Friday, November 18, 2011

இடதுசாரி அங்கிக்குள் ஒளிந்திருக்கும் ஜாதியம்


        (மாற்றுக்கருத்து  15 செப்டம்பர் - 14 நவம்பர், 2008)  

இடதுசாரி ஞானஸ்நானம் வழங்கும் மதகுருமார்களாக தங்களைத் தாங்களே  வரித்துக் கொண்டு, சிற்றிதழ் நடத்துபவர்கள், பின்நவீனத்துவவாதிகள் என்ற பெயர்களில் தங்களை அழைத்துக் கொள்ளும் பலர், தமிழகத்தில் இடதுசாரி முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற ஒளிவட்டம் பின்னால் சுழல வலம்வந்து கொண்டுள்ளனர். ஒரு காலத்தில் வெறும் அரவமாக ஒலித்த அவர்களின் குரல்கள் தற்போது பேரிரைச்சலாக உருவெடுத்துள்ளன.  அதற்கு காரணம் அவர்களின் குரல் வலிமை பெற்றுவிட்டது, அதனால் அதன் எதிரொலி அதிகமாகிவிட்டது என்பதல்ல.  தங்களது பத்திரிக்கைகளின் பக்கங்களில் 25 சதவீதத்தை விளம்பரங்களுக்கும் 60 சதவீதத்தை சினிமா மற்றும் சினிமா நட்சத்திரங்கள் குறித்த செய்திகளை எழுதி நிரப்பவும் பயன்படுத்தும் பிரபல பத்திரிக்கைகளும் கூட இதுபோன்ற எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் எழுதுவதற்கென தங்களது இணை இதழ்களில் வாய்ப்பளிக்கின்றனர். அவை அவ்வாறு வாய்ப்பளிப்பதற்கான காரணம், இடதுசாரி சிந்தனைகளின் மேல் அந்த பத்திரிக்கைகளுக்கு திடீரென ஏற்பட்டுவிட்ட புதிய காதலா அல்லது அதுவும் ஒரு வித்யாசமான வியாபார யுக்தியா என்பது போன்ற வி­யங்களுக்கு நாம் பின்னர் வருவோம்.


நமக்கெதிராகத் திரும்பும் நெற்றிக்கண்
            தற்போது இந்த இடதுசாரி இலக்கணம் வகுக்கும்  தொல்காப்பியர்களின் கோபம் மிகுந்த நெற்றிக்கண் நமக்கெதிராக திரும்பியுள்ளது.  அதற்கான காரணம் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு நாம் எழுதிய இரங்கல் செய்தியாகும். அதையயாட்டி நமக்கு பெருந்தன்மையுடன் இவர்கள் வழங்கியிருந்த "இடதுசாரி சிற்றிதழ்" என்ற அங்கீகார முத்திரையை ஏன் வழங்கினோம் என்று எண்ணி வேதனைப்படுபவர்களாக இவர்கள் திடீரென  ஆகிவிட்டனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு அது குறித்த தங்களது கோபாவேசத்தை வெளிப்படுத்துகின்றனர். 
            நம்மை பொறுத்தவரை எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு நாம் ஒரு வரையறைக்கு உள்பட்ட பாராட்டுதலை அவர் குறித்த இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தோம். அவரை பொறுத்தவரையில் நாம் செய்திருந்தது ஒரு முழுமையான திறனாய்வு அல்ல. அவர் பொழுதுபோக்கு, இலக்கியம் எழுத தொடங்கியவரே என்று நாம் கூறியதே தெளிவாகப் புலப்படுத்தும் அவரது எழுத்துக்கள் அனைத்தும் திறனாய்வு செய்யப்பட வேண்டிய உயரத்தை எட்டியவை அல்ல என்பதை.  இருப்பினும் அவர் தனது எழுத்துக்களிலும், திரைப்பட வசனங்களிலும் பிரதிபலித்த ஜனநாயக மனிதாபிமானப் போக்கும் சமூகக் கோளாறுகளை கிண்டல் செய்து அவர் சாடிய விதமும் அவர் இறந்த வேளையில் அவருக்கு ஒரு இரங்கல் செய்தி வெளியிட வேண்டும் என்ற உணர்வினை நமக்கு ஏற்படுத்தியது.  இந்த உணர்வினை பதிவு செய்யும் முன்பு அவர் எந்த ஜாதியை சேர்ந்தவர். அவர் பூணுல் போட்டிருந்தாராஇல்லையாஎன்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் எதுவும் நமக்கில்லை.
தனி மனிதர்களைப் பிரதானப் படுத்துவதும் - சமூக மாற்றத்தை வலியுறுத்துவதும்

