Powered By Blogger

Saturday, September 1, 2012

நேபாள அரசியல் நிகழ்வுகள் - ஒரு இயக்கவியல் பூர்வ ஆய்வு

நேபாளத்தில் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வரவும் ஜனநாயகத்திற்காகவும் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்பு பல திருப்பங்கள் அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ளன. மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடைபெற்ற போராட்டத்தில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)-கள் தாங்கள் அதற்கு முன்பு நடத்தி வந்த ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு ஜனநாயகத்திற்கான இயக்கத்தில் முழுவீச்சுடன் இறங்கியது அப்போராட்டத்தின் பரிமாணத்தையே மாற்றியது.



நாடாளுமன்ற அரசியல் வட்டத்திற்குள் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)-களைக் கொண்டுவந்து விட்டால் அவர்கள் வீரியம் இழந்தவர்களாகவும் பதவி மோகம் கொண்டவர்களாகவும் மாறிவிடுவர்; மேலும் நாடாளுமன்ற அரசியலின் நெளிவு சுளிவுகளை அறியாத அவர்கள் பெரிய தேர்தல் வெற்றிகளையும் சாதிக்க முடியாது என்ற எண்ணத்தில் நேபாளத்தில் செயல்பட்ட யு.என்.எம்.எல். உள்பட சமூகத்தின் அடிப்படை மாற்றத்தை விரும்பாத  அனைத்து சக்திகளும்  யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) களை அப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டன.

மேலும் அவர்களை இணைத்துக் கொள்வதைத் தவிர அக்கட்சிகளுக்கு அப்போதைய நிலையில் வேறு வழியும் இல்லை. ஏனெனில் அவர்கள் நடத்திய மேலோட்டமான போராட்டம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நகர முடியாமல் நின்றுவிட்டது. அந்த நிலையில் தான் யு.சி.பி.என்(எம்) ன் அவ்வியக்கத்தின் பாலான பங்கேற்பு அதனை அதன் தர்க்க ரீதியான உச்சத்திற்குக் கொண்டு சென்று மன்னராட்சியை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டுவந்தது.

பெரு வெற்றி

அக்கட்சிகள் அனைத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் பிரமிக்கத் தகுந்த வெற்றியை யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கள் பெற்றனர். அவர்கள் காலங்காலமாக வலியுறுத்தி வந்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் மட்டும் தேர்தலில் கடைப்பிடிக்கப் படாமல் இருந்திருந்தால் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) களுக்கு இன்னும் பெரிய வெற்றி கிட்டியிருக்கும். இருந்தாலும் அவர்கள் அவ்விசயத்தில் கோட்பாடு ரீதியாகப் பலகாலம் வலியுறுத்திய விசயத்தைக் கைவிடாமல் நின்றனர். அதனால் அறுதிப் பெரும்பான்மையினை அடைய முடியாதவர்களாக ஆகினர்.

இந்த வளர்ச்சிப் போக்குகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆளும் வர்க்க அமைப்புகள் அதன் பின் மாவோயிஸ்ட்கள் வலியுறுத்திய விதத்தில் அரசியல் சட்டம் இயற்றப்படாமல் இருக்க என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்தன.

சிவில் நிர்வாகத்தின் மேலாண்மை
அவர்களது நடவடிக்கைகளுக்கு அந்நாட்டின் குடியரசுத் தலைவரையும் பயன்படுத்திக் கொண்டன. அதாவது சிவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அந்நாட்டின் ராணுவம் வராதிருக்கும் விதத்தில் கொத்தவால் என்ற ராணுவத் தளபதியின் பதவி காலத்தை நீட்டிக்கும் ஆணையைக் குடியரசுத் தலைவரைக் கொண்டு பிறப்பிக்கச் செய்தன.
அதனால் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலையில் சமூகமாற்றத்திற்காகவும் ஜனநாயகக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கவுமே தாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறோம்; அதனைச் செய்வதில் முட்டுக்கட்டை ஏற்படுமானால் பதவி எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்ற அடிப்படையில் அப்போது பிரதமராக இருந்த பிரச்சந்தா தனது பதவியைத் துச்சமெனத் தூக்கியெறிந்து ஆட்சியை விட்டு வெளியேறினார்.
பதவியைத் துச்சமாகக் கருதிய போக்கு
அதன்பின் பதவி மோகம் கொண்ட யு.என்.எம்.எல். அமைப்பின் தலைமையின் கீழ் ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சி நேபாளி காங்கிரஸூடன் சேர்ந்து கொண்டு அரசியல் சட்டம் இயற்றுவதில் காலதாமதத்தை ஏற்படுத்தியது. மாவோயிஸ்ட்களின் தலைமையின் கீழ் இருந்த மக்கள் விடுதலைப்படை நேபாள ராணுவத்தில் இணைவதையும் அந்த அரசு தடுத்தது.
இவற்றை எதிர்த்து மக்களைத் திரட்டி பல போராட்டப் பேரலைகளை யு.சி.பி.என்(எம்). உருவாக்கியது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் எப்போதுமே யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கள் தாங்கள் தனித்து ஆட்சியதிகாரத்திற்கு வந்து நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணப்போக்கின்றி அரசியல் சட்டம் இயற்றப்பட்டு அதன் அடிப்படையிலான அரசு அமையும் வரை அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசு அமைய வேண்டும் என்ற கருத்தை எந்தவகையான தயக்கமுமின்றித் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுதான்.
தொடர்ச்சியாக அவர்கள் கடைப்பிடித்த இந்தச் சரியான வழிமுறைகள் இறுதியில் நேபாளி காங்கிரஸ் தவிர்த்த மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்ற யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கள் தலைமையிலான அரசு அமைவதில் சென்று முடிந்தது. அவ்வாறு உருவாக்கப்பட்ட அரசிற்கு இந்தமுறை பாபுராம் பட்டராய் தலைமை ஏற்றார்.
எட்டப்பட்ட சமரச உடன்படிக்கையின் படி 2012 மே 27க்குள் அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்; அது நிறைவேற்றப்பட்டதற்குப் பின்பு பாபுராம் பட்டராய் பதவி விலக வேண்டும்; அதன்பின் நேபாளி காங்கிரஸின் தலைமையிலான அரசு அமையும்; அந்த அரசின் மேற்பார்வையில் நேபாள நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெறும்; அதில் வெற்றி பெறும் கட்சியின் ஆட்சி அதன் பின்னர் அமையும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
முட்டுக் கட்டைகள்
ஒப்பந்தப்படி அமைந்த பாபுராம் பட்டராயின் அரசு அரசியல் சட்டத்தை இயற்றுவதிலும் பல முட்டுக்கட்டைகளை நேபாளத்தின் ஆளும்வர்க்க ஆதரவு அரசியல் கட்சிகள் போட்டன. அதாவது அதுவரை ஆட்சியிலும் நிர்வாகத்திலும் பெரும் பங்கினை வகித்த ஆதிக்க வகுப்புகளைத் தூண்டிவிட்டு பெடரல் அரசியல் சட்டம் உருவாக்குவதில் பல தடங்கல்களை ஏற்படுத்தின. நேபாளம், மலைவாழ் மக்கள், இந்தியாவிலிருந்து சென்று குடியேறியவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட மாதேசி வகுப்பினர், அதுதவிர மன்னராட்சிக் காலத்திலிருந்து அரசிலும் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்திய பாஹுன்ஸ் மற்றும் செத்ரி இனங்களைச் சேர்ந்த பகுதியினர் ஆகிய அனைவரையும் உள்ளடக்கிய நாடு.
இதில் மாதேசிப் பகுதி சமதளத்தில் உள்ளது. அதைத்தவிர மிகப்பெரிய ஏற்ற இறக்கங்கள் கொண்ட மலைப் பகுதிகளும் அந்நாட்டில் ஏராளம் உள்ளன. பொருளாதார ரீதியாக வர்த்தகத்தை முக்கிய அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த காத்மண்டுவும் அதைச் சுற்றியுள்ள நகர்ப்புறப் பகுதிகளும் ஒருபுறம் உள்ள நிலையில் விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த பால் உற்பத்தித் தொழிலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பல பகுதிகளும் அந்நாட்டில் உள்ளன.
பெடரல் அமைப்பு
இதுவரையில் நேபாள அரசியலில் ஜனநாயகப்பூர்வ மாற்றங்களைக் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் பெரும் பலன் எதையும் அளிக்காத நிலையில் இந்தமுறை முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்திலிருந்தும் படிப்பினை எடுத்துக்கொண்டு ஒரு நீண்டகாலம் நீடிக்கவல்ல அரசியல் அமைப்பைக் கொண்டுவருவதே சரியானதாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே பெடரல் அடிப்படையிலான அரசியல் சட்டம் இயற்றுவது; அதனையொட்டி மாநிலங்களைப் பிரிப்பது என்ற முயற்சி யு.சி.பி.என்(எம்) ஆல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் காலங்காலமாக ஒடுக்கப்பட்டும் அடக்கப்பட்டும் வந்த இனங்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கும் விதத்திலான மாநிலப் பிரிவினை ஏற்பட வேண்டும் என்று மாவோயிஸ்ட்களும் நேபாளத்தின் முற்போக்கு சக்திகளும் விரும்பின. ஆனால் நிர்வாகத்தை எளிதாக நடத்துவதைக் கருத்திற்கொண்ட மாநிலப் பிரிவினையைப் பரிந்துரைக்கிறோம் என்ற பெயரில் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியைப் பல கூறுகளாகப் பிரிக்கும் மாநிலப் பிரிவினையை பிற கட்சிகள் வலியுறுத்திப் பல்லாண்டு காலமாக ஆட்சியதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்திய சக்திகளின் பிடி தளராமல் இருப்பதற்கு உதவின.
அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும் இந்த வகையான மாநிலப் பிரிவினைகள் நிச்சயமாகப் பல கிளர்ச்சிகளை மாதேசி மற்றும் மலைவாழ் மக்கள் பகுதிகளில் தோற்றுவிக்கும் என்று. அவர்கள் எதிர்பார்த்த படியே மாநிலப் பிரிவினையை மையமாக வைத்துப் பெரும் கிளர்ச்சிகள் நாடு முழுவதும் தோன்றின. அதனால் ஏற்பட்ட சூழ்நிலையினால் அரசியல் சட்டம் இயற்றுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசிக் கெடுவும் முடிந்துவிட்டது.
அச்சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இனிமேல் கூடுதல் காலக்கெடு அரசியல் சட்டம் இயற்றுவதற்கு வழங்கப்படக் கூடாது என்று இருந்ததால் அரசியல் நிர்ணய சபைக்கே அடுத்து ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் விளைவாகத் தற்போது பாபுராம் பட்டராய் தலைமையிலான அரசு பதவி விலகி அவர் மட்டும் காபந்து அரசின் பிரதமராக நீடித்துக் கொண்டுள்ளார். தேர்தல் நடத்த அவர் பரிந்துரை செய்துள்ளார்.
ஜனநாயக வேடதாரிகள்
தாங்கள் தான் ஜனநாயக சக்திகள்; மாவோயிஸ்ட்கள் வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள்; அவர்கள் போடுவது ஜனநாயக வேடமே என்ற கருத்தை முன்வைக்கும் நேபாளி காங்கிரஸ், யு.எம்.எல். கட்சிகள் உள்ளபடியே இந்த நிலையில் எந்த முடிவினை எடுத்திருக வேண்டும்? அதாவது ஜனநாயக முறையின் மிக முக்கியமான அடித்தளம் தேர்தலே. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலான அரசியல் நிர்ணயச் சட்டம் எழுதுவதற்குத் தீர்மானிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பின் இவர்களேயல்லவா தேர்தல் தான் இன்று நம்முன் உள்ள ஒரே வழி என்ற கருத்தை முன்வைத்திருக்க வேண்டும்? ஆனால் அக்கருத்தை இவர்கள் முன்வைக்கவில்லை.
