Powered By Blogger

Saturday, September 1, 2012

மறுக்கப்படும் தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமை: கிரிமினல்களாகத் தொழிலாளர் சித்தரிக்கப்படும் கொடுமை


உலகமயப் பின்னணியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு அங்கு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் தொழில் தொடங்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாறுதல்களில் மிக முக்கியமானது தொழிற்சங்க உரிமை மறுக்கப்படும் போக்காகும்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் மட்டுமின்றி புதிதாகத் தொடங்கப்படும் பிற தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்க உரிமை அப்பட்டமாக இன்று மறுக்கப்படுகிறது. அதை யொட்டிப் பல நிறுவனங்களில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தொழிற்சங்கங்களும் செயலிழந்தவையாகி விட்டன.

கூட்டு பேரம் ஒழிப்பு

அன்னிய மூலதனத்தின் வருகை, தொழில் வளர்ச்சி போன்ற முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் எழுப்பிய பேரிரைச்சல் தொழிற்சங்க உரிமை இழந்து கொடும் சுரண்டலில் அல்லல் பட்ட தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக் குரலை வெளியில் வராதவாறு செய்துவிட்டது. தொழிற்சங்கங்கள் இல்லாததால் கூட்டு பேரமும் இல்லாமற் போய்விட்டது. அதனால் முதலாளிகள் நிர்ணயித்ததே ஊதியம் என்றாகி ஊதிய விகிதங்கள் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டன.


உணவுப் பொருள் விலையேற்றம்

உலகமயச் சூழலின் மற்றொரு விளைவு உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வாகும். அதன் விளைவாக ஏற்கனவே தொழிலாளர் பெறும் குறைவான சம்பளங்களின் விலைவாசியுடன் ஒப்பிடும் போதான மதிப்பு அதாவது உண்மை மதிப்பு இன்னும் குறைந்துவிட்டது.

இந்தப் பின்னணியில் உழைப்பாளரின் வாழ்க்கைச் சுமை அதிகரித்து அதன் விளைவாகத் தொழிற்சங்க உரிமைக்கான போராட்டம் குறிப்பாகத் தொழில் நகரங்களில் தலைதூக்கியது.
இந்தச் சூழ்நிலை தொழிற் புரட்சியின் விளைவாக எந்திரத் தொழில் உற்பத்தி முறை தோன்றிய காலத்தில் நிலவிய தொழிலாளர் போராட்டங்களை ஒத்ததாக இருந்தது. கடுமையான உழைப்பு, ஓய்வின்மை, கட்டுபடியாகாத ஊதியம் இவற்றின் விளைவாக தொழிலாளர் மத்தியில் ஒரு கொந்தளிப்புச் சூழ்நிலை அக்கால கட்டத்தில் நிலவியது; இன்றும் அது நிலவுகிறது. ஆனால் தொழிற்புரட்சிக் காலகட்டத் தொழிலாளருக்கு தொழிற்சங்கம், கூட்டுபேரம், ஒப்பந்தச் சம்பளம் போன்ற முன்னுதாரணங்கள் இல்லை. ஆனால் இக்காலகட்டத் தொழிலாளருக்கு இந்த முன்னுதாரணங்கள் உள்ளன. எனவே தொழிற்சங்கங்கள் இல்லாத இடத்தில் தொழிற்சங்க உரிமை கோரியும், முதலாளிகளின் கைப்பாவைத் தொழிற்சங்கங்கள் மட்டும் உள்ள இடங்களில் உரிமைக்குப் போராடும் தன்மை வாய்ந்த தொழிற்சங்கங்கள் அமைக்கும் உரிமை கோரியும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பிக் கொண்டுள்ளன.

