Saturday, January 14, 2012

பாப்பையாவின் பட்டிமன்றம்: ஒரு அலசல் – A. ஆனந்தன்


சமூகம் சரியானதாக இல்லாவிடில் குடும்பம் சரியானதாக இருக்க முடியாது : இதனை மறுப்பவர்கள் அவர்களையும் அறியாமல் ஆளும் வர்க்கத்தின் கருத்து உற்பத்தியாளர்களாவதைத் தவிர்க்க முடியாது

நமது ஊடகங்களில் மிக அதிகம் மக்கள் மனதில் செல்வாக்கு செலுத்துவதாக இருப்பது மின்னணு ஊடகங்கள். அதில் தொலைக்காட்சியின் செல்வாக்கு மிக அதிகமாக மக்களின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது.  காட்சி ஊடகங்களில் தற்போதைய இளைய தலைமுறை ரசிப்பது பெரும்பாலும் திரைப்படம் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளே. ஊடகங்களில் வரும் செய்திகள் மற்றும் சமூகம் குறித்த நிகழ்ச்சிகளைப் பார்ப்போர் மிகப் பெரும்பாலும் நடுத்தர வயதினரே. அவர்களில் அலுவலகங்களில் வேலை செய்வோர் குறிப்பிடத்தக்க பகுதியினர் ஆவர். மத்தியதர வர்க்க அலுவலகம் செல்வோரைப் பொறுத்தவரையில் அவர்கள் குறிப்பிட்ட எந்த அமைப்பையும் சேராதவர்களாக இருந்தால் தொலைக்காட்சிச் செய்தி ஊடகங்களின் கருத்தே அவர்களது கருத்தாக ஆகி வருகிறது. 

மேலோட்ட மனநிலை
உண்மையில் அலுவலகம் செல்வோரில் மிகப் பெரும்பாலோர் பெரும்பாலும் அரசியல் கருத்துக்களில் ஊறிப் போனவர்களாக இருப்பதில்லை. மேலோட்டமாகச் சில கட்சிகளின் கண்ணோட்டங்கள் அவர்களுக்குப் பிடித்தவையாக ஒரு காலத்தில் இருந்திருக்கும். அந்நிலையில் நடுத்தர வயதை எட்டிய பின்னரும் அவற்றின் மேலோட்டமான ஆதரவாளர்களாக அவர்கள் இருப்பார்களே தவிர அப்படிப்பட்ட கட்சிகள் குறித்து ஊடகங்களில் தவறான கருத்துக்கள் வந்தால் அவற்றிற்கு எதிர்க் கருத்துக்களை ஆழ்ந்து யோசித்து எடுத்துரைக்கும் அளவிற்கு அவர்கள் செல்வதில்லை. இதுபோன்ற ஒரு மேலோட்ட மனநிலை உருவானதற்கும் மிக முக்கியக் காரணம் காட்சி ஊடகங்களே. 
அடிப்படையில் வரம்பு மீறுவதில்லை
ஏறக்குறைய அனைத்துக் காட்சி ஊடகங்களும் செய்திகளை முந்தியும் சுடச்சுடவும் தரவேண்டும் என்பதற்காகப் பல செய்திகளை பல்வேறு அரசியல் கட்சிகளைப் பாதிக்கும் விதத்தில் வெளியிடவே செய்கின்றன. ஊடகங்களின் இப்போக்கு அவை சுதந்திரமாகச் செயல்படுபவை என்ற எண்ணத்தைப் பார்ப்பவர் மத்தியில் உருவாக்குகிறது. ஆனால் ஒரு அடிப்படை வரம்பை அவை மீறுவதில்லை. ஆளும் முதலாளி வர்க்க நலன் குறித்த கேள்வியில் அவை எப்போதுமே ஒத்த கருத்து உடையவைகளாகவே உள்ளன. 