            நாம் இதனை எழுதியிருப்பதன் நோக்கம் சுஜாதாவிற்கு இரங்கல் தெரிவித்ததற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது மட்டுமல்ல.  ஏனெனில் இவர்கள் நினைப்பது போலெல்லாம் நாம் நடக்க முடியாது.  இவர்கள் தனி மனிதர்களாக தங்களைப் பிரதானப் படுத்துவதையே நோக்கமாகக் கொண்டவர்கள்.  ஆனால் நாம் சமூக மாற்றத்தை வலியுறுத்துபவர்கள்.   ஆளும் வர்க்கம் தன்னை அரசு என்ற வடிவத்தில் அமைப்பு ரீதியாக ஒரு முகப்படுத்திக் கொண்டு நிற்கையில், உழைக்கும் வர்க்க நலனைப் பாதுகாப்பதற்கு மட்டுமின்றி அதன் விடுதலையைச் சாதிப்பதற்காகவும் அமைப்பு ரீதியாக உழைக்கும் வர்க்கத்தை அணி திரட்ட வேண்டியது அவசியமாகும்.  எனவே பரந்து பட்ட மக்களின் ரசனையை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியது அதற்கு அவசியமாகிறது.  ஏனெனில் அந்த மக்களையே நாம் அணிதிரட்ட வேண்டியுள்ளது.  எனவே அப்படிப்பட்ட ரசனையைக் கணக்கிலெடுத்துக் கொள்ளும்போதுஜனநாயக மனநிலையை வளர்க்கும் விதத்திலும், பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் சமூகம் குறித்த விமர்சனங்களைச் சிறிதளவேனும் முன் வைத்து எழுதும் எழுத்தாளர்களையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
படிப்பது இராமாயணம் - இடிப்பது பெருமாள் கோவில்
            நம்மைப் பொறுத்தவரை நாங்கள் அடுத்த தலைமுறைக்கும், அடுத்த நூற்றாண்டுக்கும் எழுதுகிறோம் என்றெல்லாம் தலை வெடித்த தனமாகப் பிதற்றி தங்களையே ஒரு நிறுவனமாகப் பாவித்துக் கொண்டு தனி மனிதவாதத்தின் மொத்த உருவங்களாய்த் திரியும் எழுத்தாளர்களைக் காட்டிலும் சுஜாதா  போன்ற ரகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கருதப்பட வேண்டியவர்களே. எனவே, சுஜாதாவிற்கு இரங்கல் தெரிவித்ததை இவர்கள் எதிர்த்தார்கள் என்பதல்ல நம் பிரச்னை, மாறாக இடதுசாரி முற்போக்கு வாதிகள் என்ற பெயர்களில் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை வர்க்கப் போராட்ட அடிப்படையில் கட்டுவதைச் சாதிகளின் பெயரைச் சொல்லி தலித்தியம், பார்ப்பனிய எதிர்ப்பு என்கிற பெயர்களில் சீர்குலைத்து எதிரி வர்க்க சேவையில் தங்களை முழுமையாக ஆட்படுத்திக் கொண்டு அதே சமயத்தில் இடதுசாரிப் போக்கிற்கு இலக்கணம் வகுப்பவர்களாகவும் தங்களைப் பாவித்துக் கொண்டிருக்கும் இவர்களையும் இவர்களது கண்ணோட்டங்களையும் விமர்சித்து முறியடிப்பது நமது கடமை என்ற அடிப்படையிலேயே இதனை எழுதுகிறோம்.
            எனவே மார்க்சிய இலக்கியங்களில் ஓரளவு பரிச்சயம் உடையவர்கள் என்ற ரீதியிலும், அதற்கும் மேலாக செயலாக்க திறம் வாய்ந்த அந்த சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு உழைக்கும் மக்களின் இயக்கங்களை கட்டுவதில் ஓரளவு அனுபவம் படைத்தவர்கள் என்ற ரீதியிலும், இவ்விரண்டிற்கும் மேலாக அமைப்பு ரீதியாக தங்களுக்கு தேவையான தற்காப்பு சாதனங்களை அரசு வடிவத்தில் ஒருங்கு திரட்டிக் கொண்டு நிற்கும் சுரண்டல் வர்க்கத்தை பொருத்தமாக எதிர்கொள்ள உழைக்கும் வர்க்கத்திற்கும் அதன் சித்தாந்தமான மார்க்சியத்தை அதாவது இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை தனது வழிகாட்டியாக கொண்ட ஒரு அமைப்பு அதாவது ஒரு கட்சி உருவாக்கப்பட வேண்டும் என்ற திடமான முடிவு கொண்டவர்கள் என்ற ரீதியிலும் இடதுசாரிகள் யார் என்பது குறித்து இவர்கள் வைக்கும் கருத்திலிருந்து  நமக்கு முற்றிலும் தீர்க்கமான வேறுபட்ட ஒரு கருத்து உண்டு.  இந்த சுய அரிதாரம் பூசிக் கொண்ட இடதுசாரி மத குருமார்கள் "நமக்கு ஞானஸ்நானம் வழங்க மறுக்கும் போதும், இவர்களுக்கு போய் ஞானஸ்நானம் வழங்கலாம் என்று எண்ணியிருந்தோமே என்று தங்களது கடந்தகால முடிவுகளுக்காக அவர்கள் வருந்துவது போல் நம்மிடம் காட்டிக்கொள்ளும் வேளையிலும் இடதுசாரிகள் யார் என்று கூற வேண்டிய அவசியம் நமக்கு நேர்கிறது.
இடது சாரிகள் யார்?
            நாம் அறிந்தவரையில் இவர்களைப் பொருத்தவரை இடதுசாரிகள் என்பவர்கள் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்புதலித் ஆதரவு என்ற  இந்த மூன்று வி­யங்களைக் கொண்டிருப்பவர்களே.  அந்த அடிப்படையில் தான் சுஜாதா ஒரு பிராமணராகப் பிறந்ததால், அவர் இவர்களைப் போல் பிராமண எதிர்ப்பு, தலித் ஆதரவு என்றெல்லாம் முழங்காததால், அவர் இறந்த போது நாம் இரங்கல் தெரிவித்தது கூட இவர்களுக்கு இடதுசாரித் தன்மையில்லாததாகக் காட்சியளிக்கிறது.  அமைப்பு ரீதியான வலுவைக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் கட்சிகளும் தற்போது வர்க்கப்போராட்டப் பாதையை  கைவிட்டு நாடாளுமன்ற அரசியல் ஆதாயங்களுக்காக வறட்டுச் சூத்திர ரீதியில் ஜாதிய நிலைபாடுகளை கையிலெடுத்து செயல்படுகின்றன.  இதுவும்  இவர்களின் இந்த கருத்துக்கள் இன்னும் உறுதியாக நிலைபெற வழிவகுத்துள்ளது.  எனவே இடதுசாரிகள் யார் என்ற எளிமையான கேள்வியைக் கூட நாமே எழுப்பி அதற்கு நாம் அறிந்த மார்க்சிய அடிப்படையிலான விடையினை பகிர்வது இன்று பலருக்கும் பயன்படும் என்ற சூழ்நிலை தோன்றியுள்ளது.
             இடதுசாரிகள் என்பவர்கள் அவர்கள் வலது சாரிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள்அப்படியானால் வலதுசாரிகள் என்றால் யார்?   சமூகம் தற்போது அது சென்று கொண்டுள்ள போக்கிலேயே சென்று கொண்டிருக்கட்டும்அதில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட வேண்டியதில்லை; தேவைப்படும் வேளைகளில் தேவைப்படும் இடங்களில் சிற்சில சீர்திருத்தங்களை தேவை அடிப்படையில் செய்து கொண்டால் போதும் என்று கூறுபவர்களே வலதுசாரிகள்.  அவர்களிலிருந்து மாறுபட்டு இந்த சமூகம் எவ்வாறு தவறான அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பதை ஆய்ந்து பார்த்து அதில் அடிப்படையான மாறுதல்களைக் கொண்டு வரவேண்டியது, மனித குலத்தை முன்னேற்ற திசை வழியில் கொண்டு செல்வதற்கு அவசியம் என்று கூறுபவர்களே இடதுசாரிகள்.  அதாவது சமூகத்தில் புரட்சிகர மாறுதல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கருதுபவர்களே இடதுசாரிகள்.
அடிப்படை முரண்பாட்டைப் பார்க்க வேண்டியதன் அவசியம்
            சமூகத்தில் அடிப்படையான புரட்சிகர மாறுதல் கொண்டுவரப்பட வேண்டும் என்றால் அதற்கான அவசியம் என்னசமூகம் எத்தகைய  சீர்திருத்தங்கள் மூலமும் முடிவுக்கு கொண்டு வரப்பட முடியாத வகையில் எந்த அடிப்படையான முரண்பாட்டில் சிக்கிக் கொண்டுள்ளது?‡இவற்றை அறிவது அவசியமாகும்.  ஒரு சமூகத்தில் ஏராளமான முரண்பாடுகள் இருக்கலாம்.  ஆனால் அத்தனை முரண்பாடுகளுக்கும் அடிப்படையான முரண்பாடு என்று ஒன்று  நிச்சயம் இருக்கும்.  எந்தவொரு அதர்மத்தின் அடிப்படையில் அமைந்துள்ள சமூகத்திலும் அச்சமூகத்தின் வேதனைக்கு அடிப்படைக் காரணமாக அந்த முரண்பாடு இருக்கும்.  அந்த முரண்பாட்டினை தங்களது முழுமையான கவனத்தில் எடுத்துக் கொண்டு அதற்குகந்த வகையில் சமூகமாற்ற திசை வழியினை தீர்மானிப்பது மிக மிக அவசியமாகும்.
            இக்கருத்தை நாம் முன் வைக்கும் போது இந்த இடதுசாரி குருமார்களுக்குள்ளிருக்கும் பின் நவீனத்துவவாதி நிச்சயம் குறுக்கிடுவார்.   "நீங்கள் கூறுவது பழைய மார்க்சியம்.  தற்போது தோன்றியுள்ள பின் நவீனத்துவ கண்ணோட்டங்கள்அடிப்படைத் தன்மை வாய்ந்த முரண்பாடு என்பதையே மறுக்கின்றன.  அதனை மையாக வைத்து சமூக மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை அவை ஏற்றுக் கொள்ளவில்லை" என்று அவர் கூறவருவார்.  "சமூகத்தின் ஜாதிய முரண்பாடுகள் போன்ற பல முரண்பாடுகளையும் எதிர்த்து பலதரப்பட்ட இயக்கங்கள் பலவிதங்களில் அவற்றின் தீர்வுக்காக நடந்து கொண்டிருக்கின்றன.  அப்போராட்டங்களை 'இல்லாததொரு' அடிப்படைத் தன்மை வாய்ந்த முரண்பாட்டின் தீர்விற்காக என்று நடைபெறும் போராட்டத்துடன் எப்படி இணைப்பது?" என்றும் அந்த பின்நவீனத்துவவாதி கூறுவார்.

