Powered By Blogger

Saturday, September 1, 2012

கொலைகார, குரோனி முதலாளித்துவ நிர்வாகங்களின் ஒருங்கிணைப்பாக விளங்கி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் உழைக்கும் வர்க்கத்திற்கு விடுத்துள்ள சவாலை எதிர் கொள்வோம்


மாமேதை லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் ஏகபோகங்கள் உருவாவதைப் பற்றி விரிவாக எழுதினார். குறிப்பாக டிரஸ்ட்கள் மற்றும் கார்டல்கள் என்ற ஏகபோக நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை விரிவாக விளக்கினார். எவ்வாறு ஒரே தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏகபோகங்கள் உருவாயின என்பதை அந்நூலில் அவர் விளக்கினார்.

ஆனால் நவீன முதலாளித்துவம் அதனைத் தாண்டித் தற்போது பல மடங்கு சென்றுள்ளது. ஒரே தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஏகபோகங்கள் உருவாகும் போக்கையெல்லாம்   தாண்டி லாபம் கிடைக்கும் அனைத்துத் தொழில்களிலும் சேவைகளிலும் மூலதன வலுக் கொண்ட நிறுவனங்கள் முதலீடு செய்து அத்தொழில்களை நடத்துகின்றன. இதில் குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது ஒப்பந்தத் தொழிலிலும் பெரும் பெரும் ஒப்பந்தத் தொழிலாளர் நிறுவனங்களை ஏற்படுத்தி பல ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் நுழைந்துள்ளன.


டாடா, அம்பானி போன்ற ஏகபோக நிறுவனங்களே இவ்வாறு ஒப்பந்தத் தொழிலாளர் நிறுவனங்களை நடத்துகின்றன. ஒரு தொழிலை நடத்துவதற்குத் தேவையான தொழிலாளரை நிரந்தரமாக நியமனம் செய்து உற்பத்திப் பணியில் ஈடுபடுத்தி லாபம் ஈட்டும் போக்கிற்குத் தற்போது பெருமளவு விடை கொடுக்கப்பட்டு விட்டது. தற்போதைய முதலாளித்துவ நிறுவனங்களின் அதிகபட்ச லாபமே தொழிலாளருக்குச் சேர வேண்டிய சம்பளத்தைக் குறைத்து வழங்குவதன் மூலம் வருவது தான் என்றாகிவிட்டது. அதாவது ஒட்டுமொத்த உற்பத்திச் செலவில் தொடர்ச்சியாகக் குறைந்து வருவது தொழிலாளருக்கு வழங்கப்படும் ஊதியமே என்றாகிவிட்டது.

குரோனி முதலாளித்துவம்

இவ்வாறு ஒப்பந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளரை எவ்வாறெல்லாம் சுரண்ட முடியும் என்பதற்கு கிளாசிக்கலான எடுத்துக்காட்டு 108 ஆம்புலன்ஸ் சேவை ஆகும்.  முதலாளித்துவம் குறித்து உயர்வாக எதையுமே சொல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட நிலையில் பல முதலாளிகளும் பொருளியல் நிபுணர்களும் கூட தற்போதைய முதலாளித்துவத்தை குரோனி முதலாளித்துவம், கொலைகார முதலாளித்துவம் என்றே கூறுகின்றனர். 2ஜி இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை விற்பனையின் போது எவ்வாறு அதனைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை எடுப்பதில் பல முறை தவறிய போக்குகளை பல நிறுவனங்கள் கடைப்பிடித்தன என்பதை விளக்கும் போது இந்தியாவின் முதற்பெரும் முதலாளித்துவ நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா கூறினார்: இது குரோனி முதலாளித்துவக் காலகட்டத்தின் கோளாறு என்று.

கொலைகார முதலாளித்துவம்
அதைப்போல் ரஷ்யா போன்ற முன்னாள் சோசலிச நாடுகளில் தற்போது வளர்ந்து காலூன்றி வரும் முதலாளித்துவத்தைக் கொலைகார முதலாளித்துவம் என்று பொருளாதார நிபுணர்கள் வர்ணிக்கின்றனர். அவ்வாறு அந்நாட்டின் முதலாளித்துவம் வர்ணிக்கப்படுவதற்கான காரணம் அங்கு ஏறக்குறைய 75 ஆண்டு காலம் தனியார் முதலாளிகளே இல்லாதிருந்த நிலையில் அங்கு முதலீடு செய்வதற்கான மூலதனத்தைக் கொண்டவர்களாக இருந்தவர்கள் சோவியத் நிர்வாகத்தில் பல திருட்டுத்தனங்கள் செய்து பொருளீட்டிய உயர்மட்ட நிர்வாகிகளும் சோவியத் காலகட்டத்தின் கடைசி நாட்களில் அங்கு நிலவிய சில பொருட்களுக்கான தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக் கள்ளச்சந்தை நடத்தியவர்களுமே ஆவர்.
மார்க்ஸ் கூறினார் லாபம் என்பது சட்டரீதியாக அடிக்கப்படும் கொள்ளை என்று. ஆனால் மார்க்சின் காலகட்டத்தைச் சேர்ந்த முதலாளிகள் அடித்தது கொள்ளை என்றால் தற்போது முதலாளித்துவம் செய்து வருவது வழிப்பறி போன்றதாகும். அதாவது சட்டம் இயற்றி மரபுகளை வகுத்து சுரண்டலின் மூலம் வரும் உபரி மதிப்பின் மீது புனித நீரைத் தெளித்து அதனை லாபம் என்று மார்க்ஸ் காலத்து முதலாளிகள் வர்ணித்தனர்.

