Powered By Blogger

Saturday, September 1, 2012

கூலி அடிமைத்தனத்தை ஒழிக்க உறுதி ஏற்போம் - தோழர் ஆனந்தனின் மேதின உரைவீச்சு


திருத்தங்கல் நகரில் சி.டபிள்யு.பி-யின் மேதினப் பொதுக்கூட்டம்

இந்த ஆண்டு மேதினப் பொதுக்கூட்டம் திருத்தங்கல் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் அமைந்திருந்த அரங்கில் 27.05.2012 அன்று மாலை நடைபெற்றது. அழகுற அமைக்கப்பட்டிருந்ததொரு மேடையில் நடைபெற்ற மேதினப் பொதுக்கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வி.வரதராஜ் தலைமை ஏற்றார். தோழர்கள் தங்கராஜ், செல்வராஜ், ஜெகநாதன், கதிரேசன், சத்தியமூர்த்தி மற்றும் மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர் த.சிவக்குமார் ஆகியோர் அக்கூட்டத்தில் உரையாற்றினர்.

இறுதியில் சிறப்புரையாற்றிய சி.டபிள்யு.பி-யின் தென்இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் ஆனந்தன் ஆற்றிய உரை சாராம்சத்தில் பின்வருமாறு இருந்தது.


கேளிக்கை தினமாகக் கொண்டவும் படவில்லை

மேதினம் ஒரு கேளிக்கைத் தினமாகக் கூட இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் அனுஷ்டிக்கப்படும் சூழ்நிலை நிலவவில்லை. முன்பெல்லாம் மதுரை போன்ற இடங்களில் பஞ்சாலைத் தொழில் நன்கு நிலைபெற்ற தொழிலாக விளங்கியது. பஞ்சாலைகளில் தொழிற்சங்க செயல்பாடுகளும் மிக அதிகம் இருந்தன. அந்நிலையில் மேதினத்தன்று பல இடங்களில் தொழிற்சங்கங்களால் மேதின ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடைபெறுவது வழக்கமானதாக இருந்தது. தொழிலாளரில் பெரும்பாலோர் அவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் ஊர்வலங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்வதைத் தங்களது கடமையாகக் கருதினர். ஆனால் இப்போது அப்பஞ்சாலைகளில் பல பஞ்சாலைகள் இயங்கக் கூடிய நிலையிலிருந்தும் அங்கு தொழிற்சங்கங்கள் இல்லை. தொழிற்சங்கங்கள் என்ற பெயரில் ஒருசில பெயர்ப்பலகைத் தொழிற்சங்கங்கள் இருந்தாலும் தொழிற்சங்கச் செயல்பாடு என்பது அறவே இல்லை. பஞ்சாலைகளில் நிரந்தர, பதிலி, தற்காலிகத் தொழிலாளர் என்று முன்பெல்லாம் பல பிரிவினர் இருந்தனர். ஆனால் தற்போது சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டு இளவயதுப் பெண் பிள்ளைகள் கூடுதல் எண்ணிக்கையில் பஞ்சாலைகளில் பணிபுரிகின்றனர். நிரந்தரத் தொழிலாளர் என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விட்டது. மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் அப்பெண் பிள்ளைகளுக்கு அவர்கள் வேலையைவிட்டுச் செல்லும் போது 30,000 முதல் 50,000 வரையிலான தொகை அவர்களுக்குக் கையில் கொடுக்கப்படுகிறது. அது அவர்களின் திருமணத்திற்கு உதவும் என்ற அடிப்படையில் இத்திட்டம் சுமங்கலித் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. விடுதிகளில் வைத்து தேவைப்படும் போதெல்லாம் வேலைக்கு அழைக்கப்பட்டு கடுமையாகச் சுரண்டப்படும் அப்பெண் பிள்ளைகளுக்குப் பல இடங்களில் மேலே குறிப்பிடப்பட்ட அற்பமான ஒப்பந்தத் தொகை கூட வழங்கப்படுவதில்லை. இதைக் கேட்பதற்குத் தொழிற்சங்கம் என்பது அவ்வாலைகளில் அறவே இல்லை.

கூலி அடிமைத் தனத்தை எதிர்த்த முதல் நடவடிக்கை

மேதினம் என்ற உடனேயே அது 8 மணிநேர வேலை நாளை உறுதி செய்த தினம். எனவே அதனுடன் உறுதிபட இணைந்திருப்பது 8 மணிநேர வேலை நாளே என்ற கருத்தே பொதுவாக நிலவுகிறது. 8 மணிநேர வேலை நாள் என்பது தங்களது வேலைச் சூழ்நிலையில் வேலை நேரத்தைக் குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சராசரியான தொழிலாளர் கோரிக்கை என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது. ஆனால் 8 மணிநேர வேலை நாள் என்பது ஒரு அரசியல் முழக்கம். அது வெறுமனே தொழிற்சங்க ரீதியாக முன்வைக்கப்பட்ட அன்றாட நடைமுறை சார்ந்த முழக்கமல்ல.

