Powered By Blogger

Saturday, January 14, 2012

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கான அனுமதியின் பின்னணியும் எதிர்க்கட்சி அரசியலுக்கு அது பயன்படுத்தப்படும் விதமும்


சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 51 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை அனுமதிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் ஒருங்குதிரண்டு அம்முடிவுக்கு எதிரான தங்களது எதிர்ப்புக் குரலை விண்ணதிர முழக்கிக் கொண்டுள்ளன. நாடாளுமன்றம் இதை மையமாக வைத்து முடக்கப்பட்டுவிட்டது. 

இதற்கான எதிர்ப்புக் குரல் பல மாநில அரசாங்கங்களிடமிருந்தும் பெரிய அளவில் கிளம்பியது. காங்கிரஸ் கூட்டணியில் இப்போது வரை இடம் பெற்றிருக்கும் மம்தா பானர்ஜி கூட இதை எதிர்த்தார். தமிழக முதல்வரும் இதை அனுமதிக்கப் போவதில்லை என்று எவ்வகைத் தயக்கமுமின்றி அறிவித்தார். 


பல இடங்களில் சில்லரை வணிகர்கள் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் ஒரு நாள் சில்லரை வர்த்தகர்களின் கடை அடைப்பும் நடந்தது. இத்தகைய எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து தற்போதைக்குச் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதென்ற தனது முடிவை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 

இவ்வாறு பல்வேறு கட்சிகளும் பல மாநில அரசாங்கங்களும் இதை எதிர்ப்பதற்குக் காரணமாகக் கூறுவது அன்னிய முதலீடு இந்த அளவிற்குச் சில்லரை வர்த்தகத்தில் வந்தால் உள்நாட்டு வர்த்தகர்கள் பெருமளவிற்குப் பாதிக்கப்படுவர்; அவர்களது வியாபாரம் படுத்துவிடும் என்பதாகும். 

பலகாலமாகப் பேசப்பட்டு வந்த இந்த அனுமதி இப்போது மத்திய அரசால் திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சில்லரை வர்த்தகம் பாதிப்புக்கு ஆளாகும் என்ற குரல் ரிலெயன்ஸ் போன்ற பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் அதில் இறங்கிய போதே எழுப்பப்பட்டது. அந்த முழக்கத்தைக் குறிப்பாக இடதுசாரிக் கட்சிகள் பெருமளவு எழுப்பின. 

இருந்தாலும் இப்போது ரிலெயன்ஸ் போன்ற நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் அடியெடுத்து வைத்து ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. ரிலையன்ஸ் மட்டுமின்றி ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் பாந்தலூன் போன்ற நிறுவனங்களும் தற்போது சில்லரை வர்த்தகத்தில் நுழைந்துள்ளன. 

இந்நிறுவனங்களின் 4000க்கும் மேற்பட்ட பெரிய கடைகள் நாடு முழுவதும் தற்போது சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ளன. பெரிய அளவிற்கு அதனால் சில்லரை வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக அதற்குப்பின் அதே இடதுசாரிக் கட்சிகளிடமிருந்து கூட அங்கலாய்ப்புகள் எதுவும் வரவில்லை. 

இந்நிலையில் இத்தருணத்தில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு மத்திய அரசால் அனுமதிக்கப்படப் போவதாக அறிவிப்பு வந்துள்ளதன் காரணம் என்ன? இத்தகைய எதிர்ப்பு கட்சிகளால் ஏன் ஏழுப்பப்படுகிறது? இந்தக் கட்சிகள் கூறுவது போல் அன்னிய நேரடி முதலீடு வருவதால் உண்மையிலேயே உள்நாட்டு வர்த்தகம் படுத்துவிடுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டியது நமது கடமையாகும். 

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி

தற்போது இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருடனான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. அதாவது ஒரு டாலர் 52 ரூபாய்க்குச் சமம் என்ற அளவிற்கு அதன் மதிப்பு குறைந்துள்ளது. இவ்வாறு குறைந்துள்ளதற்குக் காரணம் அமெரிக்காவில் 2008ல் தோன்றி இன்று வரை குறையாது நீடித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவப் பங்குச்சந்தை நெருக்கடியாகும். 

இதனால் அமெரிக்க நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் தொடர்ச்சியாகச் சரிந்து கொண்டேயுள்ளன.இந்நிலையில் அமெரிக்கப் பங்குகளை மிகக் குறைந்த விலைக்கு வாங்கும் வாய்ப்பு முதலீட்டாளர்களுக்குத் தோன்றியுள்ளது. 

அவ்வாறு முதலீடு செய்வதற்காக இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்கனவே முதலீட்டாளர்கள் செய்து வைத்திருந்த கோடிக்கணக்கான டாலர் முதலீடுகளை அவர்கள் இங்குள்ள பங்குகளை விற்று அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்று கொண்டுள்ளனர். 

