Powered By Blogger

Wednesday, July 20, 2011

அரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தாத சமச்சீர் கல்வியால் சமச்சீர் வருமா?

அரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தையும் அரசுப்பள்ளி ஆசிரியரின் கற்பிக்கும் திறனையும் மேம்படுத்தாமல் கல்வியின் மேம்பாடு குறித்துப் பேசுவது ஏமாற்று வேலையே இந்த ஆண்டு அமல் செய்யப்படவிருந்த சமச்சீர் கல்விக் கொள்கை பதவிக்கு வந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.




கல்வியாளர்கள் நிபுணர்கள் பல்வேறு பார்ப்பனிய எதிர்ப்பு இடதுசாரி அமைப்புகள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் இவைதவிர சி.பி.ஐ(எம்). கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் இவை அனைத்தும் இவ்வாறு சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பல்வேறு விதங்களில் விமர்சிக்கின்றன.


இச்சமச்சீர் கல்வி பழைய தி.மு.க. அரசினால் கொண்டுவர எத்தனிக்கப் பட்டதால் வேண்டுமென்றே அதாவது பழைய அரசின் கொள்கைகள் அனைத்தையும் அவை சரியானவையா? அல்லது தவறானவையா? என்று கருதாமல் பாரபட்சமாகக் கிடப்பில் போடும் அல்லது கைவிடும் போக்கைப் புதிய அரசாங்கம் கடைப்பிடிக்கிறது என்ற பொதுவான ஒரு கருத்தினை மேலே கூறிய தனிநபர்களும் அமைப்புகளும் முன் வைக்கின்றன.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டு அது உச்சநீதி மன்றம் வரை சென்று தற்போது மாநில அரசு சமச்சீர் கல்வி முறையின் படியிலான பாடத் திட்டங்களைச் சீர்செய்ய குழு ஒன்றினை நியமித்துள்ளது.


முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தான் எழுதிய செம்மொழி மாநாட்டுக் கவிதை சமச்சீர் கல்விப் பாட நூல்களில் இடம் பெற்றிருப்பதால் தான் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றால் அந்த கவிதையை எடுத்துவிட்டுக் கூட அந்த பாட நூல்களை மாணவர்களுக்கு வினியோகிக்கலாம் என்று கூறி ஓரே சமயத்தில் ஆளும் கட்சி துவேச மனப் பான்மையுடன் செயல்படுகிறது என்பதையும் தான் கல்வியின் நலனுக்காக எதையும் விட்டுக் கொடுப்பவனாக இருக்கிறேன் என்று காட்டவும் முயல்கிறார்.


சமச்சீர் கல்வி குறித்த முழுமையான விவரங்கள் எங்கும் வெளியிடப் படவில்லை. மேலோட்டமாக மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிப்பவருக்கும் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்து அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிட்டும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்தை வகுப்பதற்கென 2006-ம் ஆண்டு ஒரு குழுவினை அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் இக்கல்வித் திட்டம் வரைவு செய்யப்பட்டது என்பதே இக்கல்வி குறித்து மக்களுக்கு வழங்கப்பட்ட புரிதலாக உள்ளது. அதாவது இதன் உண்மை நோக்கம் அரசுப் பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்துவது என்பதே நமக்கு வழங்கப்பட்டுள்ள புரிதலாகும்.


அதற்காக மெட்ரிக்குலேசன் பாடத்திட்டங்களிலிருந்து சில பகுதிகளைக் குறைத்து, அரசு பாடத்திட்டங்களை ஒரளவுக்கு உயர்த்தி சமச்சீர் கல்வி உருவாக்கப்பட்டுள்ளது என்பதே பொது மக்கள் பத்திரிக்கைச் செய்திகளை மையமாக வைத்த அவர்களின் யூகத்தின் அடிப்படையில் புரிந்து கொண்ட வி­யமாகும்.


மிகக் குறைந்த பாடத்திட்டம்



வெளிப்படையாகப் பார்த்தால் இந்திய மாநிலங்கள் அனைத்தின் பாடத்திட்டங்களிலிருந்தும் மிகவும் குறைந்த பாடங்களைக் கொண்ட பாடத்திட்டம் தமிழ்நாட்டின் பாடத்திட்டமாகும்.
அதற்கான காரணம் மாணவர்கள் கூடுதல் பாடங்களை படிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர் என்ற ஆசிரியர் அமைப்புகளின் அறிவுறுத்தலால் அரசுகளால் அடுத்தடுத்துச் செய்யப்பட்ட பாடக்குறைப்பு நடவடிக்கைகளே.