அதன்பின் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தின் பலனாகவும் முதலாளித்துவ நாடுகளைக் கம்யூனிஸ பூதம்மிரட்டியதாலும் கூட்டுபேர உரிமைகளின் பலனாக அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் ஓரளவு வயிற்றைக் கழுவுவதற்குப் போதுமான ஊதியத்தைப் பெற்றனர். சோசலிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உலக அளவில் சமூகமாற்றச் சிந்தனை கொண்ட அமைப்புகள் தொழிற்சங்கங்களை வழிநடத்துவது கணிசமாகக் குறைந்த பின்னணியில் இவ்வாறு தொழிலாளருக்குக் கொடுக்க நேர்ந்த கூடுதல் ஊதியத்தை முதலாளிகள் தட்டிப்பறிக்க விரும்பினர். அதற்கு அவர்களுக்கு பயன்பட்ட பேராயுதமாக இருந்தது ஒப்பந்தத் தொழில் முறையாகும்.

இந்தத் தொழில் முறை தோன்றியதற்கு முன்பிருந்த சூழ்நிலையில் முதலாளிகள் லாபம் ஈட்டுவதிலும் ஒரு தார்மீக நெறிமுறையைக் கடைப்பிடித்தது போல் பாவனை காட்ட முடிந்தவர்களாக இருந்தனர். தற்போது ஒப்பந்தத் தொழில்முறை என்பது பெரிய வியாதியைப் போல் தொழில் துறையில் பரவிவரும் சூழ்நிலையில் இந்த முதலாளித்துவத்தின் தார்மீகப் போக்கு இருந்த சுவடு தெரியாமல் துடைத்தெறியப் பட்டுவிட்டது. அச்சூழ்நிலையில் முதலாளித்துவம் லாபம் ஈட்டுவதற்காகக் கடைப்பிடிக்கும் நெறிமுறையற்ற ஊழல் மலிந்த போக்குகளையே குரோனி முதலாளித்துவத்தின் போக்குகள் என்று முதலாளித்துவச் சிந்தனையாளர்களே வர்ணிக்கின்றனர்.

இந்தப் பின்னணியில் நாம் தற்போது நமது ஆய்விற்கு எடுத்துக் கொள்ளும் ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ. 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பரிசீலிப்போம். ஜி.வி.கே. நிறுவனம் உலக அளவில் கருதப்படும் முக்கியத் தொழில் நிறுவனங்களில் ஒன்று. அது இந்த ஆம்புலன்ஸ் சேவையை எடுத்து நடத்த முன்வந்ததன் பின்னணி என்ன? என்பதைப் பார்த்தால் இன்றைய முதலாளித்துவம் அது ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தக்கூடியதாக இருந்தாலும் எதிலாவது அதிக சிரத்தையின்றிப் பணம் ஈட்டுவதற்கு அதற்கு வாய்ப்பிருந்தால் அதனையும் கையிலெடுக்கவே செய்யும் என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.

அரசியல் தொடர்புகளின் அடிப்படை

அந்நிறுவனம் மிகப்பெரிய பல தொழில்களைத் தன் கைவசம் வைத்திருக்கக் கூடியதொரு நிறுவனமாக இருப்பது இத்தொழில்களைக் கோரிப் பெறுவதற்கு அதற்குக் கூடுதல் வாய்ப்பினைக் கொடுத்திருக்கிறது. பொதுவாக மிகப்பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அரசியல் வாதிகளின் தொடர்பு மிக அதிகம் இருக்கும். அத்தொடர்பு எங்கோ எப்போதோ பார்த்தோம் பேசினோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு வருவதல்ல. அது அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கொடுக்கும் நன்கொடைகள் மற்றும் கையூட்டுகளை அடிப்படையாகக் கொண்டு வருவது.
அவ்வாறு அரசியல் வாதிகளுடனான நெருக்கத்தையும் தொடர்பையும் பயன்படுத்தி இந்தச் சேவையினை அந்நிறுவனம் கையிலெடுத்தது.

மிகக் குறைந்த முதலீடு

இத்தொழிலைப் பொறுத்தவரை அது செய்துள்ள முக்கிய முதலீடே இதற்கான உரிமத்தைப் பெறுவதற்காக அது செலவிட்ட தொகையாகத் தான் இருக்கும். ஏனெனில் இது ஒரு சேவை என்பதை மையமாக வைத்து இதற்கான ஊர்திகளும் உபகரணங்களும் உலகவங்கிக் கடன் மூலம் வாங்கப்பட்டு ஜி.வி.கே. நிறுவனத்திடம் ஒப்படைக்கப் படுகின்றன. பல நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்படும் பணம் பிற செலவுகளைச் செய்வதற்கு இந்நிறுவனத்திற்குப் பயன்படுகிறது. அடுத்து இதற்குத் தேவைப்படுவது இதனை இயக்கும் நிர்வாகமும் தொழிலாளர்களுமே.

