Saturday, September 1, 2012

குடியரசுத் தலைவர் தேர்தல்: சி.பி.ஐ(எம்) ன் சந்தர்ப்பவாத நிலைபாடும் ஜே.என்.யு-வின் எஸ்.எஃப்.ஐ. கிளை கலைப்பும்


நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதென்று இடதுசாரிக் கட்சிகளிலேயே பெரிய கட்சியாக விளங்கும் சி.பி.ஐ(எம்). கட்சி முடிவெடுத்துள்ளது. ஏறக்குறைய அனைத்து விசயங்களிலும் அக்கட்சியுடன் ஒத்துப்போய்க் கொண்டிருந்த சி.பி.ஐ. கட்சி தற்போது அதன் முந்தைய போக்கிலிருந்து மாறுபட்டு யாருக்கும் ஓட்டளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளது.

நடுநிலைத் தன்மை

இத்தேர்தலில் பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் சங்மா எந்த வகையிலும் பிரணாப் முகர்ஜியைக் காட்டிலும் குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதி உடையவர் அல்ல என்று கூற முடியாது. விடுதலை பெற்ற காலம் தொடங்கி நமது நாட்டின் குடியரசுத் தலைவர்களாக அடுத்தடுத்து வந்த ராஜேந்திரப் பிரசாத், ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசைன் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்றவர்கள் எல்லோரும் அறிந்த விதத்தில் நடுநிலைத் தன்மை பெற்றவர்களாக இருந்தனர். அவர்களுக்குப் பின் வந்த ஃபக்ருதீன் அலி அஹமத் காங்கிரஸின் முக்கியத் தலைவராக தீவிர அரசியலில் ஈடுபட்டவராக இருந்தாலும் அவரும் குறிப்பிடத்தக்க அளவிற்கு நடுநிலைத் தன்மை கொண்டவராகவே இருந்தார்.


அப்போக்கிலிருந்து மாறுபட்ட குடியரசுத் தலைவர் வேட்பாளராக இருந்தவர் கியானி ஜெயில் சிங் ஆவார். அவர் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பு நாட்டின் உள்துறை அமைச்சராகப் பல காலம் இருந்தவர். பொதுவாக உள்துறை அமைச்சர்களாக இருப்பவர்கள் நடுநிலைத் தன்மையுடன் இருப்பது மிகவும் கடினம்.

இருந்தாலும் அவர் காங்கிரஸ் கட்சியால் குடியரசுத் தலைவர் ஆக்கப்பட்டார். அதன் பின்னரும் கூட அப்துல் கலாம் போன்ற எந்தக் கட்சியையும் சேராதவர்கள் குடியரசுத் தலைவர்களாக ஆக்கப்பட்டனர்.

இங்கு நாம் நடுநிலைத் தன்மை என்று கூறுவதை அனைத்து வகையிலும் மேற்குறிப்பிட்ட குடியரசுத் தலைவர்கள் எல்லாம் நடுநிலைத் தன்மை கொண்டவர்களாக இருந்தனர் என்று கூறுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒப்புநோக்குமிடத்து அவர்கள் நடுநிலைத் தன்மை கொண்டவர்களாக இருந்தனர் என்தே நமது கருத்து.

அந்த அடிப்படையில் பார்த்தால் பிரணாப் முகர்ஜியைக் காட்டிலும் சங்மா நடுநிலையாக இருக்கக் கூடியவர் என்பதை அவருடைய கடந்த கால நடவடிக்கைகள் பல தெளிவாகவே எடுத்துரைக்கின்றன. அவர் பாராளுமன்றத்தின் சபா நாயகராக இருந்த போதும் அதற்கு முன்பு மனித வளத்துறை அமைச்சராக இருந்த போதும் கூடுமான வரை நடுநிலைத் தன்மை கொண்டவராகவே இருந்துள்ளார். தன் பதவியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் காங்கிரஸ் தலைமையோடு அனைத்து சமயங்களிலும் அனைத்து விசயங்களிலும் ஒத்துப் போனதில்லை.

