Saturday, September 1, 2012

தாராளவாதக் கொள்கையா, ஆளும் முதலாளி வர்க்கமா, யார் காரணம்?


இன்று இந்திய சமூகம் பல பிரச்னைகளை எதிர் கொண்டுள்ளது. தொழிலாளர்
, விவசாயிகள், மாணவர்கள் என்று சமூகத்தில் அனைத்துப் பிரிவினரும் கடும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டுள்ளனர். சமீப காலத்தில் ஊழல் நமது சமூகத்தின் மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து உலெகெங்கும் பேசப்படும் பொருளாக ஆகியுள்ளது.

தொழிலாளரைப் பொறுத்தவரையில் அவர்களது சம்பள விகிதங்கள் குறிப்பாகத் தனியார் துறையில் மிகப் பெருமளவு குறைந்துள்ளன. ஆலைகளை நடத்துவதற்கு ஆகும் மொத்த செலவில் தொழிலாளருக்குக் கொடுக்கும் ஊதிய விகிதங்கள் வெறும் 10 சதவிகிதமே என்ற அளவிற்கு இதுவரை கண்டிராத விதத்தில் 2008ம் ஆண்டிற்குப் பிந்திய ஆண்டுகளில் குறைந்துள்ளன. அவர்களுக்கிருந்த வேலைப் பாதுகாப்புப் பறிபோயுள்ளது. சங்கம் அமைக்கும் உரிமையை அவர்கள் இழந்து நிற்கின்றனர். அனைத்துத் தொழில் துறைகளிலும் ஒப்பந்தத் தொழில்முறை அமுலுக்கு வந்துள்ளது. நிரந்தரத் தொழிலாளர் ஒழிப்பு தனியார் உற்பத்தித் துறையில் தலைவிரித்தாடுகிறது.


விவசாயிகள் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் இடு பொருட்களின் விலை உயர்வு பெருமளவு அதிகரித்துள்ளது. அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விலை வெளிச் சந்தையில் மிக அதிகம் இருக்கிறது. அதே சமயத்தில் விவசாயிகளுக்குக் கிடைப்பதோ மிகவும் குறைவாக உள்ளது.

மாணவர்களைப் பொறுத்தவரையில் தனியார்மயத்திற்கான கதவுகள் கல்வித்துறையில் அகலத் திறந்துவிடப்பட்டு மிகப் பெரும்பாலான பள்ளிகளும் கல்லூரிகளும் சுயநிதித் தன்மை வாய்ந்தவைகளாக ஆக்கப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்கள் உயர் கல்வியை எட்டிப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஊழல் அனைத்துத் துறைகளிலும் தலைவிரித்தாடுகிறது. தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி அலைக்கற்றை ஊழல், விண்வெளி ஆராய்ச்சிக்குப் பயன்படும் அலைக்கற்றைகளைக் குறைந்த விலையில் விற்றதன் மூலம் ஊழல் நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்பு, இறுதியாக சமீபத்தில் நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதில் நிகழ்ந்துள்ளதாகக் கருதப்படும் லட்சக்கணக்கான கோடி ஊழல் என ஊழல் போக்கு மண்டி மலிந்துள்ள நிலை நிலவுகிறது.

நகல் தீர்மானம்

இந்தப் போக்குகள் அனைத்திற்கும் காரணம் என்ன என்பது கண்டறியப்பட வேண்டும். அந்தக் காரணத்தைச் சரிவர தெரிந்து கொண்டால் தான் இவற்றிலிருந்தான தீர்வு குறித்து சிந்திக்கவே முடியும். சி.பி.ஐ(எம்). கட்சியின் அகில இந்திய கட்சி மாநாட்டின் அரசியல் நகல் தீர்மானத்தில் இதுபோன்ற பிரச்னைகள் அனைத்திற்கும் காரணமாக நவீன தாராளவாதக் கொள்கை என்ற பெயரில் தற்போது இந்திய அரசு கடைப்பிடித்து வருவதும் உலக அளவில் நடைமுறையில் இருந்து வருவதுமான கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது அந்தக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டால் மேலே விவரித்தப் பிரச்னைகள் பல இருந்திருக்காது என்று அந்த நகல் தீர்மானம் கூற வருகிறது.