பின்நவீனத்துவம் - எதிர்ப்புரட்சிக் கண்ணோட்டம்
            இதுமட்டுமல்லஅமைப்பு ரீதியான செயல்பாடு, தலைமை ஆகியவற்றைப் புறக்கணிப்பது அல்லது அவற்றின் பங்கினைக் குறைத்து மதிப்பிடுவது ஆகியவையும் பின் நவீனத்துவத்தின் அம்சங்களாகும்.  இவ்வாறு அடிப்படைத் தன்மை வாய்ந்த முரண்பாடுகள், அவற்றைக் களைவதற்காக அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் அதற்கான தலைமையை கூட்டுப் போராட்டத்தின் மூலமாக மலரச் செய்வது ஆகியவற்றை மறுப்பது ஏதோ இயல்பாக பின் நவீனத்துவ வாதிகளின் மனதில் தோன்றும் கருத்தல்ல.  மாறாக பின்நவீனத்துவம் என்ற தத்துவார்த்த முலாம் பூசப்பட்ட கருத்துக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருப்பது ஒரு முழுமையான சமூக மாற்றம் சாத்தியமானதல்ல என்பதை நாசூக்காக முன் வைக்க முயலும் ஒரு எதிர்ப் புரட்சிக் கண்ணோட்டமாகும்.
            அதாவது ஒன்றின் அழிவில்தான் மற்றொன்றின் வாழ்க்கை உள்ளது என்ற  அடிப்படைத்  தன்மை வாய்ந்த எதிர்மறை முரண்பாடுகள் இருப்பது; அத்தகைய அடிப்படைத் தன்மையில்லாத முரண்பாடுகளும் இருப்பது; சமூக அமைப்பின் அடித்தளத்தில் அத்தகைய எதிர்மறை  முரண்பாடுகள் நிலை கொண்டிருப்பது; அங்கு நிலவும் முரண்பட்ட சக்திகளில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளுக்கு ஆதரவாக சமூக அமைப்பில் உருவாகி வளரும் மேல் கட்டுமானங்கள் இவற்றை எடுத்துரைக்கும் மார்க்சிய தத்துவத்தின் புரட்சிகர உட்கரு, இவை அனைத்தையும் புதிய மார்க்சியம் என்ற பெயரில் உருக்குலைந்து இலக்கேதுமில்லாத வெற்று அரட்டைகளை இடது சாரிக் கண்ணோட்டங்க ளாக மக்கள் முன்வைப்பதே அடிப்படையில் பின்நவீனத்துவ வாதமாகும்.

ஜாதிய முரண்பாடு அடிப்படைத் தன்மை வாய்ந்ததல்ல
            இந்நிலையில் இந்திய சமூகத்தின் அடிப்படை முரண்பாடு என்ன என்று பார்க்கவேண்டிய அவசியம் நமக்கு உருவாகியுள்ளது. மேலும் அந்த அடிப்படை முரண்பாடு நாம் மேலே பார்த்த பின்நவீனத்துவ வாதிகள் முன் வைக்கும் ஜாதிய முரண்பாடா என்று பார்ப்பதும் நமக்கு அவசியமாகிறது. இவர்கள் கூறுவதுபோல் இந்திய சமூகத்தில் நிலவும் அடிப்படையான முரண்பாடு  ஜாதிய முரண்பாடு என்றால் ஏழைபணக்காரர் என்ற வேறுபாடின்றி அந்த  ஜாதிய வேறுபாடுகளே இன்றைய நமது அமைப்பில் மேலோங்கி நிற்கின்றனவா? இல்லை. மாறாக ஒவ்வொரு ஜாதியிலும் கூட பணக்காரர், ஏழை என்ற முரண்பாடே மேலோங்கியுள்ளது.  ஏழை, பணக்காரர் என்ற வேறுபாட்டைக் கடந்து நாம் ஒரு ஜாதிக்காரர்கள் என்ற ஒற்றுமை மேலோங்கி எங்கும் நிற்கவில்லைகுறிப்பாகச் சொல்லப் போனால் ஒரு ஜாதியைச் சேர்ந்த பணக்காரர் அதைவிடப் பெரிய பணக்காரர் ஆவதற்கும், அப் பணத்தைத் தக்க வைக்கவுமே ஜாதிகள் பயன்படுகின்றன. இந்நிலையில் ஜாதிய முரண்பாடு அடிப்படைத் தன்மை வாய்ந்ததாக இருக்க முடியாது. 

