Powered By Blogger

Thursday, November 3, 2011

சி.பி.ஐ (எம்)ன் சிவப்பு முகமூடியை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த சிங்கூர், நந்திகிராம் நிகழ்வுகள்

2007 மே மாத வெளியீடு
“உழுபவனுக்கே நிலம் சொந்தம்”
“டாடா பிர்லா போன்ற 75 ஏகபோக குடும்பங்களின் ஆட்சியை அனுமதியோம்”.
“உண்டு கொழுத்தவன் மாடியிலே உழைத்துக் கொடுத்தவன் வீதியிலே சட்டங்கள் எல்லாம் ஏட்டினிலே இந்தச்
சண்டாளர்களின் ஆட்சியிலே.”
- இவையெல்லாம் சி.பி.ஐ (எம்) கட்சியின் பல ஊர்வலங்களில் பலமுறை முழங்கப்பட்டு பலராலும் கேட்கப்பட்ட முழக்கங்கள். இவை முழங்கப்பட்ட தொனியையும், முழங்கியவர்களிடம் இருந்த உணர்ச்சிப் பெருக்கையும் அப்போது கேட்டவர்கள் இந்த முழக்கங்களில் உள் பொதிந்திருக்கும் கொள்கைகளிலிருந்து என்றேனும் இக்கட்சியினர் தடம்புரளுவர் என்று எண்ணியிருப்பார்களா என்றால் நிச்சயம் எண்ணியிருக்கமாட்டார்கள். அத்தனை உணர்ச்சிப் பெருக்கு, அத்தனை அரசியல் வேகம்.


முழக்கங்களில் தலைகீழ் மாற்றம்
ஆனால் இன்று நாம் மேற்கு வங்கத்தின் செய்திப் பத்திரிக்கைகளிலும், பொதுக் கூட்டங்களிலும் கேட்பவை வேறுபட்ட முழக்கங்களாக உள்ளன.
“சிங்கூரில் மேற்கு வங்க அரசு கையகப் படுத்தியுள்ள நிலம் டாட்டாவின் கார் தொழிற்சாலைக்கே.”
“டாட்டாவிற்கு நான் கொடுத்த வாக்குறுதியை என்றும் காப்பாற்றுவேன்.”
சிங்குர் விவசாயிகளிடமிருந்து நிலத்தை 1894ல் இயற்றப்பட்டு தற்போது அமலில் இருக்கும் நில ஆர்ஜித சட்டப்படியே கையகப் படுத்தினேன்.
இந்த முத்து முத்தான கருத்துக்கள் வேறு யாருடையவையுமல்ல. மே.வங்க முதல்வரும் சி.பி.ஐ (எம்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான சாட்சாத் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் கருத்துக்களே. சாதாரண கருத்துக்களல்ல. காபி ரைட் பெற்று வைத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்.
ஏன் இந்தத் தலைகீழ் மாற்றம் ? புத்த தேவ் சொல்கிறார்: “காலம் மாறிவிட்டது. அதற்குத் தகுந்தாற் போல் மாறாதவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்க முடியாது. காலத்தின் மாற்றத்திற்குத் தகுந்தாற்போல் கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளாவிட்டால் கம்யூனிஸம் காலாவதியாகிப் போன கண்ணோட்டமாக ஆகிவிடும்.”
காலத்தின் மாற்றத்தை எடுத்துச் சொல்லும் எட்டப்பர்
இத்தனை தூரம் ஆணித்தரமாக காலத்தின் மாற்றத்தை அவர் வலியுறுத்திக் கூறும் போது கேட்பவரிடம் நியாயமான எதிர்பார்ப்புகள் எழத்தானே செய்யும் ? ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எத்தகையவை என்பது குறித்த சித்தாந்த ரீதியான விளக்கங்கள் அவரிடமிருந்து வருமென்று. ஏனெனில் அவர் அவரது கட்சியின் விண்ணப்ப அல்லது பரீட்சார்த்த உறுப்பினர் அல்லவே ? அவர் அக்கட்சியின் மிக மிக உயர்ந்த அமைப்பான அரசியல் தலைமைக் குழுவின் உறுப்பினர் அல்லவா ? ஆம் அவரிடமிருந்து விளக்கம் வரவே செய்தது; ஆனால் மிகச் சுருக்கமானதாக. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே புத்திசாலித் தனத்தின் சாரமல்லவா ? அதுவும் புத்ததேவ் வங்க மொழியில் தேர்ந்த கவிஞர் வேறு. ஒன்றை விளக்குவதைக் காட்டிலும் அழகு நயத்துடன் சுட்டிக்காட்டுபவர் தானே கவிஞர். அந்த அடிப்படையில் ரத்தினச் சுருக்கமாக அவர் கூறுகிறார். ஆம் காலம் மாறிவிட்டது. உலகமயம் வந்து விட்டது. அதனை ஒன்றும் செய்ய முடியாது அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தக் கருத்தை இதே வார்த்தைகளிலோ அல்லது வேறு வார்த்தைகளிலோ வேறு எங்கோ எவரிடமிருந்தோ? - எவரிடமிருந்து என்று சொன்னால் ஒருமையல்லவா ? - பலரிடமிருந்து இதனைக் கேட்டிருக்கிறோம். மன்மோகன் சிங்கில் தொடங்கி சுப்பிரமணியன் சுவாமி வரை பலரிடமிருந்தும் நாம் இதனைக் கேட்டிருக்கிறோம். ஆனால் இவர்களெல்லாம் முதலாளித்துவ தாசர்களாயிற்றே கம்யூனிஸ்டுகள் அல்லவே. இவர்களுடைய கருத்துக்களும் கம்யூனிஸ்ட் புத்த தேவின் கருத்துக்களும் எங்ஙனம் ஒத்துப் போகும் ? எங்ஙனம் ஒத்துப் போக முடியும் ?
இந்தக் கருத்துக்களை உதிர்க்கும் அவர் இதற்கான காரணமாகக் கூறுவதென்ன? காரணம் இல்லாமலா இருக்கும். நிச்சயம் இருக்கும். அவர் கூறுகிறார்: “ஏற்கனவே நிலச்சீர்திருத்தம் மூலம் விவசாய உற்பத்திப் பெருக்கத்திற்கு வழி வகுத்துவிட்டோம். அடுத்து தொழில் மயமாக்க வேண்டாமா ? அதன் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டாமா ? தொழில் மயம் வேண்டும் என்பதற்காக டாட்டாவிடம் பல முறை பேசி உத்தராஞ்சல் மாநிலத்திற்குச் செல்லவிருந்த கார் தொழிற்சாலையை நான் இங்கு கொண்டு வந்திருக்கிறேன்.”
ஏகபோக முதலாளி ஒரு தொழில் தொடங்குவதும் தொழில்மயமாவதும் ஒன்றல்ல
இங்கு ஒரு கேள்வி உங்களுக்கு எழலாம். உத்தராஞ்சல் என்பது வேறொரு நாட்டில் உள்ள மாநிலம் அல்லவே? அதுவும் இந்தியாவில் இருப்பது தானே. நீங்கள் அரசியல் தலைமைக் குழுவின் உறுப்பினராக இருக்கும் கட்சியும் இந்தியக் கம்யூனிஸ்ட கட்சி (மார்க்சிஸ்ட்) என்ற அகில இந்தியக் கட்சி தானே. இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் தொழில்மயமானால் அதில் உங்களுக்கென்ன நஷ்டம் என்ற கேள்வி எழலாம். இன்னொரு கேள்வியும் எழலாம். உத்திராஞ்சலுக்கு செல்லவிருந்த தொழிற்சாலையைத் தடுத்து ஆண்டிற்கு இருபோகம் விளையும் சிங்கூர் நிலத்தில் அதை அமைக்க தேர்ந்தெடுத்தது ஏன் ? என்ற கேள்வியும் எழலாம். அதனால் தானே இத்தனை பிரச்சனையும் ? இதை நீங்கள் கேட்டால் ஒரு மாநிலத்தில் ஆட்சி செய்யும் போது அம்மாநிலத்தை தொழில்மயமாக்குவது அவசியம் தானே ? என்னைப் போன்ற பொறுப்பானதொரு முதல் மந்திரி அந்தக் கடமையைச் செய்யாமல் எவ்வாறு இருக்க முடியும் ? என்று அவர் கேட்கலாம். அப்படியானால் மாநில முதல் மந்திரிகள் நினைத்தால்-முயற்சி எடுத்தால் அந்த மாநிலம் தொழில் மயமாகும் ? அப்படித்தானே. மேலும் தொழில்மயமாவது என்று மூடு மந்திரமாக கூறினால் எப்படி ? ஏனெனில் தொழில் மயமாதல் என்ற வார்த்தை சோவியத் யூனியனில் திட்டமிடுதல் மூலமாக சோஷலிஸத் தொழில் மயமாக்கல் நடைபெற்றதைக் குறிக்கும் சொல். அத்தகைய திட்டமிடுதல்களில் பாட்டாளிவர்க்க அரசின் முயற்சியும் பங்கும் பெருமளவு இருந்தது. அதைப் போல் புத்த தேவும் பாட்டாளி வர்க்க அரசு ஒன்றை மேற்கு வங்கத்தில் நடத்திக் கொண்டிருக்கிறாரா ? சோஷலிஸத் திட்டமிடுதலைப் போல் மக்களின் தேவையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு கார் தொழிற்சாலை சிங்கூரில் அமைக்கப்படுகிறதா ? எதுவுமேயில்லை. முதலாளித்துவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் முதலாளித்துவ அரசு எந்திரத்தின் இயக்குனரே இவர். இவர் ஏற்று நடத்துவது பாட்டாளி வர்க்க அரசு எந்திரமல்ல. முதலாளித்துவ அரசு எந்திரம்.
எனவே இவர் தொழில் மயமாக்கல் என்ற உயர்ந்த சொல்லை தொழிலாளரைச் சுரண்டி ஆதாயம் பெற நினைக்கும் ஒரு ஏகபோக முதலாளிக்கு ஏஜண்டாகச் செயல்பட்டு உதவுவதற்குப் பயன்படுத்துகிறார். இதுதான் ஒளிவு மறைவற்ற அப்பட்டமான உண்மை.