உற்பத்திச் செலவில் சம்பளத்தின் பங்கைக் குறைக்கும் போக்கு

தொழிலாளரின் பிரச்னைகளைப் பொறுத்தவரையில் அவற்றில் மிக முக்கியமாக முன்னெழுந்து நிற்பது ஒப்பந்தத் தொழில் முறையாகும். முதலாளித்துவ சமூக அமைப்பில் விஞ்ஞான, தொழில்நுட்ப அடிப்படையில் உருவாகும் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் தொழிலாளரைக் கடின உழைப்பிலிருந்து விடுவிப்பதற்குப் பயன்படுவதில்லை. மாறாக அவர்கள் வேலையைப் பறிப்பதற்குப் பயன்படுகின்றன. குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளரை வைத்து வேலைப் பளுவினை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவர்களின் தலைமேல் சுமத்தி அவர்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவதற்குப் பயன்படுகிறது. கம்ப்யூட்டர் மயமாக்கல் இருந்த எழுத்தர் பணியிடங்களைப் பறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. அதைப்போல் உற்பத்தித் துறையில் அறிமுகம் செய்யப்பட்ட பல நவீன யுக்திகளும் ஆள் குறைப்பிற்கே பயன்பட்டன. அதாவது அது ஒரு போக்கைக் கோடிட்டுக் காட்டியது. இன்றைய முதலாளித்துவம் அதன் உற்பத்திச் செலவில் சம்பளமாகத் தொழிலாளருக்குக் கொடுக்கும் பகுதியை எவ்வளவு தூரம் குறைத்து அதனை லாபமாக ஈட்ட முடியுமோ அவ்வளவு தூரம் குறைத்து அதனை லாபமாக ஈட்டுவதிலேயே அக்கறை கொண்டுள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டியது.

நிரந்தரத் தொழிலாளர் ஒழிப்பு

அதன் பின்னர் ஜப்பான் தொழில்முறை என்ற பெயரில் ஒப்பந்தத் தொழில்முறை படிப்படியாக இங்கு தலை தூக்கியது. கடிகாரத் தொழில், ரேடியோ போன்ற நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு ஆகியவை ஜப்பானில் குடிசைத் தொழில் போல் நடைபெற்று வந்தன. அதாவது உதிரி உறுப்புகளை கொடுத்துவிட்டால் ஜப்பானிய மக்கள் அவற்றை வீட்டிலேயே வைத்துப் பொருத்திக் கடிகாரங்களாக, ரேடியோக்களாகத் தொழிற்சாலைகளுக்கு வழங்கிவிடுவர். தொழிற்சாலைகள் அவற்றின் தரம் குறித்து பரிசோதிப்பதற்காகச் சில நிரந்தர நிபுணர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை மட்டும் நிரந்தரத் தொழிலாளராக வைத்துக் கொள்ளும். இந்த நடைமுறை உலகெங்கிலும் உள்ள முதலாளிகளால் கடைப்பிடிக்கப்பட்டது.

சாதகங்கள்

இதில் முதலாளிகளுக்கு இரண்டு சாதகங்கள் இருந்தன. ஒன்று நிரந்தரத் தொழிலாளர்களாக நிறையத் தொழிலாளர்களை வைத்து அவர்களுக்குச் சம்பளத்தோடு உதிரிப் பலன்கள் பலவற்றையும் சட்டப்படி வழங்க வேண்டிய தேவையிருக்காது. இரண்டாவதாக ஒரு கூரையின் கீழ் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் வேலை செய்யும் சூழ்நிலை அங்கு நிலவாது. அத்தகைய சூழ்நிலை உருவாக்கும் தன்னம்பிக்கை மற்றும் அமைப்பாக ஒருங்கிணைந்தால் பல வி­யங்களை சாதிக்கலாம் என்ற மனப்பான்மை ஆகியவை தொழிலாளரிடையே உருவாகாது.