ஜனநாயக மயப்படுத்தப்படாத சமூகம்
            ஜனநாயக இயக்கங்களின் முன் மண்டியிட்டு என்றோ அழிந்தொழிந்திருக்க வேண்டிய ஜாதியம் இன்னும் நிலைத்திருப்பதற் கான காரணம் நமது சமூகம் முழுமையாக ஜனநாயக மயப்படாததாலேயாகும்.  அதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை. இங்கு முதலாளித்துவமும் அதனை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகமும் தலைகாட்ட ஆரம்பித்த வேளையிலேயே முதலாளித்துவம் உலகளவில் பிற்போக்காக ஆகிப்போய் காலாவதியாகி விட்டது.  எனவே அது மேலை நாடுகளில் ஆற்றிய ஜனநாயக கடமைகளை இங்கு முழுமையாக ஆற்றவில்லை.
            ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் தோன்றிய வேளையில் உலகம் முழுவதையும் கொள்ளையடித்து கொழுப்பதற்கு  பெரிய வாய்ப்பிருந்தது.  அதனை பயன்படுத்துவதற்கு பெரிய அளவில் பரந்துபட்ட மக்களை அவர்களைச் சூழ்ந்திருந்த பல்வேறு தேவையற்ற வேறுபாடுகளை பகுத்தறிவுப் பூர்வ வாதங்களை முன் வைத்து அகற்ற வேண்டியது அந்நாடுகளின் முதலாளித்துவங்களுக்கு தேவையானதாக இருந்தது.  எனவே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், போன்ற கருத்துக்களை முன்வைத்து மக்கள் அனைவரையும் சமம் என்று எண்ணச் செய்வது அவர்களுக்கு அவசியமாக இருந்தது.
            ஆண்டாண்டு காலமாகத் தோன்றி வளர்ந்து மக்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தி இருந்த மதம் என்பதையும், அது வலியுறுத்திய கடவுள் கண்ணோட்டத்தையும் தூக்கி எறியும் அளவிற்கு அந்நாடுகளின் முதலாளிவர்க்கம் செல்லாவிடினும், அவற்றை அரசியலில் இருந்து பிரிக்கும் வேலையையும், மனிதருக்கு அப்பாற்பட்ட சக்தி எதையும்   அங்கீகரிக்காத மதசார்பின்மை கண்ணோட்டத்தை கொண்டு வருவதையும் அந்நாடுகளின் முதலாளிவர்க்கங்கள் பெருமளவு செய்து முடித்தன.
            ஆனால் நமது நாட்டை பொறுத்தவரையில் அந்நிய ஏகாதிபத்தியச் சுரண்டல் நமது நாட்டில் எந்திரத் தொழிலுற்பத்தி முறை பரந்தளவில் ஏற்படுத்தப்படுவதை பல நூற்றாண்டுகாலம் தள்ளிவைத்தது.  நமது மக்களின் வாங்கும் சக்தியும் மிகவும் குறைவாக இருந்தது.  பொருளாதாரம் மிக பரந்த அளவில் பின்தங்கிய விவசாய பொருளாதாரமாக இருந்தது.  ஏகாதிபத்திய அடிமைத் தளையில் இருந்து நாம் நம்மை விடுவித்து கொண்ட பின்னர் புதிதாக தோன்றிய தேசிய முதலாளிகளின் அரசினால் முதலாளித்துவம் முழுமையாக வளர்வதற்கு ஏதுவான திட்டங்கள்  உருவாக்கப்பட்ட போதும் அதன் வளர்ச்சிக்கான வாய்ப்பு உலகளவில் மிகவும் குறுகியதாகவே இருந்தது.
            ஐரோப்பிய நாடுகளின் முதலாளிகளுக்கு இருந்தது போல் உலகின் பல நாடுகளின் சந்தைகளின் கதவுகள் இந்திய முதலாளிகளுக்கு திறந்திருக்கவில்லை.  எனவே இந்தச் சூழ்நிலையில் எவ்வளவு தூரம் தொழில்மயப்படுத்தி முதலாளித்துவத்தை வளர்த்தெடுக்க முடிந்ததோ அவ்வளவு தூரமே முதலாளித்துவம் மக்களை ஒற்றுமைப்படுத்தும் வேலையைச் செய்தது. எனவே மக்களுக்கிடையில் நிலவிய பத்தாம் பசலித்தனமான ஜாதிய வேறுபாடுகள் போன்றவற்றை அதனால் முழுமையாக அழித்தொழிக்க முடியவில்லை.
            கல்வியும் பரந்தளவில் மக்களிடையே கொண்டு செல்லப்படவில்லை.  இந்த பின்தங்கிய நிலைமையின் காரணமாக பல பகுத்தறிவுப் பூர்வமான முற்போக்கு கருத்துக்களும், எண்ணங்களும் தோன்றி வளர்வது சாத்தியமில்லாதிருந்தது.  அந்த பின்தங்கிய நிலைமைகளின் காரணமாக பரஸ்பர  அன்பை அடிப்படையாகக் கொண்ட திருமண உறவுகள் போன்றவை கூட பெரிய அளவில் ஜாதிய வறையரையை தாண்டி நடைபெறாத நிலை நிலவியது.

சோவியத் புரட்சியும் - ஜாதியத்திற்கு சலாம் போடும் முதலாளித்துவமும்
            மேலும் இந்திய முதலாளிகளின் கையில் ஆட்சியதிகாரம் வந்த அந்தக் காலகட்டத்திற்கு முன்பே உழைக்கும் வர்க்கப் புரட்சி சோவியத் யூனியனில் ஏற்பட்டுவிட்டது.  அமைப்பு ரீதியாக ஒருங்கு திரட்டப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினால் அந்நாட்டு முதலாளி வர்க்கம் தூக்கியயறியப்பட்டது.  அவ்வப்போது தீக்கனவுகளை தோற்றுவிக்கும் சுவற்றில் எழுதிய சித்திரமாக முதலாளி வர்க்கத்தை  அது அச்சுறுத்தி ஆட்டிப்படைத்தது.  எனவே, தொழிலாளர் என்ற ரீதியில் உழைக்கும் மக்கள் தங்களுக்கிடையேயுள்ள ஜாதி மத உணர்வுகளை கடந்து ஒன்று பட்டு விடுவது நல்லதல்ல என்று உலக முதலாளிவர்க்கத்தின் பங்கும் பகுதியுமான இந்திய முதலாளிகள் எண்ணத் தொடங்கினர். 
            தங்களது எந்திரத் தொழிலுற்பத்தி முறைக்கு குந்தகம் விளைவிக்காத அளவிற்கு மட்டுமே மக்களுக்கிடையேயான ஜாதிய வேறுபாடுகளை அவர்கள் களைய விரும்பினர்.  அதற்கு மேல் இப்படிப்பட்ட ஜாதிய வேறுபாடுகளை உழைக்கும் மக்களின் ஒற்றுமையை பிளப்பதற்கும், தேவையற்ற வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கும் பயன்படுத்தவே விரும்பினர்.  அதற்கு நமது நாட்டில் செயல்படும், முதலாளித்துவ, பிராந்திய முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ கட்சிகள் பெரிதும் உதவின.  இன்றும் உதவிக் கொண்டுள்ளன.
வர்க்கப் போராட்டத்தை முன்னிறுத்தி ஜாதியப் போக்குகளை அழிக்கத் தவறிய  கம்யூனிஸ்டுகள்
            எனவே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் செய்து முடிக்கப்படாத கடமை என்ற அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தை முன்னிறுத்தி அதன் மூலம் ஜாதி வரையறை கடந்த உழைக்கும் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைத்து ஜாதியம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் அப்பணியை கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் இங்கு செயல்பட்டவர்கள் செய்யாததால் ஜாதியம் இன்றும் ஒரு சமூக அவலமாக நிலவும் நிலை உள்ளது.
            இந்திய நிலவுடைமை சமூக அடித்தளத்தின் உற்பத்தி உறவாக நிலவிய பழைய ஜாதியம் இன்று அந்த அடித்தளம் இல்லாமல் போனபின்னரும் அரசியல் கட்சிகளால் வாக்குவங்கி அரசியலுக்காக திட்டமிட்டு வளர்க்கப்பட்டு  ஒரு பாசிஸ போக்காக நிலை கொண்டுள்ளது.  பிராந்திய அளவிலான பெரிய கட்சிகள் ஜாதிக்கொருவரை தலைவர்களாக காட்டி ஜாதி அடிப்படையில் வாக்குகளைப் பெறும் கேவலமான வேலையைச் செய்து கொண்டுள்ளன.  அச்செயல்களுக்கு சமூக நீதி என்ற  அலங்காரமான முத்திரையையும் குத்துகின்றன. 
            இன்னும் மக்களிடம் ஜாதிய வேறுபாடுகளை பராமரித்து காப்பாற்றுவதற்கு இட ஒதுக்கீடு ஒரு கருவியாக பயன்படுகிறது.  உண்மையிலேயே பின் தங்கியவர்களை  முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருந்திருந்தால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம்.  அதனால் ஜாதி வேறுபாடின்றி அனைத்து பின் தங்கியவர்களும் பலனடைந்திருப்பர் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களை அதிகம் கொண்டிருந்த தாழ்த்தப்பட்டவர்களும் பயனடைந்திருப்பர்.
            உண்மையில் அவ்வாறு செய்யாததால் இன்றுள்ள  இடஒதுக்கீடு ஜாதியத்தை வளர்த்து விட்டிருக்கிறது; நிலைப்படுத்தியிருக்கிறது.  இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக பேசியவர்கள் முன்வைத்தது போல் ஜாதியை ஒழிக்க அது சிறிதளவு கூட பயன்படவில்லை.
            ஜாதிய ரீதியான இட ஒதுக்கீடு சில ஜாதி மக்களின் வாழ்வில் பொருளாதார மேம்பாட்டை கொண்டு வரக்கூடிய கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுடன் இணைக்கப் பட்டிருப்பதால் ஒரு விநோதமான நிலை தோன்றியுள்ளது.  அதாவது இட ஒதுக்கீட்டின் பலன்களை பெறுவதற்கு அரசு அனுமதித்தால், மத மாற்றங்கள் நடைபெறுவது போல் ஜாதி மாற்றங்களும் நமது நாட்டில் பெருமளவில் நிச்சயம் ஏற்படும் என்ற நிலையே தோன்றியுள்ளது.  பல உயர்ந்த ஜாதியினர் என்று மார்தட்டிக் கொள்ளக் கூடியவர்கள் கூட அரசு அனுமதித்தால் தங்களது பிள்ளைகளை தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும் பதிவு செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதே இன்றைய நிலை.

உள்ளார்ந்த ஜீவனை இழந்த ஜாதியம்
            இப்படிப்பட்ட நிலை வலியுறுத்துவதென்னபொருளாதாரம் தான் அனைத்தையும் தீர்மானிக்கவல்லது.  ஜாதியம் அதற்கு உதவுமென்றால் அதையும் பயன்படுத்த அந்த ருசி கண்டவர்கள் தயங்கமாட்டார்கள் என்பது தானே.  இத்தனை திட்டவட்டமான முயற்சிகளை மேற்கொண்டு அரசியல் கட்சிகள் மக்களை பிளவு படுத்துவதற்காக ஜாதிகளை வளர்த்த போதிலும் அதன் உள்ளார்ந்த ஜீவனை இழந்து ஜாதியம் தகர்ந்து போயுள்ளது என்பதே உண்மை.
            நகர்ப்புறங்களில் பெரும்பாலும் யார் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்பது வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியாததாகவே உள்ளது.  அலுவலகங்களிலும் இட ஒதுக்கீட்டின் மூலம் வேலைக்கு வந்தவர்கள் என்ற ஒரு அம்சமே அங்கு வேலை செய்பவர்களை ஜாதிகளை அறிந்து கொள்ள முடிந்தவர்களாக ஆக்கியுள்ளது.   நாம் ஏற்கனவே பார்த்தது போல் சமூகம் முழுமையாக ஜனநாயகமயப் படுத்தப்படாததன் காரணமாக திருமண உறவுகள் மட்டுமே சமூகத்தில் ஜாதியத்தின் நிலைக்களனாக விளங்குகிறது.

வர்க்க முரண்பாடே அடிப்படை முரண்பாடு
            மேலே விவரித்த காரணங்களினால் ஜாதிய முரண்பாடு சமூகத்தின் அடிப்படை முரண்பாடல்ல என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடம் இன்றி நாம் அறிய முடியும்.  அப்படியானால் இச் சமூகத்தில் அடிப்படையான முரண்பாடு என்னசமூகத்தில் நிலவும் வளர்ந்து வரும் தன்மை கொண்ட வர்க்க முரண்பாடே சமூகத்தின் அடிப்படையான முரண்பாடாகும்.  முதலாளிதொழிலாளி என்ற ஒன்றுக்கொன்று நேர்விரோதமானஒன்றுக்கு எது நல்லதாக இருக்குமோ அது மற்றொன்றிற்கு கெட்டதாக இருக்கும் என்ற நேர் விரோத தன்மை பொருந்திய வர்க்க முரண்பாடே சமூகத்தின் அடிப்படையான முரண்பாடாகும்.  ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் கூட இந்த முரண்பாடே அடிப்படையான முரண்பாடாக இருப்பதைப் பார்க்க முடியும்.  இந்த முரண்பாட்டை மையமாக வைத்து நடத்தப்படும் வர்க்கப் போராட்டங்களே ஜாதியத்திற்கு உண்மையில் முடிவு கட்டக் கூடியவை. 
அரசுடமை நிறுவனங்களில் அமைச்சர் வளர்த்துவிட்ட ஜாதியம்
            இந்தப் போராட்டங்கள் முதலாளித்துவச் சுரண்டல் கண்கூடாக நடைபெறும் தொழிற்சாலை போன்ற இடங்களில் முதலாளிகளின் அதிகபட்ச இலாப வெறி தொழிலாளரை அவர்கள் மிகக் கடுமையாக சுரண்டும் நிலையில் வைத்துள்ளதால்அங்கு கூர்மையாக வெடித்துக் கிளம்புகின்றன. இத்தகைய இயக்கங்களில் மூலமே ஜாதி, மதஇன வேறுபாடு கடந்த மக்கள் ஒற்றுமையை கட்ட முடியும்.  அதை விடுத்து தலித் மேம்பாடு, பிற்படுத்தப்பட்டோருக்கு சலுகை, சமூக நீதி என்ற பெயர்களில் நடைமுறைப்படுத்தப்படும் ஜாதியம் ஒவ்வொரு ஜாதியிலும் உள்ள உடைமை வர்க்கங்கள் அவர்களின் நலன்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கே பயன்படுகிறதே தவிர ஜாதியத்தை ஒழிக்க எள்ளளவு கூடப் பயன்படுவதில்லை. மேலும் இவர்கள் முன்வைக்கும் குருட்டுத்தனமான தலித் ஆதரவும், பிராமண எதிர்ப்பும் மக்கள் இயக்கத்தை பெரிதும் பலவீனப்படுத்தவே செய்கின்றன
            உழைக்கும் மக்களுக்கிடையே அவர்களின் ஜாதிகளை பார்க்கும் அவலநிலையை தோற்றுவிக்கின்றன. இதனைச் செய்வதற்காகவேதொழிலாளரின் பிரச்னைகளை மையமாக வைத்து இயக்கம் நடத்துவதற்காக செயல்பட்டு வந்த தொழிற் சங்கங்களை பலவீனப்படுத்துவதற்காகவே மத்தியில் அமைச்சராக இருந்த யோகேந்திர மக்வானா அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் எஸ்.சி, எஸ்.டியினர் நலம் நாடும் அமைப்பு  (றீளீ/றீவீ நிeயிக்ஷூழிre புவிவிலிஉஷ்ழிமிஷ்லிஐவி) அமைக்க வலியுறுத்தினார். அத்தகைய அமைப்புகளை அமைக்க வலியுறுத்திய அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு கருத்தை முக்கியமாக முன்வைத்தார்.   அதாவது அரசு தாழ்த்தப்பட்டவர்களுக்கு பல சலுகைகளை வழங்க தயாராக உள்ளது.  அதற்கு எதிராக இருப்பவர்கள் அவர்களுடன் பணிபுரியும் பிற ஜாதிகளை சேர்ந்தவர்களும் ஜாதி மத வேறுபாடு கடந்து அனைவருக்கும் என்ற பெயரில் இயங்கும் தொழிற்சங்கங்களுமே என்று அவர் கூறினார்.  ஒரு தொழிற் தளத்தில் ஒரே வகையான வேலைச் சூழ்நிலையில் அதாவது சுரண்டலில் ஆட்பட்டிருக்கும் தொழிலாளரை ஜாதிய அடிப்படையில் பிரிப்பது அதனால் அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களே ஒருவருக்கொருவர் போட்டியாளர்கள் என்ற எண்ணத்தை உருவாக்குவது யதார்த்தத்தில் யார் அந்த இரண்டு ஜாதி தொழிலாளர்களையும் சுரண்டி இலாபம் ஈட்டிக் கொழுக்கிறார்களோ அந்த முதலாளிகளை மூடிமறைத்துக்  காப்பாற்றத் தானே உதவும்.
பிராமணர்களிலும்

