அங்கதம் (Satire) என்பது ஒரு இலக்கிய வடிவம். ஒன்றில் உள்ள மோசமான கோளாறுகளைக் கேலி செய்வதன் மூலம் அவற்றை மக்களின் புலனறிவுக்கு எட்டச் செய்து அதனைச் சரி செய்வதற்கான அல்லது அதற்கான எதிர்ப்பைத் திரட்டுவதற்காகப் பயன்படும் இலக்கிய வடிவம். கேலி செய்வது நகைச்சுவை அம்சத்தைக் கொண்டிருப்பதால் அது பார்ப்பதற்கும் அல்லது படிப்பதற்குமான ஈடுபாட்டைத் தூண்டக் கூடியதாக இருக்கும். அது எத்தனை முக்கியமான இலக்கிய வடிவம் என்றால் மாமேதை ஸ்டாலினே சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 - வது கட்சிக் காங்கிரஸில் முன்வைத்த அவரது அறிக்கையில் சோவியத் சமூக அமைப்பில் உள்ள கோளாறுகளை வெளிக் கொணர்ந்து அவற்றின் தீர்விற்கு வழிகோல அங்கதம் போன்ற கலை இலக்கிய வடிவங்களைப் பயன்படுத்துங்கள் என கலை இலக்கியத் துறையிலிருந்து வந்து காங்கிரஸில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு அறைகூவல் விடுத்தார்.
சார்லியின் - மாடர்ன் டைம்ஸ்
சார்லி சாப்ளின் இவ்வடிவத்தைத் திறம்படப் பயன்படுத்திய திரையுலக மேதைகளில் முதன்மையானவர். ஹிட்லரின் பாசிஸத்தைக் கேலி செய்து அவர் எடுத்த கிரேட் டிக்டேட்டர் என்ற திரைப்படம் ஒரு காவியம். அதைப்போல் முதலாளித்துவ உற்பத்தி முறை முதலாளிகளிடம் உருவாக்கியுள்ள மிக அதிக லாபம் ஈட்டவேண்டும் என்ற பேராசையைக் கேலி செய்து அவர் எடுத்த ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற முதலாளித்துவச் சுரண்டலை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டும் ஒரு மகத்தான படைப்பு. இதுபோன்ற அங்கதத் திரைப்படங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு சித்தாந்தத்தை அல்லது அமைப்பைச் சாடியவை. எனவே பாசிஸ சித்தாந்தத்திற்கும், முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிரான ஒரு எதிர்ப்பு மனநிலையை உருவாக்கும் ஒரு மிக முற்போக்கான வரலாற்றுப் பணியினை அவை ஆற்றின.
அதன்பின்னர் வெளிவந்த அங்கதத் திரைப்படங்களும் எழுத்துக்களும் அத்தகைய பரந்த வட்டத்தைக் கொண்டவையாக இருக்கவில்லை. அமெரிக்காவில் நிக்சனை டிக்ஸன் என்ற பெயரிட்டுக் கேலி செய்த நையாண்டி இலக்கியம் புகழ் பெற்றதாக இருந்தது. அதைப்போல் தமிழ்த் திரைப்படங்களில் தங்கப்பதக்கம் திரைப்படத்தில் சோ ராமசாமியின் நகைச்சுவை டிராக் ஆன அப்பாயிஸம், வைகை வளவன் போன்றவை இடம்பெற்ற திராவிடக் கட்சிகளைக் கேலி செய்யும் அங்கதத் துணுக்கு பலராலும் ரசிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. அதில் நகைச்சுவை மிகுந்திருந்ததே தவிர சீர்திருத்தும் தன்மையோ, எதிர்ப்பு மனநிலையை உருவாக்கும் போக்கோ மிகுந்திருக்கவில்லை.
