Saturday, January 14, 2012

மக்கள் மீது தருணம் பார்த்துத் தாக்குதல் தொடுத்துள்ள தமிழக அரசு


உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த போது நகத்தில் இட்ட மை உலர்வதற்கு முன்பாகவே தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசு தாங்கொண்ணாச் சுமைகளைத் தமிழக மக்களின் மேல் சுமத்தியுள்ளது. இதுவரை கண்டும் கேட்டும் இராத அளவிற்குப் பேருந்துக் கட்டண உயர்வு மிக அதிக அளவிற்கு பால் விலை உயர்வு ஆகிய உயர்வுகளை அறிவித்துள்ளது. வெகு விரைவில் மின் கட்டண உயர்வும் வரும் என்று கூறியுள்ளது. 

காத்திருந்து ஏற்றிய சுமை

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியான மாணவர்களுக்கு லேப் டாப் வழங்குவது, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாகவே அரிசி வழங்குவது போன்றவற்றைச் செயல்படுத்தத் தொடங்கி ஒரு மக்கள் ஆதரவு அரசாங்கமாகத் தன்னைக் காட்டிக் கொண்ட அ.இ.அ.தி.மு.க. அரசு அந்தப் பின்னணியில் உள்ளாட்சித் தேர்தல்களையும் நடத்தியது. 


அதில் அது எதிர்பார்த்த வெற்றியை அடைந்ததற்குப் பின்பு அது மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை ஒன்றே ஒன்றைத்தான் தெளிவுபடுத்துகிறது. அதாவது இனி அநேகமாக மக்களை 5 ஆண்டுகள் கழித்துத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கிடையில் இப்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து அவர்களிடையே எழும் முணுமுணுப்பு அதற்குள் இல்லாமல் போய்விடும். எனவே அனைத்துச் சுமைகளையும் இப்போதே மக்கள் தலைமேல் ஏற்றி விடுவோம் என்ற அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவு படுத்துகிறது. 

இப்போதைய நிலையில் மக்களின் இதை மையமாகக் கொண்ட கோபம் கிளம்ப வாய்ப்பு இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி பெரிய மக்கள் போராட்டங்கள் எதுவும் வருவதற்கு வாய்ப்பில்லை என்று அறிந்து கொண்ட பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது போல் தெரிகிறது. 

அடையாளப் போராட்டங்களோடு முடிந்துவிட்ட எதிர்ப்பு

அவர் எதிர்பார்த்த படியே தி.மு.கவின் எதிர்ப்பு வீராவேசமான அறிக்கைகளோடு முடிந்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பிற கட்சிகளின் எதிர்ப்பு சில அடையாளப் போராட்ட அறிவிப்புகளோடு முடிவுக்கு வந்துவிட்டது. இத்துடன் இனி மக்கள் பால் வாங்கும் போதும், பேருந்தில் ஏறும் போதும் உதிர்க்கக் கூடிய வசைச் சொற்களோடு கொஞ்சம் கொஞ்சமாக இந்த நடவடிக்கை மறக்கப்பட்டு விடும்; அதன் பின் மக்கள் பழகிப் போய்விடுவர் என்ற அரசின் கணிப்பு ஓரளவு சரியானதே என்று காட்டும் விதத்திலேயே நிகழ்வுகள் போய்க் கொண்டிருக்கின்றன. 

முக்கிய எதிர்க்கட்சியும் அடுத்து ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதுமான தி.மு.க. போன்ற கட்சிகளைப் பொறுத்தவரை ஒருபுறம் இதை எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது என்ற எண்ணம் இருந்தாலும் மறுபுறம் கட்டணத்தை ஏற்றிய பழி அ.தி.மு.க. அரசோடு போய்விடும். மிகக் கூடுதலாக இந்த உயர்வுகளைக் கொண்டு வந்திருப்பதால் அடுத்து நாம் ஆட்சிக்கு வந்தாலும் வந்தவுடன் இதுபோன்ற கட்டண உயர்வுகளை உடனடியாகக் கொண்டு வருவதற்கான அவசியம் இராது என்ற அடிப்படையில் உள்ளார்ந்த ஒரு மகிழ்ச்சியும் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. 

எனவே தான் மக்களை இப்பிரச்னைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடக் கேட்டுக் கொள்ளாமல் அக்கட்சியின் தலைவர் அ.இ.அ.தி.மு.கவிற்கு வாக்களித்ததற்கான பலன்களை மக்கள் அனுபவிக்கத் தொடங்கி விட்டனர் என்று கேலித் தொனியில் கூறியுள்ளார். 

மேலும் தி.மு.க. போன்ற கட்சிகள் எப்போது எந்தப் போராட்டம் எடுத்தாலும் அவற்றின் நோக்கம் அப்போராட்டத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளைச் சாதிக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் தங்களது வலிமையைப் பறைசாற்ற வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் தருவதாகவே இருக்கும். ஏறக்குறைய அனைத்து ஆளும் வர்க்க ஆதரவுக் கட்சிகளின் நிலைபாடும் இதைப்போல் தான் இருக்கும். 

தி.மு.கவைத் தவிர தமிழகத்தில் செயல்படும் மற்ற கட்சிகளின் அணுகுமுறையும் இந்த விலை உயர்வைப் பின்வாங்கச் செய்ய வேண்டும் என்ற திசைவழியை நோக்கியதாகவோ அல்லது மக்களை இத்தனை பாதிப்புகளுக்கு மனம் கூசாமல் ஆளாக்கும் ஆளும் கட்சிக்கு ஒரு படிப்பினை ஊட்டக் கூடிய விதத்தில் மக்களைத் திரட்ட வேண்டும் என்ற அடிப்படையிலோ இல்லை. 

வழக்கம் போல் தங்கள் கட்சியின் தொண்டர்களை அணிதிரட்டி இந்த விலை உயர்வுகளைச் சுமத்தியதற்கு எதிராக ஒரு அடையாளப் போராட்டத்தை அதற்குரிய விளம்பரத்தோடு நடத்தியதுடன் அவர்கள் கடமை முடிந்துவிட்ட ஒரு மனநிலையோடு இருக்கின்றனரே தவிர அதைத் தாண்டி எந்த நடவடிக்கையையும் யோசித்ததாகத் தெரியவில்லை. 

முதல்வர் குறிப்பிட்ட பேச்சிற்கும் செயலிற்கும் இடையிலான வேறுபாடு

சட்டமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட இக்கட்சிகளின் இந்தக் கண்துடைப்புக் கண்டனத்தைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழக முதல்வர் அவர்கள் நீங்கள் தான் உறுதியாக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடியவர்கள் என்றெல்லாம் என்னைப்பற்றி முதலில் கூறிவிட்டு இப்போது அதனை இக்கட்சிகள் கண்டிக்கின்றன என்று கூறியுள்ளார். 

கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று இங்கு செயல்படும் கட்சிகளில் முதற்பெரும் கட்சியாக விளங்கக் கூடிய சி.பி.ஐ(எம்). கட்சியைப் பொறுத்தவரை முதல்வர் அவர்கள் கூறியுள்ள படி அவர்களிடம் அக்கட்சியினர் கூறியுள்ளதற்கும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. 

ஏனெனில் அவர்கள் ஓரளவு சக்தியுடன் செயல்படும் போக்குவரத்துத் துறையில் வேலை செய்யும் தொழிலாளரிடம் இந்தக் கட்டண உயர்வு பற்றிப் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது அவர்கள் பத்தாண்டு காலமாக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப் படாததால் அத்துறையில் பணியாற்றும் எங்களுக்கு ஊதிய உயர்வு போன்ற எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை; இப்போது கொண்டுவரப் பட்டுள்ள இந்தக் கட்டண உயர்வு இனிமேல் எங்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம் என்றே கூறியுள்ளனர். 

எனவே அத்தொழிலாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதத்தில் ஓரளவு கட்டண உயர்வு கொண்டுவரப்பட்டால் பரவாயில்லை என்ற மனநிலையுடன் சி.ஐ.டி.யு. சார்ந்த போக்குவரத்துத் தொழிலாளர் சங்கமும், சி.பி.ஐ(எம்). கட்சியும் இருந்திருப்பதற்கு வாய்ப்புண்டு; அந்தப் பின்னணியில் அது போன்ற கருத்தைத் தமிழக முதல்வரிடம் முன்வைத்திருப்பதற்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

பத்தாண்டு காலமாகப் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தவே படவில்லை என்ற கூற்று உண்மையானது அல்ல. அதாவது பேருந்துக் கட்டண உயர்வென்று அறிவித்துக் கட்டண உயர்வு கொண்டுவரப்படவில்லையே தவிர வேறு அனைத்து வகைகளிலும் கட்டண உயர்வுகள் கொண்டுவரப்பட்டேயுள்ளன. அதாவது மாறுபட்ட சேவைகளை அறிமுகம் செய்துள்ளதாகக் கூறி அதற்கான கட்டணம் என்ற பெயரில் பெரிய அளவிற்குக் கட்டண உயர்வு தி.மு.கழக ஆட்சியிலும் கொண்டுவரவே பட்டது. 
அதாவது சேவைகள் மிகவும் குறைவாக உள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கு, இருக்கும் பேருந்துகளிலேயே மிகவும் மோசமான பேருந்துகளை இயக்கி அதற்கு மட்டும் பத்தாண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்கும் நடைமுறைப் பின்பற்றப்பட்டது. 

அதுதவிர மற்ற பேருந்துகளுக்கான கட்டணங்கள் குறிப்பாக நகரப் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கவே பட்டன. அதனால் சில இடங்களுக்கு நகரப் பேருந்துக் கட்டணங்கள் வெளியூர்ப் பேருந்துக் கட்டணங்களைக் காட்டிலும் கூடுதலாக ஆன வினோத நிலையும் ஏற்பட்டது. குறைந்த கட்டணத்தில் இயங்கிய அப்படிப்பட்ட பேருந்துகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதைத்தவிர அனைத்துப் பேருந்துகளும் தாழ்தளப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், குறைந்த அளவு நிறுத்தங்கள் உள்ள பேருந்துகள் என்று பெயரிடப்பட்டு அவற்றிற்கான கட்டணங்கள் பெருமளவு அதிகரிக்கப்பட்டன. இது யாருக்கும் தெரியாததல்ல. 

இதைக் கண்டித்து இந்தவகைச் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்ட போதே அறிக்கைகள் பல விட்டவர் தற்போதைய தமிழக முதல்வர் ஆவார். அதுதவிர சட்டமன்றத் தேர்தலின் போதும் முந்தைய தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை அவரால் கடுமையாக விமர்சிக்கவும் பட்டது. 

ஆனால் இப்போது தான் செய்துள்ள மக்கள் விரோத நடவடிக்கையின் தாக்கத்தையும் அழுத்தத்தையும் குறைத்துக் காட்டுவதற்காக முந்தைய ஆளும் கட்சியினால் செய்யப்பட்டதாகவே இருந்தாலும் கூட அந்த அறிவிக்கப்படாத கட்டண உயர்வுகளைத் தற்போதைய ஆளும்கட்சி மூடிமறைக்கிறது. பத்தாண்டுகளாக கட்டண உயர்வு கொண்டுவரப்படாத நிலையில் இந்தப் பொதுத்துறை நிறுவனம் தள்ளாடுகிறது; அது திவாலாகிவிடாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறது. 

அதாவது தி.மு.க. அரசு கூட்டிய தொகைக்கு மேலும் 40 சதவிகிதம் என்ற அடிப்படையில் இந்தக் கட்டண உயர்வு இப்போது கொண்டுவரப் பட்டுள்ளது. 

பொதுத்துறைக்கு லாப நோக்கம் பொருந்தாது

போக்குவரத்துச் சேவையைப் பொறுத்தவரையில் அது அரசே நடத்துவதாக உள்ள சூழ்நிலையில் அதை லாபகரமாக நடத்த வேண்டும் என்பது அதனை வழிநடத்தும் கண்ணோட்டமாக இருக்கக் கூடாது. ஒரு சேவை என்ற ரீதியில் அதற்காக அரசு தனது நிதியிலிருந்து நிதி வழங்கி அதனை நடத்தினால் தவறொன்றும் இல்லை. 

அதாவது சமூகத்தின் ஒருபகுதி மக்களுக்கு இலவசமாகவே அரிசியை ஒரு அரசு வழங்க முன்வருகிறது என்றால் அத்தகைய உயர்ந்த மக்கள் ஆதரவு மனநிலையுடன் செயல்படும் அரசு என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் அரசு இத்தனை பெரிய கட்டண உயர்வைக் கொண்டுவருவதாக உள்ளது என்பது எப்படிப்பட்ட வாதத்தாலும் சரியானதென்று நிறுவ முடியாததாகும். ஏனெனில் இந்த இலவச அரிசி என்ற பலனைப் பெறும் மக்களும் பயன்படுத்தக் கூடியதே இந்தப் போக்குவரத்துச் சேவை. ஏனெனில் இலவச அரிசி வாங்குவோர் அனைவரும் வேலை எதற்கும் செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்போர் அல்ல. 

அவர்களில் பெரும்பாலோர் அமைப்பு ரீதியாக ஒருங்குதிரட்டப்படாத தொழிலாளரே. கட்டுமானத் தொழில் போன்ற தொழில்களில் ஈடுபடும் அவர்கள் அத்தொழில்கள் பெருமளவு நடைபெறும் நகர்ப்புறங்களில் தங்களது வசிப்பிடங்களை வைத்துக்கொள்ள முடியாதவர்கள். 

ஏனெனில் நகர்ப்புறங்களில் உள்ள அளவிற்கு வாடகை கொடுத்து அவர்களால் வசிக்க முடியாது. எனவே வாடகைத் தொகை குறைவாக உள்ள கிராமப் பகுதிகளில் வசித்துக் கொண்டு நகர்ப்புறங்களுக்கு வேலைக்குச் சென்று வருபவர்களே அவர்கள். இந்தப் பேருந்துக் கட்டண உயர்வு அவர்களைப் பெருமளவு பாதிக்கக் கூடியதாகும். இதற்கு உகந்த விதத்தில் உடனடியாகக் கூடுதல் கூலியினை அவர்கள் வேலை செய்யும் இடங்களில் இருந்து அவர்களால் பெற முடியாது. அந்நிலையில் அவர்களைப் பெரும் பொருளாதார சிரமத்திற்கு ஆளாக்கக் கூடியதே இந்தக் கட்டண உயர்வு.

மத்தியதர வர்க்கத்தைப் பாதிக்கும் பால் விலை உயர்வு

பால் விலை உயர்வினைப் பொறுத்தவரை பால் வாங்கிப் பயன்படுத்துவது என்பது ஏழை, எளிய மக்களால் ஏறக்குறைய கைவிடப்பட்ட ஒன்றாகிவிட்டது. ஏழை எளியவர்கள் பால் பொருட்களைப் பயன்படுத்தியது ஒரு கடந்த காலக் காட்சி. இப்போதெல்லாம் தேவைப்பட்டால் கடையில் ஒரு காஃபியோ, டீயோ வாங்கிக் குடித்துவிட்டுச் செல்பவர்களாகவே அவர்கள் ஆகிவிட்டனர். முழுக்க முழுக்க அலுவலகம் செல்லும் நடுத்தர மக்களின் வாழ்க்கைச் செலவினமாகவே பால் ஆகிவிட்டது. 

இதன் விலை உயர்வு திட்டமிட்டுச் செலவு செய்தால் மட்டுமே இன்றுள்ள வாழ்க்கைச் செலவுகளை சந்திக்க முடியும் என்ற கட்டாயத்தில் உள்ள நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கவல்லதாகும். 

இந்த விலை மற்றும் கட்டண உயர்வுகள் எந்தப் பின்னணியில் கொண்டுவரப் பட்டிருக்கின்றன என்று பார்ப்பதும் அவசியமானதாகும். அதாவது முந்தைய தி.மு.க. அரசும் அறிவிக்காமல் பேருந்துக் கட்டண உயர்வைக் கொண்டுவந்தது. தற்போதைய அ.தி.மு.க. அரசும் அக்கட்டண உயர்வை எந்தவகையான உறுத்தலுமின்றி வெளிப்படையாக அறிவித்துக் கொண்டுவந்துள்ளது. 

முந்தைய தி.மு.க. அரசு மூன்று ரூபாயில் இருந்து 5 ரூபாய் என்ற அளவிற்கு நியாயவிலைக் கடைகளில் விற்கப்பட்ட அரிசியினை ஒரு கிலோ அரிசி 1 ரூபாய் என்ற அளவிற்குக் குறைத்தது. தற்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசோ அந்த 1 ரூபாயும் தேவையில்லை இலவசமாகவே அரிசி வழங்குகிறேன் என்று அறிவித்தது. முந்தைய தி.மு.க. அரசு வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி என்று அறிவித்து வழங்கியது. அதன் பின்னர் கேஸ் அடுப்புகள் போன்றவையும் இலவசமாக ஒரு பகுதி மக்களுக்கு வழங்கியது. 

தற்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசு அதுபோல் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை இலவசமாக மக்களுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. அவ்வாறு வழங்குவதைச் சிறிய அளவில் துவக்கியும் உள்ளது. இந்தக் கட்சிகள் இரண்டின் செயல்பாட்டிலும் ஒரு ஒருமித்த தன்மை இருப்பதை அனைவரும் பார்க்க முடிகிறது. 

இன்னொரு போக்கு

அதாவது வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என்று அறிவிக்கப்படும் மக்களுக்கு மிகக் குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ பலவற்றை வழங்குவது என்ற ஒருமித்த தன்மை இவர்களிடம் உள்ளது. மத்திய அரசின் 100 ரூபாய் வேலைத் திட்டமும் இந்த ரகத்தைச் சேர்ந்தது தான். 

இவ்வாறு ஒருமித்த விதத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களைப் பொறுத்தவரையில் பல திட்டங்களைக் கொண்டுவரும் இந்த அரசாங்கங்களிடம் இன்னொரு போக்கையும் நாம் காண முடிகிறது. 

அதாவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பல மண்டலங்களை அமைத்து அங்கு தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு இலவசமாகவும் சலுகை விலையிலும் பல அடிப்படை வசதிகளை வழங்கும் போக்கும் இவர்களிடம் உள்ளது. 
இதுதவிர பஞ்சாலை முதலாளிகளுக்குப் பல்வேறு வகைகளில் மானியங்கள் வழங்குவதும் இந்த அரசாங்கங்களால் ஒளிவுமறைவின்றிச் செய்யப்படுகிறது. ஒளிவுமறைவின்றி இத்தகைய வசதிகளை பஞ்சாலை முதலாளிகளுக்குச் செய்யும் இந்த அரசாங்கங்கள் மக்களுடைய புலனறிவுக்கு எட்டாத விதத்திலும் பல்வேறு சலுகைகளை முதலாளிகளுக்கு வழங்குகின்றன. 

எந்தத்துறை முதலாளிகள் தொழில் நடத்துவதில் சிரமம் என்று பலவற்றை அரசின் பார்வைக்குக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் வரிக்குறைப்பு, மானியம் வழங்கல் போன்ற வகைகளில் சலுகைகளைத் தங்குதடையின்றி இந்த அரசாங்கங்கள் செய்து தருகின்றன. இந்தப் போக்கு உணர்த்துவது என்ன என்பது கூர்மையாகப் பார்க்கப்பட வேண்டும்.

அதாவது இலவசங்கள் வழங்கப்படும் ஏழை எளியவர்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் கணிசமாக இருப்பவர்கள். அவர்கள் கையில் வாக்குரிமை உள்ளது. 

அதை எந்த நடவடிக்கையை மேற்கொண்டாவது தட்டிப் பறிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆட்சிக்கு வருவதில் ஆவலுடன் இருக்கக்கூடிய கட்சிகள் உள்ளன. மானியங்கள், வரிக்குறைப்பு என பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் மற்றொரு மக்கட் பகுதியினர் மிகவும் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்கள் நிதியாதாரம் பொருந்திய முதலாளிகள். 

அவர்களிடம் ஆட்சிக்கு வர ஆவலுடன் இருக்கக்கூடிய கட்சிகளுக்கு வழங்குவதற்கு ஏராளமான நிதி இருக்கிறது. 

எனவே இவ்விரு பகுதியினருக்கும் சலுகைகளை வழங்கி ஒரு பகுதியினரிடமிருந்து நன்கொடைகள் என்ற பெயரில் நிதியினை வசூலித்து அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியினருக்குச் செலவு செய்து தேவைப்பட்டால் ஒரு வாக்கிற்கு இவ்வளவு என்று பணமாகக் கூட வழங்கி தேர்தல் அரசியலை நடத்துவது இக்கட்சிகளுக்கு நல்ல பலனளிக்கும் நடவடிக்கையாக உள்ளது. 

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் இலவசங்கள் அவ்வாறு இலவசம் வழங்குபவர்கள் மீது நிரந்தரமான விசுவாசத்தை ஏற்படுத்துவதில்லை. இதையே நடைமுறை அனுபவம் நமக்குக் காட்டுகிறது.

இலவசங்கள் அரசியல் வர்த்தகத்திற்கான விளம்பரங்கள்

அவ்வாறு இலவசங்கள் வழங்குபவர் மீது ஒரு மாற்ற முடியாத விசுவாசத்தை ஏற்படுத்தக் கூடியவையாக அவை இருந்திருக்குமானால் இத்தனை பெரிய தோல்வியை தொலைக்காட்சிப் பெட்டி இலவசமாக வழங்கும் அளவிற்குச் சென்ற தி.மு.கழகத்திற்கு அவர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள். 

இருந்தாலும் ஆட்சிக்கு வர விரும்பும் கட்சிகள் அதைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் உருவாகிவிட்டது. 

அதாவது விளம்பரங்கள் உண்மையிலேயே அவை செய்யப்படும் அளவிற்கு வியாபாரத்தைப் பெருக்குகின்றனவா என்று பார்த்தால் அவ்வாறு பெருக்குகின்றன என்று கூற முடியாது. இருந்தாலும் கூட நிறுவனங்கள் அதைச் செய்யாதிருக்க முடியாது. 
ஏனெனில் வர்த்தக மேம்பாட்டிற்கு அத்தியாவசியம் என ஆகிவிட்ட ஒன்றே விளம்பரம். அதைப்போல் இலவசம் இத்தனை கொடுத்தேன் என்ற அடிப்படையில் வாக்குகள் விழும் என்று கூற முடியாவிட்டாலும் ஒருவர் செய்வதைக் காட்டிலும் மேலான ஒரு இலவசத்தை மற்றொருவர் வழங்கிக் கொண்டு போவதும் தேர்தல் அரசியலில் அவற்றைச் சாதனைகளாக முன்வைப்பதும் ஜனநாயகம் என்ற போர்வையில் இக்கட்சிகள் நடத்தும் அரசியல் வர்த்தகத்திற்கு ஒரு விளம்பரம் போல் ஆகிவிட்டது. 

எனவே தங்களது வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென்றால் அதையும் தாண்டி எதையாவது அதாவது நிச்சயமாக வாக்குகளைப் பெற்றுத் தரும் எதையாவது செய்தாக வேண்டும் என்ற நிலை தோன்றியுள்ளது. 

தேர்தல் சமயத்தில் வாக்குகளுக்குப் பணம் கொடுப்பதே அத்தகைய வெற்றியை உத்திரவாதப்படுத்தும் ஓரே வி­சயம் என்ற நிலை தோன்றிவிட்டது. வாக்கிற்குப் பணம் கொடுப்பதில் மிகவும் முனைப்பாகவும், அதிகபட்சப் பணம் கொடுப்பதாகவும் தி.மு.கழகம் விளங்கியது. அதற்குக் காரணம் அதன் தலைமை மற்றும் அதன் உறவினர்களின் குடும்பத்தினர் எளிதில் லாபம் ஈட்டக் கூடிய பல தொழில்களுக்கு அதிபதிகளாக இருந்ததும் ஆட்சி அதற்கு உதவிகரமாக இருந்ததுமாகும்.

அந்தப் பணத்தை அரசிடமிருந்து பல்வேறு சலுகைகளைப் பெறும் முதலாளித்துவ நிறுவனங்களிடமிருந்து பெற்று ஏழை எளியவர்களுக்கு வழங்கி தேர்தல் ஆதாயம் ஈட்டுவது தற்போதைய ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சிகள் என்று கருதப்படும் கட்சிகளுக்கு அத்தியாவசியம் ஆகிவிட்டது. 

முறிபடும் தார்மீக முதுகெலும்பு

இதில் இன்னொரு சாதகமும் உள்ளது; அது நீண்டகால பலன் தரும் சாதகமாகும். அதாவது இந்த இலவசங்களுக்கு இரையாகும் ஏழை எளிய மக்களே இழப்பதற்கு ஒன்றுமில்லாத தொழிலாளி வர்க்கம். 

ஆனால் இதுவரை வரலாறு கண்ட இழப்பதற்கு ஒன்றுமில்லாத தொழிலாளி வர்க்கத்திற்கு அது இழந்திராத ஒன்று இருந்தது. இன்றும் மேலை நாட்டு உழைக்கும் வர்க்கத்திடம் அது உள்ளது. அது உழைக்கும் மக்களின் நேர்மை உணர்வும், தார்மீக முதுகெலும்பும் ஆகும். 

இந்த இலவசங்கள் மற்றும் வாக்கிற்குப் பணம் வழங்கும் போக்கு அந்த நேர்மை உணர்வையும் ஏழை எளியவரின் நிமிர்ந்து நின்று அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் உரிமையையும் தட்டிப் பறிக்கும் வேலையைத் திறம்படச் செய்கின்றன. அது இழப்பதற்கு ஒன்றுமில்லாத தொழிலாளி வர்க்கம் சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதில் ஆற்றவல்ல அற்புதமான பாத்திரத்தை ஆற்றவியலாததாக அதனை ஆக்குகிறது. ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதாரண வி­சயமல்ல. 

எனவே தான் இந்த மிகப் பெரிய சாதகத்தை இவ்விரு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆளும் வர்க்கத்திற்குச் செய்து தர விரும்புகின்றன. 

மத்தியதர வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள்

இவ்வாறு முதலாளிகளுக்கு மானியமாக வழங்குவதற்கும், ஏழை எளியவருக்கு இலவசமாக வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள் வழங்குவதற்கும் நிதி அரசிற்குத் தேவை. 
அதை யாரிடமிருந்து திரட்டுவது. அது ஓரளவு வரி ஏய்ப்பு போன்றவற்றை எல்லாம் மேற்கொண்டதற்கு பின்பு முதலாளிகளும் வர்த்தகர்களும் வழங்கும் வரிப்பணத்தின் மூலம் ஒருபுறம் திரட்டப் படுகிறது. 

அவர்கள் தவிர எந்த வகையிலும் வரி ஏய்ப்பு போன்றவற்றைச் செய்ய முடியாத ஒரு மக்கட் பகுதியினர் உள்ளனர். அவர்களிடம் ஓரளவு வாங்கும் சக்தியும் உள்ளது. அதுவும் குறிப்பாக உலகமயப் பின்னணியில் அவர்களிடம் வாங்கும் சக்தி சற்றுக் கூடுதலாகவே உள்ளது. அவர்களிடமிருந்தே இந்த நிதியைத் திரட்டியாக வேண்டும். 

அந்த நிலையில் உள்ள மத்தியதர வர்க்கமே அரசின் இதுபோன்ற விலை உயர்வுகளினால் கடும் பாதிப்பிற்கு ஆளாகக் கூடியதாக உள்ளது. பேருந்துக் கட்டணம் பெருமளவிற்கும், பால் விலை உயர்வு ஏறக்குறைய முழுமையாகவும் வரப்போகும் மின்கட்டண உயர்வு ஒட்டுமொத்தமாகவும் பாதிக்க வைக்கப் போவது அந்த மக்கட் பிரிவினரைத் தான். 

அவர்களைப் பொறுத்தவரை சம்பிரதாயங்களின் கைதிகள். சட்ட மீறல் என்பது அவர்களால் எண்ணிப் பார்க்க முடியாத ஒன்று. 

எனவே அவர்கள் தலையில் கை வைத்தால் அடுத்தவருக்குத் தெரியாமல் முணங்குவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். இந்த எண்ணத்தின் அடிப்படையில் தான் அவர்களிடம் உள்ள ஓரளவு வாங்கும் சக்தியைச் சூறையாடும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. 

இயக்கம் கட்டப்பட வேண்டிய முறை

இந்த உண்மையை மக்களிடம் விளக்கி ஒருபுறம் இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்களாக உள்ள பாட்டாளி மக்களை நாங்கள் உழைத்து வாழ முடிந்தவர்கள்; நாங்கள் உழைப்பதற்குத் தேவையான வேலை வாய்ப்புகளை முடிந்தால் உருவாக்கித் தாருங்கள்; இல்லாவிட்டால் ஒன்றும் செய்யாது இருங்கள்; அதைவிடுத்து எங்களை இலவசத் திட்டங்களுக்கு ஏங்கும் இரங்கல் மனநிலை கொண்டவர்களாக நீங்கள் ஆக்குவதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறச் செய்ய வேண்டும். 

அடுத்து இதுபோன்ற சுமைகளால் மிகப் பெருமளவு கசக்கிப் பிழியப்படும் நடுத்தர வர்க்கத்தினரை வி­சயங்களை அறிந்திருந்தால் மட்டும் போதாது நம்மை வாட்டி எடுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துவோரை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்று திரண்டு நின்றால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது; அப்படித் திரண்டெழுந்து எதிர்க் குரல் எழுப்பாததனால் தான் ஒரு காலத்தில் கட்டுபடியான செலவில் கிட்டிய கல்வி உள்பட அனைத்திற்கும் கண்மண் தெரியாத விலையினை நாம் இன்று கொடுக்க வேண்டியுள்ளது என்பதை எடுத்துரைத்து இத்தாக்குதலுக்கு எதிராக அணிதிரட்ட வேண்டும். 

இந்த அடிப்படையில் எவ்வளவு தூரம் மக்களைத் திரட்டி இந்தத் தாக்குதலுக்கு எதிராக அவர்களைக் கொண்டுவந்து நிறுத்த முடிகிறதோ அவ்வளவு தூரம் தான் இதில் சிறிதளவு கட்டண அல்லது விலைக் குறைப்பையாவது கொண்டுவர முடியும். 

மேலும் இத்தகு தாக்குதல்கள் இனிமேல் கொண்டுவந்தால் நாம் அதற்கு மிக அதிக விலையாக மக்களின் கோபத்திற்கு ஆளாகி செல்வாக்கை இழக்க வேண்டியிருக்கும் என்பதை ஆளும் கட்சிகளுக்கும் உணர்த்த முடியும். அவ்வாறு உணர்த்துவதன் மூலமே அவை இதுபோன்ற தாக்குதல் நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் ஈடுபடுவதையும் கட்டுப்படுத்த முடியும். 

இதைச் செய்யாமல் கம்யூனிஸ்ட் என்று தங்களை அறிவித்துக் கொள்ளும் கட்சிகள் அடையாள பூர்வமாகத் தங்களது கட்சியின் தொண்டர்களை மட்டும் வைத்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் பாவனைத் தன்மை கொண்டவையாக ஆகுமே தவிர இப்பிரச்னையின் விளிம்பைக் கூடத் தொட்டவையாக ஆகாது. 


No comments:

Post a Comment