அதிகபட்ச லாபக் கண்ணோட்டமே எங்கு தொழில் தொடங்குவது என்பதைத் தீர்மானிக்கிறது
ஒரு முதலாளித்துவ அமைப்பில் முதலாளிகளே தொழில் தொடங்குபவர்கள். அப்போது அவர்கள் தங்களக்கு அதிகபட்சம் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ள இடத்திலேயே தொழில்களை தொடங்குவர். அதை விடுத்து இந்த அல்லது அந்த முதல் மந்திரி கேட்டுக் கொண்டார் என்பதற்காக அவர்கள் தொழிலை தொடங்குவதில்லை. அந்த அடிப்படையில் மேற்கு வங்கத்தில் கல்வியறிவு பெற்ற தகுதியும் திறமையும் பொருந்திய தொழிலாளர்கள் அதிகபட்சம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கல்கத்தா போன்ற ஒரு மிகப்பெரிய நகரத்தின் அருகாமையில் தொழிற்சாலை தொடங்கவிருக்குமிடமான சிங்கூர் அமைந்திருக்கிறது அப்பகுதியிலிருந்து பிறபகுதிகளுக்கு கார்களை கொண்டு செல்வதற்கு போக்குவரத்து வசதி ரெயில்வே வசதி போன்ற பல வசதிகள் உள்ளன. கார் தயாரிக்க தேவைப்படும் இடு பொருளான இரும்பு எஃகு போன்றவற்றை உற்பத்தி இடத்திற்கு கொண்டுவருவதற்கு போக்குவரத்து வசதி உள்ளது. இரும்பு எஃகு தொழிற்சாலைகள் அருகாமையில் இருக்கின்றன. இவையே பிரதானமாக டாடா-தொழிற்சாலையை சிங்கூரில் அமைக்க விரும்பியதற்கான காரணமாகும். புத்ததேவ் அவரது அறிக்கையிலேயே கூறியுள்ளார். அதாவது முதலில் டாடா-வின் தொழிற்சாலைக்குத் தான் வேறு ஒரு இடத்தை காட்டியதாகவும் டாடாவோ தொழிற்சாலை ஆரம்பிக்கவிருக்கப்படும் இடம் கல்கத்தாவிற்கு மிக அருகாமையில் இருக்க வேண்டும் என்று விரும்பியதாகவும் அதனாலேயே தான் சிங்கூரை தெரிவு செய்ததாகவும் கூறியுள்ளார்கள். இந்த காரணிகளை தவிர்த்து வேறு சில காரணங்களுக்கும் டாடா சிங்கூரைத் தேர்ந்தெடுத்ததற்கு இருக்கலாம். தற்போதெல்லாம் குறைந்த விலையில் கார் தயாரித்து விற்கும் தொழிலதிபர்கள் பல யுக்திகளை மேற்கொள்ளகின்றனர். காரின் பிரதான பாகங்கள் தயாரிப்பதை மட்டுமே தங்களது பிரதான தொழிற்சாலையில் அவர்கள் வைத்துக் கொள்கின்றனர். உதிரி உறுப்புகள் அனைத்தையும் சிறு தொழிலதிபர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு உதிரி உறுப்புகள் செய்யும் திறமையும் தகுதியும் பெற்ற தொழிலாளர்கள் உத்தராஞ்சல் பகுதியைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக கல்கத்தாவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களைக் கொண்டு மிகக் குறைந்த விலைக்கு உதிரி உறுப்புகளைத் தயாரித்து தங்கு தடையின்றி அவற்றை டாடா-நிறுவனத்திற்கு சப்ளை செய்ய அப்பகுதியிலுள்ள சிறு தொழிலதிபர்களால் முடியும். இதனையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் டாடா தனது தொழிற்சாலையை சிங்கூரில் தொடங்க முடிவெடுத்திருப்பார். இது போன்ற காரணிகளே முதலாளிகள் தொழிற்சாலைகள் தொடங்க தீர்மானகரமான விதிகளாக செயல்படுகின்றனவேயன்றி எந்த தனிநபரின் உத்வேகமும் முயற்சியும் தொழில் வளர்ச்சியை பிரதானமாக தீர்மானிப்பதில்லை.
1967ல் நிலச்சீர்திருத்தம் விவசாயிகளின் இயக்கத்தின் விளைவே
அப்படியானால் அடுத்து ஒரு கேள்வி எழலாம். அதாவது இவரால் தொழில் மயமாக்கல் செய்ய முடியாதென்றால் நிலச்சீர்திருத்தம் மட்டும் மற்ற எல்லா மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பாக செய்ததாக இவர் கூறுகிறாரே. அதை மட்டும் எப்படி இவர்களால் செய்ய முடிந்தது ? நிலச்சீர்திருத்தம் டாட்டாவிற்கு நிலம் கொடுக்க நில ஆர்ஜித சட்டத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்டது போல் செய்யப்படவில்லை. அவ்வாறு சட்டம் போட்டாலும் உடைமை வர்க்கங்களின் அரசு எந்திரத்தின் அங்கமான அரசு அதிகாரிகளையும், அலுவலர்களையும் கொண்டு அதனை அமல் செய்ய முடியாது. அப்படியானால் நிலச்சீர்திருத்தம் அங்கு எப்படித்தான் நடந்தது ? இக்கேள்விக்கான பதிலைப் பெற வேண்டுமானால் 1967ல் அமைக்கப்பட்ட முதல் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் அரசாங்கம், அதில் அங்கம் வகித்த கட்சிகள், அவை முன் வைத்த கோரிக்கைகள், அதற்கு அம்முன்னணிக்குத் தலைமையேற்ற சி.பி.ஐ (எம்) இணங்க வேண்டியிருந்த சூழ்நிலை ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். 1967-ல் சி.பி.ஐ (எம்) வங்காள காங்கிரஸ், எஸ்.யூ.சி.ஐ, சி.பி.ஐ, ஆர்.எஸ்.பி, பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து இடது சாரி ஜனநாயக ஆட்சியினை அமைத்தன. சி.பி.ஐ (எம்) அப்போது சட்ட மன்றத்தில் பெற்றிருந்தவை 43 இடங்கள் தான். எனவே பல்வேறு இடது சாரிக்கட்சிகளின் கோரிக்கைகளை அக்கட்சி ஏற்று நடத்த வேண்டிய கட்டாயத்திலிருந்தது. அப்படிப்பட்டதொரு கட்டாயத்தின் காரணமாகவே முதல் மந்திரி பொறுப்பை வங்காள காங்கிரஸின் அஜாய் முகர்ஜிக்கு அப்போது கொடுக்க வேண்டியிருந்தது. இடதுசாரிக் கட்சிகளின் கோரிக்கைகளுக்கிணங்க 1967ல் மேற்கு வங்கத்தில் அமைக்கப்பட்ட இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கம், முதலாளி, தொழிலாளி பிரச்சனையில் போலீஸ் தலையீடு இராது என்ற கொள்கை அறிவிப்பினைச் செய்தது. பிற இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவின்றி அரசாங்கம் நீடிக்கவியாலாது என்ற நிலையில் அத்தகைய உண்மையான இடது சாரிக் கட்சிகளின் வற்புறுத்தலினால் அக்கொள்கையினை வேறுவழியின்றி சி.பி.ஐ (எம்) கட்சி அமல் நடத்தியது.
அதன் விளைவாக உழைப்பாளர் போராட்டங்கள் மாநிலத்தில் பல்கிப் பெருகின. கெரோ போன்ற புதிய போராட்ட முறைகளும் தோன்றி தொழிலாளரைப் பட்டினி போட்டுப் பணிய வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது சி.பி.ஐ (எம்) கட்சியினரும் புத்ததேவும் தம்பட்டமடித்துக் கொள்கிறார்களே நிலச்சீர்திருத்தம் அதுவும் மற்ற அனைத்து மாநிலங்களில் கொண்டுவரப்பட்டதைக் காட்டிலும் சிறப்பாகவும் சரியாகவும் மேற்கு வங்கத்தில் செய்யப்பட்டது. உபரி நிலங்கள் விவசாயத் தொழிலாளருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. அத்தகைய நிலச்சீர்திருத்தம் அரசாங்க நிர்வாகத்தால் செய்யப்படவில்லை. மாறாக மக்கள் இயக்கங்களில் போலீஸ் தலையீடு இராது என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டதால் தங்கு தடையின்றித் தட்டியெழுப்பப்பட்ட சிறுவிவசாயிகள், விவசாயத் தொழிலாளரின் இயக்கம் காரணமாகவே செயல்படுத்தப்பட்டது. நிலச்சீர்திருத்தம் ஓரளவு சிறப்புடன் நடைபெற்றதன் பின்னணியும் காரணமும் இதுதான். எனவே இப்போது தொழில் மயமாக்கலுக்காக புத்ததேவும் அவரது கட்சியும் கடைபிடிக்கும் நடைமுறையிலிருந்து நிலச்சீர்திருத்தம் கொண்டுவருவதற்காக 1967 இடதுசாரி அரசாங்கம் கடைப்பிடித்த நடைமுறை 100 சதவீதம் வேறுபட்டது. அன்று விவசாயிகள், விவசாயத் தொழிலாளரின் இயக்கத்தைத் தட்டி எழுப்பி நிலச்சீர்திருத்தம் அமல் செய்யப்பட்டது. இன்று விவசாயிகளை அடக்கி ஒடுக்கி இவரது “தொழில் மயமாக்கல்” செய்யப்படுகிறது.
அரசாங்க அதிகாரத்திற்கு வந்தாலும் கம்யூனிஸ்டுகள் செய்யவேண்டியதென்ன ?
அடுத்து ஒரு கேள்வி எழலாம். அப்படியானால் அரசாங்கத்தால் செய்ய முடிந்த காரியம் என்று எதுவுமே இல்லையா? அப்படியானால் கம்யூனிஸ்டுகள் அரசாங்க அதிகாரத்திற்கு வருவதே அர்த்தமற்றது தானே. புத்ததேவிடம் ‘ஏகபோக முதலாளிகளின் நலனுக்கு உதவுகிறீர்களே‘ என்பது போன்ற இக்கட்டான கேள்விகள் அவ்வப்போது சிலரால் எழுப்பப்படும் போது மற்ற சமயங்களில் தங்கள் அரசாங்கம் நிலச்சீர்திருத்தம் கொண்டுவந்தது தொழில் மயத்தைக் கொண்டு வருகிறது என உண்மைக்குப் புறம்பாக வாய்ப்பந்தல் போடும் அவர் சாதுர்யமாக பதிலளிக்கவும் செய்கிறார். அவர் கூறுகிறார்: “ஒரு மாநிலத்தில் மட்டும் தன்னால் சோஷலிசத்தைக் கொண்டுவர முடியாது.” உண்மை என்னவென்றால் இந்த முதலாளித்துவ அமைப்பில் உண்மையான கம்யூனிஸ்டுகள் கூட ஒரு மாநிலத்தில் அல்ல மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் முதலாளித்துவ அரசு எந்திரத்தை வைத்துக் கொண்டு சோஷலிஸம் அல்ல இன்றைய நிலையில் ஒரு பொது நல அரசையே கூட நடத்த முடியாது. ஆனால் அதன் பொருள் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலின் மூலம் ஒரு மாநிலத்தில் ஆட்சிக்கு வர வாய்ப்பிருந்தாலும் அவ்வாறு வரக்கூடாது என்பதல்ல. ஆனால் அது அவ்வாறு ஆட்சிக்கு வந்தால் சோஷலிஸத்தை அம்மாநிலத்தில் கொண்டு வர முடியாது என்பதற்காக புத்ததேவ் செய்து கொண்டிருப்பதைப் போல முதலாளித்துவத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
மாறாக அக்கட்சி உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்குமானால் அது சோஷலிஸத் திசை வழியில் மக்கள் இயக்கங்களும், போராட்டங்களும் பல்கிப் பெருகும் விதத்திலேயே நடந்து கொள்ள வேண்டும். அந்தத் திசை வழியில் குறிப்பாக தனது, போலீஸ் கொள்கையை வகுத்தெடுக்கவேண்டும்.
1977 முதல் அம்பலமாகத் தொடங்கிய சி.பி.ஐ (எம்) ன் உண்மை முகம்
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிலச்சீர்திருத்தம் தங்களது அரசின் சாதனையே என்ற கூற்று எத்தனை பொய்யானது என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் அக்கட்சி தனியாக ஆட்சி அமைக்கும் அளவிற்கு தனிப் பெரும்பான்மை பெற்றவுடனையே நிகழத் தொடங்கின. பல்கிப் பெருகிய மக்கள் இயக்கங்களின் விளைவாக ஏற்பட்ட மக்களின் ஆதரவினால் தன்னை வளர்த்துக் கொண்ட சி.பி.ஐ (எம்) கட்சி தனியாக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் அதாவது 1977 முதல் அது நிர்பந்தத்தினால் கடைப்பிடித்துவந்த போலீஸ் கொள்கையினை நாசுக்காக கைவிட்டது. தனது கைவசம் இருக்கும் தொழிற்சங்க அமைப்பின் மூலம் தொழிலாளர் இயக்கத்தை உள்ளிருந்தே முடமாக்கும் வேலையைச் செவ்வனே செய்தது. முதலாளிகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் விதத்தில் செயல்படத் தொடங்கியது. கெரோ சட்ட விரோதம் என அறிவித்தது. 1977க்குப் பின் உபரிநிலங்களை கைப்பற்றி விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பது சுத்தமாக நடைபெறவேயில்லை. வேலை நிறுத்தத்தினை தொழிலாளி வர்க்கம் தனது கடைசி ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவித்தது. உண்மையில் இந்தப் பின்னணியில் தான் இக்கட்சியின் ஆட்சி முதலாளித்துவ சக்திகளின் ஆதரவுடன் 30 ஆண்டு காலமாக மேற்கு வங்கத்தில் நீடிக்கிறது. இக்காலகட்டத்தில் பொற்கால ஆட்சி ஒன்றும் நடக்கவுமில்லை; அத்தகைய ஆட்சி நடைபெறவும் முடியாது.
