Powered By Blogger

Thursday, November 3, 2011

ஜாதியம் இன்றைய இந்திய சமூக அமைப்பின் அடிப்படையான முரண்பாடல்ல என்பதைத் தோலுரித்துக் காட்டும் உத்திரப்பிரதேச தேர்தல்

2007 மே மாத வெளியீடு
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்தமுறை கட்சிகளின் கூட்டணி எதுவும் அந்த மாநிலத்தில் ஏற்படவில்லை. அங்கு செயல்படும் முக்கிய கட்சிகள் அனைத்துமே தனித் தனியாகவே போட்டியிட்டன. அதற்குப் பதிலாக கட்சிகள் ஜாதிகளின் ஆதரவை வித்தியாசமான வழிகளில் பெறமுயன்றன. வழக்கமாக உயர் ஜாதியினர் என்று கூறப்படும் பிராமணர்களின் ஆதரவு ஹிந்துத்வா கட்சியான பி.ஜே.பிக்கே செல்லும் என்ற எதிர்பார்ப்பே பலரிடமும் இருந்திருக்கும்.
யாதவர்கள் போன்ற பிற்பட்ட வகுப்பினரின் மற்றும் முஸ்லீம்களின் வாக்குகள் சமாஜ்வாதிக் கட்சிக்கு கிடைக்கும் என்பதே பலரது கணிப்பாகவும் இருந்திருக்கும் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை உ.பி. மாநிலம் பிளவுபடாமல் இருந்தவரை ச.ஈ. திவாரி போன்ற பிராமண வகுப்பûச் சார்ந்த தலைவர்களினால் காங்கிரஸிற்கு பிராமணர்களின் வாக்குகள் கிடைத்து வந்தன; முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும் விடுதலைக்குப் பின் நடைபெற்ற பல தேர்தல்களில் காங்கிரஸþக்கே கிடைத்து வந்தது. பி.எஸ்.பி போன்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனிக்கட்சி தொடங்கப்பட்டபின் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கி காங்கிரûஸ விட்டு நகரத் தொடங்கியது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் மத்திய அரசில் காங்கிரஸ் இருந்ததாலும், அது உரிய நடவடிக்கை எடுக்காமல் மசூதி இடிக்கப்பட்ட அனுமதித்தாலும் முஸ்லீம் வாக்கு வங்கியும் காங்கிரஸþக்கு இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் ஜாதியைப் பற்றி அதிகம் பேசாமல் காங்கிரஸ் ராகுல் காந்தியின் இளமையையும், சுறுசுறுப்பையும் வைத்தே தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட பி.எஸ்.பி. கட்சி மிக மிக வித்தியாசமான விதத்தில் தனது பிற ஜாதிகளுடனான கூட்டணியை அமைத்தது. அம்மாநிலத்தில் அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு அரசியல் அதிசயத்தை அரங்கேற்றியுள்ளது.
அன்று கனல் கக்கிய மாயாவதி - இன்று கைகோர்த்து நிற்கும் மாயாவதி
கன்சிராமின் பி.எஸ்.பி கட்சியில் மாயாவதி இணைந்து செயல்படத் தொடங்கிய அந்தக் காலகட்டத்தில் மாயாவதியும் பல பி.எஸ்.பி கட்சியினரும் பல முழக்கங்களை முன் வைத்தனர். அவற்றையும் இன்று அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலையும் பார்த்தால் உண்மையிலேயே இப்படியும் நடக்குமா ? என்ற எண்ணமே நம்மிடம் மேலோங்கும். பி.எஸ்.பி கட்சிக்கு எதிராக அக்காலகட்டத்தில் பேசியவர்கள் அனைவரும் மனுதர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என இகழப்பட்டனர். வருணாசிரம தர்மமும், அது வகுத்த குற்றங்களும் தண்டனைகளும் எத்தனை கடுமையான சொற்களினால் இகழப்பட முடியுமோ அத்தனை கடுமையான சொற்களினால் இகழப்பட்டன. மனுதர்மத்தையும், பார்ப்பனியத்தையும் எதிர்த்து அத்தனை உரத்து முழங்கிய மாயாவாதி இத்தேர்தலிலே தனது வேட்பாளர் பட்டியலில் 80க்கும் மேற்பட்ட பிராமணர்களுக்கு இடம் கொடுத்திருந்தார். அதில் 51 பேர் வெற்றியும் பெற்றுள்ளனர். இந்தப் போக்கை அற்புதம் என்று கூறாமல் வேறு எவ்வாறு கூற முடியும் ? மேலும் பலர் நினைப்பது போல் ஜாதியவாதம் தலை விரித்தாடுவதாக இந்திய சமூகம் இருப்பதாகவே ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். அந்நிலையில் அந்த ஜாதியக் கட்டுக் கோப்பின் அடித்தளத்தில் உள்ளவர்களைத் தான் ஜாதியக்கட்டுப்பாடுகளின் முழுச் சுமையும் அழுத்தும். அதனால் அவர்களுக்குத்தான் ஜாதிய கட்டுக் கோப்பின் உச்சத்தில் உள்ளவர்கள் மேல் மிதமிஞ்சிய கோபமும் வெறுப்பும் இருக்கும். ஆனால் ஜாதியக் கட்டுக்கோப்பின் உச்சத்தில் உள்ள பிராமணர்களோடு அக்கட்டுக்கோப்பின் அடித்தளத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் கட்சியான பி.எஸ்.பி கைகோர்த்து செயல்படும் என்பது யாராலும் ஜீரணிக்க முடியாததாகும்.
மாயாவதியின் இந்தச் செயல் உள்ளபடியே அவரது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய அதிருப்தியை அது ஏற்படுத்தாதது மட்டுமல்ல; அது அவரது கட்சியின் தொண்டர்களிடையே புது உற்சாகத்தைத் தந்துள்ளது. அது மட்டுமல்ல இப்படிப்பட்ட நிலைபாடு உ.பி. வாக்காளர் மத்தியிலும் ஒரு அதிருப்தியை பி.எஸ்.பி கட்சியின் மீது ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதுவும் ஏற்படவில்லை. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பெரிய வெற்றியினை மக்கள் அவரது கட்சிக்கு வழங்கியுள்ளனர். எனவே மாயாவதியின் இந்த யுக்தி அது ஏற்படுத்தியுள்ள விளைவை வைத்துப் பார்த்தால் மிகவும் புத்திசாலித் தனமான ஒன்றாகவே படுகிறது.