மனிதர்கள் விலங்கிலிருந்து வேறுபட்டவர்கள். உழைப்பாளிகளும் மனிதர்களே. அவர்கள் விலங்கினத்தைப் போல் ஓய்வு ஒழிச்சலின்றி மற்றவர்களுக்கு வேலையை மட்டும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கப் பிறந்தவர்கள் அல்ல; அவர்களுக்கு ஓய்வு வேண்டும். அதுமட்டுமின்றி அவர்கள் சார்ந்திருக்கக் கூடிய சமூகத்தைப் பற்றி சிந்திப்பதற்கும் நேரம் வேண்டும். அந்த அடிப்படையில் தான் 8 மணிநேர வேலை, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேரம் தான் வாழும் சமூகம் குறித்து சிந்திக்கவும் செயல்படவும் வாய்ப்புத் தரும் காலம் என்ற அடிப்படையிலேயே அந்த அரசியல் முழக்கம் முன்வைக்கப்பட்டது.

அதாவது அது உழைப்பாளர் தங்களைக் கூலி அடிமைத் தனத்திலிருந்து விடுவிப்பதற்காக மேற்கொண்ட முதல் நடவடிக்கை. ஏனெனில் பின்னாளில் சோவியத் நாட்டில் ஏற்பட்ட சோசலிச அமைப்பு வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து இன்னும் குறைக்கவும் செய்தது. அந்த அமைப்பு நீடித்திருந்தால் விஞ்ஞானம், தொழில் நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சி மேலோங்க மேலோங்க இன்னும் வேலை நேரம் குறைக்கப்பட்டேயிருக்கும். அவ்வாறு குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் மனிதகுலம் உடல் உழைப்பிலிருந்து முற்றாக விடுபடும் சூழ்நிலையும் வந்திருக்கும். எனவே மேதினம் வலியுறுத்திய 8 மணிநேர வேலை நாள் வரலாறு உள்ளவரை நீடிப்பதற்காக கொண்டுவரப்பட்டதோ மாற்ற முடியாததோ அல்ல.

தொழிலாளராலேயே கடைப்பிடிக்கப்படாத 8மணிநேர வேலை நாள்

ஒரு காலத்தில் தொழிலாளர் ரத்தம் சிந்தி போராடிப் பெற்ற 8 மணிநேர வேலை நாள் இன்று பல துறைகளில் தொழிலாளர்களாலேயே கடைப்பிடிக்கப் படாமல் தூக்கியயறியப்படும் சூழ்நிலையையும் பார்க்கிறோம். 8 மணிநேர வேலை நாள் நிர்ணயிக்கப்பட்ட அமைப்பு ரீதியாக ஒருங்குதிரண்ட சேவைத்துறைத் தொழில்களில் பணிபுரிவோர் கூட அவர்களது வேலை நேரம் முடிந்த பின் பணம் சம்பாதிக்க வழிவகை செய்யும் ஏதாவதொரு வேலையை சைடு பிசினஸாக செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அதுமட்டுமின்றி பீஸ்ரேட் முறை நிலவும் பட்டாசு, தீப்பெட்டி போன்ற பொருட்கள் தயாரிக்கும் தொழில்களில் 8 மணி நேரத்தோடு அவர்கள் வேலையை முடிந்துச் செல்வதற்கு வாய்ப்பிருந்தும் அத்துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 10 மணிநேரம் 11 மணிநேரம் என்று வேலை செய்யும் சூழ்நிலையையும் சிவகாசி போன்ற பகுதிகளில் நம்மால் பார்க்க முடிகிறது. அதாவது தொழிலாளரில் அமைப்பு ரீதியாக ஒருங்குதிரட்டப்பட்ட தொழில்களில் ஓரளவு கட்டுபடியான ஊதியத்திற்கு வேலை செய்பவர்களாக அவர்கள் இருந்தும் அவர்கள் பெருகிவரும் கல்விச் செலவினங்கள் போன்றவற்றை எதிர் கொள்வதற்காக சைடு பிசினஸ்களில் ஈடுபடுகின்றனர். பீஸ்ரேட் தொழில்களில் வேலை செய்பவர்களோ 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் தான் 2 வேளை உணவாவது ஒரு நாளைக்கு உண்ண முடியும் என்ற சூழ்நிலையில் வேலை செய்கின்றனர்.

