இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த
நான்காவது அலைவரிசையின் ஆவணப்படம் ஒரு மிகப்பெரும் தாக்கத்தை தமிழக மக்களின்
மனதில் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு அது போலியான ஆவணங்களை வைத்துத்
தயாரிக்கப்பட்ட படம் என்று எத்தனை கூறினாலும் அது அதனைப் பார்ப்பவர் மனதில் அதன்
நம்பகத்தன்மையைப் பெருமளவு நிலைநாட்டவே செய்துள்ளது. இலங்கை அரசின் அப்பட்டமான
பொய்கள்,
உண்மைகளை மூடிமறைக்கும் செயல்கள் அனைத்தும் அப்படத்தில்
இடையூடாக வரும் உலக அளவில் அறியப்பட்ட பல முக்கியப் பிரமுகர்களின் நேர்காணல்
செய்திகளால் தெளிவாக நிலைநாட்டப் பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுச்
செயலாளர் மில்லிபாண்ட் போன்றவர்களின் கூற்றுக்களும் இடைஇடையே அந்த ஆவணப் படத்தில்
சேர்க்கப்பட்டு அதன் நம்பகத் தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
மூன்று அடிப்படைகள்
இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மூன்று விசயங்களில் அந்த ஆவணப்படத்தின் மூலம்
வெளிப்படுத்தப் பட்டுள்ளன. முதலாவதாகக் கடைசிக்கட்டப் போர் இலங்கையில் நடந்தபோது
ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு அதன்பின் யுத்த நிறுத்தப் பகுதிக்கு
அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை இலங்கை அரசால் மிகக் குறைத்துக் கூறப்பட்டதன்
மூலம் இழைக்கப்பட்டுள்ள குற்றமாகும். அதாவது மிகக் குறுகிய இடத்தில் லட்சக்கணக்கான
மக்கள் அடைக்கப் பட்டிருந்த போதிலும் அங்கிருந்தோர் எண்ணிக்கை வெறும் 60,000 மட்டுமே என்று இலங்கை அரசு அறிவித்தது. அதனால் வெறும் 60,000 பேருக்கு மட்டும் தேவையான உணவுப் பொருட்களும் காயம்
பட்டிருந்தோர் சிலருக்கான மருந்துப் பொருட்களும் மட்டுமே இலங்கை அரசால்
அனுப்பப்பட்டது. அதனால் பல்லாயிரக் கணக்கானோர் பசியிலும்,
உரிய சிகிச்சையின்றியும் வாட நேர்ந்தது. பல அமைப்புகள்
யுத்த நிறுத்தப் பிராந்தியத்தில் உள்ள மக்கள் தொகையை மிகக் குறைவாக இலங்கை அரசு
தீர்மானித்துள்ளது என்று அப்போதே சுட்டிக் காட்டின. இருந்தாலும் இலங்கை அரசு தனது
கணக்கீடே சரி என்று பிடிவாதமாக வாதிட்டு பல்லாயிரக் கணக்கான மக்களைச் சொல்லொண்ணா
வேதனைக்கு ஆட்படுத்தியது.
யுத்த நிறுத்தப் பிராந்தியத்தில் போர்க் காலத்தில் கடைப்பிடிக்கப்படும்
நியதிகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டுக் கனரக ஆயுதங்களைக் கொண்டு மிகப் பெரும்
தாக்குதல்களை அப்பகுதியில் இலங்கை ராணுவம் நடத்தியது. அதனால் பல்லாயிரக் கணக்கான
உயிரிழப்புகள் ஏற்பட்டன. அவ்வாறு தாக்குதலுக்கு ஆட்பட்டவர்களுக்குப் போதுமான
அளவில் உயிர்க்காப்பு மருந்துகள் வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்படாததையும்
அங்கு போடப்பட்டிருந்த மருத்துவ முகாம்களின் அவலநிலை குறித்தும் பல சிங்கள
மருத்துவர்களே புகார் செய்தனர்; அவர்கள் பத்திரிக்கைகளுக்கும் பேட்டியளித்தனர். ஆனால் அந்த
மருத்துவர்களைத் தலைநகருக்கு வரவழைத்து விசாரணை என்ற பெயரில் அவர்களைக் காவல்
நிலையங்களில் வைத்து அச்சுறுத்தி இலங்கை அரசு அவர்கள் அளித்த பேட்டி ஒரு
நிர்ப்பந்தத்தினால் கொடுக்கப்பட்டது என்று அவர்களைக் கொண்டே கூற வைத்தது. அவர்களை
அவ்வாறு நிர்ப்பந்தம் செய்தவர்கள் எல்.டி.டி.இ.யினர் என்றும் அந்த மருத்துவர்களை இலங்கை அரசு
பத்திரிக்கைகளுக்குப் பேட்டியளிக்கச் செய்தது. இது இலங்கை அரசு செய்த இரண்டாவது
குற்றமாகும்.