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அமீர்கானின் தயாரிப்பில் ஒரு மிகச் சிறந்த பல அங்கத அம்சங்களைக் கொண்ட திரைப்படம் இந்தித் திரைவானில் தலை காட்டியுள்ளது. பீப்ளி(லைவ்) என்ற பெயரைக் கொண்ட அந்தத் திரைப்படம் தற்போதைய இந்திய சமூக அமைப்பின் பல கோளாறுகளைத் தோலுரித்துக் காட்டும் ஒரு உயர்ந்த கலைப் படைப்பாக அமைந்துள்ளது. ஒரு வகையில் ‘மாடர்ன் டைம்ஸ்’ கொண்டிருந்த பல தன்மைகள் அதில் உள்ளன.
தற்கொலையின் பின்னணி
நமது நாட்டில் விவசாயிகள் தற்கொலை பல மாநிலங்களில் சமீபகாலத்தில் மிக அதிகம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஆந்திராவில் பருத்தி விவசாயிகளிடம் தொடங்கிய அது மகாராஷ்டிராவின் விதர்ப்பா பகுதிக்கும் பரவியது. அதன் பின்னர் மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் அக்கொடுமை தலை தூக்கியுள்ளது. மொத்தத்தில் லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் கடந்த பத்தாண்டுக் காலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கான முக்கியக் காரணம் கடன் சுமை. இப்பிராந்தியங்களில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்கள் வசம் உள்ள குறைந்த அளவு நிலங்களில் அதிக மகசூல் பெறும் நோக்குடன் வங்கிகள் மற்றும் லேவா தேவிக் காரர்களிடமிருந்து கடன் வாங்கி கட்டுபடியாகும் வருவாயை தீவிரச் சாகுபடி முறை மூலம் விவசாயம் செய்து ஈட்ட எண்ணினர். அதற்காக ஆழ்குழாய்க் கிணறுகள் தோண்டுவது போன்றவற்றைச் செய்தனர்.
ஆனால் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களான பருத்தி, சர்க்கரை போன்றவற்றின் விலைகள் உலகமயப் பின்னணியில் சர்வதேசச் சந்தையில் தீர்மானிக்கப் படுபவையாக இருந்தன. அதனால் விவசாயிகள் தீவிரச் சாகுபடி தொடங்கும் போது இருந்த விலை அவர்கள் விளைச்சலை மகசூல் செய்து விற்கக் கொண்டு சென்ற வேளைகளில் இல்லை. மேலும் குறிப்பாக ஆந்திராவில் பலரும் ஆழ்குழாய்க் கிணறுகள் தோண்டியதால் நிலத்திடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. அதனால் விவசாயிகள் நினைத்தவாறு பாசன வசதியுடன் கூடிய டியவில்லை. இவை தவிர விவசாயத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் இடுபொருள் விலை உயர்வும் விவசாயிகளின் வாழ்க்கையைத் தாங்கொண்ணாச் சுமை நிறைந்ததாக ஆக்குவதில் அதன் பங்கினை ஆற்றியது. இதனால் ஏற்பட்ட கடன் சுமையினால் விவசாயிகள் தங்களது நிலங்களை இழக்க நேர்ந்தது. இதுவே அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டியது . அடுத்து நமது நாட்டின் ஊடகங்கள் செயல்படும் விதம் மிகவும் வித்தியாசமானது; முதற்கண் ஊடகங்கள் ‘தகவல் தொழில் நுட்பப் புரட்சி’ யின் விளைவாகப் பகாசுரத்தன்மை வாய்ந்தவைகளாக வளர்ந்துள்ளன. அவற்றின் செய்திப் பசி அசுரத்தனமாக வளர்ந்துள்ளது. எனவே மக்களை அறிவுமயப் படுத்தும் செய்திகளைக் காட்டிலும் உணர்ச்சி