நடுக்கம்
மாறாக அதுவரை அரசியல் நிர்ணயச் சட்டம் இயற்றுவதற்கு எந்தவகை ஒத்துழைப்பும் தராதிருந்த இக்கட்சிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஜன்னி கண்டவர்களைப் போல் நடுநடுங்கித் தேர்தல் தேவையில்லை. தேசிய அரசு அமைப்போம்; அதற்கு வழிவிடும் விதத்தில் உடனடியாக பட்டராய் பதவி விலக வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தப் பின்னணியில் ஏற்பட்டுள்ள இன்னொரு வளர்ச்சிப் போக்கையும் நாம் காண தவறக் கூடாது. அதாவது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு மன்னராட்சியைத் தூக்கியயறியும் ஜனநாயகப் போராட்டத்தில் இறங்க யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கள் முடிவு செய்த நாளிலிருந்து அம்முடிவினை விமர்சித்துக் கொண்டிருக்கும் ஒரு குழு யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வைத்தியா தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அதன் அணுகுமுறைப்படி நேபாளத்தில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியின் திட்டம் வகுக்கப்பட்டிருக்குமானால் நேபாளத்தை இரண்டு பகுதியாகப் பிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலை தோன்றியிருக்கும். அதாவது நேபாள மாவோயிஸ்ட்கள் விடுவித்து வைத்திருந்த கிராமப்புற, மலையகப் பகுதிகள் ஒரு நேபாளமாகவும் காத்மண்டு போன்ற நகர்ப்புறப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாளம் மற்றொரு நேபாளமாகவும் ஆகியிருக்கும்.
ஏனெனில் நகர்ப்புறங்களில் உள்ள நேபாள மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீதான மாயையும் பிரமையும் இன்னும் போகாத நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதி மக்களுடன் இணைந்து முழு மனதுடன் அவர்கள் செல்வதற்கான சூழல் ஏற்பட்டிருக்காது.
தயாராக இல்லாத நகர்ப்புற மக்கள்
இக்கருத்து வெறுமனே வாதத்திற்காக மட்டும் முன்வைக்கப்படுவதல்ல. சிவில் நிர்வாகத்தின் மேலாண்மையை மறுக்கும் விதத்தில் கொத்தவால் விசயத்தில் நேபாள நாட்டின் குடியரசுத் தலைவர் நடந்து கொண்டது; நேபாளி காங்கிரஸ் மற்றும் யு.எம்.எல். கட்சிகள் பிரச்சந்தா தலைமையிலிருந்த நேபாள அரசை முடக்கும் வகையில் அனைத்துக் காரியங்களையும் செய்து வந்தது; அரசியல் நிர்ணயச் சட்டத்தை எழுத விடாமல் செய்தது; இவை அனைத்தையும் கண்டித்து மகத்தான மக்கள் எழுச்சி ஒன்றை நேபாளி மாவோயிஸ்ட்கள் மே மாதம் 2010 ல் நடத்தினர். அப்போது அதற்கு ஆதரவாகத் தாங்கள் வலிமையாக உள்ள கிராமப்புறப் பகுதியிலிருந்து பல்லாயிரக் கணக்கான மக்களை அவர்கள் திரட்டிக் கொண்டு வந்தனர். ஆனால் நகர்ப்புற மக்களின் ஆதரவு அந்த எழுச்சிக்குச் சாதகமாகப் போதிய அளவிற்கு இல்லை. அது மட்டும் இருந்திருக்குமானால் தற்போது ஏற்பட்டுள்ள பல முட்டுக்கட்டைகளுக்கு வாய்ப்பே இல்லாத வகையில் அடிப்படை சமூக மாற்றமே நேபாளத்தில் ஏற்பட்டிருக்கும். அதாவது யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியின் ஆட்சியதிகாரமே நிலைநாட்டப் பட்டிருக்கும்.
நகர்ப்புற மக்கள் தற்போதைய நிலையில் அப்படிப்பட்ட ஒரு அடிப்படை மாற்றத்திற்குச் சாதகமானவர்களாக இல்லை என்பதை நடைமுறை ரீதியாக வைத்தியா தலைமைக்குத் தெரிவிக்கும் விதத்திலேயே அந்த எழுச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஏனெனில் நகர்ப்புற மக்களின் மனநிலை பிரச்சந்தா, பட்டராய் போன்ற தலைவர்களுக்கு மட்டுமல்ல பட்டாளி வர்க்க மனநிலை கொண்ட உலகம் முழுவதும் உள்ள அனைத்து சமூக மாற்ற இயக்கங்களின் தலைவர்களுக்கும் தெரியும்.
நடைமுறை அனுபவம் மூலம்
அந்த நிலையில் முதலாளித்துவ ஜனநாயகம் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க உதவாது என்பதைச் சில நடைமுறை அனுபவங்கள் மூலமும் உணர்ந்தால் தான் நகர்ப்புற மக்களும் முதலாளித்துவ ஜனநாயகம் மூலம் சமூகத்தின் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கிட்டாது என்பதை உணர்வர். மேலும் எந்தக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் அடிப்படை வலுவாக உள்ள பாட்டாளி வர்க்கம் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாத நாடான நேபாளத்தில் மிக வலிமை வாய்ந்ததாக இல்லாததும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விசயமாகும்.
இவ்விடத்தில் பலரது மனங்களில் இப்படியயாரு கேள்வியும் எழலாம். அதாவது நேபாளம் அவ்வாறு இரு பகுதிகளாகப் பிரிந்தால் தான் என்ன என்ற கேள்வி எழலாம்? ஆனால் இந்நிலையில் நேபாளம் இரண்டாகப் பிரிக்கப் பட்டால் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) களின் ஆதிகத்திலுள்ள நேபாளப் பகுதி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை மட்டும் அடிப்படையாகக் கொண்ட பின்தங்கிய பகுதியாக இருக்கும். அதனை முன்னேற்றும் வகையில் அந்நாட்டிற்குப் பொருளாதார ரீதியாக உதவ இன்று எந்த சோசலிச முகாமும் உலகில் இல்லை.
அதுமட்டுமல்ல; சமூகமாற்றம் என்ற கண்ணோட்டமே எங்கும் தோன்றிவிடக் கூடாது; முதலாளித்துவமே என்றென்றும் நீடித்து நிலைக்கப் போகும் சமூக அமைப்பு என்ற எண்ணம் முழுமையாக மக்கள் மனதில் நிறைந்திருக்க வேண்டும்; அதற்காக எந்த நடவடிக்கைகளையயல்லாம் எடுக்க முடியுமோ அந்த நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து அந்த எண்ணத்தை நிலைநாட்டுவதே இன்று உலக முதலாளித்துவத்தின் முக்கிய அஜெண்டாவாக உள்ளது.
ஏனெனில் மீளமுடியாத நெருக்கடிச் சூழலில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவம் அந்தச் சிந்தனை மக்களிடையே ஏற்படுவதைக் கண்டு நடுநடுங்கிப் போயுள்ளது. இச்சூழ்நிலையில் அடிப்படை சமூகமாற்றம் சாத்தியமே என்ற நம்பிக்கை ஒளிக்கீற்றினை உருவாக்கவல்ல ஒரு வளர்ச்சிப் போக்கு நேபாள நாட்டில் உருவானால் அதன் பக்கம் முதலாளித்துவச் சுரண்டலின் நெருக்கடியில் சிக்குண்டு மீள முடியாமல் முனகித் தவித்துக் கொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்தின் பார்வை திரும்பிவிடும் என்பதால் அந்த நிலை ஏற்பட்டு விடாதிருக்குமாறு உலக முதலாளித்துவம் அனைத்து வகை அடக்கு முறைகளையும் தனிமைப் படுத்துதலையும் அந்த நாட்டின் மேல் விதிக்கவே செய்யும்.
வறட்டு வாதம்
இதைக் கணக்கிலெடுத்துக் கொண்டுதான் ஒட்டுமொத்த நேபாளத்திலும் சமூகமாற்றம் கொண்டுவரும் நோக்கோடு தான் நடத்தி வந்த ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு ஜனநாயக இயக்கத்தில் பங்கேற்பது என்ற யு.சி.பி.என்(எம்) ன் நிலை எடுக்கப்பட்டது.
இதைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் சமூக நிகழ்வுகளைப் பார்த்தால் அவ்வாறு பார்ப்பது இந்த மாறிவிட்ட சூழ்நிலையில் ஒரு வறட்டுச் சூத்திர வாதமாகவே இருக்கும்.
யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) களின் ஒரு தலைவரான வைத்தியா இந்தப் பின்னணியில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியிலிருந்து விலகித் தனிக்கட்சித் தொடங்கியிருப்பதும் அக்கட்சியின் திட்டங்களாக அவர் தற்போது முன்வைப்பவற்றில் பலவும் வருந்தத் தகுந்த விதத்தில் இத்தகைய வறட்டுச் சூத்திர வாதங்களாகவே உள்ளன.
அவரையும் உள்ளடக்கியிருந்த யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியின் முடிவான ஆயுதங்களை ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பது; மக்கள் விடுதலைப் படையின் வீரர்களை நேபாள ராணுவத்துடன் ஒருங்கிணைப்பது; கைப்பற்றப்பட்ட சொத்துக்களை அதன் சட்டபூர்வமான பழைய உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது ஆகிய முடிவுகள் குறித்த அவரது விமர்சனம் மேலோட்டமாகப் பார்க்கும் போது சரியானதாகவே தெரியும்.
இருந்தாலும் ஒட்டுமொத்த சமூக நலன் கருதிப் பார்த்தால் அத்தகைய விரும்பத்தகாத முடிவுகளைக் கூட சமூகமாற்ற சக்திகள் அவ்வப்போது எடுக்கவும் வேண்டியிருக்கும் என்பது தெரியவரும். சோவியத் நாட்டின் முதல் சோசலிச அரசு கொண்டுவந்த புதிய பொருளாதாரக் கொள்கை அத்தகைய விரும்பத்தகாத ஒன்றே. இருந்தாலும் அன்றைய சூழ்நிலையில் அது மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது. அதைப் பின்னாளில் வரலாறு நிரூபித்தது.
சீனாவின் சமூக மாற்றத்தின் போதும் இத்தகைய பல விரும்பத்தகாத முடிவுகளை தோழர் மாவோவின் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்தது. மாமேதை ஸ்டாலின் சியாங்கே சேக்கின் கோமிண்டாங் கட்சியினுடனான உறவை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று மாவோவை அறிவுறுத்திய வேளையில் மாவோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்து சியாங்கே சேக்குடன் கூட்டணியைத் தொடர்ந்தார்.
இவை அனைத்தும் மேலோட்டமாகப் பார்க்கும் போது பாதை விலகல்கள் போல் தோன்றினாலும் உண்மையில் புரட்சியைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மிகச் சரியான வழிகளே என்பதை வரலாறு நிரூபித்தது.
வேறு யாரிடம் ஒப்படைப்பது
இன்று சோசலிச நாடு என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த நாடும்  இல்லாத நிலையில் சோசலிச முகாமும் முற்றாக இல்லாமல் போயுள்ள நிலையில் ஐ.நா. சபையின் பொறுப்பாளர்களிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில் அவற்றை ஒப்படைப்பதற்கு வேறு எந்த அமைப்பையும் இன்றுள்ள சூழ்நிலையில் தேட முடியாது.
இதனை ஐ.நா. அமெரிக்காவின் ஆணையை மீறி எந்த நடவடிக்கையிலும் இறங்காது என்பதைத் தெரிந்து கொண்டேதான் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி செய்தது. அதாவது வேறு வழி இல்லாததால் அதனைச் செய்தது.
மக்கள் விடுதலைப் படையினால் கைப்பற்றப்பட்ட விவசாய நிலங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் அதிபர்களாக முன்பு இருந்தவர்கள் முன்னாள் மன்னருக்கு நெருக்கமான நகர்ப்புறங்களில் குடியிருக்கக் கூடியவர்களாகவே பெரும்பாலும் இருப்பர்.