அச்சாணிகள்

இச்சேவையில் மிகமுக்கியப் பணி இந்த ஆம்புலன்ஸ் ஊர்திகளை இயக்கும் ஓட்டுனர் மற்றும் நோயாளியை ஏற்றிச் செல்லும் இடத்திலிருந்து மருத்துவமனை வரை அவர்களுக்கு முதலுதவி மற்றும் அடிப்படையான சிகிச்சைகள் சிலவற்றைச் செய்து அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்க்கும் விஞ்ஞானம் மற்றும் செவிலியர் கல்வி கற்ற தொழிலாளர் ஆவர்.
அதாவது இத்துறையில் ஓட்டுனர்கள் பைலட்கள் என்றும் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட ஆதார சிகிச்சை அளிப்போர் இ.எம்.டி. என்றும் அழைக்கப்படுகின்றனர். எங்கிருந்து நோயாளிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்ற தகவலை ஓட்டுனர்களுக்கு வழங்குவதற்காகக் கால் சென்டர் என்ற ஒரு துறையும் இச்சேவையில் பராமரிக்கப் படுகிறது. இந்த மூன்று துறைகளும் தான் இச்சேவையைச் செய்வதற்குத் தேவைப்படும் அஸ்திவாரம் போன்ற துறைகள்.

இவர்களை நிர்வகிப்பவர்கள் என்ற பெயரில் ஃபிளீட்டுகள், ஓ.இ.க்கள், ஆர்.எம்.கள், டி.எம்.கள் என்ற இடைத்தட்டு நிர்வாக அமைப்புகள் உள்ளன. ஒட்டுமொத்த மேல்மட்ட நிர்வாகம் எச்.ஆர். என்று அழைக்கப்படும் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் சி.ஒ. என்று கூறப்படும் மேல்மட்ட நிர்வாகிகளின் கையில் உள்ளது.

சாதாரண மக்களுக்குக் கிடைக்கும் மருத்துவச் சேவையின் ஒரு பகுதியைச் செய்யும் இந்நிறுவனத்திற்கு ஏற்றிச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு அரசிடமிருந்து இதற்கு கூடுதல் நிதியும் வழங்கப்படுகிறது. இந்த வி­யத்தில் அரசிற்கும் ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான பாலமாக விளங்குபவர் அரசின் பிராஜெக்ட் டைரக்டர் என்று அழைக்கப்படும் திட்ட இயக்குனர் ஆவர்.
இது அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பிரபலமான ஒரு மருத்துவ சேவைத் திட்டம் என்ற பரவலான விளம்பரமும் பிரச்சாரமும் வேலைவாய்ப்பு அறிவிப்பும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் செய்யப்பட்டதால் இந்த சேவை அரசுத் துறையில் நடைபெறும் சேவை என்ற எண்ணம் பரவலாக மக்களிடையே ஏற்பட்டது.

அரசுத் துறையாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு

இந்த விளம்பரம் ஓட்டுனர் உரிமம் பெற்ற பலரிடம் இத்துறையில் சேர்வதற்கான ஆர்வத்தை உருவாக்கியது. அவர்கள் தவிர விஞ்ஞான மற்றும் செவிலியர் பட்டம் பெற்ற பட்டதாரிகள் பலரிடமும் இத்துறையில் வேலைக்குச் சேர்ந்தால் என்றாவது அரசுத்துறையில் வேலை செய்பவர்களாக ஆகிவிடலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டது.

இந்த மனநிலையோடு வேலைக்குச் சேர்ந்தவர்களை அவர்கள் மனதில் இருக்கும் அரசு ஊழியராகிவிடலாம் என்ற நப்பாசையை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி எவ்வளவு குறைந்த சம்பளம் அவர்களுக்கு வழங்க முடியுமோ அவ்வளவு குறைந்த சம்பளத்தை ஜி.வி.கே. நிறுவனம் வழங்கி சுரண்டிக் கொண்டுள்ளது.

சம்பளத்தில் மட்டுமல்ல, கடுமையான வேலைச் சூழ்நிலையை ஏற்படுத்தி அதன்மூலமும் சுரண்டுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை; அரசு விடுமுறை நாட்களுக்குக் கூட விடுமுறை கிடையாது; அதற்காகக் கூடுதல் ஊதியமும் வழங்கப்பட மாட்டாது; பைலட்டுகள் சதா சர்வ காலமும் சுட்டெரிக்கும் வெயிலாக இருந்தாலும் வாட்டும் குளிராக இருந்தாலும் அவர்கள் ஓட்டும் ஊர்திகளிலேயே இருக்க வேண்டும். அவர்களுக்கென்று தங்குமிடம் எதுவும் கிடையாது. அவர்களுக்குப் பெயரளவில் அறிக்கப்படும் விடுப்புகளைக் கூட எடுக்க முடியாது என்பன போன்ற நாகரீக உலகம் நாணித் தலைகுனியும் அளவிற்கு மோசமான வேலைச் சூழ்நிலைகளைக் கொண்டதாக அந்நிறுவனம் இருக்கிறது.

இத்தகைய கடுமையான பணியினை 6000த்திலிருந்து 8000 வரைக்கான ஊதியத்தில் அத்துறையின் அடித்தளம் போன்ற ஊழியர்கள் செய்து கொண்டுள்ளனர்.

இத்தகைய சுரண்டலின் காரணமாக பெருமளவு உருவான ஆதாயத்தைப் பெற்ற ஜி.வி.கே. நிறுவனம் ஒரு கட்டத்தில் சராசரியாக இவ்வளவு ஆதாயம் கிட்டும் என்ற மனநிலைக்கு வந்தபின் ஆண்டுதோறும் அதையயாத்த ஒரு ஆதாயத்தை ஜி.வி.கே. நிறுவனத்திற்கு வழங்கிவிட்டு கூடுதலாகக் கிட்டும் தொகைகளை முறைகேடான வழிகளில் கையகப்படுத்திக் கொள்ளும் போக்கினை இதன் உயர் மற்றும் நடுத்தட்டு நிர்வாகங்கள் கடைப்பிடிக்கத் தொடங்கியன.