மூன்றாவதாக ராணுவத்திடம் சரணடைய வந்த எண்ணிறந்த எல்.டி.டி.இ. ராணுவ வீரர்களைக்
கைது செய்து போர்க்குற்றவாளிகளாக நடத்தாமல் அவர்களை ஈவிரக்கமின்றி இலங்கை ராணுவம்
சுட்டுக் கொன்றது. இது மிகக் கொடுமையானதொரு போர்க்குற்றமாகும். இந்தப்
போர்க்குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக இவர்களைத் தண்டிக்கவே
முடியாத அளவிற்கு பல துரித ஏற்பாடுகளையும் இலங்கை அரசு செய்தது. அதாவது இரண்டு
முக்கிய ராணுவ அதிகாரிகளை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் தூதுவர்
அலுவலகங்களில் முக்கியப் பதவிகளில் அமர்த்தியுள்ளது. அங்கு அவர்களை யாரும் எந்தக்
குற்றத்திற்கும் கைது செய்ய முடியாது. அதாவது அவர்களை அப்படியொரு டிப்ளமேட்டிக் இம்மியூனிட்டியின் கீழ் கொண்டுவந்துள்ளது.
சர்வதேச உதவிகளின் முறையற்ற வினியோகம்
இந்தப் போர் நடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வந்த
சர்வதேச உதவிகளையும் உரிய முறையில் சுயேட்சையான அமைப்புகள் மூலமாக வினியோகிக்காமல்
அரசே அப்பொறுப்பை எடுத்துச் செய்வதாகக் கூறிப் பலருக்கு நிவாரணம் கிடைக்காத நிலையை
ஏற்படுத்தி மக்களை வாட்டி வதைத்துள்ளது.
பொய்யர்கள்
இவ்வாறு புகார்கள் குவிந்த நிலையில் உண்மை நிலையை அறிவதற்காக அங்கு வந்த இங்கிலாந்து
நாட்டின் உள்நாட்டுச் செயலர் மில்லிபாண்ட் இலங்கை அரசின் பல்வேறு வாதங்களைக்
கேட்டதற்குப் பின்பு மிகவும் தெளிவாக இலங்கை அரசு அதிகாரிகளைப் பற்றியும் அரசியல்
வாதிகளைப் பற்றியும் ஒரு கூற்றை ஆணித்தனமாக முன்வைத்தார். அதாவது அவர்கள்
பொய்யர்கள் கூசாமல் பொய் கூறுகின்றனர் என்று எவ்விதத் தயக்கமுமின்றி அவர்
கூறினார்.
கொடூரக் கொலை
இந்தப் போர்க்குற்றங்கள் அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல் வேறொரு
காட்சியையும் இந்த நான்காவது அலைவரிசை படம்பிடித்து முன்வைத்துள்ளது. அதாவது
எல்.டி.டி.இ.யின் தலைவர் பிரபாகரனின் 12 வயதே ஆன மகனையும் அவரது மெய்க் காப்பாளர்களையும் மிகக்
கோரமான முறையில் கொலை செய்த காட்சி இந்த அலைவரிசையினால் வெளிப்படுத்தப்
பட்டுள்ளது. அந்தச் சிறுவனின் மார்பகத்தில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளன. அந்த 5 குண்டுகளும் மிகக் குறைந்த தூரத்திலிருந்து சுடப்பட்டதால்
அவனது உடலில் பாய்ந்தவை என்று அவனது உடலைப் பரிசோதித்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும் மெய்க்காப்பாளர்களோடு அந்தச் சிறுவனும் சரணடையவே வந்துள்ளான் என்பதும்
சரணடைய வந்தவனையும் அவனது மெய்க்காப்பாளர்களையும் அவர்களது மேலாடையை அகற்றிக்
கோரமான முறையில் இலங்கை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பதும் இந்தக்
காட்சியின் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறை
அது மட்டுமின்றி விடுதலைப் புலிகள் ராணுவத்திலிருந்த பெண் புலிகள் பலர்
பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள காட்சிகளும் இந்த
ஆவணப் படத்தில் காட்டப்பட்டுள்ளன. மேலும் விடுதலைப் புலி ராணுவத்திலிருந்த
சிறுவர்களில் பலரும் ஈவிரக்கமின்றிக் கோராமான முறையில் கொன்று
குவிக்கப்பட்டிருப்பதும், இறந்த சிறு பிள்ளைகளின் உடல்கள் அகற்றப் படாமல் சிதறுண்டு
கிடக்கும் அவற்றின் மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும்
கோரக் காட்சியும் இந்த ஆவணப் படத்தில் பார்ப்பவரின் நெஞ்சை உலுக்கும்
விதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காட்சிகளோடு கூட ராணுவ ரகசியங்களாகப் பராமரிக்கப்படும் பல
தஸ்தாவேஜ்களும் இந்த ஆவணப் படத்தின் மூலம் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றின்
மூலம் இலங்கை அரசு போடும் வெளி வேசமும் அம்பலப்படுத்தப் பட்டுள்ளது.
இலங்கை அரசை அம்பலப்படுத்த உதவிய சிங்களர்
இதிலிருக்கும் மற்றொரு முக்கிய விசயம் என்னவென்றால் இந்த ஆவணப் படத்தில்
காணப்படும் காட்சிகள் அனைத்தையும் படம் பிடித்தவர்கள் பல சிங்கள வீரர்களேயாவர்.
அது மட்டுமின்றி ராணுவ ரகசிய ஆவணங்களை இந்த அலைவரிசைக்குக் கொடுத்து உதவியவர்களும்
சிங்கள அதிகாரிகளாகத்தான் இருந்திருக்க முடியும். ஏனெனில் வேறு சாதனங்களின் மூலம்
இவை வெளிவருவதற்கு வாய்ப்பேயில்லை. இதன்மூலம் சாதாரண சிங்கள மக்கள் மட்டுமல்ல பல
சிங்கள ராணுவ வீரர்களும் கூட இலங்கைத் தமிழ் மக்களுக்கு முழுக்க முழுக்க
எதிரானவர்களாக இருந்திருக்கவில்லை; அவர்களைத் தங்கள் நாட்டு மக்கள் என்று கருதுபவர்களாக
அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதே தெரிய வருகிறது. அதுமட்டுமின்றி அவர்கள்
படும் வேதனைகளை உலக அரங்கில் அம்பலப்படுத்தி இலங்கை ஆட்சியாளர்களைத் தோலுரிக்க
வேண்டும் என்பதும் அவர்களது எண்ணமாக இருந்திருக்கிறது என்ற விசயமும் இதன்மூலம்
வெளிப்பட்டுள்ளது.
கண்துடைப்பு விசாரணை
இதற்கு முன்பு இதே நான்காவது அலைவரிசையின் ஆவணப் படங்களின் மூலம் இலங்கை அரசு
இழைத்த பல யுத்தக் குற்றங்கள் வெளிப்பட்டன. அவற்றின் அடிப்படையில் இந்த யுத்தக்
குற்றங்களை விசாரிப்பதற்குப் பல உலக அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபையை அணுக
முனைந்துள்ளன என்பதை அறிந்த இலங்கை அரசு உடனடியாக அதைத் தவிர்ப்பதற்காகத் தானே ஒரு
விசாரணைக் கமிசனை ஏற்படுத்தி பெயருக்கு மேலோட்டமாக சில தவறுகள் நேர்ந்துள்ளதாக
வெளி உலகிற்குக் காட்டியது. அவற்றிற்கான உரிய நடவடிக்கைகளைத் தாங்களே மேற்கொள்ளப்
போவதாக ஒரு போலி நாடகத்தையும் நடத்தியது. அவ்வாறு உள்நாட்டில் ஒரு விசாரணைக் கமின் ஏற்பாடு செய்யப்பட்டால் அதன் பின்னர் அந்தக் குற்றங்களை
விசாரிப்பதற்கு ஐ.நா. சபையினை அணுக முடியாது. அதனை நோக்கமாகக் கொண்டே இந்தப் போலி
நாடகத்தை இலங்கை அரசு அரங்கேற்றியது.
சூறாவளி
ஆனால் இந்த இரண்டாவது ஆவணப் படத்தில் வெளிப்படுத்தப் பட்டுள்ள பல விசயங்கள்
இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட விசாரணைக் கமிசனால் விசாரணைக்கும் பரிசீலனைக்கும்
உட்படுத்தப்படாதவை. எனவே அந்த அடிப்படையில் அவற்றை விசாரிக்க ஐ.நா. சபையினையும்
சர்வதேச மனித உரிமை ஆணையத்தையும் வேறு நாடுகள் வற்புறுத்த முடியும். அதனைச்
செய்வதற்கான தீர்மானங்களை ஐ.நா. மாமன்றத்தில் கொண்டுவரவும் முடியும். அந்த
அடிப்படையில் தான் அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து இலங்கை அரசின்
போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறலையும் விசாரிக்க வேண்டும் என்று கோரும்
தீர்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்தன. அதை மையமாக வைத்து இந்திய அரசியலில் பெரும்
சூறாவளியும் கிளப்பப்பட்டது.
இந்தப் பிரச்னை தமிழ்நாட்டில் செயல்படும் பல அரசியல் கட்சிகளைப் பெரிதும்
சலனப் படுத்தியது. ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க.வும் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.கழகமும் இப்பிரச்னையைக்
கையிலெடுத்து இந்த மூன்று நாடுகளால் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்திய அரசு
முழுமையான ஆதரவினை அளிக்க வேண்டும்; அதன்மூலம் இலங்கை அரசின் போர்க் குற்றங்களை உலக அரங்கின்
வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கின. பல்வேறு
நிர்ப்பந்தங்களுடன் செயல்படும் கட்டாயத்தில் உள்ள ஆளும் கட்சியும் மத்தியில்
ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியிலிருக்கும் தி.மு.கழகமும் இத்தகைய
நிலை எடுத்துள்ள சூழ்நிலையில் ம.தி.மு.க. போன்ற கட்சிகளைப் பற்றிக் கூறவே
வேண்டாம். அவை எப்போதுமே அதிகபட்ச நடவடிக்கையை இலங்கை அரசிற்கு எதிராக எடுக்க
வேண்டும் என்றே கோரக் கூடியவை.
புனிதப் பசுக் கண்ணோட்டம்
இந்தக் கோரிக்கை தமிழக அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்ட சூழ்நிலையின் முதல்
கட்டத்தில் அதாவது இதனை மையமாக வைத்து நாடாளுமன்றத்தில் பல கேள்விகள் தமிழக
நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட சூழ்நிலையில் அதற்குப் பதிலளித்த மத்திய
அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் தொனி இக்கோரிக்கைக்கு ஆதரவானதாக இருக்கவில்லை.
அவர் எப்போதுமே உலக அரங்குகளில் ஒருசில குறிப்பிட்ட நாடுகளைக் கண்டிக்கும்
விதத்தில் எழும் கோரிக்கைகளுக்கு இந்திய அரசு ஆதரவளிப்பதில்லை;
இதனை ஒரு நியதியாகவே நமது நாடு பின்பற்றி வருகிறது என்று
குறிப்பிட்டார். அதாவது இலங்கை என்ற ஒரு குறிப்பிட்ட நாடு இழைத்துள்ளதாகக்
கருதப்படும் போர்க் குற்றங்களுக்கு எதிராக ஒரு விசாரணை சர்வதேச அமைப்பினால்
நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் எழுந்தால் பொதுவாக அவற்றை இந்திய
அரசு ஆதரிப்பதில்லை; அதனை ஒரு நியதியாகவே இந்தியா கடைப்பிடித்து வருகிறது என்று
பிரணாப் முகர்ஜி கூறினார். அதன் பொருள் மிகவும் தெளிவானது அதாவது அமெரிக்கா,
நார்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா. மாமன்றத்தில்
கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை நாம் ஆதரிக்க முடியாது என்பதே அதன் பொருள்.
விதிவிலக்கு
ஆனால் இந்த நியதியை இந்தியா அனைத்துக் காலகட்டங்களிலும் கடைப்பிடித்ததில்லை.
குறிப்பாகக் கம்பூச்சியாவில் அதன் முன்னாள் ஆட்சியாளர் போல்பாட் இழைத்த போர்க்
குற்றங்கள் என்று கருதப்பட்ட குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட
தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கவே செய்தது.
ஆனால் பின்னர் நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இலங்கை அரசுக்கு எதிரான
தீர்மானத்தைச் சில வரையறைகளுக்கு உள்பட்டு ஆதரிக்கப் போவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கு முன்பு இதனை மையமாக வைத்து அதாவது இந்தத் தீர்மானத்தை
இந்திய அரசு ஆதரிக்காமல் போனால் தங்களது அமைச்சர்களைப் பதவியைவிட்டு விலகுமாறு
கோரப் போவதாகவும் அதற்கான தீர்மானத்தை கட்சியின் செயற்குழுவில் வைக்கப் போவதாகவும்
தமிழக முன்னாள் முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் மன்மோகன் சிங்கின் ஆதரவு
அறிவிப்பு அவரைப் புளகாங்கிதம் அடையச் செய்தது.
அதே வேளையில் ஆளும் அ.இ.அ.தி.மு.க.வோ மன்மோகன் சிங் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த
ஆதரவில் உள்ள போதாமைகள் எனச் சிலவற்றை முன்வைத்தது. அந்த அடிப்படையில் அரை மனதுடன்
கொண்டுவரப்பட்டுள்ள இத்தீர்மானத்தின் பாலான அக்கட்சியின் கண்டனத்தையும் செல்வி
ஜெயலலிதா அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வுகள் பல கேள்விகளை தமிழக
மக்களின் மனதில் எழுப்பியுள்ளது.
எழும் கேள்விகள்
முதற்கண் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ள நாடுகள்
அனைத்தும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள். அவற்றில் அமெரிக்கா,
பிரான்ஸ் ஆகிய நாடுகள் பெரிதும் வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய
நாடுகள். இவ்விரு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவோ ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தின்
தலைவனாகவும் விளங்கக் கூடிய நாடு. அந்நாட்டின் நடவடிக்கைகள் அனைத்தும் ஏதாவது ஒரு
வகையில் ஏகாதிபத்திய நலனை உயர்த்திப் பிடிக்கும் தன்மை வாய்ந்தவையாகவே காலங்காலமாக
இருந்து வந்துள்ளன. இந்நிலையில் அப்படிப்பட்டதொரு நாடு ஏன் இத்தகைய தீர்மானத்தைக்
கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது நம் மனதில் எழும் ஒரு முக்கியக்
கேள்வியாகும்.
இதுதவிர இந்தியாவின் ஒரு முக்கியமான மாநிலம் தமிழ்நாடு ஆகும். அதன் தேசிய
இனமான தமிழ் தேசிய இனத்தின் பங்கும் பகுதியுமாக வருபவர்களே இலங்கைத் தமிழ் மக்கள்.
அவர்களுக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. அவற்றை இழைத்துள்ளதொரு
அரசிற்கு எதிராகக் கொண்டுவரப்படும் எந்தத் தீர்மானத்தையும் இந்திய அரசு
உளப்பூர்வமாக ஆதரிக்கவே முன்வர வேண்டும். இதுவே நடைமுறையில் மக்களின்
எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் அந்த எதிர்பார்ப்பிற்கு மாறாக முதலில் ஆதரிக்க
முடியாது என்ற வகையிலான ஒரு நிலையினையும் அதன் பின்னர் பல்வேறு வரம்புகளுக்கு
உள்பட்டு அதனை ஆதரிக்கப் போவதாக மற்றொரு நிலையினையும் இந்திய அரசு எடுத்துள்ளதேன்?
அதாவது ஏன் எவ்விதத் தயக்கமுமின்றி அதனை ஆதரிக்கப் போகிறோம்
என்ற நிலையினை இந்திய அரசு எடுக்கவில்லை? அவ்வாறு ஒரு நிலையினை எடுப்பதற்கு எதிராக இந்திய அரசின்
முன் நிற்கும் தடைக்கற்கள் எவை? என்பது நம் மனதில் எழும் முக்கியக் கேள்விகளாகும்.
அடுத்ததாக தனிப்பட்ட நாடுகளுக்கு எதிராக ஐ.நா. அரங்கில் கொண்டுவரப்படும்
தீர்மானங்களை இந்திய அரசு ஆதரிப்பதில்லை என்ற பிரணாப் கூறும் ‘புனிதப்பசுக்’ கோட்பாட்டில் உள்பொதிந்துள்ள மதிப்புகள் எவை?
ஏன் அது அத்தகைய ஒரு புனிதப்பசு போன்ற கோட்பாடாகப்
பராமரிக்கப்படுவதாக ஆளும் கட்சியால் காட்டப்படுகிறது?
இவை நம் மனதில் அடுத்து எழும் கேள்விகளாகும்.
எப்படி வந்தது அந்தப் புனிதப்பசுக் கண்ணேட்டம்
அதாவது இந்தியா போன்ற இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்பு விடுதலை பெற்ற
நாடுகளைச் சேர்ந்த சில நாடுகள் மிகவும் துரிதமான முதலாளித்துவ வளர்ச்சியைக்
குறுகிய காலத்தில் தங்கள் நாடுகளில் சாதிக்க விரும்பின. ஆனால் நாம் விடுதலை பெற்ற
போதே உலக அளவில் முதலாளித்துவம் நெருக்கடி சூழ்ந்த ஒன்றாக ஆகிவிட்டது. அந்த நெருக்கடிகளின்
விளைவாகத் தோன்றியவையே இரண்டு உலக யுத்தங்களாகும். அந்த நிலையில் முதலாளித்துவத்தை
நமது நாட்டில் வளர்த்தெடுக்க வேண்டுமானால் அதற்கு நமது உள்நாட்டு வர்த்தகம்
மட்டும் போதாது நமது உற்பத்திப் பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட
வேண்டும். அத்தகைய வெளிநாட்டு ஏற்றுமதிக்கு அனைத்து நாடுகளின் நல்லுறவும்
நல்லிணக்கமும் நமது நாட்டிற்கு வேண்டும். அவையின்றி நமது இந்திய முதலாளிகள்
ஏற்றுமதி மூலமான பெரிய வளர்ச்சியினை அடைய முடியாது. அந்தப் பின்னணியில் தோன்றிய
கொள்கையே தற்போது இந்திய ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படும் நாடுகளுக்கு எதிரான
தீர்மானங்களுக்கு ஆதரவாக நாம் நிலை எடுப்பதில்லை என்ற இந்த நிலையாகும்.
நாம் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ள நாடு அதன் மக்களுக்கு எத்தனைக் கொடுமைகளை
இழைத்தாலும் நாம் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்ய முடிந்தவர்களாக இருக்க வேண்டும்
என்ற குறுகிய தன்னலவாதக் கண்ணோட்டமே இந்தப் புனிதப்பசு கண்ணோட்டமாகும்.
அந்த அடிப்படையில் தான் இந்திய அரசின் இவ்வியத்தின் பாலான தயக்கமும் தேக்கமும் பார்க்கப்பட வேண்டும்.
இந்தக் கோணத்தில் நமது நாட்டின் பல இடதுசாரி இயக்கங்கள் இப்பிரச்னையைப்
பார்க்கவில்லை.
அவை நாம் மிகப்பெரிய நாடு அதற்கு அருகிலுள்ள சிறிய நாட்டில் நமது தேசிய
இனத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அந்நாட்டில் சமமாக
நடத்தப்படாவிட்டால் நமது மேலாதிக்கத்தைப் பயன்படுத்தியாவது அந்த நாட்டை வழிக்குக்
கொண்டுவர வேண்டும் என மற்ற பிராந்தியவாதக் கட்சிகளைப் போல் நினைப்பவர்களாவே
உள்ளனர். அந்த அடிப்படையிலேயே நமது இந்திய ராணுவத்தைக் கூட இலங்கைக்கு அனுப்ப
வேண்டும் என்றும் ஒரு சமயம் அவை கோரின.
அப்போதும் இப்போதும் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை. அதாவது நமது
நாட்டின் ராணுவ வலிமை உள்பட அனைத்து வலிமைகளும் நமது அரசு எந்த வர்க்கத்தின்
நலனுக்காகச் செயல்படுகிறதோ அந்த வர்க்கத்திற்கே பயன்படுத்தப்படும் என்பதை அவர்கள்
அறிந்து கொள்ளவில்லை. அதாவது இலங்கைக்கு எதிராக இந்தியா தனது ராணுவத்தை
அனுப்பினாலும் அது முழுக்க முழுக்க இலங்கைத் தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக என்ற
அடிப்படையிலானதாக இருக்காது; மாறாக இந்திய முதலாளிகளின் முதலீடுகளை அதிகரிப்பதை
நோக்கமாகக் கொண்டதாகவே அது இருக்கும் என்பதை இவர்கள் அறியவில்லை.
விளக்கம் என்ன?
இதே இடதுசாரிகள் கொண்டிருக்கும் மற்றொரு கருத்து அமெரிக்க ஏகாதிபத்தியம்
மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் மக்களால் எதிர்க்கப்பட வேண்டியதாகவே இருக்கும்
என்பதாகும். எனவே அமெரிக்காவே இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசிற்கு எதிராக
எழுப்பியுள்ள இந்நிலையில் அவர்களது அணிகளிடம் இது குறித்து எந்த விளக்கத்தைக்
கூறப் போகிறார்கள் என்பதும் ஒரு முக்கியக் கேள்வியாகும்.
இலங்கை அரசு எல்.டி.டி.ஈ.யுடனான அதன் இறுதிக்கட்டப் போரின் போது இந்தியா,
சீனா ஆகிய இரு நாடுகளோடு மட்டும் தனது உறவினைப் பெரிதும்
பராமரித்தது. அவற்றில் ஒரு நாட்டைத் தனது ராணுவத்தைப் பயிற்றுவிப்பதற்கும் மற்றொரு
நாட்டை ஆயுதம் வாங்குவதற்கும் அது பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்காவை இவ்விசயத்தில்
தலையிட அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்டிருந்த அமெரிக்கா தற்போது
இப்பிரச்னையைக் கையிலெடுத்து இலங்கைக்கு இக்கட்டானதொரு சூழ்நிலையை
ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுபோன்ற அடிப்படை சமூகமாற்றம் சார்ந்திராத விசயங்களில் ஏகாதிபத்திய
நாடுகள் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை போன்ற விசயங்களில் கோட்பாடு ரீதியான நிலை
எடுப்பவையாகத் தங்களை அவ்வப்போது காட்டிக் கொள்ளவே செய்யும். அந்த அடிப்படையில்
தான் இவ்விசயத்தை நார்வே, பிரான்ஸ் போன்ற நாடுகள் கையிலெடுத்து ஐ.நா. மாமன்றம் வரை
கொண்டு சென்றுள்ளன.
இந்தியாவின் பாடுபடும் மக்களைப் பொறுத்தவரை தேசிய இன வேறுபாடு கடந்து மத்திய
அரசை வற்புறுத்தி இப்பிரச்னையில் கொடுமைகள் இழைத்துள்ள பாசிஸ இலங்கை அரசையும்
கொடுமைகளை இழைத்தவரையும் போர்க் குற்றவாளிகளாக அறிவித்து அவர்கள் மீது உரிய
நடவடிக்கை எடுக்கச் செய்ய இயக்கங்கள் கட்டி நிர்ப்பந்திக்க வேண்டும். ஏனெனில்
அப்படியயாரு சூழ்நிலையைக் கொண்டுவந்து இது போன்ற நாடுகளைக் கூண்டிலேற்றினால் அது
நல்லதொரு முன்னுதாரணமாக மற்ற நாடுகளுக்கு இருக்கும்.
No comments:
Post a Comment