மயப்படுத்தும் செய்திகளைத் தேடி அவை அலைகின்றன. தாம் வெளியிடும், பெரிதுபடுத்திக் காட்டும் செய்திகள் உருவாக்கும் விளைவுகளைப் பற்றி ஊடகவியலாளர்களுக்குக் கவலையில்லை. நமக்கு வியாபாரம் நன்றாக நடந்தால் சரி என்ற மனநிலைலேயே அவர்கள் உள்ளனர். நமது நாட்டின் ஆளும் கட்சியினர் தற்கொலைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைய முயலவில்லை. மாறாக தற்கொலைகளில் எவை பிரபலமாகின்றனவோ அவற்றிற்கு உதவிகளை அறிவித்துப் பிரச்னை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டன. அதனை வெளிப்படுத்தாத ஊடகங்கள் ஆளும்கட்சி எதிர்க்கட்சி அரசியல் வாதிகளிடையே அவர்களின் அறிக்கைகள் மற்றும் பேச்சுகளை மையமாக வைத்துச் சிண்டு முடியும் வேலையையே பிரதானமாகச் செய்கின்றன. அதாவது இப்படிப்பட்ட விசயங்களில் பெரும் திறமை பெற்ற ஊடகவியலாளர்கள் நமது நாட்டின் ஊடகத்துறையில் மிக அதிகம் உள்ளனர். ஆனால் சமூகப் பொறுப்புணர்வுள்ள ஊடகவியலாளர் எவரும் நமது கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தென்படவில்லை.
இந்தப் பின்னணியில் வங்கியில் கடன் வாங்கி அதன் காரணமாகத் தனது நிலத்தை இழக்க நேரும் ஒரு அப்பாவி விவசாயி தனது நிலத்தைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், அவன் உதவி கேட்டுச் செல்லும் ஒரு தாதா குரூரமான வகையில் வேடிக்கையாக நீ தற்கொலை செய்து கொண்டால் அதற்கு ஒரு லட்சம் அரசிடமிருந்து கிடைக்கும் அதை வைத்து நீ உன் நிலத்தை மீட்கலாம் என்று கூறுகிறான். அதனை அந்த அப்பாவி விவசாயியின் அண்ணன் நம்பிவிடுகிறான். அவன் ஒரு சோம்பேறி. தந்திரமாகத் தன் தம்பியை அவன் தற்கொலைக்குத் தயார் செய்துவிடுகிறான். அச்செய்தி ஊரில் பரவுவதற்கு முன்பே ஊடகங்களுக்குத் தெரிந்து விடுகிறது.
அச்சமயத்தில் இடைத்தேர்தல் வருவதால் அதில் போட்டியிடுபவரும் முதலமைச்சராக இருப்பதால் எதிர்க்கட்சி அதனைப் பயன்படுத்த நினைக்கிறது. அதற்காக அவனைக் கட்டாயம் தற்கொலை செய்து கொள்ள வைக்க வேண்டும் என்பது அதன் நிலையாகிவிடுகிறது. ஆளுங்கட்சிக்கு அப்பிரச்னை தலை வலியாகிவிடவே அத்தற்கொலையைத் தடுக்க பல வகைகளில் முயற்சி செய்கிறது. இப்பிரச்னையை ஊடகங்கள் தங்களது வர்த்தகப் போட்டி மற்றும் அரசியல் பின்னணி காரணமாக ஊதிப் பெரிதாக்கி விடுகின்றன.
அதனால் மிகச்சிறிய அக்கிராமம் பெரிதும் பிரபலமடைந்து விடுகிறது. ஊடகவாதிகள், அவன் தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தக் காவல் துறை, அவனை எப்படியாவது தற்கொலை செய்துகொள்ள வைத்துவிட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியின் துண்டுதலுடன் அவனைக்கண்காணிக்கும் தேடியலையும் தாதாக்கள் கூட்டம் என அந்த குக்கிராமம் அரசின் அங்கங்களாலும் அரசியல்வாதிகளாலும் ஊடக விளம்பரம் காரணமாகப் பொது மக்களாலும் நிரம்பி வழிந்து விழாக் கோலம் பூண்டுவிடுகிறது.