நாடு முழுவதும் பல மாநிலங்களில் மாணவர்களால் படிக்க முடிந்த பாடங்கள் தமிழக மாணவர்களால் மட்டும் படிக்க முடியாதவையாக இருக்கின்றன என்பதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார். ஏனெனில் கேரளாவிற்கு அடுத்த படியாகக் கற்றோர் எண்ணிக்கையில் காலங்காலமாக உயர்ந்து விளங்குவது தமிழ்நாடாகும். அந்த மாநில மாணவர்களுக்குப் பாடங்களைக் கிரகிக்கும் திறன் குறைவாக இருக்கிறது என்ற கூற்றை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படியானால் ஆசிரியர்களின் கூற்றில் சுத்தமாகவே உண்மையில்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.


கட்டாயத் தேர்ச்சியே காரணம்


குறிப்பாக உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இப்பிரச்னை ஒரளவு இருப்பது உண்மையே.
அதற்கான அடிப்டைக் காரணம் முதல் வகுப்பிலிருந்து எட்டாவது வகுப்பு வரை மாணவர்கள் அனைவரையும் கட்டாயமாகத் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க வேண்டும் (No detention Policy) என்ற கொள்கை அமலில் இருப்பதாகும்.


இந்தக் கொள்கை அரசால் தோல்வி அடைந்த மாணவர்களின் துவண்டுவிடும் மனநிலையைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்பட்டது என்று இது அமலானபோது கூறப்பட்டது.


போட்டியுள்ள உலகத்தில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளாதவர்களை அவர்கள் பள்ளியில் துவண்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் ஒரு நடவடிக்கையை எடுத்தால் அது அவர்கள் வாழ்க்கையில் துவண்டு விடுவதில் சென்று முடியும்.


எனவே ஒன்று இந்தக் கொள்கையைக் கொண்டு வந்திருக்கக் கூடாது அல்லது தேர்வில் யாரும் தோல்வியுறாத வண்ணம் மாணவர் அனைவரையும் உருவாக்கும் எண்ணப் போக்கையும், உந்துதலையும் கற்பிக்கும் ஆசிரியரிடம் கொண்டு வந்திருக்க வேண்டும்.
இதனைச் செய்வதில் அக்கறையில்லாத அரசு ஏதோ மேலை நாடுகளின் தரத்திற்கு நமது பள்ளிகள் மற்றும் ஆசிரியர் தரத்தை உயர்த்தி விட்டது போல் உலக அரங்கில் பாவனை காட்டுவதற்காகவும் குழந்தைகளின் மனநிலையை மனோதத்துவ ரீதியில் ஆய்வு செய்து அதற்குந்த வகையிலெல்லாம் திட்டங்கள் தீட்டுவதாகக் காட்டிக் கொள்வதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்தது.


ஆசிரியரின் அசிரத்தை


அதன் விளைவாக ஒன்று முதல் எட்டாவது வகுப்பு வரை சரிவர எழுதப் படிக்கவும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணிதம் தெரியாமலும் ஒன்பதாவது வகுப்பு வரை அரசுப்பள்ளி மாணவர்களில் பெரும்பாலோர் வந்து விடுகின்றனர்.
எட்டாவது வகுப்பு வரை எந்த மாணவரையும் தேர்ச்சி பெறாதவர் என்று நிறுத்தி வைக்கக் கூடாது என்ற ஆணை வந்துவிட்டதால் நாம் சொல்லிக் கொடுத்தால் என்ன, சொல்லிக் கொக்காவிட்டால் என்ன, பிள்ளைகள் படித்தால் என்ன படிக்காமற் போனால் என்ன என்ற எண்ணப் போக்கிற்கு வருந்தத்தகுந்த விதத்தில நமது ஆசிரியர் சமூகம் வந்துவிட்டது.
அதனால் ஆரம்பக் கல்வி மூலம் கிடைக்க வேண்டிய அடிப்படை அறிவே இல்லாமல் தேர்ச்சி பெற்றுவரும் மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு உருவாகிறது.


அதன் காரணமாகப் பல மாணவர்கள் உயர்நிலைக் கல்வி வரை செல்லாமல் கூட நின்றுவிடுவதும் நடைபெறுகிறது. ஆரம்பக் கல்வியில் 100 சதம் என்ற அளவிற்கு இருக்கும் மாணவர் சேர்க்கை உயர்நிலைக் கல்விக்குச் செல்கையில் குறைவதற்கு இதுவே முக்கியக் காரணமாகும்.
பாடத் தேவையைக் கருத்திற்கொள்ளாத போக்கு
மேலும் 5 முதல் 8-வது வகுப்பு வரை கிராமப்புறங்களில் உள்ள பல அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையைப் பொறுத்தே ஆசிரியர் நியமனம் நடைபெறுகிறது.


அதன் காரணமாகக் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்கள் அனைத்தையும் அவற்றைக் கற்பிப்பதற்கான திறன் பெற்றவராக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளனரா என்பதைப் பார்த்து நியமனம் செய்யாமல் அனைத்துப் பாடங்களையும் கற்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் திறனற்ற ஆசிரியர் மேல் சுமத்தப்படுகிறது. அதனால் இந்த மூன்று பாடங்களையும் சரியாக மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் பல ஆசிரியர்களால் கற்பிக்க முடிவதில்லை.


ஏனெனில் அவர்கள் கற்ற, பல காலம் கற்பித்த பாடங்களிலிருந்து தற்போதைய பாடங்கள் உலக அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அளவிற்கு மாறாவிட்டாலும் உலக அரங்கில் அப்பட்டமாகப் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக ஓரளவிற்கேனும் மாற்றப்பட்டுள்ளது.


எனவே ஓரளவு தங்களது சொந்த முயற்சியில் 5-வது வகுப்பு வரை படித்து 6-வது வகுப்பிற்கு வந்துவிட்ட ஒருசில மாணவர்கள் கூட இந்தப் பாடங்கள் சரிவரக் கற்பிக்கப் படாததால் உற்சாகம் குன்றி 9-ம் நிலை செல்லும் போது அப்போது கற்பிக்கப்படும் பாடங்களைக் கற்க மிகவும் சிரமப் படுகின்றனர்.
அப்படிப்பட்ட மாணவர்களின் போதாமைகளை உணர்ந்து அதையயல்லாம் ஈடுகட்டும் விதத்தில் கூடுதல் சிரத்தை எடுத்துக் கல்வி கற்பிப்பவர்களாக பெரும்பாலான உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளி ஆசிரியர்களும் இல்லை.


இதன் காரணமாகவே அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறன் குறைந்து காணப்படுகிறது. மேலும் தற்போது கல்வி அறிவு பெறுவதில் பெரிதும் உதவ வல்லதாக இருக்கும் பல்வேறு வசதிகள் அரசுப் பள்ளிகளில் இருப்பதில்லை. குறிப்பாகக் கணிணி வசதி அரசுப் பள்ளிகளில் செய்துதரப் படுவதில்லை. பெயரளவிற்கு ஒன்றிரண்டு கணிணிகள் வழங்கப்பட்டாலும் அவை பயிற்றுவிக்கப் பயன்படும் சாதனமாக அல்லாது ஒரு காட்சிப் பொருளாகவே பல அரசுப் பள்ளிகளில் வைக்கப் பட்டுள்ளன.
அதனைத் தாங்கள் பயன்படுத்தியோ மாணவர்களைப் பயன்படுத்த அனுமதித்தோ அதில் கோளாறு ஏதாவது ஏற்பட்டு விட்டால் அதற்கு யார் பதில் சொல்வது; அதை சரிசெய்யச் செலவாகும் பணத்தை யார் கொடுப்பது என்பது போன்ற கேள்விகள் நிரம்பிய மனநிலை அரசுப் பள்ளி நிர்வாகங்களிருப்பவரிடம் மிகப்பெருமளவு உள்ளது.


ஆசிரியர் அமைப்புகளின் வற்புறுத்தல்


இந்தப் பின்னணியில் தரமும் திறனும் குறைந்தவராக அரசுப் பள்ளி மாணவர்கள் ஆக்கப்பட்டு விட்டதால் அத்தனை சிரமமின்றி தாங்கள் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர் அமைப்புகள் அரசை வற்புறுத்தி அடுத்தடுத்து பாடக் குறைப்புகளைக் குறிப்பாக உயர் மற்றும் மேல்நிலைப் பாடத்திட்டங்களில் வற்புறுத்துகின்றன. அதைக்கொண்டு வருவதில் வெற்றியும் கண்டுள்ளன. இதன் விளைவாகவே இரண்டுவகைக் கல்வி தமிழ்ச் சமூகத்தில் நிலை பெற்றுவிட்டது.


ஒன்று உலக அரங்கில் கற்றோர் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதாகக் காட்டுவதற்காகக் கையெழுத்து மட்டும் போட முடிந்தவர்களாகப் பெரும்பாலான மாணவர்களை ஆக்கும் அரசுப் பள்ளிக் கல்வி; மற்றொன்று வேலை வாய்ப்பைப் பெற்றுத்தர உதவும் மெட்ரிக்குலேசன் மற்றும் பிறவகைத் தனியார் பள்ளிக் கல்வி என்ற இரண்டுவகைக் கல்வி தோன்றிவிட்டது.


அரசுப் பள்ளிகளில் நிலவும் நிலைமைக்கு நேர்மாறாக தனியார் பள்ளிகளில் நிலவும் நிலைமை உள்ளது. தங்களது உயர்தரத் தேர்ச்சி விகிதம் மட்டுமின்றிக் கூடுதல் மதிப்பெண் பெறும் மாணவர் எண்ணிக்கையையும் உயர்த்திக் காட்டி அதன்மூலம் தங்களது பள்ளிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு வழிவகுத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தனியார், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் செயல்படுகின்றன.


அதாவது கூடுதல் ஊதியம் பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிகச் சிரத்தையின்றிக் கற்பிக்கும் போது, தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்கள் ஓய்வு ஒளிச்சலின்றி கற்பிக்கும் வினோதமான நிலை நிலவுகிறது.


துரதிர்ஷ்டவசமாக நன்கு நிலைபெற்றுள்ள ஆசிரியர் அமைப்புகள் தங்கள் உறுப்பினர்களாக உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தொழிலான கல்வியின் மேம்பாடு குறித்து எந்தக் கோரிக்கையும் எழுப்பாமல் அவர்களது ஊதியம் குறித்து மட்டும் கோரிக்கை எழுப்பும் அமைப்புகளாக ஆகிவிட்டன.


மேலும் தனியார் பள்ளிகளில் தங்களை ஒத்த ஆசிரியர் சமூகம் குறைந்த கூலிக்கு அரும்பாடு படுவதைக் கண்டும் கண்டு கொள்ளாமல் இருக்கும் போக்கையும் அவை கடைப் பிடிக்கின்றன.


அடிக்கடி தேர்வுகள் நடத்தி மாணவர்களைக் கூடுதல் மதிப்பெண் பெற முடிந்தவர்களாக தனியார் பள்ளிகள் உருவாக்குகின்ற வேளையில் பாடத் திட்டத்திலுள்ள பாடங்கள் அனைத்தையுமே கூட நடத்தாமல் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதற்கு இவ்வளவு நடத்தினால் போதும் என்ற அளவிற்குப் பாடங்களை நடத்துபவர்களாக அரசுப் பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலோர் உள்ளனர்.


தனியார் கல்வியின் பக்கம் தள்ளப்படும் பெற்றோர்


இந்தப் பின்னணியில் தான் வேலை வாய்ப்புப் பெற்றுத்தர உதவும் என்ற அடிப்படையில் நமது பெற்றோர் தங்களது பிற அத்தியாவசியச் செலவினங்களைக் கூடக் கட்டுப்படுத்திப் பணத்தைச் சேர்த்துத் தனியார் பள்ளிகளுக்குத் தங்களது பிள்ளைகளை அனுப்புகின்றனர். இதைத் தவிர தனியார் பள்ளிகள் மீதான குருட்டுத் தனமான மோகம் எதுவும் அவர்களுக்கு இல்லை.
அரசுப் பள்ளிகளில் இந்தப் போக்கு நிலவுகையில் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் கற்பிக்கும் அளவிற்குப் பாடத் திட்டங்களை அரசுப் பள்ளிகளில் உயர்த்தினால் கூட, படித்து வேலை பெறுவதன் மூலம் தான் தங்களது பிள்ளைகளுக்கு ஒரு நிச்சயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிற பெற்றோர் அரசுப் பள்ளிகளுக்குத் தங்களது பிள்ளைகளை அனுப்பப் போவதில்லை.


ஏனெனில் பாடத்திட்டம் கூடுதலாக இருப்பது மட்டும் அவர்கள் தங்கள் பிள்ளைகளை மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு அனுப்புவதற்குக் காரணம் அல்ல; ஆனால் அந்தப் பாடத்திட்ட அதிகரிப்பினைக் கூடத் தற்போது பெரிதாகப் பேசப்படும் சமச்சீர் கல்வி செய்துள்ளதாக தெரியவில்லை.
அதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பத்தாம் வகுப்பிற்கான ஆங்கிலப் பாடத்திட்டம் மிகவும் பாடங்கள் குறைக்கப்பட்டதாக அதாவது ஏறக்குறைய 6-வது வகுப்பு ஆங்கிலப் பாடத்திட்டத்தைப் போல் இருப்பதாக பல ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


இந்த நிலை நிலவுவதற்கு இன்னொரு முக்கியக் காரணம் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்து வருவதற்கு 8-வது வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயத் தேர்ச்சி 6 முதல் 8-வது வகுப்புவரை ஒவ்வொரு பாடத்தைக் கற்பிப்பதற்கு அப்பாடங்களில் திறமை பெற்ற தனித்தனி ஆசிரியர் இல்லாமை, பாடத்திட்டக் குறைப்புகள் அகில இந்தியப் போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவரை பின்தங்கி இருக்கச் செய்யும் நிலை இவை அனைத்தையும் அரசு அறியாமல் இல்லை.


அறிவைக் கண்டு அஞ்சும் அரசுகள்


இருந்தும் அக்கறையுடன் இவ்வளவு பொருட்செலவு செய்தும் உரிய கல்வி மாணவர்களுக்கு கிடைக்கவில்லையே என்ற கவலையின்றி இருப்பதற்குக் காரணம் எந்த உருப்படியான விஷ‌யத்திலும் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்பதோடு உண்மையான, விஞ்ஞானபூர்வ, தர்க்க ரீதியாக சமூக விஞ்ஞான உண்மைகளை அறிந்து கொள்ள உதவும் கல்வியை மாணவர்கள் பெற்றால் அது தங்களைப் பாதிக்கும் என்று எண்ணுபவர்களாகவும் ஆட்சியாளர் ஆகிவிட்டனர்.


அதன் காரணமாகவே கல்விக்குப் பெரும் பணம் செலவிடுவதாக ஒரு பக்கம் மக்களிடம் காட்டவும் வேண்டும். ஆனால் அது வழங்கும் உண்மையான அறிவும் மக்களிடம் சென்று சேர்ந்துவிடவும் கூடாது என்று அரசு எண்ணுகிறது. அதாவது அறிவைக் கண்டு அரசுகள் அஞ்சுகின்றன.
இந்தப் பின்னணியில் உரிய முனைப்புடன் ஆசிரியரின் கற்பிக்கும் திறனை மேம்படுத்துவதிலோ உரிய சாதனங்களைத் தேவைப்படும் எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கி அதன் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதிலோ அக்கறை காட்ட முடியாதவைகளாக அரசுகள் இருக்கின்றன.


இந்த நிலை மாற வேண்டும் என்றால் அது மக்கள் இயக்கங்கள் மூலமாகவே நடைபெற முடியும். அதைவிடுத்து அரசுகள் தாமாகவே அனைவருக்கும் ஓரேவகைக் கல்வியை வழங்க முயல்கின்றன என்று நம்புவது ஒரு மாயையும் பிரமையுமே தவிர வேறெதுவுமில்லை.
இந்தப் பின்னணியிலேயே சமச்சீர் கல்வி குறித்த இந்த விஷ‌யம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.


முதற்கண் சமச்சீர் கல்வியின் நோக்கம் கல்வியில் சமத்துவம் கொண்டுவருதல் என்பதாகப் பார்க்கப் படுமானால் பொருளாதார சமத்துவம் நிலவாத அதாவது பொருளாதார சமத்துவத்தை நோக்கிச் செல்வதாக சமூகச் சூழல் இல்லாத நிலையில் கல்வியில் மட்டும் சமத்துவத்தைக் கொண்டுவரப் போவதாகக் கூறுவது கானல்நீரை நோக்கி ஓடுவதாகவே இருக்கும்.
அதாவது இன்றைய “தாராளவாத” உலகமய பொருளாதாரச் சூழலில் உருவாகி வளர்ந்து வரும் மிகப்பெரும் பிரச்னையே ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி பெரிதாக, இன்னும் பெரிதாக ஆகிக் கொண்டிருப்பதே ஆகும்.


அந்த நிலையில் கல்வியில் மட்டும் சமத்துவம் எவ்வாறு ஏற்பட முடியும்? இரண்டாவதாக சமச்சீர் கல்வி குறித்து வைக்கப்படும் மற்றொரு வாதம் இது பல கல்வி மான்களாலும் நிபுணர்களாலும் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் திட்டம் என்பதாகும்.


யதார்த்தத்தில் இப்போதெல்லாம் “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற அடிப்படையில் செயல்படக் கூடிய கல்விமான்களும் நிபுணர்களும் மிகக் குறைவாகவே உள்ளனர்.


அதனால் தான் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டை ஒரு கல்விமான் என்ற ரீதியில் கல்விமானுக்குரிய தரத்துடனும் கம்பீரத்துடனும் விமர்சித்த ஜப்பான் தேசத்தைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரான கராசிமாவைக் கூடக் குறைகூற கல்வி மான்களும் நிபுணர்களும் தமிழ்நாட்டில் கிடைத்தனர்.


மிகவும் வேதனை தரும் வகையில் அங்கீகாரமும் கூடுதல் படிகளும் கிடைக்கிறது என்பதற்காக ஆட்சியாளரின் உள்ளக் கிடக்கைக்கு உகந்த வகையில் பரிந்துரைகள் வழங்கும் நிபுணர்களும் கல்வி மான்களுமே மிகப்பெரும் எண்ணிக்கையில் தற்போதெல்லாம் நமது நாட்டில் காணக் கிடைக்கின்றனர்.


எனவே நிபுணர்கள் கல்விமான்கள் என்ற வாதத்தை மட்டும் வைத்து அவர்களது பரிந்துரைகள் உன்னதமானவை என்று கூறவியலாது. பாடத்திட்டக் குறைப்பின் காரணமாக அகில இந்திய அளவில் தங்களது பிள்ளைகளின் போட்டித் திறன் குறைவதை மனதிற்கொண்டு பெற்றோர்களில் பலர் சி.பி.எஸ்.சி. போன்ற பாடத் திட்டங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது.
ஏனெனில் மெட்ரிக்குலேசனில் பயிலும் மாணவர்களில் 90 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்கள் +1, +2 வகுப்புகளுக்கு மாநில வாரியத்தின் பாடத்திட்டங்களுக்கே செல்கின்றனர். இப்பாடத்திட்டக் குறைப்பு மாநிலவாரியப் பாடத் திட்டங்களிலேயே பெரிதும் வருவதால் அது ஏறக்குறைய மிகமிகப் பெரும்பான்மை தமிழக மாணவர்களைப் பாதித்தது.
அத்துடன் நமது மாநிலத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டு +2 தேர்வில் பெறும் மதிப்பெண்களே மருத்துவ, தொழில்நுட்பக் கல்விக்கு உதவுபவை என்று ஆக்கப்பட்டுள்ளது.


இதனால் அனைத்து மாணவரும் தங்கிப் பயிலும் கல்வி நிலையங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் தனியார் கல்வி நிலையங்களில் மேநிலைக் கல்வியில் இரண்டு ஆண்டுகளிலுமே அதாவது +1, +2 ஆகிய இரண்டு ஆண்டு பயிலும் காலம் முழுவதுமே +2 பாடங்கள் மட்டுமே கற்பிக்கப் படுகின்றன.
அதன் விளைவாக +1-ல் கற்பிக்கப்படும் பாடங்கள் குறித்த அறிவு இல்லாததால் ஏ.ஐ.இ.இ.இ. போன்ற அகில இந்தியப் போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர் கூடுதல் மதிப்பெண் பெறுவது என்பதே அசாத்தியமாகியுள்ளது.


இதனாலும் படித்து வேலைக்குச் செல்வதன் மூலம் மட்டுமே வாழ்க்கையை நடத்த முடியும் என்ற அடிப்படையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர் ஏற்கனவே மெட்ரிக்குலேசன் படிப்பையும் தாண்டி சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பாடத் திட்டங்களுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தொடங்கி விட்டனர்.


தற்போதைய இந்த சமச்சீர் கல்வி பேச்சு எழுந்தவுடன் அனைத்து மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் தங்களது பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடப் பிரிவுகளைத் துவக்கி விட்டதோடு அதற்குக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கத் தொடங்கி விட்டன.


இவையெல்லாம் உள்ளங்கை நெல்லிக் கனியயன நமக்கு உணர்த்துவது என்னதான் உன்னத முழக்கங்களை உரத்து உரத்துச் செய்தாலும் அரசுப் பள்ளிகளின் கற்பிக்கும் திறன் உயர்ந்தாலொழிய பொறுப்புள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகள் பக்கம் திரும்பக் கூட விடப் போவதில்லை என்பதே யதார்த்தமான சூழ்நிலையாகும்.

1 comment:

  1. சரியான பார்வை. என் கருத்தும் இதுவே. வாழ்த்துகள். ஞாநி

    ReplyDelete