உழைப்பாளிகள் உண்டு
            இன்று இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையில் தங்களது தகுதி திறமைகளை வேலைச் சந்தையில் விலைபோகும் அளவிற்கு வளர்த்துக் கொண்டு என்னிடம் இந்த திறமை இருக்கிறதுஇது தேவைப்படுபவர்கள் இதனை வாங்கிக் கொள்ளலாம் என்று வேலைச் சந்தையில் தங்களது உழைப்புத் திறனை கூவிக்கூவி விற்கும் நிலையிலேயே அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த உழைக்கும் மக்களும் உள்ளனர்.
            இந்த நிலை பிராமண ஜாதியை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தக்கூடியதே.   இந்நிலையில் பார்ப்பனர் என்ற முத்திரையைக் குத்தி அவர்களை உழைக்கும் வர்க்க இயக்கத்தில் இருந்து அந்நியப்படுத்துவது யாருக்கு உதவும்அதனால் பலனடைவது முதலாளி வர்க்கமாகத்தானே இருக்க முடியும்.  இவ்வாறு நாம் கூறுகையில் இவர்களிடமிருந்து ஒரு எதிர்ப்பு குரல் வரலாம்.  அதாவது நாங்கள் பார்ப்பனியத்தைத் தான் எதிர்க்கிறோம் என்று இவர்கள்  கூறலாம்.
            பார்ப்பனிய கண்ணோட்டம் முன் வைத்த பிராமணர், ­த்திரியர், வைசியர், சூத்திரர் என்ற ஜாதிய ரீதியிலான வேலைப் பிரிவினைகள் தகர்ந்து பொடிப்பொடியாகி முதலாளித்துவ உற்பத்தி முறையில் முதலாளி, தொழிலாளி என்ற வர்க்கப் பிரிவினைகளுக்கு வழி விட்டுள்ள நிலையில் இவர்கள் பேசும் பார்ப்பனியம், பார்ப்பனியம் என்ற பேச்சு அதற்குரிய இலக்கேதையும் யதார்த்தமாக கண்டுபிடித்து சாடமுடியாத நிலையில், தனிப்பட்ட பார்ப்பனர்களுக்கு எதிராகத் திரும்பும்  போக்கையே பெரும்பாலும் கொண்டுள்ளது.
            உள்நாட்டில் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் ஏழை எளிய குடும்பத்து இளம் பெண்கள் பஞ்சாலைகளில் ஒரு வகையான கொத்தடிமை சுரண்டலில் மூழ்கடிக்கப் பட்டுள்ளனர்.  பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள தாராளமயம் தொழிலாளர் சட்ட நியதிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு நிர்த்தாட்சண்யமான சுரண்டலில் நமது தொழிலாளி வர்க்கத்தை மூழ்கடித்துள்ளது.  ஒப்பந்த தொழிலாளர் முறையின் மூலம் நிரந்தர தொழிலாளர் என்ற பகுதியையே ஏறக்குறைய முடிவுக்கு கொண்டு வந்து ஒட்ட ஒட்ட சுரண்டி வேலை வாங்கு; களைத்து தளர்ந்து போனவர்களை வெளியேற்றிவிட்டு எந்த தங்குதடையுமின்றி நல்ல உழைப்பு திறன் கொண்ட புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி சுரண்டு என்ற நாகரீகமற்ற மனிதாபிமானமற்ற சுரண்டல் நமது முதலாளிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 
            இத்தகைய கொடும் சுரண்டலில் ஈடுபட்டு நமது நாட்டின் அனைத்து தொழிலாளர்களையும் சுரண்டி கொழுத்து வரும் முதலாளிகளுக்கு எதிராக ஒரு சுண்டு விரலைக் கூட அசைக்காது, நாம் அனுபவிக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமே பொறுப்பு என்று காட்டுவதும்,பார்ப்பனியமே என்று சாடுவதும்அத்துடன் தமிழ் தேசியம் பேசி தமிழ் முதலாளிகளுக்கு வால் பிடிப்பதும் யாரைக் காப்பாற்றும் வேலையை செய்கின்றனஇந்திய தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பையும், உதிரத்தையும் அட்டையாகச் சுரண்டிக் கொழுக்கும் தமிழ் முதலாளிகளையும் இந்திய தேசிய முதலாளி வர்க்கத்தையும் தானே.
            எனவே நடைமுறையில் தலித் ஆதரவு என்ற பெயரில் முன் வைக்கப்படும் ஜாதிய வாதமும், பிராமண எதிர்ப்பு என்ற பெயரில் உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்தும் போக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதற்கெடுத்தாலும் முன் நிறுத்துவதும் ஆன இவர்களது இடதுசாரிக் கண்ணோட்டம் உண்மையில் நாம் மேலே பார்த்த அடிப்படையில் ஒரு இடதுசாரிக் கண்ணோட்டமாக அதாவது சமூகத்தில் அடிப்படையான புரட்சிகர மாறுதலைக் கொண்டுவரவல்ல கண்ணோட்டமாக  இருக்க முடியுமா?
            இத்தகைய கோளாறான அதிகபட்சமாக சில சீர்திருத்தங்களை கொண்டுவரவல்ல கண்ணோட்டத்தைக் கொண்டுள்ள, சமூகமாற்றத்திற்கு வழிகோலும் எந்த ஒரு அமைப்பையும் நேரடியாக சாராதவர்களாக இருந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு  இடதுசாரி சிந்தனையாளர்கள் என்கிற முத்திரை விழுந்தது எவ்வாறு  என்பதும் எண்ணிப் பார்க்கப்பட வேண்டியதாகும்.
            அதாவது நமது நாட்டின் அடிப்படை அரசியல் வழியை தவறாக கணித்து அதன் அடிப்படையில் உண்மையில் எதிர்க்க வேண்டிய இந்திய தேசிய முதலாளித்துவத்தை எதிர்க்காமல் அதனை ஆதரித்தும், இன்றைய காலகட்டத்தில் தேசியம் என்பது எத்தனை பாஸிச போக்கை வெளிப்படுத்த வல்லதாக உள்ளது என்பதை பாரதிய ஜனதா கட்சியின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் கண்டறிந்த பின்னரும் தங்களை தேசியவாதிகள் தேச பக்தர்கள் என்று அழைத்து கொண்டும், வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து தலித் மற்றும் பழங்குடியின மக்களின் பிரச்னைகளே அடிப்படை பிரச்னைகள் போல் சித்தரித்தும் செயல்படும் சில அதிதீவிர கம்யூனிஸ்ட் குழுக்கள் என்று அறியப்படும் குழுக்களின் கூட்டங்களிலும் இயக்கங்களிலும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு பெற்றவர்கள் என்ற அடிப்படையிலேயே இடதுசாரி சிந்தனை உள்ளவர்களின் மேலோட்டமான பார்வையில் இவர்கள் இடதுசாரி சிந்தனையாளர்களாக பார்க்கப்படுகின்றனர். அதுவே இடதுசாரிக் கண்ணோட்டத்திற்கு இலக்கணம் வகுப்பவர்களாக இவர்கள் தங்களை தாங்களே கருதிக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது.
            அந்த இடதுசாரிக் குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலம் இவர்களுக்கு கிடைக்கும் விளம்பரமே கடைந்தெடுத்த முதலாளித்துவ பத்திரிக்கைக் குழுமங்களின் இதழ்களில் எழுதும் வாய்ப்பினை பெறுவதற்கு இவர்களுக்கு ஏணியாக பயன்படுகிறது.  அதிதீவிர குழுக்கள் என்று அறியப்படுவோர் கூட்டங்களில் சல்வா ஜுடும்க்கு எதிராகவும், பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ஆதரவாகவும் முழக்கமிடும் இவர்களது குரல்கள், பிரபல முதலாளித்துவ பத்திரிக்கைகளின் கட்டுரைகளில் சில கவிஞர்களின் பிள்ளைமார்தனங்கள் குறித்தும், மது புட்டிகளை "லபக்கும்" இவர்களது இலக்கிய வட்ட நண்பர்கள் குறித்தும் அப்பத்திரிக்கைகளின் இரசனைக்கு தகுந்தபடி எழுதிக் குவிக்கின்றனர்*.( அ. மார்க்ஸ்தீராநதி நாளைய கட்டுரையில் .)

