கூடங்குளம்
அணுமின் நிலையப் பிரச்னை தற்போது ஒரு முக்கியத் திருப்பத்தை எட்டியுள்ளது. அதனை எதிர்த்த போராட்டம் எந்த வகையான எதிர்ப்பும் இன்றி அவ்வட்டாரத்தைச் சேர்ந்த பல கிராம
மக்களின் ஆதரவுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது அதற்கு ஆதரவு இயக்கம்
என்ற பெயரில் ஒரு இயக்கமும் சில மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் அதிபர்களின் கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டது என்ற பெயரில் அணுமின் நிலையம் உடனடியாகத் துவக்கப்பட வேண்டும்
என்ற கோரிக்கைக் குரலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
அணுஉலையை
எதிர்த்த போராட்டத்திற்கான ஆதரவு மேத்தா பட்கர், அருந்ததிராய் அது தவிர ஓய்வு பெற்ற
அணு விஞ்ஞானிகள் சிலர் போன்றோரிடமிருந்து முதலில் வந்தது. அப்போதெல்லாம் அணுஉலைக்கான
ஆதரவுக் குரல்கள் அந்த அணுமின் நிலையத்தைச் சேர்ந்த இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடமிருந்தே
வந்து கொண்டிருந்தன. தற்போது அனைவராலும் அறியப்பட்ட விஞ்ஞானியும் நமது முன்னாள் குடியரசுத்
தலைவருமான அப்துல் கலாம் போன்றவர்களிடமிருந்தும் அணுஉலைக்கு ஆதரவான குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.
ஃபிரண்ட்லைன் கட்டுரையும், ஹிந்து தலையங்கமும்
அணுஉலைக்கு
எதிரான போராட்டம் பெரிய எதிர்ப்பேதுமின்றி நடந்து கொண்டிருந்த வேளையிலும் கூட ஃபிரன்ட்
லைன் பத்திரிக்கையில் இருந்து அந்த அணுஉலை குறித்தும் அதில் பயன்படுத்தப்படும் முன்னேறிய
தொழில் நுட்பம் குறித்தும் கட்டுரை ஒன்று வந்தது. அதைத் தொடர்ந்து ஹிந்து பத்திரிக்கையில்
ஒரு தலையங்கம் அப்போராட்டம் குறித்து வந்தது.
அதில்
மக்களின் நியாயமான அச்சம் போக்கப்பட்டு அவர்களிடையே அணுஉலை குறித்து ஒரு நம்பிக்கையை
ஏற்படுத்தும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; போராட்டத்தில் உள்ளவர்களை
இரண்டு விதமாகப் பிரித்து அதில் கோட்பாடு ரீதியாகவே அணுஉலைகளுக்கு எதிராக நிலையயடுத்துச்
செயல்படக் கூடியவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி அவர்களை ஒரு விதத்திலும் அச்ச
உணர்வில் அணுஉலை வேண்டாம் என்று கூறும் சாதாரண மக்களை வேறொரு விதத்திலும் அணுக வேண்டும்
என்று அரசிற்கு அறிவுரை கூறப்பட்டது.
அதன்
பின்னரே அப்துல் கலாம் அவர்களின் இரண்டு பக்கக் கட்டுரை ஹிந்து நாளிதழில் வெளிவந்தது.
இந்தப் பின்னணியில் அணுஉலை எதிர்ப்பாளர் தரப்பிலிருந்தும் ஹிந்து நாளிதழின் நடுப்பக்கத்தில்
கட்டுரை ஒன்று வெளிவந்தது.
எதிர்ப்பு
இயக்கத்தின் தோற்றம். இயக்கம் மீண்டும் வலுப்பெறக் காரணம்
இந்த
அணுஉலைக்கான அடிக்கல் 1988ம் ஆண்டில் அப்போதைய பாரதப் பிரமராக இருந்த ராஜீவ் காந்தியும்
ரஷ்ய அதிபராக இருந்த கோர்ப்பசேவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாட்டப்பட்டது.
ஆனால்
அப்போதே அதற்கான எதிர்ப்புக் குரல் மீனவர் மத்தியிலிருந்து எழுந்தது. இந்த அணுஉலை தங்களது
வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்ற அச்ச உணர்வு அவர்களிடையே எழுந்த நிலையில் அதனைப் பிரதிபலிக்கும்
விதத்தில் ஆன்டன் கோமஸ் என்பவரால் 88ம் ஆண்டிலேயே அணுஉலை எதிர்ப்புக் கண்டனப் பொதுக்கூட்டம்
ஒன்று தூத்துக்குடி நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஜார்ஜ் பெர்னான்டஸ் போன்ற தலைவர்கள்
கலந்து கொண்டனர்.
அதன்பின்
ரஷ்யாவின் அரசியல் அரங்கில் தோன்றிய பல்வேறு வளர்ச்சிப் போக்குகளின் காரணமாக இந்த ஒப்பந்தம்
முன்னெடுக்கப் படாமல் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின் பல ஆண்டுகள் கழித்து முடங்கிக்கிடந்த
அல்லது ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த அணுஉலைக் கட்டுமானப் பணிகள் துரித கதியில்
சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த
ஆண்டு டிசம்பர் மாதம் திட்டமிடப் பட்டிருந்த 2 அணுஉலைகளில் ஒன்று இயங்குவதாக இருந்தது.
அதையொட்டிப் பயிற்சி ஓட்டம் என்ற வகையைச் சேர்ந்த ஓட்டங்களும் அந்தப் பின்னணியில் அணுஉலையில்
விபத்து நேர்ந்தால் மக்களின் பாதுகாப்பு எப்படி பராமரிக்கப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தும்
செயல்முறை விளக்கப் பயிற்சி ஒன்றும் ஆலையை ஒட்டி நடத்தப்பட்டது.
ஜப்பானின்
ஃபுக்குசிமாவில் அமைந்திருந்த அணுஉலை சுனாமியினால் சேதமடைந்ததன் பின்னணியில் கூடங்குளம்
வட்டார மக்கள் ஏற்கனவே பீதியில் ஆழ்ந்திருந்தனர். அந்நிலையில் அணுமின் நிலைய நிர்வாகிகள்
ஏற்பாடு செய்த இந்த செயல்முறை விளக்கப் பயிற்சி அணுஉலையினால் மிகப் பெரிய ஆபத்துக்கள்
உள்ளன என்ற மனநிலையை அவ்வட்டார மக்களிடையே இன்னும் கூடுதலாக ஏற்படுத்தியது.
வட்டார
மக்களின் ஆதரவு
ஆரம்பத்தில்
முக்கியமாக என்.ஜி.ஓ.க்களால் நடத்தப்பட்ட இந்த அணுஉலை எதிர்ப்பு இயக்கம் அதன் பின்னர்
உள்ளூர் மக்களின் வற்புறுத்தலால் கிறிஸ்தவ தேவாலயங்களாலும் கையிலெடுக்கப்பட்டது. அவ்வட்டார
மக்களின் குரல் தமிழகம் முழுவதையும் எட்டியது.
பெரிய
அரசியல் கட்சிகள் என்று கருதப்படக் கூடிய கட்சிகள் எவையும் இந்த இயக்கத்திற்கான ஆதரவினை
இயக்கம் ஆரம்பித்த உடனேயே அறிவிக்கவில்லை. அதன் பின்னர் ஒருசில கட்சிகளின் ஆதரவு இவ்வியக்கத்திற்குக்
கிட்டியது. அதுவும் அப்போது நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் பின்னணியில் ஏற்பட்டதே.
தற்போது
இந்த இயக்கத்தை என்.ஜி.ஓ க்கள், தேவாலயங்கள் மூலமாக கிறிஸ்தவ மக்கள், இவ்வட்டாரத்தைச்
சேர்ந்த மக்களில் மிகப்பெரும் பகுதியினர், ம.தி.மு.க., அது தவிர இதனை அதிதீவிர இடதுசாரிக்
கட்சிகள் மற்றும் தமிழ் இனவாத அமைப்புகள் என்று அறியப்படும் அமைப்புகள் ஆகியவை ஆதரிக்கின்றன.
இக்கட்சிகளும்
இவற்றின் ஆதரவாளர்களும் இயக்கத்திற்கு ஆதரவாக முன்வைக்கும் வாதங்கள் பல விதமாக உள்ளன.
அணு
சம்பந்தப்பட்ட எந்த விசயமுமே வேண்டாம் என்ற தன்னார்வ அமைப்புகளின் கருத்து ஒருபுறம்;
மற்றொரு புறம் தமிழ் மக்களைப் பாதிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த உலையை இங்கு
நிறுவியுள்ளனர் என்ற தமிழார்வ அமைப்புகளின் கருத்து.
ஒட்டுமொத்தத்தில்
இந்த அணுஉலை மூடப்பட வேண்டும் என்பதே போராட்டக்காரர்களால் இதுவரை ஒரே கருத்தாக முன்வைக்கப்படுகிறது.
அணுஉலை
ஆதரவு இயக்கம் என்ற பெயரில் கிளறிவிடப்படும் வகுப்புவாதம்
அணுஉலைக்கு
ஆதரவாக என்ற பெயரில் உருவாகிவரும் அமைப்பு முக்கியமாக மதவாதப் போக்குகளைக் கிளப்பிவிடும்
வேலையைச் செய்கிறது.
