Powered By Blogger

Wednesday, May 26, 2010

உண்மையான பெண் விடுதலையை சாதிக்க உறுதி பூணுவோம் - சர்வதேச மகளிர் தின நூற்றாண்டை அனுஷ்டிப்போம்



-தோழர் சங்கர் சிங்


மார்ச் 8 ம் நாள் உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அங்கீகரித்திருப்பதனால் உலகின் பல பகுதிகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இத்தினம் சிறப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டது போல் தோன்றுகிறது. பின் தங்கிய மற்றும் புதிதாக வளர்ந்து வரும் ஆசிய , ஆப்பிரிக்க , லத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் ஒப்பீட்டளவில் நிலவும் பெண்களின் பின்தங்கிய நிலைமையும் சமூக வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சம அந்தஸ்து இல்லாமையும் மிகவும் வெளிப்படையாகத் தெரியும் இன்றைய சூழலில் , பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளின் பல்வேறு அம்சங்களை உயர்த்திப் பிடிக்கும் தீர்க்கமான நோக்கத்துடன் சர்வதேச பெண்கள் தினத்தை அனுஷ்டிப்பது அளவு கடந்த முக்கியத்துவம் வாய்ந்தது.



மனித சமுதாயத்தில் ஆண்களும் பெண்களும் ஏறக்குறைய சம விகிதத்தில் இருக்கின்றனர். இதில் பூகோள ரீதியில் பகுதிக்குப் பகுதி மிகச்சிறு ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். மக்கள் தொகையில் சரிபாதியினரை ஆண்களுக்கு இணையாக சமூக வாழ்க்கையில் பங்கெடுக்காதவர்களாக வைத்திருப்பதும் , அவர்களை உற்பத்தித் திறன் இல்லாத வீட்டு வேலைகளில் கட்டுண்டவர்களாகவும் குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரங்களாகக் குறுக்கப்பட்டவர்களாகவும் வைத்திருப்பதும் ஒட்டுமொத்த சமூக வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரும் தடைக்கற்களாகும்.
இப்பார்வை நோக்கிலிருந்து பார்க்கையில் பெண்கள் போராட்டத்தின் இலக்கு பற்றிய முழுவிவரங்களை அறிந்திருப்பதும் அதற்கொப்ப தனது பங்கை ஆற்றுவதும் சரியான சிந்தனையுள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமானது என்பதை உணர முடியும். மார்ச் 8 ம் நாளை குறிப்பாக இந்தப் பார்வையிலிருந்து சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததும் அர்த்தமுள்ளதுமாகும். அந்த வகையில் ஐ.நா. சபையின் அறிவிப்பு வரவேற்கத் தகுந்த ஒன்றே.

ஆணும் பெண்ணும் சமம் என்ற நவீனக் கருத்தாக்கம் 17 ம் நூற்றாண்டின் பிரெஞ்சுப் புரட்சியில் இருந்து உருவானது. அம்மாபெரும் புரட்சியானது நிலப்பிரபுத்துவ மன்னராட்சிக் கொடுங்கோன்மையைத் தூக்கியயறிந்து விட்டு , சுதந்திரம் ,சமத்துவம் , சகோதரத்துவத்தின் அடிப்படையில் நவீன ஜனநாயகக் குடியரசு வடிவிலான ஆட்சியை ஏற்படுத்தியது. நிலப்பிரபுத்துவ கொடுங்கோலாட்சியின் கீழ் மக்கள் அனுபவித்து வந்த பண்ணையடிமைத்தனம் மற்றும் சமத்துவமின்மையோடு ஒப்பிடும் போது சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் எனும் இம்முழக்கம் மனித சமுதாயத்திலிருந்தே சமத்துவமின்மையையும் அநீதியையும் முற்றாக துடைத்தெறிந்து விடுவது போன்று தோன்றுமளவிற்கு அப்போது ஆராவரமானதாக இருந்தது. ஆனால் அப்புரட்சியானது அப்போது எழுந்து கொண்டிருந்த முதலாளி வர்க்கத்தினரால் தலைமை தாங்கப்பட்டதாலும் அது சமூகத்தில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மற்றும் பங்கீட்டு முறைக்குப் பதிலாக முதலாளித்துவ முறையை ஏற்படுத்த வேண்டியிருந்ததாலும், அதனால் அம்முழக்கங்களை நடைமுறையாக மாற்ற முடியவில்லை. ஆரவாரமான அந்த முழக்கங்கள் அனைத்தும் முழக்கங்களாகவே நின்று போயின.

முதலாளித்துவம் என்பது சாராம்சத்தில் மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப்படையாக் கொண்ட , சமத்துவமின்மை மற்றும் அநீதியை அடிப்படையாகக் கொண்ட , ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தால் ஒடுக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டதொரு சமூக அமைப்பாகும். அதன் விளைவாக , அவர்களால் எழுப்பட்ட முழக்கங்கள் அவை எவ்வளவுதான் உயர்ந்தவையாக இருந்த போதிலும் வெறும் முழக்கங்களாகவே நின்றுவிட்டன. இருப்பினும் அம்முழக்கங்களை எழுப்பியதும் கூட மிகுந்த முக்கியத்துவம் உடையதே. அது ஓர் புதிய பார்வையை வாழ்க்கை மதிப்பு பற்றியதோர் புதிய உணர்வைக் கொண்டு வந்தது. மனித குலம் அடைவதற்காக முயற்சிக்க வேண்டிய சமூக வாழ்க்கையின் எல்லைக் கோட்டின் அரைகுறைத் தோற்றம் ஒன்றைக் கோடிட்டுக் காட்டியது.

ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமான நிலையை அடைவதை இலக்காகக் கொண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் சமூக இயக்கங்கள் தோன்றின. இந்த இயக்கங்கள் அவற்றின் அளவில் தொடர்ச்சியாக முன்னேறிக் கொண்டிருக்கும் அதே வேளையில் , எதிர்மறையான போக்குகளுக்கும் பல்வேறு வகைகளில் பலியாகிக் கொண்டுள்ளன. சமூக வாழ்க்கையில் ஆண்களும் பெண்களும் சமம் என்பதை அடைவதற்கான போராட்டம் கட்டாயமாக ஆண்களுக்கு எதிரானதாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் இக்குறிப்பிட்ட எதிர்மறைப் போக்கே இந்த இயக்கங்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் தவறான போக்காக இருக்கிறது.

பெண்கள் போராட்டத்தில் பல்வேறு வகையில் வேலை செய்யும் பல அமைப்புகளும் அதன் தொண்டர்களும் பொதுவாக அரசியலுக்கு குறிப்பாக கம்யூனிச அரசியலுக்கு எதிரான ஒருவகை மனநிலை கொண்டவர்களாக இருப்பதை எப்போதும் காண முடியும். அவர்களின் அறியாமை மனிதகுல வளர்ச்சியின் வரலாறு பற்றிய அவர்களின் அறியாமையே , அவர்களிடத்தில் இருக்கும் இப்போக்கின் அடிப்படைக் காரணம் என்பது தெளிவு. இல்லாவிட்டால் மனிதகுல வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில் குறிப்பாக இனக்குழுக் கம்யூனிசக் கட்டத்தில் (Clan Communistic Stage) பெண்களே அன்னையர்களே ஆதிக்க நிலையில் இருந்தனர் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். தனது ஆதிக்க நிலையை பெண்கள் ஆண்களிடம் எதன் காரணமாக இழந்தார்கள் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனை சமூக வாழ்க்கையில் இருந்து அகற்றுவதன் மூலம் மட்டுமே, இச்சமூக அநீதியை எக்காலத்துக்குமாக அழித்தொழித்து பெண்களுக்குரிய நியாயமான இடத்தை மீட்டெடுப்பது சாத்தியமாகும்.

தனிச் சொத்தின் தோற்றம் , அதாவது நிலம் , விலங்குகள் போன்ற உற்பத்திக் கருவிகளின் மீதான தனிச் சொத்துரிமையும் வாரிசு வழியாக இவ்வுரிமை தொடர்வதுமே உற்பத்தி முறையில் பெண்கள் படிப்படியாக ஆண்களுக்குப் பின்னால் தள்ளப்படுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. அதன் பிறகு அடிமை முறை சமுதாய அமைப்புமுறையாக ஏற்பட்டது. நீண்ட காலத்திற்குப் பின்னர் அந்த அடிமை முறையும் அகற்றப்பட்டு , அதனிடத்தில் பல்வேறு வடிவங்களில் நிலப்பிரபுத்துவ முறை ஏற்பட்டது. நீண்ட காலம் அந்த அமைப்பு முறை இருந்த பிறகு மீண்டும் அது இன்றைய முதலாளித்துவ அமைப்பு முறையால் இடம் பெயர்க்கப் பட்டது.

இந்த அமைப்பு முறைகளின் மாற்றங்கள் அனைத்திலும் அடிப்படைத் தன்மை வாய்ந்த பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் உற்பத்திக் கருவிகள் மீதான இத்தனிச் சொத்துரிமையும் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அவ்வுரிமை தொடர்ந்து வரும் அமைப்பு முறையும் எவ்வித மாற்றமுமின்றி இருந்து வருகிறது. இன்று கம்யூனிஸ்டுகள் எல்லா இடங்களிலும் நடத்தப் பாடுபட்டுவரும் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சி மட்டுமே உற்பத்திக் கருவிகள் மீதான தனிச் சொத்துரிமையை முற்றாக ஒழித்து அவற்றை சமூகம் முழுமைக்கும் உரிமையானதாக்குவதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது. அவ்வாறு ஆக்காமல் கம்யூனிஸ சமுதாயத்தை உருவாக்கவே முடியாது. பெண் விடுதலையை அதன் உண்மையான அர்த்தத்தில் அக்கம்யூனிச சமுதாயத்தில் மட்டுமே சாதிக்க முடியும். இவ்வாறிருக்கையில் , கம்யூனிஸ்ட்கள் மற்றும் கம்யூனிச இயக்கத்தைப் பொறுத்தவரையில் பெண் விடுதலை இயக்கங்களில் ஈடுபடுபவர்களின் மனப்பான்மை ஒன்றுக்கொன்று எதிரானதாக இருக்க முடியாது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று உதவக் கூடியனவாகும்.

பெண்கள் இயக்கத்திற்கான தினத்தை அறிவிப்பதில் ஐ.நா. சபை வேறு ஏதேனும் ஒரு நாளை தேர்ந்தெடுக்காமல் மார்ச் 8 வது நாளைத் தேர்ந்தெடுத்திருப்பது ஏன்? சரியான விளக்கத்தை கண்டறிவதற்கு நாம் வரலாற்றில் நூறு ஆண்டுகள் பின்னால் செல்ல வேண்டும். மிகச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவராகிய ஜெர்மனியின் க்ளாரா ஜெட்கின் இரண்டாவது கம்யூனிஸ அகிலத்தில் (தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அப்போதய உலகளாவிய அமைப்பு) தனது முன்மொழிவை வைத்தார். அவர் தனது முன்மொழிவில் மார்ச் 8 ம் நாளை உழைக்கும் பெண்கள் தொழிற்சாலைகளில் அல்லது பிற வேலை இடங்களில் முதலாளித்துவ உரிமையாளர்களுக்கு எதிராகப் போராடும் அதே வேளையில் வீடுகளில் தங்கள் கணவர்களால் கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட உறுதியயடுத்துக் கொள்வதன் பேரில் அவர்களது பிரச்னையை வெளிக் கொண்டுவந்து அவசியமான இயக்கங்கள் கட்டுவதற்கான தினமாக அனுஷ்டிப்பதற்கு கம்யூனிச அகிலம் முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இரண்டாவது கம்யூனிஸ அகிலம் மார்ச் 8 ம் நாளை , உழைக்கும் பெண்களின் பிரத்யேகமான இருமுனைப்பட்ட வர்க்கப் போராட்டத்தை முனைப்பாக்குவதற்கு அவசியமான இயக்கங்களை எடுப்பதற்கான உழைக்கும் பெண்கள் தினமாக அறிவித்தது. அதன் தொடச்சியாகவே ஐ.நா. சபை மார்ச் 8 ம் நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக அனுஷ்டிப்பதென தீர்மானித்தது. உலக அமைப்பின் இம்முடிவும் அறிவிப்பும் அவ்வமைப்பின் பாராட்டத்தக்க பரந்த தன்மையினையும் முற்போக்குத் தன்மையினையும் காட்டுவதாகப் பலரால் பார்க்கப் படுகிறது. அது தவிர , கம்யூனிஸ்ட்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களும் கூட பெண்கள் முன்னேற்றம் பற்றிய பிரச்னையை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கவனத்திற்குரிய ஒன்றாக ஆக்குவதென்ற தாங்கள் விரும்பிய நோக்கத்தை இது நிறைவேற்றி விட்டதைப் போன்று மிகுந்த திருப்தியுற்றவர்கள் போல் காணப்படுகின்றனர். பெண்களின் முன்னேற்றம் என்ற பார்வையிலிருந்து இது ஓரளவிற்கு சரியானதும் கூட. ஆனால் இதன் மூலம் பொதுவில் பெண்கள் முன்னேற்றம் என்ற ஏமாற்றுப் போர்வையின் கீழ் முதலாளித்துவ உலகமும் அவர்களது உலக அமைப்பும் தெரிந்தோ தெரியாமலோ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த உழைக்கும் பெண்களின் வர்க்கப் போராட்டத்தை நடைமுறையில் புதைத்து விட்டனர். இதைப் பார்க்க கம்யூனிஸ்ட்கள் தவறக் கூடாது. இதனைப் பார்ப்பதற்கு கம்யூனிஸ்ட்கள் ஊடுறுவிப் பார்க்கும் கண்களைப் பெற்றிருக்க வேண்டும்; இதற்கெதிராக குரல் எழுப்ப வேண்டும். ஆனால் எங்கும் எவருமே அதனை எழுப்பவில்லை.

இதுபற்றி ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் , ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்கள் என்று அறியப்பட்டவர்கள் , இக்காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பெரும்பாலும் தங்களின் கம்யூனிஸப் பண்புகளையும் நம்பகத் தன்மையையும் இழந்து விட்டனர் என்ற உண்மையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். சோசலிச உலகத்திற்கு எதிரான எதிர்ப்புரட்சித் தாக்குதலை நடத்தும் போக்கில் ஏகாதிபத்திய வாதிகளும் அவர்களின் கூட்டுக் குற்றவாளிகளான நவீன திருத்தல்வாதிகளும் தொழிலாளி வர்க்க அரசு அதிகாரத்தையும் அதிகாரத்தில் இருந்த தொழிலாளி வர்க்கக் கட்சியையும் நிர்மூலமாக்கியதோடு மட்டும் நின்று விடவில்லை. அதனுடன் கூடவே அவர்கள் திருத்தல்வாத போக்கை உலகம் முழுவதும் வெற்றிகரமாக வீசச் செய்துள்ளனர். பொதுவான தத்துவார்த்த உணர்வு மட்டக் குறைவின் காரணமாக பெரும்பாலான கம்யூனிஸ்ட்கள் அதற்குப் பலியாகி விட்டனர். உழைக்கும் ஆண்களுக்கு சமமான உரிமைகளையும் அந்தஸ்தையும் அடைவதற்கான உழைக்கும் பெண்களின் போராட்டமானது அதன் விளைவில் உழைக்கும் வர்க்கத்தின் முதலாளித்துவத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் சமூகத்தில் ஆண்களுக்கு சமமான உரிமைகளையும் அந்தஸ்தையும் அடைவதற்கான பெண்களின் முன்னேற்றம் பற்றிய கேள்வியானது அப்போதைக்கு முக்கியமானதாக இருந்த போதிலும் அது சமூக சீர்திருத்தம் தொடர்பான சமூகப் பிரச்னையே. தன்மையிலேயே அவை வேறுபட்டதாகும். அவற்றில் ஒன்றின் நோக்கத்திற்கு மற்றொன்று உதவாததாகும்.

சூழ்ச்சிகள் செய்வதில் இந்திய முதலாளி வர்க்கம் முதலாளித்துவ உலகில் உள்ள பல நாடுகளையும் மிஞ்சி தனிச்சிறப்பான வகையினைச் சார்ந்தது என்பது நன்கு அறியப்பட்டதொரு உண்மை. அவர்கள் ஒருபடி முன்னே சென்று பெண்கள் போராட்டத்தை மிக மோசமான குழப்பத்தின் பிடியில் சிக்க வைப்பதற்கு “பெண்களை அதிகாரப்படுத்துதல்” எனும் ஆரவாரமான புதிய முழக்கத்தை உருவாக்கியுள்ளனர். சமூக வாழ்க்கையில் ஆண்களும் பெண்களும் சமம் என்பதற்காகப் போராடுவதும் பெண்களை அதிகாரப்படுத்துதல் எனும் முழக்கத்தில் அடங்கியுள்ள கருத்தாக்கமும் யதார்த்தத்தில் இரண்டு வெவ்வேறு விசயங்கள்.“பெண்களை அதிகாரப்படுத்துதல்” எனும் இம்முழக்கம் என்னதான் ஆரவாரமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் தோற்றம் காட்டினாலும் அது பெண்கள் சந்திக்கின்ற சமூகப் பிரச்னைகளுக்கான தீர்வை ஒருபோதும் தந்துவிடப் போவதில்லை. மிஞ்சிப் போனால் “இடஒதுக்கீட்டின்” மூலம் தலித் பிரச்னையை அல்லது ஜாதி அமைப்பு முறையிலான சுரண்டல் பிரச்னையைத் தீர்த்துவிட முடியும் என்று பகல் கனவில் மூழ்கிக் கொண்டிருப்பதைப் போன்றதாக வேண்டுமானால் இருக்கும். இங்கேயும் அங்கேயும் பெண் பொறியாளர்கள் இருப்பார்கள் , பெண் நீதிபதிகளும் மாஜிஸ்ட் ரேட்டுகளும் இருப்பார்கள் , பெண்கள் மத்தியில் இருந்து வந்த பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் இருப்பார்கள். ஆனால் சமூகத்தில் நிலவும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு மட்டும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.
சமூக வாழ்க்கையில் ஆண்களும் பெண்களும் சமம் என்பதற்கான போராட்டம் , இப்பாதை விலகல்கள் மற்றும் குழப்பங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டதாக நடத்தப்பட வேண்டும். சர்வதேசப் பெண்கள் இயக்கத்தின் நூற்றாண்டை அனுஷ்டிக்கும் இவ்வேளையில் மாபெரும் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல நம்மை மீண்டும் பணித்துக் கொள்ளும் அதே சமயம் தொலைந்து விட்ட உழைக்கும் பெண்களின் வர்க்கப் போராட்டத்தை கட்டியயழுப்ப நாம் தவறிவிடக் கூடாது. இன்றைய சூழ்நிலையில் அப்போராட்டம் இனிமேலும் உழைக்கும் பெண்களின் வர்க்கப் போராட்டமாக மட்டும் பார்க்கப்படக் கூடாது. அது ஆண் தொழிலாளர்களின் போராட்டமும் கூட. உழைக்கும் மக்களின் தொழிற்சங்க இயக்கத்தினர் வீட்டில் முதலாளித்துவ உரிமையாளர் போல் நடந்து கொள்கின்ற , தங்களது மனைவிகளை கீழ்ப்படிபவர்கள் அல்லது அடிமைகள் போல் நடத்தும் தொழிலாளர்களால் முதலாளித்துவ உரிமையாளர்களுக்கு எதிரான தங்களது போராட்டத்தில் தீர்மானகரமாக போராட முடியுமா? என்ற கேள்வியின் மீது கலந்துரையாடல்களும் விவாதங்களும் ஏற்பாடு செய்வார்களேயானால் பொதுவாக அத்தொழிற்சங்க இயக்கம் மிக முக்கியமான பணியை இன்று ஆற்றவல்லதாக இருக்கும். இது தொடர்பாக சிறந்த கம்யூனிஸத் தலைவர்கள் அனைவரும் உயர்ந்த தொழிலாளி வர்க்கக் கலாச்சாரத்தை தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்துள்ளனர் என்பதை இது தொடர்பாக இங்கே குறிப்பிடுவது பொருத்தமுள்ளதாக இருக்கும். தொழிலாளி வர்க்கக் கலாச்சாரம் கொண்டு செல்லப்படாமல் தொழிலாளி வர்க்க இயக்கம் குறிப்பாக தொழிற்சங்க இயக்கம் என்பது இந்த அல்லது அந்த ஆதாயங்களுக்காக தங்கள் முதலாளித்துவ உரிமையாளர்களுடன் நடத்தும் இழுபறிச் சண்டையாக மட்டுமே இருக்கும். அது அவர்களின் அடிமைத்தனம் மற்றும் முதலாளித்துவச் சுரண்டலில் இருந்தான விடுதலை பெறுவதற்கானதொரு போராட்டமாக ஒருபோதும் இருக்காது. மேலே சொல்லப்பட்ட விடுதலை பற்றிய கேள்வியை பொதுவான உழைக்கும் மக்களின் பிரச்னையாக கையாள்வது , உயர்ந்த தொழிலாளி வர்க்கக் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான அம்சத்தை தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஒப்பானதாகும்.

No comments:

Post a Comment