அவர்களில் பலருக்கு அவர்களது நிலம் எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியாது. அந்நிலையில் அவர்கள் மலையகப் பகுதிகளில் உள்ள அவர்களது நிலங்களைத் தேடிச் சென்று உரிமை கொண்டாடி அதனைத் தங்கள் வசமாக்கிச் சாகுபடி செய்வது என்பது தூரத்துக் கனவாகவே இருக்கும்.
நேபாள ராணுவத்தோடு மக்கள் விடுதலையைப் படையை இணைப்பதைப் பொறுத்தவரையில் ஒரு நிலை ராணுவத்தில் ஒரு சூழ்நிலையில் பி.எல்.ஏ ல் உள்ள பலர் இணைந்து விட்டாலும் சித்தாந்த வலிமை கொண்டதாக கட்சி இருந்தால் அது ஊட்டும் உத்வேகம் அத்தகைய ராணுவ வீரருக்கு நிகரான தொண்டர்களை எந்தச் சூழ்நிலையிலும் உருவாக்கிவிட முடியும். எனவே ராணுவம் போய்விட்டது இனி என்ன செய்வோம் என்று தொழில்நுட்ப ரீதியில் சிந்திப்பது சரியானதாக இராது.
விட்டுக் கொடுக்காமல் உடன்பாடு இல்லை
மேலும் உடன்பாடு என்றால் உடன்பாட்டில் ஈடுபடும் இரண்டு தரப்புகளும் அவர்களின் நிலைபாடுகளில் சிலவற்றை விட்டுக் கொடுத்துத்தான் தீர வேண்டும். எதையும் விட்டுக் கொடுக்காமல் உடன்பாடு என்று பேசுவது  உடன்பாடு என்ற பெயரில் நடக்கும் வாய்ப் பேச்சாகவே இருக்கும். அதாவது உடன்பாடு என்ற பெயரில் நடத்தப்படும் நாடகமாகவே இருக்கும்.
நேபாளத்தை பிரிவேதுமின்றி விடுவிப்பது என்பது யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியின் இலக்காக இருந்தால் அதற்காகச் சில வி­யங்களை அவர்கள் விட்டுக் கொடுத்துத்தான் தீர வேண்டும். அவ்வாறு விட்டுக் கொடுக்கப்பட்ட வி­யங்களே மேலே விவரிக்கப்பட்டவை. இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை உண்மையான சமூகமாற்ற எழுச்சி கிராமப்புறம் நகர்ப்புறம் என்ற பாகுபாடின்றி நாடு முழுவதும் எழும் சூழ்நிலையில் ஒரு சரியான கட்சியால் எளிதில் சரிசெய்யதுவிட முடியும்.
மேலே கூறிய அடிப்படைகளில் தனது கருத்து வேறுபாட்டை வலியுறுத்திக் கொண்டிருந்த வைத்தியா தலைமையிலிருந்த குழு தற்போது வேறு சில கருத்துக்களையும் முன்வைத்துக் கட்சியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. அக்கருத்துக்களில் மக்கள் ஜனநாயகக் குடியரசு கொண்டு வருவது என்ற தனது பழைய நிலையை மறந்து ஜனநாயகக் குடியரசு என்ற முழக்கத்தை யு.சி.பி.என்(எம்). ஏற்றுக் கொண்டதைத் தவறு என்று கூறுவது ஒன்றாகும்.
அதாவது முழுமையாக நேபாள சமூகத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்டிய பின்னர் மக்கள் ஜனநாயகக் குடியரசு என்ற முழக்கத்தை முன்வைப்பதே ஒரு கட்சியைப் பொறுத்தவரை யதார்த்தமானதாக இருக்கும். அவ்வாறு இல்லாத சூழ்நிலையில் அந்த முழக்கத்தை வைப்பதே ஒரு சாகசவாதச் சொல்லாடலாக ஆகிவிடும். எனவே வைத்தியாவின் இக்கருத்து ஒரு பிடிவாதத் தன்மை வாய்ந்ததேயன்றி நடைமுறை ரீதியில் சரியான மார்க்சிய ரீதியிலான வாதமல்ல.
இதுதவிர கைப்பற்றப்பட்ட சொத்துக்களை அதன் சட்டபூர்வ உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைப்பது என்ற முடிவினைப் பொறுத்தவரை சட்டபூர்வமான என்ற வார்த்தையின் மூலம் கைப்பற்றப்பட்ட அனைத்துச் சொத்துக்களையும் ஒப்படைப்பது என்பது வலியுறுத்தப்படாதிருந்தாலும் சொத்துக்களை ஒப்படைப்பது என்ற முடிவினை எடுப்பதே தவறானது என்பது அவரது நிலையாகும்.
இது குறித்து நாம் மேலே முன்வைத்துள்ள வாதத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது இதுவும் சமூகமாற்ற சிந்தனை கொண்டோர் மத்தியில் ஒரு நற்பெயரைச் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகச் செய்யப்படுவதாகத் தோன்றுகிறதே தவிர இதை வலியுறுத்துவதன் நோக்கம் இன்றைய சூழ்நிலையில் நேபாளம் எதிர் கொண்டுள்ள சிக்கலில் இருந்து அதனை மீட்பதற்காக இல்லை என்பது தெரியவரும்.
அவர் வைத்துள்ள மற்றொரு குற்றச்சாட்டு இந்திய ஆட்சியாளர்களுடன் சுமூகமான உறவுகளை மேற்கொள்வது குறித்தது. அதாவது 50களில் செய்து கொள்ளப்பட்ட இந்தியாவிற்குச் சாதகமானதும் நேபாளத்திற்குப் பாதகமானதுமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று யு.சி.பி.என்(எம்) கட்சி வற்புறுத்தாத நிலைபாடு குறித்ததாகும்.
உள்ளபடியே ஜனநாயக இயக்கம் அதன் உச்சகட்டத்தில் இருந்த போது நேபாளி காரங்கிரஸ், யு.எம்.எல். போன்ற கட்சிகளும் அவை இன்று எடுத்துள்ளது போல் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சிக்கு எதிரான நிலையயடுக்கத் தயங்கின. அந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற முழக்கத்தை யு.சி.பி.என்(எம்). முன்வைக்கவே செய்தது.
ஆனால் அரசியல் சட்டம் எழுதும் காலம் வேண்டுமென்றே இக்கட்சிகளால் நீட்டிக்கப்பட்ட நிலையில் தங்களுடைய ஆளும் வர்க்கத்தினுடனான உறவை அவை அதிகபட்சம் மேம்படுத்திக் கொண்டபின் கொத்தவால் வி­யத்தில் இந்திய அரசுடன் இணைந்து நேபாளின் குடியரசுத் தலைவர் எடுத்த சிவில் நிர்வாகத்தின் மேலாண்மையைப் பாதிக்கும் சூழ்நிலைக்கு இக்கட்சிகள் ஒத்துப்போன நிலையில் சூழ்நிலை மாறியது.
வரலாற்றுப் படிப்பினைகள்
இன்றைய சூழலில் ஒரு மக்கள் குடியரசு நேபாளத்தில் ஏற்பட்டால் கூட அது அதன் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் குறுகிய கால அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அந்நிய மூலதனத்தை அனுமதிக்கவும் ஏன் வரவேற்கவும் கூட வேண்டியிருக்கும். இதற்கு முன்னுதாரணமாக மாவோ ஹாங்காங் வி­யத்தில் கடைப்பிடித்த நிலைபாட்டை எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஹாங்காங்கை சீனாவின் பங்கும் பகுதியுமானதாக ஆக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வெகு காலத்திற்கு முன்பே தயாராகிவிட்டது. இருந்தாலும் கூட 99 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஹாங்காங் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒரு பகுதியாக இருந்துவிட்டுப் போகட்டும் என்றே மாவோ வலியுறுத்தினார்.
அதற்கான காரணம் உலக ஏகாதிபத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் சீனாவைத் தனிமைப்படுத்தி நவீனத் தொழில்நுட்பமும் விஞ்ஞான அறிவும் அதற்குக் கிட்டாதிருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியதை அவர் எதிர்கொள்ள விரும்பியது தான். அதாவது உலகின் முக்கிய விற்பனைத் தளங்கள் நான்கில் ஒன்றான ஹாங்காங்கிற்கு வரும் உயர் தொழில்நுட்பத் தன்மை பொருந்திய பொருட்களை வாங்கி அதில் கையாளப்பட்டுள்ள தொழில் நுட்பத்தை அறிந்து கொண்டு அதன்மூலம் ஓரளவேனும் தொழில்நுட்ப வளர்ச்சியை அவர் சீனாவில் ஏற்படுத்த விரும்பினார்.
இன்று நேபாளம் உள்ள நிலையில் அதற்கு எந்த நாட்டின் தொழில் நுட்பமும் மூலதனமும் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று பார்த்தால் அவ்வாறு வர வாய்ப்புள்ள நாடுகளில் நாடுகளில் முக்கியமானதொன்றாக இந்தியா நிச்சயமாக உள்ளது. அந்நிலையில் சில கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதும் அழுத்தம் கொடுக்காதிருப்பதும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் யுத்த தந்திர நடவடிக்கையாகும். அழுத்தம் கொடுக்காததொரு கோரிக்கை கைவிடப்பட்டுவிட்ட கோரிக்கையாக ஆகாது.
இத்துடன் வைத்தியா முன்வைத்துள்ள மற்றொரு வாதமாக சில ஆண்டு காலத்திற்கு வேலை நிறுத்தம் போன்ற தொழிலாளர் போராட்டங்களை நடத்தாதிருப்பது என்ற அனைத்துக் கட்சிகளோடும் இணைந்து யு.சி.பி.என்(எம்). செய்து கொண்டதாகக் கூறப்படும் முடிவு முன்வைக்கப் படுகிறது. உண்மையாகவே இது யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியின் தலைமையினால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு கவலையளிக்கும் முடிவாகவே தோன்றுகிறது. இது குறித்து அடுத்துவரும் பத்திகளில் நாம் கூடுதலாக விவாதிப்போம்.
இது போன்ற முழக்கங்களையும் ஆயுதப் போராட்டத்தைத் தொடருவதே இன்றுள்ள நிலையில் ஒரே வழி என்பதையும் முன்வைத்து வெளியேறியுள்ள வைத்தியா தற்போது எடுத்துள்ள நிலை பல அம்சங்களில் முன்னுக்குப்பின் முரணானதாக உள்ளது. அதாவது சரியாகவோ தவறாகவோ ஒரு சிந்தாந்த ரீதியாகப் புடம் போடப்பட்ட கம்யூனிஸ்ட் கூட ஆயுதப் போராட்டம் போன்ற அதிதீவிர நடவடிக்கைக்கு அறைகூவல் விடுக்கலாம். அப்போது அந்த நடவடிக்கையில் கோளாறு ஏதேனும் இருப்பின் அது சுட்டிக்காட்டப்பட வேண்டுமே தவிர அவரது நோக்கத்தைச் சந்தேகிக்க முடியாது; சந்தேகிக்கவும் கூடாது.
ஏனெனில் அது உயிரைப் பணயமாக வைத்துச் செய்யப்படும் முயற்சி. அதை யாரும் விளையாட்டுத் தனமாகவோ போகிற போக்கிலோ செய்ய முன்வர மாட்டார்கள். ஆனால் வைத்தியாவோ ஆயுதப் போராட்டத்தைத் தொடருவதே ஒரே வழி என்று ஒருபுறம் கூறிவிட்டு மறுபுறம் உடனடியாக ஆயுதப் போராட்டத்திற்குத் தான் அறைகூவல் விடுக்கப் போவதில்லை என்றும் அறிவிக்கிறார். அவர் கட்சியை விட்டு வெளியேறப் பல காரணங்களைக் கூறினாலும் அக்காரணங்களிலெல்லாம் மையமானதாக இருப்பது ஆயுதப் போராட்டமாகத் தான் இருக்க முடியும். ஏனெனில் அதைக் கைவிட்டு ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் இறங்கியது தான் அவரது கோணத்தில் இருந்து பார்க்கும் போது தற்போது யு.சி.பி.என்(எம்) ல் தோன்றியுள்ள அனைத்துக் கோளாறுகளுக்குமான காரணமாக இருக்கும். அத்தகைய ஆயுதப் போராட்டத்தை அவர் உடனடியாக ஆரம்பிக்கவில்லை எனில் உடனடியாகக் கட்சியை விட்டு மட்டும் அவர் ஏன் விலக வேண்டும்?
மேலும் அடுத்து அவர் முன்வைக்கும் முழக்கம் அவர் விலகியதன் நோக்கத்தை இன்னும் கூடுதலாகச் சந்தேகிக்க வைக்கிறது. அதாவது நேபாளி காங்கிரஸ், யு.எம்.எல். ஆகிய ஆளும் வர்க்க ஆதரவுக் கட்சிகளின் கச்சேரியில் இணைந்து தேர்தல்கள் இப்போது வேண்டாம் என்று அவர் பின்பாட்டு பாடுகிறார். அதாவது அக்கட்சிகளின் தொடர்ச்சியான பதவி மோக, ஆளும் வர்க்க ஆதரவு நிலைபாடுகள் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி அடுத்தடுத்து நடத்திய பல்வேறு இயக்கங்களால் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தலைக் கண்டு நேபாளி காங்கிரஸ், யு.எம்.எல். போன்ற கட்சிகள் அஞ்சுகின்றன என்பது ஒளிவு மறைவின்றித் தெளிவாகவே வெளிப்படுகிறது.
அதாவது தேர்தல்கள் நடந்தால் தாங்கள் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய்விடுவோம் என்ற அச்சத்தில் தேர்தலைக் கண்டு நடுங்குபவைகளாக அவை உள்ளன. இச்சூழ்நிலையில் தங்களது தொடர்ச்சியான நடவடிக்கைகளால் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதைச் சீர்குலைப்பது என்ற நோக்கோடு மேலே கூறிய ஆளும் வர்க்கக் கட்சிகள் தேர்தல் வேண்டாம் என்ற கூற்றை முன்வைக்கின்றன.
ஆனால் ஆயுதப் போராட்டத்தைத் தொடர விரும்பும் வைத்தியா அந்நிலையினை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? மற்ற கட்சிகளைப் பார்த்து நீங்கள் எந்தக் கூத்தை வேண்டுமானாலும் ஆடிக் கொள்ளுங்கள். என்வழி உங்கள் வழியிலிருந்தெல்லாம் மாறுபட்ட தனி வழி என்ற நிலையை எடுத்து ஆயுதப் போராட்டத்தை அல்லவா தொடங்கியிருக்க வேண்டும்? அதை விடுத்து செல்லாக்காசுகளாகிப் போன அக்கட்சிகளுடன் இணைந்து அவற்றிற்கு உதவும் வகையில் வைத்தியா இந்த நிலை எடுத்திருப்பதேன்?
பதவிப் போட்டி என்ற பிரச்சாரம்
உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவப் பத்திரிக்கை உலகம் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) அமைப்பில் தோன்றியுள்ள இந்தப் பிளவினைப் பதவிப் போட்டி என்று சித்தரிக்கிறது.
அதாவது பிரச்சந்தா, பட்டராய், வைத்தியா ஆகிய மூவருமே கட்சித் தலைமை மற்றும் ஆட்சித் தலைமைப் பொறுப்பினை அடைய அலைபவர்கள்; அவர்களில் வைத்தியா தலைமைப் பொறுப்பு கிட்டாத நிலையில் தற்போது வெளிப்படையாகப் பிரிந்து வெளியேறி விட்டார். மற்ற இருவருக்கும் இடையிலான பதவிப் போட்டி இனிமேல் ஆரம்பிக்கும் என்ற கருத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் எழுதிக் கொண்டுள்ளன.
முதலாளித்துவ ஊடகங்களின் கணிப்பு இவ்வாறு இருப்பது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அவை மோசமாகச் சித்தரிக்கச் சித்தரிக்க அவற்றால் அவ்வாறு சித்தரிக்கப்படுபவர்கள் அவர்கள் கம்யூனிஸ்ட்களாக இருக்கும் போது இன்னும் இன்னும் சரியானவர்களாக உள்ளனர் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் வைத்தியா கட்சியிலிருந்து வெளியேறித் தனி அமைப்பினை ஏற்படுத்தியிருப்பது நம்மைப் பொறுத்தவரை விசயத்தைத் தெளிவாக்கியிருக்கிறது. அதாவது ஆயிரம் ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்குகளுக்கு மத்தியில் குழுவாதம் என்ற கம்யூனிஸ்ட் கட்சிக்கு அன்னியமானதும், அதன் அரசியலுக்கு ஒத்துப் போகாததுமான நடைமுறை யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) அமைப்பிற்குள்ளும் இருந்துள்ளது என்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது.
உண்மையான அர்த்தத்தில் விமர்சனம் என்பது ஒருவர் அல்லது ஒரு அமைப்பின் மீது பழி சுமத்துவது அல்ல; அது ஆக்கபூர்வமானது. விமர்சனம் என்பது ஒரு உரிமை மட்டுமல்ல; அது கடமையுமாகும். விமர்சனத்தின் நோக்கம் இருவர் அல்லது இரு அமைப்புகளுக்கிடையே இருக்கும் வேறுபாட்டைப் பறைசாற்றுவதல்ல. அது இன்னும் கூடுதல் ஒற்றுமையைச் சம்பந்தப்பட்ட இரு அமைப்புகளுக்கிடையில் கொண்டு வருவதற்காகச் செய்யப்படுவது. கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை எதிரி வர்க்கக் கட்சிகள் விமர்சிக்கப்படத் தக்கவையல்ல; அவை அம்பலப்படுத்தப்பட வேண்டியவை. எனவே உண்மையான விமர்சனபூர்வ அணுகுமுறை கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு இடையில் மட்டுமே பொருத்தமான விதத்தில் செயல்படக் கூடியது.
அந்த அடிப்படையில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியின் சாதனைகளை உயர்த்திப் பிடிக்கும் அதே சமயத்தில் அக்கட்சியில் காணப்படும் சில போக்குகளை விமர்சன ரீதியாகப் பார்ப்பதும் அவசியமாகிறது. அவற்றை யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி கணக்கிலெடுத்துக் கொண்டால் நல்லது என்ற அடிப்படையில் அவற்றை முன்வைப்போம்.
குழுவாதம்
ஒரு நாட்டில் சமூக மாற்றம் என்ற மகத்தான வரலாற்று நிகழ்வை நடத்துவதற்காக ஒத்த எண்ணப் போக்குடைய அனைவரையும் ஒருங்கிணைப்பது கட்டாயமானதாகும். ஆனால் அவ்வாறு ஒருங்கிணைந்த பின் கட்சிக்குள் ஒருமித்த சிந்தனையையும், அணுகுமுறையையும் ஏற்படுத்தும் விதத்தில் தீவிரமான சித்தாந்தப் போராட்டத்தினை நடத்தி அதனைச் சாதிக்க முயல வேண்டும். அத்தகைய ஒருமித்த சிந்தனையும், அணுகுமுறையும் அடிப்படையில் அக்கட்சியில் ஏற்படாத வரை குழுவாத மனநிலை இருந்து கொண்டேயிருக்கும். அது சில சமயங்களில் பதவிப் போட்டி என்ற அசிங்கமான வடிவத்தைக் கூட எடுத்துவிடும்.
தொண்டர் மட்டத்திலிருந்தும்
இதன் பொருள் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியின் தலைமை இத்தகைய ஒருமித்த சிந்தனையையும், அணுகுமுறையையும் கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதல்ல. எந்த ஒரு பொறுப்புள்ள அமைப்பும் அதனைச் செய்யாதிருக்காது. ஆனால் இந்த ஒருமித்த சிந்தனையையும், அணுகுமுறையையும் கொண்டு வருவதற்கான உட்கட்சிப் போராட்டம் தலைமையில் மட்டுமல்ல, அடிமட்டத் தொண்டர் மட்டத்திலிருந்தும் தட்டி எழுப்பப்பட வேண்டும்.
அவ்வாறின்றி தலைமை அளவில் மட்டும் அதுவும் அதனை ஒரு போராட்டமாக அதாவது ஒன்றின் அழிவில் தான் மற்றொன்றின் வாழ்க்கை இருக்கிறது என்ற அடிப்படையிலான போராட்டமாக அல்லாமல் நேர் விரோதத் தன்மையில்லாத முரண்பாடுகளுக்கிடையிலான போராட்டமாக நடத்தத் தவறினாலும் தற்போது வைத்தியா வெளியேறியதில் ஏற்பட்டுள்ளது போன்ற எதிர்மறை விளைவுகள் ஏற்படவே செய்யும்.
அப்படியயன்ன பெரிய விபரீதத்தினை வைத்தியா வெளியேறியிருப்பது ஏற்படுத்திவிட்டது என்ற கேள்வி இங்கு எழலாம். ஆம், சமூகமாற்றப் போக்கின் தன்மையையே மாற்றும் பெரிய விளைவினை அது ஏற்படுத்தியுள்ளது என்று கூற முடியாவிட்டாலும், அது கட்டாயம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவிற்குக் குறிப்பிடத்தக்க விளைவினை ஏற்படுத்தியே உள்ளது.
மேலே உள்ள பத்திகளில் நாம் பகுப்பாய்வு செய்த விதத்தில் சித்தாந்த ரீதியான கருத்துக்கள் எதையும் தர்க்க ரீதியான தெளிவுடன் வைக்காமல், வறட்டுச் சூத்திரவாதங்கள் போல் சில கருத்துக்களை வைத்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறி, தேர்தல் இப்போது தேவையில்லை என்ற நிலையினைக் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத ஆளும் வர்க்க ஆதரவுக் கட்சிகளோடு கைகோர்த்து எடுத்துள்ள அவரது பின்னாலும் பல தலைவர்களும், தொண்டர்களும் சென்றுள்ளனரே. அப்போக்கு நாம் மேலே விவரித்த உட்கட்சிப் போராட்டம் உரிய அழுத்தத்துடன் செய்யப்படவில்லை என்பதைத் தானே கோடிட்டுக் காட்டுகிறது.
இரண்டாவதாக யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி சீன மண்ணில் மாமேதை மாவோ கடைப்பிடித்த மக்கள் ஜனநாயகப் புரட்சிப் பாதையையே நேபாளத்தின் அடிப்படை அரசியல் வழியாக இன்றுவரை வைத்துக் கொண்டுள்ளது.
இன்று உலகின் அனைத்து நாடுகளிலுமே வளரும் போக்கான முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கே பிரதானப் போக்காக உள்ளது. அந்த அடிப்படையில் வெளிப்படையாக எத்தனை பின்தங்கியதாக அந்த நாடு காட்சியளித்தாலும் நேபாளத்திலும் ஆட்சியதிகாரத்தை இயக்கவல்ல வளரும் சக்தியாக நேபாள முதலாளித்துவமே ஆகியுள்ளது.
நேபாள அரசியல் நிர்வாகம் முதலாளித்துவ வளர்ச்சியையே முன்னிலைப் படுத்துவதாக உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் அடிப்படை அரசியல் வழியும் சோசலிச சமூகமாற்ற வழியாகவே அடிப்படையில் இருக்க முடியும்.
எதைச் செய்வது என்பதும் எப்படிச் செய்வது என்பதும் இருவேறுபட்ட வி­யங்கள். நேபாளத்தைப் பொறுத்தவரை மட்டுமல்ல இன்று உலகின் எந்த நாட்டைப் பொறுத்தவரையிலும் எதைச் செய்வது என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. அதாவது சோசலிச ரீதியிலான சமூக மாற்றமே இன்று உலகின் அனைத்து நாடுகளிலும் வலியுறுத்தப்பட வேண்டிய சமூக மாற்றம் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் அதை எப்படிச் செய்வது என்பது நாட்டிற்கு நாடு வேறுபடுவதாகும்.
அனுபவம் வழிமுறையை மாற்றிய நிலை
மக்கள் ஜனநாயக சமூகமாற்றத்தை சாதிப்பதற்கு மாவோ சீன மண்ணில் கடைப்பிடித்த வழிமுறை கிராமப் புறங்களைக் கைப்பற்றி அவற்றில் விடுதலை மையங்களை ஏற்படுத்திக் கொண்டு நகர்ப்புறங்களைத் தாக்கிக் கைப்பற்றுவது என்பதாக இருந்தது. ஜனநாயக இயக்கத்தில் நுழைவதற்கு முன்னர் ஆயுதப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி அந்த வழிமுறையின் கீழ் பல விடுதலை மையங்களைக் கூட ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அதனால் நேபாளத்தின் நகர்ப்புறப் பகுதியில் அதன் வளர்ச்சியை உறுதிசெய்ய முடியவில்லை. அதனைக் கருத்திற்கொண்டே அது ஜனநாயக இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. அதாவது மாவோ கடைப்பிடித்த வழியான கிராமப்புறப் பகுதிகளில் விடுதலை மையங்களை ஏற்படுத்திக் கொண்டு நகர்ப்புறங்களை மக்களின் ஆதரவுடன் தாக்கிக் கைப்பற்றும் சூழ்நிலை அங்கு இல்லை.
அந்த நிலையில் எந்தத் தயக்கமுமின்றி யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி தனது வழிமுறையை மிகச் சரியான முறையில் மாற்றிக் கொண்டது. அதாவது கிராம, நகர்ப்புறப் பகுதிகளில் ஒரே சமயத்தில் சமூகமாற்ற எழுச்சிகளைக் கொண்டுவருவதே சரியானதாக இருக்கும் என்ற முடிவிற்கு அது எந்தத் தயக்கமுமின்றி வந்தது. அதாவது தனது அடிப்படை அரசியல் வழி முன்வைக்கும் வழிமுறைகள் சூழ்நிலைகளுக்கு உகந்ததாக இல்லாத நிலையில் மக்கள் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சி அதன் போராட்ட அனுபவத்தின் மூலம் தனது பாதையை மாற்றிக் கொள்ள முடியும் என்பது அக்கட்சியின் இந்த நடவடிக்கை மூலம் நேபாள மண்ணில் நிரூபணமானது.
வழிமுறைகளை மாற்றியதோடு நின்றுவிடாமல் அக்கட்சி மக்கள் ஜனநாயகப் புரட்சியை அடிப்படை அரசியல் வழியாகக் கொண்டிருப்பது எத்தனை சரியானது என்பதை ஒட்டுமொத்தமாகவே தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.
இந்தப் பின்னணியில் இத்துடன் தொடர்புடைய வேறொரு விசயத்தைப் பார்ப்பதும் அத்தியாவசியமாகிறது. அதாவது யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பாபுராம் பட்டராய் நேபாளத்தில் முதலாளித்துவ ரீதியிலான வளர்ச்சியை முதலில் நடைபெறச் செய்ய வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவராக இருப்பதாகப் பல முதலாளித்துவப் பத்திரிக்கைகள் கூறுகின்றன. அதே கருத்தை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றைச் சேர்ந்த டிராட்ஸ்கிய வாதக் கம்யூனிஸ்ட் ஒருவரும் கூறுகிறார். அதில் எவ்வளவு உண்மையுள்ளது என்பது நமக்குத் தெரியாது.
முதலாளித்துவம் அப்படியே வளர அனுமதிப்பதா
ஆனால் அது உண்மையாக இருக்குமானால் அத்தகைய கருத்தை இக்கால கட்டத்தில் கொண்டிருப்பது அழியும் தறுவாயில் உலக முதலாளித்துவம் இருக்கும் நிலையில் அதற்கு ஒரு நாட்டில்  அதுவும் சமூகமாற்ற இயக்கங்கள் மலர்ந்து பரிணமித்துக் கொண்டுள்ள ஒரு நாட்டில் உயிர் கொடுக்க முனைவது போலாகும். அந்த நிலைபாட்டிற்கு ஆதரவாக நேபாளத்தின் பின்தங்கிய நிலை போன்ற எத்தனை வாதங்கள் முன்வைக்கப் பட்டாலும் அவை செல்லுபடித்தன்மை வாய்ந்தவையல்ல.
ஏனெனில் இக்காலகட்டத்தின் முதலாளித்துவத்திற்கு சமூகத்திற்கென வழங்குவதற்கென்று எதுவுமில்லை. பொருளாதார விசயத்திலும் கூட இதுவே உண்மை. இவ்வாறு நாம் கூறும் போது அப்படியானால் நேபாளத்தில் தொழில் வளர்ச்சியை எவ்வாறு கொண்டு வருவது என்று சிலர் வினவலாம். தொழில் மயத்தை முதுலாளித்துவம் தான் கொண்டுவர வேண்டும் என்பதல்ல. எனவே தொழில் வளர்ச்சிக்காக நேபாள முதலாளிகளின் வசம் தற்போதுள்ள மூலதனத்தை வெளிக்கொணர சோவியத் யூனியனில் கடைப்பிடிக்கப்பட்டது போன்ற புதிய பொருளாதாரக் கொள்கையையயாத்த கொள்கை எதையாவது நேபாள மண்ணிற்கு ஏற்ற விதத்தில் கடைப்பிடிக்கலாமே தவிர முதலாளித்துவத்தை அப்படியே அனுமதிப்பது என்பது மிகப்பெரிய தவறாகவும் சமூகமாற்றப் போக்கில் மாபெரும் முட்டுக்கட்டையாகவும் கட்டாயம் ஆகிவிடும்.
உண்மையாகவே பட்டராய் முதலாளித்துவத்தை அப்படியே அனுமதிக்க வேண்டும் என்ற நிலையை எடுத்திருப்பாரானால் அதை எடுப்பதற்கான மனப் போக்கையும் அரவது கட்சி கொண்டிருக்கும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக் கண்ணோட்டமே வழங்கியிருக்கும். ஏனெனில் அக்கண்ணோட்டம் தேசிய முதலாளிகள் நேச சக்திகள் என்ற கருத்தையே முன்வைக்கிறது.
மேலும் இன்றைய உலகமயப் பின்னணியில் உலகச் சந்தைக்காக அனைத்து நாட்டு முதலாளிகளும் உற்பத்தில் ஈடுபடுகின்றனர். எனவே தேசிய நலனை முன்னிலைப் படுத்தும் தேசிய முதலாளியாக யாரும் இல்லை என்பதே நிலவும் யதார்த்த சூழ்நிலையாக உள்ளது. மேலும் முதலாளிகளைப் பொறுத்தவரையில் லாபமா தேசமா என்ற கேள்வி எழுந்தால் அவர்களது முன்னுரிமை லாபத்திற்கு என்பதாகவே இருக்கும். அப்படியே முதலாளித்துவத்தை வளர்ந்து செயல்பட அனுமதித்தால் அதன்மூலம் வளரும் முதலாளிகளது பொருளாதார செல்வாக்கை வைத்து அரசியல் செல்வாக்கும் வளர்ந்துவிடும்; நனைத்துச் சுமப்பதையயாத்த நிலை சமூகமாற்ற சக்திகளுக்கு ஏற்பட்டுவிடும்.
கட்சிகள் குறித்த கண்ணோட்டம்
மூன்றாவதாக அடிப்படை மார்க்சியக் கோட்பாடு கட்சிகள் ஒவ்வொன்றும் ஏதாவதொரு வர்க்க நலனைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும்; கம்யூனிஸ்ட் கட்சி தவிர பிற கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலிப்பவையாகவே இருக்கும் என்ற கருத்தையே முன்வைக்கிறது. எனவே உழைக்கும் வர்க்க ஆட்சியை அமைக்க விரும்பும் எந்தவொரு கட்சியும் உழைக்கும் வர்க்க நலனைப் பிரதிபலிக்காத முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலிக்கும் பிற கட்சிகளையும் உள்ளடக்கிக் கொண்ட பல கட்சி ஆட்சி முறையை வலியுறுத்தாது. இந்த அடிப்படைக் கோட்பாட்டிற்கு மாறாகப் பலகட்சி ஆட்சி முறையை ஏற்றுக் கொள்ளும் கட்சி என்றும் தன்னை யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி அறிவித்துக் கொண்டுள்ளது.
எவ்வாறு அதன் அடிப்படை அரசியல் வழி சூழ்நிலைக்கு ஒத்துவராததாக இருந்த நிலையில் அதன் வழிமுறையைப் பிடிவாதமாகப் பற்றி நிற்காமல் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி அதை மாற்றிக் கொண்டதோ அதைப்போல் அக்கட்சியின் தலைமையில் உழைக்கும் வர்க்க ஆட்சி அமையும் நிலையில் முதலாளிவர்க்க நலனைப் பிரதிபலிக்கும் பிற கட்சிகள் அனைத்தும் தாமாகவே மக்கள் மத்தியில் அம்பலமாகி செல்லாக்காசாக ஆவதற்கான சூழ்நிலை உருவாகும்; அவ்வழியில் ஏற்படக்கூடிய மாற்றம்  சோவியத் மற்றும் பிற சோசலிச நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தின் ஒரு கட்சி ஆட்சிமுறை வலியுறுத்திக் கொண்டுவரப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அதனால் அது சர்வாதிகாரம் என்ற கருத்து தோன்ற வழிவகுத்ததே, அப்படிப்பட்ட ஒரு சூழல் நேபாள மண்ணில் ஏற்படுவதைத் தவிர்த்து மிக இயல்பான விதத்தில் ஒரு கட்சி ஆட்சிமுறை ஏற்படுவதற்கான புறச் சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்ற எண்ணம் நமக்கு இருந்தது. அந்த அடிப்படையிலேயே முதன் முதலில் யு.சி.பி.என்(எம்). அமைப்பு பல கட்சி ஆட்சிமுறை என்ற கண்ணோட்டத்தை முன்வைத்த போது அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போதும் அந்த வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போய்விட்டது எனக் கூற முடியாது. இருந்தாலும் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)கட்சியின் அடுத்தடுத்த அறிவிப்புகள் பலகட்சிக் கண்ணோட்டத்தை  மிகவும் கூடுதலாக வலியுறுத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதற்கான அடிப்படையைத் தத்துவார்த்த ரீதியாக அது நிறுவ முயலவில்லை.
எனவே வர்க்கங்களால் பிளவுபட்ட எந்தவொரு சமூகத்திலும் உழைக்கும் வர்க்க நலனைப் பிரதிபலிப்பதாக ஒரு கட்சியே இருக்க முடியும்; ஆனால் அந்நாட்டில் செயல்படக்கூடிய பிற கட்சிகள் அனைத்தும் தொழிலாளி வர்க்க நலனுக்கு எதிரான ஆளும்வர்க்க நலனை ஏதாவதொரு வகையில் பிரதிபலிக்கக் கூடியவையாகவே இருக்கும்; ஏனெனில் முதலாளி வர்க்கம் தொழில் போட்டியை அடிப்படையாகக் கொண்டு செயல்படக் கூடியதாக இருப்பதால் அவ்வர்க்கத்தின் நலனைப் பிரதிபலிப்பதற்கென்று பல கட்சிகள் அந்தத் தொழில் போட்டியினை மையமாகக் கொண்டு ஒரு நாட்டில் செயல்படும் வாய்ப்பு உண்டு; நிச்சயமாக முதலாளி வர்க்க நலனைப் பிரதிபலிக்கக் கூடியதாக ஒரே ஒரு கட்சி மட்டும் இருக்கவே முடியாது என்ற அடிப்படை மார்க்சியப் பார்வையையே யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி கைவிட்டுவிடக் கூடாது.
தற்போது நேபாளத்தின் நிகழ்வுகளும் அதனைத் தான் வலியுறுத்துகின்றன. யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி ஜனநாயக இயக்கத்திற்குள் நுழைவதற்கு முன்பு நேபாளி காங்கிரஸ், யு.எம்.எல். ஆகிய கட்சிகளுக்கிடையே பதவிப் போட்டியை மையமாகக் கொண்டு பெரிய முரண்பாடு நிலவியது போன்ற ஒரு தோற்றம் இருந்தது. ஆனால் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியின் வளர்ச்சி அவ்விரு கட்சிகளுக்கிடையிலும் பெரிய நெருக்கத்தைக் கொண்டு வந்துள்ளது. அக்கட்சிகள் இரண்டின் செயல்பாடுகளும் அடிப்படையில் ஆளும் முதலாளிவர்க்க நலனை உயர்த்திப் பிடிப்பவையாக அப்பட்டமாக ஆகிவிட்டன.
அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் மாவோயிஸ்ட்கள் பெருவெற்றி பெற்ற வேகத்தில் சமூகமாற்றப் போக்குகள் அடுத்தடுத்து வேகமாக நடைபெறாத சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஆளும் முதலாளிவர்க்க சக்திகளை ஒருங்கிணைப்பதிலும் அவற்றிற்கு ஆதரவான சர்வதேசச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி சமூகமாற்றப் போக்குகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதிலும் அக்கட்சிகள் முனைந்து செயல்பட்டன.
உழைக்கும் வர்க்க ஆட்சி அமைந்த பின்னும் இக்கட்சிகள் சமூகமாற்றப் போக்குகளுக்கு பெரும் தடைக்கற்களாகவே நிச்சயம் விளங்கும். அந்தச் சூழ்நிலையில் இக்கட்சிகளை அம்பலப்படுத்தி செல்வாக்கு இழந்தவையாக ஆக்கக்கூடிய சூழ்நிலையைப் புறரீதியாகவும் வளர்த்தெடுப்பது உண்மையான சமூகமாற்ற சக்தியான யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சிக்கு அத்தியாவசிமானதாகிவிடும். அந்நிலையில் ஆளும் முதலாளி வர்க்கம் புறரீதியாகச் செல்லாக்காசாக்கப்படும் சூழ்நிலையும் ஏற்படும். அந்த வாய்ப்பு சமூகமாற்றத்தின் தடைக் கற்களான இக்கட்சிகள் அம்பலமாவதில் சென்று முடியும். அந்த வாய்ப்பினை யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி பயன்படுத்தத் தயங்கவோ தவறவோ கூடாது.
நான்காவதாக தற்போது நேபாள அரசியலில் தலைப்புச் செய்தியாக விளங்கும் பெடரலிசத்தைப் பொறுத்தவரையிலும் கூட ஒரு இனத்திற்கு ஒரு மாநிலம் என்ற அடிப்படையில் எப்போதுமே கட்டம் கட்டிவிடுவது மிகச்சரியாக இருக்காது.
இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு இனக்குழுவும் முழுமையாக உழைப்பாளி வர்க்கத்தை மட்டும் கொண்டதாகவோ அல்லது முழுக்க முழுக்க உடமையாளர்களைக் கொண்டதாகவோ இருப்பது சாத்திமில்லை. எல்லா இனக்குழுக்களிலும் கூட சிறுபான்மையினராக உடமைவர்க்க சக்திகளும், பெரும்பான்மையினராக உழைக்கும் வர்க்க சக்திகளும் இருப்பதே வெளிப்படையாக உள்ளது.
ஒரு இனக்குழுவிற்கு ஒரு மாநிலம் என்று ஏற்படுத்துவதன் மூலம் வரலாற்று ரீதியாகப் பின்தங்கியதாக இருந்த அந்த இனக்குழுவை அப்படியே முன்னேற்றி விடலாம் என்ற பிரமை தோன்ற வாய்ப்பளிப்பது சரியானதாக இராது. மேலும் உழைக்கும் வர்க்க சக்தியான யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி இத்தனை வலுவாக உள்ள நிலையில் அதன் பின்னால் அந்த இனக்குழுக்களின் உழைக்கும் வர்க்க அணிகளை அணதிரட்டி வைத்துக் கொள்வதே அக்கட்சியின் மிக முக்கியப் பணியாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் தங்களது பின்தங்கிய நிலை குறித்து காலங்காலமாக அந்த இனத்தைச் சேர்ந்த மக்களிடையே வளர்த்துவிடப் பட்டிருக்கும் ஆதங்கத்திற்கு வர்க்க அடிப்படையிலேயே அனைத்தையும் பார்க்கிறோம் என்ற போர்வையில் ஒரு முக்கியத்துவமும் அளிக்காமலும் இருந்துவிடக் கூடாது. அதற்குத் தற்போது அளித்துள்ளது போல் முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில் தனி மாநிலம் அமைவதே அவர்களது வளர்ச்சிக்கு முழுமுதல் பின்னணியாக அமைந்துவிடும் என்று அவர்களைக் கருத வைப்பதும் தவறாகும்.
எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முதலாளித்துவத்தை மையமாகக் கொண்ட சுரண்டல் உற்பத்தி முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஏனெனில் இவ்வாறு மாநிலம் ஏற்படுத்திக் கொடுத்து வளர்ச்சிக்கு உதவுகிறோம் என்ற விதத்தில் கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறைகளும் போக்குகளும் அந்த இனங்களைச் சேர்ந்த உடமை வர்க்கத்தினரின் வளர்ச்சிக்கே பெரும்பாலும் உதவ வல்லவை.
உழைக்கும் வர்க்க அணிகள் அணிதிரட்டப்பட வேண்டும்
எனவே அம்மக்களின் ஆதங்கத்திற்கு வடிகால் அமைக்கும் விதத்தில் ஓரிரு மாநிலங்களாக அவற்றின் நிலப்பரப்பு, மக்கள்தொகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரிக்க வேண்டும். அதே வேளையில் அந்த இனத்தைச் சேர்ந்த உழைக்கும் வர்க்க அணிகளை வர்க்க ரீதியாக அணிதிரட்டி அதே இனத்தைச் சேர்ந்த உடமை வர்க்கத்தினரே அவர்கள் வளரும் சூழ்நிலையில் உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குக் காரணமாக இருப்பர் என்பதை அவர்களுக்கு உணர்த்தவும் தவறக் கூடாது.
ஆனால் மாதேசி போன்ற பகுதிகளை நான்கு கூறுகளாகப் பிரிக்க வேண்டும் என்ற நேபாளி காங்கிரஸ், யு.எம்.எல். கட்சிகளின் வற்புறுத்தல் நாம் மேலே கூறிய விதத்தில் முழுமையாக இன ரீதியாக அவர்களை கட்டம் கட்டி விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் முன்வைக்கப் படுவதல்ல.
நேபாளி காங்கிரஸ் மற்றும் யு.எம்.எல். ஆகிய கட்சிகள் அவ்வாறு வலியுறுத்துவது கெட்ட உள்நோக்கம் கொண்டது. தங்களது அடையாளத்தை அழிக்கும் நோக்கைக் கொண்டது என்ற எண்ணத்தை மாதேசி மற்றும் மலைவாழ் மக்களிடையே ஏற்படுத்தி கிளர்ச்சிப் பாதைக்கு அவர்களைக் கொண்டு சென்று அந்தப் பின்னணியில் அரசியல் சட்டம் எழுதும் பணியை முடிக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றவியலாத சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற சீர்குலைவு வாதத்தை நோக்கமாகக் கொண்டது.
அதே சமயத்தில் மாதேசி பகுதி முழுவதும் ஒரே மாநிலமாக ஆக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைக்கும் மாதேசி அமைப்புகளையும் அதுபோன்ற கோரிக்கையை முன்வைக்கும் மலைவாழ் மக்களின் அமைப்புகளையும் இக்கோரிக்கைகளை முன்வைப்பதற்கு வழிநடத்துவது அவ்வினங்களைச் சேர்ந்த உழைக்கும் வர்க்க அணிகளாக இருக்க முடியாது. அது அவ்வின மக்களின் சிறிதாகவோ பெரிதாகவோ வளர்ச்சியடைந்துள்ள உடமை வர்க்க சக்திகளாகத் தான் இருக்க முடியும்.
காலங்காலமாக ஆட்சியதிகாரத்தை மன்னராட்சிக்குப் பின்பலமாக இருந்து அனுபவித்துவந்த ஆதிக்க வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மாதேசி மற்றும் மலைவாழ் உழைக்கும் வர்க்க அணிகளின் மனங்களில் ஓரளவு தேங்கியிருக்கும் ஆதங்கத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வி­யம் பார்க்கப்பட வேண்டுமே தவிர இத்தகைய மாநில அமைப்பு அவர்களது பிரச்னைகளைத் தீர்க்கும் என்று கருதக் கூடாது.
 மாநில அந்தஸ்தைப் பெற்றபின் அதனைப் பயன்படுத்தி உடமை வர்க்க அணிகள் வளர்ந்து தங்களது சக்தியை ஒருங்குதிரட்டி அது சமூகமாற்றப் போக்கிற்கு எதிரானதாக ஆவதற்கு இடங்கொடுத்துவிடவும் கூடாது.
இறுதியாக தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறோம் என்ற பெயரில் தொழிலாளரின் வேலை நிறுத்த உரிமை போன்ற அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்துவது அது எந்தப் பின்னணியில் செய்யப்பட்டாலும் தவறானதேயாகும். முதலாளித்துவம் தன்னைத் தனக்குச் சாதகமாக உள்ள அரசியல் கட்சிகளோடு ஒருங்கிணைத்துக் கொண்டு அதன் பலத்தைப் பெருக்கிக் கொள்வதிலேயே அந்த நடவடிக்கை சென்று முடியும்.
ஒரு மகத்தான மக்கள் எழுச்சியை நடத்தி செறிந்த அனுபவங்களைக் கொண்டுள்ள யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியின் தலைமைக்கு இந்த விசயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற அடிப்படையில் இதனை நாம் முன்வைக்கவில்லை. மாறாக சமூகமாற்ற சிந்தனைப் பாதையில் முன்னணியில் இருக்கும் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) அமைப்பிற்கு அதே நோக்குடன் இந்திய மண்ணில் செயல்படும் ஒரு உழைக்கும் வர்க்க இதழ் என்ற ரீதியில் ஒரு சகோதர அமைப்பின் உணர்வுடனும் உள்ளகிடக்கையுடனுமே இந்தக் கருத்துக்களை நமது இதழ் முன்வைக்கிறது.
யு.சி.பி.என்(எம்) ன் இந்த மாறுபட்ட முயற்சி பல முட்டுக் கட்டைகளை எதிர்கொண்டு நிற்கும் நிலையில் இம்முயற்சி எதையுமே சாதிக்காமல் அப்பட்டமான தோல்வியில் முடிந்துள்ளது என்ற எண்ணப்போக்கு விமர்சனப் பூர்வமாக இவ்வளர்ச்சிப் போக்குகளைப் பார்க்காத உழைக்கும் வர்க்க அணிகளிடையே தானாகவும், சில வட்டாரங்களால் திட்டமிட்டும் உருவாக்கப்படுகிறது. அது குறித்துச் சிறிது பார்ப்பது இங்கு அவசியமாகிறது.
இது மற்றும் இதையொத்த மனநிலை இந்தியாவில் இரண்டு தரப்பினரிடமிருந்து கூடுதலாக வருகிறது. அவற்றில் ஒன்று இந்தியாவில் செயல்படும் அதிதீவிரக் கம்யூனிஸ்ட் குழுக்கள் என்று அறியப்படும் மாவோயிஸ்ட் குழுக்கள் ஆகும். அவற்றிற்கு ஆரம்பம் முதற்கொண்டே நேபாள மாவோயிஸ்ட்களின் இந்த நாடாளுமன்ற அரசியல் பரிசோதனையில் உடன்பாடு இல்லை. ஏனெனில் அவர்கள் கடைப்பிடித்து வரும் அரசியல் யுக்தியிலிருந்து அடிப்படையில் விலகி இந்தப் பரிசோதனையை நேபாள மாவோயிஸ்ட்கள் மேற்கொண்டனர்.
அதனால் இம்முயற்சி எப்போது பிரச்னைகளை எதிர்கொள்ளும் அதனை வைத்துத் தங்களது பாதையே சரியானது என்பதைத் தங்கள் அணிகளிடையே பறைசாற்றிக் கொள்ளலாம் என்று அவர்கள் காத்திருந்தனர்.
மற்றொரு புறத்தில் இந்தியாவில் செயல்படும் பிற நாடாளுமன்றவாதக் கம்யூனிஸ்ட் கட்சிகளோ இறுதியாக நேபாள் மாவோயிஸ்ட்கள் நேபாளில் அரங்கேற்ற விரும்பிய வித்தியாசமான முயற்சி அது தற்போது சந்தித்துக் கொண்டுள்ள இடர்ப்பாடுகளின் காரணமாக பின்னடைவைச் சந்தித்து ஒரு வகையில் தாங்கள் இந்தியாவில் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் அப்பட்டமான நாடாளுமன்றவாதப் பாதைக்கு அவர்கள் திரும்பியுள்ளது போன்ற சூழ்நிலையினை ஏற்படுத்தியுள்ளது; அதன்மூலம் தாங்கள் கடைப்பிடிப்பது தான் இக்காலகட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நடைமுறையாக இருக்க முடியும் என்று எண்ணி மனப்பால் குடித்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கள் இந்த மாறுபட்ட முடிவினை எடுத்து ஜனநாயகத்திற்கான இயக்கத்திலும் தேர்தலிலும் பங்கேற்றுச் சில காலம் ஆட்சியதிகாரத்திலும் அமர்ந்து செயல்பட்டது நேபாள அரசியலிலும் சமூக இயக்கத்திலும் மாறுதல் எதையாவது கொண்டு வந்துள்ளதா அல்லது இந்த அமைப்புகள் சித்தரிக்கும் விதத்தில் தோல்வியடைந்துள்ளதா என்று பகுப்பாய்வு செய்வது நமக்கு அவசியமாகியுள்ளது.
பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவது
உண்மையில் இந்த நிலைபாடு பல ஆக்கப்பூர்வ விளைவுகளை நேபாள அரசியலில் ஏற்படுத்தியே உள்ளது. முதற்கண் மன்னராட்சி முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப் பட்டுள்ளது. அடுத்ததாகபாராளுமன்ற வாதத்திற்கு இரையாகாமல் பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவது என்ற கண்ணோட்டம் நிலைநாட்டப் பட்டுள்ளது.
பிரச்சந்தா பிரதமராகப் பதவியேற்றது அதன்பின் பதவி விலகியது, பட்டராய் அரசியல் சட்டம் இயற்றும் முயற்சி தோல்வியடைந்த பின் ஆளும் வர்க்க ஆதரவுக் கட்சிகளிடமிருந்து எப்படியாவதொரு ஆதரவினைப் பெற்றுப் பதவியில் நீடிப்பது என்ற நிலையினை எடுக்காது தேர்தல் அறிவிப்பினைச் செய்திருப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தக் கண்ணோட்டம் சரியாகக் கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறது.
வர்க்க ரீதியான அணிச் சேர்க்கை
ஆளும் வர்க்க ஆதரவுக் கட்சிகளான நேபாளி காங்கிரஸ், யு.எம்.எல். கட்சிகளை அம்பலப்படுத்த அடுத்தடுத்த மக்கள் இயக்கங்கள் அவசியம். என்பதை உணர்ந்து அக்கட்சிகளுக்கு எதிராக இயக்கங்களை எடுத்ததன் மூலம் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி அது ஆட்சியிலிருந்து சாதித்ததைக் காட்டிலும் கூடுதலானவற்றை அரசியல் ரீதியாகச் சாதித்தது. அக்கட்சிகள் இன்று முழுமையாக அம்பலப்பட்டு நிற்கின்றன.
நேபாளத்தில் வர்க்க அணிவகுப்புகளில் குறிப்படத்தக்க மாற்றமும் இந்தப் பின்னணியில் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கான இயக்கத்தில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)களின் பங்கேற்பு தொடங்கியவுடனேயே இந்த மாற்றமும் ஏற்படத் தொடங்கிவிட்டது. கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்டு வந்த அப்பட்டமான நாடாளுமன்றவாத கட்சியான யு.எம்.எல். கட்சி அணிகளிடையே இது முதலில் தோன்றியது.
ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்
வழக்கமான முதலாளித்துவ அதாவது இன்றுள்ள நிலையில் சீரழிந்துள்ள முதலாளித்துவ ஜனநாயக நடைமுறைகளிலிருந்து மாறுபட்ட ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கள் பரிந்துரைத்ததில் இருந்து யு.எம்.எல் கட்சி அதனுடைய நாடாளுமன்றவாத அணுகுமுறையின் காரணமாக ஆளும்வர்க்கக் கட்சிகளுடன் அதனுடைய நெருக்கத்தை மென்மேலும் அதிகப்படுத்திக் கொண்டது.
அது முன்வைத்த கோரிக்கைகளுக்கும் நேபாளி காங்கிரஸ் போன்ற கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் இருப்பது போல் காட்டப்பட்ட வேறுபாடுகள் சிறிது சிறிதாகக் குறைந்து தற்போது எந்த வேறுபாடும் இக்கட்சிளுக்கிடையில் இல்லை என்பது முழுமையாக நிலைநாட்டப் பட்டுள்ளது. இது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்ற எண்ணத்தில் அக்கட்சியின் அரவணைப்பிற்குள் இருந்த பலரது மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தபடியாக யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி முன்வைத்த பெடரல் தன்மை வாய்ந்த அரசியல் அமைப்புச் சட்டமும் இந்தியாவிலிருந்து அங்கு சென்று குடியேறியவர்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் பார்க்காது அவர்களும் நேபாள குடிமக்களாகக் கருதப்படுவர் என்று அறிவித்ததும் மக்களிடையே உலகின் முதலாளித்துவ அரசுகள் அனைத்தும் தங்களது வாழ்நாளை நீட்டிப்பதற்காகப் பராமரிக்க விரும்பும் பிரிவினை வாதத்தைக் குறைந்தபட்சமாக்கி பலதரப்பட்ட மக்களின் ஒற்றுமையைக் கொண்டு வருவதைச் சாத்தியமாக்கியுள்ளது.
சிவில் நிர்வாகத்தின் மேலாண்மையை வலியுறுத்திய யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி நிலை எடுத்ததும் அதனை உறுதியாகக் கடைப்பிடித்ததன் விளைவாகப் பிரச்சந்தா பதவி விலக நேர்ந்ததும் நேபாள ஜனநாயக இயக்கத்தின் வரலாற்றில் இன்னொரு முத்தாய்ப்பாக அமைந்தது. இந்த நடவடிக்கைகளினால் நேபாள நகர்ப்புறப் பகுதிகளின் பாட்டாளி வர்க்கத்தையும் அத்துடன் ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைப்பதில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி பெருவெற்றி கண்டது.
இந்தக் காலகட்டம் முழுவதும் நேபாளி காங்கிரஸ் மற்றும் யு.எம்.எல். அமைப்புகளின் முழக்கமே யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியின் இளைஞர் அமைப்பான இளம் கம்யூனிஸ்ட் லீக்கினைக் கலைக்க வேண்டும்; ஆயுதப் போராட்டம் இருந்த காலத்தில் கைப்பற்றப்பட்ட நிலங்களையும் சொத்துக்களையும் மீண்டும் அதன் பழைய உடைமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பனவாகவே இருந்தன.
ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அதன் திட்டங்களையும் கொள்கைகளையும் அமுலாக்குவதற்கு அரசு நிர்வாகத்தை மட்டும் நம்பியிருக்க முடியாது. மற்ற நாடுகளில் நிலவும் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் சட்டங்களில் இருந்து எத்தனை வேறுபட்டதாக இருந்தாலும் நேபாளத்தில் பரிந்துரைக்கப்பட்ட இடைக்கால அரசியல் அமைப்பு சட்டத்தின் விளைவாக உருவாக்கப்படும் நிர்வாகமும் கூட அடிப்படையில் அதிகாரவர்க்கத் தன்மை பொருந்தியதாகவே இருக்கும்.
எனவே அதன் திட்டங்களை அமுலாக்குவதில் நிர்வாகத்தை வெளியிலிருந்து நிர்ப்பந்திப்பதற்குக் கட்டாயமாகக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன ஸ்தாபனங்கள் பெருமளவு செயல்பட வேண்டும். மேலும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைக் கொள்கையே உற்பத்திக் கருவிகளை சமூகமயமாக்குவது தான். யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கள் கைப்பற்றி வைத்திருந்த பெருநில உடமையாளர்களின் நிலங்கள் ஏறக்குறைய கூட்டுறவுப் பண்ணைகளாகவே யு.சி.பி.என்(எம்). அமைப்பினால் ஆக்கப்பட்டன. அவை விவசாயிகளின் தனிச் சொத்துக்களாக ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை.
களங்கப்பட்ட கம்யூனிஸ அடையாளம்
அப்படியிருந்தும் நேபாளி காங்கிரஸூடன் சேர்ந்து கொண்டு யு.எம்.எல். கட்சி கைப்பற்றப்பட்ட சொத்துக்களை மீண்டும் அதன் பழைய உடைமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது கம்யூனிஸ்ட் என்ற அதன் அடையாளத்தையே களங்கப்படுத்தியது.
முதலில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சியின் இந்தப் பெரு வெற்றியை எதிர்பாராத நேபாளி ஆளும் வர்க்கம் அவ்வெற்றியை அக்கட்சி சாதித்தவுடன் நிலைகுலைந்து போனது. எனவே அவசர அவசரமாகத் தனது அணிகளை ஒருங்குதிரட்டி இந்திய அரசின் துணையோடு யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது. தனது முழு சக்தியையும் தற்போது அது நேபாளி காங்கிரஸ், யு.எம்.எல். அமைப்புகளுக்கு ஆதரவாகத் திருப்பியுள்ளது. இவ்வாறு வர்க்க அணிச் சேர்க்கைகள் யு.சி.பி.என்(எம்) ன் தற்போதைய மாறுபட்ட செயல்பாட்டின் மூலம் ஏற்பட்டுள்ளன.
இறுதியாக யு.சி.பி.என்(எம்). பிற கட்சிகளுடன் தேசிய அரசு அமைவதற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தைக் கூட இந்த வெளிச்சத்தில் தான் பார்க்க வேண்டும். அதாவது பாபுராம் பட்டராய் தலைமையில் ஆட்சி அமையும்; அது அரசியல் அமைப்புச் சட்டத்தை நிறைவேற்றும் பணியை முடிந்த பின் பதவி விலகிவிடும்; அதன் பின்னர் நேபாளி காங்கிரஸின் தலைமையில் ஆட்சி அமையும்; அந்த ஆட்சி அடுத்துவரும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலை நடத்தும்; அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் ஆட்சி அமையும் என்ற வகையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையும் பார்க்க வேண்டும். ஏனெனில் ஒரு ஜனநாயக அமைப்பில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் தார்மீக முறைப்படி அதிக இடங்கள் பெற்றுள்ள கட்சியின் தலைமையிலேயே அரசு நடக்க வேண்டும். தேர்தலும் அந்தச் சூழ்நிலையிலேயே நடத்தப்பட வேண்டும்.
சிறந்த உபாயம்
இருந்தாலும் கூட மூன்றாவது இடத்தில் உள்ள நேபாளி காங்கிரஸின் தலைமையிலான ஆட்சிக்கு யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி ஒப்புக் கொண்டது பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் அதன் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுப்பதாக இருந்தாலும் ஒரு மிகச்சிறந்த உபாயமே அது.
நேபாளி காங்கிரஸ் கட்சியின் பதவி மோகம் எந்த அளவிற்கு உள்ளதென்பதை அது அம்பலப்படுத்தி இன்னும் அக்கட்சியை மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்ததாக ஆக்கும். ஏனெனில் இப்போது ஆளும்வர்க்க ஆதரவுக் கட்சிகளின் பட்டியிலில் நேபாளி காங்கிரஸின் போட்டியாளராக கம்யூனிஸ்ட் அடையாளங்களை ஏறக்குறைய முழுமையாகத் துறந்துவிட்ட யு.எம்.எல். கட்சியும் உள்ளது. அதனால் நேபாளி காங்கிரஸ் கட்சி தானே ஆளும் வர்க்கத்தின் நம்பகமான அமைப்பு என்பதை நிலைநாட்ட எந்த அளவிற்குச் செல்லவும் தயாராக இருக்கும்; எனவே பதவி மோகம் கொண்ட அமைப்பு என்று எந்தக் குற்றச்சாட்டு அதன் மேல் விழுந்தாலும் அது அதனைப் பொருட்படுத்தாது இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவே செய்யும். இந்த அடிப்படைகளை மையமாக வைத்து யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) இந்த ஒப்பந்தத்தை அதாவது நேபாளிக் காங்கிரஸை அம்பலப்படுத்தப் பயன்படவல்ல ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது.
மேலும் இந்தத் திட்டத்தை வைக்கும் போது மட்டுமே ஒரு சம்பிரதாய ரீதியிலான ஒற்றுமையைப் பரந்த அளவில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி நேபாள அரசியலில் கொண்டுவர முடியும். இந்த உபாயத்தைக் கடைப்பிடித்ததன் மூலம் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி பதவிப் பித்துப் பிடித்த கட்சியல்ல என்பதை ஒருபுறமும் நேபாளி காங்கிரஸின் பதவி ஆசையை மறுபுறமும் மக்களிடையே நிலைநாட்டவும் அம்பலப்படுத்தவும் கூட முடியும்.
இத்தனை நெளிவு சுளிவாக யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி நடந்து கொண்ட பின்னரும் கூட ஆளும் வர்க்க அஜெண்டாவை முன்னிலைப் படுத்துவதில் நேபாளி காங்கிரஸூம் யு.எம்.எல். கட்சியும் பின்தங்கிவிடவில்லை. அதாவது முதலாளித்துவத்தின் இன்றைய காலகட்டத்தில் உலகின் அனைத்து முதலாளித்துவ ஜனநாயகம் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் நாடுகளும் பெடரலிசத்தைக் கடைப்பிடிப்பதில் பெரும் தயக்கம் காட்டவே செய்கின்றன. ஏனெனில் பெரு மூலதனத்தின் நலனைக் கருத்திற் கொண்டும் அது தங்குதடையின்றி அனைத்துப் பக்கமும் பரவும் வாய்ப்பை உத்திரவாதப்படுத்தவும்  மையப்படுத்தப்பட்ட யுனிட்டரி அமைப்பையே அவை கொண்டுவர விரும்புகின்றன.
அந்தப் போக்கை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி மிக வலுவுடன் விளங்கும் ஒரு நாட்டில் எதிர்ப்பதும், எதிர்ப்பதன் மூலம் அவர்கள் ஜனநாயக விரோதிகள் என்பதை அம்பலப்படுத்துவதும் அத்தியாவசியமானதாகும். அதற்காகத் தான் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி மீண்டும் மீண்டும் பெடரலிசத்தை வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் பெடரலிசத்தை வரவிடாமல் செய்வதற்காக யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி தவிர நேபாளத்தில் செயல்பட்ட பிற கட்சிகள் அனைத்தும் பெடரலிசத்தையே ஒரு விஞ்ஞானப்பூர்வமற்ற விதத்தில் வலியுறுத்தி அதன்மூலம் அதனைப் பயனற்றதாக்க முனைந்தன.
அதனால் தான் மாவோயிஸ்ட்கள் பரிந்துரைத்த விதத்தில் மாதேசி பகுதியை 2 மாநிலங்களாக பிரிப்பதற்குப் பதிலாக 4 மாநிலங்களாகப் பிரிக்கவும் பிற மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளை இன்னும் கூடுதல் பிரிவுகளாகக் கூறுபோடுவதற்கும் வழிவகுக்கும் விதத்தில் 14 மாநிலங்கள் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டுவந்தன.
அவர்களுக்கு நன்றாகத் தெரியும் இது மாதேசி பகுதியிலும் மலைவாழ் மக்கள் பகுதியிலும் பெருத்த எதிர்ப்பை உருவாக்கும் என்று. அவ்வாறு எதிர்ப்புக் கிளம்பியவுடன் அதனைப் பயன்படுத்தி அரசியல் சட்டத்தை நிறைவேற்றவியலாததாக அக்கட்சிகள் ஆக்கின.
அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான கடைசி நாளான மே 27ம் தேதி பாபுராம் பட்டராய் ஒரு கையில் அரசியல் சட்டத்தோடும் மற்றொரு கையில் தனது ராஜினாமா கடிதத்தோடும் குடியரசுத் தலைவரைச் சந்திக்கச் சென்றார். அதற்கு முன்பு அவர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் சென்ற போது அங்கு இக்கட்சிகளைச் சேர்ந்த யாரும் இருக்கவில்லை. எனவே அரசியல் சட்டத்தை நிறைவேற்றவும் இயலவில்லை. அரசியல் நிர்ணய சபைக்கான காலக் கெடுவினை நீடிக்கும் விதத்தில் ஒருங்கிணைந்த ஒரு முடிவிற்கும் அவரால் வரமுடியவில்லை. அச்சூழ்நிலை அக்கட்சிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அந்நிலையில் பட்டராய் பதவி விலகுவார், அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அக்கட்சிகள் எண்ணின. ஆனால் அவர் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார் என்பதை அவை எதிர்பார்க்கவில்லை.
அந்த நிலையில் தான் உச்சநீதிமன்றம் வலியுறுத்திய விதத்தில் தனது பதவி விலகலைச் சமர்ப்பித்துவிட்டு அதற்கு முன்பே அரசியல் நிர்ணய சபைக்கான புதிய தேர்தல் நடைபெறும் என்பதையும் அவர் அறிவித்தார். இது கோட்பாடு ரீதியாகவும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் எந்த வகையிலும் குறை கண்டுபிடிக்க முடியாத முடிவாகும்.
சுயநல நோக்கமும் பதவி ஆசையும் இல்லாதவர்களுக்குத்  தங்கள் வழியையும் இலக்கையும் சரியாகத் தீர்மானிப்பதில் சிக்கலும் சிரமமும் இருப்பதில்லை. ஆனால் இவ்விரண்டு மோசமான குணங்களும் மண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு வழியையும் இலக்கையும் தீர்மானிப்பதில் மிகப்பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
அதாவது அவர்களால் எங்கேயும் எதிலும் எப்போதும் முட்டுக்கட்டை போட மட்டுமே முடிகிறது. தற்போது அந்த வேலையையே நேபாளி காங்கிரஸிம் யு.எம்.எல். கட்சியும் நேபாளத்தில் செய்து கொண்டுள்ளன. தங்களை அசிங்கத்திற்கு மேல் அசிங்கப்படுத்திக் கொள்ளும் விதத்தில் ஒரு பொய் மாற்றி மற்றொரு பொய்யைக் கூறிக் கொண்டுள்ளன.
தேர்தலைச் சந்திப்பதில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொடை நடுக்கம் ஒன்றன் பின் ஒன்றாக யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) கட்சி மேல் பொய்ப் பழி சுமத்துவதில் அவர்களைக் கொண்டு சென்று நிறுத்தியுள்ளது. இவை அனைத்தும் அதிகாரத்தில் அமரவும் பதவி சுகத்தை நுகரவும் எத்தனை ஆர்வமுடையவர்களாக அவர்கள் ஆகியுள்ளனர் என்பதை அசலும் நகலும் மக்கள் மத்தியில் அம்பலப் படுத்திக் கொண்டுள்ளது. நேபாள நகர்ப்பகுதி மக்களிடையே இக்கட்சிகளை இவ்வாறு அம்பலப்படுத்தியே யு.சி.பி.என்(எம்). தன்னைப் படிப்படியாக வளர்த்துக் கொள்ள முடியும். இந்த நிலைபாடுகளின் மூலம் ஒருபுறம் அக்கட்சிகளை அம்பலப்படுத்தும் அதே வேளையில் மறுபுறம் மக்கள் இயக்கங்களை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்னைகளையும் மையமாக வைத்துத் தட்டியெழுப்பவும் வேண்டும். இத்தகைய அணுகுமுறைகளின் மூலம் படிப்படியாக நேபாளத்தின் நகர்ப்புறப் பகுதி மக்களை அரசியல் ரீதியாக உணர்வு மயப்படுத்தி வர்க்கப் பார்வையை அவர்களிடம் கொண்டு வர முயல வேண்டும்.
தேர்தல்கள் குறித்த இயக்கவியல் பார்வை
இத்தகைய கருத்துக்களை நாம் முன்வைக்கும் சூழ்நிலையில் ஒரு கருத்து மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரம் போல் கடைப் பிடிப்பவர்களால் நிச்சயம் முன் வைக்கப்படும். அதாவது மார்க்சிய ஆசான்களால் பன்றித் தொழுவம் என்று வர்ணிக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கும், திருடர் பாதை என்று வர்ணிக்கப்பட்ட தேர்தல்களுக்கும் இத்தனை முக்கியத்துவம் தருவதா என்ற கேள்வி நிச்சயம் எழுப்பப்படும்.
மார்க்சியம் எங்கேயும் எப்போதும் அது கடைப்பிடிக்கப்படும் சூழ்நிலைகளைக் கணக்கிற் கொள்ளாது வறட்டுச் சூத்திரமாகக் கடைப்பிடிக்கப்படக் கூடாது என்பதே அதற்கான மிகவும் எளிதானதும் தெளிவானதுமான பதிலாகும். இந்தச் சூழ்நிலையில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் சமூகமாற்ற எழுச்சியை ஏற்படுத்த வேண்டுமென்றால் தேர்தலை ஒரு ஆயுதமாகக் கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும். இந்தச் சூழ்நிலையில் மக்கள் எழுச்சியை உருவாக்குவதற்குத் தேவையான மக்கள் ஆதரவினைத் திரட்டத் தேர்தல் பெரிய அளவிற்குப் பயன்படும்.
மேலும் தேர்தல்கள் அனைத்தையும் அவை வந்த விதம், வர்க்க அரசியல் அதில் ஆற்ற முடிந்த பங்கு ஆகிய எதையும் கணக்கிற் கொள்ளாமல் ஒரே வறட்டுவாதக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதும் சரியானதாக இராது. நேபாளத்தில் அரசியல் நிர்ணய சபைக்காக நடந்த தேர்தல் ஒரு மகத்தான மக்கள் இயக்கப் பின்னணியில் வந்தது. சமூகம் ஒரு சலனமுமின்றி இருந்த சூழ்நிலையில் ஆளும் வர்க்கங்களின் அதிகார மற்றும் பண பலங்கள் உருவாக்கும் ஆடம்பரத்தில் நடந்த தேர்தல் அல்ல அது. இப்போது பட்டராய் பரிந்துரைத்துள்ள தேர்தலும் மக்களை எந்த முறையிலும் அணுகத் தயாராக உள்ள யு.சி.பி.என்(எம்). கட்சியின் தயார் நிலையினைப் பறைசாற்ற வல்லதாக உள்ள தேர்தல். மேலும் முதலாளித்துவ ஜனநாயக மோகம் முடிவுக்கு வராத மனநிலையில் உள்ள நகர்ப்புற மக்களையும் போராட்டப் பாதையில் கூடுதல் நாட்டம் உள்ள கிராமப்புற மக்களையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த நேபாளத்தின் சமூக மாற்றத்திற்கான ஆதரவினைத் திரட்ட இன்றைய நிலையில் பெரிதாகப் பயன்படவல்லது இந்தத் தேர்தலேயாகும். எனவே அறுந்து போன ஒலி நாடாவைப் போல் எங்கேயும் எப்போதும் தேர்தல் என்பதே மோசமானது என்று முழங்கிக் கொண்டிருப்பது மக்களைத் திரட்டி நடத்தப்பட வேண்டிய சமூகமாற்ற எழுச்சிக்கு இப்போது மட்டுமல்ல எப்போதுமே உகந்ததாகாது.

No comments:

Post a Comment