உற்பத்தி சக்திகள் தனியார் கைவசம் இருக்கும் ஒரு மாநிலத்தில் - அதிக பட்ச லாபத்திற்காக உற்பத்தி நடைபெறும் வேளையில்-முதலாளிகள் தங்கள் லாபத்தினை தொழிலாளர் வர்க்கத்தை சுரண்டியே பெறவேண்டியிருக்கையில்- தொழிலாளர்களிடம் போராட்ட மனப்பான்மை உருவாவதைத் தவிர்க்கவே முடியாது. 1977 முதல் 1994 வரையிலான கால கட்டங்களில் இப்படிப்பட்ட சுரண்டலும் ஏராளமான சணல் மற்றும் என்ஜினியரிங் ஆலைகளின் மூடுதல்களும் கொடுமையான விதத்தில் நடைபெறவே செய்தன. இருப்பினும் தொழிலாளர் மத்தியில் இது நமது ஆட்சி என்ற வாதத்தை முன்வைத்து ஒரு பொய்யான உணர்வு நிலையை இடைவிடாத பிரச்சாரத்தின் மூலம் உருவாக்கியே சி.பி.ஐ (எம்) தனது ஆட்சியை நடத்தியது.
அடுத்து அவர் முன்வைக்கும் இன்னொரு வாதத்தைப் பார்ப்போம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காகவே தொழில்மயமாக்கலைச் செய்வதாக அவர் வாதிடுகிறார். இவ்விடத்தில் நாம் பார்க்க வேண்டியது இதுதான் முதலில் இந்தத் தொழில் மயமாக்கல் முழக்கத்தின் பின்னணி என்ன? அடுத்து உண்மையிலேயே அது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெருக்குமா ?
புத்ததேவின் தொழில்மய முழக்கத்தின் பின்னணி
உண்மையில் நகர்ப்புற வேலையில்லாத இளைஞர்கள், வேலையிழந்த தொழிலாளர் - இவர்களின் பெருகிவரும் எண்ணிக்கை, அவர்களிடம் பெருகிவரும் அதிருப்தி ஆகியவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டு இவரும் இவரது கட்சியும் செய்தது வரும் முழக்கமே இந்தத் தொழில் மயமாக்கல் முழக்கம் 1994 வரை ஆலை மூடல், லே-ஆப், கதவடைப்பு போன்றவை பெரிதும் நிலவியது அச்சூழ்நிலையில் இம்முழக்கம் வெளிப்படையாக எழ முடியாத நிலையிலிருந்தது. அதன்பின்னர் உலகமயமாக்கல் பின்னணியில் உலக மூலதன நகர்வு குறைந்த கூலிக்கு உழைப்புத்திறன் கிடைக்கும் இந்தியா போன்ற நாடுகளை நோக்கியதாக அமைந்தவுடன் ஒரு சாதகமான சூழ்நிலை தோன்றியதால் இவர்களால் இம்முழக்கம் இப்போது முன்வைக்கப்படுகிறது.
இவர்கள் கட்சி முன் வைக்கும் அடிப்படை அரசியல் வழிக்கும், முழங்கி வந்த ஏகாதிபத்திய ஏகபோக எதிர்ப்பு முழக்கங்களுக்கும், அன்னிய மூலதன வருகை குறித்த எதிர்ப்புக்கும் இந்தத் தொழில் மயமாக்கல் முழக்கம் சிறிதும் ஒத்துப் போகாது. அதனால் தெளிவுபட, தர்க்கரீதியாக எதையும் கூற முடியாமல் மாற்றத்திற்குத் தகுந்தவாறு நாம் மாற வேண்டும் என பொதுவாகக் கூறுவதோடு ஏற்பட்டுள்ள மாற்றம் எத்தகையது எனக்கூற வழியும் வகையும் இல்லாது புத்ததேவ் தவிக்கிறார். உள்நாட்டு முதலாளிகளை மூடிமறைத்துக் காப்பதற்காக அவர்கள் முன் வைத்த ஏகபோக எதிர்ப்பு முழக்கங்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு வார்த்தை ஜாலங்களும் அன்னிய முதலாளிகளே ஆதிக்கம் செலுத்துவதாக நமது பொருளாதாரத்தில் உள்ளது என்று உண்மைக்குப் புறம்பாக இவர்கள் முன்வைத்த வாதங்களும் பாவம் வெளிப்படையாகப் பேசக் கூடியவர் எனப்பெயர் பெற்ற புத்ததேவை பேச வேண்டிய விஷயங்களை வெளிப்படையாகப் பேசமுடியாதவராக ஆக்கி, அவர் கட்சியின் கண்ணோட்டத்தின்படி பார்த்தால் பேசக் கூடாத விஷயங்களை வெளிப்படையாகப் பேசும் நிலைக்குத்தள்ளியுள்ளது.
தொழில் மயமாக்கல் முழக்கம் வேலையின்மைப் பிரச்சனையைத் தீர்க்குமா
என்னதான் நிலச்சீர்திருத்தம் மற்ற மாநிலங்களைக்காட்டிலும் மேற்கு வங்கத்தில் திறம்பட நாம் மேலே கூறிய காரணத்தினால் நடைபெற்றிருந்தாலும் கட்டுபடியான விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு துண்டாடப்பட்டுள்ள நிலங்கள் விவசாய விளைபொருட்களின் விலை வீழ்ச்சி ஆகியவை கிராமப்புற மக்களிடமும் கருமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கிராமப்புற வாக்கு வங்கியை முழுமையாக நம்பியிருக்க முடியாத நிலை தோன்றியதும், அதனை ஈடுகட்டும் விதத்தில் நகர்ப்புற வாக்கு வங்கியை உருவாக்க வேண்டிய தேவையுமே மோசடித்தனமான இந்தத் தொழில் மயமாக்கல் முழக்கம் பெரிதாக எழுப்பப்பட்டதற்கான காரணமாகும்.
இவர் கொண்டுவரப் போகும் தொழில்மயமாதல் முதலாளிகளால் அவர்கள் ஆதாயம் அடைவதற்கான அடிப்படைத்தன்மையை கொண்ட ஒன்றா அல்லது தொழிலாளருக்கு வேலை கொடுப்பதற்காக என்று கொண்டுவரப்படும் ஒன்றா என்பதைப் பார்ப்போம். இலாப நோக்கத்திற்காகவே கொண்டுவரப்பட்டாலும் கூட ஒரு காலத்தில் அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய “தொழிலாளர் தீவிரத் தன்மை” வாய்ந்தவையாக தொழிற்சாலைகள் இருந்தன. அந்த நிலை இன்று உள்ளதா ? நெருக்கடி சூழ்ந்த நிலையில் உள்ள முதலாளித்துவம் உலகம் முழுவதுமே இன்று இலாபத்தை அதிகப்படுத்துவதற்காக தொழிலாளர் எண்ணிக்கையை குறைப்பதிலும் அவர்களது ஊதியத்தை குறைப்பதிலுமே அக்கறையாக உள்ளது. நவீனமயம் ஆட்குறைப்பதற்கு பயன்படுகிறது. தாராளமயம் சம்பளத்தை குறைப்பதற்கு மிகத்தாராளமாக பயன்படுகிறது. தங்கள் இஷ்டப்படி தொழிலாளர் சட்டங்களை மதிக்காது சுரண்டுவதற்கு வாய்ப்பளிக்கும் விசேஷ பொருளாதார மண்டலங்கள் (நஉழ) ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவற்றில் குர்காவுன் பாணியில் கொடுஞ்சுரண்டலும் அடக்குமுறைகளும் கண்ணுக்குத் தெரியாமல் நடைபெறுகின்றன. அப்பரண்டிஸ் மற்றும் காண்ட்ராக்ட் முறையில் தொழில்நுட்ப பட்டம் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கூட ரூ.5,000/-, ரூ.4,000/- என்ற அளவிற்கு குறைந்த கூலி கொடுத்து சுரண்டப்படுகின்றனர். டி.வி.எஸ்; ஸ்பிக் போன்ற பெரும் தொழில் நிறுவனங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. எனவே புத்ததேவின் டாடா மட்டும் இதற்கு விதி விலக்கானவரா ? டாடாவினது போன்ற உலக அளவில் பெரிய நிறுவனங்களாக கருதப்படக்கூடியவை வேலை வாய்ப்புகளை மிகமிக குறைந்த அளவில் கொண்டிருக்கக் கூடியவையே. அதிக முதலீட்டை ஆலை நவீனத்திற்கு பயன்படுத்தக்கூடிய “மூலதன தீவிர” தொழிற்சாலைகளே இவை. அந்த நிலையில் பரந்துபட்ட மக்களை பொறுத்தவரையில் புத்ததேவ் கூறும் தொழில் வளர்ச்சி அவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க சிறிதும் உதவப் போவதில்லை உண்மையில் ஆலை உபயோகத்திற்கு தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் விவசாயத்திற்கு பயன்பட்டால் உருவாகும் வேலைவாய்ப்புகளை காட்டிலும் மிகமிக குறைந்த வேலை வாய்ப்புகளையே கார் தொழிற்சாலை உருவாக்கும் என்பதே கண்கூடு. கார் தொழிற்சாலையில் நிரந்தரமாக உருவாகும் வேலைவாய்ப்பு மிக மிக குறைந்ததாகவே இருக்கும் என்பதை மறுக்கவியலாத புத்ததேவ் பட்டாச்சார்யா அன்கோ அந்த தொழிற்சாலையை மையமாக வைத்து அங்கு தோன்றும் உதிரித் தொழில்களில் நிறையை வேலைவாய்ப்பு உருவாகும் என்று கூற முயல்கின்றனர். ஆனால் அதுபோன்ற உதிரி தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச கூலிச் சட்டம் கூட அமலாவதில்லை இந்நிலையில் அங்கு வேலை செய்யும் தொழிலாளருக்கு கிடைக்கும் ஊதியம் அதே தொழிலாளர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டால் கிடைக்கும் ஊதியத்தை விட அதிகமானதாக பெரும்பாலும் இருக்கப் போவதில்லை. இந்நிலையில் புத்ததேவ் கூறும் தொழில் வளர்ச்சி என்பது உழைக்கும் மக்களையும் அவர்களது வருமானத்தையும் பொறுத்த வரையில் எந்த வகையான உயர்வையும் அவர்களது வாழ்க்கையில் ஏற்படுத்தப் போவதேயில்லை.
நாய் வாலை ஆட்ட முடியும்; வால் நாயை ஆட்ட முடியாது.