எந்த வகையான சிரத்தையுமின்றி அரசியல் வர்க்கத்துடன் தனக்கிருந்த தொடர்பை மட்டும் பயன்படுத்தி இச்சேவையை நடத்தும் உரிமத்தைப் பெற்றதாக இருந்த ஜி.வி.கே. நிறுவனத்திற்கு இவ்வாறு கிடைத்த தொகை மிக அதிகமானதாக இருந்ததால் அது கீழ்மட்ட நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி கவலையேதும் இல்லாததாக ஆகிவிட்டது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் இந்நிறுவனத்தின் உயர் மற்றும் நடுத்தர நிர்வாகங்கள் பல வகைகளில் முறைகேடாக ஆதாயம் ஈட்டத் தொடங்கின.

முறைகேடுகள்

இவ்வாறு முறைகேடாக அவர்கள் ஆதாயம் ஈட்டும் போக்கு அடித்தள ஊழியர்களின் பார்வைக்கு வந்ததே ஒரு சுவையான விசயம். அதாவது அடித்தள ஊழியராக பணிபுரிந்த பலர் வேலையை விட்டு நின்ற பின்னரும் அவர்களுக்கான ஊதியம் தொடர்ச்சியாகப் பெறப்படுவது அவர்கள் அறிவிற்கு எட்டிய பின்னரே இது தெரிய வந்தது. அதாவது சில ஊழியர்கள் வேலையை விட்டு நின்ற பின்னரும் அவர்களில் சிலருக்கு அவர்கள் வேலையிலிருந்தபோது வழங்கப்பட்ட ஊதியப் பணம் தவறுதலாக அவர்களது வங்கிக் கணக்கில் நிர்வாகத்தால் வரவு வைக்கப்பட்டது. அது அவர்களது அறிவிற்கு எட்டிய சூழ்நிலையில் தான் இந்த மோசடி அவர்கள் மத்தியில் அம்பலமானது.

இதுதவிர வண்டியைப் பராமரிக்கிறேன் என்ற பெயரில் ஒரு பராமரிப்பும் செய்யாமல் அதற்காக போலியான ரசீதுகளை பழுதுகளைச் சரிசெய்யும் நிறுவனங்களிடமிருந்து பெற்று அப்பணத்தையும் நடுத்தர மற்றும் உயர்மட்ட நிர்வாகம் கையகப்படுத்தத் தொடங்கியது. இதுதவிர உயிர்காப்பு உபகரணங்கள் வாங்குவது மற்றும் பராமரிப்பது ஆகியவற்றிலும் பெரும் முறைகேடுகளை உயர்மட்ட, நடுத்தர நிர்வாகம் செய்யத் தொடங்கியது.

நிர்வாக ஊழலில் விளைவுகளைச் சுமப்பவர்களாக

இதுபோன்ற வாகனப் பராமரிப்பு, உபகரணங்கள் இல்லாமை, இருக்கும் உபகரணங்களும் செயல்பாட்டுத் திறனுடன் இல்லாத நிலை, அவற்றின் உரிய பராமரிப்பின்மை ஆகியவற்றினால் ஏற்படும் சேவைக் குறைவு அனைத்திற்கும் இந்நிறுவனத்தின் அடித்தள ஊழியர்களான பைலட்டுகளும் இ.எம்.டி.களும் பொறுப்பாக்கப் பட்டனர்.

சம்பளக் குறைவு, கூடுதல் வேலை நேரம், முறையான பணியிடச் சூழ்நிலை இல்லாமை இவற்றோடு இவ்வாறு ஊழல் மலிந்த நிர்வாகத்தின் இத்தகைய ஊழல் நிறைந்த செயல்பாடுகளால் உருவாகும் சேவைக் குறைவிற்கும் அடித்தள ஊழியர்களே பொறுப்பாக்கப்படுவது என்ற இந்த அனைத்துக் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அவர்களை வேலை செய்ய வைக்க வேண்டும் என்பதற்காக சகித்துக்கொள்ள முடியாத அடக்குமுறை அதாவது மனிதகுல வரலாற்றில் கிரேக்க, ரோம சாம்ராஜ்யங்களில் அடிமைகளை நடத்துவதையொத்த நிர்வாக நடைமுறைகளை இந்நிறுவனத்தின் உயர்மட்ட, நடுத்தர நிர்வாகங்கள் கடைப்பிடிக்கத் தொடங்கின.

அடக்குமுறைப் பிரயோகமே நிர்வாகத் தகுதி

இதனைச் செய்வதற்கு உகந்த பொருத்தமான நபர்களே குறிப்பாக நடுத்தர நிர்வாகத்தை நடத்துபவர்களாக அதாவது ஃபிளீட்டுகள், ஒ.இ க்கள், ஆர்.எம்., டி.எம் களாக நியமிக்கப்பட்டனர். ஒரு துறையை நிர்வகிப்பதற்குத் தேவைப்படும் கல்வித்தகுதி எதுவும் அவர்களிடம் வற்புறுத்தப்படவில்லை.

