இந்தியப் பத்திரிக்கைக் கவுன்சிலின் தலைவரும் முன்னாள் உச்சநீதிமன்ற
நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ அவர்கள் சமீபத்தில் பத்திரிக்கைகளுக்கு எழுதிய ஒரு கட்டுரையில்
எழுத்து ஊடகங்களுக்கு எவ்வாறு பத்திரிக்கைக் கவுன்சில் உள்ளதோ அதுபோல் காட்சி ஊடகங்களுக்கும்
காட்சி ஊடகக் கவுன்சில் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்; ஏனெனில் அவை சமூகத்தின் முன்னேற்றத்திற்குக்
குந்தகம் விளைவிக்கும் வகையில் பல செய்திகளைத் தருவனவாக ஆகிவிட்டன என்று கூறியுள்ளார்.
இதே கருத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் மூலமும் தெரிவித்துள்ளார்.
இதனையொட்டி முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பியின் முக்கியத் தலைவர்களான
அம்பிகா சோனி மற்றும் சுஸ்மா சுவராஜ் ஆகியோருடனும் கலந்து ஆலோசனை நடத்தியதாகக் கூறியுள்ளார்.
ஊடகங்களின் உடனடி எதிர்ப்பு
உடனயே நமது நாட்டின் எழுத்து மற்றும் காட்சி ஊடகங்கள் அவரது இக்கருத்தினை
எதிர்த்துப் பல்வேறு வகைகளில் தங்களது கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளன. ஒரு பத்திரிக்கை
என்ற ரீதியில் இவ்வியத்தில் நாமும் நமது கருத்தை முன்வைக்க வேண்டியது கட்டாயமாகும்.
அதே சமயத்தில் அவர் கூறியுள்ள கருத்துக்களை சீர்தூக்கிப் பார்ப்பதும்
மிகவும் அவசியமாகும். நாம் பத்திரிக்கையாளர்கள்; அதற்கு எதிராகத் தோன்றும் எந்தப் போக்கினையும்
கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பது நமது கடமை என்ற அடிப்படையில் குருட்டுத்தனமான ஒரு நிலைபாடு
எடுப்பது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு சரியான அணுகுமுறையல்ல. அந்த அடிப்படையில் அவர்
முன்வைத்துள்ள கருத்துக்களைப் பார்க்க வேண்டும்.
மூன்று தவறான போக்குகள்
அவர் இந்தியக் காட்சி ஊடகங்களின் மூன்று வகையான மோசமான போக்குகளைக்
கோடிட்டுக் காட்டுகிறார். அவற்றில் ஒன்று நாட்டின் எந்தப் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல்
அல்லது குண்டு வெடிப்பு நடந்தாலும் அது குறித்து வரும் குறுந்தகவல்களை வைத்து அவை சரியானவை
தானா எனச் சீர்தூக்கிப் பார்க்காமல் இந்த அமைப்புகள் இதனை நடத்தியுள்ளன என ஒரு முடிவிற்கு
மக்கள் வருவதற்கு காட்சி ஊடகங்கள் வழிவகுத்துக் கொடுக்கின்றன.
இந்த மின்னணு யுகத்தில் யார் வேண்டுமானலும் விசமமாகக் கூட இப்படிப்பட்ட
குறுந்தகவல்களை அனுப்ப முடியும். அவற்றை மையமாக வைத்து சில முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகளே
இவற்றிற்குக் காரணம் என்ற ஒரு எண்ணப் போக்கினை அவை ஏற்படுத்துகின்றன. இதனால் மக்களிடையே
முஸ்லீம் சமூகம் முழுவதுமே பயங்கரவாதத் தன்மையைக் கொண்டது என்ற தவறான கருத்து ஏற்படுகிறது.