ஒரு மாநில முதலமைச்சர் நினைத்தால் தொழில் மயமாக்கல் என்ற பெயரில் இவர் குறிப்பிடும் முதலாளித்துவத் தொழிற்சாலைகளைக் கொண்டு வருவதைச் செய்ய முடியாது என்பதைப் பார்த்தோம். வரலாற்றுப் பூர்வமாக எந்திரத் தொழில் உற்பத்தி முறை தனியார் முதலீட்டின் மூலமே வளர ஆரம்பித்தது. முதலாளித்துவ தொழில் உற்பத்தி முறை முதலில் ஏற்பட்டதா அல்லது அதற்குச் சேவை செய்யும். முதலாளித்துவ அரசு எந்திரமும் அதனை இயக்கும் அரசாங்கமும் முதலில் தோன்றியதா என்று பார்த்தால் முதலாளித்துவ தொழிலுற்பத்தி முறையே முதலில் தோன்றியது. முதலாளித்துவம் தோன்றிய பின்னரே அத்தகைய தொழில் வளர்ச்சிக்கு உதவும் தன்மையதான முதலாளித்துவ அரசு எந்திரம் தோன்றியது. மனிதனின் பிரிக்க முடியாத உரிமைகள் என்ற கண்ணோட்டமும் பண்ணையடிமை நிலையிலிருந்தவர்களை அவர்கள் கட்டுண்டு கிடந்த நிலவுடைமை உற்பத்தியிலிருந்து பிரித்தெடுத்து ஆலைத் தொழிலுக்கு கொண்டு வரும் நோக்குடனேயே முன்வைக்கப்பட்டது. பின்னர் தனியுடமை எந்திரத் தொழிலுற்பத்தி முறை நாயைப் போலவும் அதற்கு ஊழியம் புரியத் தோன்றிய முதலாளித்துவ அரசு இயந்திரம் அதன் வாலைப் போலவும் விளங்கியது. நாய் ஆட்டினால் வால் ஆடும். வால் ஆட்டினால் நாய் ஆடாது ஆனால் தற்போது வாலாக விளங்கும் மேற்கு வங்க அரசாங்கம் டாடா கார் தொழிற்சாலையாகிய நாயை ஆட்டிக் கொண்டிருப்பது போல் பாவனை செய்கிறது. தொழில் மயமாக்கலை புத்ததேவ் செய்ய முடியாது என்று கூறுவது, அவரால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுவதாகாது. அவரால் தொழில் தொடங்கி நடத்த முன் வரும் முதலாளிகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிமுறைகளையும் தாண்டி அதீதமாக ஊழியம் புரியமுடியும். தற்போது மேற்குவங்கம் உட்பட பல மாநில அரசாங்கங்கள் ஆரம்பித்துக் கொண்டுள்ளனவே விசேஷ பொருளாதார மண்டலங்கள் அதாவது முதலாளிகளின் தங்கு தடையற்ற சுரண்டலின் வேட்டைத் தளங்கள் அவை போன்றவற்றை ஆரம்பித்து ஊழியம் புரியலாம். இவர்களது அகராதியில் அதற்குப் பெயர் முதலமைச்சரின் ‘முன் முயற்சி’. நிலம் வழங்கல் முதற் கொண்டு மின் கட்டணம் வரை சலுகை மேல் சலுகை இவை எல்லாவற்றிற்கும் மேல் அந்த விசேஷப் பொருளாதார மண்டலங்களில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளருக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை ஏறக்குறைய இல்லை என்று கூறுமளவிற்கு நிபந்தனை மேல் நிபந்தனை. அத்தகைய முன் முயற்சிகளை தாரளமாக புத்ததேவ் மேற்கொள்ளவே செய்வார்.
தொழில் மயம் என்ற பெயரில் விவசாயிகள் வயிற்றிலும் அடிக்கும் புத்ததேவ்
மற்ற மாநில முதல்வர்களெல்லாம் தங்கள் ‘முன் முயற்சியினால்’ தொழிலாளரின் உரிமையைப் பறித்து தொழிலாளரின் வயிற்றில் மட்டுமே அடித்தனர். ஆனால் புத்ததேவ் தனது தொழில் மயமாக்கல் முன் முயற்சியின் மூலம் விவசாயிகளின் வயிற்றிலும் அடித்துள்ளார். பிற மாநிலங்களில் விசேஷ பொருளாதார மண்டங்களுக்காகவும், வேறு தொழிற்சாலை நோக்கங்களுக்காகவும் நில ஆர்ஜிதம் நடைபெற்றுள்ளது. ஆனால் இது போன்ற பிரச்சனை எதுவும் எழவில்லை. இங்கு மட்டும் இந்த அளவிற்குப் பிரச்சனை தோன்றியுள்ளதற்கு காரணம் என்ன ? சி.பி.ஐ (எம்) தோழர்கள் கூறுகிறார்கள்: “சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற திரிணாமுல் காங்கிரஸ் நக்சலைட்டுகளுடன் சேர்ந்து திட்டமிட்டு போராட்டம் என்ற பெயரில் ரௌடித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.”
டாடாவுக்கு சலாம்; எழுத்தாளர்கள் குறித்து ஏளனப் பேச்சு
அவர்கள் உள்நோக்குடன் செயல்படுகிறார்கள் என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொள்வோம். ஆனால் சிங்கூருக்கு நிலைமையினை அறிவதற்காக வருகை புரிந்த ஊரும் உலகமும் அறிந்த சுமித் சக்கரவர்த்தி போன்ற இடதுசாரி அறிவு ஜீவிகள் இப்போராட்டத்தை ஆதரிப்பது ஏன் ? சிங்கூரிலும் நந்திகிராமிலும் நடப்பது விவசாயிகளின் நில உரிமைக்கான போராட்டமே; எந்த வெளியாரின் தூண்டுதலாலும் உருவாக்கப்பட்டதல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு என்ன பதில் கூறுகிறார் புத்ததேவ் ? “ஆம். புத்தகம் போன்றவை எழுதிக் கொண்டிருக்கும் அறிவு ஜீவிகளும் நிலைமை தெரியாமல் இதனை ஆதரிக்கிறார்கள்” அதாவது புத்தகம் எழுதுவது போன்று அரசாங்கத்தை நடத்துவதும் மக்களுக்காக பணியாற்றுவதும் எளிதான செயல் அல்ல என்று கூறவருகிறார். உண்மைதான். இவர் செய்வதைப் போல் கம்யூனிஸ்டு என்ற பெயரை வைத்துக் கொண்டு ஒரு ஏக போக முதலாளிக்கு ஏஜெண்டாகச் செயல்படுவது போல கடினமான வேலையல்ல புத்தகம் எழுதுவது.
ஏனெனில் உழைக்கும் ஏழை விவசாயிகள், தொழிலாளருக்கு கடமைப்பட்டவராக இருப்பதைக்காட்டிலும் டாட்டாவிற்கு இவர் கொடுத்த வாக்குறுதியைக் காப்பதே இவருக்கு மிகவும் முக்கியம். அத்தகைய கடினமான வேலையை எத்தனை சிரமேற்கொண்டு இவர் செய்கிறார் என்பதைப் பார்ப்போம்.
சந்தை மதிப்பையும் சட்டத்தையும் முன்வைத்து செய்யப்பட்ட மோசடி
நாடெங்கிலும் இது போன்று தொழிற்சாலை அமைக்கும் விஷயங்களில் வழக்கமாக நடந்துகொண்டிருப்பது என்ன ? தொழிற்சாலை நடத்தவிருக்கும் முதலாளிகள் தாமாகவே அவர்கள் தொழிற்சாலை ஆரம்பிக்கவிருக்கும் இடத்தின் சொந்தக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இடத்தின் விலையை தீர்மானித்து அந்த விலையினை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். மேற்கு வங்கத்திலும் அவ்வாறு செய்திருக்கலாமே. அதைவிடுத்து அரசாங்கம் தலையிட்டதன் காரணமென்ன ? அரசாங்க சந்தை மதிப்பினைக் காட்டிலும் பலமடங்கு அதிகமான தொகையினை நஷ்ட ஈடாக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இவர் வாங்கிக் கொடுத்ததாக புத்ததேவ் கூறுகிறார். சந்தை மதிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில் ஒரு இடம் கடைசியாக எந்த விலைக்கு பதிவு செய்யப் படுகிறதோ அதுவே சந்தை மதிப்பு. அதற்கும் உண்மை. மதிப்பிற்கும் நடைமுறையில் ஒரு தொடர்பும் இருக்காது. உண்மையில் இவரது தலையீட்டின் மூலம் டாடா-வும் விவசாயிகளும் நேரடியாக பேரத்தில் ஈடுபட்டிருந்தால் விவசாயிகளுக்கு கிடைத்திருக்கக்கூடிய தொகையை காட்டிலும் குறைவான தொகையை பெற்றுத்தரவே இவர் தலையிட்டிருக்கிறார். இதுவே வெளிப்படையான உண்மை. இதனால் ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்ற கேள்வி எழும்போது இவரும் இவரது கட்சியினரும் ஒரு காரணத்தைக் கூறுகின்றனர். அது விந்தையிலும் விந்தையானது. அதாவது நிலத்தை ஆர்ஜிதம் செய்ய வாய்ப்பளிக்கும் 1894 –ம் ஆண்டு வெள்ளையர்களால் இயற்றப்பட்ட சட்டம் அமலில் இருந்ததனாலேயே அதை செய்தோம்; அந்த சட்டம் இல்லாவிட்டால் நாங்கள் அதை செய்திருக்கமாட்டோம் என்று கூறுகிறார்கள். எப்படிப்பட்ட அபாரமான வாதம் ! கொலைகாரன் அவன் செய்த கொலைக்கு காரணமாக அவன் வீட்டிலிருந்த கூரான ஆயுதத்தை காரணம் காட்டி “அது இருந்ததனாலேயே அக்கொலையை நான் செய்தேன்; அது இல்லாதிருந்தால் கொலையை நான் செய்தே இருக்கமாட்டேன்” என்று கூறுவதைப் போல தானே இந்த வாதம் இருக்கிறது. கோடான கோடி உழைக்கும் மக்களின் ரத்தத்தினால் சிவந்த செங்கொடியை தோள்களில் சுமக்கும் பாக்கியத்தையும் பாரம்பரியத்தையும் பெற்றவர்கள் என்றென்றும் தவறான சட்டங்களை எதிர்த்து அவற்றை மாற்றக்கோரி போராடிய வரலாறு படைத்தவர்களே தவிர அதனை பயன்படுத்தி உழைப்பாளி மக்களின் வயிற்றில் அடித்து பழக்கப்பட்டவர்கள் அல்ல. அந்த போக்கிற்கு மாறாக செங்கொடியை தனது கொடியாக இன்னமும் வைத்திருக்கக் கூடிய ஒரு கட்சியை சேர்ந்த புத்ததேவ் இன்னமும் நாகூசாமல் சட்டம் இருந்ததனால் அதனை பயன்படுத்தினேன், அச்சட்டம் இல்லாதிருந்து இருக்குமேயானால் நான் பயன்படுத்தியே இருக்கமாட்டேன் என்று கூறி விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறார்.
