிந்துள்ளதாலேயே இத்தகைய புரட்சிகரமான மூடநம்பிக்கை எவ்வித பகுத்தறிவிற்கும் உட்படுத்தப் படாமல் இன்றுவரை நம்மிடம் அப்படியே நிலவி வருகிறது.  முதலில் அத்தவறான அபிப்ராயத்தை நாம் விட்டொழிக்க வேண்டும்.   

1917 ல் ரஷ்யாவில் நடந்தேறிய மாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சி, காலனி நாடுகளெங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்த தேச விடுதலை இயக்கங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  அது இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பிரதிபலித்தது.  அன்று விடுதலைப் போராட்டத்தில், அரசியலமைப்பு சார்ந்த போராட்டங்களின் மூலம் சாத்வீகமாகப் போராடி சுதந்திரம் பெற முயன்ற காங்கிரஸ் பேரியக்கம் மற்றும் ஆயுத எழுச்சியின் மூலம் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற முயன்ற பல்வேறு ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஆகிய இரண்டு வகையினர் இருந்தனர்.   இவ்விரண்டு வகையினர் மத்தியிலும் இரஷ்யாவின் போல்ஷ்விக் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  காங்கிரஸுக்குள்ளிருந்த தீவிர எண்ணம் கொண்ட இளைஞர்கள் கம்யூனிச தத்துவத்தை நோக்கி நகர்ந்தனர்.  அதுபோல பயங்கரவாத இயக்கம் என அழைக்கப் பட்ட ஆயுதம் தாங்கிய குழுக்களில் இருந்த இளைஞர்களும் படிப்படியாக கம்யூனிச தத்துவத்தை நோக்கி நகரத் துவங்கினர்.  இக்குழுக்களில் முக்கியமானது - முதன்மையானது பகத்சிங்கின் ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோஷியேசன் (HRA). 

காங்கிரஸுக்குள் இருந்த கம்யூனிசத்தின் பால் ஈர்க்கப்பட்ட பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்கள் ஒன்றிணைந்து 1925 டிசம்பர் 26 அன்று கான்பூர் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அதே சமயத்தில், 1925 ஜனவரியில் தனது புரட்சிகரக் கட்சி அறிக்கையை வெளியிட்ட பகத்சிங்கின் HRA , கம்யூனிசக் கொள்கைகளை படிப்படியாக உட்கிரகித்துக் கொண்டிருந்தது.   

இக்காலகட்டங்களில் 1920ல் சோவியத் மண்ணில் தாஷ்கண்டில் உருவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிச அகிலத்துடன் அதற்கிருந்த நேரடித் தொடர்பின் காரணமாக ஒப்பீட்டளவில் மிகச்சரியான கம்யூனிசக் கொள்கைகளைக் கொண்டிருந்த போதிலும், அக்கட்சியின் தலைமை, இந்தியாவில் இருந்த கம்யூனிசக் குழுக்களுடன் நிலைத்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியாமல் போய்விட்டது என்பது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம். 

அக்காலகட்டத்தில் இந்திய கம்யூனிச இயக்கத்தில் மூன்று வெவ்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்கி வந்தன.  அவற்றில் ஒன்று,  1920ல் சோவியத் மண்ணில் உருவான தோழர். M .N .ராய் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இரண்டாவது 1925ல் இந்திய மண்ணில் காங்கிரஸுக்குள் இருந்து உருவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.  மூன்றாவது, புரட்சிகரக் குழுக்களில் இருந்து உருவான பகத்சிங்கின் HSRA  புரட்சிகரக்கட்சி.  இவற்றில் வெளிநாடுகளில் செயல்பட்டுவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியாவில் இருந்த பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்களுடன் நிலைத்த தொடர்பை ஏற்படுத்த முடியாததால் நடைமுறை ரீதியில் செயல்பட முடியாத நிலையில் இருந்தது.  இந்திய மண்ணில் இயங்கி வந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு மாகாணங்களில் இருந்த கம்யூனிஸ்ட் குழுக்களை ஒன்றிணைத்து அப்போது தான் உருவாக்கப்பட்டிருந்தது.    எனவே, நமது விவாதத்தில் இருக்கும் 1925 முதல் 1931 மார்ச் 23 முடிய உள்ள இந்த குறுகிய 5 ஆண்டு காலத்தில் அக்குழுக்களுக்கிடையே குறைந்தபட்சம் ஒருமித்த கருத்து ஏற்பட்டிருந்ததாகக் கூற முடியாத நிலையில் இருந்தது.  அது ஓருயிர் போன்றதொரு கட்சி என்பதை விட பல குழுக்களின் கூட்டணியாகவே இருந்தது.  

