2007 ,மே மாதத்தில் வெளியான கட்டுரை
உலக
கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-8 ஆட்டத்தில் பங்கேற்க இயலாமல் அடுத்தடுத்து
வங்கதேச இலங்கை அணிகளிடம் தோற்று இந்திய அணி போட்டியை விட்டு வெளியேறிவிட்டது. அது
விளையாட்டு ரசிகர்களிடையே நமது அணி வீரர்களுக்கு எதிரான கோபத்தை தூண்டி விட்டுள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக மகேந்திரசிங்
தோனி போன்ற வீரர்களுக்கு மாநில அரசாங்கம் வீடு கட்ட இடம் வழங்கியது. அந்த இடத்தில்
கட்டப் பட்டுக் கொண்டிருந்த வீடு இந்த முறை அவர் சரியாக விளையாடததால் ஆத்திரமடைந்த
ரசிகர்களால் இடிக்கப்படும் காட்சி அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. பலத்த
பாதுகாப்புடன் நமது வீரர்கள் நாடு திரும்ப வேண்டியிருந்தது.
நடந்துள்ள
இந்த நிகழ்வுகள் விளையாட்டு குறித்த பல்வேறு கேள்விகைள நம்முன் நிறுத்தியுள்ளன. விளையாட்டுக்கள்
மக்களிடையே வளர்த்தெடுக்கப்பட வேண்டியதன் அவசியமென்ன ? அது சமூக வாழ்க்கையில் நிகழ்த்தும்
பங்கென்ன ? தற்போது அத்தகு விளையாட்டுக்கள் யாரால் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன
? விளையாட்டு வீரர்களுக்கு தரப்படவேண்டிய முக்கியத்துவம் என்ன ? ஆனால் அவர்களுக்கு
தரப்படும் முக்கியத்துவம் என்ன போன்றவையே அக்கேள்விகள்.
விளையாட்டுகள்
வளர்க்கப்பட வேண்டியதன் அவசியம்
சமூகம்
முழுவதும் உடல் உழைப்பிலிருந்து படிப்படியாக விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியினால் விடுவிக்கப்பட்டுக்
கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். வேட்டையாடுதல் போன்ற மிகக் கடுமையான வேலைகள் கூட
அல்ல, சாலை போடுதல், ஏரிகள், குளங்கள் வெட்டுதல் போன்ற உடல் உழைப்பு தேவைப்படக்கூடிய
வேலைகள் கூட தற்போது எந்திரங்களால் எளிதாக செய்யப்படுகின்றன. சுரங்கங்களின் கனிமங்களை வெட்டியெடுப்பது போன்ற
வேலைகளை செய்வதற்கு முன்னேறிய நாடுகளில் தற்போது எந்திர மனிதர்கள் (ரோபோ) பயன்படுத்தப்படுகின்றனர்.
இதனால் வரலாற்றில் நீண்ட நெடிய காலமாக கடினமான உழைப்புக்கு பழக்கப்பட்டிருந்த மனிதனின்
உடல்வாகு பாதிக்கப்படும் சூழ்நிலை தோன்றியுள்ளது.
இனிவரும் காலங்களில் மனித மூளைக்கு மட்டுமே வேலை அதிகம் இருக்குமென்பதால் இனிப்
பிறக்கும் குழந்தைகளின் தலைமட்டும் மிகப் பெரிதாகப் போகும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் படும் அவயவங்களே அதிக வளர்ச்சி பெறும் என்ற உயிரியல்
விஞ்ஞானி டார்வினின் கோட்பாட்டின் படி அவ்வாறு நிகழும் என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில்
தற்போதே அமெரிக்கா போன்ற நாடுகளில் உடல் உழைப்புக்குறைவின் காரணமாக உடல் பருமன் நோயினால்
பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேயுள்ளது. இந்நிலையில் மனித உடலின்
ஆரோக்கியத்தையும் தோற்றப் பொலிவையும் பராமரிப்பதற்காகவும் சுறுசுறுப்பாக அதனை வைத்திருப்பதற்காகவும்
விளையாட்டுக்கள் நிச்சயமாக சமூகத்திலுள்ள அனைத்துப்பகுதி மக்களிடமும் கொண்டு செல்லப்படவும்
வளர்க்கப்படவும் வேண்டும்.