இவ்வாறு ஊதிய உயர்வுக்காகவும் வேலைச் சூழ்நிலைகளின் மேம்பாட்டிற்காகவும் தொழிலாளர்கள் பலகாலம் தொழிற்சங்க ரீதியாக அணிதிரண்டு போராடிப் பெற்ற 8மணிநேர வேலைநாள் என்பதைத் தொழிலாளரே கடைப்பிடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதன் பின்னணி என்ன?

வழங்கப்பட்ட உரிமை பறிக்கப்படுவதன் பின்னணி

ஆரம்பத்தில் தங்களது பிரச்னைகளை பேசுவதற்காக ஓரிடத்தில் கூடினால் கூட முதலாளிக்கு எதிராகச் சதி செய்கிறார்கள் என்று கருதப்பட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அப்படிப்பட்ட கைது நடவடிக்கைகளால் தொழிலாளர் இயக்கத்தை முழுமையாக ஆலை நிர்வாகங்களாலும் அரசு நிர்வாகத்தாலும் ஒடுக்க முடியவில்லை. அந்நிலையில் அவர்களது எரியும் பிரச்னைகள் அவர்களைத் தூண்டி கோடிக்கால் பூதமென அவர்கள் அணிதிரண்டு இந்த முதலாளித்துவ அமைப்பையே முடிவுக்குக் கொண்டுவந்து விடுவர் என்று அஞ்சிய முதலாளிகளின் நலனைப் பேணும் விதத்தில் அரசு நிர்வாகங்கள் தொழிற்சங்கம் அமைத்துச் செயல்படும் உரிமையைச் சட்ட ரீதியாக்கின. தொழிலாளர் தங்களது கோரிக்கைகளை இவ்வாறு தான் கிளப்ப வேண்டும். இந்தந்த நியதிகளுக்கு உட்பட்டு அவர்கள் பேச்சுவார்த்தை போன்ற கூட்டு பேர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அவை அனைத்தும் பலனளிக்காத நிலையிலேயே தங்களது கடைசி ஆயுதமாக வேலை நிறுத்த உரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரைகளோடு அத்தொழிற்சங்கங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டன. அந்த வரம்பைத் தாண்டி தொழிலாளர் போராட்டம் செல்வது மட்டும் கட்டுப்படுத்தப் பட்டது. அவ்வாறிருந்த தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை இன்று இருக்கிறதா என்று பார்த்தால் அனைத்து இடங்களிலும் தொழிற்சங்க உரிமை மறுக்கப்படுவதையே நாம் பார்க்கிறோம்.

ஹூண்டாய், மாருதி, தரையில் பதிக்கும் ரெஜென்ஸி ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியும் செயல்பாடுகளும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப் படுகின்றன. நாடெங்கும் உலகமயப் பின்னணியில் உருவாகி வரும் சிறு தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் அமைப்பது என்பதே நடைமுறையில் இல்லாததாக ஆகிவிட்டது. ஏன் ஒரு காலத்தில் தொழிலாளர் போராட்டங்களின் விளைவாகத் தொழிற்சங்க ரீதியான செயல்பாட்டை முட்டுக்கட்டை எதுவும் போடாமல் அனுமதித்த அரசு மற்றும் தொழிற்சாலை நிர்வாகங்கள் இன்று அவற்றை அனுமதிக்க மறுக்கின்றன என்பதும் நம்முள் உள்ள மிகமுக்கியக் கேள்வியாகும். ஏன் தொழிலாளர்கள் அந்த உரிமையை வலியுறுத்த தயங்கவும் தவறவும் செய்கின்றனர் என்பதும் நமது மனதை உறுத்தும் மற்றொரு கேள்வியாகும்.

அடிப்படை அரசியல் வழியின் கோளாறு

இக்கேள்விகளை நன்கு பரிசீலித்துப் பார்த்தால் இத்தொழிற்சங்கங்களை வழிநடத்திய கட்சிகளின் அடிப்படை அரசியல் வழியிலிருந்த கோளாறுகளே இச்சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளன என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. உழைக்கும் வர்க்கத்திற்குப் போராட்ட உணர்வு அது ஆட்படுத்தப்படும் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. அதாவது கட்டுபடியாகாத கூலி, பாதுகாப்பற்ற வேலைச் சூழ்நிலை ஆகியவை இருந்தால் தொழிலாளரிடம் போராட்ட உணர்வு அதாகவே இன்றில்லாவிட்டால் நாளை பீறிட்டுக் கிளம்பும்.