அதனால் நமது நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறிப்பாக டாலர் கையிருப்பு பெருமளவிற்குக் குறைந்துள்ளது. இவ்வாறு டாலர் கையிருப்புக் குறைந்தால் டாலரின் மதிப்பு உயரும். அப்போது அத்துடனான ரூபாயின் மதிப்பும் குறையும். அவ்வாறு குறைந்துள்ள அன்னிய செலாவணிக் கையிருப்பை அதிகப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கிறது. அதற்கான ஒரு திட்டமாகத் தான் இந்த அன்னிய நேரடி முதலீட்டை அரசு கொண்டுவர உத்தேசித்துள்ளது. 

அன்னிய செலவாணி ஏன் பராமரிக்கப்பட வேண்டும்

இவ்வாறு அன்னிய செலவாணி கையிருப்புக் குறையாமல் வைத்திருக்கப்பட வேண்டும் என்று அரசு கருதக் காரணம் என்ன? அதை அரசு ஏன் எப்படியாவது பராமரிக்க விரும்புகிறது? நமது பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றால் அதற்கு நவீனமயம் மிகவும் அவசியம். 

அப்படிப்பட்ட நவீனமயத்தைக் கொண்டுவர நவீன எந்திரங்கள் அவசியம். நவீன எந்திரங்கள் ஏன் அவசியம் என்றால் அவற்றின் மூலமே பொருட்களின் உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும். அவ்வாறு நமது உற்பத்திச் செலவு குறைக்கப்பட்டால் தான் உலக வர்த்தகத்தில் அன்னிய நாடுகளுடன் போட்டியிட முடியும்; இந்திய முதலாளிகள் அதிக லாபம் ஈட்ட முடியும். 

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் அத்தகைய போட்டியில் இந்தியா ஈடுபட்டுத் தனது வர்த்தகத்தைப் பெருக்க முடியாமல் போனால் கூட நம்மைச் சுற்றியுள்ள ஆசிய நாடுகள் பலவற்றில் அத்தகைய போட்டியில் ஈடுபட்டு வர்த்தகத்தை மேம்படுத்தி அதிகபட்ச லாபம் ஈட்டவாவது நமது முதலாளிகளால் முடியும். 

அத்தகைய நவீனமயத்தைக் கொண்டுவரத் தேவைப்படும் நவீன எந்திரங்களை வாங்க டாலர் போன்ற அன்னிய நாணயக் கையிருப்பு வேண்டும். மேலும் ரூபாயின் மதிப்பு இவ்வாறு தொடர்ச்சியாகக் குறைந்து கொண்டே சென்றால் நாம் உலக வங்கி போன்ற அமைப்புகளிடமிருந்தும் அன்னிய நாடுகளிடமிருந்தும் வாங்கியுள்ள கடன்களின் மதிப்பும் அதிகரித்துவிடும். அந்தச் சுமையும் மத்திய அரசின் தலைமீது ஏறும். 

மேலும் பொருளாதார ரீதியில் வலுவான நாடாக இந்தியா ஆகி வருகிறது என்று காட்டப்படும் தோற்றமும் மங்கிவிடும். 

இந்தக் காரணங்களினால் ரூபாய் மதிப்பை அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது. அதனால் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டைக் கொண்டுவர விரும்புகிறது. 

இரட்டை நிலை

இப்போது நிலவுவது போன்ற ஒரு சூழ்நிலை போராடும் கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது நிலவினாலும் அக்கட்சியும் நிச்சயமாக இந்த நிலையையே எடுக்கும். 

பி.ஜே.பி. கட்சியைப் பொறுத்தவரையில் அதனுடைய பின்பலம் மார்வாடி வர்த்தகர்கள் என்பதால் அவர்கள் இந்த விகிதாச்சாரத்தைச் சற்றுக் குறைத்து வேண்டுமானால் அன்னிய முதலீட்டைக் கொண்டுவர விரும்பி இருப்பர். 

ஆனால் அவர்கள் தற்போது எழுப்பும் எதிர்ப்பையும் கிளப்பும் கூச்சலையும் பார்ப்பவர்களுக்குக் கனவில் கூட இவர்கள் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டார்கள் என்றே தோன்றும். 
ஆனால் அக்கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டைக் கொண்டுவருவதில் மிகவும் ஆர்வம் காட்டினர் என்பதே உண்மை. 

இப்போது எழுப்பப்படுவதைக் காட்டிலும் கூட மிகவும் கூடுதலாக பீதியைக் கிளப்பும் வண்ணம் அப்போது எதிர்ப்புக் கிளம்பியதால் அப்பிரச்னையை அக்கட்சியினர் கிடப்பில் போட்டனர். 

ஏனெனில் பொதுவாகவே பி.ஜே.பி.  காங்கிரஸைக் காட்டிலும் கூடுதலாக அமெரிக்கச் சார்பு மனநிலை கொண்டது என்பதே மக்களிடம் உள்ள கருத்தாகும். எனவே அதைப் பயன்படுத்தி எதிர்ப்பாளர்கள் குறிப்பாக இடதுசாரிக் கட்சியினர் அத்தகைய பீதியை இப்பிரச்னைக்கு எதிராக அன்றைய பி.ஜே.பி. ஆட்சிக்கு எதிராக எழுப்ப முடிந்தது. அதன் விளைவாகவே அது அப்போது கிடப்பில் போடப்பட்டது.