சமுதாயப் பிரச்னைகள் சார்ந்த நிகழ்ச்சிகள்
காட்சி ஊடகங்களில் வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோடு சமுதாயப் பிரச்னைகளை முன்னிறுத்தக் கூடியவை என்றும் பல நிகழ்ச்சிகள் வருகின்றன. குறிப்பாக அனைவரும் விடுமுறையில் இருந்து தொலைக்காட்சி முன் கூடுதல் நேரம் அமரும் விழா நாட்களில் அது போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இடம் பெறுகின்றன. பட்டிமன்றம் அத்தகையதொரு நிகழ்ச்சியாகும். அவற்றில் கலந்து கொள்ளும் பேச்சாளர்கள் மற்றும் நடுவர்களின் தரத்தையும் திறமையையும் வைத்து அவற்றைப் பார்க்கத் தங்கள் நேரத்தை மக்கள் ஒதுக்குகின்றனர். 
பட்டிமன்றம் என்ற நிகழ்ச்சி அது தோன்றிய போது இலக்கியம் சார்ந்ததாகவே இருந்தது. தொடக்கத்தில் அது குறிப்பிட்ட சில விழா தினங்களில் திரளான பொது மக்களுக்கு மத்தியில் நடைபெற்றது. காரைக்குடி கம்பன் விழா, மதுரை அரசமரம் பிள்ளையார் கோவில் ஆகிய இடங்களில் நடைபெறும் பட்டிமன்றங்கள் அவற்றில் மிகவும் பிரபலமானவைகள். பட்டிமன்றப் பேச்சாளர்கள் தொடக்க காலத்தில் மிகவும் தரம் உள்ளவர்களாகவும் கேட்போரின் மதிப்பையும் மரியாதையையும் பெருமளவு பெறக்கூடிய பொது நோக்கும் பண்பு நலனும் கொண்டவர்களாவும் இருந்தனர். 
உள்ளபடியே ஒன்றாயிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கியப் பிரிவான கலை இலக்கியப் பெருமன்றம் இந்தவகைப் பொது நிகழ்ச்சியின் வளர்ச்சியில் மிகப் பெரும் பங்கினை ஆற்றியது. கட்சிச் சாயல் இன்றி பொதுவான சமூகப் பிரச்னைகளை அலசி ஆராயும் நிகழ்வுகளே இவை என்று காட்டும் விதத்தில் அக்கட்சியோடு தொடர்பில்லாததோடு மதத்தொடர்புகளோடு இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்களும் பட்டிமன்றப் பேச்சாளர்களாக ஒரு சமயத்தில் இருந்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் அரசியலில் மட்டுமின்றி இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தவருமான ஜீவானந்தம் போன்றவர்களும் பட்டிமன்றப் பேச்சாளர்களாக அப்போது இருந்தனர். 
முற்போக்குத் திசை வழியில் தீர்ப்புகள்
பட்டிமன்றம் கேட்போரைப் பொறுத்தவரையில் அவை இலக்கியம் சார்ந்தவையாக இருக்கும் போது தவிர பிற அனைத்துச் சமயங்களிலும் புத்திசாலித் தனமானவர்கள் அப்பட்டிமன்றத் தலைப்பை ஒட்டி நடுவர் எத்தகைய தீர்ப்பினை வழங்குவார் என்பதைக் கூறிவிடுவர். ஏனெனில் சமூகத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் திசை வழியிலேயே அத்தீர்ப்புகள் இருக்கும். ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற சமூகத்தை ஜனநாயகமயமாக்கும் போக்கிற்குச் சாதகமாகவே தீர்ப்புகள் பெரும்பாலும் இருக்கும். 
சிரிப்பாய் சிரிக்கும் போக்கு
அதன் ஆரம்ப நாட்களில் பட்டிமன்றங்கள் இருந்த நிலைக்கும் இன்று பட்டிமன்றங்கள் நடத்தப்படும் விதத்திற்கும் இடையில் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. அதாவது முன்பெல்லாம் ஓரளவிற்குக் கேட்போரைச் சிந்திக்க வைக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்ட வகையில் பட்டிமன்றங்கள் இருந்தன. ஆனால் தற்போதோ எவ்வாறாவது மக்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்ற அடிப்படையினைக் கொண்டவையாக அவை நடத்தப் படுகின்றன. அதாவது தமிழ்ச் சமூகத்தை தீர்க்கமான, ஆழமான சிந்தனை அற்றதாக ஆக்குவதில் இதுபோன்ற ஊடக நிகழ்ச்சிகளும் மிகப்பெரும் பங்கினை ஆற்றுகின்றன. எங்கே ஒரு நாள் தமிழ்ச் சமூகம் சிரிப்பாய் சிரிக்கும் சமூகமாக ஆகிவிடுமோ என்ற வேதனை உண்மையான அதன் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களுக்கு சமீப காலங்களில் தவிர்க்க முடியாமல் தோன்றுகிறது.