முக்கிய கேள்விகளை முன்னிறுத்தும் உ.பி. கூட்டணி
மேலும் மாயாவதி கட்சியின் இந்த நடவடிக்கை பல முக்கியமான கேள்விகளையும் ஜாதிகள் விஷயத்தில் எழுப்பியுள்ளது. ஜாதிகள் சமூக ரீதியாக இன்று வகிக்கும் பங்கு என்ன ? ஜாதிக் கட்சிகள் – அவை உண்மையிலேயே எந்த ஜாதியின் நலனுக்காக என்று உருவாக்கப்படுகின்றனவோ அதற்காகவே செயல்படுகின்றனவா இல்லையா ? இல்லையென்றால் அவை உருவாக்கப் படுவதன் நோக்கம் என்ன ? போன்றவையே அக்கேள்விகள். ஏனெனில் இன்றும் நமது நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல கட்சிகள் இடதுசாரி வலதுசாரி என்ற பாகுபாடின்றி சில கருத்துக்களை உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டுள்ளன. அத்தகைய கருத்துக்களில் ஒன்று ஜாதியமே நமது சமூக அமைப்பில் நிலவும் அடிப்படையான முரண்பாடு என்பது அதனை முதலில் முடிவுக்குக் கொண்டு வந்த பின்னரே வர்க்க ரீதியான முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என அக்கட்சிகளில் சில ‘சித்தாந்த ரீதியாக’ப் பேசவும் செய்கின்றன. அக்கருத்தை மையமாக வைத்தே ஜாதிய ரீதியான இட ஒதுக்கீடு, சமூகநீதி என்ற கோஷங்கள் உரத்து முழக்கப்படுகின்றன. ஜாதிய முரண்பாடே பிரதான முரண்பாடு என்ற கருத்தை எந்தப் பிசிறுமின்றி நமது மாநிலத்தில் முன் வைக்கும் இயக்கம் திராவிடர் கழகமாகும். அந்த இயக்கத்தில் இருந்த தலைவர்களால் பின்னாளில் அமைக்கப்பட்ட கட்சியே திராவிட முன்னேற்றக் கழகம். தேர்தலில் பங்கேற்றால் பகுத்தறிவு, ஜாதி ஒழிப்புக் கருத்துக்களை சமரசமின்றிக் கடைப்பிடிக்க முடியாது என்பதால் பெரியார் ஈ.வெ.ரா திராவிடர் கழகம் தேர்தலில் பங்கேற்காது என்ற நிலை எடுத்தார். தேர்தலில் பங்கேற்று பதவி சுகத்தை நுகரக் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தாதிருப்பது விவேகமல்ல என்ற எண்ணத்தில் அதிலிருந்து பிரிந்து வந்த தலைவர்கள் தி.மு.க வை உருவாக்கினார். எனவே தேர்தல் லாபம் கருதி ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று பல சமரசங்களை தி.மு.க செய்து கொண்டது நடைமுறையில் இக்கட்சிகள் கொள்கை, கோட்பாடு என்று எதையும் பெரிதாகப் பின்பற்றுவதில்லை. ஆட்சியதிகாரத்திற்கு வருவதற்கும் அதில் இருப்பதற்கும் தேவையானது என்று அவர்களுக்குப் படும் எதையும் கூச்சமின்றிச் செய்யக் கூடியவர்களே அவர்கள். இருப்பினும் கொள்கை என்று பேசும் போது ஜாதிய முரண்பாடே சமூகத்தில் உள்ள பிரதான முரண்பாடு என்பதையே அவர்கள் முன் வைப்பது வழக்கம்.
அதைப் போலவே செல்வி.மாயாவதியின் பி.எஸ்.பி கட்சியின் கருத்தும் நிச்சயமாக ஜாதிய முரண்பாடு தான் சமூகத்தின் பிரதான முரண்பாடு என்பதே. ஏனெனில் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி ஒரு ஜாதியைச் சேர்ந்த அனைவருக்காகவும் என்று அமைக்கப்படும் கட்சி ஜாதிய முரண்பாடே பிரதான முரண்பாடு என்று கருதுவதாகத் தான் இருக்க முடியுமே தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
தகர்ந்து போயுள்ள ஜாதியத்தின் அடித்தளம்
ஆனால் இங்கு எழும் கேள்வி ஜாதிய முரண்பாடு அடிப்படைத் தன்மை வாய்ந்த பிரதான முரண்பாடாக எப்போது இருக்க முடியும் ? உண்மையிலேயே அது பிரதான முரண்பாடாக இருக்க வேண்டுமானால் ஜாதியக் கட்டுக்கோப்பு மாறாமல் இருக்க வேண்டும். சமூக ரீதியாக ஒவ்வொரு ஜாதியினர் வகித்து வந்த அந்தஸ்தும் நிலையும் மாறாமல் அப்படியே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலை இன்று எங்காவது நிலவுகிறதா என்பதைப் பாரபட்சமின்றி பார்த்தால் நாம் காண்பதென்ன ? சாதி அமைப்பிலேயே மிக உயர்ந்த நிலை பிராமண வகுப்பினருக்கே. ஆனால் இன்றும், அவர்கள் அந்த நிலையை சமூக ரீதியாக தக்கவைத்துக் கொண்டுள்ளனரா ? அந்த ஜாதியினரைத்தவிர அடுத்து பிரதானமாக மூன்று ஜாதிப் பிரிவினர்கள் தான் அதாவது க்ஷத்திரியர், வைஸ்யர், சூத்திரர் என்று 3 பிரிவினர் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நூற்றுக் கணக்கான ஜாதிகள் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர்ó என்றும் தாழ்த்தப்பட்டோர் என்றும் கூறிக் கொள்கின்றன. வியாபாரம் செய்பவர் அனைவரும் வைஸ்யா ஜாதியினர் என்று எடுத்துக் கொண்டால் அனுதினமும் அந்த ஜாதியில் பலர் சேர்ந்து கொண்டுள்ளனர் என்றே கூற வேண்டி வரும். வியாபாரத் தொழிலில் ஈடுபடுவதாய் அவர்களனைவரும் வைஸ்யர்கள் என்று தானே கருதப்படவேண்டும்? வேலை கிடைக்காத பிற்படுத்தப்பட்டவர் என வரையறுக்கப்பட்ட இளைஞர் பலரும் தங்களிடம் ஒரு சிறு மூலதனம் இருந்தால் கூட பெட்டிக்கடையில் தொடங்கி தள்ளுவண்டி வரையில் ஏதாவது வியாபாரம் செய்யத் தொடங்கிவிடுகின்றனர். கிறிஸ்தவ மிஷனரிகளால் தொடங்கப்பட்ட கல்வி நிலையங்களில் சேர்ந்து கிராமப்புறங்களில் கணிசமான எண்ணிக்கையால் தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்றனர் இன்றும் கற்கின்றனர். கல்வி கற்று அவர்களில் சிலர் ஆசிரியர்களாகவும் பணிபுரிகின்றனர். அரசு வழங்கிய இட ஒதுக்கீடும் அதற்கு உதவி புரிந்தது. இந்நிலையில் அந்த ஆசிரியர்களிடம் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் கல்வி கற்கவில்லையா ? இங்கு ஓதுதலும் ஓதுவித்தலும் பிராமணர் பணியே என்ற ஜாதிய நியதி என்ன ஆயிற்று ? கல்வி கற்பிப்பவர்கள் அதாவது ஓதுபவர்கள் என்ற ரீதியில் இந்த இடத்தில் தாழ்த்தப்பட்டவர் பலர் ஜாதிய ரீதியான தொழில் அடிப்படையில் பிராமணர்களாக நடைமுறையில் ஆகிவிடவில்லையா ? உண்மையில் பார்த்தால் ஜாதியம் சமூகப் பொருத்தமுடைய ஒரு உற்பத்தி உறவாக இன்று நம் சமூகத்தில் இல்லை. ஆனால் ஜாதியப் பழக்க வழக்கங்கள் பழைய சமூக அமைப்பின் மிச்ச சொச்சங்களாக கலாச்சார மேல் கட்டுமானத்தில் இன்னும் இருக்கிறது.