இப்போதும் கூட அவருடைய மகள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாலும் அவர் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். மேலும் திருமதி சோனியா அவர்கள் பிரதமர் ஆவார் என்ற பேச்சு அடிபட்ட போது அவர் அவருடைய கருத்தான பிறப்பால் இந்தியர் அல்லாத ஒருவர் பிரதமராக வருவது சரியானதல்ல என்ற கருத்தைத் தயக்கமேதுமின்றி முன்வைத்தே காங்கிரஸை விட்டு வெளியேறி பின்னர் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தேசியவாதக் காங்கிரஸ் கட்சியிலும் கூட அனைத்து வி­யங்களிலும் அதன் தலைமையோடு ஒத்துப் போகாதவராகவே அவர் விளங்கினார்.
ஒப்பு நோக்குமிடத்திலான நடுநிலைத் தன்மை குடியரசுத் தலைவராகப் போட்டியிடுவதற்கு ஒரு தகுதி என்றால் அத்தகுதியை பிரணாப் முகர்ஜியைக் காட்டிலும் பல மடங்கு கொண்டவர் சங்மா தான் என்று எவரும் உறுதியுடன் அறுதியிட்டுக் கூற முடியும். அதாவது காங்கிரஸ் கட்சியோ தேசியவாதக் காங்கிரஸோ அவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு நியமிக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை என்றால் அதை யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அக்கட்சிகளின் தலைமைக்கு முழுக்க முழுக்க உகந்தவராக அவர் அக்கட்சிகளில் இருந்த காலத்தில் இருக்கவில்லை.

சி.பி.ஐ(எம்). அந்நிலை எடுத்தது ஏன்?

ஆனால் சி.பி.ஐ(எம்). போன்றதொரு கட்சிக்கு அவரை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? முதற்கண் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகிவிட்ட கட்சி அது. அதன்பின் அது அதன் நிரந்தர எதிரியும் வகுப்புவாத கட்சியுமான பி.ஜே.பி. உடன் சேர்ந்து காங்கிரஸ் அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது வாக்களித்தது. அதாவது இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை மையமாக வைத்து வாக்கெடுப்பு நடந்த போது அது அவ்வாறு வாக்களித்து.

அதன்பின் தொடர்ச்சியாக காங்கிரஸ் கொண்டு வந்த நவீன தாராளமயக் கொள்கையே இன்றைய இந்திய மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் என்ற குற்றச்சாட்டை அக்கட்சி முன்வைத்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய நவீன தாராளமயக் கொள்கையைச் சிரமேற்கொண்டு அமுல் நடத்திக் கொண்டிருந்தவர் தற்போது அக்கட்சியின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் பிரணாப் முகர்ஜி ஆவார்.

பி.ஜே.பி-யின் ஆதரவு காரணமல்ல

அக்கட்சி ஒரு வாதத்தை வேண்டுமானல் முன்வைக்கலாம். அதாவது சங்மா பி.ஜே.பி.யின் ஆதரவுடன் போட்டியிடுகிறார்; அவரை ஒரு இடதுசாரி கட்சியாகிய எங்கள் கட்சி எப்படி ஆதரிக்க முடியும் என்று வேண்டுமானால் கேட்கலாம். வேறு பலரை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடச் செய்ய அக்கட்சி முயற்சித்து அது முடியாமல் போன பின்னணியில் தான் சங்மாவை ஆதரிப்பதென்ற முடிவிற்கு பி.ஜே.பி. கட்சி வந்தது. அதாவது வேறு வழியின்றி அவரை ஆதரிக்கும் முடிவினை அக்கட்சி எடுத்தது. மேலும் சி.பி.ஐ(எம்). கட்சிக்கு நாம் ஏற்கனவே பார்த்தபடி  பி.ஜே.பி. உடன் இணைந்து வாக்களித்த வரலாறும் உண்டு. எனவே சங்மா பி.ஜே.பி. சார்பில் நின்றதல்ல அக்கட்சி பிரணாப் முகர்ஜியை ஆதரித்ததற்குக் காரணம்; அப்படியென்றால் அக்கட்சி இத்தகையதொரு நிலைபாடு எடுத்ததற்கான காரணம் என்ன?

சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கூறப் போனால் வெளிப்படையான நாடாளுமன்ற வாதமே அக்கட்சியை இந்த நிலை எடுக்க இட்டுச் சென்றுள்ளது. அதனால் தான் தாங்கள் ஏன் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறோம் என்பதற்கு எந்த வகையான விளக்கத்தையும் முன் வைக்காமல் அவர் தான் அப்பதவிக்குப் பொருத்தமானவர் என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறுகின்றனர்.

நிறைவேறாத உபாயம்

அதாவது மேற்குவங்க முதல்வராக தற்போது உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும் தற்போதைய முதல்வரின் தந்தையுமான முலயாம் சிங் ஆதரவுடன் சேர்ந்து அப்துல் கலாம், மன்மோகன் சிங், சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரின் பெயர்களை குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முதலில் முன் மொழிந்தனர். பிராந்தியக் கட்சிகளின் ஆதவினை ஒருங்குதிரட்டி அகில இந்திய அரசியலில் இன்னும் கூடுதல் பங்கினை வகிக்கலாம் என்ற அடிப்படையில் இதனை ஒரு தந்திர உபாயமாக முன்வைத்தனர்.

ஆனால் அவர்களில் யாருக்கும் ஆதரவளிக்க காங்கிரஸ், பி.ஜே.பி. அல்லாத வேறு கட்சிகள் பெரிதாக முன்வரவில்லை. அந்த நிலையில் இடையிலேயே தனது நிலையை மாற்றிக் கொண்டு காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்ற முடிவினை முலயாம் சிங் யாதவ் மம்தா பானர்ஜியை கலந்து ஆலோசிக்காமலேயே எடுத்துவிட்டார். ஆனால் மம்தா பானர்ஜி பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்ற முடிவை பல நாட்களாக எடுக்கவில்லை. ஏனெனில் அவர் எடுத்ததாக அறிவித்துவிட்ட முடிவை அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்ளக் கூடியவர் அல்ல என்று அவர் குறித்து அவர் ஏற்படுத்தியிருந்த பெயர் பாதிக்கப்படக் கூடாது என்பதால் அவர் அந்த அறிவிப்பினை வெளியிடவில்லை.

தேசிய இனவாத உணர்வு

இந்த நிலையில் வங்காள மக்களின் வங்காள தேசிய இன உணர்வைப் பயன்படுத்தி மம்தா பானர்ஜியை ஓரம் கட்ட இது தான் சரியான தருணம் என்ற எண்ணத்திலேயே சி.பி.ஐ(எம்). கட்சி  அதாவது தேசிய வாதத்தை அல்ல சர்வதேசிய வாதத்தை உயர்த்திப்பிடிக்க வேண்டியதொரு கட்சி தனது நாடாளுமன்ற நலனுக்கு வங்க மக்களிடையே உள்ளார்ந்து இருக்கும் தேசிய இன உணர்வைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக  இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாத முடிவை எடுத்துள்ளது.

கடந்த காலத்தில் பல சந்தர்ப்பவாத முடிவுகளை அக்கட்சி எடுத்திருந்தாலும் கூட அம்முடிவுகளை உரத்த குரலில் ஏதாவதொரு சால்சாப்பு வாதத்தை முன்வைத்து நிலைநாட்டக் கூடியவர்களே அக்கட்சியின் தலைவர்கள். ஆனால் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்று அவர்கள் எடுத்த இந்த முடிவை அப்படிப்பட்ட வாதங்களின் மூலமாகக் கூட அவர்களால் நிலைநாட்ட முடியவில்லை.

