Friday, January 13, 2012

தோழர் சங்கர் குஹா நியோகியின் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு:

உழைக்கும் வர்க்க அணிகளின் முன் நிறுத்தும் உயர்ந்த படிப்பினைகள்கடந்த அக்டோபர் 30 அன்று ஹிந்து நாளிதழில் 5கால் யானை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அந்தக் கட்டுரை 20 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஒரு தொழிற்சங்கத் தலைவர் குறித்தது. 

புரட்சி, சமூகமாற்றம் என்றெல்லாம் பலவாறு பேசும் எந்த அமைப்பினாலும் நினைவு கூரப்படாத வரலாறு அவருடையது. அவரது வரலாறு  தொழிலாளருக்காகப் பாடுபட்ட ஒருவரின் தனிப்பட்ட ஒரு வித்தியாசமான வரலாறு மட்டுமல்ல. இந்திய முதலாளி வர்க்கம் எத்தனை கொடுமையானது, இந்திய அரசு எந்த வர்க்கத்தினுடையது என்பதையும் தெளிவாக அம்பலப்படுத்திய வரலாறும் ஆகும். 


அது மட்டுமின்றி இந்திய நீதித்துறை உயர்த்திப் பிடிக்கும் சட்டத்திற்கும் பொதுவான நியாயத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியை பசுமரத்தாணி போல் சமூகமாற்ற சிந்தனையாளர் பலரின் மனதில் பதியச் செய்த வரலாறுமாகும். 

பொதுவாக ஆளும் வர்க்கச் செய்திகளையே பிரசுரிக்கும் நமது பத்திரிக்கைகள் அவ்வப்போது அவற்றின் நடுநிலைத் தன்மையை நிரூபிப்பதற்காக வெளியிடும் கட்டுரைகளில் ஒன்றாகவே அவர் குறித்த அந்தக் கட்டுரை ஹிந்து நாளிதழில் அமைந்தது. 

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் பிறந்த தோழர் நியோகி வேலை தேடி வந்த இடமே மத்தியப் பிரதேசத்தின் போபால் ஆகும். அந்நகரை ஒட்டியிருந்த சுரங்கங்களின் நிரந்தர வேலைகள் செய்பவர்கள் பலரை ஒப்பந்தத் தொழிலாளராக அரசின் கைவசம் இருந்த சுரங்க நிர்வாகங்களே வைத்திருந்தன. இப்போதும் அப்படி பல்லாயிரக் கணக்கான பேர் ஒப்பந்தத் தொழிலாளராக வைத்திருக்கப்படும் கொடுமையையும் அவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று அவ்வப்போது போராடும் ஒப்பந்தத் தொழிலாளரையும் நமது மாநிலத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் நாம் பார்க்கிறோம். 

ஒப்பந்தக்காரர்கள் என்றால் அவர்கள் சாதாரணமாக 5, 10 பேர்களை தங்களுக்குக் கீழ் வைத்து வேலை செய்யும் ஒப்பந்தக் காரர்கள் அல்ல. நமது நாட்டின் ஏகபோகத் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இவ்வாறு ஒப்பந்தத் தொழிலாளரை பல்லாயிரக் கணக்கில் வைத்துப் பல்வேறு வேலைகளை எடுத்து அதில் தாறுமாறான லாபம் ஈட்டுவதற்காக ஒப்பந்த நிறுவனங்களை நடத்துகின்றன. அப்படிப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மத்தியப் பிரதேசத்தின் சுரங்கப் பகுதிகளில் பல இருந்தன. 

ஒப்பந்தத் தொழிலாளராக அரசிற்குச் சொந்தமான சுரங்கங்களில் வேலை செய்த தொழிலாளரில் மிகப் பெரும்பாலோர் மலைவாழ் மக்கள் ஆவர். அவர்களுடைய கல்வியறிவற்ற பின்தங்கிய நிலையையும், கடினமாக உழைக்கவல்ல அவர்களது உடல் வலுவையும் நன்கு பயன்படுத்தி மிகக் குறைந்த சம்பளம் கொடுத்து அவர்களை அரசிற்குச் சொந்தமான சுரங்க நிர்வாகங்கள் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந்தன. 

அவர்களுடைய பரிதாபகரமான வேலைச் சூழ்நிலையையும், தரைமட்டமான கூலியையும் கண்டு அவர்களுக்கு உளப்பூர்வமாக உதவ வேண்டும் என்று விரும்பிச் செயல்பட்டவரே தோழர் நியோகி ஆவார். 

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பி.எச்.இ.எல்.இல் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட தோழர் நியோகி அவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்ட பின் ஒப்பந்தத் தொழிலாளர் ஒருங்கிணைப்புக்காகவும் கூலி உயர்வுக்கானதுமான பணியைத் தனது முழுநேரப் பணியாகத் துவக்கினார். 