வினோத நிலை

இங்கு நாம் பார்க்க வேண்டிய இன்னொரு வி­சயம் நமது நாட்டின் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காட்டிலும் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை வலுவானதாக இருந்தும் கூட அமெரிக்க நாணயத்தின் மதிப்பு நமது நாணயத்தின் மதிப்பைக் காட்டிலும் கூடி வருவதாகும்.

இதற்குக் காரணம் அமெரிக்க நாணயமான டாலர் உலகின் அனைத்து நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்படும் உலகளாவிய வர்த்தகத்திற்குப் பயன்படுவதாக இருப்பதே. முதலாளித்துவ அமைப்பில் அன்னியச் செலாவணியின் மதிப்பும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததொரு வகையில் தீர்மானிக்கப் படுகிறது. அதாவது அன்னிய செலாவணி கையிருப்பு அதிகமாக இருந்தால் அதன் மதிப்புக் குறையும்; குறைவாக இருந்தால் அதன் மதிப்புக் கூடும். நமது சந்தையில் பயன்பாட்டுப் பொருட்களின் மதிப்பு எவ்வாறு சரக்கு வரத்து மற்றும் தேவை விதிகளை மையமாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறதோ அதே அடிப்படையில் தான் அன்னிய நாணய மதிப்பும் இங்கு தீர்மானிக்கப்படுகிறது. 

இது ஏன் பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று என்றால் பொதுவாக நாணயங்களின் மதிப்பு அதன் மூலம் வாங்கப்பட முடியும் பொருள்களின் மதிப்பை மையமாக வைத்தேத் தீர்மானிக்கப்பட வேண்டும். ரூபாயின் வாங்கும் சக்தி உள்நாட்டில் சிறிதும் குறையாதிருந்தால் கூட அதன் வெளிநாட்டு மதிப்பு அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்தால் கூடிவிடும்; அது குறைந்தால் குறைந்து விடும். 

இந்த வினோதமான நிலையின் காரணமாக இன்னொரு வினோதமான நிகழ்வும் ஏற்படுகிறது. அதாவது நமது நாணய மதிப்புக் குறைந்திருப்பது நமது நாட்டு ஏற்றுமதியாளர்களுக்குச் சாதமான ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது அவர்கள் அன்னிய நாடுகளில் தங்களது பொருட்களை விற்பதால் கிடைக்கும் டாலர் போன்ற அன்னிய நாணயங்கள் இந்திய ரூபாய் மதிப்பில் கூடுதல் வருவாயை அவர்களுக்கு ஈட்டித்தரும். 

அதனால் தான் ரூபாயின் மதிப்பு எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் நமது முக்கிய ஏற்றுமதிப் பண்டங்களில் ஒன்றான துணி ஏற்றுமதியாளர்களுக்கு ஏதாவது ஒரு பெயரில் இந்திய அரசு மானியம் வழங்கி அவர்களது ஆதாயம் குறையாமல் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறது.

ஏகபோகங்கள்

இந்த நிலையில் உண்மையிலேயே அன்னிய நேரடி முதலீட்டின் எதிர்ப்பாளர்கள் கூக்குரல் எழுப்புவது போல் சில்லரை வர்த்தகத்தில் வரும் அன்னிய முதலீடு ஒட்டுமொத்த இந்திய வர்த்தகத்தையும் கடுமையாகப் பாதிக்குமா? 

நமது சில்லரை வர்த்தகம் உள்நாட்டு வர்த்தகத்தில் ஏகபோகப் போக்கு உருவாகும் போதெல்லாம் பாதிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளது. 

ஆனால் இந்த அமைப்பில் வர்த்தகத்தில் மட்டுமல்ல தொழில் துறையிலும் ஏகபோகங்கள் உருவாவது தவிர்க்க முடியாதது. அதனால் தான் யார் கண்ணிலும் படாமல் கூட சரவணா ஸ்டோர்ஸ், சுபிக்ஸா போன்ற ஒரு கூரையின் கீழ் அனைத்துப் பொருட்களையும் வாங்கலாம் என்ற வகையிலான கூடுதல் முதலீட்டில் நடத்தப்படும் உள்நாட்டுக் கடைகள் தோன்றின. 

அந்த உள்நாட்டு ஏகபோக வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களான ரிலெயன்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது கடைகளை இங்கு நிறுவ முன்வந்தன. 

அவ்வாறு அவை நிறுவ முன்வந்ததற்கும் குறிப்பான காரணங்கள் உண்டு. உள்ளபடியே இந்நிறுவனங்கள் அனைத்து அம்சங்களிலும் ஏகபோக நிறுவனங்களாக விளங்கின. அவற்றின் விற்பனைப் பொருட்களை அவை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தன. அனைத்து வகைகளிலும் மிகப்பெரும் மூலதனத்தை அந்நிறுவனங்கள் வர்த்தகத்தில் இறக்கின. 

பலகாலம் சில்லரை வர்த்தகத்தைக் கண்டு கொள்ளாதிருந்த ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் அதில் இறங்கியதற்கு முக்கியக் காரணம் உலகமயப் பின்னணியில் 20 சதவிகித இந்திய மக்களிடையே திடீரெனக் கூடிய வாங்கும் சக்தியாகும். 

