Friday, January 13, 2012

போராட்ட களத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்


தொழிலாளர் உரிமைக்குரல் வெளியில் வராவண்ணம் குரல்வளை நெறிபடும் சூழ்நிலையில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வளர்ந்துவரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்


நமது நாட்டின் தொழிலாளர் இயக்கங்களைப் பொறுத்தவரையில் தற்போது நிலவுவது ஒரு இருண்டகாலமே. உலகமயம் நிலவும் இன்றைய சூழலில் அந்நிய முதலீடுகளை வரவேற்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறோம் என்ற பெயரில் விஷேசப் பொருளாதார மண்டலங்கள் என்று மண்டலங்களை அரசாங்கங்கள் உருவாக்கியுள்ளன. 

அவற்றிற்குப் பல்வேறு விஷேசச் சலுகைகள் மற்றும் உரிமைகளையும் அரசு வழங்கிவருகிறது. இச்சூழலில் தொழிலாளர் இயக்கங்கள் அரசால் நேரடியாகவும் அரசியல் கட்சிகளால் மறைமுகமாகவும் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.


உலகமயப் பின்னணியில் பறிக்கப்படும் தொழிலாளர் உரிமைகள்

இந்த விஷேசப் பொருளாதார மண்டலங்களில் தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைந்த விலையில் தொழில் தொடங்க இடம், மின்சாரம் வழங்குவதில் தொடங்குகிறது. அத்துடன் போக்குவரத்து போன்ற அனைத்து ஆதார வசதிகளையும் சலுகைக் கட்டணத்தில் இவை பெறுகின்றன. 

அதன் மற்றொரு மிகமுக்கிய அம்சம் இவ்விஷேசப் பொருளாதார மண்டலங்களில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை ஏறக்குறைய இருக்கவே இருக்காது என்பதாகும். 
சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் கொண்டுவரப்பட்ட இந்தத் தொழிற்சங்க உரிமை மறுக்கும் போக்கு அதிகாரப்பூர்வமற்ற விதத்தில் வேறு அனைத்துத் தொழில்களிலும் தலைதூக்கத் தொடங்கியது. 

அதற்குச் சாதகமான பின்னணியையும் சூழ்நிலையையும் உலகமயத்திற்குப் பின் மத்திய தொழிற்சங்க இயக்கத்தில் தலைதூக்கிய ஒரு புதுவகைப் போக்கும் உருவாக்கித் தந்தது. 

அதாவது மத்தியத் தொழிற்சங்க இயக்கம் என்று நாம் கூறும்போது அப்பட்டமாக த் தரகர் வேலை பார்ப்பவையாக ஆகிவிட்ட தொழிற்சங்கங்களை மனதிற்கொண்டு மட்டும் அதைக் கூறவில்லை. 

உண்மையிலேயே கடந்த காலங்களில் தொழிலாளர் உரிமைகளுக்காகப் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு போராடிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தொழிற்சங்கங்களையும் மனதிற்கொண்டே கூறுகிறோம். 

அத்தொழிற்சங்கங்களும் கூட உலகமயத்திற்குப் பின் இந்திய முதலாளிகள் உலகமயத்தின் அப்பாவிப் பலிகிடாய்கள் ஆகிவிட்டார்கள் என்ற கண்ணோட்டத்தைக்கைக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் தொடங்கின. அதன் விளைவாகத் தொழிலாளர் பிரச்னைகளுக்காக முனைப்புடன் இயக்கம் கட்டும் போக்கு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. 

கொடிகட்டிப் பறக்கும் ஒப்பந்தத் தொழில்முறை

இக்கால கட்டத்தில் இந்திய முதலாளிகளின் அணுகுமுறைகளிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதாவது பெரிய தொழிற்சாலைகள் அமைத்து அதில் நிரந்தரத் தொழிலாளரை ஆயிரக் கணக்கில் வேலைக்கு அமர்த்தி தொழில் நடத்தும் அவர்களது போக்கில் ஒரு தலைகீழான மாற்றம் ஏற்பட்டது. 
ஒருபுறம் பெரிய நெசவாலைகள் விசைத்தறிகளுக்குத் தங்களது வேலைகளைக் கொடுத்து ஆடைகளைப் பெற்று விற்கத் தொடங்கின. 
மறுபுறம் பொறியியல் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட வாகன உற்பத்தி போன்ற கனரகத் தொழில்களில் ஈடுபடும் தொழிற்சாலைகள் தரக்கட்டுப்பாட்டைப் பராமரிப்பதற்கு மட்டும் சில பொறியியல் தொழில்நுட்பம் கற்ற வல்லுனர்களை நிரந்தரத் தொழிலாளராக வைத்துக் கொண்டு பிற வேலைகள் அனைத்தையும் ஒப்பந்தக் காரர்களுக்கு வழங்கத் தொடங்கின.

வாகனங்கள் போன்றவற்றிற்குத் தேவைப்படும் உதிரி உறுப்புகள் பலவற்றைத் தயாரிப்பவையாக அந்த ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் தொழிற்சாலைகள் ஆகிவிட்டன. 

பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் தொழிலாளர் வேலை செய்யும் இந்த ஒப்பந்தத் தொழிற்சாலைகளில் கடுமையாகச் சுரண்டப்படும் தொழிலாளரின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கக் கடந்த காலங்களிலும் இடதுசாரி மத்தியத் தொழிற்சங்கங்கள் பெரிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. 
அவ்வாறு அவை அம்முயற்சிகளை மேற்கொள்ளாமல் போனதற்குக் காரணம் அவற்றை வழிநடத்திய கட்சிகள் அப்பட்டமான நாடாளுமன்றவாதப் பாதையில் பயணிக்கத் தொடங்கியதனாலாகும். 