இரண்டாவதாக நமது நாட்டில் மிகப் பெரும்பான்மையான அதாவது ஏறக்குறைய
80 சதவிகத மக்கள் வறுமையிலும் வேலையின்மையிலும் குறைந்த ஊதியத்திலும் உழன்று கொண்டுள்ளனர்.
தாங்கொண்ணாச் சுமை நிறைந்ததாக உள்ள அவர்களுடைய வாழ்நிலை குறித்து நமது காட்சி ஊடகங்கள்
செய்திகளை வெளியிடுவதில்லை.
மாறாக மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் விதத்தில் திரைப்படம் ,
கிரிக்கெட் செய்திகளுக்கே முக்கியத்துவம் தந்து செய்திகள் வெளியிடுகின்றன. அதாவது நாட்டின்
முக்கியமான பிரச்னைகளை மையம் கொண்டதாக மக்களின் சிந்தனைகள் இருக்க இயலாதவாறு இவ்வாறு
செய்திகள் வழங்குவதன் மூலம் மக்களின் சிந்தனையை ஒருவகை மயக்கத்தில் அவை வைக்கின்றன.
மூன்றாவதாக நமது நாடு தற்போது விவசாய நாடு என்பதிலிருந்து மாறி ஒரு
தொழில்மய நாடாக ஆகிவருகிறது. இச்சூழ்நிலை ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய போது அங்கிருந்த
ஊடகங்கள் இந்த வளர்ச்சிகுகந்த விதத்தில் சமூகத்திற்குத் தேவையான கருத்துக்களை வளர்த்தெடுக்கும்
விதத்தில் செயல்பட்டன. அனைத்துவகை மூடநம்பிக்கைப் போக்குகளுக்கும் எதிராக அவை செய்திகள்
மற்றும் கருத்துக்களை வெளியிட்டன.
ஆனால் இங்கு செயல்படும் காட்சி ஊடகங்களோ ராசிபலன் செய்திகளை மிக அதிகமாக
வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நிலை எடுப்பதற்குப் பதிலாக
மூடநம்பிக்கைகளை வளர்க்கும் வேலையை அவை செய்கின்றன.
அன்று ஊடகவியலாளர்கள் இருந்தது போல் இலக்கியம், தத்துவம், விஞ்ஞானம்
போன்ற அனைத்துத் துறைகளிலும் பரிச்சயம் உடையவர்களாக இன்றைய ஊடகவியலாளர்கள் இல்லை. அதனால்
சமூகத்திற்குத் தேவைப்படும் விசயங்களைக் கூறாமல் தேவையற்ற விசயங்களைப் பிரபலப்படுத்தி
முற்போக்குத் திசைவழியில் சமூகம் செல்வதை சக்திவாய்ந்த விதத்தில் தடுக்கவும் செய்கிறார்கள்.
எனவே அவற்றைக் கட்டுப்படுத்த காட்சி ஊடகக் கவுன்சில் ஒன்று அமைக்கப்படுவது
அவசியம். இவையே அவர் கூறியுள்ள கருத்துக்களின் சாராம்சம்.
அனைத்தும் சரியான கருத்துக்களே
சமூக நிகழ்வுகளை ஊன்றிக் கவனிக்கும் எவரும் அவரது இக்கருத்துக்கள் சரியானவையல்ல
என்று கூற மாட்டார். அவர் கூறிய கருத்துக்கள் துணிவுடன் முன்வைக்கப்பட்டுள்ள மிகச்
சரியான கருத்துக்களே.
நாம் நமது இதழில் நமது காட்சி ஊடகங்கள் எவ்வாறு மக்களின் உண்மையானப்
பிரச்னைகளில் இருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன
என்பதைப் பலமுறை கூறி இருக்கிறோம்.
அது மட்டுமின்றி சோதித்தறியாத விசயங்களை உண்மை போல் மக்களின் மனதில்
பதியும் வண்ணம் முன்வைத்து அதன் காரணமாக நடக்காத விசயங்களை நடந்தவை போலவும் அற்ப வியங்களை
மிகப் பெரிதாகவும் எவ்வாறு சித்தரிக்கின்றன என்பதையும் நாம் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளோம்.