அதிகபட்ச சுரண்டலுக்கு உடந்தையாக இருப்பதையே இவர்கள் முன் முயற்சியால் செய்ய முடியும்
தொழில் வளர்ச்சியில் புத்ததேவ் பட்டாசார்யாவிற்கு பங்கு என்று ஏதேனும் இருந்திருக்குமேயானால் அது ஒன்று இவர் விவசாயிகளின் வயிற்றில் அடித்து குறைந்த விலைக்கு இடம் வாங்கி தந்ததாக இருக்கும். மற்றொன்று இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தையும் காட்டிலும் அமைப்பு ரீதியாக நன்கு ஒருங்கு திரண்டுள்ள ஒரு கட்சியையும் அதன் அங்கமான தொழிற்சங்க அமைப்பையும் இவர் கொண்டிருப்பதனால்; அவற்றைக் கொண்டு தொழிலாளரின் இயக்கத்தை உள்ளிருந்தே முடமாக்கி டாடா-விரும்பும் விலைக்கு அவர்களது உழைப்பை டாடா-விற்கு விற்க இவர் ஏற்பாடு செய்து தருவார் என்பதாக இருக்கும், இதைத் தவிர இவர் தன் முயற்சியினால் தொழில் வளர்ச்சியை கொண்டு வந்தேன் என்று கூறுவாரேயானால் நிச்சயமாக இன்று பத்திரிக்கைகள் கூறுவதைப் போல் நாட்டில் ஏற்பட்டுள்ள 9 சதவீத தொழில் வளர்ச்சிக்கும் தானும் தனது கொள்கைகளுமே காரணம் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் கூறிக்கொள்ளலாம். நிச்சயமாக மன்மோகன் சிங்கிற்கு அந்தபெயர் போவதை இவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் உண்மையும் அதுவாக இருக்க முடியாது. முதலாளித்துவ விதிகளே தொழில் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் தீர்மானிக்கின்றனவே அன்றி தனிநபர்களின் விருப்புகளும் வெறுப்புகளும் அல்ல என்பதே மார்க்சிசம் நமக்கு கற்றுத்தந்த தந்து கொண்டிருக்கக்கூடிய பால பாடங்கள்.
நில ஆர்ஜித சட்டம் பொதுநல நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் இன்று சிங்கூரில் விவசாயிகளுக்கு எதிராக மேற்குவங்க அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை வழி நடத்தக்கூடிய கட்சிகள் அவை எஸ்.யூ.சி.ஐ, நக்சலைட் குழுக்கள் போன்ற இடதுசாரி கட்சிகளாக இருந்தாலும் சரி அல்லது முதலாளித்துவ எதிர்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி அவை அனைத்தும் கையகப்படுத்தப்படக்கூடிய இடங்கள் இரண்டு போகங்கள் விளையக்கூடியவை; அல்லது பல பயிர்கள் பயிரிடக்கூடிய வாய்ப்பு வசதியை கொண்டவை என்ற வாதங்களையே பிரதானப்படுத்துகின்றன. இரண்டு போகம் விளையக்கூடிய வயல்களை கையகப்படுத்தினாலும் சரி அல்லது ஒரு போகம் கூட விளையாத தரிசு நிலங்களை கையகப்படுத்தினாலும் சரி அதில் அரசு கையகப்படுத்தி முதலாளிகளுக்கு வசதி செய்து தருவது என்ற போக்கிற்கு இடம் கொடுத்தால் அது முதலாளிகளுக்கு ஆதரவாக பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை எளிய விவசாயிகளுக்கு பாதகமாக ஆளும் கட்சிகளும் ஆட்சியாளர்களும் செயல்படுவதிலேயே முடியும். எனவே அரசு தன் கைவசமுள்ள நில ஆர்ஜித சட்டத்தை பயன்படுத்தி தனியாருக்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்துவது, சாலை அமைத்தல், நூலகங்கள் கட்டுதல், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் உருவாக்குதல் போன்ற பொதுநல பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்ற நிலையே சரியான நிலையாக இருக்க முடியும். ஏனெனில் அடிப்படையில் எந்தவொரு அரசும் ஒரு வர்க்கத்தின் கருவியாகவே இருக்கும். எனவே அது அதிகாரத்தில் இருக்கக் கூடிய ஒரு வர்க்கத்திற்கு சேவை செய்வதாகவே இருக்கும். ஆனால் அந்த சேவை அப்பட்டமாக வெளியில் தெரியாவண்ணம் நாசுக்காகவும் நளினமாகவுமே பெரும்பாலும் செய்யப்படுகிறது. அந்த வரம்பை தாண்டி வெளிப்படையாக ஆளும் வர்க்கமான முதலாளி வர்கத்திற்கு சாதகமான அரசின் செயல்பாடுகளை மூடிமறைத்துச் செய்வதற்காக கடைபிடிக்கப்படும் மரபுகளே ஜனநாயக மரபுகள் என வாய்கிழிய கூறப்படுகின்றன.
வரம்புமீறி ஒரு ஏகபோக முதலாளியின் சேவைகளாக ஆவது பாசிஸ குணாம்சமே
அந்த மரபுகளை கூட தற்போது பல முதலாளித்துவ அரசாங்கங்கள் கடைபிடிக்கத் தவறி ஆளும் வர்க்கத்திற்கான சேவையில் தங்களை அப்பட்டமாக ஈடுபடுத்திக் கொள்ளும் பாசிச அரசாங்கங்களாக மாறி விடுகின்றன. அந்த அடிப்படையில் மேற்குவங்கத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருவாளர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் தலைமையிலான அரசாங்கம் ஒரு மிக மோசமான பாசிச அரசாங்கமே. சந்தைப் பொருளாதாரம் நிலவக்கூடிய ஒரு முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் சந்தை தான் ஒரு பொருளின் விலையைத் தீர்மானிக்கவல்லது. இந்த இடத்தில் சிங்கூரில் கையகப்படுத்தியுள்ள நிலத்தை ஒரு பொருள் என்று எடுத்துக் கொண்டால் அதை வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையிலான பேரம் தான் அதன் விலையைத் தீர்மானிக்க வேண்டும். அதைவிடுத்து அரசாங்கம் அந்த பேரத்தில் தலையிடுவது முற்றிலும் அனாவசியமானது மற்றும் தேவையற்றது. அதுவும் தன் கைவசமுள்ள சட்டத்தைப் பயன்படுத்தி பொதுநல நோக்கத்தோடு ஒரு சம்பந்தமும் இல்லாமல் ஒரு தனியார் முதலாளிக்கு அவர் லாபம் ஈட்டுவதற்காக நடத்தவிருக்கும் ஒரு தொழிலுக்கு உதவிபுரியும் நோக்குடன் நிலத்தைக் கையகப்படுத்தி, அதனை எதிர்த்து நடைபெற்ற இயக்கங்களை அடக்கும் நோக்குடன் தடையுத்தரவு போன்றவற்றைப் பிறப்பிப்பது முதலாளித்துவ ஜனநாயக அகராதியின் படியே ஒரு அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். அனைத்து மரபுகளையும் தாண்டி சமூகத்தின் வலுவான பகுதியினரான முதலாளிகளுடன் அரசாங்க நிர்வாகத்தையும் செயல்படச் செய்வதும் பொருளாதார ரீதியில் பலவீனமாக உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை ஆதாரமான நிலங்களை தன்னிச்சையாக ஒரு விலையை நிர்ணயித்து தன் கைவசமுள்ள அதிகாரங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தி அதனை வாங்குவதும் அதனை முதலாளிக்கு கொடுத்துச் சேவை செய்வதும் அப்பட்டமான பாசிஸப் போக்குகளே தவிர வேறெதுவுமில்லை.
நந்திக்கிராமில் தலை தூக்கிய பாசிஸத்தின் கோரமுகம்
இந்த பாசிஸப் போக்கின் உச்சகட்டத்தைச் சந்தித்த மற்றொரு இடம் நந்திக்கிராம். வித்யாசாகர், குதிராம் போஸ் போன்ற மாபெரும் கல்விமான்கள் மற்றும் தியாகிகளை ஈன்றெடுத்த மிட்னாபூர் மாவட்டத்திலுள்ளது இந்த ஊர் அவ்வூர் விவசாயிகளின் 28,000 ஏக்கர் நிலத்தை சலீம் குழுமத்திற்கு இராசாயனத் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக கையகப்படுத்தும் அறிவிப்பு ஜனவரி 2 அன்று சி.பி.ஐ (எம்) அரசின் அமைச்சர் லக்ஷ்மன் சேத் மற்றும் ஹால்தியா மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது. அதனால் அதிர்ந்து போன அவ்வட்டார விவசாயிகள் தங்கள் எதிர்காலமே இருண்டு போனதைப் போல் உணர்ந்தனர். சிங்கூரில் நிலத்தை இழந்த விவசாயிகள் என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்த அவர்களுக்கு இத்ததைகய அதிர்óச்சி ஏற்படுவது சகஜம் தானே. எப்பாடுபட்டும் இதனைத் தடுக்க வேண்டும் என உறுதி பூண்டனர். அரசு நிர்வாகத்தையும், போலீûஸயும் கிராமத்திற்குள் நுழையவிட்டால் தங்களது நிலம் பறிபோய்விடும் என்ற அளவிற்கு அவர்களுக்கு பயம் உருவானது. அதனால் நிர்வாகமும் காவல் துறையும் கிராமத்திற்குள் நுழைய இயலாவண்ணம் சாலைகளை வெட்டி தடுப்புகள் ஏற்படுத்தினர். இந்நிலையில் ஜனவரி 6ம் நாள் நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிரான மக்களின் அணி வகுப்பின் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்தது. 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த அளவிற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வெறுப்பை ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளக் கூடிய எந்த அரசாங்கமும் நிச்சயம் சம்பாதித்திருக்காது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் விவசாயிகளுக்கு சி.பி.ஐ (எம்) கட்சியின் மீது இருந்த பிரமை அறவே அகன்றது. இந்நிலையில் நந்திகிராமின் சி.பி.ஐ (எம்) ஊழியர்கள் மற்றும் தொண்டர்கள் மீதும் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் தங்கள் நிலத்தைப் பறிக்க நினைக்கும் அரசாங்கத்தின் ஏஜெண்டுகளாகச் செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் உருவானது. அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர் இதன் விளைவாக நூற்றுகóகணக்கான சி.பி.ஐ (எம்) தொண்டர்கள் ஊரை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில் ஊரை விட்டு தங்கள் தொண்டர்கள் வெளியேறுமாறு செய்து விட்ட, தனது உண்மையான முதலாளித்துவ ஆதரவு முகத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்ட பூமிப்பாதுகாப்பு கமிட்டியினரைப் பழிவாங்கத் தருணம் பார்த்துக் காத்திருந்து புத்ததேவின் அரசு. இத்தனை எதிர்ப்புக் கிடையில் நில ஆர்ஜிதம் நடத்த முடியாது என அறிந்து கொண்ட புத்ததேவ் மக்கள் விரும்பாவிட்டால் நந்திகிராமில் இரசாயனத் தொழிற்சாலை அமைக்கப்படமாட்டாது. அதற்கு நில ஆர்ஜிதமும் நடைபெறாது என அறிவித்தார் அவ்வாறு அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை தோன்றியவுடன் வேறு வழியின்றி அவர் அவ்வாறு அறிவித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூட்டி நிலைமையைச் சமாளிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் மக்களால் சந்தேகக் கண்ணோட்டத்துடனே பார்க்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த மார்ச் 14 அன்று கொடுமையான பாசிஸ்டுகள் கூட செய்யக் கூசும் வகையில் ஆயுதம் தரித்த காவல் துறையினரை அனுப்பி காட்டுத் தாக்குதலை அப்பாவி மக்கள் மீது அவரது அரசு கட்டவிழ்த்துவிட்டது. அரசின் அதிகாரப் பூர்வ அறிவிப்பின் படியே அக்கூலிப்படையின் எண்ணிக்கை 700 காவலர்கள். அதிகாரப் பூர்வமற்ற செய்திகளின் படி அனுப்பப்பட்ட போலீஸôரின் எண்ணிக்கை 3000 ஆகும். அரசு அறிவிப்பின் படியே 4500 என்ற எண்ணிக்கையில் கூடியிருந்த மக்களைச் சமாளிக்க இத்தனை எண்ணிக்கையில் போலீஸôர் அனுப்பப் படுகின்றனர். அரசு அறிவிப்பின் படி 14 பேர் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாயினர் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். பாலம் பகுதியில் 20 ரவுண்டுகளும் கோகுல் நகர் பகுதியில் 17 ரவுண்டுகளும் என 37 ரவுண்டுகள் போலீஸ் சுட்டதாக அரசு கூறுகிறது.