நவீன தாரளவாதம்

ஏனெனில் சமீபத்தில் நடந்து முடிந்த அவர்களது கட்சிக் காங்கிரஸில் அவர்கள் நிறைவேற்றிய அரசியல் தீர்மானம் ஆணித்தரமாக ஒரு விசயத்தை முன்வைத்தது. அதாவது நவீன தாராளவாத கொள்கையே உலக அளவில் இன்று முதலாளித்துவம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கும் உலக நாடுகளின் அனைத்துப்பகுதி மக்களும் எதிர் கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கும் ஒரே காரணம் என்ற வாதத்தை முன்வைத்தது.
அதாவது அடிப்படை மார்க்சியம் முன்வைக்கும் முதலாளித்துவமே நெருக்கடியை உருவாக்கக் கூடியது தான்; வர்க்க நலன் கருதியே கொள்கைகள் கொண்டுவரப் படுகின்றன; மற்றபடி கொள்கைகள் தாமாகவே தோன்றி வலுப்பெற்று சமூகக் கேடுகளை விளைவிப்பதில்லை என்பதையயல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டு நவீன தாராளவாதக் கொள்கையே அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் என்ற வாதத்தை முன்வைத்தனர். அதிலும் நாம் மேலே கூறிய விதத்தில் அக்கொள்கைகளைத் தீவிரமாக அமுலாக்கிக் கொண்டிருக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி என்பதும் அவர்களுடைய மற்றொரு வாதம்.

அக்கொள்கை அக்கட்சியின் அமைச்சரவையில் உள்ள எவராலாவது உறுதியுடன் அமுலாக்கப்பட முடியுமென்றால் அது நிதி அமைச்சர் மூலமாகத் தான் என்பதும் மிகவும் வெளிப்படையான ஒரு வி­யம். அத்தகைய நிதி அமைச்சராக இருந்த ஒருவரை ஆதரிக்கும் நிலை எடுத்ததால் அதாவது நேற்று முன்வைத்த கருத்தை உடனடியாக விழுங்கி இன்று வேறொரு கருத்தை முன்வைக்க முடியாது என்பதால் அக்கட்சியின் தலைவர்கள் இந்த முடிவு குறித்து ஒரு சால்சாப்பு வாதத்தைக் கூட முன்வைக்க முடியாதவர்களாக இருந்தனர்.
ஏதோ காதும் காதும் வைத்தது போல் இந்த முடிவை அமுலாக்கிவிட்டுப் போவோம் என்று கருதியிருந்த அவர்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அக்கட்சி அறிவு ஜீவிகள் பலரைக் கொண்ட கட்சி என்ற தோற்றத்தைக் கொடுத்தது அக்கட்சியின் மாணவர் அமைப்பிற்குத் தொடர்ச்சியாக இந்தியாவின் தலை சிறந்த பல்கலைக் கழகமாகக் கருதப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் கிடைத்துவந்த ஆதரவாகும்.

அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான சீத்தாராம் யெச்சூரி போன்றவர்கள் இப்பல்கலை கழகத்தின் முன்னாள் மாணவர்கள். அதுமட்டுமின்றி ஜே.என்.யு.வின் மாணவர் சங்கத் தேர்தல்களில் அதிக இடங்களைக் கைப்பற்றி எப்போதுமே ஜே.என்.யு. மாணவர் சங்கத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கட்சியாவும் இது விளங்கியது.

மட்டையடி வாதத்தால் மாணவரை சமாளிக்க முடியாது

இன்று அக்கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் பலரை அவர்களது உணர்வுமட்டக் குறைவைப் பயன்படுத்தி ஏதாவதொரு வாதத்தை முன்வைத்து தாங்கள் எடுக்கும் எந்த நிலையையும் ஏற்றுக்கொள்ளச் செய்வது சி.பி.ஐ(எம்). கட்சிக்குக் கடுமையான பணியல்ல. ஆனால் ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்களிடையே அத்தகைய அடிப்படையற்ற வாதங்களை முன்வைத்து அவர்களுடைய இந்தச் சந்தர்ப்பவாத நிலையை நிலைநாட்ட முடியவில்லை.

அதாவது ஜே.என்.யு. பல்கலைக் கழகத்தின் எஸ்.எஃப்.ஐ. கிளையைச் சேர்ந்த மாணவர்களும் கூட அடிப்படை மார்க்சியம் காட்டும் வழியில் ஏன் முதலாளி வர்க்கமே பிரச்னைகள் அனைத்திற்கும் காரணம் என்பதை மூடி மறைத்து நவீன தாராளவாதக் கொள்கையை அவற்றிற்குக் காரணமாக்குகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பவில்லை. மாறாக நவீன தாராளவாதக் கொள்கையை தலைகீழாக நின்று அமுலாக்கும் பிரணாப் முகர்ஜியை எப்படி ஆதரிக்கலாம் என்ற கேள்வியையே எழுப்பினர்.