பகுத்தறிவுக்குப் புறம்பான கருத்துக்களை முன்வைத்து மக்களிடையே மூடநம்பிக்கையை
வளர்க்கும் விதத்தில் காட்சி ஊடகங்கள் செயல்படுவது ஒன்றும் ஒளிவு மறைவாக நடைபெறுவதில்லை.
அது மட்டுமின்றி அவற்றில் வரும் தொடர் நாடகங்கள் போன்றவற்றின் மூலம்
குறிப்பாகப் பெண்ணினத்தை வஞ்சகத் தன்மை கொண்டதாகவும் சூழ்ச்சிகள் புரிவதையே தொழிலாகக்
கொண்டதாகவும் காட்டி அதன்மூலம் சிறுக சிறுகக் கொடுக்கப்படும் விம் போல மக்களின் மனதை
அவை பாழ் படுத்துகின்றன என்பதும் வெளிப்படையானதே.
இவ்வியங்களை அடிப்படை சமூக மாற்றத்தை வலியுறுத்தும் சக்தி என்ற வகையில்
நாம் பார்த்தது எவ்வளவு சரியானது என்று மார்க்கண்டேய கட்ஜூ அவர்களின் கருத்துக்கள்
மூலம் நிரூபணமாகியுள்ளது.
ஆனால் இவை அனைத்தும் ஊடகங்களின் வளர்ச்சிப் போக்கில் அவையாகவே தோன்றி
வளர்ந்தவை; எனவே உரிய நடவடிக்கைகள் எடுத்தால் இவற்றைச் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு
மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள் காட்சி ஊடகக் கவுன்சில் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதனால் தான் அவர் இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகள் என்ன என்பனவற்றையும்
விவாதித்து அதில் ஒரு வழியாக அரசு விளம்பரங்களை இவ்வாறு தவறிழைக்கும் ஊடகங்களுக்கு
வழங்காதிருக்கலாம் என்பது போன்ற ஆலோசனைகளையும் முன்வைக்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகளை
எடுப்பதற்குத் தேவையான அமைப்பாகத் தான் அவர் காட்சி ஊடகக் கவுன்சிலைப் பரிந்துரைக்கிறார்.
தன்னிச்சை நிகழ்வல்ல
ஆனால் இந்தப் போக்குகள் ஊடகங்களில் தாமாகவே எந்தப் பின்னணியும் இன்றித்
தோன்றி வளர்ந்தவையல்ல. அவர் சுட்டிக் காட்டியுள்ள 80 சதவிகிதப் பாடுபடும் மக்களின்
பிரச்னைகள் புறக்கணிக்கப் படுவது குறிப்பாகத் தன்னிச்சையான ஒரு நிகழ்வல்ல.
குழந்தை உழைப்பு, சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்களின்
பாதுகாப்பு எதுவுமின்றி பெண்கள் சுரண்டப்படுவது, உழைப்பாளி மக்களின் சங்கம் அமைக்கும்
உரிமை பல்வேறு மாநில அரசாங்கங்களாலும் மத்திய அரசாங்கத்தாலும் அப்பட்டமாக மறுக்கப்படுவது,
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதிருப்பது; ஆனால் அதே சமயத்தில்
மிக அதிக விலை கொடுத்து அவற்றை வெளிச் சந்தையில் பொதுமக்கள் வாங்க நேர்வது, சிறப்புப்
பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் உருவாக்கப்படும் தொழில் வளாகங்களுக்கு அனைத்து வசதிகளையும்
மிகவும் சலுகை விலையில் வழங்குவது; ஆனால் அங்கு வேலை செய்யும் அல்லது அவற்றிற்கு உதிரி
உறுப்புக்கள் வழங்கும் நிறுவனங்களில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர் போன்றவர்கள்
குறைந்தபட்சக் கூலி கூடக் கொடுக்கப்படாமல் கடுமையாகச் சுரண்டப்படுவது, குறைந்தபட்சக்
கூலி நிர்ணயத்தை வெளிச்சந்தை நிலவரத்தைக் கூட கணக்கில் கொள்ளாமல் மிகக் குறைத்துத்
தீர்மானிப்பது போன்ற மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களைப் பாதிக்கும் விசயங்களில்
எந்தவித அக்கறையையும் காட்சி ஊடகங்கள் காட்டுவதில்லை.