துப்பாக்கி மூளையில் சமரசம் கொண்டுவர முயன்ற புத்திசாலி புத்ததேவ்
ஆனால் இறந்த 14 பேரில் 10 பேர் துப்பாக்கிக் குண்டு பட்டு இறந்துள்ளனர் என்றும் 30 முதல் 35 வரையிலானோர் குண்டுகாயம் அடைந்திருப்பதாகவும் சி.பி.ஐ கூறுகிறது. ஏற்கனவே மக்களின் அரசு மீதான அதிருப்தி இவ்வளவு அதிகமாக இருக்கும் போது காவல்துறைப் பட்டாளத்தை ஏன் நந்திகிராமிற்குள் அனுப்பினீர்கள் என்று கேட்டால் காவல் துறையினரை மக்களுடன் சமரசம் பேச அனுப்பியதாக புத்ததேவ் கூறுகிறார். எங்காவது யாராவது இந்த நிலையில் சமரசம் பேச அரசு எதன் பலத்தைக் கொண்டு தங்கள் நிலத்தைப் பறிக்கப் பார்க்கிறது என்று மக்கள் பயந்து கொண்டுள்ளார்களோ அந்தக் காவல் துறையை பிரச்சனையுள்ள இடத்திற்குள் அனுப்புவார்களா ?
உண்மையில் புத்ததேவின் போலீஸôர் அதற்காக புத்ததேவால் நந்திகிராமிற்குள் அனுப்பப்படவில்லை. தனது கட்சியினர் ஊரில் இருக்க முடியாத நிலையினை ஏற்படுத்திய பூமிப்பாதுகாப்புக் கமிட்டியைச் சேர்ந்தவர்களுக்கும் ஊர்மக்களுக்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற பழிவாங்கும் உணர்வுடனேயே அவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். சி.பி.ஐ (எம்) தலைவர்களால் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின் வெளியிடப்பட்ட அறிக்கைகள் காவல்துறையினர் பழிவாங்கும் நோக்கத்துடனேயே நந்திகிராமிற்குள் அனுப்பப்பட்டனர் என்பதற்குச் சான்று பகர்கின்றன.
சோஷலிஸ நாட்டிலும் தவறைத் தட்டிக் கேட்கும் பங்கினை ஆற்ற வேண்டியவர்களே கம்யூனிஸ்டுகள்
இந்நிலையில் சி.பி.ஐ (எம்) தொண்டர்கள் நந்திகிராமில் வசிக்க முடியாத நிலை ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தையும் நாம் பார்க்கத் தவறக்கூடாது. உண்மையிலேயே அவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தால் அரசின் இந்த முயற்சியை முதலில் எதிர்ப்பவர்களாக அந்த சி.பி.ஐ (எம்) தொண்டர்கள் தான் இருந்திருக்க வேண்டும். இராசயனக் குழுமம் வந்தாலும் வராவிட்டாலும் ஏழை எளிய உழைப்பாளி மக்களின் வாழ்க்கை நிலை பெரிதாக ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. ஆனால் தங்கள் நிலத்தை விவசாயிகள் இழந்துவிட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அரைவயிற்றுக்காவது உண்ணக்கூடிய ஒரு சாதனத்தையே நிரந்தரமாக இழந்து விடுவார்களே. இத்தகைய நிலையில் விவசாயிகளது மன நிலை எவ்வாறு இருக்கும் என்பதை யாரைக்காட்டிலும் அங்குள்ள அரசியல் ஊழியர்கள் அல்லவா அதிகம் உணர்ந்திருக்க வேண்டும்.
அவ்வாறு உணர்வது மட்டுமல்ல. அரசின் நிலத்தைக் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உண்மையிலேயே அவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தால் அவர்களல்லவா முன்னிலை வகுத்திருக்க வேண்டும். ஏனெனில் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் சோஷலிஸ நாட்டில் கூட அரசின் அங்கமாகச் செயல்படுவதில்லை. அங்கும் அவர்கள் மக்களின் நியாயமான பிரச்சனைகளுக்காகக் குரல் எழுப்பும் போராட்டக்காரர்களே. புத்ததேவ் நிலத்தைக் கையகப்படுத்த கற்பிக்கும் நியாயத்தை யாரும் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இரசாயனத் தொழிற்சாலைகள் வந்துவிட்டால் நந்திகிராமின் தோற்றமே மாறிவிடும்; அதனை உணராமல் இவர்கள் எதிர்க்கிறார்கள். எதிர்ப்பதனால் தொழிற்சாலை வராமல் போனால் அதனால் ஏற்படும் இழப்பு நந்திகிராம் மக்களுக்கே என்று நக்கல்தொனியில் புத்ததேவ் கூறுகிறார். நந்திகிராமில் தான் அவை தொடங்கப்பட வேண்டும் என்று சலீம் நினைத்தால் அவர் எவ்வளவு தொகை கொடுத்தாவது அங்குள்ள நிலங்களை வாங்கியே தீருவார். உண்மையில் பிரச்சனை தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறேன் என்ற பெயரில் புத்ததேவின் அரசு தலையிட்டு சலீம் குடும்பத்தினரும் விவசாயிகளும் நேரடியான பேரத்தில் ஈ.டுபட்டால் அதன் மூலம் விவசாயிகளுக்கு எவ்வளவு தொகை கிடைக்குமோ அதைக் காட்டிலும் குறைந்த தொகைக்கு விவசாயிகளின் வயிற்றிலடித்து சலீம் குழுமத்திற்கு வாங்கிக் கொடுத்துவிடுவார்கள் என்ற பயமே விவசாயிகளைப் போராட்டக் களத்தில் இறக்கியுள்ளது.
திட்டமிடுதல் சாத்தியமில்லாத முதலாளித்துவ அமைப்பில் விவசாய நிலங்களைப் பாதுகாக்க முடிகிறது.
தொழிற்சாலை நோக்கங்களுக்காக மட்டுமல்ல நகர்மயமாதலின் பின்னணியில் நமது நாட்டின் பல பகுதிகளில் விளை நிலங்கள் வீடுகள் கட்டுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன இவ்வாறு விளைநிலங்கள் நிர்தாட்சண்யமாக விவசாயத்தை விடுத்து வேறு விசயங்களுக்காக பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்துக் கொண்டே போகுமானால் அதனால் விளைச்சல் குன்றி உணவு பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் உயிர் வாழ்வதற்கே பெரும்பிரச்சனை நாளடைவில் தோன்றிவிடும் என்ற அச்சம் பலராலும் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்தபோதிலும் விளை நிலங்கள் விவசாயம் தவிர்த்த வேறு விசயங்களுக்கு பயன்படுவது தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. சமூக பொருளுற்பத்தியில் எந்தவித திட்டமின்றி எங்கு தொழிற்சாலைகள் அமைத்தால் அதிகபட்ச இலாபம் கிடைக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு முதலாளிகள் தொழில் தொடங்கும் போக்கு பிரதானமாக நிலவி வரும் ஒரு முதலாளித்துவ அமைப்பில் இலாப நோக்கமே தொழிற்சாலை தொடங்கும் இடத்தை தீர்மானிக்குமே தவிர தீர்மானிக்கப்படும் இடம் விளைநிலமா அல்லது தரிசு நிலமா என்பது அதனை தீர்மானிக்காது. போக்குவரத்து வசதி, தொழிற்சாலைக்கு தேவைப்படும் தொழிலாளர் எளிதாக கிடைப்பது தொழிற்சாலைகள் நடத்துவதற்கு தேவையான மின்சாரம் தங்கு தடையின்றி கிடைப்பது, தொழிற்சாலை அமைக்கப்படவிருக்கும் இடத்தின் விலை ஆகிய அம்சங்களை கணக்கில் கொண்டே முதலாளிகள் தொழில் தொடங்குவர். அதன் விளைவாக எத்தனை தூரம் சுற்றுப்புறசூழல் ஆய்வாளர்கள் உணவு பற்றாக்குறை குறித்து கவலைப்படுவோர் ஆகியோரின் கவலையும் கண்ணீரும் நிரம்பி வழிந்தாலும் தொழிற்சாலை நோக்கங்களுக்காகவும் வீடுகள் கட்டுவதற்காகவும் விளை நிலங்கள் பயன்படுத்தப்படுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
உழைப்பையும் சுரண்டிக் கொண்டு உழைப்பாளரிடம் மறுமலர்ச்சி நிலவும் ஏற்படுத்த முடியாது
அப்படித் தொழிற்சாலைகள் ஏற்பட்டதனாலேயே புத்ததேவ் கூறுவது போல் சாதாரண மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுவிடாது. அதிகபட்ச லாபம் ஈட்டுவதற்காகவே முதலாளிகள் தொழில் தொடங்குகின்றனர். அதனை அவர்கள் அடைய வேண்டுமானால் தொழிலாளரின் ஊதியத்தைத் குறைந்த பட்சம் ஆக்குவதன் மூலமே அதனை அடைய முடியும். மேலும் புத்ததேவ் போல் வரிந்து கட்டிக் கொண்டு முதலாளிகள் தொழில் தொடங்குவதில் ஆர்வமும் முன் முயற்சியும் காட்டக் கூடியவர்கள் இருந்தால் இவர்களையும் பயன்படுத்தி இன்னும் சம்பளத்தைக் குறைந்த பட்சமாக்கவே முதலாளிகள் முயல்வர். ஏனெனில் புத்ததேவ் போன்றவர்களின் ஆர்வமும் முன் முயற்சியும் முதலாளிகளுக்கே பயன்படுமே தவிர தொழிலாளிகளுக்கல்ல. அவரது ஆர்வமும் முன் முயற்சியும் தொழிலாளருக்கு நல்ல சம்பள விகிதங்களுடன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவே வருகிறது என்று சிறிதளவு அறிந்து கொண்டால் கூட முதலாளிகள் புத்ததேவை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்.
மேலும் இப்போது மேற்குவங்கத்தில் முதலீடு செய்ய பல முதலாளிகளும், ஏகபோக நிறுவனங்கள் பன்னாட்டுக்கம்பெனிகளும் ஆர்வம் காட்டுவதற்கு பல காரணங்கள் ஏற்கனவே நாம் பார்த்த வகைகளில் உள்ளன. அதில் ஒரு காரணம் பலரால் பகட்டாகக் கூறப்படுவது போல் மேற்குவங்கத்தில் நிலவும் தொழில் அமைதி சுரண்டலை அடிப்படையாக வைத்து உற்பத்தி நடக்கும் ஒரு அமைப்பில் அமைதி என்பது நேரடியான அல்லது மறைமுகமான அடக்குமுறையின் மூலமே தான் ஏற்படுத்த முடியும். மேற்கு வங்கத்தைப் பொறுத்த வரை சி.பி.ஐ (எம்) கட்சியினால் தலைமை தாங்கப்படும் அரசாங்கம் சி.பி.ஐ (எம்) கட்சியின் வசம் உள்ள தொழிற்சங்க அமைப்புகளை பயன்படுத்தி தொழிலாளர் இயக்கத்தை உள்ளிருந்து முடமாக்குவதன் மூலம் இந்த அமைதி சாதிக்கப்பட்டிருக்கிறது.