அதாவது
இந்த இயக்கத்தின் பங்கேற்பாளர்கள் பெரும்பாலும் அவ்வட்டார மீனவ சமூகத்தைச் சேர்ந்த
கிறிஸ்தவ மக்களாக இருப்பதால் அவர்களுக்கு எதிரான ஒரு மனநிலையை எப்பாடுபட்டும் உருவாக்க
இந்த அமைப்பினர் முயல்கின்றனர்.
அதாவது
மக்களிடம் கருத்துக்களைப் பொறுமையாகக் கொண்டு செல்லாமல் மத அடிப்படையில் முரண்பாட்டைத்
தோற்றுவிக்கும் வகையில் அவர்களுடைய நடவடிக்கைகள் உள்ளன. இதன் பின்னணியில் பி.ஜே.பியினரும்
காங்கிரஸ் கட்சியினரும் உள்ளனர்.
மாநில அரசின் மறைமுக ஆதரவு
தமிழக
அரசைப் பொறுத்தவரையில் முதலில் அதன் மின்துறை அமைச்சர் திரு. விஸ்வநாதன் இப்போராட்டம்
தவறானது எனக் கூறினார். அதன் பின்னர் திடீரென்று தமிழக முதல்வர் அவர்கள் மத்திய அரசு
இப்பிரச்னையில் தலையிட்டு அங்குள்ள மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கான எந்த நடவடிக்கையும்
எடுக்காததை எதிர்த்துத் தன் கருத்தை முன்வைத்ததோடு பிரதமரோ மத்திய அமைச்சர்கள் யாருமோ
போராடும் மக்களைச் சந்தித்து பேச முன்வராததைக் கண்டிக்கவும் செய்தார். அதன் பின் விஸ்வநாதன்
அது குறித்துப் பேச்சும் விடவில்லை; மூச்சும் விடவில்லை.
அத்துடன்
மக்களின் அச்சம் போக்கப்படாத வரை இந்த உலை இயங்க அனுமதிக்கப்படக் கூடாது என்ற கருத்தையும்
முதல்வர் வெளியிட்டார்.
அவருடைய
இந்த நிலைபாடு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு ஒரு துணிவினைத் தந்தது. மாநில
காவல்துறை இப்போராட்டத்தைக் கண்டுகொள்ளாது பெருமளவிற்கு நடுநிலையாகவே இருந்தது.
காவல்துறையினரின்
ஒருதலைப்பட்சமான ஆதரவு தங்களுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அணுஉலை நிர்வாகத்தினர்
ஆலையில் வேலை செய்த வெளி மாநிலத்தினர் பலரை மக்கள் இயக்கம் அவர்களுக்கு எதிராகத் திரும்பக்
கூடும் என்ற அச்சத்தில் அவர்களுடைய மாநிலங்களுக்குத் திருப்பி அனுப்பினர்.
அத்துடன்
மாநிலக் காவல்துறையின் ஆதரவு இல்லாததால் தாங்களும் அணுஉலை உள்ள இடத்திற்குச் செல்ல
முடியாத நிலையில் இருக்கிறோம் என்று கூக்குரல் இடத் தொடங்கினர்.
ஏற்கனவே
அச்சத்தின் விளிம்பில் இருக்கும் மக்களை இன்னும் பீதியடையச் செய்யும் விதத்தில் ஆலையின்
தற்போதைய இயக்குனர் ஸ்ரீகுமார் பானர்ஜி அவர்கள் ஆலை இவ்வாறு பராமரிக்கப் படாதிருந்தால்
அதுவும் ஆபத்தைத் தோற்றுவிக்கும் என்றொரு கருத்தினையும் முன்வைத்தார்.
இந்நிலையில்
மத்திய அமைச்சர் திரு. நாராயணசாமி மத்திய அரசு போராட்டக் காரர்களுடன் கலந்து பேசி இப்பிரச்னையை
முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு நிபுணர் குழுவை அமைத்திருப்பதாகவும், அந்த நிபுணர்
குழு மாநில அரசு மற்றும் போராட்டக் குழுவினர் தரப்பிலிருந்து நியமிக்கப்படும் குழுவினருடன்
பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அறிவித்தார். அத்துடன் நிற்காமல் அதைத் தாண்டி திடீரென
இந்த இயக்கத்தை நடத்துவதற்கு போராட்டக் காரர்களுக்கு அந்நிய நாடுகளில் இருந்து நிதி
வருவதாகத் தகவல் வந்துள்ளது என்றும் அதனை மத்திய அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது
என்றும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு போராட்டக் காரர்களின் கோபத்தை இன்னும் தூண்டிவிட்டார்.
அன்னிய நிதி அவதூறு
உண்மையிலேயே
சில விசயங்கள் துரதிஷ்ட வசமானவைதான். அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்குத்
தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை. ஆனால் அதற்கு ஓரளவு ஆதரவும் அமைப்பும் உள்ள இடம் கன்னியாகுமரி
மாவட்டம்.
ஆனால்
அங்கும் கூட அதன் தொண்டர்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள இயக்கங்களை யார் நடத்துகிறார்கள்?
அது நடைபெறக் காரணமாக உள்ளது எது என்பனவற்றைத் தெரிந்தவர்களாக இல்லை. இதையே அமைச்சர்
நாராயணசாமியின் அன்னிய நிதி குறித்த கூற்று வெளிப்படுத்துகிறது.
இந்த
இயக்கத்தில் அந்நிய சக்திகளின் தூண்டுதல் எதுவும் இல்லை என்பது அவ்வட்டார மக்களுக்கு
நன்கு தெரியும். முக்கியமாக அவ்வட்டார மக்களின் அச்ச உணர்வே இந்த இயக்கம் வலுவுடன்
நடைபெற்றுக் கொண்டிருப்பதற்குக் காரணம்.
இவ்விசயத்தில்
தொலைநோக்குப் பார்வை மருந்துக்குக்கூட இல்லாமல் செயல்பட்டுள்ளது அரசாங்கம்தான். அதுதான்
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை ஆலையிலிருந்து கூப்பிடும் தொலைவில்
அமைத்துள்ளது.
ஆனால்
ஆலையில் வேலை செய்யும் அலுவலர்களுக்கான குடியிருப்புகளோ குறைந்த பட்சம் 15 கிலோமீட்டர்
தள்ளி அமைந்துள்ளன.
இப்படிப்பட்ட
முன்யோசனையில்லாத ஒரு நிலையினை அரசு எப்படி எடுத்தது என்பது ஆச்சரியம் விளைவிப்பதாக
உள்ளது. உலகின் வேறெந்த நாட்டிலும் இப்படிப்பட்ட சூழ்நிலையை நினைத்துப் பார்க்கவே முடியாது.
இந்நிலையில்
அந்நிய நிதி ஆதாரங்கள் வருகின்றன என்று கூறுவதெல்லாம் அதீத தேசிய வெறிவாதத்தைத் தூண்டி
வகுப்புவாத சக்திகளின் கரங்களை வலிமைப்படுத்துவதைத் தவிர வேறெதையும் செய்யாது.
எந்த
வியத்திலும் பொறுப்பற்ற விதத்தில் அரசியல் செய்து அதில் ஆதாயம் பெற நினைக்கும் அவலட்சணப்
போக்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடுடின்றி அனைத்துக் கட்சியினரையும் கவ்விக்
கொண்டுள்ளதையே இது காட்டுகிறது.
ஏற்கனவே
மண்டைக்காடு சம்பவத்தினால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ மற்றும் இதரப்பகுதி மக்களுக்கு
இடையில் ஏற்பட்ட மோதலும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மாறாதிருக்கக் கூடிய சூழ்நிலையில்
இப்படியயாரு கருத்தை முன்வைத்து வகுப்புவாத சக்திகள் எழுப்பிவரும் வகுப்புவாத நெருப்பினைத்
தூண்டுவதாக திரு நாராயணசாமி அவர்களின் அந்நிய நிதி என்ற வாதம் அமைந்துள்ளது.
தமிழக
அரசும் முன்பு அது காட்டியது போன்ற இந்த இயக்கத்திற்கான ஆதரவுப் போக்கினை தற்போது காட்டவில்லை.
அதன் போக்கில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன.
அதாவது
காவல்துறை முன்பு கடைப்பிடித்து வந்த ஒப்பு நோக்குமிடத்திலான நடுநிலைத் தன்மையைக் கைவிட்டுத்
தற்போது அந்த இயக்கத்தை ஆதரிக்கும் தேவாலயக் குருமார்கள் மீது வழக்குகளை பதிவு செய்வது
போன்ற வேலைகளைச் செய்து கொண்டுள்ளது.
அதாவது
மத நிறுவனங்கள் இதுபோன்ற கிளர்ச்சிகளை தூண்டுவனவாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையிலும்
இடிந்தகரையில் நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்கள் காவல்துறையின் அனுமதி இல்லாமல்
நடத்தப்படுபவை என்ற அடிப்படையிலும் அவ்வியக்கத்தில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிவு
செய்யப்படுகின்றன.
இந்நிலையில்
வேறொரு வளர்ச்சிப் போக்கும் உருவாகியுள்ளது. இப்போராட்டக் குழு மத்தியிலிருந்து அனுப்பப்படும்
நிபுணர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமித்த 5பேர் கொண்ட தமிழக அரசின்
சார்பிலான குழுவில் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிப் ஒருவர் அக்குழுவில் தான்
இடம் பெற விரும்பவில்; ஏனெனில் எனக்கு அணுவிஞ்ஞானம் அவ்வளவாகத் தெரியாது என்று கூறி
அதிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில்
இந்த அணுஉலை குறித்த அனைத்துக் கேள்விகளையும் இப்பின்னணியில் அலசி ஆராய்வது நமக்கு
மிகவும் அவசியமாகும். போராட்டக் குழுவின் ஒரு பகுதியினர் கூறுவது போல் அணு விஞ்ஞானமே
சமூகத்திற்கு ஒத்துவராதது என்ற கேள்வியில் தொடங்கி இது சார்ந்த பல கேள்விகளை சீர்தூக்கிப்
பார்த்து சரியான முடிவுகளுக்கு வருவது இன்றைய நிலையின் அவசர அவசியமாகும்.
டி.டி. கொசாம்பியின் கருத்து
அணுசக்தி
மூலம் எரிபொருள் தயாரிப்பது அதிக செலவிற்கு வழிவகுக்கக் கூடியது. அதைக் காட்டிலும்
நமது நாட்டைப் போன்ற வெப்ப நாடுகளில் சூரிய வெப்பம், காற்று ஆகியவற்றின் மூலம் அதிகப்
பாதிப்பில்லாத வகையில் எரிபொருளை உருவாக்கலாம் என்பது அணுசக்தி எதிர்ப்பாளர்களின் ஒரு
முக்கிய வாதமாகும். உண்மைதான், ஆண்டில் 80 சதவீத நாட்கள் சூரிய ஒளி குறைவின்றிக் கிடைக்கும்
நமது நாட்டில் அது கட்டாயம் பரிசீலக்கப்பட வேண்டியதொரு கருத்தே.
ஆனால்
சூரிய வெப்பம் மற்றும் காற்று மூலம் பெறப்படும் சக்தி நமதுத் தேவைக்குகந்த விதத்தில்
தேவைப்படும் போதெல்லாம் கிட்ட வல்லதல்ல. சூரிய வெப்பம் மூலம் பெருமளவு மின்சாரம் தயாரிக்க
மிக அதிகம் செலவிட வேண்டியிருக்கும்; இதன்மூலம் கிடைக்கும் சக்தியைச் சேமித்து வைக்கவும்
மிக அதிகம் செலவாகும்; தேவையான மின்சாரத்தைத் தடையின்றிப் பெற இந்தவகை உற்பத்தி பலனளிக்காது
என்பவை எதிர்த்தரப்பு விஞ்ஞானிகளின் வாதமாகும்.
தலைசிறந்த
மார்க்சிய அறிஞரும் விஞ்ஞானியுமான டி.டி.கொசாம்பி அவர்களும் கூட சூரிய வெப்பம் மூலம்
மின்சாரம் உற்பத்தி செய்வதே தலைசிறந்தது என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்.
ஆனால்
அவர் இக்கருத்தை முன்வைத்தது 60களில் ஆகும். அக்காலகட்டத்தில் அவர் மத்தியத்துவப் படுத்தப்பட்ட
தொழில் மயமாக்கும் போக்குகளுக்குப் பதிலாக மத்தியத்துவப் படுத்தப்படாத கிராமங்களை மையமாகக்
கொண்ட இந்தியாவை தனது மனக்கண்ணில் நிறுத்திப் பார்த்து சூரிய வெப்பம் மூலம் மின்சாரம்
உற்பத்தி செய்வதே நமது நாட்டிற்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார்.
அதாவது
சூரிய வெப்பம் மூலமாகக் கிடைக்கும் எரிசக்தியை சேமித்து வைத்து அக்கிராமப்புற மக்களின்
பொருட் தேவைகளை நிறைவேற்றவல்ல தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தி அதன்மூலம் சுயதேவைப்
பூர்த்திப் பொருளாதாரத்தை பராமரிப்பது என்பது அவரது கருத்தாக இருந்தது.
ஆனால்
கம்யூனிஸ்ட்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இந்த சமூக அமைப்பை எவ்வாறு மாற்ற
வேண்டும் என்று சிந்திக்க வேண்டுமே தவிர தற்போது நம் கண்முன் இல்லாத ஒரு சூழலை நமது
மனதில் நிறுத்திப் பார்க்கக் கூடாது.
அதன்
பொருள் டி.டி.கொசாம்பி அவர்கள் அவ்வாறு பார்த்தார் என்று கூறுவதல்ல. அவர் இக்கருத்தை
முன்வைத்த காலகட்டத்தைத் தாண்டி நமது பொருளாதாரமும் அதற்கு அடித்தளமாக இருக்கும் தொழிற்சாலைகளும்
தற்போது மிகவும் மத்தியத்துவப் படுத்தப்பட்டவையாக ஆகிவிட்டன.
அதாவது
உள்ளூர் மக்களின் அல்லது அதையும் தாண்டி உள்நாட்டு மக்களின் தேவைக்கான பொருள்களை உற்பத்தி
செய்வது என்ற நிலையைத் தாண்டி இப்போது உலக மக்களின் தேவைக்கான பொருட்களை உற்பத்தி செய்பவையாக
அனைத்து நாடுகளின் பொருளாதாரங் களும் தொழிற்சாலைகளும் மாறியுள்ளன.
வளர்ந்து வரும் எரிபொருள் தேவை
அப்படிப்பட்ட
மாற்றத்தில் இந்தியா, பிரேசில், சீனா போன்ற நாடுகள் மிகவும் முன்னணியில் உள்ளன. அதனை
மையமாகக் கொண்டே குறிப்பாக உலகமயத்திற்குப் பின்பே நமது எரிபொருள் தேவை மிகவும் அதிகரித்திருக்கிறது.
இவ்வாறு
கூடுதலாகியுள்ள தேவையை நிறைவேற்றவும் மத்தியத்துவப் படுத்தப்பட்டுள்ள பெரிய தொழிற்சாலைகளுக்கான
எரிபொருளை வழங்கவும் சூரிய வெப்பம் மூலம் பெறப்படும் மின்சாரம் எவ்வளவு தூரம் போதுமானதாக
இருக்கும் என்பது இன்று எழக்கூடிய ஒரு முக்கியக் கேள்வியாகும்.
மேலை நாடுகள் அணுஉலைகளை மூடுவதன் பின்னணி
இதுகுறித்து
முன்வைக்கப்படும் இன்னொரு வாதம் ஃபுக்குசிமா நிகழ்விற்குப் பின்பு உலக நாடுகள் அனைத்துமே
அணுமின் நிலையங்களைத் தொடர்ந்து நடத்துவதை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன; பெல்ஜியம்
தனது நாட்டின் அணுஉலைகளை மூடப் போவதாக அறிவித்துள்ளது; ஜெர்மனியும் அதையே செய்யப் போகிறது;
அவ்வாறிருக்கையில் நாம் மட்டும் அணுசக்தியை நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியம் என்ன
என்பதாகும்.
இந்தக்
கேள்வியை எழுப்புபவர்களில் கம்யூனிஸ்ட்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளக் கூடியவர்களும்
இருக்கிறார்கள். இவர்கள் கூறக்கூடிய பெல்ஜியம், ஜெர்மனி போன்ற நாடுகள் அனைத்தும் ஊரறிந்த
உலகறிந்த முதலாளித்துவ நாடுகள். இவை அணுமின் நிலையங்களை உருவாக்கிய போதே அதிலுள்ள எதிர்மறை
அம்சங்களை அறிந்திருந்தன. அணுசக்திக் கழிவிலிருந்து வெளிவரும் கதிரியக்கம் பலகாலம்
நீடிக்கக் கூடியது; உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கக் கூடியது என்பதையயல்லாம் தெரிந்தே
தான் இவர்கள் அணுசக்தி நிலையங்களைத் தங்கள் நாடுகளில் உருவாக்கினர்.
அதற்குப்
பின் செர்னோபில்லில் ஒரு பெரும் விபத்து நடந்த சூழ்நிலையிலும் கூட இவர்கள் தங்கள் நாட்டிலுள்ள
அணு உலைகளை மூடத் தீர்மானிக்கவில்லை.
செர்னோபில்
விபத்தைக் காட்டிலும் ஃபுக்குசிமாவில் சுனாமி காரணமாக நடந்த விபத்து பெரியதல்ல. இருந்தும்
இப்போது இவர்கள் திடீரென்று அணு உலைகளை மூடப் போவதாகக் கூறுவதற்கான காரணம் என்ன என்பதை
நாம் பார்க்க வேண்டும். இல்லாவிடில் தற்போது அவை அணு உலைகளை மூடப் போவதாக எடுத்துள்ள
முடிவுகளை வைத்து இந்த முதலாளித்துவ அரசுகள் தங்களது எரிபொருள் தேவையைப் புறக்கணித்துக்
கூட மக்கள் நலனைப் பாதுகாக்கும் தன்மை கொண்டவை என்று இந்த அரசுகளுக்கு சான்றிதழ் வழங்குபவர்களாக
நாம் ஆகிவிடுவோம்.
உண்மையில்
இப்போது உருவாக்கப்பட்ட ஆலைகளை மூடும் அளவிற்கு மனித நலனில் அக்கறை உள்ளது போல் காட்டும்
இவர்கள் அணுசக்தியின் எதிர்மறை விளைவுகளை அறிந்திருந்தும் முதலில் அணுசக்தி நிலையங்களைஉருவாக்கியது
ஏன்? தற்போது அவற்றை மூடப் போவதாக அறிவிப்பதும் ஏன்? என்பதை நாம் ஆழ்ந்து சிந்திக்க
வேண்டும்
அவ்வாறு
சிந்தித்துப் பார்த்தால் ஒரு வியத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். அதாவது
மேற்கத்திய உலகம் முழுவதுமே தற்போது முன்னெப்போதும் கண்டிராத ஒரு கடுமையான உற்பத்தித்
தேக்க நெருக்கடியில் உள்ளது; அதில் உள்ளடங்கிய நாடுகளின் வளர்ச்சி விகிதங்கள் ஒரு சதவிகிதம்
ஒன்றரை சதவிகிதம் என்ற அளவிற்கே உள்ளன; அந்த அளவிற்கு அவற்றின் எரிபொருள் தேவையும்
குறைந்துள்ளது. ஒரு சமயம் உலகச் சந்தையை இலக்காகக் கொண்டு உற்பத்தி நடத்திய மேலைநாட்டு
முதலாளித்துவத்திற்கு எரிபொருள் தேவை மிக அதிகமாக இருந்தது. அதனால் அணுசக்தியை நோக்கியும்
அது மிக வேகமாகச் சென்றது.
தற்போது
இந்தியா போன்ற நாடுகளில் குறைந்த விலைக்குக் கிடைக்கும் உழைப்புத் திறனைப் பயன்படுத்தி
அதிகபட்ச லாபம் ஈட்டும் வாய்ப்பு அந்நாட்டு முதலாளிகளுக்கு ஏற்பட்டுள்ளதால் அவர்கள்
தங்களது தொழில்களை இதுபோன்ற நாடுகளுக்கு திருப்பிவிடத் தொடங்கியுள்ளனர்.
அதனால்தான்
இந்நாடுகளில் பல தொழில்களுக்கு மூடுவிழா நடத்தப்படும் போது நமது ஆட்சியாளர்கள் சிறப்புப்
பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்துவதில் சிரத்தையெடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்தப்
பின்னணியில் தங்கள் நாடுகளின் குறைந்துள்ள தற்போதைய எரிபொருள் தேவைகளுக்கு போதுமான
விதத்தில் அதிகச்செலவற்ற மின்சாரமே கிடைக்கும் போது கூடுதல் செலவில் தயாரிக்கப்படும்
அணு மின்சாரம் தேவையில்லை என்ற எண்ணத்திற்கு அவர்கள் வந்துள்ளனர்.
முதலாளித்துவம் கொடுமையானது
அந்தப்
பின்னணியில் தான் ஏதோ மக்களின் ஆரோக்கியத்தில் தீடீர் அக்கறை கொண்டுவிட்டவர்களைப் போல்
அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் அணுமின் நிலையங்களை மூடும் தங்களது விருப்பத்தைத் தெரிவித்துத்
தாங்கள் உன்னதமானவர்கள் என்று காட்டிக் கொள்கின்றனர்.
அதாவது
அவ்வாறு காட்டுவதற்கு அவர்களுக்குக் கிட்டியுள்ள வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்
கொண்டுள்ளனர். அதனை வர்க்கப் பார்வையற்றுப் போன இங்குள்ள ‘கம்யூனிஸ்ட்களும்’ புறச்
சூழ்நிலைகளை உரிய முறையில் ஆராய்ந்து அறியாது அந்நாடுகளின் ஆட்சியாளர்களுக்குச் சான்றிதழ்கள்
வழங்கிக் கொண்டுள்ளனர்.
உண்மையில்
அணுசக்தி மற்றும் அதில் உள்பொதிந்துள்ள பல்வேறு எதிர்மறைத் தன்மைகள் ஆகியவற்றைக் காட்டிலும்
மிகவும் கொடுமையானது முதலாளித்துவமே. ஏனெனில் அணுசக்தியில் சம்பந்தப்பட்டுள்ளது விஞ்ஞானம்
அதில் காணப்படும் கோளாறுகள் அனைத்திற்கும் தீர்வுகாணும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு
நாளடைவில் அவற்றைப் போக்க முடியும் என்பது மனித குலத்திற்குக் கிட்டியுள்ள விஞ்ஞானப்பூர்வ
அனுபவம்.
ஆனால்
இன்று மனித சமூகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமாக உருவாகி அழுகி நாற்றெமெடுக்கும்
நிலைக்கு வந்துவிட்ட முதலாளித்துவத்தைச் சீர்படுத்தியோ அதன் எதிர்மறை அம்சங்களைக் குறைத்தோ
சரிசெய்தோ விஞ்ஞானத்தைப் போல் பயன்படுத்தவே முடியாது.
உண்மையில்
மனிதகுலத்தைக் காப்பாற்ற வேண்டியது முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் இருந்துதானே தவிர
அணுசக்தியின் கதிரியக்கத்தில் இருந்தல்ல என்பதை யார் உணர்கிறார்களோ உணரவில்லையோ கம்யூனிஸ்ட்கள்
என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் உணராமல் இருக்கக் கூடாது. அவ்வாறு உணராமல் இருந்தால்
அதன் பொருள் ஒன்றே ஒன்றுதான் அவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்று பாவனை காட்டுபவர்கள்; உண்மையான
கம்யூனிஸ்ட்கள் அல்ல என்பதுதான்.
இதில்
எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய மற்றொரு அம்சம் மேலை நாடுகள் அனைத்திலும் மக்கள்தொகைப்
பெருக்கம் மிகவும் குறைந்துள்ளது. அந்நிலையில் அம்மக்களில் ஒவ்வொருவரும் உபயோகிக்கும்
மின்சாரத்தின் அளவு எதிர்காலத்தில் பெரிதாக அதிகரிக்கப் போவதில்லை.
ஆனால்
நமது நாட்டின் நிலை அதிலிருந்து பெரிதும் மாறுபட்டது. இங்கு மக்கட்தொகை வளர்ச்சி விகிதம்
மேலை நாடுகளில் உள்ளதைப் போல் பல மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் இன்றைய நிலையில் அதுதான்
நமது வலுவாகவும் கருதப்படுகிறது. அதாவது மக்கட்தொகைப் பெருக்கமே மனிதகுலத்தை எதிர்கொண்டுள்ள
ஒரு பெரிய பிரச்னை என்று மால்துஸ் என்ற முதலாளித்துவப் பொருளாதார நிபுணரால் முன்வைக்கப்பட்ட
கண்ணோட்டம் உலகமயத்திற்குப் பின்பு நமது நாட்டைப் பொறுத்தவரையில் செல்லுபடியாகாததாக
ஆகியுள்ளது.
அதாவது
இந்தியாவின் வலுவே மிக அதிக எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்ட ஒரு சமூகமாக அது உள்ளது
என்பது தான். இதற்கு நேர் மாறாக மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் முதியவர் மக்கட்தொகையே
மிகுந்துள்ளது. அவர்களுக்கு ஓய்வூதியம் எப்படி வழங்குவது என்பதே அந்நாட்டு ஆட்சியாளர்களின்
தற்போதைய மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
இந்நிலையில்
பெருகி வரும் மக்கட்தொகையின் கூடுதல் மின்சாரத் தேவையையும் கணக்கிலெடுத்துக் கொண்டு
நிலை எடுக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
அறிவைப்
புகட்டுவதும் பீதியைக் கிளப்புவதும்அடுத்ததாக அணுஉலை குறித்து மக்களிடையே பீதியைக்
கிளப்பக் கூடாது. அணுசக்தியை உருவாக்குவதன் மூலமாக வெளிவரும் கதிரியக்கம் குறித்து
ஒரு பீதியே அணுசக்தி எதிர்ப்பாளர்களால் பெரிதும் தற்போது கிளப்பப்படுகிறது.
அப்துல்
கலாம் அவர்கள் தனது கட்டுரையில் கூறியிருப்பது போல் அனல் மின்சாரத்திற்குப் பயன்படுத்தப்படும்
நிலக்கரி போன்ற எரிபொருளும் கூட மிகக் கடுமையான எதிர்மறை விளைவுகளைக் கொண்டதுதான்.
அதனால்
சுற்றுசூழல் மாசுபடுவதும் விண்வெளியின் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதும் மிகவும் வெளிப்படையானது.
இன்று புற்றுநோய் நமது நாட்டில் மிக அதிகமாக பரவி வருவதற்கும் ஒரு காரணம் ஓசோன் படலம்
பாதிக்கப்படுவதால் சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் அப்படியே மக்களைத்
தாக்குவதுதான்.
அணு
மின்சாரம் தேவையில்லை என்று கூறக் கூடியவர்கள் நிச்சயமாக அனல் மின்சாரம் குறித்து அப்துல்
கலாம் போன்றவர்கள் முன்வைத்துள்ள கருத்துக்களுக்கும் பதில் கூற முடிந்தவர்களாக இருக்க
வேண்டும். ஆனால் வருந்தத்தகுந்த விதத்தில் அதற்குப் பதில் கூற யாருமே முயலக்கூட இல்லை.
அணுஉலை எதிர்ப்பு விஞ்ஞானிகளின் வாதங்கள்
அப்துல்
கலாம் அவர்களின் கட்டுரை வெளிவந்த பின்பு ஹிந்து நாளிதழில் தங்களது கருத்துக்களை முன்வைத்த
அணுஉலை எதிர்ப்பு விஞ்ஞானிகள் வேறொரு கருத்தை முன்வைத்தனர்.
அதாவது
நாம் விடுதலை பெற்ற காலத்தில் நிர்ணயித்த இலக்குகளுக்கு உகந்த வகையில் அணுசக்தி நிலையங்கள்
ஏன் ஏற்படுத்தப்படவில்லை? ஏன் இன்னும் நமது நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரப் பயன்பாட்டில்
அணுமின்சாரத்தின் பங்கு 2.8 சதவிகிதம் என்பதாக மட்டும் உள்ளது என்ற கேள்வியினை அக்கட்டுரையில்
அவர்கள் எழுப்பினர்.
அதாவது
அதன்மூலம் அணு மின்சாரத்தின் வளர்ச்சி சாத்தியமற்றதாக இருப்பதால் தான் நேரு போன்ற அன்றைய
ஆட்சியாளர்கள் நினைத்த விதத்தில் அது நிறைவேறவில்லை என்று அவர்கள் கூற வருகின்றனர்.
ஒரு
வகையில் பார்த்தால் இதுபோன்ற கருத்து விஞ்ஞானிகளிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும்
கருத்தல்ல. இது திட்டமிடுபவர் களால் முன்வைக்கப்பட வேண்டிய தொரு கருத்து.
அதாவது
ஜவகர்லால் நேரு ஒருமுறை சக்கரவர்த்தி ராஜாகோபாலாச்சாரி யாரிடம் சீன நாடு அதன் விடுதலைக்கு
பின் சாதித்த பிரமிக்கத்தக்க வளர்ச்சியைக் கண்ணுற்ற பின்பு ஒருவகை வேதனையுடன் நாமும்
எதை எதையோ செய்து பார்க்கிறோம்; ஆனால் பெரிய மாற்றம் எதையும் நம்மால் கொண்டுவர முடியவில்லையே
என்று கூறி ஆதங்கப்பட்டாராம்.
இதை
நாம் ஏன் இங்கு முன்வைக்கிறோம் என்றால் நமது திட்டங்களை நாம் வகுக்கும் வேகத்தில் அவை
நிறைவேற வேண்டுமென்றால் அதற்கு உகந்த சமூகச் சூழல் இருக்க வேண்டும்.
வெள்ளை
ஏகாதிபத்தியத்தின் சுரண்டலில் இருந்து விடுதலை பெற்றவுடன் எத்தனை துரிதமாக தொழில் வளர்ச்சியை
எட்ட முடியுமோ அத்தனை துரிதமாக அதனை எட்டுவதற்கு நமது ஆட்சியாளர்கள் குறிப்பாக நேரு
போன்றவர்கள் திட்டமிட்டனர்.
ஆனால்
அது அமுலாவது ஒரு நேர்கோட்டில் செல்வது போல் அத்தனை சிக்கல் இல்லாததாக இருக்கவில்லை.
ஏனெனில் அத்தகைய தொழில் வளர்ச்சியைச் சாதிப்பதற்கு மக்களின் தேவையைக் கணக்கி லெடுத்துக்
கொண்டு உற்பத்தியைத் தீர்மானிக்கும் சோசலிச சமூக அமைப்பாக நமது அமைப்பு இருந்திருக்க
வேண்டும். ஆனால் அது அவ்வாறு இல்லை. மாறாக மக்களின் வாங்கும் சக்தியைக் கணக்கிலெடுத்துக்
கொண்டு உற்பத்தியை நடத்தும் தனியார் முதலாளித்துவமே இங்கு நமது தொழில் மயமாக்கலின்
ஒரு உந்து சக்தியாக இருந்தது.
நமது
மக்களின் வாங்கும் சக்திக் குறைவின் காரணமாக ஓரளவிற்கு மேல் தொழில் மயமாதல் நமது நாட்டில்
வேகமாக நடைபெறவில்லை. அவ்வாறு நடைபெறுவதற்கான சூழ்நிலையைத் தனியார் முதலாளித்துவம்
இங்கு உருவாக்கி வைத்திருக்கவில்லை. எனவே தேக்கம் மின் உற்பத்தியில் மட்டுமல்ல கல்வி,
பாதுக்காக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், பொது சுகாதாரம் ஆகிய அனைத்திலுமே இருந்தது.
ஒரு சமூகத்தின் தொழில் வளர்ச்சி நீர் மின்சாரம், அனல் மின்சாரம் ஆகியவற்றை முழுமையாகப்
பயன்படுத்தும் அளவிற்குக்கூட வளர முடியாத நிலையில் இருந்தால் அது அணு மின்சாரத்தை நோக்கி
வேகமாக எவ்வாறு செல்லும்?
அதாவது
மின்சாரத்தை நிறையத் தயாரித்து வைத்தால் தொழில்கள் வளரும் என்ற நிலை ஒரு குறிப்பிட்ட
அளவிற்கு மக்களின் தேவை அடிப்படையிலான பொருள் உற்பத்தியைத் திட்டமிட்டு நடத்தவல்லதாக
இருக்கும் சமூக அமைப்புகளில் மட்டுமே சாத்தியம். எனவே தீர்மானித்த இலக்கை எட்டாததனாலேயே
அது சரியான ஒன்றல்ல என்ற வாதம் மிகச் சரியானதல்ல.
நெருக்கமும் சார்பும் ஒன்றல்ல
அதே
விஞ்ஞானிகள் தற்போது பல அபாயங்களை உள்ளடக்கியதாக இருக்கக் கூடிய அணு மின்சாரத்தை நோக்கிச்
செல்லும் இந்திய அரசு ஈரானிலிருந்து குழாய் மூலமாக இயற்கை எரிவாயுவினை கொண்டுவரும்
திட்டத்தைக் கைவிட்டு விட்டது. அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் ஒன்றினைச் செய்து கொண்டு
அதன் விளைவாக அமெரிக்காவிற்குச் சாதகமான நிலை எடுக்க வேண்டும் என்பதற்காக ஈரானுக்கு
எதிராக ஐ.ஏ.இ.ஏ. அமைப்பில் வாக்களித்து அந்த வாய்ப்பைப் பாழ்படுத்திவிட்டது என்றும்
கூறியுள்ளனர்.
அத்துடன்
அதன்மூலம் நமது வெளிநாட்டுக் கொள்கையின் நடுநிலைத் தன்மையையும் அது சீர்குலைத்து விட்டது
என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த
வாதத்தில் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்படும் இரண்டு கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. ஒன்று
ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை அதன் தேவைகளை மையமாக வைத்துக் கடைப்பிடிக்கப்படும்
உள்நாட்டுக் கொள்கையிலிருந்து மாறுபட்டதாகவும் இருக்க முடியும் என்ற கருத்து.
மற்றொன்று
இந்தியா அடிமைத்தனமாக அமெரிக்க ஆதரவு நிலையைத் தற்போது மேற்கொள்கிறது. அதாவது அணு ஒப்பந்தத்தில்
அது கையயழுத்திட்டது அமெரிக்காவின் வற்புறுத்திலின் காரணமாகவே என்பதாகும்.
இந்த
இரண்டு கருத்துக்களுமே தத்துவார்த்த ரீதியில் ஆராய்ந்து பார்த்தால் மாறாநிலை தத்துவ
அடிப்படையினைக் கொண்டதாகும். அதாவது பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் ஒன்றொடொன்று தொடர்புடையவை
என்பதை அத்தத்துவம் பார்ப்பதில்லை.
அப்படி
ஒன்றையயான்று தொடர்பு படுத்திப் பார்க்கும் கம்யூனிஸ்ட்கள் கடைப்பிடிக்க வேண்டிய இயக்கவியல்
பார்வையின் மூலம் பார்த்தால் இந்த இரண்டு கருத்துக்களும் எத்தனை கோளாறு உடையவை என்பதை
நாம் தெரிந்துகொள்ள முடியும்.
எந்தவொரு
நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையும் அதன் உள்நாட்டுத் தேவையிலிருந்து மாறுபட்டதாக இருக்க
முடியாது. உலகில் சோசலிச முகாம், ஏகாதிபத்திய முகாம் என்று இரண்டு முகாம்கள் இருந்த
போது நமது நாட்டு முதலாளிகளுக்கு சாதகம் ஏற்படுத்த வல்லதாக நமது நடுநிலைக் கொள்கையும்
அதனை வெளிப்படுத்தும் வெளியுறவுக் கொள்கையும் இருந்தன.
தற்போது
சோசலிச முகாம் என்று ஒன்று இல்லாமல் போய்விட்ட நிலையில் அது நமது முதலாளிகளுக்குப்
பயன்தரத்தக்க கொள்கையல்ல. மேலும் உலகமயத்தின் காரணமாக பொருளாதார ரீதியில் இந்தியா மேலை
நாடுகளுடன் ஒப்பிடும் போது பராமரித்துவரும் கூடுதல் வளர்ச்சி விகிதமும் முதலாளித்துவ
ரீதியான வளர்ச்சியும் தற்போது ஆசிய நாடுகளை மையம் கொண்டதாக ஆகிவிட்டது. இந்த நிலையில்
இந்தியாவைத் தன் பக்கம் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வழக்கமாக அமெரிக்கா வலியுறுத்தும்
பல்வேறு நிபந்தனைகளை அணு ஒப்பந்தத்தின் போது வலியுறுத்தாமல் அமெரிக்கா இறங்கி வந்தது.
அதனால் இறங்கி வந்தது அமெரிக்காவே தவிர இந்தியா அல்ல.
எனவே
இதை வளர்ந்த ஏகாதிபத்தியமான அமெரிக்கா, வளர்ந்துவரும் ஏகாதிபத்தியக் கூறுகள் கொண்டதான
இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நெருக்கம் என்று கூற முடியுமே தவிர, இந்தியாவின்
அமெரிக்கச் சார்பு என்று கூற முடியாது.
அமெரிக்கா
இறங்கி வந்ததற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அமெரிக்க முதலாளிகளின் வர்த்தக நலனை மனதிற்கொண்டு
செயல்படும் அமெரிக்க அரசு அதன் யுரேனிய, அணுமின் சாதன வர்த்தகத்தை மேம்படுத்தும் கண்ணோட்டத்துடன்
அணுசக்தித் தேவை கொண்ட இந்தியாவுடன் அதிகபட்சப் பேரத்திற்குப் பின் அந்த ஒப்பந்தத்தைச்
செய்து கொண்டது. அந்த ஒப்பந்தக் காகிதத்தில் இவர்கள் இட்ட கையெழுத்தின் மை உலருமுன்பே
பிரான்ஸ் போன்ற வேறு பல நாடுகளோடும் யுரேனியம் வாங்குவதைச் சாத்தியமாக்கும் ஒப்பந்தங்களை
இந்திய ஆட்சியாளர்கள் செய்து கொண்டனர். இது இந்தியா நடுநிலைத் தன்மையை விட்டுக் கொடுத்து
அடிமை சாசனத்தில் கையயழுத்திட்டதையா காட்டுகிறது?
உலகில்,
சமூகத்தில், பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்து மாற்றங்களையும் கணக்கிலெடுக்காமல் பழைய
கண்ணோட்டங்களையே நிரந்தரமாக வைத்துக் கொண்டிருப்பவர்களாக நாம் ஆகிவிட்டால் கருத்துக்
குருட்டுத்தனம் நம்மைக் கவ்விக் கொண்டுவிடும், அது நாம் நம்மை விஞ்ஞானிகள் என்று அறிவித்துக்
கொண்டாலும் கூட நடக்கும்.
தமிழ்த்
தன்னார்வ அமைப்புகளின் வாதமான தமிழர்களைப் பாதிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த
அணுஉலை இங்கு கொண்டுவரப் பட்டிருக்கிறது என்ற கருத்து பதில் கூறத்தக்க தரம் வாய்ந்ததல்ல.
அதனைப் பதில் கூறிக் கெளரவப் படுத்துவதே அபத்தம்.
ஒப்புநோக்குமிடத்து
அணுமின் நிலையம் கொண்டு வருவதற்கு ஏற்ற சூழ்நிலைகளைக் கொண்டதாக கூடங்குளம் இருந்தது.
அது மட்டுமே அங்கு அணுமின் நிலையம் கொண்டுவரப்பட்டதற்குக் காரணமாக இருக்க முடியுமே
தவிர இது தமிழ் நாட்டில் உள்ளது; இதன் பாதிப்புகள் தமிழர்களையே தாக்கும் என்ற தமிழ்
விரோத மனநிலையுடன் இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறுவது அப்பட்டமான அபத்தம்.
இவர்களது
தமிழ்வெறி மனநிலை எத்தனை உச்சத்தில் உள்ளது என்பதை மட்டுமே இது வெளிப்படுத்துகிறது.
எத்தகைய குருட்டுத்தனமான, அறிவோடு சிறிதும் பொருந்தி வராத வாதங்களையும் தமிழ்நாட்டில்
தமிழ் மொழி மற்றும் இனத்தின் பெயரில் வைக்க முடியும் என்ற புது மரபு இவர்களால் உருவாக்கப்
பட்டுள்ளதையே இது காட்டுகிறது.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு எதிரான நிலை கூடாது
மேலும்
ஒரு கேள்வி முன்வைக்கப் படுகிறது. அது முதலாளிகளின் நலனுக்காக, அவர்களது எரிபொருள்
தேவையை நிறைவேற்ற, மக்கள் நலனைப் புறக்கணித்து இத்திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது என்பதாகும்.
உண்மைதான்
முதலாளிகளின் தேவைக்காகத் தான் இது கொண்டுவரப் படுகிறது. சமூகம் முதலாளித்துவ சமூகமாக
இருக்கும் வரை அவர்களது நலனுக்காகவே அனைத்துத் திட்டங்களும் கொண்டுவரப்படும். அதற்கான
தேவை அதிகரிப்பை மையமாக வைத்தே பல காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டம் மீண்டும்
அதி வேகத்தில் அமுலாக்கப்படவிருக்கிறது.
இந்தத்
திட்டம் மட்டுமல்ல அனைத்து வளர்ச்சித் திட்டங்களுமே அந்தத் திசை வழியில் தான் இங்கு
செய்யப் படுகின்றன. அந்நிய மூலதனம் தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்னும் கூடுதலாக
வருவதற்கு வழிவகுப்பதற்காகவே ஹைதராபாத், பெங்களூர், சென்னை இவற்றை இணைக்கும் ஐ.டி.
நெடுஞ்சாலைத் திட்டம் அமுலாக்கப்பட்டு அதன் மூலமாக விமான நிலையங்கள், முன்னேறிய சாலை
வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப் பட்டன. ஏழைகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு இலவசத்
திட்டங்கள் மட்டுமே அமுலாக்கப்படுகின்றன.
எனவே
இந்த அரசும் திட்டமிடுபவர்களும் ஏதோ நடுநிலைத் தன்மை பொருந்தியவர்கள் என எண்ணிக்கொண்டு
முதலாளிகள் நலனுக்காக வரும் திட்டங்கள் அனைத்தையும் நாம் எதிர்க்க வேண்டும் என்ற போக்குடன்
இந்த வாதத்தை முன்வைப்போர் பேசுகின்றனர்.
முதலாளித்துவ
லாபநோக்க உற்பத்தி முறைக்கு உதவுவதற்காக என்றாலும் மின் உற்பத்திச் சாதனங்கள் உற்பத்தி
சக்திகளின் வளர்ச்சிக்கு உதவக் கூடியவை; நெருக்கடி சூழ்ந்த இன்றைய நிலையில் வளர்ந்த
முதலாளித்துவ நாடுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை முடக்கவே செய்கின்றன.
ஒரு
பிரத்யேக உலகமயச் சூழ்நிலையில் இந்திய முதலாளி வர்க்கம் இத்தகைய உற்பத்தி சக்தியின்
வளர்ச்சிக்குச் செல்ல விரும்புகிறது. அவ்வாறு உற்பத்தி சக்தியின் வளர்ச்சிக்கு உதவவல்ல
சாதனங்கள் என்ற ரீதியில் கொண்டுவரப்படும் அனைத்து ஆலைகளையும் அமுலாக்கப்படும் உயர்தொழில்
நுட்பத்தையும் கம்யூனிஸ்ட் அறிக்கை காலம் தொட்டு மார்க்சிஸ்ட்கள் வரவேற்றே வந்துள்ளனர்.
அதைவிடுத்து
பழைய அமைதியான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடுவது
கடிகாரத்தின் முள்ளைத் திருப்பி வைக்க முயல்வது போன்ற ஒரு செயலே; அது நடக்காது என்பது
மட்டுமல்ல; அது பிற்போக்கானது என்பதையும் கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையிலேயே
முன்வைத்தார்.
காரண காரியம் கடந்த வாதங்கள்
உயிர்,
உடமைகளுக்கு எத்தகைய அழிவு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற அடிப்படையில் எந்தத் திட்டமும்
அமுலாவதில்லை.
முதலாளித்துவம்
மனித உயிருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் அதன் உடமைகளுக்குக் கொடுக்கும்
முக்கியத்துவம் மிக அதிகம்.
இங்குள்ள
இடதுசாரிகள் என்று அறியப்படும் அரசியல் கட்சிகள் முதலாளிகள் என்று சொன்னாலே அவர்கள்
டாடா, பிர்லா போன்ற பெரு முதலாளிகள் மட்டுமே என்று கருதுகின்றனர்.
அவர்கள்
தவிர நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முதலாளிகளும் முதலாளித்துவ உடமைகளும் உள்ளன.
ஒரு முதலாளித்துவ அரசு முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த நலன் கருதிச் செயல்படக் கூடியதே
தவிர அவர்களில் சிலரின் பகுதி நலன்களுக்காக மட்டும் செயல்படக் கூடியதல்ல.
இதை
நாம் ஏன் கூறுகிறோம் என்றால் கூடங்குளம் அணுஉலை எந்த நேரமும் அழிவினை ஏற்படுத்தும்
தன்மைகளைக் கொண்டதாக இருக்குமானால் அது அவ்வட்டாரத்தில் உள்ள முதலாளித்துவ உடமைகளுக்கும்
அழிவினை ஏற்படுத்தவல்லதாகவே இருக்கும்.
ஒட்டுமொத்த
முதலாளித்துவ நலனுக்காகச் செயல்படும் ஒரு அரசு அவற்றின் உடைமைகளுக்கு ஊறு விளைவிக்கும்
செயலை ஒருபோதும் செய்யாது.
அணுயுத்தம் அச்சுறுத்தலே
அடுத்து
முன்வைக்கப்படும் வாதம் இது அணுகுண்டு போன்ற ஆயுதங்களைத் தயாரிப்பதற்காகவே கொண்டுவரப்
படுகிறது. அதாவது அணு விசையால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குவதற்கே இது
நாளாவட்டத்தில் பயன்படக் கூடியதாக ஆகிவிடும் என்பதாகும்.
அதுவும்
உண்மைதான். அணுமின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தை அணுகுண்டு
தயாரிக்கும் தொழில் நுட்பமாக மாற்றுவதில் பெரிய சிரமம் எதுவும் இல்லை. தன்னைச் சுற்றியுள்ள
சிறு நாடுகளின் மேல் மேலாதிக்கம் செலுத்துவதற்காக இந்தியாவிற்கு அணு ஆயுதத் தயாரிப்பு
உள்நோக்கமும் உள்ளது.
ஆனால்
இதை விமர்சிப்போர் இந்தியா வெளிப்படையாகவே அணுகுண்டு வெடித்த போது அதனை எதிர்க்கவில்லை.
மேலும் அளவிற்கு அதிகமாக அணு ஆயுதங்கள் தயாரித்து வைப்பதில் இந்தியா மட்டுமல்ல வேறு
எந்த நாட்டிற்கும் கூடப் பலன் எதுவும் இல்லை. அணு யுத்தம் என்பது ஒரு அச்சுறுத்தலே
தவிர அது அடிக்கடி நடைபெறக் கூடிய ஒன்றல்ல.
கலாம் அறிவியல் அறிஞர்; சமூக விஞ்ஞானியல்ல
அணுஉலைக்கு
எதிரான நிலை எடுத்திருப்பவர்கள் முன்வைத்த வாதங்கள் குறித்த நமது கருத்துக்களை மேலேகண்ட
பத்திகளில் முன்வைத்தோம். இப்போது அணு உலைக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் கருத்துக்களையும்
பார்ப்போம். அப்படி முன்வைக்கப்பட்ட கருத்துக்களில் முதன்மையானதும் ஓரளவு முழுமையானதும்
முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்களால் முன்வைக்கப்பட்ட
கருத்தாகும்.
அவருடைய
கருத்துக்களில் பொதிந்துள்ள உண்மைத் தன்மைகளை சந்தேகிப்பதற்கு நமக்கு முகாந்திரம் ஏதுமில்லை.
அவரைப் பொறுத்தவரை அவர் யாராலும் தூண்டிவிடப்பட்டுக் கருத்துக்களை முன்வைக்கக் கூடியவர்
அல்ல.
அதாவது
இவ்விசயத்தில் அரசின் தூண்டுதலால் அவர் அதற்கு ஆதரவாக தனது கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்
என்று கூறுவதற்கு இடமில்லை. அவரது கருத்துக்களை அரசு அதிகபட்சம் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.
ஆனால் அவரைப் பொறுத்தவரை அவர் சமூக விஞ்ஞானி இல்லை என்பது மட்டுமே கணக்கிலெடுத்துக்
கொள்ளப்பட வேண்டிய விசயம் ஆகும்.
அதாவது
விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் மீதான அவரது அதீதக் காதல் அவை அமுலாகும் சமூகத்தையும்
அதன் நோக்கங்களையும் கண்டுகொள்ளாதிருக்கும் போதாமையைக் கொண்டதாக இருப்பதற்கு வாய்ப்பு
உள்ளது.
அந்த
அமைப்பு விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் மடைக் கதவுகளைத் தங்குதடையின்றித் திறந்துவிட்டு
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை அதிகப்படுத்தி சமூகத்தின் தேவைகள் அனைத்தையும் ஈடுகட்ட
வேண்டும் என்ற உயரிய நோக்கத்தைக் கொண்டதல்ல என்பதை அவர் கணக்கிலெடுத்துக் கொள்ளதவராகவே
இருக்கிறார்.
அதுமட்டுமல்ல
அணுஉலைகள் போன்ற அபாயகரமான ஆனால் அதே சமயத்தில் முன்னேறிய விஞ்ஞானத்தை அடிப்படையாகக்
கொண்ட விசயங்களை அமுலாக்கும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய அதிசிரத்தையுடன் கூடிய
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊழல் மலிந்த இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பின் அதிகார வர்க்கமும்
ஒப்பந்தக்காரர் களும் தேவைப்படும் அளவிற்கு மிகச் சரியாகச் செய்யக் கூடியவர்களா? அவ்வாறு
அவர்கள் செய்துள்ளனரா? என்ற விசயங்களை விமர்சனப்பூர்வமாக பார்க்கக் கூடியவர் அல்ல.
எனவே
அவரது கருத்துக்களை உரிய முக்கியத்துவம் கொடுத்து நமது கவனத்தில் எடுத்துக் கொள்ளும்
அதே சமயத்தில் நமது சமூக அமைப்பு குறித்து அவருக்கு சரியான கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை
என்பதும் நம்மால் கணக்கிற் கொள்ளப்பட வேண்டும்.
உலையின் பாதுகாப்பிலும் சமரசம் செய்யவல்ல ஊழல் நிர்வாகம்
நரோரா
அணுஉலையில் கதிர்வீச்சு நிறைந்த வேதிப் பொருட்களைக் கையுறை போன்ற உபகரணங்களை அணியாமலேயே
வெற்றுக் கரங்களால் அங்கு வேலை செய்தவர்கள் அள்ளுவதை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்று
அந்த ஆலை செயல்படத் தொடங்கிய சமயத்தில் பத்திரிக்கைகளில் வெளிவந்தது.
அந்த
அளவிற்கு மனித உயிர் மற்றும் மனித நலன் குறித்து அக்கறையும் சிரத்தையும் அற்ற போக்குகளை
கடைப்பிடிப்பவர்களாக அங்கிருந்த ஒப்பந்தக்காரர்களும் அதிகாரிகளும் இருப்பதை அந்தப்
புகைப்படம் கோடிட்டுக் காட்டியது.
நமது
அதிகார வர்க்கத்தின் நிர்வாகம் எவ்வாறு உள்ளதென்றால், இதுபோன்ற விசயங்களில் நமது கோளாறுகள்
உடனடியாக யாருடைய பார்வைக்கும் வரப்போவதில்லை; அவை பார்வைக்கு வரும் சமயத்தில் நாம்
பதவியிலும் இருக்கப் போவதில்லை. எனவே நமது பதவிக் காலத்தில் நமக்குப் பிரச்னை வருவதற்கு
வாய்ப்பில்லை என்று தோன்றினால் அப்போது கையூட்டிற்காக பாதுகாப்பு விதிகளில் ஓரளவு சமரசம்
செய்து கொள்ளலாம் என்று கருதுவதாகவே உள்ளது.
எனவே
இதைக் குறிப்பாகக் கணக்கில் எடுத்துக் கொண்டு, செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்
திட்ட அளவில் உயர்ந்தவை தானா என்பதைப் பார்ப்பதோடு உள்ளபடியே அதற்கு உகந்த விதத்தில்
நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளனவா என்பதையும் கண்டறிந்து பார்க்க வேண்டும்.
அவ்வாறு
பார்க்கவல்ல தொழில்நுட்ப வல்லுனர்கள் கட்டிடக் கலை நிபுணர்கள் ஆகியவர்களைக் கொண்டு
விருப்பு வெறுப்பற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் இந்த ஆலை உரிய முறையில் நிறுவப்பட்டுள்ளதா?
இல்லையா? என்பது பார்க்கப்பட வேண்டும்.
அத்தகு
வல்லுனர்களைப் பொறுப்புடன் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் வருந்தத்தகுந்த விதத்தில்
நமது நாட்டில் பதவியிலிருக்கும் விஞ்ஞானிகள், அறிஞர்கள் அனைவரும் அரசு கொண்டுவரும்
திட்டங்கள் அனைத்தையும் அவற்றை ஆய்வு செய்யாமலேயே ஆதரிப்பவர்கள். ஏனெனில் அது அவர்களின்
பதவி உயர்வு போன்றவற்றிற்கு வழிவகுக்கும் என்று கருதி அவர்கள் அதனைச் செய்கின்றனர்.
அதே
சமயத்தில் ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்களைப் பொறுத்தவரையில் அவர்களில்
மிகப் பெரும்பாலோர் நிறுவப்படும் ஆலைகளின் அபாயகர அம்சங்களை மட்டும் வெளிப்படுத்துபவர்களாக
இருக்கிறார்கள்.
இச்சூழ்நிலையில்
சரியானவர்களைப் பொறுப்பான விதத்தில் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு ஆலையின் பாதுகாப்பு
வசதிகளை ஆய்வு செய்யும் முழுவாய்ப்பும் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தங்களது
சந்தேகங்களை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு உரிய செலவில் மாற்று வசிப்பிடம்
மேலும்
எந்த வகையான முன் யோசனையும் இன்றி ஆலையிலிருந்து கூப்பிடு தொலைவில் கட்டப்பட்டுள்ள
வீடுகளில் வசிப்பவர்களுக்கு அவர்கள் தொழில் பாதிக்காத விதத்தில் எவ்வளவு செலவு ஏற்பட்டாலும்
அதைப் பொருட்படுத்தாமல் மாற்று வசிப்பிடங்கள் ஏற்பாடு செய்துதரப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகளை
முன்னிறுத்திப் போராட்டத்தைத் தொடர்ந்தால் அதற்கு மாநிலம் முழுவதிலும் உள்ள மக்கள்
ஆதரவினை எளிதில் திரட்ட முடியும்.
சில
கேள்விகளைக் கண்டு கொள்ளாதிருப்பது அக்கேள்விகளை இல்லாமல் செய்து விடுவதாகாது.
அதாவது
இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்த பின்பு அது மின் உற்பத்திக்குத் தயாராக உள்ள
நிலையில் அந்த ஆலையை இயங்கவிட மாட்டோம் என்று கூறுவது சரியானதா? மின்சாரப் பற்றாக்குறையில்
மாநிலம் முழுவதுமே அல்லாடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதை ஓரளவு தீர்க்கவல்ல ஒரு
மின் உற்பத்தி நிலையத்தைச் செயல்படாமல் தடுப்பது எப்படிச் சரியானதாக இருக்கும்? என்பது
போன்ற கேள்விகள் நிச்சயமாக பகுத்தறிவு பூர்வமாக யோசிக்கும் நமது மாநில மக்களின் மனதில்
இருக்கவே செய்யும்.
போராட்டத்தின்
நியாயத்தை அவர்களும் உணர வேண்டுமென்றால் பாதுகாப்பு வசதிகளில் செய்யப்பட்டுள்ளதாக அணுஉலை
எதிர்ப்பாளர்கள் சந்தேகிக்கும் சமரசங்களை இல்லை என்று நிரூபித்த பின்னரே ஆலை இயங்க
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் அதன் நியாயத்தை மேற்கண்ட
கேள்விகளைக் கொண்டுள்ள மக்களும் ஆதரிப்பர்.
இவ்வாறு
மாற்றுக் கோரிக்கையை முன்வைத்து மக்களின் பாதுகாப்பையும் அதே சமயத்தில் ஆலையின் இயக்கத்தையும்
ஒரே சமயத்தில் வலியுறுத்தும் வகையில் போராட்டத்தைத் தொடருவதே இத்தருணத்தில் சரியானதாக
இருக்கும்.
அந்த
வழியில் போராட்டம் தொடரப்பட்டால் மட்டுமே அணுஉலை ஆதரவாளர்கள் என்ற பெயரில் அவ்வட்டாரத்தில்
வகுப்புவாத சக்திகள் உருவாக்க முனைந்துவரும் வகுப்பு மோதல்களையும் தடுக்க முடியும்.
இதனைச்
சரியாகச் செய்வதற்கு அரசியல் பக்குவம் மிகுந்த அமைச்சர்கள், அதிகாரிகள் போன்றவர்கள்
பேச்சுவார்த்தையாளர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
தோன்றுவதை
எல்லாம் பேசி அதில் அரசியல் ஆதாயம் பெற விரும்பும் அல்லது நிலைமையைத் தற்காலிகமாகச்
சமாளிக்க விரும்புபவர்களிடம் அத்தலையாய பொறுப்பு ஒப்படைக்கப்படக் கூடாது.
பக்குவமான வாதங்கள் மனதில் பதியும் வகையில்
கூடங்குளத்தில்
நடைபெறும் தற்போதைய இந்தப் போராட்டம் நாம் கூறும் விதத்தில் பாதுகாப்பு அம்சங்களுக்கு
முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுவதோடு, பக்குவமாக எடுத்துரைக்கப்படும் சரியான கருத்துக்களை
முன்வைத்து தமிழக மக்களை அணிதிரட்டுவதாகவும் இருக்க வேண்டும்.
அதாவது
மத்திய அரசு மக்கள் மனதில் உள்ள அச்சத்தைப் போக்குவதற்காக அமைத்துள்ள குழுவில் அடையாறு
புற்றுநோய் மருத்துவ மனையின் பொறுப்பாளர் சாந்தா அவர்கள் உள்பட, மீன்வள அறிவியல், மண்ணியல்
போன்ற அணுமின் நிலையத்தால் எவையயல்லாம் பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறதோ அவை
குறித்த கருத்துக்களுடையவர்கள் என்று கருதப்படும் விஞ்ஞானிகள் அனைவரையும் முன்னிறுத்தி
இந்த விசயத்தை தீவிரமாக எதிர்கொள்கிறது.
அதைப்போல்
அதனை உரிய முறையில் எதிர்கொள்ளும் விதத்தில் நியாயமான மக்கள்நல மனநிலையோடு இப்பிரச்னையை
அணுகும் தங்கள் தரப்பு விஞ்ஞானிகளையும் சமூக ஆர்வலர்களையும் முன்னிறுத்தி பக்குவமானதும்
மக்கள் மனதில் பதியக் கூடியவையுமான வாதங்களை அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள்
முன்வைக்க வேண்டும்.
ஆனால்
இவ்விரு குழுக்களும் சந்தித்துக் கருத்துப் பரிமாற்றங்கள் நடத்தியதற்குப் பின்பு வெளிவந்த
அறிக்கைகள் அத்தகைய தயாரிப்புடன் போராட்டக் காரர்கள் இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவே
உள்ளது.
வகுப்புவாதப்
போக்குகளை வளர்த்தெடுக்க அணுமின் நிலையத்திற்கு ஆதரவான இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுச்
செயல்பட்டு வரும் வேளையில் அதன் கருத்திற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் நடந்துகொள்வதை
அவர்கள் அனைத்து முயற்சிகளும் எடுத்துத் தடுக்க முனைய வேண்டும்.
ஆலையின்
வரைபடத்தைக் கேட்டால் அதை எதற்காகக் கேட்கிறோம் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
அதுமட்டுமல்ல ரஷ்யா, இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்
நகலைக் கேட்கிறோம் என்றால் அதை எதற்காகக் கேட்கிறோம் என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு
இக்கேள்விகளின் நோக்கம் தெளிவுபடுத்தப்படாத ஒரு சூழலே அந்நிய சக்திகளுக்கு வழங்குவதற்காகவே
இவற்றைக் கேட்கிறார்கள் என்ற அணு ஆலை ஆதரவுப் போராட்டக் குழுவினரின் விசமப் பிரச்சாரத்திற்கு
வலுச் சேர்க்கிறது.
அதாவது
போராட்டம் கூடங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் நடக்கும் உக்கிரத் தன்மையை வைத்து
இத்தனை உறுதியுடன் இப்போராட்டத்தை நடத்தினாலே போதும் என்று எண்ணிவிடக் கூடாது. அப்போராட்டத்தின்
நியாயம் பொறுமையுடனும் நயத்துடனும் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
இல்லாவிட்டால்
அப்போராட்டம் ஒரு குருட்டுத்தனமான போர்க்குணத்தைக் கொண்டதாக நாளடைவில் மாறிவிடும்.
அந்தக் குருட்டுத்தனமாக போர்க்குணமே அப்போராட்டம் குறித்த ஒரு தவறான எண்ணத்தை பிற பகுதி
மக்களிடம் ஏற்படுத்துவதாகவும் ஆகிவிடும்.
கடந்த டிசம்பர் உயிர்மை இதழில் கூடம்குளம் அணு உலை பற்றி விரிவான கருத்துகள் அடங்கிய கட்டுரை வந்துள்ளது... நீங்கள் அதையும் படித்து விவாதத்திற்கு கொள்ள வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்....
ReplyDeleteதோழர் கோ பிரின்ஸ் அவர்களே ,கட்டுரையை பற்றி உங்களின் கருத்து என்ன என்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
ReplyDelete