எனவே ஜாதிய அடிப்படை வெளிப்படையாக தகர்ந்து போயுள்ளதையே நாம் பார்க்க முடிகிறது. அவை அப்படியே பழைய உயிரோட்டத்துடன் இருக்க வேண்டுமானால் ஏற்கனவே இந்தியாவில் நிலவிய நிலவுடைமை சமூக அமைப்பு மாறாமல் அப்படியே இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் தான் சமூகத்தின் தேவைகளுக்கான பொருளுற்பத்தி அதிக சிக்கல் இல்லாமல் எளிமையானதாக இருந்தது. தன்னிறைவை அடிப்படையாகக் கொண்ட சலனமற்ற அந்த பொருளுற்பத்தி முறையில் ஒவ்வொரு ஜாதியினைச் சேர்ந்தவர்களுக்கும் என்ன வேலை என்பது ஏறக்குறைய துல்லியமாக வரையறுக்கப்பட்டு இருந்தது.
ஜாதிய அடையாளத்தை மாறாமல் பராமரித்துப் பாதுகாத்தது நிலஉடைமை அமைப்பே
மேலை நாடுகளில் இருந்ததைப் போல் நமது நாட்டில் நிலவுடைமை அமைப்பு நிலவிய காலத்திலும் அதன் உற்பத்தி உறவாக நிலப்பிரபு, பண்ணையடிமை உறவு இருந்ததில்லை. மாறாக நிலம் ஒவ்வொரு கிராமத்திலும் கிராமத்தின் பொதுச் சொத்தாகவே இருந்தது. மக்கட் தொகை அதிகரிக்கும் போது அவர்களுக்கு புதிதாக அதுவரை விவசாயத்திற்குப் பயன்படாதிருந்த நிலப்பகுதிகள் விவசாயம் செய்வதற்காக கிராமத்தாரால் வழங்கப்பட்டன. விவசாயத்திற்குத் தேவையான நீரைச் சேமித்து வைக்கப் பயன்பட்ட குளம் குட்டைகளைப் பராமரிப்பது, அவர்களைப் பாதுகாப்பதற்கென்றிருந்த குறுநில மன்னர்களுக்கும், கிராமத்தின் இதர தேவைகளுக்குமான நிலவரி வசூலைச் செய்வதற்கும் கிராமங்களில் முக்கியமானவர்கள் இருந்தனர். மழை பொய்த்து விளைச்சலில்லாமல் போன கால கட்டங்களில் நிலவரி வசூல் செய்யப்படுவதில்லை. விளைச்சலில் இத்தனை பங்குதான் வரி என்ற நியதி கடைபிடிக்கப்பட்டதால் விளைச்சலில்லாத காலங்களில் மக்களை வரிக் கொடுமை வாட்டி வதைக்கவில்லை. அத்தகைய கிராமப்புற ஆட்சியாளர்களில் தொடங்கி மன்னர் வரை தங்கள் ஆட்சியை நடத்துவதற்குத் தங்களின் வாள் வலிமையையும் தோள் வலிமையையும் மட்டும் நம்பியிருக்கவில்லை. அவற்றுடன் பல நியதிகளையும் சட்டங்களையும் வகுத்து அதனை அனைவரையும் ஏற்றுக்கொள்ளவும் செய்திருந்தனர். வேத இதிகாசங்களும் சட்டநியதிகளும் அன்று கல்வியாகக் கற்பிக்கப்பட்டன. மன்னர் மக்களை ஆட்சி செய்வதற்கு தெய்வீக உரிமை படைத்தவர் என்ற கருத்து முன்வைக்கவும் போதிக்கவும்பட்டது. எனவே தெய்வம் குடியிருக்கும் இடமான கோவிலில் பூஜை செய்வதில் தொடங்கி மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் நியதிகளுக்கு விளக்கம் கூறுவது வரையிலான தொழில்களில் பிராமண வகுப்பினர் ஈடுபட்டிந்தனர். நேரடியாக சமூகப் பொருளுற்பத்திக்கான உழைப்பில் ஈடுபடாத அவர்களை வசதியாக வைத்திருப்பது அனைவரின் கடமை என்பதும் வலியுறுத்தப்பட்டது. அந்தணர்கள், பசுக்கள் மற்றும் பெண்களைப் போரில் கொல்வது அதர்மமென மனுதர்மம் கூறியது. நாட்டை ஆட்சி செய்த மன்னர்களும் அவர்களுக்கு உறுதுணையாக அன்று நிலவிய அரசின் அங்கமாக இருந்த குறுநில மன்னர்கள், அவர்களின் நிரந்தரப் படைப்பிரிவினர் என சமூகத்தின் பொருளுற்பத்தியில் நேரடியாக ஈடுபடாது ஒரு பிரிவினர் இருந்தனர். கிராமங்களில் விவசாயமே மிக முக்கியமான தொழிலாக இருந்தது. அவர்களுக்குத் தேவையான உபகரணங்களான உழவடைக் கருவிகளை உற்பத்தி செய்ய தச்சர், கொல்லர் போன்ற வகுப்பினர் இருந்தனர். கிராம மக்களுக்குத் தேவையான உடைத் தேவை போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்யும் நெசவாளர் பெரும்பாலும் நகர்ப்புறங்களிலேயே வசித்து வந்தனர். போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாததால் வர்த்தகம் குறைந்த அளவே நடைபெற்றது. சாதாரண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் உடைத்தேவைகளை நிறைவேற்றுவதற்கே வர்த்தகம் உதவியது. இதைத்தவிர மேட்டுக்குடி மக்களுக்குத் தேவைப்பட்ட அனைத்து கீழ்நிலை வேலைகளையும் செய்வதற்கென ஒருபகுதி மக்கள் இருந்தனர். இத்தகைய உற்பத்தி முறையில் ஒரு வகுப்பûச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் அவர்களது பெற்றோர்கள் செய்து வந்த தொழிலையே மேற்கொள்வது எளிதாக இருந்தது. அதன் மூலம் அவர்களது ஜாதிய அடையாளம் மாறாமல் பாதுகாத்து பராமரிக்கப்படுவதும் இயல்பான ஒன்றாக இருந்தது. மேற்கண்ட தொழில்களில் ஈடுபடுபவர்களை பரந்த அளவில் பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என வகைப்படுத்துவதும் எளிதாகவும் சாத்தியமானதாகவும் இருந்தது.