இதுதவிர
இயற்கையாகவே இளமை பருவத்தில் மனிதர்களுக்கு பல்வேறு ஈடுபாடுகள் இருப்பது அவசியமாகும்.
அதாவது எத்தனை அதிக விசயங்களில் ஈடுபாடுகளை அவர்களிடம் ஏற்படுத்தமுடியுமோ அத்தனை அதிக
விசயங்களில் ஈடுபாடுகளை கொண்டுவருவது அவசியம். ஏனெனில் மனித வாழ்க்கையில் அந்தப் பருவம்
எதையும் எப்பாடுபட்டும் செய்து முடிக்கும் ஆற்றலையும் வலிமையையும் கொண்டது. அதனை முறையாக
பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற திசை திருப்பல்களில் இளைஞர்களின் மனம் பாதிக்கப்படுவதை
தவிர்க்க முடியும். எனவே குறிப்பாக இளைஞர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் பெரிதும்
பரப்பப்பட வேண்டும். ஒரு ‘நல்ல உடலில் தான் நன்கு சிந்திக்கும் மனம் இருக்கமுடியும்
என்ற கூற்று இங்கு நினைவு படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.
இது
போன்ற காரணங்களினால் தான் முதலாளித்துவம் அதன் ஆரம்ப கட்டத்தில் அறிமுகம் செய்த லிபரல்
கல்வி முறையில் விளையாட்டு என்பது ஒரு பங்கும் பகுதியுமாக ஆக்கப்பட்டது. பள்ளிகளில்
விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர் விளையாடுவதற்காக பள்ளிக்கூட வளாகத்தில் பெரிய
விளையாட்டுத் திடல்கள் வைத்திருப்பது அவசியம் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
சோசலிச
சமூக அமைப்பில் கல்விக் கூடங்கள் மட்டுமின்றி அனைத்து தொழிற்சாலைகளிலும் விளையாட்டுத்
தளங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதை நம்மால் பார்க்க முடிந்தது. ஆனால் எத்தனைதான் முக்கியமானதாக மேற்கூறிய காரணங்களால்
விளையாட்டு என்பது இருந்தாலும் கூட அது சமூக உற்பத்தியில் நேரடியான பங்கினை வகிக்காததால்
விளையாட்டு சமூக வாழ்க்கையில் ஒரு பங்கு தானே தவிர அதுவே வாழ்க்கையாகி விட முடியாது.
வியாபார
யுக்திகளுக்கு இரையாகி வரும் விளையாட்டு
ஆனால்
எதை எதையெல்லாம் பணமாக்க முடியுமோ, எதை எதையெல்லாம் வைத்து சம்பாதிக்க முடியுமோ அதையெல்லாம்
பணமாக்கவும் சம்பாதிக்கவும் பயன்படுத்துவதையே இலக்காக கொண்டிருப்பதே இந்த முதலாளித்துவ
சமூக அமைப்பு அதன் அத்தகைய லாப வேட்கைக்கு விளையாட்டும் தப்பவில்லை. அதோடு வாழ்க்கையே வியாபாரமாகிவிட்ட இந்த அமைப்பில்
விளையாட்டும் அப்பட்டமான வியாபாரமாக ஆகிவிட்டது. விளையாட்டை மையமாக வைத்தும் பல வியாபாரங்கள்
நடைபெற்றுக் கொண்டுள்ளன. விளையாட்டுக்களை தங்களது தயாரிப்புக்களின் விளம்பரங்களுக்காக
பல நிறுவனங்கள் நடத்த முன் வருகின்றன. தங்களிடம் உள்ள விளையாட்டு திறனும் இந்த சந்தையில்
சரக்காக ஆகி அதை வைத்தும் சம்பாதிக்கமுடியும் என்ற நிலை தோன்றியுள்ளதால் தேக ஆரோக்கியத்தையும்
உடல் வாகினையும் பராமரிப்பதற்காக வாழ்க்கையின் ஒரு பங்காக இருக்க வேண்டிய விளையாட்டு
பலருக்கு அதுவே முழு வாழ்க்கையாகி விட்டது. தன்னுடைய விளையாட்டு திறனை பயன்படுத்தி
போட்டிகளில் வெற்றி கொண்டு சாதனைகள் நிகழ்த்த வேண்டும். சாதனை நிகழ்த்த தங்களால் முடிந்த
வரைக்கும் தான் சம்பாதிக்க முடியும்; அதைக்
கொண்டுதான் வாழ்க்கை முழுவதையும் நடத்த வேண்டியிருக்கும் என்பதற்காக தேவையற்ற கடும்
பயிற்சிகளை மேற்கொள்ளுதல் உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கும் ஊக்க மருந்துகளை உட்கொள்ளுதல்
போன்ற தேவையற்ற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களில் விளையாட்டு வீரர்கள் ஈடுபடுகின்றனர்.