வேலையிழந்த நிலையில் தன் வாழ்க்கைச் செலவினங்களையும் சந்திக்க வேண்டும்; அதே சமயத்தில் சுரங்கத் தொழிலாளராக இருக்கும் மலைவாழ் மக்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற சூழலில் ஒரு படித்த மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்ற அடையாளத்தைத் துறந்து மலைவாழ் மக்களில் ஒருவனாகத் தான் கருதப்பட வேண்டும் என்பதற்காக அவர் பல உடல் உழைப்புச் சார்ந்த வேலைகளை எவ்விதத் தயக்கமுமின்றி செய்யத் தொடங்கினார். மீன் பிடிப்பவனாக, ஆட்டு வியாபாரியாகப் பல வேலைகளைச் செய்த அவர் அந்தப் போக்கில் மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்கள் பலவற்றைச் சுற்றிப் பார்த்து அவர்களது வாழ்க்கை நிலையையும், மனநிலைகளை நன்கறிந்து கொண்டார். 
மலைவாழ் மக்கள் உட்பட இன்று கோடான கோடி இந்திய உழைக்கும் மக்களின் மனங்களில் மண்டிக் கிடக்கும் அவநம்பிக்கையே அவர்கள் இயக்கப் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குப் பெரும் முட்டுக் கட்டையாக உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட அவர் இன்னும் அவர்களோடு நெருக்கமாக ஆகி அவர்களின் கூடுதல் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதற்காக ஒரு மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பெண்ணையும் மணந்து கொண்டார். இது மிகவும் இயல்பான விதத்தில் மலைவாழ் மக்களை ஒருங்கு திரட்டுவதற்கு அவருக்கு மிகவும் உதவியது.

ஆட்டு வியாபாரி

ஆனால் வேலை நீக்கம் செய்யப்பட்ட நியோகி அவரது பெயரிலேயே இந்த நடவடிக்கைகளை வெளிப்படையாகச் செய்தால் சுரங்க நிர்வாகங்கள் மிகக் கடுமையாக அதனைக் கண்காணித்து அதன் வளர்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிய விரும்பும் என்பதை நன்கு அறிந்து கொண்டார். தன் பெயரை சங்கர் என்று மாற்றிக் கொண்டு அப்பகுதியில் செயல்படத் தொடங்கினார். அவர் எத்தனை நாசூக்காகவும் இயல்பாகவும் அதனைச் செய்தார் என்றால் அவர் மணந்து கொண்ட மலைவாழ் இனத்தைச் சேர்ந்த அவரது மனைவிக்கே அவர் நியோகி என்பது பலகாலம் தெரியாது. அத்தனை இயல்பாக அவர் அவரது வாழ்க்கைப் போக்கை மாற்றிக் கொண்டார்.

அவர் தொழிலாளரைத் திரட்டுவதற்குக் கையாண்ட யுக்தியும் மிகவும் அபூர்வமானது. ஒரு ஆட்டு வியாபாரியாக, மீன் பிடிப்பவராக அங்குள்ள மக்களுக்கு அறிமுகமாகி அங்குள்ள பல கிராமங்களில் ஆடு, மீன் போன்றவற்றை அருகிலுள்ள நகரங்களிலோ பெரிய கிரமங்களிலோ விற்கும் சாக்கில் பகலில் ஆட்டு வியாபாரி, இரவில் தொழிலாளருக்கு வழிகாட்டி என்ற அடிப்படைகளில் அல்லும் பகலும் அரும்பாடு பட்டு அவர் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கினார். 

அவசரநிலைக் காலத்தில் அவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்படும் போதுதான் அவர் குறித்த இந்த உண்மை  அவரது மனைவிக்கே தெரிய வந்தது. இரண்டாண்டுகளுக்கு மேல் அவ்வாறு சிறைவாசம் அனுபவித்த அவர் மீண்டும் வந்து அவரது தொழிற்சங்கப் பணியைச் சிரமேற்கொண்டார். அதன் விளைவாக அவர் தொடங்கிய அந்த சங்கம் 12,000க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு வெற்றி நடை பயிலத் தொடங்கியது. 

அவர் தொடர்ந்து நடத்திய இயக்கங்களின் விளைவாக ஓரளவு ஊதிய உயர்வும் மேலான வேலைச் சூழ்நிலைகளும் சுரங்கங்களின் வேலை செய்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் கிட்டின. தொழிற்சங்கப் பணி மட்டுமின்றி அங்கு வாழ்ந்த மலைவாழ் மக்களுக்கு ஒரு நல்ல மருத்துவமனை அவசியம் என்பதை உணர்ந்த நியோகி அப்படியொரு மருத்துவமனையையும் நிறுவினார். அந்த மருத்துவமனைக்குத் தேவைப்படும் எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்கப் போதிய பணமின்றித் தடுமாறிய அவருக்கு சுரங்க ஒப்பந்தத் தொழிலாளர்கள் அவர்களது ஒருநாள் ஊதியத்தை மனமுவந்து வழங்க முன்வந்தனர். 

இவ்வாறு அவர்களுக்கு ஒரு தொழிற்சங்கத் தலைவராக மட்டுமின்றி அவர்களுடைய அடிப்படைப் பிரச்னைகளுக்கும் முடிந்த அளவிற்கு தீர்வுகாண விரும்பிய அவரது இப்போக்கு அவருக்கு மலைவாழ் மக்களது மனதில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துத் தந்தது. 

ஐந்துகால் யானை

சுரங்கங்களில் வேலை செய்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியோகி உருவாக்கிய தொழிற்சங்கத் தலைமையின் கீழ் அணிதிரண்டு போராடிப் பெற்ற வெற்றிகள் பிற ஏகபோக நிறுவனங்களின் கண்களை உறுத்தின. ஏனெனில் அவர்களும் பல்லாயிரக் கணக்கில் ஒப்பந்தத் தொழிலாளரைப் பணியமர்த்திச் சுரண்டி அதன்மூலம் கொள்ளை லாபம் ஈட்டிக் கொண்டிருந்தனர். 

முதலில் அவர்களுக்கு இத்தனை பின்தங்கிய நிலையில் ஒப்பந்தத் தொழிலாளராக இருக்கும் மலைவாழ் மக்களும் ஒன்றிணைந்து போராடி கூலி உயர்வினைப் பெற முடியும் என்ற நம்பிக்கையே இல்லை. 

அதனால் தான் நியோகி உருவாக்கிய தொழிற்சங்கம் போன்ற தொழிற்சங்கங்களை உருவாக்கிப் போராடி ஒப்பந்தத் தொழிலாளருக்கு உரிய ஊதியமும் வேலைச் சூழ்நிலையும் வழங்கும் ஒரு சாதனை நிகழவே முடியாது என்று கருதிய அவர்கள் அவ்வாறு சாதிப்பது 5கால் உள்ள ஒரு யானையை காட்ட முயல்வது போன்றதாகும் என்று கூறினர். 

ஆனால் அவர்களுடைய ஊகங்களையும் எதிர்பார்ப்புகளையும் முறியடித்து நியோகி உருவாக்கிய 5கால் யானையின் செல்வாக்கு அவ்வட்டார ஒப்பந்தத் தொழிலாளர் மத்தியில்  பரந்துஅளவிலான நம்பிக்கையையும் செல்வாக்கையும் ஏற்படுத்தியது. அது எத்தனை பெரிய பாதிப்பைத் தங்களுக்கு ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொண்ட ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் இப்போக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு என்ன வழி என்று பார்க்கத் தொடங்கின. 

அவர்கள் தீட்டிய சதித்திட்டத்தின் விளைவாக மலைவாழ் மக்களோடு மக்களாக வாழ்ந்த நியோகி அவருக்கென உருவாக்கிக் கொண்டிருந்த கூடாரத்தை ஒத்த ஒரு வீட்டில் அமர்ந்து தொழிற்சங்கம் குறித்து லெனின் என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக வந்த ஒரு கூலிக் கொலைகாரனின் துப்பாக்கிக்குண்டிற்கு இரையானார்.

படுகொலைக்கான நீதி

அவரது மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியது. அதனால் ஏற்பட்ட நிர்ப்பந்தத்தின் விளைவாகக் கொலையாளி என்று ஒருவனும் அவனைக் கொலை செய்யத் தூண்டியவர்கள் என்று சில முதலாளிகளும் கைது செய்யப்பட்டனர். 

வழக்கை விசாரித்த கீழ்நீதிமன்றம் கொலையாளி என்று கருதப்பட்டவனுக்கு மரண தண்டனையையும் மற்றவர்களுக்கு பல்வேறு தண்டனைகளையும் வழங்கியது. 
தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கை முதலாளித்துவ சக்திகள் கொண்டு சென்றன. உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் இக்கொலையில் முதலாளிகளுக்கு இருந்த ஈடுபாடு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி முதலாளிகளை விடுதலை செய்ததோடு கொலையாளியாக முன்னிறுத்தப் பட்டவனுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கியிருந்த மரண தண்டனையையும் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக ஆக்கியது. 

இதில் ஒரு பெரும் கொடுமை என்னவென்றால் அப்பகுதிகளில் செயல்பட்ட பெரிய தொழிற்சங்கங்கள் என்றும் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் என்றும் கருதப்பட்ட தொழிற்சங்கங்கள் நியோகியின் கொலையை உழைக்கும் வர்க்க இயக்கம் கட்டுவதற்கு எதிராக வந்த தாக்குதல் என்று பார்க்கவில்லை. 

மாறாக அச்சங்கங்கள் நம்மால் செய்ய முடியாததைச் செய்துள்ள இந்தத் தலைவருக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தால் அது தங்களது அமைப்புகளைப் பலவீனப்படுத்தும் என்று எண்ணின. மேலும் அச்சங்கங்கள் பராமரித்து வந்த முதலாளிகளுடனான கூட்டிற்கும் அதன் மூலம் பங்கம் வரும் என்று எண்ணி நியோகியின் கொலைக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

அனுபவம் ஊட்டிய படிப்பினை

நியோகியின் வாழ்க்கையும் அவர் தனது அனுபவங்களின் மூலமாகக் கண்டுகொண்டு கடைப்பிடித்த வழிமுறைகளும் தற்போது இடதுசாரி என்று கருதப்படும் தொழிலாளர் இயக்கங்களில் ஆதிக்கம் செலுத்தும் போக்குகளிலிருந்த பல அடிப்படைக் கோளாறுகளைக் கோடிட்டுக் காட்டுவதாக அமைந்தன. 

வருந்தத் தகுந்த விதத்தில் அத்தொழிற்சங்கங்களும் அவற்றை வழிநடத்தும் ‘கம்யூனிஸ்ட்’ அமைப்புகளும் அவற்றிலிருந்து உரிய படிப்பினைகளை எடுத்துக் கொள்ளவில்லை.

வேறுபாடு

ஆரம்பத்தில் நக்சலைட் இயக்கம் என்று அறியப்படும் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸிட் - லெனினிஸ்ட்) கட்சியில் செயல்பட்ட அவர் சில காலம் கழித்து அதிலிருந்து விலகிவிட்டார். 
தடை செய்யப்பட்ட அமைப்பாய் இருந்த அதிலிருந்து விலகிய பலர் அவர்களது சொந்த பலவீனங்கள் மற்றும் அச்சம் காரணமாகவே அதிலிருந்து பெரும்பாலும் விலகினர். 
ஆனால் தோழர் நியோகியோ மலைவாழ் மக்களின் வாழ்க்கையோடு ஒருங்கிணைந்திருந்த பல அடிப்படை உண்மைகள் அக்கட்சி கொண்டிருந்த கருத்துக்களிலிருந்து மாறுபட்டவையாக இருந்ததன் காரணமாக, அவற்றை அவர் அறிந்து கொண்டதன் விளைவாக விலகினார். 

முதற்கண் மலைவாழ் மக்கள் கூடுதலாக வசிக்கும் பகுதிகளில் கூட நிலவும் அடிப்படைத் தன்மைவாய்ந்த முரண்பாடு முதலாளி, தொழிலாளி முரண்பாடே என்பதை அவர் அறிந்து கொண்டார். 

அதாவது ஒப்பந்தத் தொழிலாளர், ஒப்பந்தக்காரர் என்ற பெயரில் செயல்படும் முதலாளிகள் ஆகிய இருதரப்பினருக்கு இடையிலானதே என்பதை அறிந்து கொண்டார். 
அதன் விளைவாக ஒப்பந்தத் தொழிலாளரை தொழிற்சங்க ரீதியில் அணிதிரட்டி அவர்களுக்கான தொழிற்சங்கம் ஒன்றினை அமைக்கும் பணியையே அவருடைய முழுமுதற் பணியாக மாற்றிக் கொண்டார். அந்த வகையில் அவர் முன்பு சார்ந்திருந்த சி.பி.ஐ(எம்.எல்). இயக்கத்திலிருந்து மாறுபட்டார்.

நடைமுறை சாத்தியமற்ற விடுதலை மையங்கள் 

சி.பி.ஐ(எம்.எல்.). இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் கருத்தான விடுதலை மையங்களை ஏற்படுத்திக் கொண்டு நகர்ப்புறங்களைத் தாக்குவது என்பது இந்தியச் சூழலில் அப்பட்டமாகப் பொருந்தி வராத ஒன்று என்பதையும் அவர் புரிந்து கொண்டார். 
அந்தக் கண்ணோட்டம் பொருந்திவர வேண்டுமென்றால் அங்கு வசிக்கும் ஆதி வாசிகளில் பெரும்பாலோரின் வளர்ந்து வரும் தொழில் விவசாயம் மற்றும் அதையொட்டியதாக இருக்க வேண்டும். அவர்களுடைய விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளுக்குத் தடைக் கற்களாக நிலவுடைமைச் சுரண்டல் நிலவ வேண்டும். 

ஆனால் தோழர் நியோகி பணியாற்றிய சட்டீஸ்கர் பகுதியில் வளரும் போக்காக இருந்தது சுரங்கத் தொழிலும் அது சார்ந்த பல்வேறு தொழில்களாகவுமே இருந்தன. அவற்றில் தொழிலாளராக ஆதிவாசிகள் வேலை செய்யும் போக்கே வளரும் போக்காக இருந்தது. 
அவர்களிடையே நிலவிய ஆதங்கம் மூன்று ரூபாய் என்ற அளவிற்கு தினக்கூலி கொடுத்து நாம் சுரண்டப் படுகிறோம் என்பதாக இருந்ததே தவிர, நிலம் என்ற கேள்வி அவர்களிடம் இருக்கவில்லை. 

இத்தகைய வெளிப்படையாக வளர்ந்து வரும் முதலாளி, தொழிலாளி முரண்பாடும் அதைப் பார்க்கத் தவறி சீனச் சூழ்நிலையை அங்கு வலிந்து திணித்துப் பார்க்கும் சி.பி.ஐ(எம்.எல்.). கட்சியின் போக்குமே அது வேகமாக வளர முடியாத நிலைக்குக் காரணமாக இருந்தது. 
கூலிப் பிரச்னையை மையமாக வைத்து நியோகி நடத்திய இயக்கம் வேகமாகவும் பரவலாகவும் ஒப்பந்தத் தொழிலாளரை ஒன்று சேர்த்தது மட்டுமின்றி அவர்களது ஒன்றுபட்ட இயக்கத்திற்கு அடிபணிந்து ஒப்பந்தக்காரர்கள் தினக்கூலி 3 ரூபாய் என்பதிலிருந்து ரூபாய் 20 அதன்பின் ரூபாய் 70 எனும் அளவிற்கு கூலியை கூட்டிக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் உற்சாகம் பெற்ற தொழிலாளர் ஆயிரக் கணக்கில் அவரது சங்கத்தில் இணையலாயினர்.

தொழில் வளர்ச்சிக்கு எதிரானவரல்ல

சி.பி.ஐ(எம்.எல்.). கட்சியின் அணுகுமுறையில் இருந்து தோழர் நியோகியை வேறுபடுத்திய மற்றொரு அம்சம் தொழில் வளர்ச்சி குறித்ததாகும். வாழ்வாதாரம் அழிந்து விடும் என்ற அடிப்படையில் தொழில் வளர்ச்சிக்கே முட்டுக்கட்டை போடும் அக்கட்சியின் போக்கை அவர் ஆதரிக்கவில்லை. 

சமூகத்தின் மையமான முரண்பாட்டைக் கண்டு கொள்ளாமல் இன்று மக்கள் கவலைப்பட வேண்டிய முதலானதும் முக்கியமானதுமான விச­யம் சுற்றுச் சூழல் பராமரிப்பே என்ற பல தன்னார்வ அமைப்புகளின் கருத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. 

பெயரிலும் கூட அவ்வமைப்பு களிலிருந்து வேறுபட வேண்டும் என்பதற்காக சுற்றுப்புறச் சூழல் என்பதற்குப் பதிலாக இயற்கை என்ற வார்த்தையையே அவர் பயன்படுத்தினார். பெருகிவரும் மக்கட்தொகைக்கு ஏற்ற வகையில் வேலை வாய்ப்புகளையும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் தொழில் மயமாக்குதலே சாதிக்கும் என்பதை உணர்ந்த அவர் அதே சமயத்தில் தொழில் மயம் என்ற பெயரில் மிதமிஞ்சிய லாப வெறியில் இயற்கையையே அழித்து நிர்மூலமாக்கும் போக்கையும் எதிர்க்கத் தயங்கவில்லை. 

அவ்வட்டார மக்களின் பங்கேற்புடன் கூடிய சமச்சீரான வளர்ச்சியையே அவர் பரிந்துரைத்தார். இயற்கையின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தேவையான விஞ்ஞானபூர்வ வசதிகள் பல இருந்தும் அவற்றிற்குச் செலவிட வேண்டியிருக்கும் தொகையையும் லாபமாக முதலாளிகள் ஈட்ட விரும்புவதே இயற்கை அழிவதற்கும், சுற்றுப்புறச் சூழல் மாசு படுவதற்குமான மிகமுக்கியக் காரணங்கள் என்பதை அவர் உணர்த்தினார். 

சில சுரங்கங்களின் செயல்பாட்டினால் உலோகக் கழிவுகள் நீரில் கலந்து அங்கு ஓடிய சில நதிகளின் நீரே செந்நிறமாக மாறிய சூழ்நிலையில் அந்நீரை சுத்தமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மக்களைத் திரட்டிப் போராடினாரே தவிர, சுரங்கங்கள் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைக்கவில்லை.

நெளிவு சுளிவான அணுகுமுறைகள்

இந்திய அரசும், அதன் நிர்வாகமும் பாசிஸத் தன்மை வாய்ந்தவையாக வெகு வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனாலும் கூட ஆளும் வர்க்கப் பிரச்சார சாதனங்கள் இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. மிகப் பெரும்பான்மையான நமது நாட்டின் நடுத்தர வர்க்கம் அக்கருத்துடன் உடன்பட்டுப் போகவும் செய்கிறது. 

அந்நிலையில் பெயரளவில் வழங்கப்படும் சில ஜனநாயக உரிமைகளும் கூட அவை நடைமுறைக்கு என்று வரும்போது எவ்வாறு அனுபவிக்கவியலாதவையாக ஆளும் வர்க்கத்தால் ஆக்கப்படுகின்றன என்பதை வெற்றுப் பிரச்சாரத்தின் மூலமாக வெளிப்படுத்த முடியாது. அதை நடைமுறை ரீதியாக அம்பலப்படுத்த வேண்டும். 

ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவ்வுரிமைகளைப் பயன்படுத்தி மக்கள் இயக்கத்தை ஓரளவு அதனால் முன்னெடுத்து செல்ல முடியுமென்றால் அதைச் செய்யவும் தயங்கவோ தவறவோ கூடாது. அந்த அடிப்படையிலேயே தோழர் நியோகி அவர்கள் தொழிற்சங்கம் அமைப்பது; அரசு அதிகார வர்க்க நிர்வாகத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி போராடுவது; 

அப்போராட்டங்களின் மூலமாக ஆங்காங்கே கிட்டவல்ல ஒரு சில வெற்றிகளை மக்களை ஊக்குவிக்கப் பயன்படுத்திக் கொள்வது; அதே சமயத்தில் பெரும்பான்மையான வி­யங்களில் அரசு நிர்வாகம் எவ்வாறு ஆளும் வர்க்க ஆதரவு, அதிகாரவர்க்கப் போக்கைக் கொண்டதாக உள்ளது என்பதை மக்களிடம் அம்பலப்படுத்துவது என்ற அடிப்படைகளில் செயல்பட்டார். 
இத்தகைய நெளிவு சுளிவானதும் ஆக்கப்பூர்வமானதுமான அவரது செயல்பாடுகள் அவர் முன்பு சார்ந்திருந்த சி.பி.ஐ(எம்.எல்.). கட்சியின் இறுக்கமான போக்கிலிருந்து அதாவது  அதன் சீனச் சூழ்நிலை இங்கு நிலவுவதாகக் குருட்டுத்தனமாகப் பார்த்த போக்கிலிருந்து பெரிதும் மாறுபட்டு இருந்தது.

மக்களைத் திரட்டி இயக்கங்கள் நடத்தி அவர்களின் சமூக ரீதியான செயல்பாடுகளை மென்மேலும் அதிகரித்து அவற்றின் மூலம் மக்களது அதிகார மையங்களை அவர் ஏற்படுத்த விரும்பினாரே தவிர இளைஞர் சிலரை ஆயுதம் தரித்தவர்களாக்கிக் காடுகளுக்குள் அவர்களை அழைத்துச் சென்று ஆயுதப் போராட்டம் தொடங்கிவிட்டது என்று காட்டும் சாகச வாதத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. 

இந்த அடிப்படையில் அவர் செயல்பட்ட விதம் சோவியத்துகளை ஒத்த பல்வேறு சி.எம்.எம்., சி.ஜி.எம்.எம்., போன்ற அமைப்புகளை உருவாக்குபவராக அவரை ஆக்கியது.

செக்குமாட்டுச் செயல்பாடு உதவாது

பொதுவாக இன்று நமது சமூகத்தில் நிலவும் அடிப்படை முரண்பாடு முதலாளி , தொழிலாளி முரண்பாடே என்று கூறுவோருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் கேள்விகள் சில உண்டு. அவற்றில், வர்க்க முரண்பாடு தான் பிரதானமான முரண்பாடு என்றால் அதனை மையமாகக் கொண்டு செயல்படும் தொழிற்சங்கங்களின் பின்னால் ஏன் தொழிலாளர்கள் அணிதிரளவில்லை என்ற கேள்வி முதன்மையானது. 

முரண்பாடு குறித்த சரியான கணிப்பும் அதை அடிப்படையாகக் கொண்ட பெயரளவிற்கான மேலோட்டமான செயல்பாடுகளும் தொழிலாளரை அத்தனை நம்பிக்கையுடன் வர்க்க முரண்பாட்டை முன்னிறுத்தும் அமைப்புகளோடு இணையச் செய்துவிடுவதில்லை. அதாவது மண்ணும் அதனைக் களியாக்கிச்  சட்டி பானை ஆக்குவதற்காக மண் வினைஞர்கள் பயன்படுத்தும் உருளையும் இருந்தால் மட்டும் சட்டி பானைகளை யாரும் உருவாக்கிவிட முடியாது. அவற்றை எப்படிச் செய்ய முடியும் என்பதை நன்கு அறிந்த ஒருவராலேயே சட்டி பானைகளைச் செய்ய முடியும். அதைப்போல் தொழிற்சங்க நுணுக்கங்களை நடைமுறை அனுபவத்தில் கற்ற ஒருவராலேயே ஒரு சரியான தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டியமைக்க முடியும். 

அதற்குச் சதா சர்வகாலமும் உழைப்பாளர் குறித்த சிந்தனையும் அவர்களை எப்படியாவது ஒன்று சேர்க்க வேண்டும் என்ற ஆவலும் வெறியும் அதனை எப்படிச் செய்வது என்பது குறித்த கற்பனையும் கட்டாயம் வேண்டும். அவை இருந்தால் தான் ஒரு உருப்படியான தொழிற்சங்கத்தை அவர்களால் உருவாக்க முடியும் என்பதை நியோகி நன்கறிந்திருந்தார்.
பேசுவது வர்க்க அரசியலாகவும், செயல்பாடு செக்குமாட்டுத் தனமானதாகவும் இருந்தால் அடிப்படை அரசியல் கருத்து சரியாக இருப்பதால் மட்டும் தொழிற்சங்க அமைப்புகளைக் கொண்டுவந்து விட முடியாது. 

அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். காலங்காலமாகச் சிவில் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் பல்வேறு வகைகளில் ஏமாற்றப்பட்டு வந்த மலைவாழ் மக்களுக்கு அந்த நம்பிக்கை அத்தனை எளிதில் ஏற்பட்டுவிடாது. எனவே அவர்களை அணிதிரட்டுபவர் குறித்த ஒரு எண்ணம் அதாவது அவர் தங்களில் ஒருவர் என்ற எண்ணம் மலைவாழ் மக்களுக்கு ஏற்பட வேண்டும். 

அதற்கடுத்து வழக்கமான வழிமுறைகளை விடுத்துத் தொழிலாளரோடு ஒன்றுதலை ஏற்படுத்தத் தங்கள் நேரத்திற்குத் தகுந்தது போல் அவர்களை ஒருங்கு திரட்டும் வேலையை செய்ய நினையாது அவர்களது நேரத்திற்கும் காலத்திற்கும் தகுந்தாற்போல் அவர்களை சந்திக்கும், உரையாற்றும், கல்வி புகட்டும் அவற்றின் மூலமாக அணிதிரட்டும் வேலைகளைச் செய்ய வேண்டும். 

அவர்களுக்கான மருத்துவ வசதி போன்றவற்றைச் செய்வது அரசின் கடமை அதனைச் சுட்டிக் காட்டுவதே நம் வேலை;  அரசின் சிரமத்தைக் குறைக்கும் விதத்தில் மருத்துவமனைகள் கட்டுவது சீர்திருத்த வாதம் என்பது போன்ற பரவலாக இடதுசாரி வட்டாரங்களில் நிலவிவரும் கருத்துக்களுக்கு மாறாக அதன் அத்தியாவசியத் தன்மையைக் கருத்திற்கொண்டு தொழிலாளரை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களது மனப்பூர்வ ஆதரவைப் பெறுவதற்கு அது பயன்படும் என்றால் அதையும் செய்ய வேண்டும். இந்த எண்ணப்போக்கும் ஒரு தொழிலாளரை ஒருங்கிணைக்கும் தலைவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். 
இந்த கலையும் விஞ்ஞானமும் தோழர் நியோகிக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தது. அதனையும் பயன்படுத்தியே தனது முழுமையான ஈடுபாட்டின் மூலம் அவர் அந்த மகத்தான தொழிற்சங்கத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார். 

தொழிலாளரையும் மாற்றப் பாடுபட்டார்

இப்போதும் கூட முதலாளி ,தொழிலாளி முரண்பாட்டை முதன்மையானதாகக் கருதாத அடிப்படை அரசியல் வழியைக் கொண்ட அதிதீவிர கம்யூனிஸ்ட் அமைப்புகள் என்று அறிப்படும் அமைப்புகளால் மட்டும் தானே மலைவாழ் மக்களை ஒருங்குதிரட்டி வைத்திருக்க முடிகிறது என்ற எண்ணம் பலரது மனதில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 
ஆனால் அத்தகைய தவறான எண்ணப் போக்கிற்குச் சவாலாக தோழர் நியோகியின் தொழிற்சங்க ரீதியிலான பல வெற்றிகள் அமைந்தன. சி.பி.ஐ(எம்.எல்.) அமைப்புகள் செய்வதைப் போன்று மலைவாழ் மக்கள் கடைப்பிடிக்கும் மூடநம்பிக்கைகள் உள்பட அனைத்தையும் பாராட்டிப் புகழ்ந்து அந்த அடிப்படையில் நியோகி தனது தொழிற்சங்கத்தை நிறுவவில்லை. 

மலைவாழ் மக்களிடம் ஊறிப் போயிருந்த பல்வேறு கெட்ட போக்குகளுக்கெதிராகவும் அதாவது குடிப்பழக்கம் போன்ற போக்குகளுக்கெதிராகவும் மலைவாழ் பெண்களை அணிதிரட்டிப் போராடினார். 

ஒப்பந்தத் தொழிலாளர் கூலி ரூபாய் 3 லிருந்து 70 என்ற அளவிற்கு உயர்ந்தது குடிப்பழக்கத்தை அதிகரித்துள்ளது என்பதையும் வருத்தத்துடன் பார்த்தார். 
லாப நோக்கையும் பண வெறியையும் அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பில் வாழ்வதால் தொழிலாளரையும் பணத்தாசை போன்ற முதலாளித்துவக் கலாச்சாரத்தின் கேடுகெட்ட அம்சங்கள் பற்றிக் கொள்கின்றன. இருப்பினும் தொழிலாளரின் அடிப்படைக் குணாம்சமான சமூகத் தேவைக்காக உழைப்பது சமூகம் வழங்குவதை மகிழ்வுடன் பெற்றுக் கொள்வது என்ற அம்சத்தை அடிப்படையில் அந்தப் போக்கினால் முற்றிலுமாகப் பாழ்படுத்த முடிவதில்லை. 

அவ்வாறு முற்றிலும் முதலாளித்துவக் கலாச்சாரத்திற்கு இரையாகிப் போனவர்கள் காலிகள், கேடிகள் ரகத்தைச் சேர்ந்த லும்பன்களாக ஆகி விடுகின்றனர். 
தொழிலாளி வர்க்கத்திற்கே உரித்தான  பொதுநலப் பண்புகள் அவை வெளிப்படுவதற்கு உரிய சூழ்நிலை உருவாகும் போது அற்புதமான விதத்தில் வெளிப்படவே செய்கின்றன. 
இந்த அம்சம் சட்டீஸ்கர் பகுதியில் தோழர் நியோகி மலைவாழ் மக்களுக்கான மருத்துவமனையினை நிறுவிய போது வெளிப்பட்டது. யாரும் கேட்காமல் தங்களது ஒருநாள் ஊதியத்தை மருத்துவமனைக்காக ஒப்பந்தத் தொழிலாளர் வழங்க முன்வந்தனர். இதுபோன்ற உழைக்கும் மக்களின் உன்னதமான உண்மைத் தோற்றம் வெளிப்பட ஏற்ற பல சூழ்நிலைகளைத் தோழர் நியோகி உருவாக்கித் தந்தார். அதாவது அவரால் அவற்றை உருவாக்க முடிந்தது. 

ஆழமான வேர்களுடன் அவரது இயக்கம் பற்றிப் பரவுவதைக் கண்ட முதலாளிகள் அவரைத் தங்களது முதல் எதிரியாகப் பாவித்தனர். அதாவது அதிகபட்ச லாபம் என்ற அவர்களது குறிக்கோளுக்கு முதற்பெரும் முட்டுக்கட்டையாக இருந்தவராக அவரைப் பார்த்தனர். அதன் காரணமாவே அவரை தீர்த்துக் கட்டுவது என்ற முடிவிற்கும் அவர்கள் வந்தனர்.
அவரது வழக்கில் நமது நீதி அமைப்பும் கூட தானும் முதலாளித்துவ அரசு எந்திரத்தின் ஒரு அங்கமே என்பதை நிரூபித்தது. அதாவது அடிப்படையில் முதலாளித்துவ நலனுக்கு முன்னுரிமை தருவதாகவே நமது நீதி அமைப்பும் இருக்க முடியும் என்பதையே அது நிரூபித்தது. தொழில்நுட்பத் தன்மைவாய்ந்த சட்ட நுணுக்கங் களுக்குள் தஞ்சம் புகுந்து அவரது கொலையாளிகள் தப்பிக்க உதவியது. 

இவை அனைத்தும் நம்மை ஆட்சி செய்யும் அரசு எந்திரம் முதலாளி வர்க்கத்தின் கைகளிலேயே உள்ளது என்பதை மட்டுமின்றி நமது சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளிலேயே மையமானதும் அடிப்படையானதும் வர்க்க முரண்பாடே; மலைவாழ் மக்களைப் பொறுத்தவரையிலும் கூட அந்த முரண்பாடே அடிப்படையானது என்பதை இரத்த எழுத்துக்களால் பொறித்தது. 

நாடாளுமன்ற வாத அரசியலில் ஊறித் திளைத்துப் போன நமது நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று அறியப்படும் கட்சிகளும் அவற்றின் தொழிற்சங்கங்களும் அவை தாங்கள் தற்போது நடத்தும் நடைமுறை அரசியலுக்கு உகந்ததாக நியோகி அவர்களின் செயல்பாடும் அவர் முன்வைத்த கருத்துக்களும் இல்லாததால் அவரது நினைவைப் போற்றவில்லை. 
ஆனால் உண்மையான சமூகமாற்ற சக்திகளால் என்றென்றும் பேணிப் பராமரித்துப் படிப்பினை எடுத்துக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு மிகச் சிறந்த வரலாறே நியோகியின் வரலாறு.

வர்க்க அரசியல் பேசுவோர் மேலோட்டமாகவும் ஈடுபாடில்லாமலும் செயல்பட்டால் போதாது. தாங்கள் எடுத்த கண்ணோட்டத்தை அது வேண்டும் வழிமுறைகளைச் சரியாகத் தேர்ந்தெடுத்துச் செய்ய முனைந்தால் மட்டுமே அதனை வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்பதை அவர்களுக்கு எடுத்துக்காட்டாக முன்வைப்பதும் தோழர் நியோகியின் வரலாறுதான். 

நினைவினைப் போற்றுவோம்

அவரது நினைவினை இன்று மட்டுமல்ல என்றும் போற்றுவோம். அவரது புரட்சிப் பணி அவர் பணியாற்றி இடங்களோடு நின்றுவிடாமல் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம். 
அவருடையதைப் போன்ற பிற உழைக்கும் வர்க்க இயக்கங்களுக்கு மகத்தான படிப்பினைகள் வழங்கக் கூடிய அவருடைய வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட ஒருபோதும் அனுமதியோம். 
இவையே உண்மையான சமூகமாற்ற சக்திகள் அவரை நினைவு கூரும் போது மனதில் பதிக்க வேண்டிய விசயங்களாகும். இந்நாளில் அவரது வரலாற்றின் சில அம்சங்களைப் பதிவு செய்த ஹிந்து நாளிதழுக்கும் அவர் குறித்த கட்டுரையை எழுதிய எழுத்தாளருக்கும் உளமார்ந்த நன்றியையும் நமது இதழின் சார்பாக உரித்தாக்கிக் கொள்வோம்.


No comments:

Post a Comment