தலைகீழ் மாற்றத்தை விளைவித்த வெள்ளையர் ஆட்சி
அதன் பின்னர் வெள்ளையரின் ஆட்சி நிலைநாட்டப்பட்ட பின்னர் தான் சமூக உற்பத்தியின் நிலையில் தலைகீழான மாற்றம் ஏற்பட்டது. நிலவரி விளைச்சலில் இத்தனை பங்கு என்று அதற்கு முன்பிருந்த நிலைமாறி அது பணமாக, விளைந்தாலும் விளையாவிட்டாலும் இவ்வளவு என்று நிர்ணயிக்கபட்டு வசூலிக்கப்பட்டது. அதனை வசூலிக்கப்பதற்கு ஜமீன்தார்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் எந்த பகுதியில் நிலவரி வசூலுக்காக நியமிக்கப்பட்டனரோ அந்தப் பகுதியின் நிலங்கள் அனைத்திற்கும் அவர்களே சட்டபூர்வ உரிமையாளர்களாக ஆயினர். வியாபாரத்தோடு நாடுபிடிக்கும் வேலையிலும் கிழக்கிந்தியக் கம்பெனி ஈடுபட்டதால் அதன் அதிகரித்த செலவினங்களை ஈடுகட்ட நிலவரி அடிக்கடி அதிகரிக்கப்பட்டது. அவ்வாறு அதிகரிக்கப்பட்ட நிலவரியை வசூலித்துத் தராதவர்களிடமிருந்து ஜமீன்தாரி உரிமை பறிக்கப்பட்டது. அதனை வசூலித்துக் தரத் தயாரானவர்கள் புதிய ஜமீன்தாரர்களாக நியமிக்கப்பட்டனர். இதனால் விவசாயிகளின் வாழ்க்கையில் சிக்கலும் நெருக்கடியும் தோன்றியது. அத்துடன் வெள்ளையரால் எந்திரத் தொழிலுற்பத்தி முறை அறிமுகம் செய்யப்பட்டு ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் பல இடங்களுக்குச் செல்ல வேண்டிய தேவையும், அதற்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. அதனால் பழைய ஜாதியக் கட்டுக் கோப்பு இன்னும் பராமரிக்க முடியாததாக ஆகத் தொடங்கியது. தொழிற் சாலைகளில் வேலை செய்ய வேண்டியிருந்த தொழிலாளரை ஜாதிய அடிப்படையில் நியமனம் செய்வது சாத்தியமானதாகவும் இல்லை. அவ்வாறு செய்வதற்கான தேவையும் இல்லை. சமூக உற்பத்திக்குத் தேவையான மூளை மற்றும் திறமை பெற்ற உடல் உழைப்பாளரை உருவாக்குவதற்கு பரந்த அளவில் பொதுக்கல்வியினை அறிமுகம் செய்ய வேண்டியிருந்தது. கல்விக் கூடங்களில் ஜாதியைப் பராமரிப்பதும் மிகவும் சிக்கலான விஷயமல்லா ? வெள்ளையர் அறிமுகம் செய்த கல்வி அறிவு பெற்ற ஒரு பகுதியினர் அவர்கள் அறிந்த கல்வி முறையின் மூலம் கற்றும் கொண்ட ஜனநாயகக் கருத்துக்களை பரப்பத் தொடங்கியதனால் கருத்துத் துறையிலும் ஜாதியம் எதிர்ப்பினைச் சந்திக்க வேண்டியதாயிற்று. பொருளுற்பத்தி ஒரு குறுகிய வட்டாரத்தின் தேவைகளுக்கு என்றில்லாமல் ஒரு பரந்த மக்கட் பகுதியின் தேவைக்கு அதாவது சந்தைக்கு என மாறிப் போனது. இந்நிலையில் ஆலையில் வேலை செய்ய உடல் தகுதிக்கும் திறமைக்குமே முன்னுரிமை என்ற நிலை ஏற்பட்டது. சந்தைக்கான உற்பத்தி என்ற நிலை தோன்றியதால் வர்த்தகம் என்றுமில்லாத அளவிற்கு வளர்ச்சியடைந்தது. வர்த்தகத்திலும் ஜாதிய வேறுபாடுகளைக் கடந்து பல பகுதி மக்கள் ஈடுபடலாயினர். சமூகத்தில் இதற்கு முன்பு இருந்திராத பல தொழில்கள் தோன்றின. சாலை போடுபவர், வாகன ஓட்டுநர், தொழில் நுட்பம் அறிந்தவர், பொறியாளர், மருத்துவர் எனப் பல தொழில்கள் தோன்றின. சமூகத்தின் தேவைதனை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரிவுகளே அர்த்தமுள்ள பிரிவுகளாக ஆகிவிட்டன. பழைய ஜாதியப் பிரிவுகள் காலாவதியானவைகளாக ஆகிவிட்டன.
வர்க்க முரண்பாட்டிற்கு வழிவிட்டு ஒதுங்கிய ஜாதிய உற்பத்தி உறவு
அதன் விளைவாக சமூகத்தின் உற்பத்தி உறவு பரந்த அடிப்படையில் உற்பத்தி சாதனங்களை தங்களது உடைமைகளாக வைத்திருக்கும் முதலாளிகள் அவர்களிடம் கூலி அடிமைகளாகப் பணிபுரியும் தொழிலாளர்கள் என இரு அடிப்படையான பிரிவுகளாக மாறிவிட்டது. பணத்தின் மதிப்பு அதிகரித்து அதனை அடைவதும் நிறைய வைத்திருப்பதுமே சமூக மேன்மையினை வழங்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பணத்தை இந்த ஜாதியினர் தான் ஈட்ட முடியும் இவர் ஈட்ட முடியாது என்ற நிலை இல்லை. ஏமாற்று, மோசடி எதைச் செய்தாகிலும் பணம் ஈட்டலாம் என்ற மனநிலையே வெற்றியைத் தேடித் தரும் என்ற நிலை ஏற்பட்டது. அந்த மனநிலை ஜாதிக்கட்டுப்பாடுகளை கடந்து அனைவரிடமும் ஏற்படலாயிற்று.
மாற்றமிருந்தது – உரியவேகமில்லை
இருப்பினும் எந்திரத் தொழிலுற்பத்தி முறை அன்னியரான வெள்ளையரால் நாம் ஆளப்படும் காலத்தில் தான் நம்மை வந்து அடைந்தது. எனவே அக்கால கட்டத்தில் நம்மை விட தொழில் ரீதியாக வளர்ச்சியடைந்த பல நாடுகளின் பொருட்களைப் பயன்படுத்தும் வெளிநாட்டு குறிப்பாக பிரிட்டிஷ் பொருளுற்பத்தியாளர்களின் சந்தையாக நாம் ஆகிவிட்டோம். அதனால் எந்திரத் தொழிலுற்பத்தி முறை பிற வளர்ச்சியடைந்த நாடுகளில் பலகிப் பெருகியதைப் போல் நமது நாட்டில் பல்கிப் பெருகவில்லை.
ஆனால் விடுதலை பெற்ற பின்னர் எந்திரத் தொழிலுற்பத்தி முறையை வழி நடத்தும் முதலாளித்துவத்தின் வெகு வேகமான வளர்ச்சிக்கு உதவிபுரியும் வகையில் அரசால் ஐந்தாண்டுத் திட்டங்கள் போன்ற திட்டங்கள் தீட்டப்பட்டன. அவை எத்தனை வேகமாக முதலாளித்துவமும் எந்திரத் தொழிலுற்பத்தி முறையும் இன்றைய சூழ்நிலையில் வளர்க்கப்பட முடியுமோ அத்தனை வேகமாக வளர்க்கப்பட உதவின. எந்திரத் தொழிலுற்பத்தி முறை தோன்றிய நாடுகளில் பல்கிப் பெருகிய தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கு நிறையத் தொழிலாளர் தேவைப்பட்டதால் அந்நாடுகளில் விவசாயம் நவீனமயமாக்கப் படுவதற்கான அவசியம் ஏற்பட்டது. ஏனெனில் அத்துறையிலிருந்து தான் நிறையப் பேரை விடுவித்து தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் நமது நாட்டில் விவசாயத் துறையில் நவீனமயம் அத்தனை வேகமாக நடைபெறவில்லை. இதனால் மக்களுக்கிடையிலிருந்த பல பிரிவினைகள் மேலை நாடுகளில் எத்தனை வேகமாகச் காலாவதியாகிப் போயினவோ அத்தனை வேகமாக நமது நாட்டில் காலாவதியாகிப் போகவில்லை. ஆனால் அவை காலாவதியாகும் போக்கு மீள முடியாதபடி தொடங்கப்பட்டு தொடர்ந்து கொண்டுள்ளது.