கிளைக் கலைப்பு

அதற்குப் பொருத்தமானதொரு பதிலைக் கூற முடியாத அக்கட்சி ஜே.என்.யு. பல்கலைக் கழகத்தின் எஸ்.எஃப்.ஐ. கிளையையே கலைப்பதாக அறிவித்துள்ளது. எந்த வகையில் பார்த்தாலும் அத்தகைய கேள்வி எழுப்பிய மாணவர்களுக்கு உரிய பதில் கூறக் கடமைப்பட்டவர்களே சி.பி.ஐ(எம்) ன் தலைவர்கள் ஏனெனில் அவர்கள் முன்வைத்த வாதத்தைக் கோடிட்டுக் காட்டியே மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதற்கு உரிய விளக்கம் தராதது மட்டுமின்றி அக்கல்லூரியின் மாணவர் சங்கக் கிளையினைக் கலைத்ததற்கும் காரணம் இல்லாமல் இல்லை. மேற்கு வங்கத்தில் இழந்த செல்வாக்கை ஏதாவது ஒரு வகையில் திரும்பவும் நிலைநாட்ட வேண்டும் என்று அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சிக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு வங்காள தேசிய உணர்வினைப் பயன்படுத்துவது என்பது; அதுவும் மம்தா பானர்ஜி மாறுபட்ட தனது நிலையில் ஊன்றி நிற்பார் என்று பலரும் எதிர்பார்த்த சூழ்நிலையில் அவர் இன்னும் ஊன்றி நின்றிருந்தார் என்றால் இந்த நிலைபாடு ஒரு பெரும் பலனைத் தேர்தல் அரசியலில் நமக்கு அளித்திருக்கும்; அதை வெளியில் சொல்லக் கூசி பிரணாப் முகர்ஜி நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர் என்று எதையாவது ஒன்றைக் கூறி நாசூக்காகச் செய்ய நினைத்தால் அதைப் போய் கேள்வி கேட்டு பிரச்னை ஆக்குகிறார்கள் படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்ற அடிப்படையில் செயல்படும் இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள்; இந்த அடிப்படையிலேயே ஒரு விளக்கமும் கூறாமல் வழக்கமாகக் கூறும் அமைப்பின் கட்டுப்பாடு என்பதை முன்வைத்து கிளையினைக் கலைத்துள்ளனர். அதாவது முழுக்க முழுக்கத் தேர்தல் அரசியலே அக்கட்சியின் அரசியலாக ஆகிப்போனதே அக்கட்சியினை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. 

இதையயல்லாம் செய்து ஆட்சிக்கு வந்து எந்த மாற்றத்தை மக்களது வாழ்க்கையில் அக்கட்சி கொண்டுவரப் போகிறது? சிங்கூர், நந்திகிராம் அனுபவங்கள் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் எதையும் இக்கட்சி கொண்டுவரப் போவதை உணர்த்தவில்லை; மாறாக முதலாளித்துவத்திற்குச் சேவை செய்யும் ஒரு முதலாளித்துவ மாற்றுக் கட்சியாக இக்கட்சி ஆகியுள்ளதையே உணர்த்துகிறது.

பாவம் அக்கட்சியினர்; இத்தனை செய்தும் இதன் முழுப் பலனை அவர்களால் அடைய முடியாமல் போய்விட்டது. ஆம், மம்தா பானர்ஜி இறுதியில் அவர்களுக்கு ஆதரவாக வங்க தேசிய இனவாதக் காற்று முழுக்கச் சென்று விடாமல் இருக்கும் வகையில் அதனைத் தன் பக்கமும் திருப்பிவிட்டுச் சூழ்நிலையை சமன் செய்து விட்டார். அதாவது பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்ற முடிவை இறுதியில் அவரும் அறிவித்து விட்டார்.

No comments:

Post a Comment