இது எல்லாம் அனைவரும் அறிந்த விச­யங்கள் தானே இதை மீண்டும் இந்த அளவிற்குப் பீடிகையோடு பட்டியல் இடுவதால் என்ன பயன் என்று பல வாசகர்களுக்குத் தோன்றலாம். ஆனால் சில சீரழிவுகளும் திசை திருப்பல்களும் ஆழமாகத் தவறான கருத்துக்களை மக்களிடையே நாசூக்காக பரப்பும் விதத்தில் வரும் போது இதுகுறித்து நிச்சயம் ஏதாவது சொல்லியாக வேண்டும் என்ற கட்டாயம் சமூக நலன் கருதுபவர்களுக்குத் தோன்றவே செய்கிறது. 
இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று சன் தொலைக்காட்சியில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை நடுவராகக் கொண்டு நடத்தப்பட்ட பட்டிமன்ற நிகழ்ச்சி அத்தகையதொன்றாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியின் தலைப்பு பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வது பிள்ளைகளைப் பொறுத்தவரையில் முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறதா? அல்லது சீரழிவினை ஏற்படுத்துகிறதா? என்பதாகும். அதில் இறுதியாக பேராசிரியர் சாலமன் பாப்பையாவால் வழங்கப்பட்ட தீர்ப்பு அது பிள்ளைகளைப் பொறுத்தவரையில் பெரும் பாதிப்பையும் சீரழிவினையுமே ஏற்படுத்துகிறது என்பதாக இருந்தது. 
அதற்கு அவர் கூறிய காரணங்களில் முக்கியமானவை நமது பிள்ளைகள் தற்போது சேராத சேர்க்கை சேர்ந்து கெட்டுப் போவதற்கும் பண்பாட்டு வேரைப் பற்றி நிற்காதவர்களாக ஆகிப் போவதற்கும் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வது காரணமாக உள்ளது என்பவையாக இருந்தன.
கூடுதல் எதிர்பார்ப்பு
பட்டிமன்றங்களைப் பொறுத்தவரையில் சாலமன் பாப்பையா அவர்களுக்கு ஒரு பெரும் பெயருண்டு. அதற்குக் காரணம் ஆயிரக் கணக்கில் பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு எந்தச் சிரமமும் இன்றி எந்தச் சூழ்நிலையிலும் அவற்றில் லாவகமாகப் பேச முடிந்தவராக அவர் இருக்கிறார் என்பதல்ல. பொதுவாகவே வகுப்பறையில் பாடம் எடுப்பதில் தொடங்கி பட்டிமன்றங்கள் வரை அனைத்தையும் உரிய தாயாரிப்புகளுடன் செய்யக்கூடியவர் அவர். அவர் மனோன்மணியம் பாடம் சொல்லிக் கொடுத்தால் அதில் பொருள்முதல்வாத, கருத்துமுதல்வாதத் தத்துவ அடிப்படைகளை எடுத்துரைத்து அதனைத் திறனாய்வு செய்யும் தரத்துடன் அதைக் கற்பிப்பார். எனவே வெறுமனே பொழுதுபோக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் தவிர பொழுதும் போக்க வேண்டும்; அதில் பயனும் இருக்க வேண்டும் என்று கருதுபவர்களும் அவரது பட்டிமன்றத்தைக் கேட்பவர்களாக இருப்பர். பட்டிமன்ற வரையறையைத் தாண்டியும் சில சரியான கருத்துக்களை அவரிடம் இருந்து நாம் பெற முடியும் என்ற நம்பிக்கையும் அதற்கு ஒரு காரணம். 
தலைப்பே தவறானது
மேலே கூறிய பட்டிமன்றத்தைப் பொறுத்தவரையில் அதன் தலைப்பே சரியானதல்ல. ஏதோ ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் மட்டும் வேலைக்குச் சென்றால் போதும் பெண்ணைப் பொறுத்தவரையில் அவர்கள் விரும்பினால் வேலைக்குப் போகலாம் இல்லாவிட்டால் ஒரு நல்ல தாயாக, குடும்பத் தலைவியாக வீட்டில் இருக்கலாம் என்பது போன்ற நெருக்கடியற்ற நிலை சமூகத்தில் இருப்பது போல் ஒரு போலிச் சித்திரம் அந்தத் தலைப்பிலேயே உள்ளது. 
சமூகத்தின் பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வேறுவழியின்றி வேலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்; சென்றாக வேண்டும் என்பதே அவர்களது நிலை. அப்போது தான் அவர்களது மிக அடிப்படைத் தேவைகளையே அவர்களால் பூர்த்தி செய்ய முடியும். 
எத்தனைதான் மத்தியதர வர்க்க மக்களின் மனநிலைக்குத் தீனி போடுவதாகப் பொது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் சமூகத்தின் மிகப் பெரும்பான்மையான மக்களை அவர்கள் ஏதோ சமூகத்தின் அங்கமே இல்லை என்று பாவித்துத் தலைப்புகள் வைப்பதே சரியானதல்ல. அதுமட்டுமல்ல அது திசை திருப்பும் வேலையையும் செய்யவல்லது. 
இரண்டாவதாக பிள்ளைகள் கெட்டுப் போவதற்குப் பெண்கள் வேலைக்குச் செல்வது காரணமாக உள்ளது என்று கூறுவது மற்றுமொரு தவறான சித்திரத்தை மக்கள் முன் வைக்கிறது. அதாவது பிள்ளைகள் கெட்டுப் போவதற்கும் நன்றாக வளர்வதற்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் வளரும் குடும்பமே என்ற கருத்தை அது முன்னிறுத்துகிறது. நன்றாக யோசித்துப் பார்த்தால் நமது குழந்தைகள் தூங்கும் நேரம் போக நம்முடன் இருக்கும் நேரம் ஒவ்வொரு நாளிலும் மிகக் குறைவான நேரமே. அவர்கள் மாணவர்களாக இருந்தால் கல்லூரியில் அல்லது பள்ளியில் அவர்கள் செலவிடும் நேரம், நண்பர்களோடு பழகிக் கழிக்கும் நேரம், வீட்டிலேயே இருந்தாலும் கூட தங்களைச் சுற்றி ஒரு செயற்கைச் சுவரினை எழுப்பிக் கொண்டு தொலைக்காட்சி முன்போ அல்லது இணையதளத்தில் வேலை செய்து கொண்டே கழிக்கும் நேரம் இவை அனைத்தையும் கழித்து விட்டால் அவர்கள் பெற்றோரோடு செலவிடும் நேரம் மிகமிகக் குறைவே. 
நிறைய உறுப்பினர்களைக் கொண்டதாக குடும்பம் இல்லாதிருப்பது, சமூக நிகழ்வுகளில் மாணவர்களின் பங்களிப்பு ஏறக்குறைய இல்லை என்று ஆக்கப்பட்டு தன்னல வாதம் அவர்களிடையே மேலோங்கியிருக்கும் சூழல், மனிதாபிமானக் கருத்துக்களை வலியுறுத்தும் விஞ்ஞானப்பூர்வ அம்சங்கள் இல்லாமல் ஒரு எந்திரத்தின் உறுப்புகள் போல் அவர்களை ஆக்கும் தொழில்நுட்ப அம்சங்களுக்கு மட்டும் முன்னிலை கொடுக்கும் கல்வி இவை அனைத்தும் சேர்ந்து ஒரு மிக மோசமான தனிநபர் வாதம் குறிப்பாக மாணவர் மற்றும் இளைஞர்களை அப்பிக் கொண்டுள்ளது. 
மேலும் தகவல்களை வேகமாக உடனுக்குடன் அறிந்து கொள்வதில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி அதனை மிக எளிதில் பயன்படுத்த முடிபவர்களாக இளைய தலைமுறை இருக்கும் சூழல் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு மிகப் பெரிய தலைமுறை இடைவெளியைப் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படுத்தியுள்ளது. 