அதாவது அந்த வாங்கும் சக்தியை கொண்டுள்ளவர்களுக்குக் கூடுதல் வசதிகள் செய்து கொடுத்து அதனைப் பயன்படுத்திச் சம்பாதிப்பதற்காகவே இந்நிறுவனங்கள் தோன்றின. 
அக்கடைகளில் சென்று பொருள் வாங்குபவர்கள் வாங்கும் சக்தி அதிகரித்த அந்த 20 சதவிகிதத்தினர் மட்டுமே. அது போக மீதமுள்ள 80 சதவிகித மக்கள் 10, 20 ரூபாய்களைக் கையிலெடுத்துக் கொண்டு கடைக்குச் சென்று அன்றாடம் பொருள் வாங்கும் நிலையில் உள்ளவர்கள் அவர்கள் அக்கடைகளின் பக்கம் செல்வதும் இல்லை;  அவை அம்மக்கட் பகுதியினரைத் தங்களது இலக்காகக் கொண்டிருக்கவுமில்லை.

80% மக்களுக்கான சில்லரை வர்த்தகத்தைப் பாதிக்காது

எனவே அந்த மக்களை இலக்காகக் கொண்டிருக்கக் கூடிய சிறு வர்த்தகம் அன்னிய முதலீட்டின் வரவால் பெரும்பாலும் பாதிக்கப்படப் போவதில்லை. 
இப்போது அன்னிய நேரடி முதலீடு சில்லரை வர்த்தகத்தில் வருகிறதென்றால் அதனால் பாதிக்கப்படப் போவது ரிலெயன்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்களே தவிர இன்று கடையடைப்புச் செய்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ள சாதாரண வியாபாரிகள் அல்ல. 

இந்த யதார்த்தமான புரிதல் இன்றி இக்கட்சிகள் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இப்போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளன. அதாவது ஆளும் கட்சியை அடிப்பதற்கு எந்த ஆயுதம் கிடைத்தாலும் பரவாயில்லை அதைக் கொண்டு அடிப்போம் என்ற அடிப்படையில் இப்பிரச்னையை இவ்வளவு தூரம் கையில் எடுத்துள்ளன.

கூடுதல் விலைக்கு விற்றால் யார் வாங்குவார்

முதலாளித்துவத்தின் அடிப்படை விதி போட்டியே விலையை நிர்ணயிக்கிறது என்பதாகும். விலை நிர்ணயமே வியாபாரத்தின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் தீர்மானிக்கவல்லது. 

அப்படியானால் அன்னிய நேரடி முதலீட்டில் சில்லரை வர்த்தகத்தில் தலைதூக்கும் நிறுவனங்கள் விலையைக் கூட்டி பொருட்களை விற்றால் நாளடைவில் அவை அவற்றின் கடைகளை மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அவற்றின் அளவிற்கு இந்தியப் பெரு வர்த்தகம் பொருட்களை குறைத்து விற்காமல் போனால் தான் அவை நெருக்கடியைச் சந்திக்க வேண்டிவரும். 

அவ்வாறு பொருட்களை அன்னிய நேரடி முதலீட்டில் வரும் நிறுவனங்கள் குறைத்து விற்றால் அதனால் பலனடையப் போவது இந்திய வாடிக்கையாளர்களே. 

அதாவது ரிலெயன்ஸ் அம்பானியும், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளின் அதிபதிகளும் அவர்கள் இந்தியர்களாக இருப்பதால் அவர்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கூட அவர்களது பொருள்களை வாங்கிப் பயன்படுத்துபவர்களாக இந்தியாவின் 20 சதவிகித வாங்கும் சக்தியுள்ள மக்கள் இருக்க வேண்டும் என்பது இவர்களின் எண்ணமா? இக்கேள்வி தவிர்க்க முடியாமல் பகுத்தறிவுள்ள எந்த மனிதனின் மனதிலும் எழவே செய்யும். 

அன்னிய முதலீடு அடிமையாக்குமா?

தாங்கள் ஆட்சியில் இருந்தால் இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வோம் என்பதைச் சிந்திக்காமல் ஆளும் கட்சிக்கு எதிராகத் தங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படும் பி.ஜே.பி. போன்ற கட்சிகளைத் தவிர இடதுசாரிக் கட்சிகள் என்று அறியப்படும் கட்சிகள் வேறொரு வாதத்தை அவர்களது அணிகளிடம் எடுத்துக் கூறி அவர்களை இப்போராட்டத்தில் ஈடுபடச் செய்கின்றன. 

அவற்றின் வாதம், இவ்வாறு ஒவ்வொன்றிலும் அன்னிய முதலீடுகளை அனுமதித்துக் கொண்டிருந்தால் ஒருநாள் மீண்டும் நமதுநாடு அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு அடிமையாகிவிடும் என்பதாகும். 

அவ்வாறு அவர்கள் எழுப்பும் வாதத்தில் பொருத்தம் இருந்தால் தன்னைச் சுற்றியுள்ள சிறு நாடுகள் பலவற்றிற்கு நமது நாட்டு முதலாளிகளின் மூலதனத்தைக் கொண்டு செல்வதில் அக்கறையும் முன்முயற்சியும் எடுக்கும் போது இந்திய அரசையும் அவர்கள் கண்டிக்க வேண்டும் அல்லவா? 

ஏனெனில் இவ்வாறு தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் இந்திய முதலாளிகளின் முதலீடுகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் அவர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவும் ஒரு ஏகாதிபத்தியமாகி அவர்களை ஏதாவது ஒரு வகையில் அடிமைப்படுத்த முயலும் நாடாக ஆகிவிடும் வாய்ப்பு உள்ளதல்லவா? 

அவர்கள் நியாயமானவர்களாக இருந்தால், வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வைத் தட்டியெழுப்பி விடுதலை பெற்ற நமது மக்கள் நமது நாட்டிடமும் அத்தகைய ஏகாதிபத்தியப் போக்கு வளர்வதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்ற நிலையினை எடுக்க வேண்டும் அல்லவா? 

அவ்வாறு எடுக்கவில்லையயனில் அது சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு இரட்டை நிலைதானே? ஆனால் இதுபோன்ற சரியான நிலையை இந்திய வர்த்தகர்கள் மற்றும் முதலாளிகள் விசயத்தில் ஒருபோதும் இந்த இடதுசாரிக் கட்சிகள் எடுத்ததில்லை. 

இதுபோன்ற கேள்விகள் எழும் போதெல்லாம் அவர்களுடைய வாதம் அளவு ரீதியில் அமெரிக்கா இந்தியாவைப் போல் எத்தனை மடங்கு பொருளாதார ரீதியாக வளர்ந்த சக்தி என்பதாகவும், அவர்களுடைய மூலதனம் மிகப் பெரிய அளவில் வேறு நாடுகளுக்குச் செல்வதற்கும் அதனுடன் ஒப்பிடுகையில் நமது மூலதனம் சிறிய அளவில் செல்வதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்ற அளவு ரீதியான வேறுபாட்டை மையமாகக் கொண்டதாக மட்டுமே உள்ளது. 

வறட்டு வாதம்

மேலும் ஏகாதிபத்தியம் என்பதற்கு மார்க்சியம் கற்றுத்தந்த அந்த வரையறையை அளவு கோலாகக் கொண்டிராமல் குருட்டுத்தனமான வறட்டுச் சூத்திரவாதப் போக்கில் ஏகாதிபத்தியம் என்றால் அமெரிக்கா, அமெரிக்கா என்றால் ஏகாதிபத்தியம் என்ற மனநிலையை அக்கட்சிகளின் அணிகளிடையே ஏற்படுத்துகின்றன. அதில் தங்களது சந்தர்ப்பவாத குருட்டுத்தனமான தேசியவாத அரசியலை மூடிமறைக்கின்றன. 

நமது வர்த்தகத்தில் இனிமேல் தான் வால் மார்ட் போன்ற நிறுவனங்கள் தலைதூக்கப் போகின்றன. ஆனால் நேபாளம் போன்ற நாடுகளின் வர்த்தகம் முழுமையுமே ஏறக்குறைய இந்திய வர்த்தகர்களின் கரங்களிலேயே உள்ளது. 

இதுபோன்ற கண்ணை உறுத்தும் கேள்விகளுக்கும் பதில் கூற வேண்டியது தங்களது கடமை என்று இந்திய தேசியவாத இடதுசாரிகள் எண்ணுவதில்லை. 

அதாவது அமெரிக்க வர்த்தகம் இங்கு வரும்போது மட்டும் அன்னிய மூலதனம் நாட்டை அடிமைப்படுத்தும் என்ற நிலைபாட்டை முன்வைக்கும் இவர்கள் எந்தவொரு நாட்டின் மூலதனம் வேறொரு நாட்டிற்குள் சென்றாலும் அந்த மூலதனம் அந்த நாட்டின் அரசியல் விவகாரங்களில் தலையிடுவது உட்பட அனைத்து விரும்பத்தகாத வேலைகளையும் அதாவது அந்நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கக் கூடிய வேலைகளையும் செய்யும் என்பதைச் சுட்டிக் காட்டுவதில்லை. 

ஏகாதிபத்தியங்கள் ஒருகால கட்டத்தில் காலனிகளை ஏற்படுத்திச் சுரண்டக் கூடிய தன்மை பெற்றவைகளாக இருந்தன. அவ்வாறு உலக நாடுகளைத் தங்களுக்கிடையில் பங்கு போட்டுக் கொள்ளவே அவை முதல் இரண்டு உலகப் போர்களையும் தோற்றுவித்தன. 

ஆனால் இரண்டாவது உலகப் போரின் முடிவில் தோன்றிய சோசலிச முகாம் பல்வேறு காலனிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. முன்னாள் காலனி நாடுகளில் பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. அந்த நாடுகளில் சுதந்திரம் பெற்ற சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்த அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து உள்நாட்டு முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்தன. 

அதனால் இந்தியா போன்ற பெரிய நாடுகள் அச்சூழ்நிலையில் எத்தனை அதிகபட்ச வளர்ச்சியைச் சாதிக்க முடியுமோ அத்தனை அதிகபட்ச வளர்ச்சியைச் சாதித்தன. 

ஏகாதிபத்திய நாடுகளும் அமெரிக்காவிடமிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு போர்கள் மூலம் புதுக் காலனிகளை ஏற்படுத்தும் அந்நாடுகளின் பழைய போக்கை மறுபரீசீலனை செய்தன. 

அது இனிமேல் அந்நாடுகளின் முதலாளிகளுக்குப் பெரிய வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தராது என்பதைப் புரிந்து கொண்டன. அதாவது இரண்டு போர்களிலும் நேரடியாக ஈடுபடாமல் பெரும்பாலும் ஆயுத வியாபாரத்தை மட்டும் செய்து பொருளீட்டிய அமெரிக்க முதலாளிகளின் எளிதாக லாபம் ஈட்டும் போக்கைப் பிற ஏகாதிபத்திய நாடுகளும் கற்றுக் கொண்டன. 

அதன் விளைவாக உருவானதுதான் ஒப்பந்தங்கள் போட்டு அதன்மூலம் தங்கள் நாட்டு முதலாளிகளின் லாபம் அதிகரிக்க வளர்ச்சியடைந்த நாடுகள் அனைத்தும் பின்பற்றத் தொடங்கிய வழிமுறையாகும். 
அதாவது முழுக்க முழுக்க கச்சாப் பொருட்களின் ஏற்றுமதியை நம்பியே இருக்கக் கூடிய நாடுகள், கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்து ஆலைப் பொருட்களாக அவற்றை மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்து பெரும் பொருளீட்டிய ஏகாதிபத்திய நாடுகள் என்ற இரண்டாவது உலக யுத்தத்திற்கு முன்பிருந்த சூழல் பெரிய மாற்றம் கண்டது. 
அந்தப் போக்கு உலக வர்த்தக அமைப்பின் உலகமயமாக்கல் ஒப்பந்தம் வந்த பின்பு இன்னும் கூடுதலாக அதிகரித்தது. 

அதாவது உலகமே முதலாளித்துவ உற்பத்தியின் சந்தையாக மாற்றப்பட்டது. சோசலிச முகாமின் வீழ்ச்சி, உலகம் முழுவதும் ஒரு குடையின் கீழ் அதாவது முதலாளித்துவ அமைப்பின் கீழ் என்ற சூழ்நிலை ஆகியவை அந்த வளர்ச்சிப் போக்குக்குப் பேருதவி செய்தன. 

அதாவது உலக நாடுகள் அனைத்துமே உலகச் சந்தையில் தங்களது பொருட்களில் எவற்றையாவது விற்பவையாகவும் பிற நாடுகளின் பொருட்களை தங்கள் நாட்டு மக்களின் உபயோகத்திற்கென்று வாங்குபவையாகவும் ஆகிவிட்டன. 

அதுமட்டுமின்றி உழைப்புத் திறனும் உலகச் சந்தையின் சரக்காக ஆகிவிட்டது. அதன் விளைவாக முதலாளித்துவ ரீதியில் உலகம் எத்தனை அதிகபட்ச வளர்ச்சியை ஒரு சமயத்தில் எட்ட முடியுமோ அந்த வளர்ச்சியைத் தற்போது எட்டியுள்ளது. 

அதாவது மலிவாக உழைப்புத்திறன் கிடைக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அன்னிய மூலதனம் வருவது ஒருபுறமும், அதே சமயத்தில் இந்தியாவின் 20 சதவிகித மக்களின் வாங்கும் சக்தியைப் பயன்படுத்திச் சம்பாதிக்க வேண்டும் என்ற சூழ்நிலை பல பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு மறுபுறமும் தோன்றியுள்ளன. 

அமெரிக்க நெருக்கடி

மிகக் குறைந்த ஜனத்தொகையை வைத்துக் கொண்டு உலக உற்பத்தியின் மிக அதிகப் பயன்பாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தும் நிலையிலிருந்த அமெரிக்கா அந்நாட்டு மக்களின் வேலை வாய்ப்பைப் பறித்துக் கூடுதல் லாபம் கருதி தொழில்களைப் பிற நாடுகளுக்கு எடுத்துச் சென்றது. 

அதன் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக அதிகரித்துள்ள நாடாக அது ஆகியுள்ளது. அதனால் அந்நாட்டு மக்கள் வாங்கும் சக்தியை இழந்து நிற்கின்றனர். 
அந்நிலையில் அதன் வர்த்தக நிறுவனங்கள் அவற்றின் விற்பனைப் பொருட்களைச் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி இந்தியாவிற்குக் கொண்டுவர விரும்புகின்றன. இதுவே இன்றுள்ள நிலையாகும். 

அதாவது உலக நாடுகளின் சந்தை உலகமயத்தினால் எப்படி உலகளாவியதாக மாறியதோ அதேபோல் நெருக்கடியும் உலகமயமாகியுள்ளது.  

அதாவது முன்பெல்லாம் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்றுமதி குறைவாகவும் இறக்குமதி அதிகமாகவும் இருப்பதால் ஏற்படும் நெருக்கடி, உள்நாட்டுச் சந்தையின் சுருக்கத்தின் காரணமாகத் தோன்றும் வேலையின்மை சார்ந்த நெருக்கடி போன்ற நெருக்கடிகளால் பின்தங்கிய நாடுகள் பெருமளவில் பாதிப்பில் இருந்தன. 

தற்போது வேலையின்மை, அன்னியக்கடன் ஆகிய நெருக்கடிகள் முன்னேறிய நாடுகளில் அந்நாடுகள் தலைதூக்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாட்டு மக்கள் சந்திக்கும் நெருக்கடி இன்னும் கூடுதலாக ஆகியுள்ளது. 
இந்நிலையில் சில்லரை வர்த்தகத்திற்கான 51 சதவிகித நேரடி முதலீடு அந்நாட்டு பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக ஆகியுள்ளது. அவர்கள் வருவதால் அதனை இந்தியாவின் வர்த்தகர்கள் பயன்படுத்த முடியாமல் போகலாம். ஆனால் இந்திய முதலாளிகளும் இந்தியாவைக் காட்டிலும் பின்தங்கிய நாடுகளுக்குத் தங்கள் மூலதனத்தையும், வர்த்தக நிறுவனங்களையும் கொண்டு சென்று கொண்டேயிருப்பர். 

அமெரிக்க வர்த்தகர் மற்றும் முதலீட்டாளர்கள் நலனைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க அரசு எப்படியயல்லாம் இந்திய அரசிடம் செல்வாக்கு செலுத்துமோ அதைப் போல் இந்திய அரசும் அதன் மூலதனம் சென்றுள்ள நாட்டு அரசுகளிடம் செல்வாக்கு செலுத்தும். இது இவர்கள் கூறுவது போல் முதலீடு 100 சதவிகிதமாகி படிப்படியாக ஆகி அவர்களுக்கு நாம் அடிமையாவதில் சென்று முடியுமா என்பதை நாம் பார்க்க வேண்டும். 

இந்தியாவும் ஏகாதிபத்தியக் கூறுகள் கொண்டதே

இதன் பொருள் அமெரிக்கா அதன் ஏகாதிபத்தியத் தன்மையை இழந்துவிட்டது என்று கூறுவதாகாது. அமெரிக்கா மட்டுமல்ல மார்க்சியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்தியா உள்பட இன்னும் பல நாடுகளும் அதாவது பின்தங்கிய நாடுகள் என்று ஒரு காலத்தில் அறியப்பட்டவையும் ஏகாதிபத்தியத் தன்மை பொருந்தியவையாகத் தற்போது ஆகியுள்ளன. 

ஏகாதிபத்தியம் யுத்தங்களை உருவாக்கும்; அமைதி அவற்றிற்கு அழிவைக் கொண்டுவரக் கூடியது என்ற மார்க்சிய கண்ணோட்டங்கள் மாறிவிட்டன என்பதும் இதன் பொருளல்ல. 
ஆனால் உலக அளவில் நாடுகளை மறுபங்கீடு செய்து கொள்ளும் அளவிற்கு உலகளாவிய போரில் ஈடுபட வேண்டிய சூழலில் அவை இல்லை. ஏனெனில் அவ்வாறு ஈடுபட்டுப் பின்தங்கிய நாடுகளின் வளங்களைப் பயன்படுத்திப் பொருளுற்பத்தி செய்து தங்கள் நாடுகளில் விற்பதற்கோ அல்லது பிறநாட்டு சந்தைகளில் கொண்டு சென்று விற்று அதிக ஆதாயம் பெறுவதற்கோ ஏற்ற சூழலில் இப்போது முதலாளித்துவ உலகமே இல்லை. 

ஏனெனில் உலகெங்கிலும் முதலாளித்துவம் ஒவ்வொரு நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் எவ்வளவு வளர முடியுமோ அவ்வளவு வளர்ந்துவிட்டது. 

பிராந்தியப் பூசல்களும் சண்டைகளும்

எனவே உலகளாவிய போர்களைக் கொண்டுவரும் நிலையில் ஏகாதிபத்தியங்கள் இல்லை. ஆனாலும் ஆங்காங்கே சிற்சில பிராந்திய ரீதியிலான போர்களையும் பூசல்களையும் கொண்டுவருவது அவற்றிற்கு அவசியமாக உள்ளது. 

ஏனெனில் அச்சூழ்நிலை நிலவினால் தான் அமெரிக்கா போன்ற நாடுகளின் யுத்தப் பொருளாதாரம் அதாவது ஆயுதத் தயாரிப்பை மிக அதிகமாகக் கொண்டுள்ள அதன் பொருளாதாரம் நீடிக்க முடியும். எனவே தான் குறிப்பாக எண்ணெய்வள நாடுகளின் மீது நேரடி மறைமுக அச்சுறுத்தல் யுத்தங்களை அது நடத்திக் கொண்டுள்ளது. 

இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு அம்சம் அந்த முயற்சியில் வளர்ந்துவரும் ஏகாதிபத்திய நாடு என்ற ரீதியில் இந்தியாவை அது தனது இளைய பங்காளியாக ஆக்கிக் கொண்டுள்ளதாகும். அந்தப் பின்னணியில் தான் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது; உலக நாடுகள் அனைத்திடமும் வலியுறுத்திய நிபந்தனைகளை வலியுறுத்தாமல் அமெரிக்க அரசு இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 

இந்நிலையில் இவ்வாறு அமெரிக்க மூலதனத்தின் வருகை இந்தியாவின் வர்த்தகத்தை நிர்மூலமாக்கிவிடும்; படிப்படியாக இந்தியா இன்னும் ஒருமுறை அடிமை நாடாக அதாவது அமெரிக்காவின் அடிமை நாடாக ஆகிவிடும் என்று கூறுவதெல்லாம் யதார்த்தத்திற்குப் பொருந்தாக பூதக் கற்பனைகளாகும். 

தேசிய வெறிவாதம்

இங்குக் குறிப்பாக நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு போக்கு இடதுசாரிக் கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளாலும் விசிறிவிடப்படும் குருட்டுத்தனமான தேசிய வெறிவாதமாகும். 

தேசிய வாதம் இன்று தனது முற்போக்குத் தன்மையை இழந்துவிட்டது மட்டுமல்ல குருட்டுத்தனமான வெறிவாதத்தை விசிறிவிடும் தன்மை கொண்டதாகவும் ஆகிவிட்ட அது பாசிஸம் வருவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்நிலையில் அதனை அம்பலப்படுத்த வேண்டிய இடதுசாரிக் கட்சிகளே நாடாளுமன்ற அரசியல் லாபத்திற்காக அதனை விசிறிவிடும் வரலாற்றுத் தவறினைச் செய்து கொண்டுள்ளன. 

எதிர்க்கட்சி அரசியல்
எனவே முதலாளித்துவ உற்பத்தி முறையில் சிறு மூலதனம் அழிந்து பெரு மூலதனம் அதனை அபகரிப்பது என்ற வளர்ச்சிப் போக்கின் அடிப்படையிலேயே இன்று இந்த சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டின் வருகை அமைந்துள்ளது. 

இந்தப் போக்கை மத்திய அரசிற்கு எதிராகப் பயன்படுத்தி முதலாளித்துவ எதிர்க்கட்சி அரசியல் செய்ய முடியுமே தவிர சமூகமாற்ற அரசியல் செய்ய முடியாது. 

ஏனெனில் இதனால் பாதிக்கப்படப் போவது 80 சதவிகித மக்களுக்கான வர்த்தகத்தில் ஈடுபடும் சிறு வியாபாரிகளாக இருக்கப் போவதில்லை. அப்படியே ஒரு பாதிப்பு வந்தாலும் அது ரிலையன்ஸ், பாந்தலூன், ஆதித்யா பிர்லா போன்ற குழுமங்களினால் சிறு வர்த்தகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை ஒத்த வகையிலேயே இருக்கும். 

வாங்கும் சக்தியுள்ள 20 சதவிகித மத்தியதர வர்க்கத்தைப் பொறுத்தவரையிலும் அவர்களின் கருத்தாக இருக்கப் போவது எந்தக் கடையில் குறைந்த விலைக்குப் பொருளை வாங்க முடியுமோ அந்தக் கடையில் வாங்குவோம் என்பதாகத் தான் இருக்கப் போகிறது. 

மேலும் தவிர்க்க முடியாமல் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் வர்த்தகத்தில் தோன்றி வளர்ந்து வரும் இந்தப் போக்கிலும் சில சாதக அம்சங்கள் உழைக்கும் வர்க்க அமைப்புகளைப் பொறுத்தவரையில் நிச்சயம் இருக்கவே செய்யும். 

நூற்றுக் கணக்கில் இந்தக் கடைகளில் தொழிலாளர் வேலைக்கு அமர்த்தப்படும் சூழல் இதன்மூலம் உருவாகும். அவர்களை அணிதிரட்டுவது முதலாளித்துவச் சுரண்டலை அம்பலமாக்குவது அதன்மூலம் சமூகமாற்ற இயக்கங்களுக்கு உருக்கொடுப்பது ஆகியவற்றைச் செய்வதை அது இன்னும் கூடுதலாகச் சாத்தியமாக்கும். எனவே இந்த வி­சயத்தில் நாம் பார்க்க வேண்டியது வர்த்தகம் என்ற பெயரில் நடைபெறும் கொள்ளைக்கு எதிராக அதாவது பொருட்களின் தரத்தை அதிகரிக்காமல் அவற்றின் விலையை மட்டும் கூட்டி விற்கும் இடைத்தரகர் அமைப்பே படிப்படியாக இல்லாமல் செய்யும் அந்த நடவடிக்கையில் மக்களை ஈடுபடுமாறு அறைகூவல் விடுப்பதே தவிர நம்மை இந்தியக் கடைக்காரன் கொள்ளையடித்தால் பரவாயில்லை அன்னியக் கடைக்காரன் கொள்ளையடிக்கக் கூடாது என்று கூறுவதல்ல.

No comments:

Post a Comment