இச்சூழ்நிலைகள் சிறு முதலாளிகளால் உருவாக்கப்பட்டாலும் பெரு முதலாளிகளால் கடைப்பிடிக்கப் பட்டாலும் சுதேசி முதலாளிகளால் பின்பற்றப்பட்டாலும் விதேசி முதலாளிகளால் திணிக்கப்பட்டாலும் தொழிலாளரிடம் போராட்ட உணர்வு உருவாகவே செய்யும். அதை மையமாக வைத்தே தொழிற்சங்கங்கள் உருவாகும். அத்தொழிற்சங்கங்கள் அன்றாட நடைமுறைப் பிரச்னைகளைக் கையிலெடுப்பவையாக மட்டும் செயல்படக் கூடாது என்பதற்காகவே அதற்கு அரசியல் வழிகாட்டுதல் சமூகமாற்றக் கருத்துக்களை முன்வைக்கும் கட்சிகளால் வழங்கப்பட்டது. அதாவது தொழிற்சங்க உணர்வு தொழிலாளருக்கு அதாகவே வரும் ஆனால் அதற்கான அரசியல் வழிகாட்டுதல் தொழிற்சங்கங்களுக்குள் வெளியிலிருந்தே கொண்டுசெல்லப்பட வேண்டும். அப்படிப்பட்ட வழிகாட்டுதல் தொழிலாளரைக் கூலி அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்க வல்லதாக இருக்க வேண்டும்.

அத்தகைய வழிகாட்டுதலை மாமேதை லெனினால் தலைமை தாங்கப்பட்ட ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி கொடுக்க முடிந்ததன் காரணமாக முதலில் சோவியத் யூனியனிலும் அதன் பின்னர் உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகளிலும் தொழிலாளி வர்க்கம் கூலி அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்றது. அந்தத் திசை வழியில் முதலாளித்துவ உலகம் முழுவதிலுமிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படாததன் காரணமாக முதலாளித்துவத்தின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டது. மாமேதைகள் லெனின், ஸ்டாலின் ஆகியோரின் மறைவிற்குப் பின்பு வந்த தலைவர்களால் முனைப்புடன் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படாததோடு அப்போராட்டத்தின் கூர்முனை மழுங்கடிக்கப்படும் விதத்தில் மெத்தனப் போக்கு உலக அளவில் உழைக்கும் வர்க்க இயக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்டதால் ஏற்பட்ட தேக்க நிலையை உலக முதலாளித்துவம் நன்கு பயன்படுத்திக் கொண்டது.

சுதந்திர முழக்கம் ஏற்படுத்திய மயக்கம்

மேலை நாடுகளில் முதலாளித்துவ நிறுவனங்கள் தாங்கள் உலகம் முழுவதும் அடித்த கொள்ளையில் ஒரு பகுதியைத் தங்கள் நாட்டுத் தொழிலாளருக்கு ஊதியமாக வழங்கி அவர்களது கூலி அடிமைத் தன்மையை மறக்கடிக்கச் செய்தன. ஒருபுறம் இத்தகைய வாழ்க்கைச் சம்பளம் வழங்குவது என்ற போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டு கம்யூனிஸக் கருத்தோட்டத்திற்கு எதிராக அந்நாடுகளின் அரசுகளும் முதலாளித்துவப் பிரச்சார சாதனங்களும் கடுமையான பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டன. முதலாளித்துவ சமூக அமைப்பில் வழங்கப்படும் சுதந்திரம் அடிப்படையில் தனிச்சொத்துரிமைக்கான சுதந்திரமே. அதனை வளர்க்கவும் பராமரிக்கவும் பெயரளவில் வழங்கப்பட்டவையே அடிப்படை உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் போன்ற உரிமைகளாகும். ஆனால் அவ்வுரிமைகள் பூதாகரமாக பெரிதானவை போல் காட்டப்பட்டு உண்மையில் அந்நாடுகளில் நிலவிய முதலாளி வர்க்க சர்வாதிகார ஆட்சிமுறையின் பின்புலமாக இருந்த சுரண்டலும் அடக்குமுறைகளும் மூடி மறைக்கப்பட்டன.  எந்த அரசுமே ஒரு அடக்குமுறைக் கருவிதான். அது இந்த அல்லது அந்த வர்க்கத்திற்கு எதிரான சர்வாதிகார ஆட்சியையே பிரதிநிதித்துவப் படுத்துகிறது. அந்த அடிப்படையில் சோசலிச நாடுகளில் நிலவும் ஆட்சிமுறை பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சிமுறையே என்ற உண்மையாக கருத்தை ஒளிவுமறைவின்றி கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்ததால் அதன் ஆட்சி நடைபெற்ற நாடுகளில் சுதந்திரம் இல்லை; அவை இரும்புத்திரை நாடுகள் என்ற எண்ணப் போக்கு முதலாளித்துவ நாடுகளில் ஊட்டி வளர்க்கப்பட்டது.