இத்துறையில் சேர்வதற்கு முன்தினம் வரை மளிகைச் சாமான்களைப் பொட்டலங்களாகப் போட்டுக் கடை கடையாக விற்றுக் கொண்டிருந்த பலரும் இந்த நடுத்தட்டு நிர்வாகத்தில் நிர்வாகிகளாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அவர்களிடம் வலியுறுத்தப்பட்ட ஒரே தகுதி இதுதான். அதாவது அடித்தள ஊழியர்கள் நிமிர முடியாதவாறு அவர்களை நிர்வாக ரீதியாகக் கட்டுப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான். தொழிலாளர் உரிமை பற்றிய அறிவும் உணர்வும் சமூகத்தில் மங்கிவரும் போக்கு இவர்கள் இத்தகைய ஈவிரக்கமற்ற சுரண்டலை நடத்துவதற்குப் பெரும் துணை புரிந்தது.

அதுதவிர இது விளம்பர ரீதியாக மிகவும் பெரிதாக்கிக் காட்டப்பட்ட ஒரு சேவைத் துறையாக இருந்ததால் இச்சேவைக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் அரசின் மருத்துவ மற்றும் சிவில் நிர்வாகம் இத்துறை குறித்து கடைப்பிடித்த அணுகுமுறையும் இந்நிர்வாகத்தால் சுரண்டலுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

இத்துறையின் நடுத்தட்டு நிர்வாகப் பொறுப்பு வகித்தவர்களின் உண்மையான தகுதிகள் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு வராததால் இத்தகைய பொறுப்பு வகிப்பவர்கள் முறையாக நிர்வாகம் கற்றவர்களாகத் தான் இருப்பர் என்ற மேலோட்டமான அனுமானத்தின் அடிப்படையில் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளின் அடிப்படையில் கீழ்த்தட்டு அரசு நிர்வாகத்தினரும் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய கருத்துக்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்குபவர்களாக ஆகிவிட்டனர்.

பிரித்தாளும் சூழ்ச்சி

இந்தப் பின்னணியில் இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்ற போக்கில் இந்நிறுவனத்தின் நிர்வாகம் நடந்து கொண்டது. வெள்ளையன் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியை வெள்ளையனைப் போல் நாசூக்காகவும் நளினமாகவும் கூட இல்லாமல் கொச்சையாகவும் பச்சையாகவுமே கடைப்பிடிக்கத் தொடங்கியது.

பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்களாக இருந்த இ.எம்.டி.க்களிடம் உங்களுக்கு கூடுதல் பதவி உயர்வு வாய்ப்புகள் உள்ளன. வெகு விரைவில் நீங்கள் ஒ.இ.க்கள் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவர்களை பைலட்டுகளுடன் எவ்வளவு தூரம் ஒட்டவிடாமல் செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் ஒட்டவிடாமல் செய்தது. பிற ஊழியர்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரித்து வழங்குபவர்களுக்குச் சுமை குறைந்த பணி வழங்குவது என்ற பல நிர்வாகங்களின் வழக்கமான பாணியையும் பஞ்சமின்றிக் கடைப்பிடித்தது.

கயமைத்தனமான தரப்படுத்துதல்

இந்தப் பிரித்தாளும் தந்திரத்தை இன்னும் செவ்வனே செய்வதற்காக அது கடைப்பிடித்த மற்றொரு தந்திரம் தொழிலாளரைத் தரப்படுத்துதல் என்ற பெயரில் அது கடைப்பிடித்து வரும் முறையாகும். அதாவது 108 ஆம்புலன்ஸ் சேவையின் அடித்தட்டு ஊழியரை அவர்களின் வேலை குறித்து சுயமதிப்பீட்டு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குமாறு அவர்கள் செய்யும் வேலையின் பல்வேறு அம்சங்கள் குறித்து அச்சிடப்பட்டிருக்கும் ஒரு காகிதத்தை அவர்களிடம் கொடுப்பது; அதில் அவர்களையே மதிப்பெண்கள் போடச் செய்வது; பின்னர் அவர்கள் போட்டுள்ள மதிப்பெண்களை தங்கள் இஷ்டத்திற்குக் குறைத்து அந்தக் காகிதத்தை இவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் அனுப்புவது; அவர்கள் அதில் எத்தனை மதிப்பெண்களைக் குறைக்க முடியுமோ அத்தனை மதிப்பெண்களைக் குறைத்து அதற்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு அனுப்புவது. அந்த அதிகாரிகள் தங்களால் முடிந்த அளவு இன்னும் குறைத்துத் தரப்படுத்துதலை முடிவு செய்வது என்ற முறை கையாளப் படுகிறது.

இதில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கும் தங்களால் ஒற்றர்கள் போல் பயன்படுத்தப் படுபவர்களுக்கும் மதிப்பெண் குறைப்பு குறைவாக இருக்குமாறும் தங்களது பிரச்னைகள் குறித்துப் பேசுபவர்கள் மற்றும் முறையிடுபவர்களுக்கு மதிப்பெண் குறைப்பு அதிகமாக இருக்குமாறும் பார்த்துக் கொள்வதன் மூலம் பிரித்தாளும் சூழ்ச்சி திறம்பட இம்முறையில் கையாளப் படுகிறது.

இந்தத் தரப்படுத்துதல் ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுதோறும் அரசு வழங்கும் ஊதியத்தை வேண்டியவர் வேண்டாதவர் என்று பாகுபடுத்தி வழங்குவதற்குக் கையாளப் படுகிறது. பணிமூப்பு என்பதற்கு இங்கு எந்த முக்கியத்துவமும் தரப்படுவதில்லை. மேலதிகாரிகளின் ஊழல் நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதே உயரிய ஒரே தகுதியாகக் கருதப்படுகிறது.