இவை சமூகத்தில் வாழும் மக்களிடையே அவர்களுக்கு உடன்பாடு இல்லாமலேயே இயங்கும் ஒரு சமூக விதியால் தோன்றியுள்ள போக்குகள். இந்தப் போக்குகளால் இளைஞர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் கூடப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக நலன் சார்ந்த கருத்துக்களில் பரிச்சயம் ஏற்பட்டு விட்டவர்கள் அவற்றைக் கைவிட்டு விடாமல் வைத்துக் கொண்டிருப்பதற்கே இப்போதெல்லாம் போராட வேண்டியுள்ளது. இவ்வாறு குடும்பங்கள் உள்படச் சமூகத்தின் அனைத்து நிறுவனங்களிலும் ஏற்பட்டுள்ள அனைத்துச் சீரழிவுகளுக்கும் நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்படும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக விதி காரணமாக இருக்கும் போது ஒவ்வொரு குடும்பத்திலும் தாய்மார்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்தால் பிள்ளைகள் நன்றாக வளரும் என்ற சித்திரத்தை முன்னிறுத்துவது சமூகச் சூழலைத் தலைகீழாகச் சித்தரிப்பதாகும்.
இன்று மத்தியதர வர்க்கத்தை மிகவும் பாதிப்பதாக உள்ளது குறிப்பாக மாணவர் இளைஞர் இடையே வளர்ந்து, பெருகிவரும் கலாச்சாரச் சீரழிவுகளும் சமூக மதிப்புகள் அழிந்து வருவதுமே. அதற்குக் காரணம் பெற்றோர் இருவரும் குறிப்பாகத் தாய்மார்கள் வேலைக்குச் செல்வதே என்ற எளிமையான வாதத்தை முன்வைத்து அதற்கான உண்மையான காரணத்தை மூடிமறைக்கும் வேலையையே இதுபோன்ற தலைப்புகளில் நடத்தப்படும் பட்டிமன்றங்கள் செய்கின்றன. 
பெற்றோரில் யாராவது ஒருவர் வேலைக்குப் போகாமல் இருந்து பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டால் போதும் என்ற நிலை ஒரு ஏற்புடைய நிலையாக நமது சமூகத்தில் உள்ளதா? எடுத்துக்காட்டாக தாய் வேலைக்குச் செல்லட்டும்; தந்தை இருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்வார் என்ற கண்ணோட்டத்தை இதுபோன்ற பட்டிமன்றப் பேச்சாளர்கள் முன்வைப்பார்களா? முன்வைத்தால் தான் அது எடுபடுமா? நிச்சயம் எடுபடாது. அதற்குக் காரணமென்ன? ஆண்கள் பிறப்பாலேயே வேலைக்குச் செல்லவும் பெண்கள் பிறப்பாலேயே குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும் மட்டும் தகுதியானவர்கள் என்று நமது மனதில் ஆழப்பதிக்கப்பட்டுவிட்ட கருத்துதானே. 
இதுபோன்ற அதாவது சமூக உழைப்பிலிருந்து பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சூழலே பெண்ணடிமைத் தனத்தைத் தோற்றுவித்தது. அதனால் தான் பெண் ஆணின் போகப் பொருளாக ஆனாள். இது விஞ்ஞானப்பூர்வ ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை. அந்த நிலை முதலாளித்துவ சமூக அமைப்பு தோன்றிய ஆரம்ப காலத்தில் சற்று மாறியது. குறிப்பாக மேலை நாடுகளில் அவை பின்தங்கிய நாடுகள் அனைத்தின் பொருட் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியவையாக இருந்த காலத்தில் பெண்களும் சமூக உற்பத்தியில் ஈடுபடும் போக்கு அரும்பியது. அன்று உருவான தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்குக் கூடுதல் கரங்கள் தேவைப்பட்டதால் அன்றைய முதலாளிகள் பெண்களையும் வேலைக்கு அமர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். அதன்மூலம் பெண்கள் சமூக உழைப்பில் ஈடுபடும் சூழ்நிலை தோன்றியது. ஆனால் அது அவர்களுக்கு எதிர்பார்த்த விடுதலையைத் தரவில்லை. 
பொருளாதார ரீதியாக அவர்கள் வேலைக்குச் செல்வது ஒரு தன்னம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்தாலும் சமூகத்தில் ஊறிப்போயிருந்த ஆணுக்குப் பெண் கட்டுப்பட்டவள் என்ற கருத்து அவர்களை ஒரு வகையான இரட்டைச் சுரண்டலுக்கு ஆளாக்கியது. ஆலையில் முதலாளித்துவச் சுரண்டல்; வீட்டில் ஆணாதிக்கச் சுரண்டல் என்ற இரண்டுவகைச் சுரண்டலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதிலிருந்தான விடுதலை இந்தச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பில் கிடையவே கிடையாது. ஆனால் அதன் பொருள் இந்த இரண்டுவகைச் சுரண்டலை எதிர்த்த மனநிலையே அவர்களுக்கு இச்சமூகத்தில் ஏற்படாது என்பதில்லை. 
முதலாளித்துவச் சுரண்டலை எதிர்த்த போராட்டத்தில் அச்சுரண்டலில் ஆள்படுத்தப்படும் ஆணினத்தோடு சேர்ந்து போராடும் அவர்கள் ஆணாதிக்கச் சுரண்டலை எதிர்த்த போராட்டத்தில் முழுமையாக ஈடுபட வேண்டுமென்றால் அதற்குத் தன்னம்பிக்கையும் மனஉறுதியும் வேண்டும். அவை வேலைக்குச் செல்லாத பெண்ணைக் காட்டிலும் வேலைக்குச் செல்லும் பெண்ணிடமே அதிகம் இருக்கும். எனவே எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் பெண்கள் வேலைக்குச் செல்வது ஒரு முற்போக்கான வி­சயமே தவிர பிற்போக்கானதல்ல. இந்த நிலையில் யாராவது ஒருவர் ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்துப் பெண்கள் வீட்டிலிருந்து கொண்டு பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினால் அதன் பொருள் அவர் ஏதோ ஒரு அடிப்படையில் பெண்களிடம் பத்தாம் பசலித்தனத்தைத் தக்க வைக்கப் பார்க்கிறார் என்பதாகவே இருக்கும்.
அத்தகைய ஒருவராக அந்தப் பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா பெண்கள் வேலைக்குச் செல்வது பிள்ளைகளின் வாழ்க்கையில் பின்னடைவையே கொண்டுவருகிறது என்ற தீர்ப்பினை வழங்கினர். அதாவது இந்த வி­சயங்களை எல்லாம் தெரியாதவராக ஒருவர் இருந்து அப்பாவித்தனமாக அவர் மட்டுமே எதிர்கொண்ட சில அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்குகிறார் என்றால் அதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் சாலமன் பாப்பையா அப்படிப்பட்டவர் அல்ல. அவருக்கு இந்த வி­சயங்கள் அனைத்தும் தெரியும்.
ஒருவர் எத்தனை பெரியவராக இருந்தாலும் ஒரு காலத்தில் எத்தனை முற்போக்கான எண்ணங்களையும் கருத்துக்களையும் கொண்டவராக இருந்திருந்தாலும் அக்கருத்துக்களைத் தொடர்ந்து கொண்டிருக்கவும் வளர்க்கவுமான ஒரு போக்கில் அவர் இல்லாவிட்டால் நிச்சயமாக ஒருநாள் அவரிடமும் எத்தனை பெரிய வீழ்ச்சி என்று கூறக் கூடிய அளவிற்கு வீழ்ச்சிகள் வந்தே தீரும் என்பதையே இந்தத் தீர்ப்பை வழங்கும் அளவிற்கு அவரிடம் மாறியுள்ள மனநிலை நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது. அது அவரது தனிப்பட்ட வளர்ச்சி குறித்தது. அவரை அறிந்தவர்கள் மட்டும் அது குறித்து வேதனையுற வாய்ப்பளிப்பது. 
அதே சமயத்தில் சமூகத்தின் பிரச்னைகளுக்கு உண்மையாகவுள்ள காரணங்களை மூடி மறைத்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பி விடுவதும் இன்று ஆளும் வர்க்கங்களால் இடைவிடாமல் செய்யப்படும் ஒரு செயலாகும். அறிந்தோ அறியாமலோ அதைச் செய்பவர்கள் அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூகம் அதனை நிலைநாட்டிக் கொள்வதற்கு உதவும் கருத்து வியாபாரிகள் ஆகிவிடுகிறார்கள். அப்படிப்பட்டடோர் பட்டியலில் இவரும் சேர்ந்து விட்டாரோ என்றே எண்ணச் செய்கிறது அவரது இத்தீர்ப்பு.
இதுதவிர அந்தத் தீர்ப்பைக் கூறும் போது அவர் வேறொரு கருத்தையும் அவர் முன்வைத்தார். எந்தவொரு கருத்தும் அசலும் நகலும் வெளிப்படையாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் அவர் கூறிய அக்கருத்து அலசி ஆராயப்படாமலேயே பலரால் பல சமயங்களில் முன்வைக்கப்படும் ஒன்றேயாகும். அவர் அந்தத் தீர்ப்பை முன்வைக்கும் போது கூறினார்: நமது குழந்தைகள் நமது பண்பாட்டு வேரை இழந்தவைகளாக ஆகிக்கொண்டிருக்கின்றன என்று. இந்தப் பண்பாடு என்ற சொல்லைப் பலரும் அவ்வப்போது அது குறித்து எந்தவகையான புரிதலுமின்றி அவர்கள் கண்முன் படும் அவர்களால் சீரழிவு என்று கருதப்படும் ஒவ்வொன்றிற்குமான காரணமாக முன்வைக்கின்றனர். நமது முன்னோர்களின் பழக்கவழக்கங்களில் இருந்த செறிந்த அம்சங்களின் சாராம்சம் ஒரு கருத்துருவாக நாளாடைவில் மக்கள் மனதில் பதிக்கப்படுகிறது. அதையே நாம் நமது பண்பாடு என்று கூறுகிறோம். ஆனால் அதுவும் முற்றிலும் நிரந்தரமானதோ முழுமையானதோ அல்ல. பெரும்பாலும் அத்தகைய பண்பாடு என்பது கடந்த காலங்களில் ஆளும் வர்க்கங்களின் வாழ்க்கையில் இருந்து பெறப்பட்ட செறிந்த அம்சங்களை அனுபவங்களை மையம் கொண்டதாகவே இருக்கிறது. அதனால் தான் பெண்ணின் குணங்களாக அச்சம், மடம், நாணம் ஆகியவை இருக்க வேண்டும் அதுவே நமது பண்பாடு என்ற கருத்து பலகாலம் நிலவியது. இக்குணங்கள் உயர்குலப் பெண்களின் குணங்களாக முன்வைக்கப்பட்டன. ஆம், அவர்கள் கூறும் உயர் குணங்களைக் கொண்டிருந்த பெண் சமூக உழைப்பிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டவளாக இருந்தாள். அவளது முக்கியப் பணியே கணவனை மகிழ்விப்பது என்றாகிவிட்டதால் அதற்கு இந்தக் குணங்களைக் கொண்டிருந்தாலே போதும் என்றாகிவிட்டது. அவர்களே நமது பண்பாட்டு வட்டத்திற்குள் இருப்பவர்கள் எனப் பாராட்ட பெற்றனர்.
ஆனால் புதுயுகக் கவிஞன் பாரதி அச்சமும் நாணமும் நாய்களுக்குத் தான் வேண்டும் என்று கூறி அக்கருத்திற்கு ஒரு மரண அடி கொடுத்தான். அவன் நாய் என்று இங்கு குறிப்பிட்டதும் இவ்விசயத்தில் அவனது மிதமிஞ்சிய கோபத்தைப் புலப்படுத்துவதற்காக மட்டும் இல்லை. மாறாக மிருகங்களிலேயே அடிமைத்தனத்தை அதிகம் பிரதிபலிப்பதாக நாய் இருப்பதை மனதில் கொண்டே அவ்வாறு கூறினான். பெண்கள் மடமையுடன் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் அவன் கடுமையாகச் சாடினான். அதனால் தான் ஒளிபடைத்த கண்ணினாய் வா உறுதிகொண்ட நெஞ்சினாய் வா என்று அவன் எழுதினான். 
இந்தப் புதுயுகம் என்று நாம் கூறும் போது அதுவும் கூடப்பண்பாடு என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்துவது போல் அர்த்தம் இல்லாததாக அதாவது வரலாற்று ரீதியான அர்த்தம் இல்லாததாக ஆகிவிடக் கூடாது. பாரதி நிலவுடமைத் தளையிலிருந்து நமது சமூகம் விடுபட்டு முதலாளித்துவ ஜனநாயக யுகத்தில் அது நடைபயிலத் தொடங்கிய போதே இக்கருத்தை முன்வைத்தான். இந்தப் புதுவகை மாற்றம் தான் புதுயுகம் என்று அனைவராலும் முன்வைக்கப் படுகிறது. எனவே பண்பாடு, கலாச்சாரம் ஆகிய சமூக மேல் கட்டுமானங்கள் எவையும் நிரந்தரத் தன்மையோ முழுமைத் தன்மையோ பெற்றவையல்ல. பாப்பையாவின் பிற்போக்கான தீர்ப்பு அந்தப் பின்னணில் அவர் பயன்படுத்திய இந்தப் பண்பாடு என்ற வார்த்தை ஒருவேளை அவரையும் அறியாமல் இனிமேல் மாறவே மாறாத அனைத்துக்காலத்திற்குமான பண்பாடு என்ற கண்ணோட்டோத்தைக் கொண்டவராக அவர் ஆகிவிட்டாரோ என்ற ஐயத்திலேயே இதனை நாம் கூற நேர்கிறது. 
இதற்கு நாம் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் இதுபோன்ற கருத்துக்கள் தான் மாய வலைகளாக மக்களின் மனதைக் கவ்வி அவர்களது பார்வையை மங்கச் செய்து அநீதி, அதர்மத்தின் அடித்தளத்தில் நிலைநாட்டப் பட்டுள்ள இந்த சமூக அமைப்பை நாசூக்காகக் காப்பாற்றும் வேலையைத் திறம்படச் செய்கின்றன. பலரால் முக்கியத்துவம் கொடுக்கப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படுவது அவசியம் இல்லை என்று கருதப்படக் கூடிய நிகழ்வுகள் கூட இந்த எதிர்மறைப் பணியினை ஆற்றவே செய்கின்றன. எனவே சமூகமாற்ற கண்ணோட்டம் கொண்டவர்கள் என்ற ரீதியில் சிறிது பெரிது என்று பேதம் பார்க்காமல் சமூகமாற்றப் போக்கைப் பாதிக்கவல்ல அனைத்தையும் ஆய்வு செய்து அவற்றிலுள்ள எதிர்மறைப் போக்குகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். பிற்போக்குத் தன்மைகளை அம்பலப்படுத்த வேண்டும். நாம் எங்கெல்லாம் இல்லையோ அங்கெல்லாம் நம் எதிரி இருப்பான் என்று கூறுவர். அதையே நாம் இப்படியும் கூறலாம். எங்கெல்லாம் சமூகமாற்றப் போக்கின் எதிரிகளும் எதிர்க்கருத்துக்களும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நாம் இருக்குமாறும் அவற்றிற்கு எதிரான சரியான கருத்துக்களை முன்வைக்குமாறும் நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும்.


1 comment:

 1. நாம் எங்கெல்லாம் இல்லையோ அங்கெல்லாம் நம் எதிரி இருப்பான் -எனும் உங்கள் கருத்தை நூறு விழுக்காடு ஏற்கிறேன்.
  இதையே வள்ளுவன், “செய்தக்க அல்ல செயக்கெடும்“ என்று கூறுவார்தானே?
  தங்களின் விரிவான ஆய்வு - பேச்சாளர் பெருமக்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கிறது.
  என்னைப் பொறுத்த வரையில், இன்றைய பட்டிமன்றங்கள் “ஊறுகாயை“ சாப்பாடாகவும், சாப்பாட்டை ஊறுகாய் போலவும் ஆக்கிவிட்டன.
  அதாவது நகைச்சுவைத் துணுக்கு எனும் ஊறுகாயைச் சொல்லுகிறேன். நான் இதுவரை சரியாகச் செய்துவருவதாகவே நம்புகிறேன். உங்கள் கருத்தறியவும் ஆவலுடன் இருக்கிறேன்.
  இயலுமெனில் எனது வலைதளத்திற்கும் வருக!
  www.valarumkavithai.blogspot.com
  தோழமையுள்ள,
  நா.முத்து நிலவன்,
  புதுக்கோட்டை - 622 004

  ReplyDelete