Saturday, September 1, 2012

லெனினது உடலைப் புதைப்பதன் மூலம் கம்யூனிசத்தையும் புதைத்து விடலாம் எனக் கனவு காணும் புட்டின் கும்பல்


சோவியத் யூனியனில் கோர்பச்சேவ் மற்றும் எல்சின் கும்பலால் மேலைநாட்டு ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட எதிர்ப்புரட்சிக்குப் பின்பு ஒன்றாயிருந்த சக்திவாய்ந்த சோவியத் யூனியன் பல நாடுகளாகத் துண்டாடப்பட்டது. தங்களுக்குக் கிட்டியிருந்த உழைக்கும் வர்க்கத் தலைமையிலான அரசும் சுரண்டலற்ற ஆட்சியும் வழங்கிய பல்வேறு பலன்களை உணர்வுடன் பராமரிக்கத் தவறிய குற்றத்தைச் செய்ததற்காக அந்நாட்டின் மக்கள் அதன்மூலம் பெரும் விலையினைக் கொடுத்துக் கொண்டுள்ளனர்.

முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சி

சுதந்திரமே இல்லாமல் போன ஒரு நாடு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திற்கு இரையான அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் தற்போது புட்டின் தலைமையில் கொண்டுவரப் பட்டுள்ள ஆட்சிமுறை எத்தனை முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சிமுறை என்பதைக் கண்ணுக்கு கண்ணாக கண்டு கொண்டுள்ளனர். பணவீக்கம், வேலையின்மை, சோசலிச ஆட்சியின் கீழ் சமூக விரோதிகளாக விளங்கியவர்கள் மூலம் கொண்டுவரப் பட்டுள்ள கொலைகார முதலாளித்துவத்தின் சுரண்டல் ஆகியவற்றால் அல்லாடப்பட்டுக் கெளரவமான வாழ்க்கையை இழந்த அந்நாட்டு மக்கள் இன்று முதலாளித்துவம் அறிமுகம் செய்துள்ள ஊழல், விபச்சாரம் போன்ற சமூகக் கேடுகளைக் குறைவின்றிப் பார்த்துக் கொண்டுள்ளனர்.

அந்நாட்டின் எண்ணெய் வளத்தை மட்டும் மையமாக வைத்து இன்றும் அந்நாடு ஒரு வளர்ச்சியடைந்த நாடாக இருப்பதாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. அந்த நாட்டின் உண்மையான வலு சமூக செல்வம் மக்கள் அனைவருக்கும் முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட்டதில் தான் இருந்தது. அதில் ஏற்பட்ட பாதிப்பு அச்சமூகத்தை உள்ளீடாக ஒன்றுமில்லாததாக ஆக்கியுள்ளது.

தந்திரம்
இந்த நிலையில் ஆண்டாண்டு காலமாக அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக அந்நாடு மானசீகமாக எடுத்துவந்த நிலையையும் கடைப்பிடித்து வந்த போட்டியையும் அடிப்படையாக வைத்து ஒரு ரஷ்ய தேசிய உணர்வினை முன்னிலைப்படுத்தித் தந்திரமாக ஆட்சிக்கு வந்து அதனை நடத்தி வந்த புட்டினின் போக்கு இன்று எவரையும் ஏமாற்ற முடியாத ஒன்றாக அம்பலமாகி நிற்கிறது.

காற்றில் பறக்கவிடப்பட்ட கோட்பாடு
ஏதோ கோட்பாடு ரீதியான ஒரு கொள்கையைப் போல் இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் குடியரசுத் தலைவராக இருக்க முடியாது என்ற நியதியை அவரே வகுத்துவிட்டு இரண்டுமுறை தான் இருந்த பின் பெயருக்கு மெட்வடோவ் என்பவரை ஒருமுறை குடியரசுத் தலைவராக வைத்திருந்த பின் மீண்டும் தானே குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டு தற்போது அப்பதவியை புட்டின் வகித்து வருகிறார்.

அவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலும் அதற்கு முன்பு நாடாளுமன்றத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலும் மோசடித் தேர்தல்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் மூலமாக வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி அத்தேர்தலுக்கு எதிரான மகத்தான மக்கள் கிளர்ச்சிகளும் ரஷ்ய வீதிகளில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்றன.

மகத்தான கிளர்ச்சிகள் பல ஏற்பட்டாலும் அந்த எதிர்ப்புணர்வைச் சமூகமாற்றச் சிந்தனையாக்கி இந்த முதலாளித்துவ தாசர்களிடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற அங்கு கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் கட்சியும் வருந்தத்தகுந்த விதத்தில் முனைப்புடன் இல்லை.

மாற்று இல்லை எனக் காட்டும் போக்கு

அந்நாட்டின் சூழ்நிலை இவ்வாறு இருக்கையில் உலக முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியோ மீளவே முடியாததாக ஆகிக் கொண்டுள்ளது. அந்நிலையில் முதலாளித்துவத்திற்கு மாற்று என்ற சிந்தனையே மக்கள் மனதில் வந்துவிடக் கூடாது என்பதில் உலக மூலதனமும் அதன் ஊதுகுழல்களும் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகின்றன.

இந்தப் பின்னணியில் செஞ்சதுக்கத்தில் லெனின் மசோலியத்தில் வைக்கப்பட்டுள்ள லெனினது உடலைக் காண மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. லெனினது பொருத்தமான சீடரான ஸ்டாலினது பெயரை இருட்டடிப்புச் செய்யும் போக்கு குருச்சேவ் காலத்தில் தொடங்கி இன்றும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அது தோல்வி மேல் தோல்வியினைத் தழுவிக் கொண்டேயுள்ளது. கதிரவனின் ஒளியைக் கார் மேகங்கள் அவ்வப்போது தற்காலிகமாக மறைக்க முடியுமே தவிர நிரந்தரமாக மறைக்க முடியாது என்பது போல் ஸ்டாலினது பெயரும் ஒவ்வொரு பொது நிகழ்வின் போதும் அவரது உருவம் பொதிந்த பதாகைகளும் மக்கள் கரங்களில் அழகுற மென்மேலும் தவழ்ந்த வண்ணம் உள்ளன.

நேர்த்தியான பராமரிப்பு

உலகில் எந்தவொரு இறந்த மனிதரின் உடலும் இத்தனை நேர்த்தியாகப் பராமரிக்கப் பட்டதில்லை என்று கூறும் அளவிற்குப் பராமரிக்கப்பட்டு வரும் லெனினது உடல் சோவியத் விஞ்ஞானத்திற்கும் சான்று பகர்வதாகும். அதனை எப்படியாவது அகற்றிப் புதைத்துவிட வேண்டும் என்பது எதிர்ப் புரட்சிக் கும்பலின் நீண்ட நெடிய கால ஆசையாக இருந்த போதிலும் இதுவரை அத்தனை எளிதில் அதனை அதனால் செய்து முடிக்க முடியவில்லை.

அச்சூழ்நிலையில் மனிதகுல வரலாறு முதன்மைப்படுத்திய விதத்தில் ஒரு மாபெரும் புரட்சியாளன் முதல் முறையாகச் சுரண்டப்பட்ட வர்க்கங்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாற்றின் திருப்புமுனையைக் கொண்டு வந்தவன் என்ற அடிப்படையில் அவருக்குச் செல்ல வேண்டிய முக்கியத்துவத்தைத் திசைதிருப்பி அவர் ரஷ்ய நாட்டின் மாபெரும் தலைவர் என்ற வேறொரு முத்திரையைக் குத்தி அதனைத் தனக்குச் சாதகமாக்கிப் பராமரிக்க புட்டின் பலகாலம் முயன்றார்.

சராசரி ஜனநாயகமும் இல்லை

இன்று அவரது தந்திரங்கள் அனைத்தும் அம்பலமாகி அவர் மக்கள் விரோதத் தன்மைகள் பலவற்றைக் கொண்ட சுயலாப அரசியல்வாதி மட்டுமல்ல மோசடித் தேர்தல்கள் மூலம் பதவி சுகத்தைத் தொடர்ந்து நுகர விரும்பும் பதவிப் பித்தரும் ஆவார் என்பது அம்பலமாகியுள்ளது.
இதே சமயத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் பன்மடங்கு அதிகரித்த வண்ணம் உள்ளன. எந்தவொரு முதலாளித்துவ நாட்டிலும் அனுமதிக்கப்படும் சராசரி ஜனநாயக உரிமைகள் கூட அங்கு மறுக்கப்பட்டு அவர் நடத்திய மோசடித் தேர்தலை எதிர்த்த போராட்டக்காரர்களின் வீடுகள் சோதனையிடப் படுவதும் அவ்வியக்கத் தலைவர்கள் நூற்றுக்கணக்கில் கைதாவதும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

போலிக் கருத்துக் கணிப்பு

இச்சூழ்நிலையில் பீதியில் மிரண்டு போயிருக்கும் அவருக்கு உழைக்கும் மக்களின் போராட்ட உணர்விற்கு உந்து சக்தியாக இருந்து கொண்டிருக்கும் லெனினது பராமரிக்கப்பட்டு வரும் உடலை அகற்றுவது அவசர அவசியமாகியுள்ளது. அதன் விளைவாக அவர் ஒரு போலிக் கருத்துக் கணிப்பையும் நடத்தி பெரும்பான்மை ரஷ்ய மக்கள் லெனினது உடலை அகற்ற விரும்புவதாக ஒரு புள்ளி விபரத்தை வெளிவரச் செய்துள்ளார். ஆனால் அவர் நடத்திய கருத்துக் கணிப்பு மிகவும் போலியானது மற்றும் இட்டுக்கட்டப் பட்டது என்ற செய்தியும் அந்தக் கருத்துக் கணிப்பின் முடிவை ஒட்டியே வெளிவந்து மக்களிடம் பரவியுள்ளது.

மேலும் அவரது ஆட்சியை எதிர்த்த போராட்டங்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் லெனினது உடலை அகற்றுவது எரியும் தழலில் இன்னும் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துவிடுமோ என்ற அச்சமும் ரஷ்ய நாட்டின் முதலாளிகளுக்கும் அவர்களது சேவகனான புட்டினுக்கும் அவரது கும்பலுக்கும் ஆழமாக உள்ளது.

எஜமான விசுவாசம்

இந்த நிலையில் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிக்கைகள் அவ்வப்போது லெனினது உடல் புதைக்கப்படப் போகிறது என்ற செய்தியைப் பரப்பி இந்திய முதலாளிகளின் பாலான அவர்களது எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளன. பாவம் அவர்களுக்குத் தெரியாது லெனினது உடலை அப்படியே புட்டின் கும்பல் புதைத்தாலும் ஒரு கம்யூனிஸ்ட்டின் உடலை அவர்களால் புதைக்க முடியுமே தவிர, கம்யூனிஸத்தைப் புதைக்க முடியாது என்று. இன்று முதலாளித்துவம் சிக்கித் தவிக்கும் மீள முடியாத நெருக்கடி கம்யூனிசக் கண்ணோட்டத்திற்குப் புத்துயிர் ஊட்டிக் கொண்டுள்ளது. இந்நிலையில் புட்டின் கும்பல் அவரது உடலைப் புதைக்கும் செயலைச் செய்தால் அது உழைக்கும் வர்க்க இயக்கத்தில் புது வேகத்தை நிச்சயம் பாய்ச்சும்.

No comments:

Post a Comment