அதாவது ஒப்பந்தத் தொழிலில் ஈடுபடுவோர் சிறு முதலாளிகள், அவர்களிடம் பெருஞ்சுரண்டலில் சிக்கித்தவிப்பவரே ஒப்பந்தத் தொழிலாளர். இச்சங்கங்களை வழிநடத்தும் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்). மற்றும் சி.பி.ஐ(எம்.எல்.). போன்ற கட்சிகள் நடத்தப் போவதாக அறிவிக்கும் மக்கள் ஜனநாயக சமூகமாற்றத் திட்டத்தில் அச்சிறு முதலாளிகள் நேச சக்திகள். அதனால் ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னைகள் இக்கட்சிகளால் கையிலெடுக்கப் படாமல் விடப்பட்டது. 
இதனால் இந்த மத்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் செயல்பாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களோடு மட்டுமே என்றாகிவிட்டது. 
முதலாளித்துவப் பத்திரிக்கைகளின் ஒப்புதல் வாக்குமூலம்
இந்தச் சூழ்நிலையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு கேள்வி கேட்பாரில்லாமல் தொழிலாளரைக் குறைந்த கூலி கொடுத்துக் காட்டுத்தனமாகச் சுரண்டும் போக்கு அனைத்து முதலாளிகளாலும் கடைப்பிடிக்கப் பட்டது. 

இது தொழிலாளர் பிரச்னைகளில் உன்னிப்பான கவனமும் அக்கறையும் கொண்டுள்ள நமது பார்வையில் மட்டும் படும் அளவோடு நின்று போகவில்லை. பல முதலாளித்துவப் பத்திரிக்கைகளே மிதமிஞ்சிய புளகாங்கிதத்துடன் ‘ஹவ் தி யூனியன்ஸ் வேர் சோன் தி டோர்’ அதாவது எவ்வாறு தொழிற்சங்கங்கள் விரட்டியடிக்கப் பட்டன என்ற தலைப்புகளில் செய்திகள் வெளியிடத் தொடங்கின. 

ஒரு காலத்தில் ஏறக்குறைய அனைத்துத் தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்கச் செயல்பாடு இருந்தது என்றிருந்த நிலை மாறி தொழிற்சங்கம் என்ற வார்த்தையே முதலாளிகள் அரசு வட்டாரத்தினர் ஆகியவர்களைப் பொறுத்தவரையில் கெட்ட வார்த்தையாக ஆகிப் போய்விட்டது. 
எங்காவது அவ்வாறு தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டால் அது மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் அரசு மற்றும் முதலாளிகள் வட்டாரங்களால் பார்க்கவும் படுகிறது. 

தொழிலாளர் இயக்கமோ தொழிற்சங்க இயக்கமோ எந்தப் பின்னணியும் சூழ்நிலையும் இல்லாமல் சிலரது தனிப்பட்ட முயற்சிகளினால் கொண்டுவரப்பட்டவை அல்ல. 

முதலாளித்துவச் சுரண்டலும் அதற்குச் சாதகமாக இருக்கக்கூடிய அரசு நிர்வாகம் மற்றும் அடக்குமுறைக் கருவிகளும் உருவாக்கிய அடக்குமுறைச் சூழலே அதிலிருந்து விடுபடுவதற்கு என்ன வழி என்ற எண்ணப்போக்கை உழைக்கும் வர்க்கத்தின் மனதில் உருவாக்கியது. அதன் விளைவாகவே தொழிற்சங்கங்கள் உருவாயின. 

தனியாக நின்று பணபலமும் அதிகார பலமும் பொருந்திய முதலாளி வர்க்கத்தை எதிர்க்க முடியாது என்று உணர்ந்து கொண்ட தொழிலாளி ஒன்றிணைந்து தனக்கென அமைப்பொன்றினை உருவாக்கிப் போராடும் ஒரு சூழ்நிலைக்கு முதலாளித்துவச் சுரண்டலால் தள்ளப்பட்டான். அதன் விளைவாகவே உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தொழிற்சங்க இயக்கங்கள் உருவாயின. 

குர்காவுன் தொழிலாளர் போராட்டம்

கட்டவிழ்த்து விடப்படும் சுரண்டலும் அடக்குமுறைகளும் நிரந்தரமாகத் தொழிலாளரைக் கட்டிப்போட்டுவிட முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக உருவானதே குர்காவூனில் ஹூண்டாய் நிறுவனத்தில் உருவான தொழிற்சங்க இயக்கமாகும். 

அந்நிறுவனத்தை நடத்தும் ஜப்பான் முதலாளிகளுக்கு ஆதரவாக ஹரியானா அரசாங்கம் எத்தகைய காட்டுத் தாக்குதலை அத்தொழிலாளர் மீது ஏவிவிட்டது என்பது தொழிலாளி வர்க்க இயக்க வரலாற்றில் உதிரத்தால் எழுதி வைக்கப்பட்ட அத்தியாமாகும். 

அந்தப் பின்னணியில் கொடுஞ்சுரண்டல் நிலவும் அனைத்து முதலாளித்துவ நிறுவனங்களிலும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான தேவையும் அவசியமும் மிகவும் அதிகரித்துக் கொண்டே உள்ளன. 

தகவல் தொழில்நுட்பத் தொழில்களில் தொடங்கி பொறியியல் தொழில்கள் வரை அனைத்துத் தொழில்களிலும் மிகக் குறைந்த கூலி கொடுத்துச் சுரண்டும் போக்கு எதிர்ப்பேதும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. 
அங்குள்ள தொழிலாளர் தொழிற்சங்கம் அமைக்க விரும்பினாலும் மத்தியத் தொழிற்சங்கங்கள் அதைச் செய்யத் தயாராக இல்லை.
இந்த நிலையில் தான் தமிழ்நாட்டின் பொது மருத்துவ சேவையில் அரிய பங்கினை ஆற்றிவரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் தொழிலாளரின் அவலநிலை வெளிச்சத்திற்கு வந்தது. 
அது அரசின் செயல்பாட்டிற்குள் வரக்கூடிய பொது மருத்துவச் சேவையை அடிப்படையாக் கொண்டதாக இருந்தாலும் பல மாநில அரசாங்கங்கள் அச்சேவையை நேரடியாகத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்து நடத்த விரும்பவில்லை. 

அரசின் நிதியில் தனியார் நிர்வாகம்
அதற்கான காரணமாக முன்வைக்கப்பட்ட கருத்து இதுதான். அதாவது அரசுத்துறையில் எது கொண்டுவரப் பட்டாலும் அது நாளாடைவில் தரமில்லாததாக ஆகிவிடும் என்பதுதான். 

ஆனால் அந்த வாதம் மற்றும் பிரச்சாரத்திற்குப் பின்னணியில் நிலவிய உண்மையான சூழ்நிலையோ முற்றிலும் வேறானது. எடுத்துக்காட்டாக இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சிசெய்த தி.மு.கழக ஆட்சியின் போதுதான் 108 ஆம்புலன்ஸ் சேவை இம்மாநிலத்தில் அமுலாக்கப் பட்டது. அச்சேவைக்கான பெரும்பங்குப் பணத்தை வழங்கும் பொறுப்பை அரசே சுமந்தது. 

அதனைச் செயல்படுத்துவற்கென்று சில அத்தனை அதிகம் செலவாகாத  தொழிலாளர் சேர்க்கை போன்றவற்றை மட்டும் தயார் செய்து கொண்டிருந்த தனியார் நிறுவனமான ஜி.வி.கே. நிறுவனத்திற்குப்  பொறுப்பு வழங்கப்பட்டது. 
அந்நிறுவனம் மிக அடிப்படையான வசதிகளான தங்குமிட வசதி போன்றவற்றைக் கூட அதில் பணிபுரியும் பைலட், இ.எம்.டி. தொழிலாளருக்கு ஏற்படுத்தித் தரவில்லை. 

இதில் முதலுதவி போன்றவற்றைத் திறம்படச் செய்யும் அளவிற்கு உயிரியல் அல்லது செவிலியர் கல்வியும் பட்டமும் பெற்ற இ.எம்.டி. என்று வரையறை செய்யப்படும் பெண் தொழிலாளர்களும் உள்ளடங்குவர். 
அவ்வாறிருந்தும் எந்தவொரு நாகரீக சமூகமும் வற்புறுத்தும் தங்குமிட வசதி செய்து தரும் பொறுப்பைக் கூட ஜி.வி.கே. நிர்வாகம் செய்யவில்லை. 

கொழுத்த பூனைகள்

எந்தவொரு வகையான பெரிய முதலீடும் இன்றிப் பெரு லாபம் ஈட்ட வாய்ப்புள்ளதை உணர்ந்து கொண்ட அந்நிர்வாகம் ஒரு சில மருந்தியல் கற்ற நபர்களை மாவட்டங்களின் மேலாளர் (D.M.), பிராந்திய மேலாளர் (R.M.), களப்பணி நிர்வாகி (O.E.) போன்ற பணிகளுக்கு நியமித்து அவர்களுக்கு மட்டும் கூடுதல் சம்பளம் கொடுத்து மீதமுள்ள களத்தில் அனைத்து பணிகளையும் செய்யும் பைலட், இ.எம்.டி. போன்ற தொழிலாளர்களுக்கு 6000 முதல் 7000 வரை என்ற அளவிற்கு மட்டும் ஊதியம் வழங்கிச் சுரண்டத் தொடங்கியது. 

இத்தகைய சுரண்டல் முறை இந்த உலகமயம் உருவான பின் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் முறையாகும். 

பொருளாதார நெருக்கடியின் கோரப்பிடியில் முக்கி முனகிக் கொண்டிருக்கும் அமெரிக்க நாட்டில் எங்கு சென்றாலும் நெருக்கடிக்குக் காரணம் கொழுத்த பூனைகள் என்று பலரும் கூறுவதைக் கேட்க முடியும். 

அதாவது நிர்வாக மேலாண்மை என்ற பெயரில் தொழிலாளரை ஏமாற்றிச் சுரண்டுவதற்கான நுணுக்கங்களைக் கற்றுக் கொடுக்கும் கல்விகற்ற ஒரு சிலருக்கு லட்சக்கணக்கில் சம்பளங்களையும் பிற பலன்களையும் வாரி வழங்கி அவர்கள் எப்படியெல்லாம் தொழிலாளரை ஏமாற்றிச் சுரண்ட முடியுமோ அப்படியயல்லாம் சுரண்டி முதலாளிக்கு அதிக லாபம் ஈட்டிக் கொடுக்க முடியுமோ அப்படியயல்லாம் கொடுக்க வைத்துப் பெருலாபம் ஈட்டும் ஒரு போக்கு இன்று உலகம் முழுவதும் அனைத்து முதலாளித்துவ நிறுவனங்களிலும் நிலவுகிறது.