தனிமனிவாத லாப நோக்கக் கலாச்சாரம்

இந்தப் பின்னணியில் சோசலிச நாடுகளிலும் சரி முதலாளித்துவ நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளாலும் சரி சோசலிசக் கூட்டுவாதக் கலாச்சாரம் ஊட்டி வளர்க்கப் படாததால் உருவான வெற்றிடத்தை முதலாளித்துவ லாப நோக்கக் கலாச்சாரத்தைக் கொண்டு முதலாளி வர்க்கம் நிரப்பியது. அதாவது இன்று உலக மக்களிடையே நிலவும் ஒரே கலாச்சாரம் முதலாளித்துவ லாபநோக்கக் கலாச்சாரமே என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அதனால் ஒவ்வொரு தொழிலாளிக்குள்ளும் ஒரு முதலாளித்துவ மனநிலை நிலவும் போக்கைக் கொண்டு வருவது முதலாளித்துவத்திற்குச் சாத்தியமானது. மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் அவர்களது தொழில் வளர்ச்சியை ஒப்புநோக்குமிடத்து பராமரிக்க முடிந்த நிலையில் வேலையின்மை அதிக அளவில் நிலவவில்லை. அங்கு மக்கட்தொகைப் பெருக்கமும் குறைவாக இருந்ததால் வேலைப் பாதுகாப்பு என்ற எண்ணம் அந்தநாடுகளின் தொழிலாளி வர்க்கத்திற்குப் பெருமளவு இருக்கவில்லை. தொழிற்சங்கங்கள் அவற்றை வலியுறுத்தவும் இல்லை.

செய்வதறியாத நிலை

ஆனால் முதலாளித்துவச் சந்தை நெருக்கடி முற்றிய நிலையில் அதனை எதிர் கொள்வதற்காக அது கொண்டுவந்த உலகமயம் மேலைநாட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் வேலை வாய்ப்புகளை மிகப் பெருமளவு பறித்தது. வேலைப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஒருபோதும் செயல்படாத மேலை நாடுகளின் தொழிற்சங்கங்களுக்கு அச்சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே தொழிற்சங்கங்கள் பெரிய அளவில் அந்நாடுகளில் இருந்தாலும் திசைவழி தெரியாது அவை தடுமாறத் தொடங்கின. நடைமுறைத் தேவைகளுக்காக மட்டும் செயல்படுவது என்றிருந்த அந்த தொழிற்சங்கங்கள் பொருத்தத்தை இழந்தவை போல் ஆகின. தற்போது மேதினம் மேலை நாடுகளில் கேளிக்கை தினமாக அனுஷ்டிக்கப்படும் போக்கு அறவே இல்லாமல் போய்விட்டது என்று கூடக் கூறலாம். அதற்கான காரணம் அங்கு நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தங்கள் வேலைகளை இழந்த தொழிலாளர்கள் தாங்கள் பலகாலம் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் கட்டியிருந்த வீடுகளின் மேல் கடன் வாங்கி செலவு செய்யத் தொடங்கினர். அந்தக் கடனைக் கட்ட முடியாத நிலையில் அமெரிக்காவில் மட்டும் ஏறக்குறைய 1 லட்சம் உழைக்கும் மக்களின் வீடுகள் ஏலத்திற்கு வந்தன. இப்போது அந்நாட்டுத் தொழிலாளி வர்க்கம் அதாகவே ஒரு சரியான புரிதலுக்கு வந்துள்ளது. அதாவது உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூலகாரணம் முதலாளித்துவ அமைப்பும் அதன் லாப வெறியுமே என்ற புரிதலுக்கு அது வந்துள்ளது. அதனால் தான் மேதின முழக்கங்கள் அனைத்து நாடுகளிலும் சொல்லிவைத்தாற் போல் முதலாளித்துவத்தை எதிர்த்ததாக எந்த ஒளிவு மறைவுமின்றி வெளிவந்து கொண்டுள்ளன.