இக்காலகட்டத்தில் பகத்சிங் தலைமையிலான புரட்சிகரக் கட்சியின் தத்துவார்த்த வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக இருந்தது.  1925 ஜனவரியில் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925 டிசம்பரில் நிறுவப்படுவதற்கு முன்னர்) வெளியிடப்பட்ட புரட்சிகரக்கட்சி அறிக்கையிலேயே “வன்முறை எங்கள் நோக்கமல்ல ; அது வழிமுறை மட்டுமே” என்று அறிவித்தது முதற்கொண்டு, மார்க்சியத்தை நோக்கிய அதன் வளர்ச்சிப்போக்கு துவங்கி விட்டது.  1931 பெப்ரவரியில் சிறையிலிருந்து இளம் அரசியல் தொண்டர் களுக்கு எழுதிய கட்டுரையில் பகத்சிங்கை ஒரு முதிர்ச்சியடைந்த கம்யூனிஸ்டாக நாம் பார்க்கலாம்.  அதே கால கட்டத்தில் இருந்த இந்திய கம் யூனிஸ்ட்  கட்சியின் தலைவர்கள் மீதும் அவர்களது தியாகங்கள் மீதும் நாம் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் எள்ளளவும் குறையாமல் இருக்கும் அதே வேளையில், அவர்கள் அன்று பகத்சிங் எட்டியிருந்த தத்துவார்த்த அறிவின் உச்சத்தை எட்டியிருந்தார்களா என்பது ஆய்விற்குரிய விஷயம் என்பதை கூறாமலும் இருக்க முடியாது.    

ஆனால் 1931 மார்ச் 23ல் அக்காலகட்டத்தின் மார்க்சிய சிந்தனையாளராக இருந்த தியாகி பகத்சிங்கின் சிந்தனை, பிரிட்டிஷ் ஆட்சியாளரால் நிறுத்தப்பட்ட அக்கணத்தில், அவரது புரட்சிகரக் கட்சியின் தத்துவார்த்த வளர்ச்சியும் நின்று போனது.  அத்துடன் அக்கட்சி நிலைகுலையத் தொடங்கியது.  சுதந்திரத்திற்குப் பின்னர், அக்கட்சியின் தொண்டர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.  பகத்சிங் தூக்கிலிடப்பட்ட லாகூர் சதிவழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற சிவவர்மாவும் விடுதலை செய்யப்பட்ட அஜய்கோஷும் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.  இவர்களில் அஜய்கோஷ் பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.  

இந்த வரலாற்றுப் பின்னணியில் பார்க்கும் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பகத்சிங்கின் புரட்சிகரக் கட்சி ஆகிய இரண்டில் எது அக்காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் மிகச்சரியாக மார்க்சியத்தை உள்வாங்கியிருந்தது என்பது உண்மையில் ஆய்விற்குரிய பொருளே.   இத்திசை வழியில் வரலாற்று ஆய்வுகள் இது வரையிலும் மேற்கொள்ளப்பட்டதாக நமக்குத் தெரியவில்லை.  பகத்சிங்கின் தத்துவார்த்த வளர்ச்சியை அறிந்து கொள்ள உதவும் நமது இம்மொழி பெயர்ப்புகள் அத்தகைய ஆய்வுகளை துவக்க தூண்டுகோலாக இருக்கவேண்டும் என்பதே நமது விருப்பம்.  

1925 ஜனவரி முதல் 1931 மார்ச் 23 முடிய உள்ள காலகட்டங் களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பகத்சிங்கின் புரட்சிகரக் கட்சி ஆகிய இருகட்சிகளின் தத்துவார்த்த வளர்ச்சிப் போக்குகள், பாரபட்சமின்றி இயக்கவியல் ரீதியில் ஆராயப்பட வேண்டும்.  ஒப்பிடப்பட வேண்டும்.  இத்திசை வழியிலான ஆழமான வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  அதன் மூலம் பகத்சிங் பற்றி நிலவிவரும் பல்வேறு ‘புரட்சிகரமான மூடநம்பிக்கைகள்’ தகர்த்தெறியப்பட வேண்டும்.  