மேலும்
தொலைக்காட்சி போன்றவற்றின் மூலம் விளையாட்டு போட்டிகளை கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும்
வசதி ஏற்பட்டுள்ளதால் அவற்றை ஒளிபரப்பும் வேளையில் தங்களது உற்பத்தி பொருட்களை விளம்பரம்
செய்து வியாபார வளர்ச்சியை மேம்படுத்தும் போக்கில் பல முதலாளித்துவ நிறுவனங்கள் ஈடுபடுகின்றன
சில விளையாட்டுக்களின் மூலம் பிரபலமாகிவிட்ட வீரர்கள் விளையாட்டோடு ஒரு சம்பந்தமும்
இல்லாத பல பொருட்களின் விற்பனைக்கு உதவும் விளம்பர நாயகர்களாகவும் ஆக்கப்படுகின்றனர். அவ்வாறு விளம்பரங்களில் தோன்றுவதற்காக அவர்கள் பெறும்
கட்டணம் விளையாடுவதன் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும் பணத்தைப் போல பல மடங்குகளாக ஆகி
விடுகிறது. இது போன்ற காரணங்களினால் விளையாட்டு வீரர்கள் விளையாட்டு நட்சத்திரங்களாக
முதலாளித்துவ நிறுவனங்களினால் ஆக்கப் படுகின்றனர். இதன் விளைவாக பந்தய குதிரைகளாக இடைவிடாது
ஓடி சாதனைகள் பலவற்றை தொடர்ச்சியாக நிகழ்த்தினால்தான் தங்களது வருமானத்தை பராமரிக்கமுடியும்
என்ற சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.
விளையாட்டு ஆர்வம் என்பது முதலாளித்துவ ஊடகங்களின் யுக்திகளால் ஒரு வெறியாக
ஆக்கப்பட்டு விளையாட்டு வீரர்களிடமிருந்து இன்னும் அதிகம், இன்னும் அதிகம் சாதனைகள்
வர வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஆரோக்கிய மற்ற விதத்தில் விளையாட்டு ரசிகர்களிடம்
வளர்ந்து வருகிறது.
நட்சத்திரங்களாக்கப்பட்டு
விடும் விளையாட்டு வீரர்கள்
சமூகத்தின்
அனைத்துத் தரப்பு வளர்ச்சிக்கும் வழிகாட்டக் கூடிய தன்னலமற்ற தலைவர்களை சமூக அமைப்பில்
பெரும்பங்கினை ஆற்றவல்ல அரசியல் துறை தற்போது உருவாக்கவில்லை. அத்துடன் மிகமட்டமான
மனிதர்களின் புகலிடமாக ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்க அரசியல் ஆகிவிட்டது. அதனால்
இளைஞர்கள் முன் சக்தி வாய்ந்த ஊடகங்களால் நிறுத்தப்படும் நட்சத்திர விளையாட்டு வீரர்கள்
அவர்களின் முன் மாதரிகளாக ஆகி விடுகின்றனர்.
அவர்கள் மனித சக்திக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்யர்கள் போன்ற எண்ணம் அவர்களிடையே
பரப்பப்படுகிறது. இளைஞர்களின் மனதை யதார்த்தத்தில்
இந்த அமைப்பில் நிலவும் நிச்சயமற்ற நிலையிலிருந்து திசை திருப்பி அவர்களை ஒரு வகையான
கனவுலகில் சஞ்சரிக்க வைப்பது இன்றைய ஆளும் வர்க்கத்திற்கு அவசியமாக இருப்பதால் இந்தப்
போக்கினைத் தங்களது பிரச்சார சாதனங்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாக ஊக்குவிக்கின்றன.