வளர்கிறது - வல்லரசாகிறது

நமது நாட்டின் நிலைமை சற்று வேறுபட்டது. குறைவான கூலிக்கு ஆள் கிடைக்கும் போக்கை மையமாக வைத்து அந்நியத் தொழில்களும் மூலதனமும் நமது நாட்டிற்கு வந்தது. அவை ஒரு 20 சதவீத மத்தியதர வர்க்க மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தது. அதன் விளைவாக அம்மக்களின் வாங்கும் சக்தியை மையமாகக் கொண்ட ரியல் எஸ்டேட், வாகன உற்பத்தி மற்றும் மக்களின் நவீன அன்றாட ஆடம்பர உபயோகப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில்கள் வளர்ச்சியடைந்தன. அந்நிய மூலதனம் தங்கு தடையின்றி நமது நாட்டிற்குள் வருவதற்கு வழிவகுக்கும் விதத்தில் ஆதார வசதிகள் பல ஏற்படுத்தித்தரப் பட்டன. அவற்றையயல்லாம் மையமாக வைத்து இந்தியா வளர்கிறது; வல்லரசாகிறது போன்ற முழக்கங்கள் முன்வைக்கப் பட்டன. இந்த அந்நிய மூலதன வரவைப் பராமரிக்கவும் அதிகரிக்கவும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற கொள்கைகள் மத்திய, மாநில அரசாங்கங்களால் கடைப்பிடிக்கப் பட்டன. அந்த மண்டலங்களில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளருக்கு தொழிற்சங்க உரிமை அப்பட்டமாக மறுக்கப்பட்டது. அந்நிய மூலதனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தொழில்களில் நிரந்தரத் தன்மை வாய்ந்த வேலைகளாக சில 100 வேலைகளே உருவாக்கப்பட்டன. பிற வேலைகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளரிடமிருந்து பெறப்பட்டன. இந்த ஒப்பந்தத் தொழில்களை பல சிறு முதலாளிகள் எடுத்துச் செய்யத் தொடங்கினர்.

தொழிலாளரின் ரகத்தைப் பார்க்கும் போக்கு

அந்தத் தொழிற் சாலைகளில் பெரும்பாலும் தொழிற்சங்க இயக்கங்கள் ஏற்படுத்தப்படவில்லை. ஆங்காங்கே ஒருசில தொழிற்சங்கங்கள் அங்கு தோன்றினால் அவற்றிற்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக இருக்கிறோம் என்ற பெயரில் செயல்பட்ட கட்சிகள் நமது நாட்டின் தொழிலாளரின் வர்க்க உணர்வை மேலோங்கச் செய்வதற்குப் பதிலாக அவர்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளின் முதலாளிகள் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பதைத் தரம் பிரித்துக் காட்டுவதிலேயே தங்களது கூடுதல் காலத்தையும் கவனத்தையும் செலவழிக்கத் தொடங்கின. சிறு முதலாளிகள் நேச சக்திகள்; நமதுநாட்டு முதலாளிகளில் மிகப்பெரும் ஏகபோக முதலாளிகளைத் தவிர பிற முதலாளிகள் அனைவரும் நமக்கு நேச சக்தியாக வரும் வாய்ப்பினைக் கொண்டுள்ளவர்கள் என்ற கருத்தைக் கொண்டவையாக அக்கட்சிகள் இருந்ததால் தொழிலாளரின் வர்க்க உணர்வை மந்தப்படுத்தும் தன்மை கொண்டவைகளாகவே அவை இருந்தன.

ஆலையை மூடிவிடுவான் என்ற அச்சுறுத்தல்

கூலி குறைவாகக் கொடுத்தாலும் சிறு முதலாளிகளை எதிர்த்துப் போராடினால் அவன் ஆலையை மூடிவிட்டுச் சென்று விடுவான் என்று அச்சுறுத்தி சிறு தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் வருவதை அவை முடக்கின. அதாவது இன்று சிறு முதலாளிகளாக இருப்பவர்கள் மிகப் பெரும்பாலும் பெரு முதலாளித்துவ நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு அவர்களுக்குத் தேவைப்படும் பொருட்களைச் செய்து கொடுப்பவர்களாகவே உள்ளனர் என்பதையும் அவர்களை எதிர்த்துக் கூடுதல் கூலி வேண்டித் தொழிலாளர் போராடினால் அந்நிலையில் அதனை எதிர்கொள்ளும் விதத்தில் பெரு முதலாளிகளை எதிர்த்து அச்சிறு முதலாளிகள் போராட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும் என்பதை அவர்கள் பார்க்கத் தவறிவிட்டனர்.