இடமாற்றல் ஆயுதம்

இத்தகைய அப்பட்டமான தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென்றால் ஊழியர்களை மீளமுடியாததொரு அச்சத்தில் தொடர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அதனை வேலை நீக்கங்கள் மூலம் செய்ய முடியாது. ஏனெனில் இவர்கள் வழங்கும் ஊதியத்திற்கு ஓட்டுனர், முதலுதவி செய்வோர் போன்ற வேலைகளில் அனுபவம் பெற்ற தகுதியானவர்கள் உடனடியாகக் கிடைக்க மாட்டார்கள். அதற்காக இவர்கள் கையாளும் ஒரு ஆயுதம் தான் இடமாற்றல் ஆகும்.
மாவட்டங்களின் தேவைகளுக்கு ஏற்ப இதுபோன்ற தகுதியுடையோரைத் தேர்ந்தெடுப்பது நிர்வாகத்திற்குச் சிரமமான காரியமல்ல. ஆனால் இடமாற்றல் என்ற ஆயுதத்தைத் திறம்படக் கையாள வேண்டும் என்பதற்காக மதுரையில் தேர்ந்தெடுக்கப்பட்டவரை சென்னையில் பணியமர்த்துவது, சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்டவரை கோவையில் பணியமர்த்துவது போன்ற நடைமுறைகளை நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது.

சென்னையில் இருக்கும் மதுரையைச் சேர்ந்தவர் அப்போது தான் இடமாற்றல் வேண்டி அதிகாரிகளைத் தொங்கிக் கொண்டேயிருப்பார். அதனை இப்போது செய்கிறேன்; அப்புறம் செய்கிறேன் என்று கூறிக் குச்சியில் கட்டப்பட்ட காரட்டைக் கடித்துத் தின்று விடுவோம் என்ற நப்பாசையில் காரட்டைக் கடிக்க முடியாமல் இடைவிடாமல் வண்டியை இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் குதிரையைப் போல் அந்த ஊழியர்களை நிர்வாகம் வைத்திருக்கிறது.

இதனைச் சாக்காக வைத்துச் செயற்கையாகச் சில இடங்களில் பைலட், இ.எம்.டி.க்கள் போதிய அளவில் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்கி யார் யார் தொழிலாளர் உரிமை பற்றிப் பேசுகிறார்களோ அவர்களையெல்லாம் அவ்விடங்களுக்கு இடமாற்றல் செய்வது என்ற போக்கை நிர்வாகம் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கிறது. அதே இடங்களுக்கு பல பேர் இடமாற்றல் கேட்டுக் காத்திருந்தாலும் கூட அவர்களது வேண்டுகோளை அது செவிமடுப்பதில்லை.

வழக்கமாகப் பல நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடமாற்றல் விதிகள் கருத்தில் கூட 108 நிர்வாகத்தால் கொள்ளப் படுவதில்லை. அதாவது ஆட்கள் தேவைப்படும் இடங்களில் வேலைக்கு ஆள் எடுப்பது. திடீரெனத் தங்களது கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்களால் காலியிடம் ஏற்படும் போது அவ்விடங்களுக்குக் கடைசியாக நியமிக்கப்பட்ட ஊழியரை இடமாற்றம் செய்வது; இடமாற்றல் செய்யப்படுபவருக்கு உருவாகும் சிரமங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு இடமாற்றல் படி போன்ற பலன்களை வழங்குவது என்ற எவையும் நிர்வாகத்தால் கருதப்படுவது கூடக் கிடையாது.

கொடுமையிலும் கொடுமை

இவை அனைத்தையும் காட்டிலும் இந்த இடமாற்றலை இன்னும் கொடுமையானதாக்குவது இவ்வூழியர்களின் மிகமிகக் குறைந்த ஊதியமாகும். 6000 முதல் 8000 வரை என்றிருக்கக் கூடிய இவர்களது மாத ஊதியத்தைக் கொண்டு அரைப்பட்டினி வாழ்க்கை என்பதை நடத்துவது கூட இன்றைய விலைவாசி இருக்கும் நிலையில் மிகமிகக் கடினம். இந்நிலையில் கல்விச் செலவினங்கள் வேறு கண்மண் தெரியாமல் கூடியுள்ளன. இப்பணியில் சொந்த ஊரில் இருப்பவர்களுக்கு ஏதோ குடியிருக்க ஒரு சிறிய வீடாவது இருக்கும். எனவே வீட்டு வாடகை என்பது அங்கு அவர்களுக்கு ஒரு செலவினமாக இருப்பதில்லை.

இப்படிப்பட்டவர்கள் வெளியூருக்கு மாற்றப்பட்டால் குடும்பத்தைச் சொந்த ஊரில் விட்டுச் சென்றால் அதற்கு அங்கு ஒரு செலவும் இவர்கள் செல்லும் இடங்களில் இவர்களுக்கு இடவசதி, உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்து கொள்வதில் மற்றொரு செலவும் ஏற்படும். புத்தியும் சொரணையும் உள்ள எந்த அதிகாரியும் இது எத்தனை தாங்கவொண்ணாதது என்பதைப் புரிந்து கொள்வான்.

இந்நிலையில் இடமாற்றல் குறித்துப் பரவலாக நீதிமன்ற, நிர்வாக வட்டாரங்களில் நிலவும் இடமாற்றல் நிர்வாகத்தின் உரிமை என்ற கண்ணோட்டம் இத்துறையின் அடித்தட்டு ஊழியர்களைப் பொறுத்தவரையில் சிறிதும் பொருந்தாததாகும். நல்ல ஊதியம் பெரும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நிர்வாகக் காரணங்களுக்காக மாற்றப்படும் போது அதற்கான பல கூடுதல் சலுகைகள் வழங்குவதை மரபாக்கி அதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு கொண்டுவரப்பட்டதே இந்த நியதியாகும். ஆனால் அரசின் பொது சுகாதாரத் துறையின் கீழ் சுற்றி வளைத்துப் பார்த்தால்  வரக்கூடிய ஒரு துறையில் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்படும் என்று இந்த விதியை ஏற்படுத்தியவர்கள் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள்.