அதன் விளைவாக விவசாயத் துறையில் கிராமப் புறங்களில் பின் தங்கிய உற்பத்தி முறை நிலவியது. ஆனால் விவசாய உற்பத்திப் பொருட்களும் தேசிய முதலாளித்துவ சந்தைக்கான விற்பனைப் பொருட்களாக மாறி விட்டது. உற்பத்தி நோக்கமும் லாப நோக்கமாக மாறிவிட்டது. அதனால் உற்பத்திச் செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் விதத்தில் நவீனமயம் படிப்படியாக விவசாயத் துறையிலும் வந்து கொண்டுள்ளது. டிராக்டர்களும் அறுவடை இயந்திரங்களும் மிகப் பரவலாக நாடு முழுவதும் பயன் படுத்தப்படுகின்றன. எத்தனை வேகமாக நவீனமயம் வருகிறதோ அத்தனை வேகமாக ஜாதியத்திற்குப் பின்பலமாக இருந்த சமூகப் பின்னணியில் மாற்றம் ஏற்படுகிறது. அதனால் ஜாதியத்திற்கான சாவு மணி அடிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. ஜாதியம் கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்திய போது இருந்த நிலையான ஆண்டுக் கூலிக்கு உழைக்கும், நாவிதர், துணிதுவைப்போர் போன்றோர் இருந்த நிலைமாறி இன்று முடிதிருத்தும் நிலையங்களும், சலவைக் கூடங்களும் அந்த வேலைகளைச் செய்கின்றன. அந்தத் தொழில் தெரிந்தவர்கள் என்ற ரீதியில் அத்தொழிலைத் தலைமுறை தலைமுறையாகச் செய்து வந்தவர்களே அந்நிறுவனங்களில் ஆரம்பத்தில் பரவலாக வேலைக்கமர்த்தப்பட்டாலும் தற்போது வேறு சாதியினரும் அத்தொழிலில் ஈடுபடுகின்றனர். அழகுநிலையங்கள் என அழைக்கப்படும் இடங்களில் சிகையலங்காரம் அதற்கான பயிற்சி பெற்ற அனைவராலும் செய்யப்படுகிறது. இன்றைய நிலையில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் பல சாதியினர் முன்பு செய்து வந்த வேலைகளை தினம் தினம் செய்து வருகிறான். முகச்சவரம் செய்வது ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்களாலேயே செய்து கொள்ளப்படுகிறது. துணி துவைப்பதும் அப்படியே நடைபெறுகிறது. நூலறிவை வளர்ப்பது, படிப்பது, கற்பிப்பது யாருடைய தனியுரிமையாகவும் இல்லை. அனைவரும் தொழில் ரீதியாக நாவிதர்களாக, துணி துவைப்பர்களாக, பிராமணர்களாக அத்தொழில்களை நாமே செய்து கொள்வதன் மூலம் அனுதினமும் இருக்கிறோம். இந்த மாற்றங்கள் மூலம் ஜாதியம் அடிப்படையில் பலத்த மாற்றங்களுக்கு ஆளாகி அவற்றின் சமூக ரீதியான பொருத்தத்தையே இழந்துவிட்டிருக்கிறது.
அடித்தளமும் மேல்கட்டுமானமும்
இருப்பினும் சாதிகள் இன்றும் இருக்கின்றனவே ஏன் ? எந்தவொரு பொருளாதார அடித்தளத்தின் மேல் கட்டுமானமும் அந்த அடித்தளம் மாறியவுடனே அப்படியே மாறிவிடாது. படிப்படியாக அந்த மேல் கட்டுமானம் அடித்தளத்தின் பிடிப்பை இழந்து நொறுங்கித்தகரும். அவ்வாறு காலாவதியாகிப்போன மேல் கட்டுமானம் அழியாதிருப்பது சமூகரீதியாக புதிய பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியையும் போக்கையும் பாதிக்கும். எனவே பல சமயங்களில் காலாவதியாகிப் போன மேல் கட்டுமானத்தின் அழிவைத் துரிதப் படுத்த வேண்டிய கடமை புதிய பொருளாதார அடித்தளத்தை ஆதரிப்பவரையே சாரும். ஆனால் இது தானாகவே நடப்பதல்ல. இது உணர்வு பூர்வமாக மக்களை ஈடுபடுத்திச் செய்ய வேண்டியதாக இருக்கும். ஆனால் நிலவுடைமைப் பொருளாதார அடித்தளத்தை தகர்த்தெறிந்து முதலாளித்துவப் பொருளாதாரம் வளர ஆரம்பித்த அந்தக்காலத்தில்; அவ்வாறு முதலாளித்துவம் வளர ஆரம்பித்த ஐரோப்பிய நாடுகளில் நிலவுடைமை ஏற்படுத்தியிருந்த மக்களுக்கிடையேயான பிரிவினைகளைத் தகர்த்து மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டிடும் விதத்தில் அரசியல், கலாச்சார மேல் கட்டுமானங்களில் தீவிர மாற்றங்களைக் கொண்டுவர முதலாளித்துவ புரட்சியாளர்கள் பாடுபட்டனர். அதில் ஓரளவு வெற்றியும் கண்டனர். அதன் விளைவாக ஜனநாயக, மதச்சார்பின்மைக் கண்ணோட்டங்கள் வளர்ந்தன. ஆனால் இந்தநிலை பாரிகம்யூன் நிகழ்வுக்குப் பின்மாறியது. முதல் முதலாக உழைக்கும் வர்க்க அரசை நிறுவ பாரிஸ் நகரத்துத் தொழிலாளர்கள் பாரிகம்யூன் புரட்சியில் ஈடுபட்டதோடு சில நாட்களேயாயினும் வெற்றிகரமாக பாரிகம்யூனை நடத்த முடிந்தவர்களாகவும் இருந்ததை கண்ணுற்ற காலத்திலிருந்து ஐரோப்பிய முதலாளிகளே மக்களைப் பிளவுபடுத்தும் நிலவுடைமைக் கலாச்சாரத்ததை முற்றாக அழியவிடாமல் பாதுகாத்து அந்தப் பிரிவினையைத் தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கு எதிராகப் பயன் படுத்த முடியுமா என்று பார்க்கத் தொடங்கினர். அவர்கள் அவ்வாறு செய்ததற்கான காரணம் புதிதாகத் தோன்றிய முதலாளித்துவம் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாததாக ஆகியதோடு முதலாளி - தொழிலாளி, வசதி படைத்தவன் - இல்லாதவன் என்ற வர்க்கப் பிரிவினையைக் கூர்மையடையச் செய்தது. மேலும் மக்களின் வாங்கும் சக்தி முதலாளித்துவப் பொருளாதாரத்தின் காரணமாகச் சூறையாடப் பட்டதும் அதன் விளைவாகத் தோன்றிய சந்தை நெருக்கடியும் முதலாளித்துவ சமூக அமைப்பின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதை அவர்களுக்கு முன்னறிவித்தன. அதுமட்டுமல்ல அக்காலகட்டத்தில் விஞ்ஞானப்பூர்வமான கம்யூனிஸக் கருத்துக்களும் தோன்றி வளர்ந்தன. சமூகத்தில் நிலவும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் விஞ்ஞானப் பூர்வமான தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு என்பது அக்கருத்துக்களால் நிலைநாட்டப்பட்டது. அதனால் சமூகப் புரட்சியின் கதவுகள் தட்டப்பட்டுக் கொண்டிருப்பதை அனைத்து முதலாளித்துவ ஆட்சியாளர்களும் உணர்ந்தனர்.
மக்களின் ஒற்றுமையைக் கண்டு அஞ்சிய இந்திய முதலாளி வர்க்கம்
ஐரோப்பிய நாடுகளின் நிலைமையே இப்படிப்பட்டதாக இருக்கும் போது எந்திரத் தொழில் உற்பத்தி முறை மிகவும் தாமதமாக அதுவும் அன்னிய ஆட்சியாளர்களால் அறிமுகம் செய்யப்பட்ட நமது நாட்டின் முதலாளிகளும் அவர்களின் சேவகர்களாகிய முதலாளித்துவச் சிந்தனையாளர்களும் பரந்து பட்ட மக்கள் ஒற்றுமையை உருவாக்க மிகவும் பயந்தனர். அதனால் தான் நமது விடுதலைப் போராட்டம் உரிய வீச்சின்றி சமரசப் போக்கில் நடந்தது. சமரசமற்றவர்களின் கரங்களுக்கு அப்போராட்டத்தின் தலைமை போய்விடக் கூடாது என்பதில் இந்திய முதலாளிகள் மிகவும் அக்கறையுடன் இருந்தனர். அதன் விளைவாகப் பழைய நிலவுடைமைப் பொருளாதாரத்தின் மேல் கட்டுமானமாகிய ஜாதிய, மதவாதப் போக்குளை முற்றாக ஓரங்கட்டும் விதத்தில் அவர்கள் செயல்படவில்லை. மாறாக மக்கள் அனைவரும் ஜாதி, மத வரையறைகளைக் கடந்து உழைப்பவர் என்று வர்க்க ரீதியில் முதலாளிவர்க்கத்திற்கும் அதன் சுரண்டல் ஆட்சிக்கும் எதிராக அணி திரள்வதைத் தடுக்கவும், அவர்களைத் திசை திருப்பவும் ஜாதிப்பிரிவினையைப் பயன்படுத்த நினைத்தனர்.
ஜாதியத்தைப் பேணிவளர்க்கும் இடஒதுக்கீடு
விடுதலை பெற்ற பின்னர் அரசாங்கம் ஜாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களை அமல் செய்தது. அதன் விளைவாகச் ஜாதிய வாதம் ஒரு புதிய வடிவத்தில் இறுக்கமடையத் தொடங்கியது. உண்மையிலேயே தாழ்த்தப் பட்டோருக்கு ஆதரவாக அரசு ஏதேனும் செய்ய விரும்பியிருந்தால் அது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டையும் சலுகைகளையும் வழங்கியிருந்தாலே போதும். பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியவர்கள் என்ற ரீதியில் தாழ்த்தப் பட்டோர் அனைவருமே பயனடைந்திருப்பார். பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்ற நிலை எடுக்கப்பட்டிருந்தால் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்டவர்களிலும் பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் அவ்வாறு மேம்பட்டபின் அந்தச் சலுகையினை அடைய முடியாதநிலை ஏற்பட்டிருக்கும். அவர்களுக்குக் கிடைத்த பலன்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் பொருளாதார ரீதியாக இன்னும் கீழ்நிலையில் உள்ளவர்களைச் சென்றடைந்திருக்கும். அது நியாயமானதாகவும் முûறாயனதாகவும் இருந்திருக்கும். அதை விடுத்து பொருளாதாரம் ஒரு குறியீடாக இட ஒதுக்கீட்டில் கருதப்படாததால் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீட்டின் மூலம் ஏற்கனவே பலன் அடைந்தவர்களும், சிறிய அளவிலேயும் ஏற்கனவே பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் உள்ளோரும் மென்மேலும் பலனடைந்து கொண்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோரிடையேயும் இடஒதுக்கீடு இந்த விதத்தில் தான் பயன்படுகிறது. எனவே இது ஜாதியத்தை ஒழிப்பதற்குப் பதில் மென்மேலும் வளர்க்கும் வேலையையே செய்கிறது. மக்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் என்ற நிலை தங்களை விட்டு அகல வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக அரசின் பட்டியலில் அது இன்னும் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்களை பிற்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை அப்பட்டியலில் இல்லாத பலரால் எழுப்பப்படுகிறது. சில வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆளும் கட்சி அரசியல் வாதிகளுக்குப் பணம் கொடுத்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பிடிக்கவும் செய்துள்ளனர். அதன் விளைவாகக் கடந்த காலங்களில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் நீண்டு கொண்டேபோகிறது. மக்களை மதமாற்றம் செய்து கொள்ள அனுமதிப்பது போல் ஜாதி மாற்றம் செய்து கொள்ள அனுமதித்தால் இட ஒதுக்கீட்டையும், சலுகைகளையும், மனதில் கொண்டு பலர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு மாறவும் செய்வர். இதுவே இன்று நிலவும் யதார்த்த நிலை. இந்த விதங்களில் ஜாதியம் விடுதலைக்குப் பின்னால் ஏற்பட்ட முதலாளித்துவ அரசால் வளர்க்கப்படுகிறது.
உடைமை வர்க்க நலன் பேணுபவையாக ஜாதிக்கட்சிகளும் ஜாதிக் குழுக்களும்
முதலாளித்துவ சமூகம் நெருக்கடிக்கு ஆளாகி பிற்போக்கானதாக ஆகியுள்ள சூழ்நிலையில் அது தரங்கெட்ட அரசியல் மேல் கட்டுமானத்திற்கும் வழி வகுக்கிறது. அதன் விளைவாகவே சுதந்திரத்திற்குப் பிந்திய காலத்தில் அரசியல் வாதிகளிடம் சமூக மதிப்புகள் குறைந்து, பொது நல எண்ணம் மறைந்து அரசியல் ஒரு லாபகரமான தொழில் என்ற நிலை தோன்றியுள்ளது. இதன் விளைவாக தங்களது ஜாதிக் காரர்களின் முன்னேற்றத்திற்காக என்ற பெயரில் ஜாதிக் கட்சிகள் நாடெங்கிலும் உருவாகின்றன. ஜாதிக் கட்சிகளாக உருவாக்கப்படாத கட்சிகளிலும் ஜாதியக் குழுக்கள் உள்ளன. அதனடிப்படையில் அக்குழுக்களின் தலைவர்களுக்கு அவர்களின் ஜாதியினர் எண்ணிக்கை, அது உருவாக்கும் வாக்குவங்கி ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு மந்திரி பதவிகள் தரப்பட்டு ஜாதியவாதம் பேணப்படுகிறது. முதலாளித்துவப் பத்திரிக்கைகளும் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த ஜாதியினர் எத்தனை சதவீதம் உள்ளனர் என்பதைப் பட்டியலிடுகின்றன. அந்த தொகுதிகளில் போட்டியிடும் எந்த ஜாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஜாதிய அணி வகுப்புக்களால் எத்தகைய வாய்ப்புக்கள் உள்ளன போன்ற விஷயங்களை விளக்கமாக எழுதி ஜாதியத்தின் வளர்ச்சிக்கு தூபம் போடுகின்றன.
இவ்வாறு ஜாதிக் கட்சிகளாலும், ஜாதிக்குழுக்களாலும் உண்மையில் பலன் பெறுவது அந்தந்த ஜாதிகளில் உள்ள வசதிபடைத்தவர்களும், பணக்காரர்களுமே. இவ்வாறு திட்டமிட்டு தன்னல நோக்குடன் முறைகேடாக வளர்க்கப்படும் ஜாதியப் போக்குகளுக்கு ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்த ஏழைமக்களும் இரையாகின்றனர். ஜாதியரீதியான போராட்டங்களிலும், கிளர்ச்சிகளிலும், மோதல்களிலும் இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் இரையாவது ஒவ்வொரு ஜாதியையும் சேர்ந்த ஏழை எளிய மக்களே. அவர்களுடைய இழப்புகளினால் பலனடைவது அந்தந்த ஜாதிகளைச் சேர்ந்த உடைமை வர்க்கத்தினரே.
ஜாதியத்திற்கு சாவுமணி அடிப்பது வர்க்கப் போரே
இந்தப் போக்கு மற்றும் ஜாதியத்தின் ஒழிப்பு உண்மையில் நிகழ வேண்டுமானால் இன்று தன்னுடைய வாழ்நாளை நீட்டிப்பதற்காக ஜாதியப் பிரிவினைகளை நாசூக்காக வளர்த்துவரும் முதலாளித்துவ அமைப்பு முடிவுக்கு வரவேண்டும். அதனை முடிவுக்கு கொண்டுவரும் அடிப்படையில் வர்க்கப் போராட்டங்கள் கட்டி எழுப்பப்பட வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் செயல்படுபவர்கள் அப்படிப்பட்ட வர்க்கப் போராட்டங்களை வளர்த்தெடுத்து ஜாதிய வாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பாதையில் செயல்படுவதற்கப் பதிலாக ஜாதிய வாதத்தை வளர்க்கும் அனைத்து இயக்கங்களோடும் கைகோர்த்துச் நிற்கின்றனர். சாதிய வாதத்திற்கு சமூக நீதி முலாம் பூசுகின்றனர். அதன் மூலம் அவர்கள் நடைபெற்று வரும் ஜாதிய வாதக் கச்சேரியில் பக்க வாத்தியம் வாசிப்பவர்களாக ஆகிவிட்டனர். தங்கள் செயல்பாட்டின் மூலம் ஜாதிய வேறுபாடே இந்திய சமூக அமைப்பில் அடிப்படையானது என்ற பொய்யான உணர்வு நிலையை மக்களிடையே ஏற்படுத்துகின்றனர். தேர்தல் அரசியலும், அப்பட்டமான நாடாளுமன்ற வாதமும் அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிச் சென்றுள்ளது.
எனவே நிலவுடைமை சமூக அமைப்பில் இருந்தது போல் ஜாதிகளுக்கிடையே அடிப்படைத் தன்மை வாய்ந்த வேறுபாடுகளும் ஒன்று சேரமுடியாத தன்மைகளும் இன்று இல்லை. ஒவ்வொரு ஜாதியிலும் ஏழைகளும் பணக்காரர்களும் உள்ளனர். இன்று பணம் சேர்ப்பதற்கு அரசியல் ஒரு வழியாக உள்ளது. அரசியல் செல்வாக்கு பெறுவதற்காக மக்களிடையே மேலோட்டமாக இருக்கும் ஜாதிய எண்ணம் முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் அரசியல் வாதிகளினால் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. இதைத் தவிர ஜாதிய அடிப்படையிலான உள்ளார்ந்த ஏற்றத் தாழ்வும் வெறுப்பு மற்றும் கசப்புணர்வும் மக்களுக்கிடையே இல்லை. அப்படியே இருந்தாலும் அது மக்களிடையே முதலாளித்துவ சேவகர்களினால் அவ்வப்போது தங்கள் கைவசம் உள்ள பிரச்சார சாதனங்களினால் உருவாக்கப்படும் பொய்யான உணர்வு நிலையினால் ஏற்படுகிறதே தவிர வேறு எந்த பருண்மையான புற ரீதியான காரணங்களாலுமல்ல. இதனால் தான் இன்று நாம் பார்க்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஜாதிய ரீதியான தாக்குதல்கள் பெரும்பாலும் போர்க்குண மிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என வரையறுக்கப்பட்ட சில ஜாதிகளைச் சேர்ந்தவர்களாலேயே நடத்தப்படுகின்றனவே தவிர பிராமணர்கள் போன்ற உயர் ஜாதிக்காரர்களாலல்ல.
பி.எஸ்.பி. பிராமணர் கூட்டு புட்டுவைக்கும் உண்மைகள்
இந்தப் பின்னணியில் பார்த்தால் உ.பி யில் நடந்துள்ள அரசியல் மாற்றங்களைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடியும். பொருளாதாரமே சமூக அமைப்பில் பிரதான பாத்திரத்தை வகிக்கிறது. அந்த அடிப்படையில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் அந்த ஜாதியினருக்காக அரசியலைத் தொழிலாகக் கொண்டு செயல்படும் பிரமுகர்கள் உருவாகின்றனர். அந்தந்த ஜாதியிலுள்ள வசதி படைத்தவர்களுக்காகவே அவர்களின் செயல்பாடு உள்ளது. அதைப்போல் பிராமணர்களைப் பொறுத்தமட்டில் அவர்களைக் காட்டிலும் பொருளாதார ரீதியாகப் பெரிதாக வளர்ந்து வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள வசதி படைத்தவர்களே போட்டியாளர்களாக உள்ளனர். எனவே அவர்களுக்கு எதிரான போட்டியில் தங்களது அரசியல் ரீதியான வலுவைக் கூட்டிக் கொள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் கட்சியுடன் உறவு வைத்துக் கொள்வதில் அவர்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை.
வசதியிலும் வாய்ப்பிலும் பிராமணர்களுடன் போட்டியிடக் கூடியவர்கள் என்ற விதத்தில் தாழ்த்தப்பட்டோரில் போட்டியாளர்கள் மிகமிகக் குறைவு. இந்த சூழ்நிலையைத் துல்லியமாக தனது அரசியல் அனுபவத்தில் புரிந்து கொண்டவர் மாயாவதி. ஏனெனில் அவர் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனீயத்திற்கும் எதிராகக் கனல்தெறிக்கப் பேசிய காலத்தில் கூட அடிப்படையில் பார்ப்பனர் போன்ற உயர் ஜாதியினரின் கட்சியான பி.ஜே.பியுடன் அணி சேர்ந்து ஆட்சி அமைத்திருக்கிறார். முதல்வராகவும் இருந்திருக்கிறார். அவ்வாறு அவருக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதற்கோ, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டு அவருடன் வைத்துக் கொண்டதற்கோ பிராமண வகுப்பினரிடமிருந்து எதிர்ப்பேதும் பெரிய அளவில் வரவில்லை. அதிலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு தொகுதி மட்டத்தில் பிராமணர் வாக்குகள் எங்கெங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதோ அங்கெல்லாம் பிராமண வேட்பாளர்களுக்கு இடம் கொடுத்ததன் மூலம் மாநில அளவில் உள்ள பிராமணர் வாக்குகளை தனது வேட்பாளர்களுக்குப் பெறுவதில் வெற்றி கண்டுள்ளார். இந்த இரண்டு அணிகளின் சேர்க்கையும் சேர்த்து உருவாக்கிய இந்த அணி வெற்றிபெறும் என்ற தாக்கத்தைப் பயன்படுத்தி ஊசலாட்டத்தில் இருப்போரின் வாக்குகளையும் எளிதாகப் பெற்றுள்ளார்.
தங்களுக்கு அத்தகைய வலுவைத்தரும் கட்சியாக பி.ஜே.பி இருந்திருந்தால் பிராமணர்கள் இன்னும் சந்தோஷத்துடன் அவர்களின் வெற்றிக்காகப் பாடுபட்டிருப்பர். இன்றை நிலையில் வெற்றிக்காக உயர் ஜாதி மக்களின் வாக்குகளை நம்பியிருந்தால் போதாது என்று பி.ஜே.பி கட்சி எண்ணுகிறது. அதனால் பிற்பட்ட வகுப்பினரின் வாக்குகளையும் பெற விரும்புகிறது. ஏனெனில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை பி.ஜே.பி பெறுவது மிக மிகக் கடினம். அதற்காக பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை முதல்வர் பதவிக்கும் முன்னிறுத்தத் துணிந்துள்ளது. அப்படியும் கூட அவர்கள் கணிசமான பிற்பட்டோர் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வெற்றி பெற்று வருவார்கள் என்ற நிலை இல்லை. இச்சூழ்நிலையில் பிராமணர்கள் தயக்கமேதுமின்றி பி.எஸ்.பி.யுடன் அணிதிரண்டுள்ளனர். அதன் விளைவாகத் தற்போது பி.எஸ்.கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடுத்தபடியாக 51 பேர் என்ற பிராமணர்கள் எண்ணிக்கையிலும் உள்ளனர்.
தாழ்த்தப்பட்ட வகுப்புக்காக என்ற பெயரில் மனுதர்மத்திற்கு எதிராக பெருமுழக்கம் செய்த ஒரு கட்சியில் இத்தனை மனு தர்ம உயர் சாதிக்காரர்கள் வெற்றி பெற்றுள்ளது ஜாதியம் இந்திய சமூக அமைப்பில் உள்ள அடிப்படைத் தன்மை வாய்ந்த முரண்பாடல்ல என்பதையே அசலும் நகலும் தோலுரித்துக் காட்டுகிறது.
உயர்வு தாழ்வு என்ற பாகுபாடின்றி தேவைப்பட்டால் எந்த ஜாதியினருடன் எந்த ஜாதியினரும் சேர்ந்து செயல்படமுடியும் என்ற விதத்திலான சாதாரண எளிய வேறுபாடே சாதிகளுக்கிடையில் நடைமுறையில் உள்ளது என்பதும் இதன் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது நடைமுறை ரீதியாக இந்த உண்மையை உணர்ந்துள்ளதன் காரணமாகத்தான் பி.எஸ்.பி கட்சியின் தொண்டர்கள் மாயாவதியின் இந்த முடிவினால் அதிர்ச்சியடைவத்ற்குப் பதிலாக உற்சாகமடைந்துள்ளனர். இந்தச் சாதாரண வேறுபாட்டை அடிப்படைத் தன்மை வாய்ந்த வேறுபாடாகக் காட்டி அதன்மூலம் சமூகத்தில் நிலவும் உண்மையான அடிப்படைத் தன்மை வாய்ந்த முரண்பாடான வர்க்க முரண்பாட்டை மூடி மறைத்து முதலாளித்துவத்தைக் காக்கும் போக்கிலேயே இன்றைய அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன என்பதையும் இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் பிராமணர் பி.எஸ்.பி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது அந்த வகுப்புக்களைச் சேர்ந்த மக்களிடையே பல அபிலாஷைகளை உருவாக்கவே செய்துள்ளது. ஆனால் எவ்வாறு இட ஒதுக்கீடு இத்தனை காலம் அமலில் இருந்தும் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் என வரையறுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த வசதி படைத்தோருக்கே அது பெரிதும் இன்றும் பயன்பட்டுக் கொண்டுள்ளதோ அதைப் போல் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தாழ்த்தப்பட்டோர், உயர்வகுப்பினர் ஜாதிக்கூட்டும் அரசாங்கத்தில் இருப்பதன் மூலம் இவ்விரண்டு வகுப்பிலும் உள்ள வசதி படைத்தோரின் நலனுக்கே பயன்படும். இதே நிலைதான் பிற்பட்ட வகுப்பினரின் கதாநாயகனாகத் தன்னைக் காட்டிக் கொண்ட முலாயம் சிங் யாதவின் ஆட்சியிலும் நடந்தது. ஜாதியின் பெயரில் கட்சிகள் அமைப்பதும், அக்கட்சிகள் ஆட்சிக்கு வருவதும் அன்றும் இன்றும் என்றும் அக்கட்சிகள் எந்த ஜாதியினருக்காக என்ற உருவாக்கப்படுகின்றனவோ அந்த ஜாதியைச் சேர்ந்த அனைத்து மக்களையும் முன்னேற்றவுமில்லை இனிமேல் முன்னேற்றப் போவதுமில்லை. அந்தந்த ஜாதியினைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் கானல் நீரின் பின்னால் தாகம் கொண்டவர் ஓடுவதைப் போல முதலாளித்துவ அரசு இயந்திரத்தின் தன்மையினை அறியாது ஜாதிக் கட்சிகளின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
வர்க்கப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்து சமூக மாற்றத்தைக் கொண்டுவரம் திசை வழியில் அவர்கள் பயணிக்காத வரை அவர்களது அடிப்படையான பிரச்சனைகள் எதுவும் ஜாதிக்கட்சிகளாலும் ஜாதிக் கூட்டுகளாலும் எள்ளளவு கூட தீரப் போவதில்லை. இதனை தங்களது கசப்பான அனுபவத்தின் மூலம் உணரும் வரை மக்களின் இந்த ஜாதி அமைப்புகளின் பாலான எதிர்பார்ப்பும் அபிலாஷைகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆனால் நடைமுறை எந்த பொய்யான உணர்வு நிலையையும் காலங்காலமாக நீடித்து நிலவ அனுமதிப்பதில்லை. எவ்வாறு ஜாதியமே நிலவும் அடிப்படை முரண்பாடு என்ற பொய்யான உணர்வு நிலை உ.பி.யில் பி.எஸ்.பி மற்றும் பிராமணர் கூட்டின் மூலம் அம்பலப்பட்டதே அதைப் போலவே ஜாதிக் கட்சிகளாலும், சாதிக் கூட்டுகளாலும் அந்தந்த ஜாதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் எள்ளளவு கூட தீரப் போவதில்லை என்பதையும் நடைமுறை தவிர்க்க முடியாமல் அம்பலப்படுத்தும்.

1 comment:

  1. தோழர் உங்கள் கட்டுரைகளின் விரிவாக அமைப்பே பலரை படிக்க முடியாமல் செய்கிறது என கருதுகிறேன் இன்னும் கொஞ்சம் சுருக்கு எழுத முடியுமா?

    ReplyDelete