இந்தப் பின்னணியில் தான் தொழிற்சங்க இயக்கங்கள் நமது நாட்டில் ஒரு மிகப்பெரிய பின்னடைவையும் மேலை நாடுகளில் அவற்றின் இலக்கையும் திசைவழியையும் இழந்தவையாக ஆகும் சூழ்நிலை தோன்றியது.

இதனால் அனைத்தும் முடிந்துவிட்டது என்ற மனநிலை தொழிலாளி வர்க்கத்திற்கு ஏற்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் தொழிலாளி வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையை மறந்து இயங்காதிருந்தாலும் அதனை இயங்கச் செய்வதாக முதலாளித்துவச் சந்தை நெருக்கடி அவர்களது வாழ்க்கையின் மேல் சுமத்தும் சுமை ஆக்கிவிடும்.

முற்றுப்பெற்றுவிட்ட வளர்ச்சி

அப்படிப்பட்ட மிக ஆழமானதொரு நெருக்கடியில் மேலை நாடுகள் அனைத்தும் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளன. முதலாளித்துவம் அதன் அதிகபட்ச லாபத்தைப் பராமரிப்பதற்காகக் கொண்டுவந்த உலகமயம் இன்று உலகம் முழுவதிலும் முதலாளித்துவம் அதன் வரையறைக்கு உள்பட்டு எத்தனை அதிகபட்ச வளர்ச்சியைக் கொண்டுவர முடியுமோ அத்தனை அதிகபட்ச வளர்ச்சியைக் கொண்டுவந்துவிட்டது. இனிமேல் அது சுரண்டி லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்பளிக்கும் பின்தங்கிய நாடு எதுவும் இல்லை. அதாவது முதலாளித்துவம் அது மீளவே முடியாத ஒரு மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கித்தவித்துக் கொண்டுள்ளது. உலகமயத்தின் விளைவாக நெருக்கடியும் உலக அளவிலானதாக ஆகியுள்ளது.

ரூபாய் மதிப்புக் குறைவும் பெட்ரோல் விலை உயர்வும்

அமெரிக்கா மிகக் குறைந்த ஜனத்தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும் அந்நாட்டு மக்கள் நுகர் பொருட்களை அதிகமாக வாங்கிப் பயன்படுத்தக் கூடியவர்களாக இருந்தனர். அதனை மையமாக வைத்தே சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பல பொருட்களின் உற்பத்தி இருந்தது. இன்று அவர்கள் தங்கள் வீடுகளை விற்றுவிட்டு வீதிக்குத் தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில் நுகர் பொருட்களை பெரிய அளவில் வாங்கிப் பயன்படுத்த முடியாதவர்களாக இருப்பதால் சீனாவின் ஏற்றுமதி சார்ந்த நுகர்பொருள் உற்பத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு 13 சதவிகிதம் என்ற அளவிற்கு ஒரு சமயம் பராமரிக்கப்பட்டு வந்த அந்நாட்டின் வளர்ச்சி விகிதம் தற்போது 6 சதவிகிதம் என்ற நிலைக்கு வந்துள்ளது. நமது நாட்டிலும் இந்தியா வளர்கிறது, வல்லரசாகிறது என்ற வாதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பியப் பொருளாதாரங்களில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக அங்கு பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் பங்குகளின் விலைகள் தரைமட்டமாகக் குறைந்துள்ளன. அப்பங்குகளை வாங்குவதற்காக மேல்நாட்டு முதலீட்டாளர்கள் நமது நாட்டில் செய்திருந்த முதலீடுகளைத் திருப்பி எடுத்துச் சென்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் குறைந்துள்ள பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். அதனால் அந்நியச் செலாவணிக் கையிருப்பு நமது நாட்டில் மிகப் பெருமளவு குறைந்துள்ளது. ஒரு காலத்தில் அதாவது மிகச் சமீபத்தில் ஒரு டாலர் 40 ரூபாய்க்கு சமம் என்றிருந்த நிலை மாறி 55 ரூபாய் என்ற அளவிற்கு ரூபாயின் மதிப்புக் குறைந்துள்ளது. அதனால் நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் தாறுமாறாக அதிகரிக்கின்றன. நாம் இறக்குமதி செய்யும் பொருட்களிலேயே மிக முக்கியமானது பெட்ரோலியப் பொருட்களாகும். அதன் விலை ரூபாய் மதிப்புக் குறைவினால் அதிகரித்துள்ள நிலையில் பெட்ரோல் விலையை மிக அதிகம் அதிகரிக்கும் ஒரு கட்டாய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் இப்படிப்பட்ட விலை உயர்வை அது கொண்டுவந்து தீரவேண்டும் என்பதே நிலை. ஆனால் தாங்கள் ஆட்சியில் இல்லை என்பதற்காக ஆட்சியிலிருக்கும் கட்சிகளை எதிர்க்கட்சிகள் குறை கூறுவது நடந்து கொண்டுள்ளது. ஆளும் கட்சியும் முதலாளித்துவ அமைப்பு சார்ந்த நெருக்கடியின் விளைவாகவே இந்த விலை உயர்வினைக் கொண்டு வருவது அத்யாவசியமாகியுள்ளது என்ற உண்மையைக் கூற முடியாமல் தவிக்கிறது. ஏனெனில் அவ்வாறு கூறினால் எந்த முதலாளித்துவ எஜமானர்களுக்காக அவர்கள் சேவை செய்கின்றனரோ அந்த முதலாளித்துவ எஜமானர்களின் ஆதரவினை அவர்கள் இழந்து விடுவர். இந்தப் பின்னணியில் பெட்ரோல் விலை உயர்வுப் பிரச்னையில் ஆட்சியிலிருக்கும் ஆட்சிக்கு வெளியிலிருக்கும் முதலாளித்துவக் கட்சிகள் அனைத்தும் இந்தப் போலி நாடகத்தை நடத்திக் கொண்டுள்ளன.