நெருக்கடி சூழ்நிலையும் - தேடலும்
            இன்றுள்ள நெருக்கடி சூழ்நிலையும் அதற்கு தீர்வுகாண விழையும் தேடலும் உண்மையான இடதுசாரிப் போக்கினை கண்டுகொண்டுவிட்டால், தாங்களும் அங்கமாக இருக்கும் முதலாளிவர்க்க ஆட்சிக்கும் அதன் நலனுக்கும் குந்தகம் ஏற்படும் என்ற எண்ணத்தில் மக்களை திசை திருப்புவதற்காகவே தமிழகத்தில் முதலாளிகளின் "ஊதுகுழல்"களாக இருக்கும் ஊடகங்களும், மேலே குறிப்பிட்டுள்ள பத்திரிக்கை போன்ற  பத்திரிக்கைகளும், இவர்களுக்கும்  போலி இடதுசாரி கருத்துக்களுக்கும்  வாய்ப்பளிக்கின்றன.  ஆளும் வர்க்க பத்திரிக்கைகளின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க இவர்களும் சமூகத்தில் உண்மையாக நிலவும் அடிப்படைத் தன்மை வாய்ந்த முரண்பாடான வர்க்க முரண்பாட்டை மூடி மறைத்து ஏதோ மக்களுக்கிடையில் பிராமணத்தனங்கள், பிள்ளைமார்தனங்கள் போன்ற ஜாதிய போக்குகளே கண்ணுக்கு புலப்படுகின்றன என்ற பாணியில் எழுதுகிறார்கள்.
ஏமாற்று, சூது, தந்திரம் ஆகியவற்றின் ஊற்றுக்கண் முதலாளித்துவ இலாப நோக்கே
            முதலாளித்துவம் இலாபம் என்ற பெயரில் சட்ட ரீதியான திருட்டை அங்கீகரிக்கிறது. அந்த இலாபம் அனைத்துவகை ஏமாற்று, தந்திரம், சூது ஆகியவற்றின் மூலமே ஈட்டப்படுகிறது. அதிகபட்ச லாபத்திற்காக எதையும் செய்யும் போக்குகள் ஆளும் முதலாளிவர்க்கம் மட்டும் சார்ந்த  போக்குகளாக மட்டுமில்லாமல்  சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்குகளாகவும் நிலவுகின்றன. வர்க்க உணர்வு ஊட்டப்படாதிருக்கும் பரந்துபட்ட மக்கட்பகுதியினரையும் அது பாதிக்கிறது.  எனவே சமூகத்தில் முதலாளித்துவக் கலாச்சாரத்தின் சுவடுகள் நிறைந்த ஏமாற்றும் போக்குகள் அனைத்துப்பகுதி மக்களிடமும்  ஆங்காங்கே அவ்வப்போது காணப்படுகின்றன. 
            இந்தப் போக்கின் பல்வேறு வடிவங்களாக கருமித்தனம், புறங்கூறுதல், சூழ்ச்சிசெய்தல் போன்ற குணக்கேடுகள் நிலவுகின்றன. இவற்றைச் செய்பவர்களது ஜாதிகளின் பெயர்களைச் சொல்லி அந்த ஜாதித்தனம், இந்த ஜாதித்தனம் என்று கூறும் போக்கே மக்களிடம் நிலவுகிறது. உண்மையில் இவை ஏமாற்றி இலாபம் ஈட்டும் முதலாளித்துவ தந்திரத்தின் வெளிப்பாடுகளே. இப்போக்குகளின் மேல் ஜாதியின் பெயரைச் சொல்லி ஏற்றி வைக்கும் இவர்களுக்கும், பொது அறிவை உபயோகித்து தன்னிடம் எதிர்காலம் குறித்து அறிந்து கொள்ள வரும் மக்களிடம் அவர்கள் வாழும் சூழ்நிலை, அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே கண்ணில் படும் பொருளாதார நிலை, அவர்களின் வயது போன்றவற்றை மையமாக வைத்து ஜோதிடம் கூறுபவர்களுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.  இதற்கு எந்தவகையான விஞ்ஞானபூர்வ அடித்தளமும் இல்லை.  இருந்தாலும் தங்களை இடதுசாரிகள், மார்க்சியம் என்ற விஞ்ஞானபூர்வ தத்துவத்தின் வழிநடப்பவர்கள் என்று கூறிக்கொண்டு இவர்கள் இத்தகைய விஞ்ஞானத்தோடு ஒரு தொடர்பும் இல்லாத கருத்துக்களை சுமந்து திரியவும், முடிந்தளவு பரப்பவும் செய்கிறார்கள்.

