நிலவுடமை அமைப்பைப் புறந்தள்ளி முதலாளித்துவ அமைப்பு உருவானபோது அது சமூகத்திற்கு வழங்கிய மிக முக்கிய வழங்கல் கல்வியை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பரவலாக்கியதாகும். சமூகத்தின் எந்தெந்த அம்சங்கள் பழைய நிலவுடமை அமைப்பு முறையின் கருத்து ரீதியான தூண்களாக விளங்கினவோ அவற்றையயல்லாம் அடித்து நொறுக்கும் விதத்தில் அந்தக் கல்விமுறை அமைந்தது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையை நடத்துவதற்கு வேண்டிய விதத்தில் விஞ்ஞானம் , தொழில் நுட்பம் , கணக்குப்பதிவியல் ஆகியவை சார்ந்த கல்வியை பலருக்கும் வழங்குவதற்காக அன்று நடைபெற்ற கல்விப் பரவலாக்கல் நிலவுடமை அமைப்பின் மிச்சசொச்சங்களையும் இல்லாமல் செய்து, முதலாளித்துவ அமைப்புமுறை நிலையாக நிற்கும் வகையில் ஒரு பலமான அஸ்திவாரத்தை அமைத்தது. முதலாளித்துவ உற்பத்தி முறையோடு நேரடியாகத் தொடர்பு கொண்ட விஞ்ஞான , தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளோடு வரலாறு , பொருளியல் , தர்க்கவியல் , தத்துவம் , சமூகவியல் போன்ற பல பாடப் பிரிவுகளையும் அதன் கல்வித்திட்டத்தில் கொண்டு வந்தது.
உள்ளூர் அளவிலான சந்தைக்காக உற்பத்தி என்ற குறுகிய அடிப்படையில் உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலவுடமை சமூக அமைப்பில் குறுகிய பகுதிகளில் வாழ்ந்து வாழ்ந்து பரந்த மனநிலை இல்லாதவர்களாக மக்கள் இருந்தனர். அவர்களில் ஒரு பகுதியினரை பரந்த பார்வை உடையவர்களாக முதலாளித்துவ வணிக வளர்ச்சியும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போக்குவரத்து வசதிகளும் ஆக்கின.
குடிமக்களை முக்கியமானவர்களாக்கிய கல்வி
மன்னர்கள் , நிலவுடமையாளர்கள் மற்றும் அவர்களுடைய வாரிசுகளின் வாழ்க்கையே தெரிந்து கொள்ளப்பட வேண்டிய வாழ்க்கை என்ற அடிப்படையே அன்று இருந்தது. விரல்விட்டு எண்ணப்படும் அளவிலிருந்த அவர்கள் தவிர பிற லட்சோபலட்சம் சாதாரண குடிமக்கள் எவ்வகை முக்கியத்துவமும் அற்றவர்களாகவே இருந்தனர். அவர்கள் குறித்து நினைப்பதற்கும் சொல்வதற்கும் எதுவுமில்லை என்று அன்று இருந்த நிலையிலிருந்து ஒரு மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்து ஆண்டைக்கு அடிமைகளாய் கும்பிடுபோட்டுக் கொண்டே காலம் தள்ளிய அவர்களுக்கும் ஒரு தனித்துவம் உண்டு என்பதைக் கொண்டுவந்ததில் இந்தக் கல்விமுறைக்கு மிகப்பெரும் பங்குண்டு.
மதத்தால் , ஜாதிகளால் , பிராந்திய வேறுபாடுகளால் , மொழியால் வேறுபட்டுக்கிடந்த மக்களை சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் என்ற முழக்கங்களின் அடிப்படையில் ஒன்றுசேர வைத்ததில் இந்தக்கல்வி முறை ஒரு மகத்தான பங்கினை ஆற்றியது.
மகத்தான ஜனநாயகப் புரட்சிகள் தோன்றிவளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாது அந்நாடுகள் தங்களின் காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்திய இந்தியா போன்ற நாடுகளிலும் அவர்கள் அறிமுகம் செய்த எந்திரத் தொழில் உற்பத்தி முறையை ஒட்டி கொண்டுவரப்பட்ட இந்தக் கல்விப் பரவலாக்கல் மகத்தான மாறுதல்களை மக்களின் சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தியது.
சொல் , பொருள் , சுவை அனைத்தையும் புதியதாக்கி தேசிய உணர்வை ஊட்டி வளர்த்த கல்வி
இந்தக் கல்வியின் ஒரு பகுதியாகத்தான் மறுமலர்ச்சி யுகம் தோன்றியது. மேலைநாட்டு சிந்தனைப் போக்கின் விளைவாக இயற்கை , சமூகம் அனைத்தையுமே ஒரு புது ஒளிவீச்சில் பார்க்கும் போக்கினை இந்தியாவில் பல பகுதிகளில் மிகக் குறுகிய அளவில் அறிமுகம் செய்யப்பட்ட அளவிலேயே இந்தக் கல்விமுறை ஆற்றியது. சுருக்கமாகச் சொல்லப்போனால் நாம் அடிமைத் தளையில் இருக்கிறோம்; இதனைத் தூக்கியயறிய வேண்டும் என்ற எண்ணப்போக்கு கொண்ட முதல்கட்ட தலைவர்களை உருவாக்கியதிலும் இந்தக்கல்விக்கு மிகப்பெரும் பங்குண்டு. நாம் ஒரு தேசம் என்ற எண்ணப்போக்கு ஊட்டி வளர்க்கப்பட்டதும் இந்தக் கல்வியால் தான்.
வெள்ளையர் மீது வெறுப்பு அவரது கல்வியின் மீது விருப்பு
உண்மையில் அக்காலகட்டத்தில் வெள்ளையர் உருவாக்கிய கல்வி நிலையங்களில் கல்விகற்க மாட்டோம் என்ற அளவிற்கு தேசிய உணர்வு மிகுந்திருந்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட தேசியக் கல்லூரிகளான வாரணாசி ஹிந்துப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களிலும் கூடப் பாடத்திட்டங்களில் வெள்ளையர் அறிமுகம் செய்த கல்விமுறையே பின்பற்றப்பட்டது.
அதற்கான காரணம் அது யாரால் அறிமுகம் செய்யப்பட்டது என்பது அதனை வெறுப்பதற்கு ஒரு காரணமாக அமையவில்லை. மாறாக அதில் நிரம்பியிருந்த சமூகத்திற்குத் தேவையான அம்சங்கள் அதனை அறிமுகம் செய்தவரை வெறுத்தவர்களையும் அதனைக் கடைப்பிடிக்குமாறு செய்தது. அத்தகைய சமூக வாழ்க்கை முழுவதிலும் ஒரு புது ஒளிப்பிரவாகத்தைப் பாய்ச்சிய அந்தக் கல்விமுறை ஒரு குறிப்பிடத்தக்க அளவிற்கு நமது சமூகத்தில் நிலவிய ஜாதி, மத , இன , மொழி வேறுபாடுகளையும் அசைத்துப் புரட்டியது.
விடுதலை பெற்ற ஆரம்ப காலத்தில் கல்வி வளர்ச்சியில் அரசு காட்டிய அக்கறை
கிறிஸ்தவ மதப் போதகர்களால் பெருமளவில் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட கல்விக் கூடங்கள் விடுதலை பெற்ற இந்தியாவில் அரசு உதவி பெற்றவையாக மாற்றப்பட்டன. அத்துடன் நேரடியாகவே அரசாங்கத்தாலும் பல கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன.
இந்த மறுமலர்ச்சி வாதம் எங்கும் நிறைந்திருந்த சூழ்நிலையில் அந்தப் பின்னணியில் கல்வி கற்பிக்கும் பொறுப்பினைக் கொண்டிருந்த மிகப் பெரும்பான்மையான ஆசிரியர்களும் ஒரு வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்பவர்கள் என்ற அடிப்படையில் உள்ளார்ந்த ஒரு ஈடுபாட்டுடன் கல்விப்பணி ஆற்றுபவர்களாக இருந்தனர். அவர்களிடையே ஓரளவேனும் ஜாதிய வேறுபாடுகள் அழிய வேண்டும் ஏற்றதாழ்வு இல்லாத நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணப்போக்குகள் மிகுந்திருந்தன.
சமத்துவ மனநிலையை ஊட்டி வளர்த்த கல்வி
மாணவர் அனைவரிடமும் நாம் அனைவரும் சமம் என்ற எண்ணத்தை உருவாக்கும் விதத்திலான சீருடைக் கண்ணோட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சமூகத்தின் அனைத்துப்பகுதி மக்களும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலேயே கல்வி கற்றனர்.
அத்தகைய சூழ்நிலையில் கல்வியைத் தொடர முடியாமல் இடையில் விட்டுவிட்ட மாணவர்களும் கூடப் பின்னாளில் அவர்களுடன் ஆரம்ப அல்லது உயர் ஆரம்பப் பள்ளிகளில் ஒன்றாகப் படித்து உயர் பதவிகளில் இருப்போரைப் பார்க்கும் வேளைகளில் இவனுடன் நான் படித்தேன் என்று பெருமையாகக் கூறிக் கொள்வதும் அத்தகைய உயர் பதவிகளில் இருப்பவர்களும் அந்த இளம் பருவத்தொடர்பும் நட்பும் அவர்களுக்குள் ஏற்படுத்தியிருந்த ஒரு இனம் புரியாத உன்னத உணர்வோடும் பரிவோடும் பொருளாதார ரீதியில் கீழ்நிலையில் இருந்தாலும் அந்தப் பள்ளித் தோழனை இவன் என் பள்ளித் தோழன் என்று மகிழ்வுடன் கூறுவதுமான ஒரு அழகான சூழல் சமூகத்தில் நிலவியது.
அறிவைக் கண்டு அஞ்சத் தொடங்கிய அரசு
ஆனால் நாம் விடுதலை பெற்ற பின்பு இங்கு ஏற்பட்ட நமது தேசிய முதலாளிகளின் அரசு அப்போதே நெருக்கடி சூழ்ந்த நிலையிலிருந்த முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்குகந்த கொள்கைகளை தொடர்ந்துக் கடைப்பிடித்ததால் ஒரு காலத்தில் அவர்கள் கையில் அரசியல் அதிகாரம் வருவதற்காகப் போராடிய எண்ணிறந்தோரை உருவாக்கிய அந்தக் கல்வியையும் அது கற்பிக்கும் அறிவையும் கண்டு அஞ்சும் சூழ்நிலை உருவாகியது.
அந்நிய ஏகாதிபத்தியம் என்ற அந்த கொடுங்கோன்மை ஆட்சியாளரை எதிர்ப்பதற்குத் தேவையான கருத்து ரீதியான ஆயுதங்களை வழங்கிய கல்வி விடுதலை பெற்ற இந்திய சமூகத்தில் புதிதாக முளைத்து மக்களைச் சுரண்டும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் திரும்பிவிடும் என்று அஞ்சினர். எனவே அத்தகைய கருத்து ரீதியான ஆயுதத்தை கொடுக்கவல்ல பாடப்பிரிவுகளை படிப்படியாக ஒழித்து முதலாளித்துவத்தின் அன்றாடத் தேவைகளுக்கு மட்டும் பயன்படக் கூடிய பாடப்பிரிவுகளை மட்டும் கற்று அவர்கள் பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தும் எந்திரங்களின் உறுப்புகள் போன்ற மாணவர்களை மட்டும் உருவாக்க விரும்பினர். கல்விப் பொறுப்பு அரசுகளுக்கு சுமையாகிப்போனது; அறிவு எதிராளியானது.
சமூகக் கடமையான கல்வி கற்பித்தல் சம்பளப் பணியாகிவிட்டது
முதலாளித்துவம் உருவாக்கிய பணமே முதன்மையானது என்ற கண்ணோட்டம் சமூகத்தை விசப்புகையயனக் கவ்விப்பரவி அதில் இருந்த உறவு , நேசம் , பாசம் , மனிதாபிமானம் என்ற அனைத்துப் பண்புகளையும் துடைத்தெறிய முனைந்தது. அத்தகைய நாசகரக் கண்ணோட்டப் பரவலின் விளைவாகப் பள்ளியில் மாணவர்களுக்கு மட்டுமல்ல அந்தப்பள்ளி இருக்கும் கிராமத்தின் மக்களுக்கும் வழிகாட்டி என்ற விதத்தில் உயர்ந்து நின்ற ஆசிரியர் சமூகமும் பாதிக்கப்பட்டது. சம்பளத்திற்காக வேலை செய்யும் ஒரு பணியாக அவர்களைப் பொறுத்தவரையில் கல்விப்பணி ஆகிவிட்டது. முன்பிருந்ததைப்போல் அது மனமுவந்து ஆற்றப்படும் சமூகக்கடமையாக இருக்கவில்லை பெருகிவரும் மக்கட் தொகைக்கு ஏற்ற விதத்தில் அரசால் கல்விநிலையங்கள் திறக்கப்படவில்லை. தனக்கான அடியாள் பட்டாளமாகத் திகழும் காவல்துறை , ராணுவம் போன்றவற்றிற்காக நாட்டின் மொத்த வருவாயில் பாதிக்கு மேலான நிதியினை மகிழ்வுடன் செலவு செய்த நமதுநாட்டின் முதலாளித்துவ அரசுகள் கல்விக்கான ஒதுக்கீடுகளைப் பொறுத்த விசயத்தில் கஞ்சக்கருமிகளாகி தேவைப்படும் அளவிற்குப் புதுக்கல்வி நிலையங்களை உருவாக்கத் தயங்கின; தவறின.
கல்வியில் தனியார் மயம்
ஆனால் அதேசமயத்தில் சிறு உடமையாளர்கள் அழிந்து விவசாயம் உள்பட அனைத்து உற்பத்தித் துறைகளிலும் பெருகிவந்த பாட்டாளி மயமாதல் போக்கு கல்வியைச் சாதரண மக்களைப் பொறுத்தவரையிலும் தவிர்க்க முடியாததாக்கி விட்டது. அதாவது படித்து வேலைக்குச் செல்வதே வாழ்வதற்கு ஒரே வழி என்ற நிலையை ஏற்படுத்தி விட்டது. எனவே அத்தேவையை நிறைவேற்றுவதற்காக தனியார்மயம் கல்வியில் தலைகாட்டத் தொடங்கியது. அரசு அதன் கொள்கைகளால் அந்தப் போக்கினை ஊக்குவிக்கத் தொடங்கியது. உருவான தனியார் நிறுவனங்கள் கல்வியை ஒரு கடமையாகச் செய்யாமல் வியாபாரமாக்கிவிட்டன.
இன்று உலகமயத்தினால் உலகின் அனைத்து நாட்டு மக்களின் உழைப்புத்திறனும் உலகச்சந்தையின் சரக்குகள் என்றநிலை தோன்றி விட்டதால் அத்தேவையை பூர்த்தி செய்ய கல்லூரி மட்டத்திலும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் உருவாகின. முதலாளித்துவம் அது இன்றுள்ள ஏகாதிபத்திய ஏகபோக நிலையில் அதாவது அதன் அந்திம காலத்தில் எவ்வாறு ஒரு சூதாட்டப் போக்கினை பங்குவர்த்தகம் போன்றவற்றின் மூலமாக வளர்க்கிறதோ அத்தகைய சூதாட்டப் போக்கினை இந்தத் தனியார் கல்வி நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்டுவதற்காகக் கடைப்பிடிக்கத் தொடங்கின.
அரசுப் பள்ளிகளில் தலைகாட்டியத் தரக்குறைவு ஊடுருவிப் பரவி வேலை கிடைக்கும் கல்வி பெற வேண்டுமானால் தனியார் பள்ளிகளுக்கும் , தனியார் கல்லூரிகளுக்கும் சென்றாக வேண்டும் என்றநிலை இன்று நியதியாகிவிட்டது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளே அனைவரும் கல்வி பயில்வதற்கான ஓரே இடம் என்றிருந்த நிலையில் சமூகத்தில் ஜாதி , மத , பொருளாதார வேறுபாடு கடந்து நாம் அனைவரும் ஒரு நிறுவனத்தில் பயின்றவர்கள் என்ற வகையில் நிலவிய ஒரு அழகான சூழல் மங்கி மறைந்து விட்டது.
ஒற்றுமைக்குப் பதில் வளரும் வேற்றுமை
தனியார் நிறுவனங்களில் கல்விப்பயிலும் குழந்தைகளே அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகளை ஏளனமாக பார்க்கும் போக்கும் ஏழை மாணவர்களைப் பொறுத்தவரையில் தனியார் நிறுவனங்களில் பயிலும் மாணவர்களைப் பார்த்து ஏங்கும் , ஒருவகையில் எதிர்க்கும் போக்கும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன.
கலாச்சார ரீதியாக , பொருளாதார , சமூக ரீதியாகப் பின் தங்கியவர்களும் , கீழ்நிலையில் உள்ளவர்களும் நம்மால் கை கொடுத்துத் தூக்கிவிடப்பட வேண்டியவர்கள் என்ற வகையில் மறுமலர்ச்சி காலகட்டத்தில் ஓரளவு வசதி படைத்தவர்களிடம் கூடத் தோன்றியிருந்த உணர்வு படிப்படியாக மாறி அவனுக்குக் கைகொடுத்து உயர்த்திவிட்டால் அவன் நம் வாய்ப்பைப் பறித்துவிடுவான் என்ற எண்ணப்போக்கு உருவாகிவிட்டது.
ஒருபாடம் புரியாதவர்களுக்குப் புரிந்தவர்கள் மகிழ்வுடன் சொல்லிக் கொடுக்கும் காலம் மலையேறி அவன் புரியாதவனாக இருக்கும்வரைதான் புரிந்த நமக்கு மரியாதை என்ற எண்ணப்போக்குத் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடையே தலைதூக்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதாவது சமூகத்தில் உயர்ந்தது , உன்னதமானது என்று கருதப்பட்ட அனைத்தையும் ஒருவகையில் உருவாக்கிய கல்விமுறை இன்று காட்டுத்தனமான போட்டியினையும் , பொறாமையையும் , பூசலையும் உருவாக்குவதாக ஆகிவிட்டது.
மக்களின் மருத்துவர் தேவை மிதமிஞ்சியிருக்கும் போதும் அதனை நிறைவேற்றவல்ல புது மருத்துவர்களை உருவாக்கும் புதுக் கல்லூரிகள் திறந்தால் அதை தற்போது மருத்துவம் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் எதிர்ப்பர் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.
ஒட்டுமொத்த சமூக நலன் என்ற எண்ணப்போக்கு எந்தப் பகுதியிடம் மிகக் குறைவாக இருக்கிறது என்று பார்த்தால் இன்றைய கல்விமுறை உருவாக்கியுள்ள கற்றவர்களிடம் தான் என்று எண்ணும் அளவிற்கு கேவலமான ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.
சீரழிவின் ஊற்றுக்கண்
இந்த அனைத்து எதிர்மறை சூழ்நிலைகளுக்கும் கல்வி காரணமல்ல கல்வியைச் சீரழித்து சின்னாபின்னப்படுத்தி அதனை இன்றிருக்கும் இழிநிலைக்கு ஆளாக்கியது இன்றுள்ள முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையும் அதனை கட்டிக்காக்கும் முதலாளித்துவ மத்திய, மாநில அரசுகளுமே. எனவே கல்வியையும் அது உருவாக்க வாய்ப்புள்ள உன்னத மதிப்புகளையும் காக்க நாம் களம் புகுந்தால் நாம் நடத்தும் போராட்டம் தவிர்க்க முடியாமல் இந்த சுரண்டல் முதலாளித்துவத்தை எதிர்த்ததாகவும் ஆகிவிடும் என்பதே இன்றைய நிதர்சன நிலையாகிவிட்டது. மதிப்புகள் இல்லா சமூகத்தில் நல்ல மனிதனால் வாழமுடியாது. அத்தகைய சமூகத்தில் ஒரு எந்திரமாய், விலங்காய் வாழ்வதைவிட மதிப்புள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பணியில் வரும் இடர்ப்பாடுகளையும் இன்னல்களையும் எதிர்கொண்டு சமூக மேம்பாட்டிற்காக போராடி அப்போராட்டத்தின் போது நமது இன்னுயிரை இழப்பது கூட மேலானதாக இருக்கும்.
No comments:
Post a Comment