முதலாளித்துவக் கட்சிகளின் பாணியில் வளர்ச்சி பற்றி வாய் கிழியுமளவு பேச்சு
இந்நிலையில் நந்திகிராமில் தொழிற்சாலைகள் வருமானால் வானைத் தொடும் கட்டிடங்கள் வரும்; வெளிநாட்டுக் கார்கள் பவனி வரும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அங்கு புதிதாக வேலை பெறும் உயர் தொழில் நுட்பம் கற்றவர்களின் வருவாயின் மூலம் வாங்கும் சக்தி பெருகும். அதனைப் பயன்படுத்தி மக்களில் ஒரு சிறுபகுதியினரான வியாபாரிகள் பலன் அடைவர். அதுவும் ரிலையன்úஸô, வால்மார்ட்டோ அங்கு தங்களின் பகாசுர சில்லரை விற்பனைக் கடைகளைத் திறக்காதிருந்தால்; மற்றபடி அங்கு பெரிய அளவில் நியமனம் பெறப்போகும் ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் பெரிய ஆலைகளை ஒட்டி அவற்றிற்கு உதிரி வேலைகள் செய்வதற்காக அமைக்கப் படப் போகும் சிறு தொழிற்சாலைகளில் குறைந்த கூலி கொடுக்கப்பட்டு ஒட்ட ஒட்டச் சுரண்டப் படப்போகும் தொழிலாளரின் வாழ்க்கையில் எந்த மறுமலர்ச்சியையும் இந்தத் தொழிற்சாலைகள் கொண்டு வரப் போவதில்லை.
தொழிற்சாலைகள் உருவானால் அங்கு வேலை செய்யும் தொழிலாளருக்கு இரண்டு அம்சங்களில் கட்டுபடியான குறைந்தபட்சக் கூலி பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒன்று அத்தொழிற்சாலைக்குத் தேவைப்படும் உழைப்புத்திறனுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் போது. ஆனால் எந்தத்தட்டுப்பாடுமின்றி அதிக எண்ணிக்கையில் தொழிலாளர் சக்தி கிடைப்பதனாலேயே இந்தியாவிற்கு தொழில்கள் வருகின்றன. புத்ததேவும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கவே தொழில்மையம் என்று கூறுகிறார் அதன் மூலம் தட்டுப்பாடற்ற உழைப்புத்திறன் மேற்கு வங்கத்திலிருப்பதை இது உறுதிப்படுத்துகிறது. எனவே இந்த அம்சம் அடிபட்டுப் போகிறது. அடுத்தது ஸ்தாபன மயமாகக்கப்பட்டு தொழிலாளர் தங்களது போராட்ட சக்தியை வளர்ப்பதன் மூலமாக கட்டுபடியான ஊதியத்தைப் பெறமுடியும். தொழில் அமைதியைக் காப்பதற்காக வரிந்த கட்டிக் கொண்டிருக்கும் புத்ததேவின் அரசாங்கம் அத்தகைய சக்தியினை வளரவிடாமல் தன்னால் இயன்றதனைத்தையும் செய்யும். அது எந்த அளவிற்குப் போகும் என்பதற்கு எடுத்துக் காட்டு நந்திகிராம் சிறு விவசாயிகள் அடுத்தடுத்து சந்தித்த இரண்டு துப்பாக்கிச் சூடுகள்.
எனவே புத்ததேவ் நந்திகிராமின் முகத்தோற்றமே இராசாயனத் தொழிற்சாலைகளின் வரவின் மூலமாக மாறிவிடும் என்று கூறுவதற்கும் முதலாளித்துவ அரசியல் வாதிகள் வளர்ச்சி பற்றிக் கூறுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
நியூயார்க் நகரத்தையும், பம்பாய் நகரத்தையும் வளர்ச்சிக்கு உதாரணமாக முதலாளித்துவ அரசியல் வாதிகள் முன் வைப்பர். அக்கண்ணோட்டத்துடனேயே புத்ததேவும் வளர்ச்சியைப் பார்க்கிறார். ஆம் அத்தகைய வளர்ச்சியில் வானளாவிய கட்டடங்கள் பிரமிக்க வைக்கும். தேர் போன்ற வெளிநாட்டுக் கார்கள் பவனி வரும். அவற்றையெல்லாம் பார்த்துப் பிரமிப்பதற்கும் மலைத்து நிற்பதற்குமே மிகப்பெரும்óபான்மையான மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அடக்குமுறைக் கருவிகளை இன்னும் வலுப்படுத்த அரசுக்கு வேண்டுமானால் வருவாய் பெருகும்
ஒட்டுமொத்தத்தில் இவர் கூறக்கூடிய தொழில் வளர்ச்சியினால் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரமோ அல்லது நந்திகிராம் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரமோ சிறிதளவு கூட உயரப்போவதில்லை. மாறாக தொழிற்சாலை அங்கிருப்பதனால் அது அரசுக்கு செலுத்தும் வரி அதன் உற்பத்தி பொருளான கார் விற்பனையின் மூலம் கிடைக்கும் விற்பனை வரியில் மாநிலத்தின் பங்கு போன்றவை இவரது அரசாங்கத்தின் கஜானாவை வேண்டுமானால் நிறைக்கும். அதனைக் கொண்டு அடக்கு முறை சக்தியான மாநில காவல் துறையை பலப்படுத்தி நந்திகிராமத்தில் இவர் தற்பொழுது செய்து கொண்டு இருப்பதைப் போல் குண்டாந்தடி கொண்டு விவசாய, விவசாய தொழிலாளர்களின் மண்டையை பிளக்கலாம் அல்லது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களது நெஞ்சங்களை துளைக்கலாம்.
உண்மையான மக்களின் பொருளாதார வளர்ச்சி செல்வம் உருவாவதில் அல்ல பங்கீட்டில் தான் உள்ளது
உண்மையிலேயே சமூகத்தில் செல்வம் உருவாவதில் பரந்துபட்ட மக்களின் அடிப்படையான பிரச்சனைக்களுக்கான தீர்வு இல்லை. ஏனெனில் லாபம் கிடைக்கும் தொழில்களையும் அவை தொடங்க வாய்ப்புள்ள பகுதிகளையும் தேர்ந்தெடுத்து அதன் வரம்பிற்குட்பட்ட விதத்தில் உயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சமூகத்தில் செல்வத்தை முதலாளி வர்க்கம் சுரண்டலின் மூலம் உருவாக்கவே செய்கிறது. ஆனால் அதில் பிரச்சனை எங்கு தோன்றுகிறதென்றால் அந்தச் செல்வம் முறையாக அனைத்துப் பகுதி மக்களுக்கும் அவர்களின் உழைப்புக்குத் தகுந்தவிதத்தில் பகிர்ந்தளிக்கப்படாததில் தான் உள்ளது. தலைகீழாக நின்றாலும் ஒரு முதலாளித்துவ அமைப்பில் அத்தகைய முறையான பகிர்வு நடைபெறவே நடைபெறாது. அதற்காகத்தான் உற்பத்தி சாதனங்களில் சமூக உடைமையை நிலைநாட்ட வல்ல சோஷலிஸ அமைப்பினைக் கொண்டு வருவது அவசியமாகிறது.
குருட்டுத்தனமான விசுவாசம் கம்யூனிஸக் குணாம்சமல்ல
இது எதையும் உணராது சி.பி.ஐ (எம்) ன் உறுப்பினர்கள் என்ற பெயரில் அக்கட்சியினால் தலைமை தாங்கப்படும் அரசுக்குக் குருட்டுத்தனமாக விசுவாசமாக இருப்பவர்கள் மேல் விவசாயிகளுக்கு அவர்கள் தங்களின் நிலத்தைப் பறிக்கப் போவோரின் ஏஜெண்டுகள் என்ற எண்ணம் ஏற்பட்டால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. மேலும் ஒரு லட்சியத்திற்காக ஒருவர் ஒரு கட்சியில் இல்லையென்றால் அவர் அக்கட்சியின் மூலமாகக் கிடைக்கும் பலன்களுக்களுக்காக இருக்கிறார் என்பதே அதன் பொருள். மேலும் அவர் சார்ந்திருக்கும் கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும் போது அவர்கள் அடையும் நடைமுறை ரீதியான பலன்கள் இன்னும் அதிகம் இருக்கும். அவ்வாறு முறையின்றிப் பலன் அடைபவர் எவருக்கும் ஒரு சமயம் இல்லாவிடில் இன்னொரு சமயம் பாதிப்பும் வரத்தான் செய்யும். எனவே கம்யூனிஸத்தின் அடையாளம் என்று ஏதாவது கொஞ்ச நஞ்சம் இருந்தால் கூட தனது தப்பான நடைமுறையை மாற்றி விவசாயிகளிடமும் மக்களிடமும் தனது தவறை ஒப்புக் கொண்டு அவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக முயன்று தன்னையும் தனது கட்சியினரையும் நந்திகிராம் மக்கள் ஏற்றுக் கொள்ள ஒரு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதே புத்ததேவின் முன்னுள்ள ஒரே வழி.
பாசிஸ்டுகளின் அடிச்சுவட்டில் பயணம் மேற்கொள்ளும் புத்ததேவ்
அதன் மூலம் மட்டுமே வெளிப்படையான முதலாளித்துவக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் போன்ற முதலாளித்துவக் கட்சிகள் இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி மக்களின் ஆதரவைப் பெறுவதைத் தடுக்க முடியும். ஆனால் கம்யூனிஸப் பாதையைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்ட அவரும் அவரது கட்சியினரும் அனைத்து பாசிஸ சக்திகளும் மேற்கொள்ளும் யுக்திகளையே மேற்கொள்கின்றனர்.
நந்திகிராம் பூமிப்பாதுகாப்பு இயக்கத்தில் முன்னிலை வகிப்பவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் முஸ்லீம்களாக இருப்பதாலும், இப்போராட்டத்தில் ஈடுபடும் அமைப்புகளில் ஒரு முஸ்லீம் அமைப்பும் உள்ளதாலும் பி.ஜே.பி பாணியில் முஸ்லீம் விரோதப் பிரச்சாரத்தையும் நாசூக்காக சி.பி.ஐ (எம்) கட்சியினர் கிளப்பி விடுகின்றனர். நக்சலைட் இயக்கம் இப்போராட்டத்தில் ஈடுபடுகிறதென்றால், அதன் நடைமுறையில் என்ன தவறுள்ளதென்பதை சுட்டிக் காட்டுவதற்குப் பதிலாக அவர்கள் ‘நக்சலைட்கள் நக்சலைட்டுகள்’ எனக் கூக்குரலிட்டு அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின் பாணியில் பயங்கர வாதத்தின் பாதிப்பில் தாங்கள் உள்ளதாக புத்ததேவின் கட்சியினர் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். நக்சலைட்களின் நடைமுறை என்று மட்டும் நாம் ஏன் குறிப்பிடுகின்றோம்; ஏன் நக்சலைட்டுகளின் அடிப்படை அரசியல் வழிக்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக என்று நாம் குறிப்பிடவில்லையென்றால் நக்சலைட்டுகளின் அடிப்படை அரசியல் வழியும் சி.பி.ஐ (எம்) ன் அரசியல் வழியும் ஒன்றுதான். அதாவது மக்கள் ஜனநாயகப் புரட்சி என்பது தான், சி.பி.ஐ (எம்) மற்றும் அனைத்து நக்சலைட் குழுக்களின் அரசியல் வழியுமாகும். மேலும் நந்திகிராம் இயக்கத்தில் நக்சலைட்டுகளின் தவறான நடைமுறை அதாவது வன்முறை சார்ந்த அவர்களின் செயல்பாடு. தலைகாட்டவேயில்லை என்பதே உண்மை. உண்மையில் அருவறுக்கத்தக்க தகுந்த விதத்தில் நந்திகிராமில் நிலவியது அப்பட்டமான அரசு பயங்கரவாதமே.