இதனால் விளையாட்டு வீரர்களைப் பற்றி அவர்களும் தங்களை போன்ற
மனிதர்களே என்ற எண்ணம் படிப்படியாக மறைந்து அவர்கள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்கள்
என்பது போன்ற ஒரு பொய்த்தோற்றம் பரப்பப்படுகின்றது. இதன் விளைவாக முதலாளித்துவ நிறுவனங்களால் விளையாட்டு
வீரர்கள் பந்தய குதிரைகள் போல், கட்டுச் சேவல்களைப்போல் முட்டு கிடாய்களைப்போல் உருவாக்கவும்
வளர்க்கவும் படும் அவலநிலை தோன்றியுள்ளது.
ஒரு விளையாட்டில் நிகழும் வெற்றியும் தோல்வியும் அளவுக்கு அதிகமாக பெரிது படுத்தப்பட்டு
அதை மையமாக வைத்து சூதாட்டங்கள் நடத்தப்படுகின்றன. நெறிமுறையற்ற விதத்தில் பணம் ஈட்டும் ஆசை வந்து
விடுவதால் அந்த சூதாட்டக்காரர்கள் வலையில் விளையாட்டு வீரர்கள் வீழ்வதும் வீணாவதும்
பெருகி வருகிறது.
முழுநேரமும்
விளையாட்டே தொழில் என்று இருக்கம் பல விளையாட்டு வீரர்களின் வருமானம் மிக அதிகமாக இருப்பதால்
அவர்களுடைய வாழ்க்கை முறையே ஆடம்பரமானதாக மாறிவிடுகிறது. ஆனால் வயதும், வாலிபமும் இருக்கும் வரையே அதாவது
அவரது வாழ்வின் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே அவர் சிறப்பான சாதனைகள் படைக்கும் வீரராக
விளங்கமுடியும். அதன் பின்னர் அவர் சம்பாதித்த காலத்தில் சேமித்து வைத்திருந்தாலொழிய
அவர் தனது நடுத்தர வயதில் நல்ல வாழ்க்கையினை நடத்த முடியாது. மேலும் மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்கள் போல் ஆக்கப்பட்டு விடும் அவர்களில் பலர் சராசரி
வாழ்க்கையை திருப்தியுடன் தங்களது நடுத்தர வயதில் நடத்தவியலாது பல கெட்ட பழக்க வழக்கங்களுக்கு
ஆளாகி விடுகின்றனர்.
வெறிவாதத்தை
விசிறிவிடப் பயன்படுத்தப்படும் விளையாட்டு
நல்ல
விளையாட்டை யார் வெளிப்படுத்தினாலும் அவர் பாராட்டப்பட வேண்டும் என்ற ஆரோக்கியமான நிலை
ஏறக்குறைய அழிந்து கொண்டுள்ளது. விளையாட்டுகள்
பிராந்திய வெறியையும் தேசிய வெறியையும் உருவாக்கும், விசிறிவிடும் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. முன்னேறிய; பின்தங்கிய என்ற பாகுபாடின்றி அனைத்து
நாடுகளிலும் விளையாட்டை மையமாக வைத்த வன்முறைகள்
பலரது உயிரையும் காவு கொள்ளும் அளவிற்கு அதிகமாகி கொண்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகளும் பழைய
பிரிட்டிஷ் காலனிகளிலும், இங்கிலாந்திலும் பெரிதும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளும்
இத்தகைய வன்முறைகளை வெளிப்படுத்தும் விளையாட்டுகளாக ஆகியுள்ளன. டென்னிஸ் விளையாட்டில்
கூட மோனிகா செலஸ் என்ற விராங்கனை ஸ்டெப்பிகிராஃப் என்ற சக டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையின்
ரசிகரால் கத்தியால் குத்தப்பட்டார். இந்தப் பின்னணியில் தான் இந்திய கிரிக்கெட் அணியின்
தோல்வியும் அதைத் தொடர்ந்து அதன் அணி வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலும் பாதுகாப்பின்மையும்
பார்க்கப்பட வேண்டும்.