இத்தகைய கொழுத்த பூனைகள் எண்ணிக்கையில் மிகக்குறைந்ததாக மட்டும் இருப்பதால் அவர்களுக்கு மட்டும் கூடுதல் ஊதியமும் பலன்களும் வழங்குவது நிர்வாகங்களுக்குப் பெரிய வி­சயமல்ல. முதலாளிகள் மிக அதிக லாபம் ஈட்டுவதற்கு இந்தக் கொழுத்த பூனைகளைக் கொண்டு சுரண்டும் முறை பேருதவி செய்தது. 

நன்றி செலுத்தப்பட்ட விதம்

இந்த முறையைக் கடைப்பிடித்துச் சுரண்டிய ஜி.வி.கே. நிறுவனத்திற்கும் கிட்டிய லாபம் கொஞ்சநஞ்சமல்ல. அந்த லாபத்தை அடைய வழிவகுத்த கட்சியின் ஆட்சிக்கு அது தெரிவிக்க விரும்பிய நன்றி ஆட்சி நடத்திய கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்த கலைஞர் தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் கொடுப்பதன் மூலம் செவ்வனே செய்யப்பட்டது. 

இதை நாம் ஏன் இவ்வளவு வலியுறுத்திக் கூறுகிறோம் என்றால்  அரசுத் துறையில் ஒரு தொழில் நடத்தப்பட்டால் அது தரம் குறைந்ததாகத் தான் இருக்கும் என்ற பரவலாக நிலவும் கருத்து மட்டும் இவ்விச­யத்தில் தனியாருக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை கொடுக்கப் பட்டதற்குக் காரணமாக இருக்கவில்லை என்பதை வலியுறுத்தவே இதனை நாம் கூறுகிறோம்.

ஜி.வி.கே. நிறுவனம் இவ்வாறு அத்தனை பெரிய முதலீடின்றி பொது மருத்துவத்தின் பங்கும் பகுதியுமாக உள்ள இச்சேவைக்கு அரசால் தரப்படும் ஒதுக்கீட்டைக் கொண்டு நடத்துகிறது. 

அதன் ஒரு சிறு பகுதியை ஆளும் கட்சிகள் நடத்தும் டி.வி. சேனல்களுக்கு விளம்பரங்கள் வழங்கி அரசகளைத் தாஜா செய்து கொள்கிறது. 

பின்னர் அதில் அடிமட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளருக்கு மிக அற்பமான தொகையை ஊதியமென வழங்கிவிட்டு அவர்களின் ஊதியத்தைப் போல் பலமடங்கு ஊதியத்தை நேரடியாகச் சேவையில் ஈடுபடாத ஆர்.எம்., டி.எம்., ஓ.இ., போன்ற கொழுத்த பூனைகளுக்கு வழங்கிப் பெருலாபம் ஈட்டுகிறது. 

ஆனால் இந்த கொழுத்த பூனைகளோ தங்களது உண்மையான உழைப்பிற்குத் தாங்கள் பெற தகுதியுள்ளதைக் காட்டிலும் மிக அதிகமான ஊதியத்தை பெறுபவர்களாக இருப்பதால் அவ்வூதியத்தைத் தரும் எஜமானரை எப்போதும் மகிழ்ச்சியில் வைத்திருக்க விரும்புகின்றன. 

அதற்காக நிறுவனத்தின் செலவினங்களை எவ்வளவு குறைவாக வைத்திருக்க முடியுமோ அவ்வளவு குறைவாக வைத்துக் கொண்டு வாழ்க்கைச் செலவினங்கள் கண்மண் தெரியாமல் உயர்ந்துள்ள இக்காலகட்டத்தில் அடிமட்ட ஊழியர்களின் ஊதியத்தை மட்டும் படு மட்டமாக வழங்கி நிறுவனம் பெருலாபம் ஈட்ட உதவி புரிகின்றனர்.

அடிப்படை வசதிகளையும் புறக்கணிக்கும் கொள்ளை லாபச் சுரண்டல்
வாகனங்களுக்கு நல்ல தரமுள்ள டயர்களைக் கூட நிர்வாகம் பொருத்துவதில்லை. காலாவதியான டயர்களைப் பொருத்துகின்றன. 
அதனால் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் போது அவை பழுதடைந்து உரிய சமயத்தில் மருத்துவ மனைகளுக்கு நோயாளிகள் சென்று சேர முடியாத நிலை பல சமயங்களில் உருவாகிறது. இதுகுறித்து சமீபத்தில் ஹிந்து நாளிதழில் வந்த செய்தியே இதனைச் சுட்டிக் காட்டுகிறது. 

அதுதவிர 12 மணிநேரம் ஒரு ஊழியரை வேலை வாங்குவது, அதற்குக் கூடுதல் ஊதியம் எதுவும் வழங்காதிருப்பது, அரசு விடுமுறை தினங்களிலும் வேலை செய்ய நிர்ப்பந்திப்பது, அதற்கு மாற்று விடுப்போ அல்லது இரட்டிப்பு ஊதியமோ வழங்காதிருப்பது, நோயாளிகளை மருத்துவனைக்கு எத்தனை விரைவாகக் கொண்டு சென்று சேர்க்க முடியுமோ அத்தனை விரைவாகக் கொண்டு சென்று சேர்ப்பதே மருத்துவ தர்மம் என்ற நியதியை காற்றில் பறக்கவிட்டு விட்டு எரிபொருள் சிக்கனம் கருதி 50 கிலோமீட்டர்களுக்கு மேல் ஊர்தியை ஓட்டக்கூடாது என்று நிர்ப்பந்திப்பது போன்ற பல வகைகளில் ‘சிக்கனத்தைக்’ கடைப்பிடித்து முதலாளிக்கு அதிகபட்ச லாபம் ஈட்டிக்கொடுத்து அதில் சிறு கொசுறாகத் தங்களுக்குக் கிடைக்கும் பங்கினையும் மகிழ்வுடன் பெற்று இந்த சேவையை நல்ல முறையில் பராமரிப்பது போல் பாவனை காட்டுகின்றனர்.