அவ்வப்போது எழுத்து ஊடகங்களில் சாய்நாத் போன்றவர்கள் மார்க்கண்டேய கட்ஜூ
அவர்களே குறிப்பிட்டுள்ளது போல் விவசாயிகள் தற்கொலைகளைக் கொண்டு வந்தாலும் அப்பத்திரிக்கைகளின்
மிகப் பெரும்பான்மை செய்திகளும் இதுபோல் பெரும்பான்மை மக்களின் பிரச்னைகள் சார்ந்தவையாக
இருப்பதில்லை.
அதற்குக் காரணம் பெரும்பாலான மக்களால் பார்க்கவும் படிக்கவும் படும்
ஊடகங்கள் பெரிய உடமை வர்க்கங்களால் நடத்தப்படுகின்றன. எனவே அவை அவை சார்ந்துள்ள வர்க்கத்தின்
நலனை மனதிற்கொண்டே செய்தி வெளியிடுகின்றன. அதனால் ஒரு வர்க்கப் பாரபட்ச மனநிலையோடு
வெளியில் சுதந்திரமான ஊடகங்கள் என்று தங்களைக் காட்டிக் கொள்ளும் அவை செயல்படுகின்றன.
அரசின் ஆசியுடன் நடைபெறுவதே
இவ்வாறு ஊடகங்கள் மக்கள் சரியான வியங்களை அறிந்து கொள்ளாதிருக்க வேண்டும்
என்ற உள்நோக்குடனேயே செயல்படுகின்றன. தன்னிச்சையாக இவை நிகழ்வதில்லை. மக்களைச் சமூக
முன்னேற்றத்திற்குத் தேவையான அறிவு பெற்றவர்களாக ஆக்க அவை விரும்புவதில்லை.
இவ்வாறு செய்திகளையும் காட்சிகளையும் திரித்தும் புரட்டியும் திசை திருப்பியும்
வெளியிட்டு உள்நோக்குடன் செயல்படும் இந்த ஊடகங்களின் போக்கு அரசின் ஆசியுடன் நடைபெறுகிறது.
இந்த உடமை வர்க்க நலனுக்காக செயல்படும் அமைப்பு என்ற ரீதியில் அரசு மனப்பூர்வமாக இதுபோன்ற
போக்குகளை எந்த வகையிலும் கட்டுப்படுத்த விரும்புவதில்லை.
எனவே மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள் எழுதியுள்ள கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன்
சிங் அவர்களிடமிருந்து எத்தகைய பதில் கிட்டும் என்பது மிகவும் பொறுத்திருந்து பார்க்க
வேண்டிய வியம்.
அவர் கூறியுள்ள காட்சி ஊடகக் கவுன்சில் என்பது அமைக்கப் பட்டாலும் கூட
அதுவும் எத்தனை தூரம் இந்த போக்கைத் தடுத்து நிறுத்த முடியும் என்பதும் ஐயத்திற்கு
இடமானதே. அதில் வேறொரு அபாயமும் உள்பொதிந்துள்ளது.
அதாவது அதுபோன்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டால் மார்க்கண்டேய கட்ஜூ
போன்ற உண்மையான சமூக அக்கறை கொண்டவர்களின் தலைமையில் செயல்படும் போது அது ஓரளவு இந்தச்
சீரழிவுப் போக்கினைத் தடுத்து நிறுத்த முயலக் கூடும்.