இன்னும் சிலர், “பகத்சிங்குடன் இருந்த சக தோழர்களான அஜய் கோஷும், சிவவர்மாவும் பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட்டனர் ; எனவே பகத்சிங் இருந்திருந்தாலும் அவர் இந்திய கம் யூனிஸ்ட்  கட்சியிலேயே சேர்ந்திருப்பார்.” என்று மிக எளிமையான முடிவுக்கு வருகின்றனர்.  இது தீர்க்கமான சிந்தனையின் விளைவாகத் தோன்றிய முடிவு அல்ல.  ஏனெனில் அஜய் கோஷ், சிவவர்மா உள்ளிட்ட தோழர்களுக்கு வழிகாட்டிய தலைவர் பகத்சிங். “எங்கள் அனைவரிலும் பகத்சிங்கே மார்க்சியத்தை மிகச் சரியாக - விரைவாக உள்வாங்கியவர்” என்று சிவவர்மாவே ஒப்புக்கொண்ட உண்மை இது.  அப்படியிருக்க சிவவர்மா இந்திய கம்யூனிஸ்ட்   கட்சியில் சேர்ந்ததால், உயிருடன் இருந்திருந்தால் பகத்சிங்கும் அதில் சேர்ந்திருப்பார் என்று எப்படி முடிவுக்கு வரமுடியும்?  

பகத்சிங் இந்தியாவில் ஒரு உண்மையான கம் யூனிஸ்ட்   கட்சியை கட்டியமைக்க முயன்றார்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது வாழ்வு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் பறிக்கப்பட்டு  விட்டதால் பகத்சிங்கின் புரட்சிகரக் கட்சி வழிகாட்டும் தலைமை இன்றி தத்தளித்தது.  பகத்சிங் உயிருடன் இருந்திருந்தால் அவர் தலைமையிலான கம் யூனிஸ்ட்   கட்சியில் அஜய் கோஷ், சிவவர்மா உள்ளிட்டோர் இணைந்து செயலாற்றி யிருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அத்தகைய சூழ்நிலையில்   பகத்சிங்கின் பாதையைப் பின்பற்றி உண்மையான கம் யூனிஸ்ட்  கட்சியை இந்திய மண்ணில் கட்டியமைக்கும் கடமையை நிறைவேற்ற அவர்கள் முயன்றிருக்க வேண்டும்.  மாறாக, சுதந்திர இந்தியாவில் அன்றிருந்த அரசியல் கட்சிகளில் இந்திய கம் யூனிஸ்ட்  கட்சி ஒன்றே தங்களது கொள்கைக்கு உகந்த கட்சி என்று முடிவு செய்து அக்கட்சியில் சேர்ந்துள்ளனர்.  இப்படித்தான் நம்மால் யூகிக்க முடியும்.  இப்படியொரு முடிவுக்கு வருவதற்கே தர்க்க ரீதியாக எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன.  இதற்குமாறாக தொண்டர்களின் முடிவைக் கொண்டு தலைவரின் முடிவு இப்படித்தான் இருந்திருக்க முடியும் என்று நாம் எப்படித் தீர்மானிக்க முடியும் ?

நாம் இதைக் கூறும் போது, அஜய் கோஷ், சிவவர்மா ஆகிய தலைவர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் எண்ணிப் பார்க்கிறோம்.  இன்றைய சூழ்நிலையில் நாம் நமது வாழ்நாள் முழுவதும் போராடினாலும் கூட அத்தலைவர்களின் தியாகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது எட்டிப் பிடிப்போமா என்பது சந்தேகமே. அவர்களது தன்னலமற்ற தியாகத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் மரியாதையுடன் தலைவணங்குகிறோம்.  ஆனால் அவர்கள் மீதிருக்கும் மரியாதையின் பொருட்டு, பகத்சிங்கின் தத்துவார்த்த அறிவின் உயரத்தை குறைவாக மதிப்பிட நமக்கு எந்த உரிமையும் இல்லை.  இதை அவர்களே விரும்ப மாட்டார்கள்.   