வெளிப்படையாகவே மிகக் கொடுமையாக நடைபெறும் இச்சுரண்டல் நடைமுறைக்கு எதிராக ஊழியரின் எதிர்ப்பு அவர்களது மனதில் எழவே செய்யும் என்பதை நன்குணர்ந்து கொண்ட இக்கொழுத்த பூனைகள் பிரச்னைகளை எடுத்துரைக்கும் துணிவே தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக எத்தனை கொடுமையாக அவர்களை நடத்த முடியுமோ அத்தனை கொடுமையாக அவர்களை நடத்திக் கொண்டுள்ளனர்.

தன்னிச்சையான தர மதிப்பீட்டு முறை

அவ்வாறு நடத்துவதை இன்னும் திறம்படச் செய்ய வேண்டும் என்பதற்காக ஊழியரின் வேலைத் தரத்தைத் தீர்மானிப்பதற்கும் ஒரு தன்னிச்சையான தரநிர்ணய நியமத்தை அவர்களாகவே வகுத்தெடுத்துக் கொண்டும் உள்ளனர். 
பொதுவாக இதுபோன்ற வேலைகளில் வேலை செய்வோரின் தரத்தை மதிப்பிட வேண்டுமென்றால் அவ்வாறு மதிப்பிடுபவர்கள் இதில் ஈடுபடும் ஊழியர்கள் களப்பணி ஆற்றும் போது அவர்கள் உடனிருந்து பார்க்க வேண்டும். 
அவ்வாறு பார்க்க வேண்டுமென்றால் இச்சேவையில் எத்தனை ஊர்திகள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனவோ அத்தனை மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும். 
அவ்வாறு இல்லாத நிலையில் வேலை செய்வோரின் தரத்தை மதிப்பிட வேண்டுமென்றால் அதனைச் செய்வதற்கு ஆவணப்பூர்வமாக மதிப்பீட்டாளர்களுக்குக் கிடைப்பது அவர்கள் வரும் அனைத்து நோயாளிகளையும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுகிறார்களா என்று பார்ப்பது, காலதாமதம் முன் அனுமதி பெறாத விடுப்பு போன்றவை எடுக்கிறார்களா என்பதைக் கவனிப்பது போன்றவற்றின் மூலமே அதைச் செய்ய முடியும். 

ஆனால் இவை எதையும் கருத்திற் கொள்ளாத மிகவும் தன்னிச்சையானதாகவே அவர்கள் செய்யும் தரப்படுத்துதல் உள்ளது. 

அதாவது தங்களுக்குக் கைபாணங்களாக யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை மட்டும் கூடுதல் தரம் வாய்ந்தவர்களாகக் காட்டுவதே இந்த கொழுத்த பூனைகளின் நடவடிக்கைகளாக உள்ளன. 

முறைகேடுகளின் மொத்த உருவங்கள்

சேவையை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் நிர்வாகிகளாக உள்ள இந்த கொழுத்த பூனைகளே பல சமயங்களில் முறைகேடாகச் சம்பாதிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றன. 

அதாவது வேலையை விட்டு நின்றுவிட்ட ஊழியர்களுக்கு அரசிடமிருந்து ஊதியத்தை மாதக் கணக்கில் பெறுவது அதனைத் தாங்களே எடுத்துக் கொள்வது, ஆய்விற்காக அடிக்கடி பல ஊர்திகளைப் பார்வையிடச் சென்றதாக பொய் ஆவணங்கள் தயாரித்து அதற்குரிய பேட்டா, படி போன்றவற்றைப் பெறுவது போன்ற முறைகேடான பல காரியங்களில் இந்நிர்வாகிகள் ஈடுபடுகின்றனர். 

இவ்வாறு நியாய சிந்தனை சிறிதும் இல்லாதவர்களாக இருக்கும் நிர்வாகிகளுக்கு உடந்தையாக இருக்கும் அவர்களால் உயர்ந்த தரம் கொண்டவர்களாக அறிவிக்கப்படும் ஊழியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? 

‘பாடம் புகட்டும்’ நடவடிக்கைகள்

இந்த வழிமுறை 108 நிர்வாகிகளால் பின்பற்றப்படுவதற்கான காரணம் யாரும் அறியாததல்ல. மற்ற ஊழியர்களை ஒற்று வேலை பார்க்கவே இம்முறை பின்பற்றப் படுகிறது.

அது மட்டுமல்ல தொழிலாளரைப் பிரித்தாளவும் இந்த வழிமுறை நன்கு பயன்படுகிறது. இவ்வாறு ஊழியரின் ஒற்றுமையை ஓரளவிற்குச் சீரழித்த பின்னர் எழும் எதிர்ப்புக் குரல்களை அடக்குவது நிர்வாகத்திற்கு அத்தனை சிரமமானதாக இருப்பதில்லை. 