இதுதவிர தொழிலாளர் சட்டங்களில் பல மாறுதல்களை கொண்டுவர இந்திய அரசு பல காலமாக முயன்று கொண்டேயிருந்தது. அதாவது அவர்களது வேலைப் பாதுகாப்பின் மீது கைவைக்க வழிவகுக்கும் சட்டத்திருத்தங்களை அது பல காலம் வலியுறுத்தியே வந்தது. அது மட்டுமின்றி பல சட்டங்கள் மாறியுள்ள சூழ்நிலைக்குத் தகுந்த வகையில் மேம்படுத்தப்படாமல் அவற்றின் மூலமான பலன்கள் தொழிலாளருக்கு கிடைப்பதும் எட்டாக்கனியாக்கப்பட்டன. குறிப்பாக சம்பளப் பட்டுவாடாச் சட்டம் என்ற சட்டம் பல காலம் மாதம் ஒன்றிற்கு ரூபாய் 1500 க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு பொருந்தாது என்ற நிலை 1500 ரூபாய் மாதச் சம்பளம் என்பது எங்குமே நிலவாத காலம் வரை நீடித்தது.

முதலாளித்துவத்தின் செயல்

இவை அனைத்தும் முதலாளித்துவம் அதன் லாப வேட்கையில் அதாகவே செய்ய முனைந்ததும் தொடர்ச்சியாகச் செய்து வந்ததுமாகும். ஆனால் சி.பி.ஐ(எம்). கட்சியின் அகில இந்திய மாநாட்டு நகல் தீர்மானம் இதையும் கூட நவீன தாராளவாதக் கொள்கையின் விளைவாக நிகழ்ந்தது என்று கூறுகிறது.

அதைப்போல் உலகமயப் பின்னணியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக விவசாயிகளின் நிலங்கள் ஆங்காங்கே கையகப்படுத்தப் படுகின்றன. அவ்வாறு விளை நிலங்களைத் தொழிற்சாலை நோக்கங்களுக்காகக் கையகப்படுத்தும் போக்கு சி.பி.ஐ(எம்). கட்சி ஆட்சியிலிருந்த போது மேற்கு வங்கத்திலும் ஏற்பட்டது. அங்கு சிங்கூர், நந்திகிராம் ஆகிய இடங்களில் விளை நிலங்கள் தொழிற்சாலைகள் கட்டுவதற்காகக் கைப்பற்றப்பட்டு அதனையயாட்டி எழுந்த விவசாயிகளின் இயக்கமே தற்போது சி.பி.ஐ(எம்). ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதற்கும் ஒரு முக்கியக் காரணமாக விளங்குகிறது.

உண்மையில் உழைப்புத்திறன் மலிவாகக் கிடைக்கும் இடங்களுக்கு உலகமயப் பின்னணியில் தொழில்கள் செல்லத் தொடங்கிய அந்தச் சூழ்நிலையில் இந்தியா போன்ற ஒருசில நாடுகளில் மட்டுமே சில தொழில்களில் ஒருவகை வளர்ச்சி என்பது ஏற்பட்டது. அந்த நாடுகளில் தொழிற்சாலை நோக்கங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் போக்குத் தோன்றியுள்ளது. ஆனால் உலகமயமும் தாராளமயமும் வந்தாலும் வராவிட்டாலும் தொழிற்சாலை வளர்ச்சி என்பது சராசரியாக ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அதற்காக விளை நிலங்கள் பயன்படுத்தப்படுவதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

