Friday, August 6, 2010

ஆகஸ்டு 5 மாமேதை எங்கெல்ஸ் நினைவுதினம்

உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைத் தத்துவத்தை உலகிற்கு வழங்கிய இருபெரும் மேதைகளில் இரண்டாவது இடத்தில் நின்று நிலவுபவர் தோழர்.எங்கெல்ஸ் ஆவார். ஆகஸ்டு 5 அவரது நினைவுதினம் ஆகும். 1895 ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் நாளில் உடல் உபாதை எதனாலும் சிரமப்படாமல் அம்மேதை நினைவிழந்த நிலையில் உயிர் நீத்தார்.

மனிதர்களுக்கிடையில் நிலவும் அத்தனை உறவுகளிலும் மிகவும் மேன்மையானது தோழமையுணர்வு. அதன் சின்னமாகவும், சிகரமாகவும் ஏன் அதன் இலக்கணமாகவும் விளங்கியவை மாமேதைகள் மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருக்கும் இடையில் நிலவிய நட்பும் தோழமையும்.


மாமேதை மார்க்ஸ் உயிர் நீத்த போது அந்த இறப்பை உலகிற்கு அறிவித்த மாமேதை எங்கெல்ஸ் மார்க்ஸின் உடலைவிட்டு உயிர் பிரிந்து விட்டது என்று கூறவில்லை. மாறாக அம்மாமனிதர் சிந்திப்பதை நிறுத்தி விட்டார் என்று துக்கம் மேலிடக் கூறினார். அவ்வாறு கூறிய மாமேதை எங்கெல்ஸின் சிந்தனை 1895 ஆகஸ்டு 5ல் நின்று போனது. அவ்விருவர் குறித்து மட்டுமே அவ்வாறு கூற முடியும். ஏனெனில் அவர்கள் வாழ்ந்ததால் சிந்தித்தவர்களல்ல; சிந்திப்பதற்கே வாழ்ந்தவர்கள்.

தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் வர்க்க விடுதலை குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்த மாமேதை எங்கெல்ஸை மரணத்தால் தொடர்ந்து சிந்திக்கவிடாமல் செய்ய முடிந்ததே தவிர அதுவரையிலான அவரது சிந்தனைகளின் விளைவாக மலர்ந்த கருத்துக்கள் உழைக்கும் வர்க்கத்திற்கு வழி காட்டுவதை அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அச்சிந்தனை வழங்கிய பார்வையைக் கொண்டு அவரது பல்லாயிரக் கணக்கான சீடர்கள் சமூக நிகழ்வுகளைப் பார்த்து சிந்தித்து முன்வைத்த கருத்துக்கள் மூலம் உழைக்கும் வர்க்க விடுதலைப் பாதை பெற்ற ஒளியினையும் அம்மரணத்தால் தடுக்க முடியவில்லை.
மகத்தான கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்ஸ் உடன் இணைந்து எழுதிய அம்மாமேதை தனது 24 ம் வயதில் இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் நிலை என்ற உள்ளத்தை உருக வைக்கும் நூலை உழைக்கும் வர்க்க இலக்கியக் கருவூலத்திற்கு வழங்கினார். அவரது டூரிங்க்கிற்கு மறுப்பு, இயற்கையின் இயக்கவியல், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவைகளின் தோற்றம் ஆகியவை என்றென்றும் உயிர் வாழும், வழிகாட்டும் மார்க்ஸிய இலக்கியங்களாக இன்றும் விளங்குகின்றன. எந்தவொரு சரியான எழுத்தும் அதற்குரிய சரியான நடையினைத் தேர்ந்தெடுக்கும் என்பர். அதனை நிறுவவல்ல மிகப் பொருத்தமான எடுத்துக் காட்டுகளாக அந்நூல்கள் விளங்குகின்றன.
மார்க்ஸை முழுமையாகப் புரிந்துகொள்ளும் முயற்சியை எங்கெல்ஸைப் படிப்பதின் மூலமே மேற்கொள்ள வேண்டும். சிக்கலான விஞ்ஞானக் கருத்துக்களைக் கூட எளிய முறையிலும் அசைக்க முடியாத தர்க்கப்பூர்வ வாதங்களுடனும் முன்வைக்கும் அவரது எழுத்தின் நடை மார்க்சிய ரீதியான எழுத்துக்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு என்றென்றும் மாதிரி. மேற்கூறிய நூல்கள் தவிர அவர் எழுதிய கட்டுரைகள், கடிதங்கள் ஏராளம். இராணுவ அறிவியல் குறித்த அவரது எழுத்துக்கள் எத்தனை சிறப்பானவையாக இருந்தன என்றால் அதைப் படித்தவர்கள் அதை எழுதியவர் ஒரு இராணுவத் தளபதி என்றே அக்காலத்தில் எண்ணினர்.

மாமேதை மார்க்ஸின் மாற்று உருவெனக் கருதப்பட்ட எங்கெல்ஸ் மார்க்ஸின் இறப்பினால் கருத்துலகில் ஏற்பட்ட வெற்றிடத்தை நீக்கமற நிரப்பினார். உழைக்கும் வர்க்கத்தின் முதல் அமைப்பாம் சர்வதேச உழைக்கும் மனிதர் ஸ்தாபனத்திற்கு மார்க்ஸ் உடன் சேர்ந்து உயிர் கொடுத்தார். மார்க்ஸின் முதன்மைத் தளபதியாக விளங்கிய அவர் அவரது சக தோழர்களால் தளபதி என்றே அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்பட்டார்.

கருத்தொருமைப்பாடு, தோழமை, நட்பு அனைத்திலும் நகமும் சதையும் போல் விளங்கிய தோழர்களான மார்க்சும், எங்கெல்சும் மார்க்ஸிய தத்துவத்தை உருவாக்கி வளர்த்தனர். அதைக்கொண்டு அடக்குமுறை, சுரண்டல் அமைப்புகளுக்கு முட்டுக் கொடுப்பவைகளாக விளங்கிய அனைத்துக் கருத்துக்களையும் தகர்த்துத் தவிடு பொடியாக்கினர்.

பல்வேறு அரசுகளின் அடக்கு முறைக்கு ஆளாகி நின்ற வேளையிலும் அடக்கு முறைகளை எதிர்கொண்டு அஞ்சாது நிமிர்ந்து நின்ற அவர்கள் “அவைகளைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை. மாறாக அடக்குமுறை மற்றும் சுரண்டல் அமைப்புகளும் அவற்றைத் தாங்கி நிற்கும் அரசுகளும் எங்களைக் கண்டு அஞ்சுகின்றன” என்றனர்.

மாமேதை எங்கெல்ஸ் 1895 ஆகஸ்டு 5 ல் மறைந்திருந்தாலும் மார்க்ஸின் தோழரும், குடும்ப நண்பருமான கார்ல் லீப்னெஹ்ட் கூறியவாறு அவர் அவரது கருத்துக்களால் இந்த உலகில் வர்க்க உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கம் இருக்கும் வரை, அதன் போராட்டம் தொடரும் வரை உயிர் வாழ்வார்.

அவரது வாழ்வும் வழியும் சுரண்டலையும் கூலி அடிமைத்தனத்தையும் எதிர்த்த நமது போராட்டத்தை வழிநடத்தும்.

No comments:

Post a Comment