அந்நிலையில் யாராவது ஒருவர் தன் குறையை எடுத்துக்கூற வருகிறார் என்றால் கூட அவர்மீது ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்து அவருக்குப் “பாடம் புகட்டுவது” நிர்வாகத்திற்கு எளிதான காரியமாகிவிடுகிறது. 
இவ்வாறு பாடம் புகட்டும் பணி முதற்கண் அவர்கள் வேலை செய்யும் இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுவது என்பதில் தொடங்குகிறது. 
இடமாற்றம் என்பது வேறு துறைகளில் நடைபெறுவதற்கும் இங்கு நடைபெறுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. 

ஓரளவு கட்டுபடியான ஊதியம் பெற வாய்ப்புள்ள நிறுவனங்களில் இடமாறுதல் மிகப்பெரும் பிரச்னையாக இருப்பதில்லை. ஆனால் 6000 முதல் 7000 வரை மட்டும் ஊதியம் பெறும் இத்துறையின் ஊழியர்களுக்கு இடமாறுதல் பேரிடியாகவே உள்ளது. 

அதாவது இந்த சம்பளத்தில் வேறு இடத்தில் குடியிருப்பதற்கு வீடு ஏற்பாடு செய்ய வேண்டும். குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது போன்றவற்றிற்கும் பெரிதும் சிரமப்பட வேண்டும். 

ஏற்கனவே சொந்த ஊருக்கு அருகாமையில் உள்ள நகர்களில் வேலை செய்பவர்களாக இருக்கும் பெரும்பாலான ஊழியர்களுக்கு அவர்களது ஊர்களில் சிறிதாகவோ பெரிதாகவோ வசிப்பிடங்கள் இருக்கும் அந்தச் செலவினத்தை இடமாறுதல் வரும்போது அவர்கள் கூடுதலாகச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த அடிப்படைகளில் இத்துறையில் இடமாறுதல் என்பது மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஒன்றாக இல்லை. 

இட மாற்றங்களும் தண்டனைகளே

இவ்விடத்தில் ஏற்கனவே இருக்கும் நிர்வாகத்தின் தலையாட்டிச் சங்கத்திற்கு எதிராகச் செயல்பட்ட வேறொரு சரியான சங்கத்தில் இருந்தார் என்பதற்காக டி.வி.எஸ். நிறுவனத்தால் வடமாநிலம் ஒன்றுக்கு இடமாறுதல் செய்யப்பட்ட ஒரு ஊழியர் தனது இடமாறுதல் உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கும் அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பும் கணக்கிற்கொள்ளத் தக்கதாகும். 
அதாவது அவ்வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இடமாறுதல் வழக்கமான ஒன்றே; அதனை நிர்வாகத் தேவை மற்றும் காரணங்களுக்காக அவ்வப்போது செய்யலாம் என்று காலங்காலமாக வைத்துக் கொண்டிருந்த வாதத்தைக் கேள்விக்குரியதாக்கியது. 

இந்த வழக்கில் வழக்குத் தொடுத்தவர் செய்த வேலையோ துப்பரவு வேலை. துப்புரவு வேலையைச் செய்வதற்கு ஒரு வடஇந்திய மாவட்டத்தில் ஆளே கிடைக்காமல் அவரை இங்கிருந்து கொண்டு செல்லவேண்டிய கட்டாய சூழ்நிலை நிர்வாகத்திற்கு ஏற்பட்டது என்று நிர்வாகம் வைத்த வாதம் நீதிமன்றத்தால் ஒப்புக் கொள்ளப்படவில்லை. 

அந்த அடிப்படையில் நீதிமன்றம் மிகச் சரியாக அந்த இடமாறுதல் உத்தரவை முறையற்ற தொழில் நடவடிக்கை என்று கூறி ரத்து செய்தது. 108 நிர்வாகமும் இந்த விதத்திலேயே இடமாறுதல் உத்தரவுகளை எதிர்ப்புக் குரல் கொடுக்கும் ஊழியர்களுக்கு எதிராகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. 

அதாவது வேறொரு இடத்தில் சேவை விரிவுபடுத்தப் படுகிறது அல்லது அவ்விடத்தில் வேலை செய்யாத ஊழியர் வேலையைவிட்டு நின்றுவிட்டார் என்பது போன்ற காரணங்களுக்காக ஒரு உடனடி அவசியம் கருதி இடமாறுதல் உத்தரவு ஒருவருக்குப் பிறப்பிக்கப் படுகிறது என்றால் அதனை எவரும் புரிந்துகொள்ள முடியும். 

அத்தகைய இடமாறுதல் உத்தரவும் அருகில் உள்ள பணியிடத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்குப் பிறப்பிக்கப்படுவதே நியாயமானதாக இருக்கும். 
ஆனால் 108 நிர்வாகத்திலோ இப்படிப்பட்ட இடமாறுதல்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு என்பது போன்ற கொடூரமான விதங்களில் தொழிலாளரை அச்சுறுத்துவதற்காகவே செய்யப்படுகிறது. குறிப்பாகத் தங்களது பிரச்னைகளை நிர்வாகத்திடம் எடுத்துச் சென்றவர்களுக்கு மட்டும் இத்தகைய இடமாற்றல் செய்யப்படுகிறது. 

இதன்மூலம் யாருக்கும் பிரச்னைகளை மேலதிகாரிகளிடமோ பிறரிடமோ எடுத்துச் சொல்லும் மனநிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அதாவது அந்த கொழுத்த பூனைகளின் மொழியில் கூறுவதானால் இத்தகைய பாடம் புகட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதனால் பல ஊழியர்கள் வேலையைவிட்டே சென்றுவிட நேர்ந்தது. 