இன்னும் சிலர், “பகத்சிங் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினார் ; எனவே இன்று பகத்சிங்கின் வழியைப் பின்பற்றுவது என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவது என்பதே” என்று அறைகூவல் விடுக்கின்றனர்.  இது மார்க்சிய இயக்கவியலுக்கே முரணானது.   ஏனெனில் பகத்சிங் காலத்திற்குப் பின்னர் கடந்த 75 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தையும் ஒரு வரியில் நிராகரிப்பதற்குச் சமமானதாகும் இந்த அறைகூவல்.  அதுமட்டு மல்ல, பகத்சிங் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மட்டும் போராடவில்லை.  “ஈவிரக்கமற்ற இந்த சுரண்டல், இந்திய முதலாளிகளால், இந்திய அரசு இயந்திரத்தால் நடத்தப்பட்டாலும் எங்களது போர் தொடரும்” என்று அறிவித்தார்.  

அப்படியானால் பகத்சிங்கின் வழியை இன்று பின்பற்றுவது என்றால், இந்திய உழைக்கும் மக்களை அனுதினமும் சுரண்டிக் கொண்டிருக்கும் இந்திய முதலாளிகளுக்கு எதிரான அப்போரைத் தொடர வேண்டும் என்பதுதானே.  உலகமயமாக்கல் மூலம் உலக மக்களைச் சுரண்டுவதற்கு தனக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் தன் நாட்டு மக்களை சுரண்ட அனுமதித்துக் கொண்டிருக்கும் இந்திய முதலாளி வர்க்கம்தானே இந்திய மக்களின் பிரதான எதிரி.  அவர்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை தட்டியெழுப்புவது தானே பகத்சிங் வழியை இன்று நாம் பின்பற்றுவதற்கு இருக்கும் ஒரே வழி.

பகத்சிங்கைப் பற்றி, அவரது கொள்கைகள் பற்றி, அவர் வழி நடப்பது பற்றி ஏன் இத்தனை குழப்பங்கள் - தவறான அபிப்ராயங்கள் ?  காரணம், பகத்சிங்கின் தியாகம் தெரிந்த அளவிற்கு அவரது மார்க்சிய கொள்கையின் ஆழம் சாதாரண மக்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான்.  மக்களின் இந்த அறியாமையை பயன்படுத்தி, ஆளும் வர்க்கங்கள் பகத்சிங்கைப் பற்றிய தவறான கருத்துக்களை பரப்பி வருவது ஒருபுறம் இருக்க, பகத்சிங்கின் தியாகத்தைப் போற்றுபவர்களும் தங்கள் பங்கிற்கு தவறான அபிப்ராயங்களை உருவாக்கி வருகின்றனர்.  

இவற்றிற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமானால், உண்மையில் பகத்சிங்கின் கொள்கைகள்தான் என்ன என்பதை உழைக்கும் மக்கள் உணருமாறு செய்ய வேண்டும்.  அதன் மூலம்  அவர்கள் பகத்சிங்கைப் பற்றிய தங்களது சொந்த அபிப்ராயங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்.  உள்நோக்கம் கொண்டோர் பகத்சிங் பற்றி பரப்பும் தவறான கருத்துக்களை அவர்களே இனம் கண்டு தூக்கியெறியும்படி செய்ய வேண்டும்.  அதற்கு அம்மக்களுக்குத் தெரிந்த மொழியில் - அவர்களின் தாய்மொழியில் பகத்சிங்கின் எழுத்துகள் எளிமையாக மொழி பெயர்க்கப்பட வேண்டும்.  அவர்களால் வாங்க முடிந்த குறைந்த பட்ச விலையில் அது கிடைக்க வேண்டும்.  இதுவே பகத்சிங்கின் எழுத்துகளை தமிழில் மொழி பெயர்த்து நாம் வெளியிடுவதன் அடிப்படையான நோக்கம்.  