மேலும் விதிகளும் சட்டங்களும் சமூகத்தில் இருக்கும் அனைத்துப் பிரிவு மக்களின் பிரச்னைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு வகுக்கப்படக் கூடியவைகளே தவிர பிரச்னைகளும் சூழ்நிலைகளும் மாறிவிட்ட போதும் அவ்விதிகளும் சட்டங்களும் மாற்றப்படவே முடியாதவை என்று கருதப்படக் கூடியவைகள் அல்ல. அச்சூழ்நிலைகளில் தேவைப்படும் விதத்தில் விதிகளும் சட்டங்களும் மாற்றப்படா விட்டால் அவை நிச்சயம் தகர்க்கப்படும். அவ்வாறு தகர்க்கப் படுவதற்கான போராட்டப் பேரெழுச்சியைத் தொழிலாளர் மத்தியில் உருவாக்குவது உழைக்கும் வர்க்கத்தின் தார்மீகக் கடமையாகும்.

கல்லுளிமங்கத்தனம்

இத்தகைய கொடுமையான நடைமுறைகளைச் சிறிதும் மனஉறுத்தலின்றி செய்வதற்குத் தேவையான ஒரு இடைத்தட்டு நிர்வாகத்தை 108 ஆம்புலன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிர்வாகத்தை நடத்துபவர்களுக்கு இருக்க வேண்டிய ஒரே அடிப்படை குணாம்சம் கல்லுளி மங்கத்தனமும் மனச்சாட்சி இன்மையுமே. அதாவது சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பொது நாகரீக நடைமுறைகள் கூட இந்த நிர்வாகத்தினரால் கடைப்பிடிக்கப் படுவதில்லை.

எவ்வாறு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் 007 என்ற எவரையும் கொல்லும் அதிகாரம் ஜேம்ஸ் பாண்டிற்கு வழங்கப்படுகிறதோ அது போன்றதொரு அதிகாரத்தை இவர்கள் கையிலெடுத்துக் கொள்கின்றனர். அதாவது பெண் ஊழியர்கள் தங்கியிருக்கும் அறைகளில் கதவைக்கூடத் தட்டாமல் உள்ளே செல்லும் உயர்ந்த நாகரீகம் படைத்த மேதாவிகளை இந்த நிர்வாகம் கொண்டிருக்கிறது. ஏன் இப்படி கதவைக் கூடத் தட்டாமல் வருகிறீர்கள் என்று அந்த பெண் ஊழியர்கள் வினவினால் நான் உன் மேலதிகாரி, நான் எப்போதும் எப்படியும் உன் அறைக்குள் வருவதற்கு எனக்கு உரிமை உண்டு என்று அவர் கூறுவார். நள்ளிரவில் சென்று ஒரு பெண் ஊழியரை நிறைந்த போதையுடன் மற்றொரு மேலதிகாரி தேவையற்ற பேச்சுக்கள் பேசி துன்புறுத்துவார். இது இவர்கள் நிகழ்த்தும் கொடுமைகளை எடுத்துக் கூறும் சில எளிய உதாரணங்கள்.

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை

கணிசமாகப் பெண் ஊழியர்கள் இ.எம்.டி.களாக வேலை செய்யும் இந்த நிறுவனத்தில் பெண்கள் பிரச்னைகளைக் கூறவோ அதைக் கேட்கவோ பெண் மேல் அதிகாரிகள் என்று யாருமே இல்லை. ஆனால் இரவு நேரமும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண் இ.எம்.டி. ஊழியர்களைக் குடிபோதையில் வந்து கலாட்டா செய்யும் ஓ.யிக்களும் இந்நிறுவனத்தில் உள்ளனர். அதற்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் கூட நிலுவையில் உள்ளன. அரசு நிர்வாகம், காவல்துறை ஆகியோருடன் இவர்களுக்கிருக்கும் நல்லிணக்கம் இவை எதுவும் பெரிய அளவில் வெளிவராதவாறு செய்கிறது.

ஊழலின் பங்காளிகள்

நடுத்தர, உயர்மட்ட நிர்வாகங்களுக்கிடையில் இந்நிறுவனத்தில் நிலவும் உறவும் வித்தியாசமானது. பல சமயங்களில் மேல்மட்ட நிர்வாகத்திடம் தங்களது பிரச்னைகளை பைலட் போன்ற கீழ்த்தட்டு ஊழியர்கள் எடுத்துச் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வது போல் பாவனை காட்டும் உயர்மட்ட நிர்வாகம் அந்த டி.எம். நான் சொன்னால் சரியாக எடுத்துக் கொள்வரோ என்னவோ தெரியாது என்று கூறுவதைப் பார்க்க முடியும். ஏனெனில் ஊர்திகளைப் பராமரிப்பதில் தொடங்கி, உபகரணங்கள் வாங்குவது வரை முறைகேடுகள் செய்து சம்பாதிப்பவர்களாக கீழ்மட்ட நிர்வாகிகள் உள்ளனர். அவர்களைப் பகைத்துக் கொண்டால் அதுபோன்ற முறைகேடுகளின் மூலம் ஈட்டப்படும் பணத்திலிருந்து தங்களுக்கு வர வேண்டிய பங்கு சரிவர வராது என்ற எண்ணம் மேல்மட்ட நிர்வாகத்தில் நிலவுகிறது. அதுவே அவர்களை இவ்வாறு நடந்து கொள்ளச் செய்கிறது.

நியதியற்ற நிர்வாகம்

ஆனால் பெண்களைத் தவறாகவும், அநாகரீகமாகவும் நடத்துவது குறித்து கீழ்த்தட்டு நிர்வாகத்தின் மேல் எழும் புகார்களை மட்டும் மேல்மட்ட நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை. அவை குறித்துச் சிறிய அளவில் கூட விசாரணை என்று எதுவும் நடைபெற்றதில்லை. இத்தனைக்கும் ஒரு ஓ.யி.யின் மீதும் மற்றொரு டி.எம். மீதும் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு நீதிமன்ற அறிவுறுத்தல்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை கூடப் போடப்பட்டுள்ளது.

இருந்தும் நடவடிக்கை அல்ல விசாரணை கூட அவை குறித்து நிர்வாகத்தால் நடத்தப்படவில்லை. மேல்மட்ட அதிகாரிகள் நடுத்தட்டு அதிகாரிகளிடமிருந்து முறைகேடாக மேற்கூறிய வழிகளில் ஈட்டப்படும் பணத்தில் தங்களது பங்கைக் குறைவின்றிப் பெற இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் துருப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்துகின்றனர்.

இறந்தால் கூட நஷ்டஈடு இல்லை

கீழ்த்தட்டு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளிலெல்லாம் கொடுமை அவர்கள் பணி செய்யும் போது ஏற்படும் விபத்துக்களில் இறந்துவிட்டால் கூட அவர்களுக்கு என்ன நஷ்டஈடு கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாத நிலையாகும். ஒரு விபத்தின் போது இறந்த ஒரு பைலட்டின் குடும்பத்திற்கு ஊழியர் அனைவரின் ஊதியத்திலிருந்தும் ஒருநாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து நிர்வாகம் அதன் பெயரில் கொடுத்துள்ளது.

இரவு பகல் என்று நேரம் பாராது அவசரச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை ஏற்றிக் கொண்டு வேகமாகச் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருக்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவ்வப்போது விபத்துக்களை எதிர் கொள்வது எதிர்பார்க்க முடியாததல்ல. அதற்குக் கூட ஒரு மனிதாபிமானத்துடன் கூடிய நிரந்தர ஏற்பாடு எதையும் செய்யாத நிர்வாகமாக நாகரீக உலகமே நாணித் தலைகுனியும் தன்மை கொண்ட இந்த நிர்வாகம் உள்ளது.

நிர்வாகத்தின் இக்கொடுமைகளால் குறிப்பாக இடமாற்றம் என்ற பெயரில் அது நடத்தும் வன்கொடுமையால் வேலையை விட்டு நின்றவர்கள் இந்நிறுவத்தில் நூற்றுக் கணக்கில் இருப்பர். 2000லிருந்து 2500 பேர் வரை வேலை செய்யும் இந்நிறுவனத்தில் இது நிச்சயமாக ஒரு கணிசமான தொகையே. இருந்தும் அது இடைவிடாமல் இக்கொடுமையை இழைத்துக் கொண்டேயுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் டாடா கூறும் குரோனி முதலாளித்துவம், பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கும் கொலைகார முதலாளித்துவம் ஆகிய இரண்டும் நடத்தும், அதாவது குரோனி நிர்வாகம் மற்றும் கொலைகாரத் தன்மைவாய்ந்த நிர்வாகம் ஆகிய இரண்டையும் ஒன்றாய்ச் சேர்த்தால் எத்தனை கொடுமைகளின் உச்சக்கட்ட நிர்வாகமாக ஒரு நிர்வாகம் இருக்குமோ அத்தகைய நிர்வாகமாக இந்த ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் உள்ளது.
இந்த நிலையில் அங்கு செயல்படும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் தொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தொழிலாளர் அமைப்புகளுக்கு எடுத்துச் சென்றால், அங்கு தொழிலாளர் அதிகாரிகளால் நடத்தப்படும் பேச்சு வார்த்தைகளில் பெரும்பாலும் இதன் நிர்வாகிகள் கலந்து கொள்வதில்லை. அவ்வாறு ஒன்றிரண்டு இடங்களில் கலந்து கொண்டாலும் எழுப்பப்படும் பிரச்னைகளில் எதையும் பேசித் தீர்த்ததுமில்லை. பல மாவட்டங்களில் இதையயாட்டி எழுப்பப்பட்ட வழக்குகள் சமரச முறிவறிக்கையை எட்டிய நிலையில் உள்ளன.

எனவே இந்நிறுவனம் இந்த வகையில் நிர்வாகம் நடத்துவது உழைக்கும் வர்க்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு மாபெரும் சவாலாகும். அரசின் பொது சுகாதாரத் துறையிலிருந்து பெறப்படும் பணத்தைக் கொண்டு இயங்கும் இத்துறையில் நிலவும் கோளாறுகள், சேவைப் பாதிப்பு, நிர்வாகக் கொடுமை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நிர்வாகத்தை வழிக்குக் கொண்டுவர அரசின் பொது சுகாதாரத் துறையையும், தொழிலாளர் துறையையும் வலியுறுத்தி இயக்கங்கள் நடத்த உழைக்கும் வர்க்கம் முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment