(மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர், 2008)
இடதுசாரி ஞானஸ்நானம்
வழங்கும் மதகுருமார்களாக தங்களைத் தாங்களே
வரித்துக் கொண்டு,
சிற்றிதழ் நடத்துபவர்கள், பின்நவீனத்துவவாதிகள்
என்ற பெயர்களில் தங்களை அழைத்துக் கொள்ளும் பலர், தமிழகத்தில்
இடதுசாரி முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற ஒளிவட்டம் பின்னால் சுழல வலம்வந்து கொண்டுள்ளனர்.
ஒரு காலத்தில் வெறும் அரவமாக ஒலித்த அவர்களின் குரல்கள் தற்போது பேரிரைச்சலாக உருவெடுத்துள்ளன. அதற்கு காரணம் அவர்களின் குரல் வலிமை பெற்றுவிட்டது,
அதனால் அதன் எதிரொலி அதிகமாகிவிட்டது என்பதல்ல. தங்களது பத்திரிக்கைகளின் பக்கங்களில் 25 சதவீதத்தை விளம்பரங்களுக்கும் 60 சதவீதத்தை சினிமா மற்றும்
சினிமா நட்சத்திரங்கள் குறித்த செய்திகளை எழுதி நிரப்பவும் பயன்படுத்தும் பிரபல பத்திரிக்கைகளும்
கூட இதுபோன்ற எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் எழுதுவதற்கென தங்களது இணை இதழ்களில்
வாய்ப்பளிக்கின்றனர். அவை அவ்வாறு வாய்ப்பளிப்பதற்கான காரணம், இடதுசாரி சிந்தனைகளின் மேல் அந்த பத்திரிக்கைகளுக்கு திடீரென ஏற்பட்டுவிட்ட
புதிய காதலா அல்லது அதுவும் ஒரு வித்யாசமான வியாபார யுக்தியா என்பது போன்ற வியங்களுக்கு நாம் பின்னர் வருவோம்.