அதையொட்டி போலீஸôர் நந்திகிராமிற்கு அருகில் ஒரு செங்கல் சூளையில் பதுங்கியிருந்த 10 பேரை நந்திகிராம் கலவரம் தொடர்பாக கைது செய்துள்ளனர். அந்த நிகழ்வும் 315 வெற்றுக் குண்டுகள் கைப்பற்றப் பட்டிருப்பதும் போலீஸôரைத் தவிர சி.பி.ஐ (எம்) கட்சிக் காரர்களும் நந்திகிராம் ரத்தக்களரியில் ஈடுபடுத்தப் பட்டிருப்பதை ஊர்ஜிதம் செய்கின்றது. காலை 10-30 மணிக்கு ஆரம்பித்த போலீஸôரின் காட்டுத் தாக்குதல் அன்று பகல் 12 மணி வரை நீடித்திருக்கிறது.
பத்திரிக்கை மற்றும் ஊடகங்களின் செய்தியாளர்கள் நந்திகிராமிலிருந்து 17 கி.மீட்டர்களுக்கு அப்பாலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். போலீஸôருடன் தனது தொண்டர்களை ஏவிவிடுவது அத்துடன் பத்திரிக்கையாளர்களை உண்மை நிலவரத்தை அறிய விடாமல் தடை செய்வது இவையனைத்தும் எந்த வகை சந்தேகத்திற்கும் இடமளிக்காத பாசிஸ நடவடிக்கைகளல்லவா ? இதனையொத்த நிகழ்வுகளைப் பார்க்க வேண்டுமானால் பாசிஸ ஜெர்மனி மற்றும் இத்தாலியின் வரலாற்றை பார்க்க வேண்டும். அந்த நாடுகளில் தான் ஹிட்லர் மற்றும் முசோலினியின் தொண்டர்கள் காவல் துறையுடன் இணைந்து கம்யூனிஸ்டுகளை வேட்டையாடினர்.
கோயபெல்ஸ் பாணியிலான இவர்களது பொய்ப்பிரச்சாரத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு பத்திரிக்கைகள் இவர்களுக்கு எதிராக பொய்ச் செய்திகளை வெளியிட்டு இவர்களது ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகின்றன என்பதாகும். இவர்களது கூற்றுக்கு எதிர்மாறாக நமது மாநிலத்தின் முன்னணி ஆங்கில இதழான ஹிந்துவே இப்பிரச்சனையில் சி.பி.ஐ (எம்) கட்சியின் அதிகார பூர்வ நாளிதழ் போன்றுதான் செய்தி வெளியிட்டது. நந்திகிராமில் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் உறவினர்களையோ அல்லது காயமடைந்தவர்களையோ இப்பத்திரிக்கை பேட்டியெடுக்கவில்லை. மாறாக நந்திகிராமை விட்டு வெளியேற நேர்ந்த சி.பி.ஐ (எம்) கட்சியினரையும் அவர்களது குடும்பத்தினரையும் பேட்டியெடுத்து பத்திபத்தியாக இப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. இப்பிரச்சனைக்கு முன்பும் கூட பத்திரிகைகள் உலகமயம், தனியார்மயம் விஷயங்களில் சி.பி.ஐ (எம்) கடைப்பிடித்த இரட்டை நிலையினை அதாவது மேற்குவங்கத்தில் அக்கொள்கைகளை அப்பட்டமாக அமலாக்கிக் கொண்டு பிற மாநிலங்களில் அதனை எதிர்த்துப் பாவனைப் போராட்டங்கள் நடத்திய இரட்டை நிலையினை அம்பலப்படுத்தவே இல்லை. இக்கொள்கை அவர்களுக்கு உகந்ததாக இருக்கும் முதலாளித்துவ நலன் கருதுபவராகர்களாக இருந்ததால் அதனைச் செய்யவில்லை.
ஒன்றாயிருந்த சி.பி.ஐ (எம்) கட்சியிலிருந்து பிரிந்து தங்களை அக்கட்சியின் புரட்சிகரப் பிரிவினர் போல் காட்டத் தொடங்கியவர்களே இவர்கள் அதன் மூலம் ஒன்றாயிருந்த சி.பி.ஐ (எம்) கட்சியினர் பல தொண்டர்களை வென்றெடுத்து இந்தியாவில் கம்யூனிஸ்டுக் கட்சி என்று செயல் படும் கட்சிகளிலேயே மிகப்பெரிய கட்சியாக தன்னை வளர்த்துக் கொண்டது இக்கட்சி. அது தனது அடிப்படை அரசியல் வழியைச் சரியாக வகுக்காததனால் ஏற்பட்ட கோளாறின் காரணமாக இந்திய உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமான இந்திய முதலாளி வர்க்கத்தை எதிரி வர்க்கமாகப் பார்ப்பதற்குப் பதிலாக நேச சக்தியாகச் சித்தரித்தது; படிப்படியாக அதன் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்தி, நாடாளுமன்ற வாதத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நாடாளுமன்ற வாதத்தில் முழுமையாக ஈடுபட்டு மக்கள் இயக்கப் பாதையையும், வர்க்கப் போராட்டத்தையும் கைவிட்டது ? வர்க்க சமரசம் பேசி இன்று முதலாளித்துவப் பாதுகாவலர்களின் வரிசையில் முன்னணி இடத்தைப் பிடிப்பதற்காக முதலாளித்துவ சேவையில் அவர்களனைவரிலும் கூட ஒரு படி மேலே சென்று நமது நாட்டின் ஏகபோக முதலாளி ஒருவருக்கும், இந்தோனேஷியாவில் லட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவித்த கொடுங்கோலன் சுகார்த்தோவிற்கு நெருக்கமான பன்னாட்டு மூலதனக் குழுமத்தின் தலைவனுக்கும் இந்திய விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தித் தரும் மக்கள் விரோத சக்தி என்ற அளவிற்கு இன்று மாறியுள்ளது. உண்மையான கம்யூனிஸ்டுகள் என்ற எண்ணத்தில் இக்கட்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உயிர்த்தியாகங்கள் உட்பட இன்னல்கள் பலவற்றை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட எண்ணற்ற தோழர்களின் தியாகங்கள்.
கம்யூனிஸ்ட் விரோத பிரச்சாரத்திற்கு மோசமாக வாய்ப்பளிக்கும் சி.பி.ஐ (எம்)
இந்நிலையில் உள்ளசி.பி.ஐ (எம்) கட்சியும் அதன் மேற்கு வங்க மாநில அரசாங்கமும் இன்னும் கம்யூனிஸ்ட் கட்சியில் வழி நடத்தப்படும் அரசாங்கம் என்ற பெயரோடு செயல்படுவதால் இந்த பாசிச செயல்பாடுகளை கம்யூனிச செயல்பாடுகள் என்று எடுத்துக் கொண்டு கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் கம்யூனிச சித்தாந்தத்திற்கு எதிரான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டுள்ளனர். அதாவது சோவியத்யூனியனில் புரட்சியின் ஆரம்ப கட்டத்தில் கூட்டுப் பண்ணைகள் அமைப்பதற்காக பெருநிலவுடமையாளர்களின் நிலங்கள் கைப்பற்றப்பட்டதையும் மேற்கு வங்கத்தில் சிங்கூரில் நடப்பதையும் ஒன்றுபடுத்தி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு கம்யூனிஸ்டுகளே இப்படித்தான் என்று எழுதியும் பேசியும் வருகின்றனர். சோசலிச சமூகமயத்திற்கும் முதலாளித்துவ நாட்டில் சிறு விவசாயிகளின் நிலங்களை பறித்து வயிற்றில் அடிப்பதற்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டை பார்க்கத் தவறும் இவர்கள், அவற்றிற்கு இடையிலுள்ள எதிரெதிர் தன்மைகளையும் காணத்தவறுகின்றனர். இவ்வாறு தனது பாசிச செயல்பாட்டின் மூலமாக கம்யூனிச விரோத பாசிஸ்ட்டாக செயல்படும் புத்ததேவ் பட்டாச்சார்யா ஒரு மக்கள் விரோதியாக மாறி அதன் மூலம் கம்யூனிச விரோத சக்திகளுக்கும் அவர்களது கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு தீனி போடும் வேலையையும் செய்கிறார்.
வெளுத்துக் கொண்டிருக்கும் சிவப்புச்சாயம்
தனது செயல்பாடுகளை நியாயப்படுத்தும் முகமாக இவர் தன்னை எதிர்ப்பவர்களை உலகம் சென்று கொண்டிருக்கும் போக்கை காண மறுப்பவர்கள் என்றும் கூறுகிறார். அதாவது இனி என்றென்றும் இருக்கப்போவது சந்தைப் பொருளாதாரமே முதலாளித்துவம் தான் வரலாற்றின் கடைசி கட்டம் என்று உரத்தக் குரலில் கூறிக்கொண்டிருப்பவர் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். ஸ்டாலின் தலைமையில் இருந்த கம்யூனிஸ்ட் சர்வதேச அகிலம் கடைந்தெடுத்த கயமைத்தனம் மற்றும் அப்பட்டமான வர்க்க சமரசம் என்று தூக்கியெறிந்த சோசலிஸ்ட் சந்தை பொருளாதாரம் என்ற யுகோஸ்லாவியாவின் ஒடுகாலி மார்ஷல் டிட்டோ வாந்தியெடுத்த கருத்தை ஒத்ததொரு கருத்தினை இவரும் வாந்தியெடுத்துக் கொண்டுள்ளார்.
இந்திய முதலாளித்துவ சேவையில் அணிவகுத்துக் கொண்டிருக்கும் வரிசையில் என்றோ மானசீகமாக இணைத்துக் கொண்டுவிட்டு அதனை வெளியில் தெரியாமல் தொண்டர்களிடமும் இருந்து மறைத்து தாங்கள் அணிந்திருக்கும் சிவப்பு முகமூடியின் சாயம் வெளுத்துவிடாமல் இது வரை காப்பாற்றிக் கொண்டு வந்த சி.பி.ஐ (எம்) கட்சியின் சிவப்பு முகமூடியின் சாயம் வெளுத்துப் போனதோடு மட்டுமல்ல சுக்கு நூறாக கிழித்தெறியப்பட்டுள்ளதை பறைசாற்றுவதே சிங்கூர் மற்றும் நந்திகிராமில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களாகும்.
உண்மையான கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு இது போன்ற கபட வேஷதாரிகள் அம்பலப்படுவதும் அம்பலப்படுத்தப்படுவதும் மிகவும் அவசியமாகும். தேசியவாத பிராந்தியவாத சாக்கடைகளில் புரண்டு தொழிலாளர் போராட்டங்களை தங்களது கைவசமுள்ள வெகுஜன அமைப்புகளை கொண்டு உள்ளிருந்தே முடமாக்கி வர்க்க சமரசத்தை பிரச்சாரம் செய்து அவற்றின் மூலமாக ஓரளவு மார்க்சிய அறிவு பெற்றிருந்தவரிடம் தத்துவார்த்த ரீதியாக ஏற்கனவே அம்பலப்பட்டிருக்கும் இக்கட்சி அத்தனை மார்க்சிய அறிவு வளர்ச்சி பெற்றிறாத உழைப்பாளி மக்களிடமும் சிங்கூர் நந்திகிராம் சம்பவங்கள் மூலம் மிக மோசமாக அம்பலப்பட்டுள்ளது. இந்நிலையை பயன்படுத்தி இவர்களது உண்மை உருவத்தை தோலுரித்துக் காட்டி உண்மையான கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவோம். அதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட உறுதி ஏற்போம்.

No comments:

Post a Comment