தூண்டிவிடப்படும்  வெறி வாதம்
            இந்நிலையில் எழுத்தாளர் சுஜாதாவின் கட்டுரைகளையும், எழுத்துக்களையும் படிக்கும் வாசகர்களிடம் கூட முதலாளித்துவ எதிர்ப்பு சோ­லிசக் கருத்துக்களை தர்க்க ரீதியாக முன்வைத்து அவர்களது மனதில் ஒரு தாக்கத்தை நாம் ஏற்படுத்த முடியும்.  ஆனால் இடதுசாரிக் கருத்துக்கள் என்ற பெயரில் ஜாதிய வாதத்தையும், பிராந்திய வாதத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பெயரில் இந்தியதேசிய முதலாளிகளை மூடிமறைத்துக் காக்கும் செயலையும்  வரிந்து வரிந்து எழுதி இவர்கள் பாழ்படுத்தி வைத்திருக்கும் மனங்களில் தர்க்க ரீதியான கருத்துக்களை கொண்டு செல்வது மிகவும் கடினம். ஏனெனில் எந்த மார்க்சிய அடிப்படையிலான பகுப்பாய்வையும் தாக்குபிடிக்க முடியாத இவர்களது பிராமண எதிர்ப்பு ஜாதிய வாதங்கள் கடைசியாக அவற்றின் பற்றுக் கோடாக கொண்டிருப்பது ஒரு வகையான வெறி வாதத்தையே. "தலித்தியத்தை ஜாதியம் என்று ஒருவர் கூறுகிறாரா? எப்படி அவர் அவ்வாறு கூறலாம்" என்பது போன்ற மனப்பாங்கையும்; "பிறப்பால் பார்ப்பனர்களாக இருப்பவர்களிலும் பரந்த அளவில் முதலாளித்துவ சுரண்டலின் நுகத்தடியில் சிக்கி தவிக்கும் உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்று இவர் கூறுகிறாராபார்ப்பனருக்கு ஆதரவாக எப்படி இவர் பேசலாம்"  என்று அறிவிற்கு இடம் தரவேண்டிய இடத்தில் வெறிவாத உணர்விற்கு இடமளிக்கும் போக்கையே இவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.  எனவே இப்படிபட்ட குருட்டுத்தனமான கருத்துள்ளவர்களை சமூக மாற்ற திசைவழியில் வென்றெடுப்பது மிகவும் சிரமம்.
            அதிதீவிரக் கம்யூனிஸ்டுகளாகத் தங்களைக் காட்டிக் கொள்வோர் தங்களது தவறான அடிப்படை அரசியல் வழிக்கு இவர்கள் வக்காலத்து வாங்குவதால் அதற்கு கைமாறாக இவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தும் எதிர்ப்புரட்சித் தன்மை வாய்ந்த பின்நவீனத்துவக் கண்ணோட்டத்தை 'பெருந்தன்மையோடு' கண்டு கொள்வதில்லை.

சமூகமாற்றக் கடமையின்
முக்கியப் பகுதி
            எனவே, உண்மையான சமூக மாற்றத்தில் நாட்டமேதும் இன்றி தாங்கள் பலவும் தெரிந்தவர்கள் என்று காட்டுவதிலேயே நாட்டமுள்ளவர்களாக உலாவரும் அனைவரையும் பற்றி எழுதுவது நமக்கு ஒரு வேண்டாத வேலை.  ஆனால் அவர்களது எழுத்துக்கள் சமூகமாற்ற இயக்கத்திற்கு ஊனம் விளைவிப்பவையாக இடதுசாரி முகமூடியுடன் சமூகமாற்றமென்பது சாத்தியமானது அல்ல என்ற சிந்தனைப் போக்குகளை உருவாக்குபவையாக சமூகமாற்ற சக்திகளின் உண்மையான எதிரிகளை மூடிமறைத்து எதிரிகள் அல்லாதவர்களை எதிரிகளாக சித்தரிப்பவையாக ஆகும் போது, அதற்கு இரையாகும் இடதுசாரி மனப்பாங்கு கொண்டவர்களும்இருக்கிறார்கள் என்ற நிலை உருவாகும் போது அவற்றை உரிய முறையில் அம்பலப்படுத்துவதும் சமூகமாற்ற கடமையின் ஒரு முக்கிய பகுதியாகும்.  அந்த அடிப்படையிலேயே நாம் இதனை எழுத வேண்டியது அவசியமாகிவிட்டது என்பதை நமது வாசகர்களுக்கு தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

1 comment:

 1. சரியான அலசல்...
  சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் மீது எனக்கு என்றும் மரியாதை இல்லை என்றாலும் அவரின் வாசகர்கள் என் இடது பக்கம் சாய மாட்டார்கள் என்ற எண்ணத்தில் பிற்போக்கு தனமாய் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை...
  சுஜாதா பல இளம் இடது சாரி எழுத்தாளர்களை பாதை மாற செய்தார் என்று ஒரு வாதம் உண்டு,, அப்படி தங்களை மாற்றிக் கொண்ட எழுத்தாளர்கள் இடது சாரி வேஷம் வேண்டுமானால் போட்டு கொண்டு இருந்திருக்கலாம்.. ஆனால் அவன் இடது சாரியாய் இருந்திருக்க முடியாது...

  மேலும்,
  இட ஒதுக்கீடு ஜாதியை தூக்கி பிடிப்பதில் இருந்தே ஜாதியை ஒழிக்க முடியாது என்பது திண்ணமாய் தெரிகிறது..
  அதற்க்கு பதிலாக பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அமைந்தால் மகிழ்ச்சியே...
  ஆனால்
  நல்ல சம்பளம் வாங்கும் பலர் இன்னும் பச்சை நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் பொழுதும், நான்கு வீடு கட்டி வாடகை விடும் ஒருவன் அந்த வாடகை வருமானத்தை கணக்கில் காட்டாததாலும் சின்ன சிக்கல் வர வாய்ப்புள்ளது...
  இந்த கட்டுரை இட ஒதுக்கீடு குறித்து விரிவடைந்தால் விவாதம் சிறக்கும், விடிவும் வரும்...

  ReplyDelete