ஏனெனில் இவர்கள் வழங்கும் இந்த அற்ப ஊதியத்தை வேறு இடங்களில் பணி செய்து பெறுவதற்கான வாய்ப்பு, ஓட்டுனர் உரிமம், பல்கலைகழகப் பட்டம் போன்ற தகுதிகளைக் கொண்டுள்ள பைலட், இ.எம்.டி. போன்ற ஊழியர்களுக்கு இருக்கவே செய்தது. 

எனவே அவர்களில் ஒருசிலர் இந்த மடம் இல்லாவிட்டால் சந்தைமடம் என்று வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டனர். இருந்தாலும் இது ஊழியர்களைப் பொறுத்த வரையில் ஒரு அச்சுறுத்தலாகவே பரவலாக இருந்தது. 
இதுதவிரப் பெண் ஊழியர்கள் மீது ஆங்காங்கே பாலியல் பலாத்கார நடவடிக்கைகளும் இந்த கொழுத்த பூனைகளால் மேற்கொள்ளப்பட்டன. 
அதாவது கேள்வி கேட்பாரின்றி இதுபோன்ற கொடுமைகள் நிலவும் வாய்ப்பு உள்ள இடங்களில் அதுபோன்ற துணிச்சல்களும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வரத்தானே செய்யும். 

இவ்வாறு இதையொத்த எண்ணிறந்த பிரச்னைகளில் அல்லாடிக் கொண்டிருந்த ஊழியர்கள் அவர்களது பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு வழியேதும் இல்லையா என்று இயல்பாகவே தேடத் தொடங்கினர்.

வரலாற்றுப் படிப்பினை

அடக்குமுறையாளர்களும் சுரண்டல் கூட்டமும் அடிக்கடி மறந்துவிடும் ஒரு வரலாற்றுப் படிப்பினை உள்ளது. அதாவது அடக்கு முறையால் நிரந்தரமாக சுரண்டல் நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்த முடியாது என்பதுதான் அது. 

குறைந்த காலம் கூடுதல் காலம் என்று கால அளவீடுகளில் அதனை ஓரளவு தொடர முடியுமே அன்றி நிரந்தமாக அந்நடவடிக்கைகளைத் தொடர முடியாது. 
எத்தனை கொடியதாக இருந்தாலும் ஒரு சமயத்தில் அடக்குமுறை அதில் ஆட்படுபவர்களுக்குப் பழகிப்போய் மிகவும் இயல்பானதாகிவிடும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் அது மிகக் கொடுமையானதாகத் தோன்றும். 

அந்நிலையில் அதிலிருந்து மீள்வதற்கு வாய்ப்பு வசதி ஏதாவது உள்ளதென்று அவர்களுக்கு தென்பட்டால் அதன் பின்விளைவுகள் எவையாக இருக்கும் என்பதற்கு எந்த முக்கியத்துவமும் தராமல் அந்த நடவடிக்கைகளில் ஈடுபடவே செய்வர். 

அந்த அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் தங்களுக்கென 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்திச் செயல்படுவதற்கான ஆதார வேலைகளில் ஈடுபட்டனர். 

சங்கம் அமைய அடித்தளம் இட்டவர்கள்

அவர்களது சங்கம் உருவாவதற்கான அடித்தள நடவடிக்கைகள் தோழர் கருப்பன் சித்தார்த்தன் மற்றும் வழக்கறிஞரும் கம்யூனிஸ்ட்  ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP ) மற்றும் நமது இதழின் சென்னை மாவட்டப் பொறுப்பாளருமான தோழர் கதிரேசன் ஆகியோரால் இடப்பட்டது. 

ஒரு இடதுசாரி பத்திரிக்கையாளரும் சி.பி.ஐ. இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவருமான கருப்பன் சித்தார்த்தன் அவர்கள் 108 ஊழியர்களின் பிரச்னைகள் குறித்துப் பல நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகள் அவர்களது பிரச்னைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தன. 

அந்த ஊழியர்களை அமைப்பு ரீதியாக அணிதிரட்டுவதற்குத் தோழர் கதிரேசன் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் எடுத்துக் கொண்ட சிரமங்களும் கொஞ்சநஞ்சமல்ல. 108 தொழிலாளர் சங்கம் ஒரு சங்கமாக மலரும் வரை அவரது அரிய நேரத்தின் பெரும் பகுதி 108 ஊழியர்களின் பிரச்னைகளுக்காகவே செலவிடப்பட்டது. 

அதன்விளைவாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் அமைப்பு ரீதியாக உருப்பெற்று அதன் முதல் பொதுக்குழு மதுரை கோ.புதூர் மாநாகராட்சி திருமண மண்டபத்தில் கடந்த 24.07.2011 இல் நடைபெற்றது.

அப்பொதுக்குழுக் கூட்டம் மாநில அளவிலான சங்கப் பொறுப்பாளர் களைத் தேர்ந்தெடுப்பது, சங்கப் பதிவுக்கு பொறுப்பாளர்களுக்கு அதிகாரம் அளிப்பது, விதிகள் துணைவிதிகள் ஆகியவற்றை நிறைவேற்றுவது போன்ற பணிகளை செய்து முடித்தது.

ஆரம்ப நடவடிக்கைகள்

அதற்கு முன்பே தாங்கள் கொடுமையாக சுரண்டப்படும் விதம், தொழிற்சாலைச் சட்டங்கள் நிர்வாகத்தால் மதிக்கப்படாத போக்கு, வேலைச் சூழ்நிலைகளில் நிலவும் கொடுமைகள், இம்மென்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற பாணியில் நடத்தப்படும் நிர்வாகம் ஆகியவற்றை முன்னிறுத்தி மனு ஒன்று மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடம் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது. 