அரசியல்
வாதிகளின் சுயவிளம்பரத்திற்காக செய்யப்படும் விளையாட்டு வீரர்களுக்கான அதீத வெகுமதிகள்
விளையாட்டுகள்
எங்கு நன்கு வளர முடியுமோ அந்த இடங்களான பள்ளிகள் கல்லூரிகள் போன்றவற்றில் விளையாட்டினை
மேம்படுத்துவதற்காக செய்ய வேண்டியது எதையும் நமது ஆட்சியாளர்கள் செய்வதில்லை. அதனால்
விளையாட்டுத் துறை இலாப நோக்கத்திற்காக நடத்தப்பெறும் நிறுவனங்களின் கையில் ஏறக்குறையை
முழுமையாக ஒப்படைக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் நாங்களும் விளையாட்டை ஊக்குவிக்கிறோம்
என்பதை காட்டுவதற்காக சாதனைகள் நிகழ்த்தும் ஒரு சில விளையாட்டு வீரர்களுக்கு தேவையற்ற
விதத்தில் பணத்தினை அள்ளித் தந்து நமது ஆட்சியாளர்கள் சுய விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். இவர்கள் கல்விக்கென ஒதுக்கும் தொகை பெரிதும் ஆசிரியர்களுக்கு
ஊதியம் வழங்குவதற்கே போதாது இருக்கும் நிலையில், விளையாட்டிற்கென ஒதுக்கப்பட அதில்
எதுவும் மிஞ்சுவது இல்லை. அரசு உரிய எண்ணிக்கையில்
கல்வி நிலையங்களை திறக்காததால் பள்ளிக் கல்வியிலிருந்து கல்லூரி கல்வி வரை கல்வி முழுவதும்
தனியார் மயமாகி வருகிறது. அவற்றில் மிக மிக அதிக பணம் செலுத்தி படிக்க வேண்டி பெரிய
வசதியுள்ளவர்களினால் நடத்தப்படும் ஒரு சில கல்விக் கூடங்களில் மட்டுமே விளையாட்டுத்
திடல் வசதிகள் பராமரிக்கப்படுகின்றன. மிகப் பெரும்பாலான கல்வி நிலையங்களில் விளையாட்டுத்திடல்
வசதியே இருப்பதில்லை. விளையாட்டிற்கென ஆசிரியர்களும்
நியமிக்கப்படுவதில்லை.
தொழிற்சாலைகளிலும்
எட்டு மணி நேர வேலை என்பது உத்தரவாதபடுத்தப்படுவதில்லை. உழைப்பவர் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுவதற்கு
குறைந்தபட்ச வாய்ப்புகள் கூட ஏற்படுத்தப்படுவதில்லை. வேலைக்குச் சேருபவரை வேலைக்கு
அமர்த்து – கசக்கிப்பிழி - தூக்கியெறி என்பதே முதலாளித்துவ உற்பத்தி முறையின் தாரக
மந்திரமாக உள்ளது. அந்த அடிப்படையில் பொருளுற்பத்தி நடக்கும் அமைப்பில் இருக்கும் பெரும்பாலான
மக்கள் தங்களது சக்தி முழுவதையும் செலவழித்து எவ்வளவு அதிக நேரம் உழைக்க முடியுமோ அவ்வளவு
அதிக நேரம் உழைத்தால் தான் தங்களது வயிற்றையே கழுவ முடியும் என்ற நிலைமையிலேயே உள்ளனர். இந்த நிலையில், கோடிக் கணக்கான மக்களை விளையாட்டில்
ஈடுபடுத்தி அம்மக்களிடையே பல மட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் தேர்ச்சியடைந்து இறுதியில்
உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் திறனுள்ள விளையாட்டு வீரர்களை எங்ஙனம்
நாம் உருவாக்க முடியும்? பாட்டாளி மக்களின் மாபெரும் தலைவர் தோழர் மாவோவினால் வழி நடத்தப்பெற்று
சோசலிசப் பாதையில் பயணித்த மக்கள் சீனம் அதன் விடுதலையை நம்மைக் காட்டிலும் பிந்தி
1949-ம் ஆண்டிலேயே பெற்றிருந்த போதிலும் அது உலகத்தரம் வாய்ந்த பல விளையாட்டு வீரர்களை
வெற்றிகரமாக உருவாக்கியது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிக தங்கப் பதக்கங்களைப்
பெற்ற அந்த நாடு அத்தகைய சிறப்பான வெற்றியை பெறுவதற்கு விசேஷமான முயற்சிகள் எவற்றையேனும்
மேற்கொண்டதா என்ற கேள்வி அந்நாட்டின் விளையாட்டு அமைச்சரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறிய பதில் இங்கு நினை கூறத்தக்கது.