சோசலிசப் புரட்சிக்கான புறச் சூழ்நிலையின் வளர்ச்சி

இந்தப் பின்னணியில் வளர்ந்து வரும் முதலாளித்துவ நெருக்கடி தொழிலாளி வர்க்கத்தின் கூலி அடிமைத் தனத்திலிருந்து அதனை விடுவிக்கும் வகையிலான சோசலிச ரீதியிலான சமூகமாற்றப் போக்கின் மிகப்பெரும் வளர்ச்சிக்கான புறச் சூழ்நிலையைப் பெருமளவு அதிகரித்துள்ளது. ஆனால் அதனைச் செய்து முடிப்பதற்குத் தேவைப்படும் கருவியான உழைக்கும் வர்க்கக் கம்யூனிஸ அமைப்புகளின் வளர்ச்சியும் தயாரிப்பும் உரிய அளவில் இல்லை.

அது இல்லாமலேயே போய்விடும் என்று கூறவும் முடியாது. நிலவும் புறச் சூழ்நிலைகளே மேலை நாட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. அச்சிந்தனையின் விளைவாகவே அது இன்று முதலாளி வர்க்கமே நமது பிரச்னைகள் அனைத்திற்கும் முழுமுதற் காரணம் என்ற முடிவிற்கு வந்துள்ளது. அந்த முடிவினை அமுலாக்கும் போக்கில் முதலாளித்துவ நுகத்தடியிலிருந்து சமூகத்தை விடுவிக்கும் தன்மை வாய்ந்த கருத்துக்களையும் உழைக்கும் வர்க்கம் அது இதுவரை பெற்றதும் தற்போது பெற்றுக் கொண்டுள்ளதுமான அனுபவத்தின் மூலம் நிச்சயம் பெறவே செய்யும். அதன் விளைவாக அக்கருத்துக்களை அமுலாக்கவல்ல கருவியான பாட்டாளி வர்க்கத்தின் சரியான கட்சியும் உலகம் முழுவதும் உருவாவதற்கான வாய்ப்பும் நிச்சயம் தோன்றும்.

அத்தகையதொரு அமைப்பாக நமது நாட்டில் செயல்படும் நமது சி.டபிள்யு.பி. அமைப்பு இந்த மண்ணில் உழைக்கும் வர்க்கத்தைக் கூலி அடிமைத் தனத்திலிருந்து விடுவிப்பதற்கு உறுதியேற்கும் தினமாக இந்த மேதினத்தை அனுஷ்டிக்க வேண்டும். இங்கு நிலவும் புறச் சூழ்நிலைகள், கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் கட்சிகளின் வர்க்க சமரசப் போக்கு, உழைக்கும் வர்க்கத்திடையே பரவலாக மண்டிக் கிடக்கும் முதலாளித்துவ லாபநோக்கக் கலாச்சாரம், உழைக்கும் வர்க்கத்தைப் பீடித்துள்ள தனிமனித வாதம் இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இவற்றிற்கு எதிராகக் கருத்து ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் உரிய செயல்பாடுகளை வளர்த்தெடுத்து இந்திய மண்ணில் மகத்தான சமூகமாற்றத்தைச் சாதிக்க இந்த மே நாளில் முன்வர வேண்டும் என்று கூறி தோழர் ஆனந்தன் தனது உரையை நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment