பொறியியல்
கல்வி பெற்றிருந்தும் வேலையின்றியும் கட்டுபடியான சம்பளமின்றியும் அல்லல்படும் தொழிலாளருக்கு
ஓர் அறைகூவல் - இஞ்னியரிங்
ஒர்க்கர்ஸ் யூனிட்டி சென்டர் சார்பாக
- தோழர் கதிரேசன் (பொறுப்பாளர் சி.ஒ.ஐ.டி.யு.)
தங்களது
பிள்ளைகளைப் பொறியியல் கல்வி கற்றவர்களாக ஆக்கிய பெற்றோர் பூரித்திருந்த காலம் என்று
ஒன்று இருந்தது. பொறியியல் கல்வி வழங்கிவிட்டால் அப்பிள்ளைகள் குறித்துக் கவலைப்பட
ஏதுமில்லை; அவர்களின் எதிர்காலம் நிச்சயமானதாக ஆகிவிடும் என்று அவர்கள் கருதினர். ஆனால்
இன்று பொறியியல் பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்ற மாணவர்களின் நிலை தலைகீழாக மாறியுள்ளது.
ஒருபுறம்
கலைக் கல்லூரிகளைக் காட்டிலும் பல மடங்கு ஆகிவிட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்
கல்லூரிகளில் பட்டம் பெற்று வருபவர்களில் ஒரு 10 சதவிகிதம் பேர் லட்சக்கணக்கில் ஊதியம்
பெறுபவர்களாகவும் மீதமுள்ளோர் அனைவரும் உடல் உழைப்பு செய்வோரைக் காட்டிலும் குறைந்த
ஊதியம் பெறுவோராகவும் ஆகியுள்ள அவலநிலை தோன்றியுள்ளது.
உண்மையிலேயே
கட்டிடத் தொழிலில் கட்டுமான் பெறும் ஊதியத்தைக் காட்டிலும் மிகக் குறைந்த ஊதியமே சென்னை
போன்ற நகரங்களில் வேலை செய்யும் பொறியியல் கற்ற தொழிலாளருக்குக் கிடைக்கிறது. ஒரு காலத்தில்
இப்படியொரு நிலை உருவாகும் என்று யாரேனும் கூறியிருந்தால் அதை ஒருவரும் நம்பியிருக்க
மாட்டார்கள். ஆனால் இன்று அது அனைவரும் கண்ணிலும் படும் அதிர்ச்சிதரத்தக்க உண்மையாக
மாறியுள்ளது.
இந்த
சமூகத்தில் மனிதனின் உழைப்புத் திறனும் ஒரு சந்தைச் சரக்காகவே உள்ளதால் சந்தைச் சரக்கின்
விதியே உழைப்பாளர் பெறும் ஊதியத்தையும் தீர்மானிப்பதாக உள்ளது. உலகமயப் பின்னணியில்
பொறியியல் கல்லூரிகளும் தொழில்நுட்பப் பயிற்றகங்களும் மிக அதிகமாகப் பல்கிப் பெருகி
உள்ளதால் அதிலிருந்து பட்டம் சான்றிதழ் பெற்று வரும் மாணவர் எண்ணிக்கை மிக அதிகமாக
உள்ளது.
வேலைச்
சந்தையில் அந்த ரக உழைப்புத் திறன் ஏராளமாகக் கிட்டுவதால் அதற்குக் கிடைக்கும் விலை
அதாவது ஊதியம் மிகக் குறைவாக உள்ளது. அதே சமயத்தில் கட்டுமான் போன்ற உடல் உழைப்பு செய்பவரின்
எண்ணிக்கை அதற்கிருக்கும் தேவையைக் காட்டிலும் குறைவாக இருப்பதால் அவர்களது ஊதியம்
ஒப்புநோக்குமிடத்து அதிமாக உள்ளது.
உலகமயப்
பின்னணியில் முதலில் தகவல் தொழில்நுட்பத் தொழில்களும் அதன் பின்னர் படிப்படியாக உற்பத்தித்
துறை சார்ந்த தொழில்களும் உலகின் முன்னேறிய நாடுகளில் இருந்து நமது நாட்டிற்கு வரத்
தொடங்கின.
தகவல்
தொழில்நுட்பத் தொழில்களை வேற்றிட வேலை வாய்ப்பு அடிப்படையில் இங்குள்ள முதலாளிகள் பெற்று
ஆதாயம் ஈட்டினர். உற்பத்தித் துறைகளைப் பொறுத்தவரையில் பல தொழில்கள் உலக நாடுகளில்
இருந்து இங்கு இடம் பெயர்ந்தன. அவ்வாறு உலகின் முன்னேறிய நாடுகளின் முதலாளிகள் தங்கள்
தொழில்களைப் பிற நாடுகளில் நடத்த முனைவதற்குக் காரணம் அவ்வாறு அத்தொழில்களை நடத்துவதன்
மூலம் மிக அதிகபட்ச லாபத்தை நமது நாடு போன்ற நாடுகளின் மலிவான விலைக்குக் கிடைக்கும்
உழைப்புத் திறனைப் பயன்படுத்தி அவர்கள் பெறலாம் என்பதுதான். இவ்வாறு வேற்றிட வேலை வாய்ப்புகளைப்
பெறும் முதலாளிகள் ஏராளமான லாபத்தை ஈட்டிக் குவிக்கின்றனர்.
அதற்கான
காரணம் அந்நிய முதலாளிகள் அவர்களது நாடுகளில் இந்த வேலைகளை வழங்கினால் ஒருவருக்கு என்ன
ஊதியம் தருவார்களோ அந்த ஊதியத்தைக் கணக்கிட்டு ஏறக்குறைய அதன் அடிப்படையிலேயே அந்தத்
தொழில்களை இங்குள்ள முதலாளிகளுக்கு வழங்குகின்றனர்.
அதாவது
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் ஒருவருக்கு 5000 டாலர்கள் ஊதியம் அமெரிக்காவில்
வழங்கப்படுகிறது என்றால் ஏறக்குறைய அதே அளவு தொகையையே ஒரு தகவல் தொழில்நுட்பத் தொழிலாளி
ஒரு மாதத்தில் செய்யும் வேலையைப் பெறுவதற்காக அந்நிய முதலாளிகள் வழங்குகின்றனர். அத்தொகையைக்
கணக்கிட்டால் அது தற்போது இந்திய நாணய மதிப்பில் 2,50,000 ரூபாய் என்ற அளவிற்கு வரும்.
ஆனால் இங்குள்ள முதலாளிகள் அந்த அடிப்படையில் ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு அதில் ஒரு
மிகச் சிறிய பகுதியையே இங்கு தொழிலாளர்களுக்கு ஊதியமாக வழங்கிவிட்டு மீதியை லாபமாக
ஈட்டுகின்றனர்.
பெரிய
நிறுவனங்கள் சராசரியாக 20,000 ரூபாய் மாத ஊதியம் என்ற அளவிற்கு அவர்களிடம் வேலை செய்யும்
தகவல் தொழில்நுட்பத் தொழிலாளருக்கு வழங்குகின்றன என்றால் சிறிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்
இன்னும் குறைந்த கூலிக்கே அவ்வேலையைப் பெறுகின்றனர்.
இதனால்
தான் தகவல் தொழில்நுட்பத் தொழிலைச் செய்யும் நிறுவனங்களின் லாபம் பலமடங்கு அதிகரித்துள்ளது.
அதன் விளைவாக இந்தியாவின் பெரு முதலாளிகள் அனைவருமே அத்தொழிலில் முதலீடு செய்து அதனை
நடத்துபவர்களாக மாறியுள்ளனர்.
மேலே
விவரித்த பின்னணியில் பெருமளவு லாபம் ஈட்டும் வாய்ப்பு முதலாளிகளுக்குக் கிடைத்துள்ள
நிலையில் அதனை வளர்ச்சி என்று கருதி அந்த வளர்ச்சியை மென்மேலும் மேலோங்கச் செய்ய வேண்டும்
என்ற எண்ணத்துடன் நமது மத்திய மாநில அரசுகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றை
ஏற்பாடு செய்து அவற்றின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கின்றன. சலுகை விலையில் இடம்,
மின்சாரம் போன்ற ஆதார வசதிகள் அனைத்தையும் அந்நிறுவனங்களுக்கு வழங்குகின்றன.
அத்துடன்
அச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உற்பத்திக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்ற
அடிப்படையில் அங்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையையே மறுக்கின்றன. அவ்வாறு அங்கு மறுக்கப்படும்
தொழிற்சங்க உரிமை படிப்படியாகச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைச் சேராத பிற நிறுவனங்களுக்கும்
பரவி எங்குமே தொழிற்சங்கம் என்பது அறவே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது
வேலை செய்யும் தொழிலாளரின் குரல்வளையை நெறுக்கி அவர்களது வேதனைக் குரலே வெளிவராமல்
செய்துவிட்டுத் தொழில் அமைதியை அரசுகள் முதலாளிகளுக்குப் பராமரித்துக் கொடுக்கின்றன.
இதனைத்
தங்களுக்குச் சாதகமாக முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு உழைப்புத் திறனின் வரவு சந்தையில்
அதிகமாக அதிகமாக ஊதிய விகிதங்களைத் தரைமட்டமாக அது மூன்று வேளை உணவுக்கு மட்டுமே போதுமானதாக
இருக்குமளவிற்கு குறைத்து முதலாளிகள் பெருலாபம் ஈட்டுகின்றனர். அதன் விளைவே தொழிலாளர்
பெறும் இத்தனை குறைந்த கூலி.
கூலி
குறைவாக இருப்பது மட்டுமல்ல அவர்களது வேலைச் சூழ்நிலைகளும் மிகக் கொடுமையாக உள்ளன.
8 மணிநேர வேலை என்பது எங்கும் நிலவாத சூழ்நிலையே உருவாகியுள்ளது. அவர்களுக்கு வழங்கியுள்ள
வேலையை முடித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதே நியதியாக உள்ளது.மேலும் எள்ளளவு கூட
வேலைப் பாதுகாப்பு என்பது உத்திரவாதம் செய்யப்படாத நிலையே இந்த நிறுவனங்களில் அனைவரையும்
அலைக்கழிக்கிறது.
அதாவது
தான் பெறுவதைக் காட்டிலும் குறைந்த ஊதியத்தில் வேலை செய்வதற்குப் புதிதாகப் படித்த
ஒருவன் வருகிறான் என்றால் அவனை வேலைக்கு வைத்துக் கொண்டு தன்னை வேலையைவிட்டுத் தூக்கி
விடுவார்கள் என்ற கொடூரமான நிலையே நிலவுகிறது.
அனைவருக்கும்
பொதுவானதாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கமோ நடக்கும் இந்தக் கொடுமை அனைத்தையும்
கண்டுகொண்டும் கூட அந்நிய மூலதன வரவு, தொழில் வளர்ச்சி என்ற வாதங்களை முன்வைத்து நிறுவனம்
அடையும் லாபத்தில் மிகமுக்கியப் பங்குதாரர் தொழிலாளரே என்ற யதார்த்த நிலையைப் பார்க்கத்
தவறி அவர்களது உழைப்பைக் கடுமையாகச் சுரண்டி முதலாளிகள் பெரும் லாபம் ஈட்ட வழிவகுத்துக்
கொடுக்கிறது.
தொழிலாளர்களுக்கென்று
அமைப்பேதும் இல்லாத நிலை இந்தப் போக்கிற்கு மிகவும் உகந்ததாக உள்ளது. அவ்வாறு அமைப்பெதையும்
ஏற்படுத்த முனையும் போது இந்த ‘நடுநிலை’ அரசாங்கங்களின் அடக்குமுறைக் கருவிகள் தொழிலாளர்
மீது சீறிப் பாய்கின்றன.
காலங்காலமாக
இந்தக் கொடிய நிலையில் வேலை செய்யும் தொழிலாளர் இவ்வாறே வேலை செய்து ஓய்ந்து போக முடியுமா?
விற்காததையெல்லாம் விற்று பிள்ளைகளைப் பொறியியல் கல்வி போன்ற செலவு மிகுந்த கல்வியை
வழங்கிய பெற்றோரின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத ஒரு
நிலையை நீடிக்க விடுவது அவசியம் தானா?
இந்தக்
குறைந்த ஊதியத்தைக் கொண்டு தங்கள் வயிற்றையே கழுவ முடியாத நிலையில் தங்களுக்கென குடும்பம்
ஒன்றினை ஏற்படுத்தி அதற்கு வரும் செலவினங்களையும் அவர்தளால் சமாளிக்க முடியுமா?
இதுபோன்ற
கேள்விகள் இத்துறையில் தொழிலில் ஈடுபடும் தொழிலாளரின் முன்பு பூதாகரமாக எழுந்து நிற்கின்றன.
தொழிலாளரைப்
பொறுத்தவரையில் ஒரு தனிப்பட்ட தொழிலாளி என்ற ரீதியில் அவர்கள் பணபலம், அரசின் ஆதரவு,
அதிகார பலம் ஆகிய அனைத்தையும் கொண்டுள்ள அவர்களது முதலாளிகளைக் காட்டிலும் மிகவும்
வலுக் குன்றியவர்களே. தனித்தனியாக அவர்களால் அவர்களது நியாயமான கோரிக்கைகளைக் கேட்கக்கூட
முடியாது. ஆனால் அதே சமயத்தில் அவர்கள் ஒருங்குதிரண்டு ஒரு அமைப்பாக உருவாகிவிட்டால்
அவர்களது கோரிக்கைக் குரலை யாராலும் நசுக்க முடியாது. ஏனெனில் அவர்கள் இன்றி ஆலையில்
ஒரு அணுவும் அசையாது.
இந்த
உண்மையை எடுத்துரைத்து அவர்களை அவர்களது உரிமைக்காகக் கிளர்ந்தெழச் செய்வதற்குத் திராணியற்றவையாகப்
பெரிய தொழிற்சங்கங்கள் என்று மார்தட்டிக் கொண்டிருந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஆகிவிட்டதால்
அதனைச் சாதகமாக்கிக் கொண்டு முதலாளி வர்க்கம் தனது சுரண்டலைக் காட்டுத்தனமாக நடத்திக்
கொண்டுள்ளது.
தொழிலாளர்கள்
மனிதர்கள்; உயிரற்ற ஜடங்கள் அல்ல. மேலும் இத்துறையில் பணிபுரிவோர் மற்ற சராசரி மக்கட்
பகுதியினரைக் காட்டிலும் மேலானவர்கள்; எந்த அடிப்படையில் என்றால் சராசரி மக்களில் பலருக்குக்
கிட்டாத கல்வி வாய்ப்பைப் பெற்றவர்களாக இவர்கள் உள்ளனர். அடக்குமுறையும் ஏமாற்றும்
போக்கும் சில காலங்களுக்கு வேண்டுமானால் இவர்களை நசுக்கியும் அமுக்கியும் வைக்க முடியும்.
காலங்காலமாக அவ்வாறு வாயில்லாப் பூச்சிகளாக அவர்களை அவற்றால் வைத்திருக்க முடியாது.
இந்த
உண்மையையே மாருதி உத்யோக் நிறுவனத்தில் தற்போது நடைபெறும் கிளர்ச்சிகளும் வேலை நிறுத்தமும்
கோடிட்டுக் காட்டுகின்றன. அது தரும் உத்வேகத்தின் அடிப்படையில் இத்துறையில் பணிபுரியும்
ஊழியர்களும் இந்த இழிநிலை தொடர இன்னும் நாம் எவ்வளவு காலம்தான் அனுமதிக்க போகிறோம்
என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தாங்கள் ஏன் அமைப்பு ரீதியாக ஒன்றிணையக் கூடாது என்ற
கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்.
சம்பந்தப்பட்டுள்ள
தொழிலாளரில் பெரும்பாலானோரைத் திரட்டி ஒருங்கிணைத்துச் செயல்பட ஆரம்பித்தால் அந்நிலையில்
நிர்வாகமோ அல்லது அதற்குத் துணை நிற்கும் அமைப்புகளோ என்ன செய்ய முடியும்?
ஏனெனில்
ஆலை இயங்குவதற்கும் கோடிகோடியாக லாபம் ஈட்டித் தருவதற்கும் நமது உழைப்பு தானே அடிப்படை
என்பதை உழைப்பவர் உணரவேண்டும். இந்தக் கேள்விகளைத் தங்களுக்குத் தாங்களே கேட்டு தங்கள்
வலுவினைத் தாங்களே உணராதிருக்கும் உழைப்பாளி வர்க்கம் அதனை உணர ஆரம்பித்தால் அமைப்புகள்
உருவாகும். அவை முன்னெடுக்கும் கிளர்ச்சிகள் மூலம் அவர்களது வாழ்க்கையைத் தற்போது சூழ்ந்துள்ள
அவலங்களும் நீங்கும்.
its a well analyzed essay portraying the psychological and sociological influence of modern day engineers.
ReplyDelete