அவர் தனது பதிலில் நாங்கள் இóந்த வெற்றியை சாதிப்பதற்காக எந்த பிரத்தியோக முயற்சியையும்
மேற்கொள்வில்லை; நாங்கள் செய்ததெல்லாம் இது ஒன்றுதான். நாடு முழுவதும் மக்களின் தேக
ஆரோக்கியத்தைய பராமரிப்பதற்காக நாங்கள் பல மட்டங்களில் முயன்றோம் அம் முயற்சிகளின்
ஒரு சிறு வெளிப்பாடுதான் இந்த வெற்றி என்று கூறினார்.
மேலும்
சோஷலிஸ நாடுகளில் முழுநேர விளையாட்டு வீரர்கள் என யாரும் பராமரிக்கப் படுவதில்லை என்பதும்
இங்கு குறிப்பிடத் தக்கதாகும். எனவே விளையாட்டு சமூக வாழ்க்கையில் வகிக்க வேண்டிய பங்கினை
முறையாக வகிக்க வேண்டுமானால் விளையாட்டு வீரர்களுக்கு சமூகத்தில் கொடுக்கப்பட வேண்டிய
சரியான இடம் கொடுக்கப்பட வேண்டுமானால் ஆரோக்கியமான விதத்தில் வெறி வாதத்திலிருந்தும்
விளையாட்டுக்கள் விடுவிக்கப்பட வேண்டுமானால் அதற்குகந்த சமூக அமைப்பு இருப்பது அவசியமாகும். அத்தகைய சமூக அமைப்பாக தற்போதைய முதலாளித்துவ அமைப்பு
இல்லையென்பதை நாம் சுட்டிக் காட்டிய போக்குகள்
உறுதி செய்கின்றன. பின் தங்கிய முதலாளித்துவ நாடுகளில் மட்டுமின்றி முன்னேறிய முதலாளித்துவ
நாடுகளிலும் முதலாளித்துவத்தின் கையில் விளையாட்டு குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக
சீரழிந்து சின்னாபின்னப்பட்டுக் கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் இந்த அமைப்பில் நன்கு
தீனி போட்டு வளர்க்கப்டும் சமூக பிரக்ஞை அற்றவர்களாக, சமூக நீரோட்டத்திலிருந்து துண்டாடப்பட்ட
விநோதம் நிறைந்த மனிதர்களாக ஆக்கப்படுகின்றனர். அதனால் அர்த்தமற்ற விதத்தில் பல சமயங்களில் தூக்கி வைத்து கொண்டாடப்படுகின்றனர். அவர்களிடையே தவிர்க்க முடியாமல் சாதனைப் பஞ்சம்
தோன்றும் பொழுது அற்ப புழுக்களைப் போல் காலில் வைத்து மிதித்து நசுக்கவும் படுகின்றனர்.
திகட்ட திகட்ட விளையாட்டு என்பது மக்களிடையே ஆர்வத்தை குறைத்துக் கொண்டு வருகிறது... கிரிக்கெட் ஆதரவு இழந்து வருவதை அடுத்து, பெண்கள் ஆக்கி, ஸ்க்வாஷ், டென்னிஸ், பாட்மிண்டன் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பை காட்டி அதன் மேல் மோகம் வர வைக்க தந்திரோபாயம் நடந்து வருகிறது.. சமீபத்தில் ஒரு நாட்டின் விளையாட்டு அமைச்சரை அழைக்காமலேயே முதல் கார் பந்தயம் நடத்தப் பட்டுள்ளது... முதலாளிகளின் கைகள் இங்கு ஓங்கி இருப்பதை காட்டுகிறது... ஆகையால் தொழிலாளி வர்க்கம் அனைத்து வித்தியாசங்களையும் களைந்து விட்டு ஒன்று பட்டால் ஒழிய விடிவு வெகு தூரம் தான்
ReplyDelete