நிர்வாக ரீதியிலான கட்டுப்பாடுகளை வலியுறுத்துவது ஒரு கட்டத்தில் சரியானவர்களுக்கு
எதிராகவே திரும்பும்
ஆனால் அவரை ஒத்தவர்கள் இன்றைய மேல்மட்ட நிர்வாகத்தில் மிக அதிக எண்ணிக்கையில்
இல்லாதது மட்டுமின்றி மேல்மட்ட நிர்வாகத்தில் இருப்பவர்களில் மிகப் பெரும்பாலோர் தங்களது
பதவி உயர்வு போன்ற சுயநல நோக்கங்களுக்காகச் சமூக நலனை கருதாதவர்களாகவுமே உள்ளனர். அது
போன்றவர்கள் காட்சி ஊடகக் கவுன்சிலில் பொறுப்பேற்றால் அவர்கள் சீரழிவுக்கு எதிரான எந்த
நிலைபாடும் எடுக்கமாட்டார்கள் என்பதோடு பல நல்ல வியங்களே சீரழிவு என்று சித்தரிக்கவும்
அவற்றைத் தடுக்ககவும் கூட செய்வர். ஏனெனில் உழைப்பவர் உரிமைக்காகக் குரல் எழுப்புவதைத்
தொழில் அமைதிக்குப் பங்கம் என்று கருவதே பெரும்பான்மை ஊடகங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தின்
கருத்தாகத் தற்போது இருந்து வருகிறது.
எனவே இன்றைய அரசுகள் ஜனநாயக நடைமுறைகளைக் கைவிட்டு பாசிஸத்தை நோக்கிச்
சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போதுள்ள உரிமைகளின் பாலான எந்தவொரு கட்டுப்பாட்டையும்
கோருவதோ வலியுறுத்துவதோ சாக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரு கட்டத்தில் அது நியாயமான
உரிமைகளைப் பறிப்பதற்கு வழிவகுப்பதாக ஆகிவிடும் பேரபாயமும் உள்ளது.
எனவே மார்க்கண்டேய கட்ஜூ அவர்களின் கருத்துக்களுக்கு மிகுந்த மரியாதை
கொடுத்து அவற்றிற்குத் தலை வணங்கும் அதே வேளையில் மேலே குறிப்பிட்டுள்ள காரணத்திற்காக
இருக்கும் ஊடக சுதந்திரங்களின் மீதான கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் அமைப்பு ஒன்றை உருவாக்குவது
வரவேற்கத் தக்கதல்ல என்பதையும் நாம் முன்வைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
ஆளும் வர்க்க நலனுக்காகவும் லாப நோக்குடனும் செய்திகளுக்கான முதலாளித்துவச்
சந்தையை உருவாக்கி வியாபாரம் நடத்தும் தன்மை கொண்டதாக உள்ள சூழ்நிலைக்கு எதிரான எதிர்
நீரோட்டத்தை உருவாக்கி வலுப்பெறச் செய்வதே இப்போக்கிற்கு எதிராக ஆற்றப்பட வேண்டிய எதிர்
வினையாகும்.
மக்களைத் தர்க்க ரீதியாகவு9ம், பகுத்தறிவுப் பூர்வமாகவும் சிந்திக்க
வைக்கும் விதத்தில் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி முந்தித்
தருகிறோம் என்பதை விட முக்கியமானதையும் தேவையானதையும் தவறாமல் தருகிறோம் என்ற அடிப்படையில்
நடத்தப்படும் ஊடகங்களை உருவாக்கி வலுப்பெறச் செய்ய வேண்டும். அதன்மூலமே பிரபல காட்சி
ஊடகங்கள் ஏற்படுத்தும் சீரழவுகளிலிருந்து மக்களைக் காக்க முடியும்.
No comments:
Post a Comment