எனவே, பகத்சிங்கின் எழுத்துகளை மொழிபெயர்க்கும் போது கருத்துச் சிதைவிற்கோ, தவறான பொருள் கொள்வதற்கோ வாய்ப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் தனிக்கவனம் எடுத்துக் கொண்டோம்.  பகத்சிங்கின் படைப்புகள் ஒவ்வொன்றும் மொழி பெயர்க்கப்பட்ட பின்னர், அது நமது மதிப்பிற்குரிய தோழர். ஆனந்தன் தலைமையில் நடைபெறும் மார்க்சிய படிப்பு வட்டத்தில் வாசிக்கப்பட்டு ஆங்கில மூலத்துடன் சரிபார்க்கப் பட்டது.  தவறுகள் திருத்தப்பட்டன.  தெளிவற்ற வாக்கியங்கள் தெளிவாக்கப்பட்டன. மாற்றப்பட வேண்டியவை மாற்றப்பட்டன.  துல்லியமாக்கப்பட வேண்டியவை, மேலும் துல்லிய மாக்கப்பட்டன.     உண்மையில் இந்நூல் ஒரு கூட்டு முயற்சியே.  இம்மொழி பெயர்ப்பில் சிறப்பு என்று ஏதேனும் இருக்குமாயின், அதற்கு பகத்சிங்கின் எழுத்துகளில் இருக்கும் நேர்மையும், மொழி பெயர்ப்பை செழுமைப் படுத்திய மார்க்சிய படிப்பு வட்டத் தோழர்களின் கூட்டு உழைப்புமே முழுக் காரணமாக இருக்கும்.  

மாறாக, இம்மொழி பெயர்ப்புகளில் குறைபாடுகள், தவறுகள் ஏதேனுமிருப்பின் அதற்கு நானே முழுப்பொறுப்பு.  அக்குறைபாடுகள் மற்றும் தவறுகள் வாசகர்களால் சுட்டிக்காட்டப் படும் பட்சத்தில் நூலை திருத்துவதற்காக எனக்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பில் அவற்றை தவறாமல் சரி செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்பதையும் நான் உணர்ந்துள்ளேன்.  

இந்நூலுக்கு சிறப்பளிக்கும் வகையில் பகத்சிங்கின் மார்க்சிய சிந்தனை பற்றிய ஒரு மதிப்பீட்டை வழங்கியிருக்கும் நமது கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடையின் அகில இந்திய அமைப்பாளர், மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய தோழர். சங்கர்சிங் அவர்களுக்கு, தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் சார்பாக மதிப்பையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.  

ஆங்கிலத்தில் இதுவரை வெளிவந்துள்ள பகத்சிங்கின் எழுத்துகளை ஏறத்தாழ முழுமையாக உள்ளடக்கியுள்ள இந்நூல் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் செல்லட்டும்.  பகத்சிங்கின் கொள்கைகளும் கருத்துக்களும் தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் மத்தியில் பரவட்டும்.  அம்மாபெரும் புரட்சியாளனின் கொள்கைகள், கருத்துக்களின் சாரத்தை உட்கொண்டு ஜீரணித்த ஒரு தலைமுறையாக இனிவரும் தலைமுறை உருவாகட்டும்.  அத்தலைமுறையில் இருந்து பகத்சிங்கின் மரபை - கம்யூனிச வேர்களைப் பற்றிக் கொண்டு ஆயிரமாயிரம் இளம் புரட்சியாளர்கள் உருவாகட்டும்.  “ஆளும் வர்க்கங்களால் சில மனிதர்களை அழிக்க முடியுமேயொழிய, அவர்களது கொள்கை களை அழிக்க முடியாது” என்ற பகத்சிங்கின் வார்த்தைகள் நிஜமாகட்டும்.  பகத்சிங்கின் சாம்பலில் இருந்து அல்ல - அவரது கருத்துக்களில் இருந்து அந்த மாபெரும் ஃபீனிக்ஸ்  பறவை மீண்டும் உயிர்த்தெழட்டும்.  

பகத்சிங் நிடூழி வாழ்க !
புரட்சி நிடூழி வாழ்க !                                                       அன்புடன்
                                                                                       த. சிவக்குமார்.
மதுரை 
13 ஆகஸ்ட் 2006  
செல்: 9443080634  
இ-மெயில்: thasivakumar @gmail .com  

 பொருளடக்கம்
இரண்டாம் பதிப்பு - முன்னுரை                                             -7
முதற்பதிப்பு - முன்னுரை                                                        - 9                  
பகத்சிங் - ஓர் புரட்சியாளன் - தோழர் சங்கர்சிங்               - 25
அணிந்துரை - தோழர் அ. ஆனந்தன்                                   - 35
1.  பஞ்சாபின் மொழி மற்றும் எழுத்து வடிவம்  
பற்றிய பிரச்சனை  ,                                                                - 59
2.  தந்தை கிஷான் சிங்கிற்கு கடிதம்                                     - 75
3.  தந்தை கிஷான் சிங்கிற்கு கடிதம்                                     - 77
4.  தந்தை கிஷான் சிங்கிற்கு கடிதம்                                     - 78
5.  தூக்கிலேற்றப்பட்ட பாபர் அகாலிகள்                            - 79
6.  தேசிய இயக்கத்தை சீர்குலைக்கும் 
மதநம்பிக்கைகள்                                                                     - 91
7.  மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும்          - 99
8.  மதக்கலவரங்களுக்குத் தீர்வு 
வர்க்கப் போராட்டங்களே                                                    - 104
9.  தீண்டாமைக் கொடுமைக்கு உடனடித் தீர்வும் 
இறுதி இலக்கும்                                                                      - 113
10.  நேதாஜி மற்றும் நேருவின் சிந்தனையும் 
உலகப்பார்வையும் : ஒப்பீடு                                                  - 122
11.  புரட்சிகரத் தாய்க்கு புகழஞ்சலி                                     - 131
12.  எச்சரிக்கை, அடக்குமுறையாளர்களே ; எச்சரிக்கை  – 136
13. காதல் பற்றி சுகதேவுக்கு கடிதம்                                     - 140
14. கேளாத செவிகள் கேட்கட்டும்                                        - 146
15. சட்டமன்ற வெடிகுண்டு வழக்கில் அமர்வு 
நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம்                                     - 150
16. பஞ்சாப்,  சிறைத்துறை இன்ஸ்பெக்டர் 
ஜெனரலுக்கு கடிதம்                                                                  -162
17. உண்ணாவிரதப் போராட்டத்தின் கோரிக்கைகள்        - 164
18.  பஞ்சாப், மாணவர் மாநாட்டுக்கு அனுப்பிய 
வாழ்த்துச் செய்தி                                                                      - 169
19. புரட்சி நீடுழி வாழ்க                                                           - 172
20. லெனின் நினைவு நாள் தந்தி                                             - 177
21. மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் ; 
பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு பகத்சிங் கெடு                         -   178
22.  நீதிமன்றத்திற்கு வரமறுப்பதற்கான காரணம்              -190
23. உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதம்             - 195
24. லாகூர் சதிவழக்கு அவசரச் சட்டம் 
எங்களுக்கு கிடைத்த வெற்றியே                                            - 204
25. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் 
நீதிமன்றத்தை புறக்கணிக்கிறோம்                                       - 211
26. நீதிபதி ஹில்டன் நீக்கப்படவேண்டும்                           -217
27. தற்கொலை பற்றி சுகதேவுக்கு கடிதம்                           - 221
28. தந்தையைக் கண்டித்து கடிதம்                                       - 231
29. பட்டுகேஷ்வர் தத்துக்கு கடிதம்                                     - 237
30. பள்ளித்தோழன் ஜெய்தேவ் -க்கு கடிதம்                      - 240
31. ‘கனவுலகம்’ எனும் கவிதை நூல் விமர்சனம்              - 243
32. புரட்சியாளர்களுக்கு எதிரான வழக்குகளில் 
கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை                              -  256
33. இந்தியாவில் கம்யூனிஸ்ட்  கட்சியை உருவாக்க 
என்ன செய்ய வேண்டும் ?                                                    -263
34. நான் ஏன் நாத்திகன்                                                     - 284
35. என்னை தூக்கிலிடக்கூடாது ; 
சுட்டுக் கொல்ல வேண்டும்                                               - 315
36. பகத்சிங் அவர் தம்பிக்கு எழுதிய கடிதம்                  - 321
37. பகத்சிங்கின் கடைசிக் கடிதம்                                    - 323
   பிற்சேர்க்கைகள் 
38. இந்தியப் புரட்சிகரக் கட்சி அறிக்கை                      - 328
39. பஞ்சாப் நவ ஜவான் பாரத் சபாவின் 
கொள்கை அறிக்கை                                                        -  338
40. HSRA கட்சி அறிக்கை                                               - 350
41. வெடிகுண்டின் தத்துவம் - தியாகி B.C. வோரா   - 357
42. காந்திஜிக்கு பகிரங்க கடிதம் - தியாகி சுகதேவ்   - 377