மாவட்ட ஆட்சியர்கள் இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாவட்ட கமிட்டியின் தலைவர் (சேர் பெர்சன்) களாக வருவதால் அவர்களிடம் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது. 

அவதூறுகளுக்கு இடமளிக்காத வகையில் இயக்கங்கள்

அதன்பின்னர் அதுவரை கேள்வி கேட்பாரின்றி வாய் மூலமாகவே வேலைநீக்கம் உட்பட பல அதீத தண்டனைகளை 108 ஊழியர்களுக்கு வழங்கி வந்த நிர்வாகம் எழுத்து மூலமாக அதனுடைய பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது. 

சங்கப் பணிகளில் முனைப்பாக உள்ள பலர் அதன் இந்தப் பழிவாங்கும் தாக்குதலுக்கு இலக்காயினர். பல ஊழியர்களை அது அவர்கள் வேலை செய்யும் பகுதிகளில் இருந்து வேறு பகுதிகளுக்கு நிர்வாகக் காரணம் எதுவுமின்றி இடமாற்றம் செய்தது. 

இதைக் கண்டித்து 108 தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 
இச்சங்கத்தின் செயல்பாடு குறித்து தவறான எண்ணத்தை மக்கள் மனதிலும் அரசாங்கத்திடமும் ஏற்படுத்தும் நோக்குடன் இந்த அத்தியாவசிய பொது சுகாதாரத் தேவையை இச்சங்கம் முடக்கப் பார்க்கிறது என்ற வதந்தியை நிர்வாகம் பரப்பியது. 

ஆனால் சங்கம் நடத்திய எந்தவொரு நிகழ்ச்சியும் நிகழ்ச்சி நடைபெறும் போது ஓய்விலிருக்கும் தொழிலாளரைக் கொண்டே நடத்தப்பட்டது. 

அதனால் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதிருந்த வெளிப்படையான நிலை தங்களுடைய நோக்கம் இந்த சேவையைப் பாதிக்க வைப்பதல்ல; தங்களுடைய உரிமையை அமைப்பு ரீதியாக கோரிப் பெறுவதே என்பதை சங்கம் பல சமயங்களில் உரிய அரசு அமைப்புகளிடம் தெளிவு படுத்த உதவியாக இருந்தது. இது 108 நிர்வாகத்தின் சங்கச் செயல்பாட்டிற்கு களங்கம் கற்பிக்கும் போக்கினைத் தோல்வியுறச் செய்தது. 

இந்தப் பின்னணியில் தான் அரசின் சுகாதார மானியக் கோரிக்கை சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தருணத்தை ஒட்டித் தங்களது கோரிக்கையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மேற்கொண்டனர். 

மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், கடலூர் ஆகிய பகுதிகளில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று அவர்களுடைய மிகவும் நியாயமானதும் சட்டபூர்வமானதுமான கோரிக்கைகளை மக்கள் அரங்கில் கொண்டுவரும் பணியினை மிகச் சிறப்பாக ஆற்றியது. 

மதிப்பு மிக்க ஹிந்து போன்ற நாளிதழ்கள் கூட கோரிக்கைகளை உரிய முறையில் வெளிப்படுத்தும் விதத்தில் நடந்த அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை உரிய முறையில் செய்தியாக மக்களிடம் கொண்டு சென்றன. 

எதிர்மறைச் சூழ்நிலையை எதிர்த்து எதிர் நீச்சல்

இவ்வாறு இன்று நிலவும் தொழிற்சங்கம் என்பதையே எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்குப் பல முட்டுக்கட்டைகள் தனியார் நிர்வாகங்களால் அரசின் ஆதரவுடன் போடப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்தையும் உடைத்தெறிந்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மனம் தளராது உறுதி குலையாது வீறுடன் தொழிலாளி வர்க்கப் போராட்டப் பாதையில் நடைபோட்டுக் கொண்டுள்ளது. 

சட்ட ரீதியாகவும் ஸ்தாபன ரீதியாகவும் தொழிலாளர் பிரச்னைகளைக் கையிலெடுத்து நானே ராஜா, நானே மந்திரி என்ற பாணியில் நிர்வாகம் இனிமேல் செயல்பட முடியாது என்ற சூழ்நிலையை 108 ஏ.டபிள்யு.யூ.(108AWU ) அமைப்பு வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது.இந்த எதிர்மறைச் சூழ்நிலையில் நாம் பார்க்கும் வி­சயம் பரந்த அளவில் மக்கள் ஆதரவின்றி எந்த போராட்டமும் அது தொழிற்சங்கப் போராட்டமாக இருந்தால் கூட வெற்றி பெற முடியாது என்பதே. மேலும் இந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளரின் போராட்டம் அவர்களின் உரிமைகள் சலுகைகள் போன்றவற்றை மட்டும் மையமாகக் கொண்டு நடைபெறவில்லை. பொது சுகாதாரச் சேவையின் ஒரு முக்கிய அங்கமான ஆம்புலன்ஸ் சேவை முறையாக நடைபெறுவதையும் மையமாகக் கொண்டும் நடைபெறுகிறது. எனவே இதில் மக்கள் நலன் குறித்த கேள்வியும் ஆழமாக பொதிந்துள்ளது. எனவே பரந்த அளவிலான மக்கள் ஆதரவினையும் திரட்டி இப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்தால் அது தொழிலாளர் இயக்கத்தில் தோன்றியுள்ள தொய்விலிருந்து அதனை விடுவிக்க நிச்சயம் வழிவகுக்கும்.

No comments:

Post a Comment