-தோழர் சங்கர் சிங்
மார்ச் 8 ம் நாள் உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அங்கீகரித்திருப்பதனால் உலகின் பல பகுதிகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இத்தினம் சிறப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டது போல் தோன்றுகிறது. பின் தங்கிய மற்றும் புதிதாக வளர்ந்து வரும் ஆசிய , ஆப்பிரிக்க , லத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் ஒப்பீட்டளவில் நிலவும் பெண்களின் பின்தங்கிய நிலைமையும் சமூக வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சம அந்தஸ்து இல்லாமையும் மிகவும் வெளிப்படையாகத் தெரியும் இன்றைய சூழலில் , பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளின் பல்வேறு அம்சங்களை உயர்த்திப் பிடிக்கும் தீர்க்கமான நோக்கத்துடன் சர்வதேச பெண்கள் தினத்தை அனுஷ்டிப்பது அளவு கடந்த முக்கியத்துவம் வாய்ந்தது.