Powered By Blogger

Monday, November 7, 2011

எஸ்.யு.சி.ஐ - யும் எக்ஸ்பர்ட் கமிட்டியும்

2007 ,மே மாதத்தில் வெளியான கட்டுரை
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தைக் கூட்டுவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்கத் தவறும் கேரள அரசின் செயல் குறித்து அறிக்கை ஒன்றை எஸ்.யு.சி-ஐ கட்சி வெளியிட்டுள்ளது. இப்பிரச்சனையைத் தீர்க்க சர்வதேச தரம் வாய்ந்த நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது. அதன் பரிந்துரையின் அடிப்படையில் அணையின் உயரத்தைக் கூட்டுவது அல்லது வேறு அணை கட்டுவது போன்ற அனைத்து விஷயங்களிலும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.


உண்மையில் மத்திய நதிநீர் கமிஷன் அமைத்த நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் அணையின் உயரத்தைக் கூட்டலாம் என்ற தீர்ப்பினை வழங்கியுள்ளது. அந்த நிபுணர் குழு பூகம்ப அபாயம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் உரிய முறையில் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளதா என்பது சந்தேகத்திற்குரியது என்ற வாதத்தை எஸ்.யூ.சி.ஐ. முன் வைக்கிறது. அப்படியானால் மத்திய நதிநீர் கமிஷன் அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அம்சங்கள் எவை என்பதைக் கோடிட்டுக் காட்டியிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் வேறோர் நிபுணர்குழு கோரியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் வேறு ஒரு நிபுணர் குழு அதுவும் சர்வதேச அளவில் பெயர் பெற்ற வல்லுனர்களைக் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று எந்த அடிப்படையுமின்றி கூறுவது, முடிவு எதுவும் எடுக்க முடியாமல் பிரச்சனையைக் காலம் தாழ்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் யுக்தியாகவே அமையும். ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமலாக்கக் கோரினால், கேரள மக்கள் அதைச் சரியாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.’ அணையின் உயரத்தைக் கூட்ட வேண்டாமென்றால், தமிழக மக்கள் அதைச் சரியாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் இரண்டும் கெட்டான் நிலைபாடே தவிர இது வேறதுவுமல்ல.
இருமாநிலங்களிலும் செயல்படும் பிராந்தியக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களுக்குச் சாதகமான நிலைபாட்டினை எவ்விதத் தயக்கமுமின்றி எடுக்கின்றன. அக்கட்சிகள் எது சரியானது எனப் பார்ப்பதே இல்லை. அகில இந்தியக் கட்சிகளிலும் பெரும்பாலானவை அவற்றின் மத்திய அமைப்புகளிலிருந்து அறிக்கை எதுவும் விடுவதில்லை. ஏனெனில் அவ்வாறு அறிக்கை விட்டால் அது ஏதாவதொரு மாநிலத்திற்குச் சாதகமானது போல் தோன்றினால் மற்றொரு மாநில மக்களின் ஆதரவை இழந்து அம்மாநிலத்தில் கட்சி பலவீனப்பட்டுப் போகும் என்ற பயம் அவர்களை வாட்டி வதைக்கிறது. கம்யூனிஸ்டுக் கட்சிகளும் ஏறக்குறைய இந்த நிலையையே கடைப்பிடிக்கின்றன. பாதுகாப்புணர்வுடன் அத்தகைய அகில இந்தியக் கட்சிகளின் சம்பந்தப்பட்ட மாநிலக் கமிட்டிகள் அந்தந்த மாநிலங்களின் பிராந்தியக் கட்சிகளின் நிலைபாட்டுடன் ஒத்துப்போகும் நிலைபாட்டை தந்திரமாக எடுத்துத் தப்பிதóதுக் கொள்கின்றன.
ஆனால் எஸ்.யூ.சி.ஐ தன்னை ஒரு ‘உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சி’ என்று கூறிக் கொள்வதால் அக்கட்சிகளின் நடைமுறையைப் போன்றதொரு நடைமுறையினை பின்பற்ற முடியவில்லை. தாங்கள் மாறுபட்டவர்கள் என்பதை சம்பிரதாய ரீதியிலாவது வெளிக்காட்ட வேண்டியது அவர்களுக்கு அவசியமாகிறது. அதனால் மத்திய அமைப்பிலிருந்து ஒரு அறிக்கையும் விட வேண்டும்; ஆனால் அந்த அறிக்கை சம்பந்தப்பட்ட மாநிலங்களில் எந்த மாநில மக்களின் அதிருப்தியையும் சம்பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையிலான அறிக்கையாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விடப்பட்ட அறிக்கையாகவே அக்கட்சியின் அறிக்கை அமைந்துள்ளது.
மற்ற கட்சிகளைப் பொறுத்த வரையில் அவற்றின் நாடாளுமன்ற சட்டமன்ற நலன்களை பெரிதெனக் கருதும் போக்கு இந்த கோட்பாடற்ற நிலையை நோக்கி அவர்களைத் தள்ளியுள்ளது. ஆனால் எஸ்.யு.சி.ஐ கட்சியைப் பொறுத்தவரை நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் வெளியே சொல்லிக் கொள்ளும்படியான வாக்குகளைக் கூட கேரளா, தமிழ்நாடு என்ற இரு மாநிலத்திலும் பெறும் வலுவுடன் அது இல்லை. இருந்தும் அந்த நலன் குறித்த ‘தொலை நோக்குக்’ கண்ணோட்டம் அவர்களையும் இத்தகைய இரண்டும் கெட்டான் நிலை எடுப்பதை நோக்கித் தள்ளிவிட்டுள்ளது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு குறித்த நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப் பட்ட போதும் அக்கட்சி இதனையொத்த நிலையினையே எடுத்தது என்பது இங்கு நினைவு கூறத்தக்க விஷயமாகும். எனவே எஸ்.யூ.சி.ஐ கட்சியினரின் எதற்கெடுத்தாலும் நிபுணர் குழு அமைக்கக்கோரும் கருத்தானது, தள்ளிப் போட்டுத் தப்பிச்செல்வது, உண்மையைத் துணிவுடன் எடுத்துக்கூறவேண்டும் என்ற அக்கறையின்றிச் சம்பிரதாய ரீதியில் ஒன்றைச் செய்ய வேண்டுமென்பதற்காக செய்வது என்ற உள்ளடக்கங்களையே கொண்டுள்ளது. இதை உணர்ந்து கொள்வதற்கு எந்தவொரு நிபுணர்குழுவோ அல்லது நிபுணத்துவமோ தேவையில்லை.

No comments:

Post a Comment