போராடும் சங்கத்தின் உதயம்

இந்தப் பின்னணியில் தான் சமீப காலமாக குர்காவுனின் கார் தொழிற்சாலைகளில் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பிக் கொண்டுள்ளன. ஹோண்டா தொழிற்சாலையில் தொழிற்சங்க உரிமை கோரி வடிவெடுத்த போராட்டம் அரசின் கடும் அடக்குமுறையால் ஒடுக்கப்பட்டது. அதையடுத்து மாருதி தொழிற்சாலையில் போராட்டம் வெடித்தது. பல நாட்கள் நீடித்த அந்தத் தீரமிக்க போராட்டம் பல தொழிலாளர்களின் வேலை நீக்கத்திற்கு வழிவகுத்தது. அதன்பின் அந்தத் தியாகப் பின்னணியில் ஒரு தொழிற்சங்கம் தோன்றியது. அச்சங்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனுடன் சம்பள உயர்வுக்கான பேச்சு வார்த்தையும் நடத்த வேண்டிய நிலைக்கு மாருதி நிர்வாகம் தள்ளப்பட்டது.

ஏற்க மனமில்லை

ஆனால் மனப்பூர்வமாக இந்த நிலையை அதாவது போராடும் தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட நேர்ந்த நிலையை ஏற்றுக் கொள்ள இயலாத மாருதி உத்யோக் நிர்வாகம் நாசூக்காகப் பிரச்னையை உருவாக்கி அது வன்முறை வடிவெடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்று தற்போது அதன் மானேஸர் என்ற இடத்திலுள்ள ஆலையில் கதவடைப்பினை அறிவித்துள்ளது.

கிளர்ச்சியின் விளைவாக ஆலையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தீ விபத்தில் ஒரு பொது மேலாளர் தீயில் கருகி உயிரிழந்து விட்டதாகவும் மற்றும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. இதற்கு முன்பு இதுபோன்றதொரு தொழிலாளர் போராட்டத்தில் ஏனாம் நகரின் ரெஜென்ஸி தொழிற்சாலையில் ஒரு ஆலை நிர்வாகி கொல்லப்பட்டார் என்று வந்த செய்தியும் இங்கு நினைவு கூரப்பட வேண்டும். அப்போது தொழிற்சங்கத் தலைவர் ஒருவரும் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டார்.

ஒரு தலைப்பட்சப் படப்பிடிப்பு

இந்த நிகழ்வுளையயாட்டி வரும் பத்திரிக்கைச் செய்திகளும் ஊடகப் படப்பிடிப்புகளும் போராடும் தொழிலாளர்களைக் கிரிமினல்கள் போல் சித்தரிக்கின்றன. மானேஸர் ஆலைக் கிளர்ச்சியைத் தொடர்ந்து 99 தொழிலாளர்கள் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலை மறைவாகி விட்டதாகவும் பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன.

இது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள தாக்குதல், வன்முறையோடு ஒரு போதும் சமரசமில்லை என்று மாருதி உத்யோக் நிறுவனத் தலைமை மேலாளர் அறிவிப்பு போன்ற செய்திகள் தலைப்புச் செய்திகளாவும், கட்டம் கட்டியும் போடப் படுகின்றன. ஆனால் சங்கத் தலைவர்களின் நடந்தது என்ன என்பது ஒரு நடுநிலையான விசாரணையின் மூலமே கண்டறியப்பட வேண்டும் என்பன போன்ற கருத்துக்கள் அச்செய்திகளின் இறுதியில் ஓரிரண்டு வரிகளில் யார் கண்ணிலும் படாதவாறு முன்வைக்கப் படுகின்றன.

கால அவகாசம்

அத்துடன் மாருதி உத்யோக் நிறுவனம் இப்போராட்டத்தின் காரணமாக ஹரியானாவிலிருந்து தனது ஆலைகளை குஜராத்திற்குக் கொண்டு செல்லப் போகிறது; அதைப் பேசி முடிப்பதற்காக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றிருக்கிறார்; இனப் படுகொலைகளைத் தூண்டிவிட்டவர் என்ற அடிப்படையில் அவருக்குப் பல காலமாக மறுக்கப்பட்டு வந்த வெளிநாடுகளில் பயணிப்பதற்கான விசா தற்போது வழங்கப் பட்டுள்ளது என்ற செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மேலும் வன்முறை வந்ததற்கான காரணத்தை விசாரிக்கப் போவதாகவும் அவ்விசாரணையின் முடிவு வந்த பின்னரே ஆலை திறக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டுள்ளன. அதன் பின்னர் சகஜ நிலை திரும்பிய பின்னரே ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
கைப்புண்ணைப் பார்க்க கண்ணாடி தேவையில்லை. அதைப் போல் நடந்துள்ள நிகழ்வுகளைக் கோர்வையாகப் பார்த்தால் பெரிய விசாரணை எதுவும் இன்றியே நிகழ்விற்கான காரணத்தைத் தெளிவாக யாரும் அறிந்து கொள்ள முடியும்.

நிர்வாகத்தின் கைப்பாவைச் சங்கம் ஒன்று பெயரளவில் செயல்பட்டு தொழிலாளரின் உண்மையான பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்காத நிலையில் தொழிலாளர் போராடி பல இழப்புகளை எதிர்கொண்டு 30க்கும் மேற்பட்ட அதன் முன்னணி ஊழியர்களின் வேலை இழப்பிற்குப் பின் போராடும் தங்களது தொழிற்சங்கத்தை நிலை நாட்டினர். அதனுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஆலையின் நிர்வாகம் ஒருபுறம் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதாகக் காட்டிக் கொண்டு மறுபுறம் தற்போது தோன்றியுள்ளது போன்ற கிளர்ச்சி உருவாவதற்கான ஏற்பாட்டையும் செய்துள்ளது.

தற்போது கிளர்ச்சியையும் உயிரிழப்பையும் காரணம் காட்டி ஆலை மூடல், கைது, அடக்குமுறை என அனைத்து வகைத் தாக்குதல்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அத்துடன் ஆலை குஜராத்திற்குப் போகப் போகிறது என்ற செய்தியையும் வெளியிட்டு ஹரியானா மாநில மக்களிடையே மாநில உணர்வையும் தட்டியெழுப்பி விட்டுள்ளது. சுற்றியுள்ள கிராம மக்களின் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு ஆதரவாக உள்ளது என்று அக்கிராமத்திலுள்ள குட்டி முதலாளித்துவ சக்திகளை ஒருங்கிணைத்து அது காட்டுகிறது. கைது நடவடிக்கை போதாதென்று ஆலை மூடல் செய்து தொழிலாளரைப் பட்டினி போட்டுப் பணியவைக்கும் ஏற்பாட்டையும் வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளது.

தொழிற்சங்க ஒழிப்பே நோக்கம்
இவை அனைத்தின் ஒட்டுமொத்த நோக்கமுமே போராடும் தொழிற்சங்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில் தொழிலாளரின் ஒட்டுமொத்த ஆதரவினைப் பெற்றதாக அந்தத் தொழிற்சங்கம் ஆகிவிட்டதால் அதனுடன் இறுதியாக நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது ரூபாய் 10500 என்ற அளவிற்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டிய கட்டாயம் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

பொறியியல் மற்றும் தொழில் நுட்ப அறிவு பெற்ற பட்ட மற்றம் பட்டயதாரிகள் கூடுதல் எண்ணிக்கையில் வேலைக்குக் கிடைக்கும் வாய்ப்பைக் கொண்டதாக நமது நாடு இருந்ததால் கூட்டு பேரம், ஒப்பந்தம் என்று எதுவும் இல்லாமல் கொடுக்கும் சம்பளத்திற்கு ஆள் கிடைத்ததைப் பயன்படுத்திக் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருந்த மாருதி நிறுவனத்திற்கு இவ்வளவு ஊதிய உயர்வு கொடுப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அதனால் சங்கத்தை வழக்கமாக நிர்வாகங்கள் கையாளும் தந்திரங்களான தொழிலாளருக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவது, சிலரைக் கருங்காலிகளாக உருவாக்கி அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து ஒற்றுமையைக் குலைப்பது போன்ற வழிமுறைகள் மூலம் இல்லாமல் செய்துவிட முடியாது என்பதைப் புரிந்து கொண்டு இப்போதுள்ள சூழ்நிலையை இந்த நிர்வாகம் தோற்றுவித்துள்ளது. சங்கத்தை ஒழிப்பதற்கு எவ்வளவு காலம் அதற்குத் தேவைப்படுமோ அவ்வளவு காலத்தை எடுத்துக் கொள்வதற்காக இக்கிளர்ச்சிக்கான காரணத்தை விசாரித்து அறிந்த பின்னர் அதுவும் சகஜ நிலை திரும்பிய பின்னரே ஆலை திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

எந்தப் பகுத்தறிவுள்ள மனிதனின் புலனறிவிற்கும் எட்டக் கூடிய விதத்தில் கிளர்ச்சியின் பின்னணி மேற்கூறியவாறு இருக்கையில் அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்காக தொழிலாளரைக் கிரிமினல்கள் போலவும், அவர்களது திட்டமிட்ட சதியின் காரணமாக இந்த உயிரிழப்பு போன்ற விசயங்கள் நடந்தது போலவும் என்ன நேர்த்தியாக ஆலை நிர்வாகம், அரசு நிர்வாகம் மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் ஆகியவை இப்பிரச்னையைத் திசை திருப்புகின்றன?

திரும்பும் வரலாறு

எந்திரத் தொழிலுற்பத்தி முறை தோன்றிய காலத்தில் தொழிற்சங்கம் அமைக்க முன் வருவோர் முதலாளிக்கு எதிராகச் சதி செய்தவராகச் சித்தரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். அதன் பின் பல காலம் போராடி உழைக்கும் வர்க்கம் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைப் பெற்றது. உலகமயம் என்ற பின்னணியில் தற்போது தோன்றியுள்ள சூழ்நிலையில் நமது நாட்டையொ த்த நாடுகளில் முதலீடு செய்து கண்மண் தெரியாத லாபத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காக மீண்டும் தொழிற்சங்கம் அமைத்துப் போராடும் தொழிலாளர்கள் சதிகாரர்களாகவும், கிரிமினல்களாகவும் சித்தரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படும் கொடுமையும், போராடும் தொழிற்சங்கங்கள் இல்லாமல் போகும் சூழ்நிலையும் உருவாக்கப் பட்டுள்ளன.

சூழ்ச்சி, தந்திரம், சதி போன்ற குணங்கள் உழைக்கும் வர்க்கக் குணங்களல்ல; அவை தோன்றி வளர்வதற்கான வாய்ப்புகளைப் பெருமளவு கொண்டவர்கள் உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடும் உடமை வர்க்கத்தினரும் அவர்களது அடிவருடிகளுமே. இதில் கொடுமை என்னவென்றால் தொழிற்சங்கங்கள் என்ற பெயரில் அகில இந்திய அளவில் செயல்படும் தொழிற்சங்கங்கள் உரிய விதத்தில் இப்பிரச்னையை இப்போது வரை கையிலெடுக்காதது தான். சட்டத்தின் ஆட்சி என்று வாய் கிழியப் பேசிக் கொண்டு தொழிலாளரின் உரிமை பேணும் ஒரே சட்டமான தொழிற்சங்கச் சட்டத்தைச் செயல்படாது முடக்கி வைக்கும் ஆட்சியாளர்களின் அப்பட்டமான வர்க்கப் பாரபட்சமும் இதன்மூலம் கேவலமான முறையில் அம்பலமாகிறது.

No comments:

Post a Comment