ஆனால் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்பனவற்றிற்காக நிலங்களைக் கையகப்படுத்தித் தருவதை அந்தந்த மாநில அரசாங்கங்கள் செய்யத் தொடங்கியுள்ளது தான் இதில் மிகவும் விநோதமானதாகும். தொழிற்சாலை நோக்கங்களுக்காகத் தேவைப்படும் நிலங்களை விவசாயிகளிடமிருந்து அவர்கள் கேட்கும் விலையைக் கொடுத்துத் தொழிற்சாலைகளை நிறுவுபவர்கள் அவர்களாகவே வாங்கிப் பயன்படுத்துவது என்ற எப்போதும் நிலவும் சூழல் நிலவினால் இது ஒரு பிரச்னையாகவே ஆகாது. ஆனால் அரசாங்கங்கள் ஒருபுறம் ஆலை அதிபர்களுக்கு அதிக இடம் வாங்கும் செலவைக் குறைக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளின் வயிற்றிலடித்து அவற்றைப் பெற்றுத் தருகின்றனர். அப்போது தான் பிரச்னை தோன்றுகிறது.

ஆனால் மேற்கு வங்கத்திலோ புத்ததேவ் பட்டாச்சாரியாவின் தலைமையிலிருந்த சி.பி.ஐ(எம்). அரசு முதலாளிகளை அதாவது சிங்கூரில் டாடாவையும் நந்திகிராமில் இந்தோனேசியாவின் சலீம் குழுமத்தினரையும் அவர்களாகவே அவர்கள் நிறுவ உத்தேசித்துள்ள ஆலைகளுக்கான இடங்களை வாங்குவதற்கு அனுமதித்தால் அவர்கள் குறைந்த விலை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றி விடுவார்கள்; அதற்காகவே எங்கள் அரசு தலையிடுகிறது என்று கூறிக்கொண்டு இதில் தலையிட்டு விவசாயிகளின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டது. நிலங்களைக் குறைந்த விலை கொடுத்து வாங்கி முதலாளிகள் விவசாயிகளின் வயிற்றிலடித்து விடுவர் என்ற அவர்களது கருத்து ஒரு சாக்காக இருந்ததே தவிர அதில் உண்மை இருக்கவில்லை. அதனால்தான் அதனையயாட்டி மாபெரும் விவசாயிகளின் எழுச்சி ஏற்பட்டது.

எது தாராளவாதம்

ஒருவகையில் பார்த்தால் இது தாராளவாதக் கொள்கையும் அல்ல. நவீனத் தாராளவாதக் கொள்கையும் அல்ல. தாராளவாதத்தின் ஒரு அடிப்படை அரசின் தலையீடு இல்லாதிருப்பதாகும். ஆனால் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான நிலங்களைக் கையகப்படுத்தும் விசயத்தில் அனைத்து மாநில அரசாங்கங்களும் விவசாய நிலங்களைத் தாங்களே முன்னின்று பொது நோக்கங்களுக்காக அரசாங்கம் தனியார் இடங்களை கையகப்படுத்துவதற்காக இருக்கும் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்து தலையிட்டன.
அதாவது சி.பி.ஐ(எம்). அதன் அரசியல் நகல் தீர்மானத்தில் இதுவும் நவீன தாராளவாதக் கொள்கையின் விளைவாக ஏற்பட்டது என்று கூற வருகிறது. அதாவது தனியார் நிலங்களைப் பொது விசயங்களுக்காக அரசு கையகப்படுத்த வழிவகை செய்யும் சட்டங்கள் இல்லாதிருந்தால் நாங்கள் அதைச் செய்யாதிருந்திருப்போம். அந்தச் சட்டம் இருந்ததும் தொழில் வளர்ச்சிக்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கும் போது அதனைப் பயன்படுத்திக் கொள்ள தாங்கள் விரும்பியதுமே நிலங்களை சிங்கூர், நந்திகிராம் போன்ற இடங்களில் கையகப்படுத்தியது போன்ற விதத்தில் விவசாயிகளின் நிலங்களைத் தாங்கள் கையகப்படுத்தியதற்கான காரணம்; அதாவது சுற்றி வளைத்து நவீன தாராளவாதக் கொள்கை இருந்ததால் தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வந்தன. அவை வந்ததால் தான் இருக்கும் சட்டத்தைப் பயன்படுத்தி நிலங்களைக் கையகப்படுத்தும் வேலையை நாங்கள் செய்தோம். எனவே பழி முழுவதும் நவீன தாராளவாதக் கொள்கை மீதே செல்ல வேண்டும் என்ற பாணியில் அவர்கள் கூற வருகின்றனர்.

தொடர்ச்சியாக காற்றில் பறக்கவிடப்படும் ஜனநாயக நியதிகள்

உலகில் அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் முதலாளித்துவம் வளர்ந்து அது ஏகபோகங்களுக்கு உருக்கொடுத்த நிலையில் அதிகபட்ச லாபம் ஈட்டுவதற்காக அதற்கு முன்பு அதே முதலாளித்துவம் கடைபிடித்த பல ஜனநாயக நியதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டுக் கொண்டிருப்பது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உண்மையாகவே அரசை நடத்துபவர்கள் நாடாளுமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல.
மாறாக அரசு எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அதிகார வர்க்க, தனியார் வர்த்தக, அரசியல் வாதிகளின் கூட்டே என்பது உலகெங்கிலும் நிலைபெற்று வருகிறது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அங்கு பெண்டகன் என்று கூறப்படும் ராணுவ விசயங்களைக் கையாளும் நிறுவனமே அரசை நடத்துகிறது என்பதைப் பலரும் ஒப்புக் கொள்வர். அதாவது ஒரு ராணுவ அதிகார வர்க்க கூட்டே அரசின் முக்கியக் கொள்கைகளைத் தீர்மானிக்கிறது. அதன் ஆலோசனைகளுக்கு அடிபணிந்தே அரசு எந்திரம் செயல்படுகிறது என்று கூறுவர்.

உலக வங்கிக் கடன் பயன்படும் விதம்

இப்போக்கு ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதங்களில் தலையெடுத்து வளர்ந்து வருகிறது. நமது நாட்டில் உலக வங்கியிலிருந்து வளர்ச்சிக்கென நேரடியாகக் கடன் பெறும் உரிமையை மாநில அரசாங்கங்களும் கோருகின்றன. அவ்வாறு அக்கடன் தொகையைப் பெற்று வளர்ச்சிப் பணிக்கு அதனை செலவிடப் போவதாகக் கூறிக் கொண்டு அதில் ஒரு மிகச்சிறு பகுதியை மட்டும் பெயருக்குச் செலவலித்துவிட்டு மீதியை அரசியல் வாதிகளும் ஒப்பந்தக் காரர்களும் பங்கிட்டுக் கொள்ளும் போக்கு ஒளிவுமறைவின்றி நடைபெறுகிறது.
நிர்வாகத்தில் ஓரளவு இருந்த ஜனநாயகப் போக்குகள் மங்கி மறைந்து இதுபோல் அரசியல் வாதிகளும் ஒப்பந்தக் காரர்களும் எளிதில் பணம் ஈட்டுவதற்கு வழிவகுக்கும் ஒரு பாசிஸப் போக்கு எங்கும் வளர்ந்து வருகிறது. இது தொடர்ச்சியாக முதலாளித்துவ அரசமைப்பு இருக்கும் அனைத்து நாடுகளிலும் உருவாகி வளர்ந்து கொண்டிருக்கும் வி­யம். ஆனால் இதுவும் நவீன தாராளவாதக் கொள்கை அமுலாக்கப்பட்ட பின்பு தான் ஏற்பட்டுள்ளது என்று சி.பி.ஐ(எம்) ன் நகல் தீர்மானம் கூறுகிறது.

அடுத்தபடியாகப் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் பெரிதாக வளர்ந்து மலிந்திருக்கும் ஊழலுக்கும் காரணமாக இதே நவீனத் தாராளவாதக் கொள்கையே முன்வைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறோம் என்ற பெயரில் முதலாளித்துவத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சொந்தப் பலன் எதுவும் கருதாது வழிவகுத்துக் கொடுத்த அரசியல் வாதிகள் இருந்தனர்.

நமது நாட்டில் விடுதலை பெற்றுச் சில ஆண்டுகள் வரை இந்தப்போக்கு நீடித்தது. அதன் பின் படிப்படியாக இவ்வாறு சுயலாபம் கருதாது அரசியல் வாழ்க்கை நடத்திய அரசியல் வாதிகள் காணாமல் போய்விட்டனர். படிப்படியாகத் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிகளுக்கு முதலாளித்துவ நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைகளுக்காக மட்டும் பாடுபடுவது பைத்தியக்காரத்தனம் என்ற முடிவிற்குப் பெரும்பான்மை அரசியல் வாதிகள் வந்துவிட்டனர். கோடிகோடியாகத் தனியார் நிறுவனங்கள் பொருளீட்ட உதவி செய்பவர்களாக இருக்கும் தாங்கள் மட்டும் ஏன் எளிய வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்து முதலாளித்துவ நிறுவனங்களிடம் பெரும் தொகைகளைக் கையூட்டாகப் பெறுபவர்களாக அரசியல் வாதிகள் ஆகிவிட்டனர்.

இந்தியச் சூழ்நிலையில் இன்று பொதுத்துறையில் இருக்கும் தொழில்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் போக்கு பெரிய அளவில் நடைபெறும் சூழலில் அரசியலில் புரளும் லஞ்சமும் ஊழலும் பெரிய அளவில் நிகழ்வதாக ஆகியுள்ளது.

ஆனால் அரசுத் தொழில்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் போக்கு இந்தப் புதிய தாராளவாதக் கொள்கை அமுலுக்கு வந்தபின் மட்டும் ஏற்பட்டதல்ல. அரசுத்துறை என்று ஒன்று ஏற்பட்டதே தனியார் தொழில் வளர்ச்சி சிரமமின்றி ஏற்பட வழிவகுப்பதற்குத் தான். அதாவது அதற்கான ஆதாரத் தேவைகளைக் குறைந்த செலவில் தனியார் நிறுவனங்கள் பெறுவதற்கு வழிவகுப்பதற்காகத் தான்.

மேலும் விடுதலை அடைந்த அந்தச் சூழலில் மின்சாரம், தொலைத் தொடர்பு, இரும்பு எஃகு, இரயில்வே போன்ற அனைத்துத் தொழில்களின் வளர்ச்சிக்கும் தேவையான ஆதார வசதிகளை ஏற்படுத்தித் தரும் தொழில்களை நடத்தத் தேவைப்படும் அதிக அளவு மூலதனத்தைக் கொண்டவர்களாக தனியார் முதலாளிகள் எவரும் இருக்கவும் இல்லை.
இன்று அவ்வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் மூலதனம் ஏகபோகங்கள் என்ற அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில் அவர்களது பெருகியுள்ள மூலதனம் அரசுத் துறையிலிருக்கும் தொழில்களிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்பினைக் கோரத் தொடங்கியுள்ளது.

அந்தப் பின்னணியில் தான் அரசுத் துறையின் பங்குகளை தனியாருக்கு விற்க வேண்டும் என்ற போக்கு தலை தூக்கியது. அப்போது அரசுத் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட வாதம் பொதுத்துறை தனியார்துறை போட்டி நிலவினால் தான் பொதுத் துறையிலிருக்கும் திறமையின்மை குறையும் என்பதாக இருந்தது.

ஊழல் செய்வது அரசியல் வாதிகள்; உலகமயமல்ல

இப்போக்கு நவீன தாராளவாதம் என்ற பெயரில் உலகமயம் வந்தபின் இன்னும் துரிதப்பட்டது. தாதுப் பொருட்கள் போன்ற இயற்கை வளங்களை பயன்படுத்துவதற்கு உள்நாட்டு, அந்நிய முதலாளிகளுக்கு உரிமம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள ஊழல் நமது அரசியல் வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரால் செய்யப்படுவதாகும். கண்முன் ஊழல் செய்யும் அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல் கண்ணுக்குத் தெரியாத ஒரு கொள்கையே இதற்குக் காரணம் என்று கூறி நாசூக்காக அவர்களை மூடிமறைப்பதும் ஒரு வகையில் இந்த ஊழலுக்குத் துணை போவதுதான்.

எனவே சி.பி.ஐ(எம்). கட்சி உள்பட இன்று பல கட்சிகள் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பல பிரச்னைகளுக்குப் புதிய பொருளாதாரக் கொள்கை, புதிய தொழில் கொள்கை, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றை உள்ளடக்கிய நவீனத் தாராளவாதக் கொள்கையே காரணம் என்று கூறுவது இந்தக் கொள்கை யாருடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக யாருடைய முன்முயற்சியால் மேற்கொள்ளப் படுகிறதோ அந்த முதலாளித்துவத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தத் தயங்கி மூடிமறைப்பதற்கே ஆகும். மேலும் இவை போன்ற கூற்றுகளை முன்வைப்பதன் மூலம் கொள்கைகள் வர்க்க நோக்கங்கள் எவையும் இன்றி அவையாகவே உருவாக்கப்படுபவை என்ற எண்ணத்தையும் இக்கட்சிகள் ஏற்படுத்துகின்றன.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு வி­யம் இந்தக் கொள்கைகளே பிரச்னைகளுக்குக் காரணம் என்று கூறுபவர்கள் இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் வரை தான் இவ்வாறு கூறுபவர்களாக இருக்கின்றனர்; இவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டால் அதே கொள்கைகளை வேறு வார்த்தைகளில் கூறத் தொடங்குகின்றனர் என்பதே. ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதற்காக சில சமூக ஜனநாயகத் தன்மை வாய்ந்த இலவசத் திட்டங்களை மட்டும் இவர்கள் அவ்வப்போது அதில் சேர்த்துக் கொள்ளத் தொடங்குகின்றனர். அதாவது புதிய மொந்தையில் பழைய கள்என்ற அடிப்படையிலேயே அவர்களுடைய செயல்பாடும் உள்ளது. மத்தியில் அல்ல மேற்கு வங்கம் போன்ற ஒரு மாநிலத்தில் ஆட்சியிலிருந்த போதே சிங்கூர், நந்திகிராம் வி­யங்களில் சி.பி.ஐ(எம்). கட்சி இதையே செய்தது என்பது இதற்கான அசைக்க முடியாத ஆதாரமாகும்.

அதிகார வர்க்கம் வகுக்கிறது

உண்மையில் இதுபோன்ற கொள்கைகள் அவ்வப்போதைய முதலாளித்துவத் தேவை மற்றும் நலன் கருதி முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள், சிந்தனையாளர்கள், அரசு அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் ஆகியவர்களாலேயே பெரிதும் வகுக்கப்படுகின்றன. நடைமுறை அரசியல் என்ற பெயரில் ஊழல் நடவடிக்கைகளிலேயே பெரும்பாலும் ஈடுபடும் அரசியல் வாதிகளால் உருவாக்கப்படுவதில்லை. எனவே இந்தக் கொள்கைகள் அனைத்தின் பின்னணியிலும் முதலாளித்துவ நலன் மற்றும் தேவைகள் இருப்பதையே நாம் பார்க்க முடியும்.

ஜனநாயக சோசலிசம், கலப்புப் பொருளாதாரம், பொதுநல அரசாங்கம் போன்ற வெளிப்படையாக நல்லவையாகக் காட்சியளிக்கும் அதாவது சி.பி.ஐ(எம்). போன்ற கட்சிக்காரர்களாலும் கூட இன்றும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கொள்கைகள் இவையே என்று கருதப்படும் கொள்கைகளும் கூட அவை முன்வைக்கப்பட்ட காலத்தின் முதலாளித்துவத் தேவை மற்றும் நலன்களை அடிப்படையாகக் கொண்டவையாகவே இருந்தன.

எனவே எத்தனை தலைகீழாக நின்றாலும் வரலாற்றில் அன்று நிலவிய அந்தச் சூழலை திருப்பிக் கொண்டுவர முடியாது. அதைப்போல் அந்தச் சூழ்நிலையின் பின்னணியில் தோன்றிய இந்தக் கொள்கைகளையும் திரும்பவும் அமுல்நடத்த முடியாது.

எனவே இதுபோன்ற கொள்கைகளின் பின்னால் ஒளிந்து மறைந்து கொண்டு சுரண்டல் அமைப்பைக் காக்கும் நாடகத்தனத்தைக் கைவிட்டு விட்டு இந்தச் சுரண்டல் அமைப்பே இன்று நிலவும் தொழிலாளர், விவசாயிகள், மாணவர் போன்ற அனைத்து தரப்பினரின் பிரச்னைகளுக்கும் மலிந்துள்ள ஊழலுக்கும் அரசு நிர்வாகத்தில் வளர்ந்து மலிந்து வரும் பாசிஸப் போக்குகளுக்கும் மூலகாரணம் என்பதை உணர்ந்து அந்த முதலாளித்துவ அமைப்பை அகற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பதே ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழகு.

அதைச் செய்வதை விடுத்து சி.பி.ஐ(எம்). கட்சி அதன் நகல் தீர்மானத்தில் அனைத்திற்கும் காரணம் நவீன தாராளவாதக் கொள்கைகளே என்ற கருத்தை முன்வைக்கிறது.

உற்பத்தியில் தேக்கம் உற்பத்தி முறையில் வருவது

அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் தற்போது முதலாளித்துவப் பொருளாதாரத்தில் தோன்றியுள்ள பொருளாதாரத் தேக்கத்திற்கும் நவீனத் தாராளவாதக் கொள்கைகளே காரணம் என்று கூறத் தொடங்கியுள்ளது. சர்வதேசப் பிரச்னைகளை முன்வைக்கும் போது அது முன்வைக்கும் இக்கருத்தை தேசிய அரங்கைத் திரும்பிப் பார்க்கும் போது மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்தியா போன்ற நாடுகளில் இவர்கள் முன்வைக்கும் பிரச்னைகள் அனைத்திற்கும் காரணமான நவீன தாராளவாதக் கொள்கை வந்ததற்குப் பின்பே குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்பது ஏற்பட்டுள்ளது என்பது இவர்களது கண்களுக்குத் தென்பட்டிருக்க வேண்டும். அதாவது ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரும் நெருக்கடியும் அதே சமயத்தில் இந்தியா போன்ற நாடுகளில் ஒப்பீட்டளவிலான வளர்ச்சியும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை இவர்கள் விளக்க முன்வந்திருக்க வேண்டும். அவ்வாறு விளக்க முன்வந்திருந்தால் காலாவதியாகிப் போய்விட்ட முதலாளித்துவ அமைப்பு அதன் இறுதிக் கட்டத்தில் வேறுவழியின்றி குறைந்த கால அடிப்படையில் அதிகபட்ச லாபம் ஈட்டுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளினால் மட்டுமே இவை அனைத்தும் நிகழ்ந்து கொண்டுள்ளன என்பதை மறுக்கவும் மறைக்கவும் முடியாமல் சொல்ல வேண்டி வந்திருக்கும்.

நாடாளுமன்ற வாதத்தில் ஊறித் திளைத்துவிட்ட இவர்களுக்கு அது ஒரு தர்மசங்டமான நிலையாக இருக்கும். எனவேதான் அனைத்துப் பிரச்னைகளையும் அவை குறித்த கேள்வி எழுந்தாலும் எழாவிட்டாலும் விளக்குவது என்ற கம்யூனிஸ நடைமுறைக் கைவிட்டுத் தங்களது சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பயன்படவல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துரைத்து மக்களை ஏமாற்றும் மோசமான போக்கில் இவர்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment