Powered By Blogger

Friday, August 6, 2010

ஏழை மாணவருக்குத் தரமான கல்வி மறுக்கப்படுவதைக் கண்டித்துக் கருத்தரங்கம்ஏழை மாணவருக்குத் தரமான கல்வி மறுக்கப்படுவதைக் கண்டித்துக் கருத்தரங்கம்

ஏழை மாணவருக்குத் தரமான கல்வி மறுக்கப்படுவதைக் கண்டித்துக் கருத்தரங்கம்

கல்வி மனித குலத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் மகத்தான பங்கினை ஆற்றியது. அந்தநிலை இன்று நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குச் சீரழிந்துள்ளது. அதன் பரிமாணம், உள்ளடக்கம் இரண்டிலுமே அது அடைந்துள்ள சீர்கேடு வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவிற்கு உள்ளது.



இருவகைக் கல்வி

முதற்கண் அனைத்து மக்களுக்கும் என்று இருக்க வேண்டிய கல்வி அந்த இலக்கினைக் கொண்டதாக மேலோட்டமாகத் தோற்றம் அளித்தாலும், இரண்டு வகைக் கல்வி பலரின் கண்களுக்கு புலப்படாமலேயே உருவாகி நிலை பெற்றுவிட்டது.
அதாவது ஏழை மக்களைப் பொறுத்தவரை அவர்களைக் கையயாப்பமிடத் தெரிந்தவர்களாக ஆக்கும் கல்வி; வசதி படைத்தவர்களைப் பொறுத்தவரை வேலை வாய்ப்பு ஏணியில் ஏறத் தகுதி உள்ளவர்களாக ஆக்கும் கல்வி; அதாவது ஒன்று அரசால் நடத்தப்படும் பள்ளிக் கூடங்களில் தரப்படும் சமூகத்தின் பெரும்பான்மையான மக்களுக்குக் கிடைக்கும் கல்வி; மற்றொன்று வசதி படைத்த சிறுபான்மையினருக்கு மட்டும் கிட்டவல்ல தனியார் கல்வி நிலையங்களின் மூலமான கல்வி; ஒருபுறம் பொருட் செலவின்றி அரசின் செலவில் தரப்படும் கல்வி மறுபுறம் பணம் செலுத்திப் பெறும் கல்வி; ஒருபுறம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களைப் பொறுத்தவரை சொல்லிக் கொடுப்பது இரண்டாம் பட்சமாகவும் அரசு மற்றும் அதனை நடத்தும் கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கான திட்டங்களை அமல் செய்வதற்குப் பயன்படுவது முதன்மையானதாகவும் ஆகிவிட்ட கல்வி; மறுபுறம் தங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் எத்தனை சதவிகிதம் தேர்ச்சி பெற்று உள்ளனர் எத்தனை மாவட்ட, மாநில அளவுகளிளான தரம் பெற்ற மாணவர்களைத் தங்கள் கல்வி நிலையங்கள் உருவாக்கி உள்ளன என்பதை முன்னிலைப்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி சம்பாத்தியத்தை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட கல்வி. இவ்வாறு இரண்டு வகைக் கல்வி சமூகத்தில் நிலை பெற்றுவிட்டது. இதனை மையமாக வைத்து சமூகத்தில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட வர்க்கப் பிரிவினை மென்மேலும் கூர்மை அடையும் நிலை உருவாகியுள்ளது.


புதுப்புதுப் பாடப் பிரிவுகள்

கல்வியின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை மிகப்பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. சிறிது காலத்துக்கு முன்பு கண்டும் கேட்டுமிராத புதுப்புதுப் பாடப்பிரிவுகள் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகின்றன. பே­ன் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், மீடியா ஸ்டடீஸ் போன்ற பாடப் பிரிவுகளைப் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாம் கேட்டிருக்க முடியாது. அப்போதெல்லாம் நாம் அறிந்தது கலைக் கல்லூரிகளில் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல், மனித உடற்கூறியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, சமூகவியல் மற்றும் இலக்கியப் பாடப்பிரிவுகளும் தொழில்நுட்பக் கல்லூரிகளைப் பொறுத்தவரை மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலக்டிரிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரானிக் என்ஜினியரிங் மற்றும் சிவில் என்ஜினியரிங் போன்றவையே. தற்போது கலைக் கல்லூரிகளில் வரலாறு, சமூகவியல் போன்ற பாடப்பிரிவுகள் இல்லாமல் போய்விட்டன அல்லது இல்லாமல் போய் கொண்டிருக்கின்றன. அடிப்படை விஞ்ஞானம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவை கவர்ச்சி மிகு பாடப்பிரிவுகளாக இப்போது இல்லை. தொழில் நுட்பப் பாடப்பிரிவுகளின் அடிப்படையான பாடப்பிரிவுகளில் பல மாணவர்கள் சேர்வதில்லை. மாறாக பேசன் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி, கம்யூட்டர் விஞ்ஞானம் போன்ற பாடப்பிரிவுகளிலேயே பலரும் சேர்கின்றனர்.

கல்வியின் குறிக்கோள் அன்றும் இன்றும்

அதாவது கல்வி என்பது சமூகத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டதாக முன்பு இருந்தது. பொருளாதார ரீதியான மேம்பாட்டினை மட்டுமே கருத்தில் கொள்ளாது சமூக மதிப்புகளை பராமரிப்பதையும் கருத்தில் கொண்டதாக அது இருந்தது. சமூகத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு அமைப்பு ரீதியாகத் தேவைப்படும் அறிவினை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டதாக அப்போது இருந்த கல்விமுறை இருந்தது; வேலை வாய்ப்பு கல்விமுறையின் முக்கிய அம்சமாக இருந்த போதும், அதற்கான தகுதியை வளர்ப்பதோடு நின்று விடாமல் சமூக உணர்வுகளையும், மனித நேயத்தையும், மனித உணர்வுகளையும் வலியுறுத்துவதாகவும் அக்கல்வி இருந்தது. சமூகத்தின் கடந்த காலத்தை அவற்றிலிருந்து எப்படியயல்லாம் சமூகம் தன்னை மேம்படுத்திக் கொண்டு வளர்ந்தது என்பதை உணர்த்துவதாக அக்கல்விமுறை இருந்தது படித்தவர்கள் பெரும்பாலும் சம்பாதிக்க வாய்ப்புள்ள தொழில் வித்தைகளை அறிந்தவர்களாக மட்டும் சமூக மக்களால் பார்க்கப்படவில்லை. மாணவர்களுக்கு மட்டுமின்றி சமூகம் முழுமைக்குமே வழி காட்டக் கூடியவர்கள் என்று அவர்கள் பார்க்கப்பட்டனர்.

ஆனால் இன்று அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. எடுத்துக்காட்டாக பேசன் டெக்னாலஜி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பொருத்தமுடைய ஒரு பாடப்பிரிவு அல்ல. அதைப்போல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்ற பாடப்பிரிவை எடுத்துக் கொண்டாலும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயன்படக்கூடியதாக அது இல்லை. இன்றைய சமூகத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு சமையல் தொழிற்சாலையாக உள்ளது; பெண்கள் சமையல் வேலை என்ற அலுப்புத்தட்டும் பணியினால் வாழ்நாள் முழுவதும் முடக்கப்பட்டுக் கிடக்கின்றனர்; அவர்களிடம் உள்பொதிந்துள்ள பல்வேறு திறமைகள் வெளியுலகிற்குக் கொண்டுவர வாய்ப்பில்லாமல் குடும்பப்பணி என்ற புதைச் சேற்றில் மூழ்கி தாங்கள் வாழ்ந்த சுவடேதுமின்றி எந்த முக்கியத்துவமும் அற்றவர்களாக இருந்து மறைந்து விடுகின்றனர்; இந்த நிலையைப் போக்குவதற்காக மக்கள் அனைவருக்கும் குறைந்த செலவில் தேவையான சத்துக்களைக் கொண்ட ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கல்விமுறை உருவாகி இருந்தால் அதனைப் பாராட்டலாம். ஆனால் இது அவ்வாறு உருவாக்கப்பட வில்லை.

அதைப்போல் இன்பர்மேசன் டெக்னாலஜி என்ற பாடப்பிரிவு சமூக உற்பத்தியில் ஒரு கோளாறான நிலை தோன்றியுள்ள சூழ்நிலையிலேயே வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது எந்த ஒரு சமூகத்திலும் உற்பத்தித்துறைக்கு உதவி புரிவதாகவே சேவைத்துறை இருக்க முடியும். ஆனால் நமது இன்றைய இந்திய சமூகத்தில் சேவைத்துறையின் வளர்ச்சி உற்பத்தித்துறையின் வளர்ச்சியைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அதாவது நாய் வாலை ஆட்டுவதற்குப் பதிலாக வால் நாயை ஆட்டும் சூழ்நிலை தோன்றியுள்ளது. அதன் விளைவாக இக்கல்விக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

முழுக்க முழுக்கச் சந்தைத் தேவைக்கே கல்வி

சுருக்கமாகச் சொன்னால் ஒட்டுமொத்த சமூக மேம்பாடு, அனைத்து மக்கள் வளர்ச்சிக்குத் தேவையான அறிவு ஆகிய குறிக்கோள்களைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு அதைப்படித்தால் அது வேலை வாய்ப்புச் சந்தையில் விலைபோகுமா என்ற அடிப்படையில் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும் சூழ்நிலை தோன்றி வளர்ந்து வருகிறது. எந்திரகதியில் இன்றைய முதலீட்டாளர்களுக்கு அதிக ஆதாயம் ஈட்ட வழிவகுக்கும் விதத்தில் வேகமாக வேலைசெய்ய வல்ல எந்திரங்களையயாத்த உழைப்பாளிகளை உருவாக்குவதையே இன்றைய கல்விமுறை இலக்காகக் கொண்டுள்ளது. அதாவது சந்தைத் தேவையினை இலக்காகக் கொண்டுள்ளது.

சந்தை என்பது மக்களின் வாங்கும் சக்தி என்பதை நாம் அறிவோம். இன்று வாங்கும் சக்தி உள்ளவர்களாக சமூகத்தில் உள்ளவர்கள் ஒரு இருபது விழுக்காட்டிற்கு மேல் இருக்கமாட்டார்கள். இந்த இருபது விழுக்காடும் தகவல் தொழில் நுட்பப் புரட்சி என்று விண்ணதிர முழங்கப்படும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள் நமது நாட்டில் தோன்றிய பின்னர் ஏற்பட்டதாகும். இந்த வாங்கும் சக்தி உடையவர்களில் மேல் தட்டில் இருக்கும் பெரும் பணக்காரர்களின் மனநிலை அவர்களிடமிருக்கும் அளவுக்கதிகமான பணத்தினால் பாழ்பட்டுப் போயுள்ளது. அதனால் அவர்களில் இரசனை, அழகு குறித்த கண்ணோட்டம் அனைத்துமே சீர் கெட்டுள்ளது. அந்த சீர்கெட்ட மன உணர்வுகளுக்குத் தீனி போடும் தன்மை வாய்ந்தவையாகவே பேசன் டிசைனிங் அதற்கான தொழில் நுட்பம் ஆகியவை உருவாக்கி வளர்க்கப் படுகின்றன. ஆரோக்கியமான உடலே மிகச் சிறந்த செல்வம், உண்மையே அழகு அழகே உண்மை என்ற அனைத்து மக்களுக்கும் பொருந்தக் கூடிய கண்ணோட்டங்கள் இந்தப் பாடப்பிரிகளின் தோன்றலுக்கு வழிவகுக்கவில்லை. அதனால்தான் உடல் நலம் பாதிக்கும் அளவிற்கு உணவைக் குறைத்து மெலிந்த உடலுடன் உடலின் அதிகபட்சப் பகுதியை வெளிக்காட்டி வசதி படைத்தவர்களில் விகார ரசனைக்குத் தீனி போடும் பேசன் பேரேடுகள் நடத்தப்படுகின்றன. அதற்கு உதவி புரிவதையும் நோக்கமாகக் கொண்டவையாக பேசன் சார்ந்த கல்வி முறைகள் உள்ளன.

எந்திரம் போன்று மனிதர்களை ஆக்கும் கல்வி

அதாவது முன்பிருந்த கல்விமுறையில் வேலை வாய்ப்பு என்பதற்கு முன்னுரிமை இருந்தாலும் சமூக உணர்வினை ஊட்டவும் , பராமரிக்கவும் வல்லவையான எல்லா அம்சங்களும் அதில் இருந்தன. ஆனால் இன்றுள்ள கல்வியின் முதலும் கடைசியுமான குறிக்கோள் வேலை வாய்ப்பு ஒன்றேதான். கல்வியின் மூலம் பெறப்படும் அறிவு ஒட்டுமொத்த சமூக நலனுக்கு ஊறும் குந்தகமும் விளைவிக்கக் கூடியதாக இருந்தாலும் அதைப் படித்தால் வேலை கிடைக்கும் என்ற சூழ்நிலை இருந்தால் அனைவரும் அதை நோக்கியே ஓட வேண்டும் என்பது நியதியாக்கப் பட்டுவிட்டது.

அதனால் இன்றைய மாணவர் சமூகம் சமூக உணர்வில்லாததாகவும் பிறர் நலன் பேணாத தனித்தனித் தீவுகளாகக் கருத வைக்கும் தனி மனித வாதத்தைக் குமட்டும் அளவிற்குக் கொண்டதாகவும் உள்ளது. மாணவர்கள் எந்திர மனிதர்களாக ஆகிவிடும் சகிக்க முடியாத சூழ்நிலை தோன்றி வளர்ந்து வருகிறது.

இந்த வளர்ச்சி தன்னிச்சையானதல்ல. அமைப்பு ரீதியிலானது. நமது சமூகம் ஒரு மாபெரும் அநீதியினை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதால் உருவாகியது. அதாவது மனிதனை மனிதன் சுரண்டும் அநீதியை அடிப்படையாக் கொண்டதாக இருப்பதால் தோன்றி வளர்ந்ததாக உள்ளது.

ஆனால் முன்பிருந்த சமூக நலனையும், மதிப்புகளையும் ஒட்டுமொத்த சமூகத்தின் அறிவு மேம்பாட்டினையும் அடிப்படையாக ஒரு குறிப்பிடத்தக்க அளவு கொண்டிருந்த கல்விமுறையும் மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப்படை நியதியாக கொண்டிருந்த சமூகத்தில் தான் தோன்றி வளர்ந்திருந்தது. ஆனால் இன்று அது அத்தனை சீரழிவினை அடைந்து விட்டதன் காரணம் என்ன?

அன்றிருந்த ஒப்பீட்டளவிலான நல்ல தன்மைகள் இன்றில்லை

அதற்கு முன்பிருந்த நிலவுடமை சமூக அமைப்பிலிருந்து ஒப்பு நோக்களவில் மேம்பட்டதாக முதலாளித்துவ அமைப்பு அப்போது இருந்தது. அச்சூழ்நிலையில் பழைய அப்பட்டமான பிற்போக்குத் தனமான நிலவுடமை அமைப்பு மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அது உருவாக்கிய புது அமைப்பில் நெருக்கடிக்கான கூறுகள் இருந்த போதும் நெருக்கடி பெரிதாகத் தலைகாட்டாத நிலையிலும் அது ஓரளவு முற்போக்கானதாக இருந்தது. அதாவது புது அமைப்பைக் கட்டியமைத்து வலுப்படுத்துவதற்காக சில முற்போக்கான அம்சங்களைக் கொண்டதாக அது உருவாக்கிய அன்றைய கல்விமுறை இருந்தது.

ஆனால் இன்று இடைவிடாத சுரண்டலில் ஈடுபட்டு மக்களின் வாங்கும் சக்தியைத் தரைமட்டமாகக் குறைத்து அதிகபட்ச இலாபத்திற்காகக் குரல் வலையை நெறிக்கும் தன்மை வாய்ந்த போட்டியில் ஈடுபடக் கூடியதாக முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பு மாறியுள்ள சூழ்நிலை மதிப்புள்ள மனிதர்களையும் உண்மையான அறிவுபடைத்த மக்களையும் கண்டு அஞ்சுகிறது எனவே உண்மை அறிவும் , சமூக உணர்வும் மதிப்புகளும் இல்லாதவர்கள் மட்டுமே தனக்குத் தேவை என்ற கட்டத்தினை இன்று அது எட்டியுள்ளது.

அவ்வர்க்கத்தின் அந்தத் தேவை மற்றும் நலனை மேம்படுத்தவும் பராமரிக்கவும் இருக்கக் கூடிய நமது ஆட்சியாளர்கள் கல்வி, இத்தனை சீரழிந்த நிலையினை அடைவதற்குத் தேவையான திட்டங்களையும், கொள்கைகளையும் வகுத்தெடுத்து இன்றிருக்கும் சீரழிந்த நிலையினை வெளிப்படையாக்கியுள்ளனர்.

கொசு அது கடிக்கும் மனிதர்களின் உடலில் அது கடிக்கும் இடத்தினை உணர்வற்றதாக ஆக்குவதற்காக கடிப்பதற்கு முன்பாக ஒரு மயக்க மருந்தினை செலுத்துமாம். அதைப்போல் நமது ஆட்சியாளர்கள் வேலை வாய்ப்பு என்ற மயக்க மருந்தினை மனதில் செலுத்தும் வகையில் கொள்கை அறிவிப்புகளைச் செய்து இந்த சீரழிந்த நிலைக்குக் கல்வி வருவதற்கு வழிவகுத்துள்ளனர்.

நீக்கமற நிறைந்திருக்கும் அவநம்பிக்கை

யாரும் மறுக்க முடியாத அளவிற்கு இன்றைய சீரழிவு உள்ளது என்பது உண்மை. மக்கள் அனைவரும் அதனால் சஞ்சலம் அடைந்துள்ளனர் என்பதும் உண்மை. இருந்தாலும் அதற்கெதிராக யாரும் எதையும் செய்ய முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் அதே அளவு உண்மை. இன்றைய நிலையில் கல்விமான்கள், கல்வியின் பால் அக்கறை கொண்ட பொதுமக்கள், பெற்றோர், மாணவர் என அனைத்துப் பிரிவினரின் மனதிலும் நீக்கமற நிறைந்திருப்பது ஒன்றே ஒன்றுதான். ஆம் ஒருவகை அவநம்பிக்கை. அதுதான் அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

அந்த அவநம்பிக்கையினைப் போக்க எந்த அரசியல் சமூக சக்தியும் ஒருங்கிணைந்து ஆக்கபூர்வ கருத்துக்களுடன் வரத் தயாராக இல்லை. அந்த நிலையில் தான் ஏன் பூனைக்கு மணி கட்டுபவர்களாக நாம் இருக்கக் கூடாது என்ற உள்ளக் கிடக்கையோடு இப்பிரச்னையை மாணவர் ஜனநாயக இயக்கம் கையிலெடுத்தது. அமெரிக்கன் கல்லூரி வளாகம் விலை பொருளாக்கப்படுவதை எதிர்த்த போரில் தடம் பதித்து முகவிலாசம் பெற்ற அவ்வமைப்பு உறங்குகின்ற புலியாகத் தற்போது உள்ள தமிழக மாணவர் சமூகத்தைத் தட்டி எழுப்பித் தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் களம் புகுந்தது.

இத்தகைய சமூகம் முழுவதையும் ஆழமாகவும் பரந்த அளவிலும் நீண்டகால அடிப்படையில் பாதிக்கவல்ல பிரச்னைகளின் பால் மக்கள் கவனத்தை எத்தனை தூரம் திருப்ப முடியுமோ அத்தனை தூரம் நமது சக்திக்கேற்ற வகையில் திருப்பிப் பார்ப்போம் என்ற அடிப்படையில் அது ஏழை மாணவர்களுக்குத் தரமான கல்வி மறுக்கப்படுவதைக் கண்டித்து ஒரு கருத்தரங்கத்தினை நடத்தத் தீர்மானித்தது. அதற்குப் பொருத்தமான இடமாக காந்தி மியூஸியத்தின் குமரப்பா குடிலைத் தெரிவு செய்து அக்கருத்தரங்கத்தினை ஏப்ரல் 24 ம் நாள் நடத்தத் தீர்மானித்தது. உண்மையிலேயே காந்திய மதிப்புகளைப் பிசிறின்றிக் கடைப்பிடிப்பதோடு எந்த மூலையிலிருந்து வருவதாக இருந்தாலும் சமூகத்திற்குத் தேவைப்படும் கருத்துக்கள் வரட்டும்; அதனால் சமூகம் பலன் பெறட்டும் என்ற உயர்ந்த விருப்பம் கொண்டவராகவும் விளங்கும் காந்தி அருங்காட்சியகத்தின் பொறுப்பாளரும் பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவருமான திரு இரவிச்சந்திரன் அவர்கள் மனமுவந்து கருத்தரங்கத்திற்குத் தனது பொறுப்பிலுள்ள குமரப்பா குடில் அரங்கினை வழங்க முன்வந்தார். அவரிடம் அந்த அரங்கினைக் கோரிப் பெறுவதற்காக அமைப்பினர் அணுகிய போது அவர்களுக்குக் கிடைத்த அனுபவமே அலாதியானதாகவும் எள்ளளவு கூட வணிக ரீதியான மனநிலையின்றி ஒரு அரங்கின் பொறுப்பாளர் இருக்க முடியும் என்பதை உணர்த்துவதாகவும் இருந்தது.

கருத்தரங்கில் கலந்து கொள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திருமதி வசந்தி தேவி , தமிழ்த் திரைவானில் முத்திரை பதித்த ‘கற்றது தமிழ்’ படத்தின் இயக்குனர் திரு.ராம், இலக்கியவாதி பிரபஞ்சன் போன்ற பலரும் அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களால் அணுகப்பட்டனர். சற்றுத் தாமதமாக அணுகியதாலோ என்னவோ அவர்கள் அனைவரும் பிற கூட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டனர். அதன் காரணமாகக் கலந்து கொள்ள இயலாத நிலையில் தாங்கள் இருந்ததை வருத்தத்துடன் தெரிவித்தனர்.

தங்களுக்கிருந்த பல்வேறு தலையாய அலுவல்களுக்கு மத்தியிலும் இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைகழகத்தின் இயக்குனர்களில் ஒருவரான பேராசிரியர். டாக்டர் திரு. பெ.அரங்கராமானுஜம் அவர்களும், மலையாளத் திரைப்படத் துறையில் இந்தியன் பனோரமா பிரிவில் இடம்பெற்ற புகழ்பெற்ற கலிலியோ படத்தை இயக்கியவரும் தற்போது ஊடகக் கல்வியினைப் பயிற்றுவிக்கும் கேரளாவில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற கல்லூரியின் ஆசிரியராக விளங்குபவருமான திரு.ஜேம்ஸ் ஜோசப் அவர்களும் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்ற எவ்விதத் தயக்கமும் இன்றி மனமுவந்து முன்வந்தனர். மாணவர் ஜனநாயக இயக்கத்தின் ஆலோசகரும் கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொது மேடையின் மாநில அமைப்பாளருமான தோழர். ஆனந்தனும் அதில் கலந்து கொண்டு சிறப்பிக்க இசைந்தார்.

சென்னை, சிவகாசி, நாகர்கோவில், மதுரை, பொள்ளாச்சி, திண்டுக்கல் பகுதிகளில் மாணவர் தரப்பினரை மனதிற் கொண்டும் பெற்றோர் மற்றும் கல்விமான்களைக் கருத்தில் இருத்தியும் தயார் செய்யப்பட்ட இரு துண்டுப் பிரசுரங்கள் பரவலாக அப்பகுதிகளில் விநியோகிக்கப்பட்டன. இவ்வட்டாரங்களில் பல கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற கல்விப் பணியாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவர் ஏறத்தாழ ஒரு மாத காலத்திற்கும் மேலாக அணுகப்பட்டனர்.

இருந்த போதும் பொது நிகழ்ச்சி என்றால் நகைச்சுவையை மையமாகக் கொண்டு இருந்தால் தான் மக்கள் வருவர் அல்லது பெரும் பொருட் செலவில் அணிதிரட்டிக் கொண்டு வந்தால் தான் கூட்டம் சேரும் என்பது நியதியாகிவிட்ட இன்றைய நிலையில் ஓரளவேணும் கலந்து கொள்பவரின் எண்ணிக்கை இருக்குமா என்ற கவலை ஏற்பாடு செய்தவர்களின் மனதை உறுத்திக் கொண்டேதான் இருந்தது. இருப்பினும் அவர்களது ஆசை நிராசையாகாத அளவிற்குத் தரமானவர்களைக் கொண்ட 150 என்ற எண்ணிக்கைக்குக் குறையாத எண்ணிக்கையில் கல்வியின் பால் அக்கறை கொண்ட மக்களின் திரள் ஏப்ரல் 24ம் நாள் குமரப்பா குடிலை நிரப்பியது.

சுறுசுறுப்புடன் எவ்வித அலுப்பையும் பொருட்படுத்தாது ஓடியாடி நடைமுறை மற்றும் பிரச்சாரப் பணிகளை ஒரு தேனீயைப் போல் மேற்கொண்ட மாணவத் தோழர். டேவிட் வினோத் குமாரின் தலைமையில் துவங்கிய இக்கருத்தரங்கை ஒருங்கிணைக்கும் பொறுப்பினைப் பேரா.டாக்டர். அரங்கராமானுஜம் அவர்கள் ஏற்றுக் கொண்டார். தோழர் ஆனந்தனின் அறிமுக உரைக்குப் பின்பு உணர்ச்சிப் பெருக்கோடு ஊடகவியலாளர் திரு.ஜேம்ஸ் ஜோசப் அவர்கள் உரை வீச்சு நிகழ்த்தினார். அவரது சீரிய உரையைத் தோழர் ஆனந்தன் தமிழாக்கி வழங்கினார்.
அடுத்து கல்வி குறித்த பல்வேறு அரிய கருத்துக்களையும் கல்வியின் பால் அக்கறையில்லாமல் போய்க் கொண்டிருக்கும் ஆசிரியர் சமூகத்தின் பாலான தனது ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தும் அரியதொரு உரையினை திரு. அரங்கராமானுஜம் அவர்கள் வழங்கினார். மதிய உணவு இடைவேளைக்குப் பின்பு தற்போது கல்வியின் தரக்குறைவிற்குக் காரணங்களாக அமைந்துள்ள சில விசயங்கள் அலசி ஆராயப்பட்டன. மேலை நாடுகளில் அங்கு நிலவும் முன்னேறிய சூழ்நிலைகளுக்கு உகந்த விதத்தில் கடைப்பிடிக்கப் பட்டுவரும் தேர்வு ஒழிப்பு போன்றவை இந்தியா போன்ற நாடுகளின் கல்வி மேம்பாட்டிற்கு ஒத்துவரக் கூடியவையா? நுழைவுத் தேர்வை ஒழித்தது உண்மையிலேயே கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழி வகுத்துள்ளதா? யதார்த்தத்தில் வெறிவாதப் போக்குகள் எதற்கும் இடமளிக்காமல் உயர் அறிவினைப் பெறுவது என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டால் அந்நிலையில் கடைப்பிடிக்கப்படும் பயிற்றுமொழிக் கொள்கை எதுவாக இருக்கும்? பாடக்குறைப்பு, நுழைவுத்தேர்வு ஒழிப்பு போன்றவை மத்தியதர மக்களை CBSC கல்வி முறைக்கும், AIEEE தேர்வு எழுதி மத்திய அரசின் கட்டுபாட்டிலுள்ள உயர்கல்வி நிலையங்கள் மற்றும் தரமான தனியார் பல்கலைக் கழகங்கள் பக்கம் போவதற்கும் வழிவகுக்கிறது என்ற கூற்றில் உண்மையுள்ளதா? இல்லையா? சீனியாரிட்டியை மட்டும் அடிப்படையாக வைத்து பல காலங்களுக்கு முன்பு பட்டம் பெற்றவரை உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக நியமிப்பது கல்விக்கு உதவுமா? அதில் இருக்கும் போதாமையைப் போக்க என்ன செய்ய வேண்டும்? உண்மையான பின்தங்கிய நிலையான பொருளாதார ரீதியான பின்தங்கிய நிலையைப் போக்க கடைப்பிடிக்கப்பட வேண்டிய சரியான இடஒதுக்கீடு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? ஆகிய விசயங்கள் குறித்து கருத்தரங்கில் கலந்து கொண்டோரின் கருத்துக்கள் வரவேற்கப்பட்டன.

பல்வேறு பேராசிரியர்கள், பொறியியல்துறை மாணவர்கள், இதழ் இயலாளர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் அவ்விவாதங்களில் தயக்கமின்றிப் பங்கேற்றுத் தங்களது கருத்துக்களை வழங்கினர். அக்கருத்துக்களைத் தொகுத்து அவற்றை அடிப்படையாகக் கொண்ட இயக்க வடிவிலான நேரடி நடவடிக்கைகள் உரிய காலத்தில் எடுக்கப்படும் என உறுதி வழங்கியதொரு ஆய்வுரையை தோழர் ஆனந்தன் முன்வைத்தார். இறுதியில் கல்விக் கருத்தரங்கின் நோக்கம் நிறைவேற கலந்து கொண்டோர் எவ்விதம் கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அழகானதொரு முடிவுரையை டாக்டர் பேரா. அரங்கராமானுஜம் வழங்கினார். இறுதியாகப் பங்கேற்றோர், கலந்து கொண்டோர் அனைவருக்கும் கூட்டத்தின் தலைவர் தோழர் டேவிட் வினோத் குமார் நன்றி கூற சிறப்புற நடைபெற்ற கருத்தரங்கம் முடிவுக்கு வந்தது.
கூட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட கல்லூரிப் பேராசிரியர்கள், பல பள்ளி ஆசிரியர்கள், முப்பது பேருக்குக் குறையாத எண்ணிக்கையில் மாணவர்கள் எனப் பலர் மதுரை நகரிலிருந்து மட்டுமல்ல சிவகாசி, நாகர்கோவில், சென்னை போன்ற பகுதிகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர். சிவகாசி வட்டாரத்தில் இருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டித் தோழர்கள் ஒரு வாகனம் ஏற்பாடு செய்து அதில் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்தரங்கின் நிகழ்வுகளை ஒலி நாடாவாக்கி முடிந்தால் கலந்து கொண்டோர் பலரின் பேட்டிகளோடு அதனை ஒரு குறும்படமாகவும் ஆக்கித்தர பிரபல படத்தொகுப்பாளரும், தனது பல வெள்ளி விழாத் திரைப்படங்கள் மூலம் ஜனநாயக மனிதாபிமான மதச்சார்பற்ற கருத்துகளை முன்வைத்து அன்றும் இன்றும் என்றும் தமிழ்த் திரைப்படத் துறையில் அசைக்க முடியாத ஒரு அரியணையில் இடம் பெற்றிருப்பவரும் திரைப்படங்களில் வியாபார ரீதியானவை கலைத்தன்மை வாய்ந்தவை என்ற இரு பிரிவுகள் இல்லை; நல்லவை கெட்டவை என்ற இரு பிரிவுகள் மட்டுமே உள்ளன என்பதையும் நல்ல திரைப்படங்களும் வெற்றிப்படங்களாக அமைய முடியும் என்பதையும் நிலை நாட்டிய மாபெரும் திரையுலக மேதை திரைப்பட இயக்குனர் எ.பீம்சிங் அவர்களின் புதல்வருமான பி.லெனின் அவர்கள் இரு ஊடகம் பயிலும் மாணவர்களை அனுப்பி ஏற்பாடு செய்து தந்தார்.

கருத்தரங்கின் வீச்சு

கருத்தரங்கின் வீச்சும் செய்தியும் எவ்வளவு தூரம் எட்டி இருந்தன என்றால் கருத்தரங்கு நடைபெற்ற அரங்கின் அருகாமையில் அமைந்திருக்கும் இராஜாஜி சிறுவர் பொழுது போக்குப் பூங்காவிற்கு தங்களது பிள்ளைகளைக் கூட்டி வந்த சில பள்ளி ஆசிரியர்கள், ஆட்டோ ஓட்டுனர் போன்றோர் கூட்டத்தில் பேசியவர்களின் உரைகளைக் கேட்டு அவற்றில் ஈடுபாடு ஏற்பட்டுத் தங்களது குழந்தைகளும் குடும்பத்தினரும் வீடு செல்ல மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அதில் வந்து கலந்து கொண்டனர். அத்துடன் தொடர்புக்காகத் தங்களது தொலைபேசி எண்களையும் வழங்கினர். அதனுடன் கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களுக்கு மரியாதையுடன் கூடிய பாராட்டுகளையும் வழங்கி விட்டுச் சென்றனர். ஒட்டு மொத்தத்தில் இக்கருத்தரங்கம் தரத்தின் அடிப்படையில் அடைந்த வெற்றி ஏற்பாடு செய்தவர்களுக்கு மகிழ்வினைத் தந்ததாக இருந்ததோடு ஆற்ற வேண்டிய பல அவசர அவசியக் கடமைகளை அவர்களுக்கு உணர்த்துவதாகவும் இருந்தது. இறுதியில் தோழர் ஜேம்ஸ் ஜோசப் அவர்கள் இயக்கிய கல்வி குறித்த மிகவும் இயல்பான உலகத்தரம் வாய்ந்த குறும்படம் ஒன்று அரங்கில் திரையிடப்பட்டது.

No comments:

Post a Comment