மார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்
நாகர்கோவில்மார்க்சிய சிந்தனை மையத்தின் கம்யூனிஸ்ட் அறிக்கை மீதான மாதம் ஒன்று என்ற அடிப்படையில் 3 முறை நடந்த பின் விவாதங்களின் சாரம்சத்தைத் தொகுத்து வழங்கும் 4-வதுகட்ட விவாதக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கடந்த ஜீன் 19-ம் நாள் நடைபெற்றது.
கம்யூனிஸ்ட் அறிக்கையின் சாரம்சத்தையும் அதன் இன்றைய பொருத்தத்தையும் தொகுத்து வழங்கும் பொறுப்பினை முற்போக்கு எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் சிறப்புற ஆற்றினார்.
இன்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் கருத்துக்கள் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு வழிகாட்டும் தன்மையைக் கொண்டவையாக எவ்வாறு உள்ளன என்பதை விளக்கும் சீரிய உரை ஒன்றினை அவர் முன்வைத்தார்.
நமது சமூகத்தின் ஜாதிய அடையாளங்கள் குறித்த கருத்துக்களைக் கம்யூனிஸ்ட் அறிக்கையில் பார்க்க முடியாது. ஏனெனில் மாமேதை மார்க்ஸ் தனது கணிப்புகளுக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டது ஜாதி அமைப்புமுறை அறவே இல்லாத ஐரோப்பா, அமெரிக்கா போன்ற கண்டங்களில் அடங்கிய நாடுகளையும் சமூகங்களையுமே.
நாம் கம்யூனிஸ்ட் அறிக்கையின் வெளிச்சத்தில் இந்த, நமது நாட்டின் ஜாதியப் போக்குகளையும் ஆய்வு செய்து இந்திய சமூகமாற்றப் பாதையை பண்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அடுத்து உரையாற்றிய கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்ஃபார்மின் தென்இந்தியப் பொறுப்பாளர் தோழர் ஆனந்தன் கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இரு அடிப்படையான கருத்துக்களை இன்றைய நிலையில் நினைவு கூர்வது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.
அவற்றில் ஒன்று சமூகத்தின் கம்யூனிஸ ரீதியிலான மாற்றம் வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி என்பது. முதலாளித்துவம் அதைத் தவிர்க்க எத்தனை தகிடுதத்த வேலைகள் செய்தாலும் அதனால் அந்த மாற்றத்தைத் தள்ளிப்போட முடியுமே தவிர தவிர்க்க முடியாது.
மக்களின் வாங்கும் சக்தியைச் செயற்கையாக அதிகரித்து அதன்மூலம் சந்தை நெருக்கடியைக் குறைக்க முதலாளித்துவம் கடைப்பிடித்த கீன்ஸ்-ன் பொருளாதார வழிமுறைகள் பணவீக்கத்தையும் விலை உயர்வையும் கொண்டுவந்து முதலாளித்துவத்தை வேறொரு வகை நெருக்கடிக்குக் கொண்டு சென்றன.
அதிலிருந்து தப்பிப்பதற்காகத் தற்போது முதலாளித்துவம் அறிமுகம் செய்த புதிய தாராளவாதக் கண்ணோட்டம் இப்போதும் கூட மீளமுடியாது முதலாளித்துவ உலகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரும் உற்பத்தித் தேக்க நெருக்கடியைத் தோற்றுவித்தது.
இன்று முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாலொழிய சமூகத்தின் ஒட்டுமொத்தச் சீரழிவைத் தடுக்கவே முடியாது என்பது பாரபட்சமற்றுச் சிந்திக்கும் அனைவர் மனதிலும் ஆட்சி செலுத்தும் அடிப்படையான சிந்தனையாக ஆகிவிட்டது.
கம்யூனிஸ்ட் அறிக்கையின் அடுத்த முக்கியக் கருத்து ஏற்கனவே தயார் நிலையில் இருக்கக் கூடிய அரசு எந்திரத்தைக் கம்யூனிஸ்ட்கள் தொழிலாளி வர்க்க ஆட்சியை நிலைநாட்டப் பயன்படுத்த முடியாது என்பதாகும்.
திருத்தல்வாதி குருச்சேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது கட்சிக் காங்கிரஸில் முன்வைத்த அமைதி வழியில் சோசலிசம் இன்றைய நிலையில் சாத்தியம் என்ற கருத்து உலகம் முழுவதிலும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கம்யூனிஸ்ட் அறிக்கை முன்வைத்த ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் அரசு எந்திரத்தை அப்படியே தொழிலாளி வர்க்கம் பயன்படுத்த முடியாது என்ற கண்ணோட்டத்திலிருந்து திசை திருப்பியது.
நமது நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட உலகின் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் இதனால் சீரழிந்த நாடாளுமன்றவாதப் பாதைக்குத் திரும்பின. சக்திவாய்ந்த சோசலிச முகாமினால் ஏகாதிபத்திய முகாம் பலவீனமடைந்து ஏகாதிபத்தியங்கள் வேறு நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாத நிலையில் உள்ளன; எனவே அமைதி வழியில் சோசலிசம் சாத்தியம் என்று குருச்சேவ் கூறினார்.
அது அப்பட்டமாகப் பொய்த்துப் போய் இன்று உலகம் முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் என்ற ஒரு குடையின் கீழ் ஆளப்படுவதாக ஆகியுள்ளது. சோசலிச முகாம் என்ற ஒன்றே இல்லாமற் போயுள்ளது. அதன்மூலம் குருச்சேவ்-ன் அடிப்படை மார்க்சியத்திலிருந்தான விலகல் எத்தனை தவறானது என்பது நிரூபணமாகியுள்ளது.
கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்கள் எத்தனை இறவாத்தன்மை பொருந்தியவை என்பதும் நிரூபணமாகியுள்ளது. இந்தக் கருத்தை கோடிட்டுக் காட்டித் தோழர் ஆனந்தன் தனது உரையை நிறைவு செய்தார்.
மேலும் பிரசாத், பிரான்ஸிஸ், போஸ் போன்ற தோழர்கள் பல முக்கியக் கேள்விகளை எழுப்பினர். அவற்றிற்குத் தோழர்கள் பொன்னீலனும் ஆனந்தனும் பதிலுரைத்தனர்.
தோழர் தங்கநாடார் சித்தாந்த ரீதியில் மார்க்சிய வழியை உயர்த்திப் பிடிக்க மார்க்சிய சிந்தனை மையம் பிறந்துவிட்டது என்று பூரிப்புடன் கூறியது பல தோழர்களின் உள்ளக்கிடக்கையையும் ஆதங்கத்தையும் புலப்படுத்துவதாக இருந்தது.
இறுதியில் தோழர் மகிழ்ச்சி கிரீஸ், ஸ்பெயின் உள்பட பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது தோன்றியுள்ள போராட்டப் பேரெழுச்சிகள் குறித்து ஒரு கருத்தரங்கம் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இயக்கவியல் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல் வாதம் குறித்துத் தோழர் ஆனந்தன் அடுத்துவரும் கூட்டங்களில் அரசியல் வகுப்பு எடுப்பார் என்பதுகூட்ட முடிவில் அறிவிக்கப்பட்டது.
கூட்டஆரம்பத்தில் கூட்டத்தில் கலந்துகொண்ட பெண் தோழர் ஸோமினி கிராமப்புற உழைப்பாளரின் வேதனையையும் பரிதவிப்பையும் புலப்படுத்தும் பாடல் ஒன்றைப் பாடினார்.
No comments:
Post a Comment