வழக்கமாகத் துக்கத்துடனும் வருத்தத்துடனும் பார்க்கப்பட வேண்டிய ‘தற்கொலை’ பிரபலமும், எதிர்பார்ப்பும் நிறைந்த ஒன்றாக ஆகிவிடுகிறது. இறுதியில் விவசாயி எப்படியோ ஊரைவிட்டு ஓடி ஒரு பெரு நகரத்தில், தன் குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாமல் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கி விடுகிறான். அவனைக் கொல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வெடிவிபத்தில் மற்றொரு அப்பாவி ஊடகவாதி உருத்தெரியாமல் இறந்து விடுகிறான். விவசாயியின் குடும்பத்தினர் உட்பட அனைவரும் இறந்துவிட்டது விவசாயியே என்ற முடிவிற்கு வந்து விடுகின்றனர்.
ஆனால் தற்கொலையாக இல்லாமல் அச்சாவு விபத்தின் மூலமாக ஏற்பட்டதாக இருப்பதால் அதற்கு ரூபாய் ஒருலட்சம் வழங்க முடியாது என அரசு கைவிரித்துவிடுகிறது. அவன் பெயரில் விவசாயிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் வாக்குறுதியும் காப்பாற்றப் படவில்லை. இவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வருவோர் பட்டியலில் இல்லாதிருப்பதால் அதற்குரிய அடையாள அட்டையும் விவசாயியின் குடும்பத்திற்குக் கிடைக்கவில்லை.
வலுமிக்க சமூக விமர்சனம்
அரசாங்கம் மீதும் அரசு அதிகாரிகள் மீதும் மக்களுக்கு உள்ள அதிருப்தி எவ்வளவு ஆழமாக உள்ளது என்பது உடல் நலமின்றிப் படுத்த படுக்கையாக இருக்கும் அவ்விவசாயியின் தாய் பேசும் வசனங்கள் மூலம் நன்றாகவே வெளிப்படுத்தப் படுகிறது. உழைக்கும் பெண்ணாக இருக்கும் விவசாயியின் மனைவி ஒரு உழைப்பாளிப் பெண்ணுக்குரிய எதையும் ஒளிவுமறைவின்றிப் பேசும் தன்மையுடனும், போலி மரியாதையினைக் கணவன் உட்பட யாருக்கும் கொடுக்காத தன்மையுடனும் மிக நன்றாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறாள். தன் கணவனின் உயிரும் போய்விட்டது; பணமும் கிடைக்கவில்லை என்று அவள் பேசும் கடைசி வசனம் மிக யதார்த்தமாக நெஞ்சைத் தொடும் வகையில் உள்ளது. ஊடகம் குறித்தும், சில பிரபலமான ஊடகவாதிகள் குறித்தும் அதிகப் பிரமையுடன் உள்ள ஒரு ஊடகவாதி பிரபலமாக அவன் கருதும் ஒரு பெண் ஊடகவாதியிடம் கெஞ்சிக்கேட்டு இணைந்து பணியாற்றும் போக்கில் ஊடகங்கள் எத்தனை சமூகப் பொறுப்பும் உணர்வுகளும் அற்றவையாக உள்ளன என்பதைப் புரிந்து கொள்கிறான். கதாநாயகனாக வரும் விவசாயியைப் போலவே நிலத்தை இழந்தவனாக இருக்கும் மற்றொரு விவசாயி வாழ்க்கையினை நடத்துவதற்காகக் குழிவெட்டும் வேலையை இடைவிடாமல் செய்கிறான்; போதிய உணவின்றிப் பட்டினியில் இறந்து போகிறான். அவனது மரணத்தை அறவே கண்டு கொள்ளாமல் எப்படியோ பிரபலமாகிவிட்ட தற்கொலை செய்யப் போவதாக அறிவிக்கும் விவசாயிக்கே பெரிய முக்கியத்துவம் தரும் ஊடகத்தின் போலித்தன்மை அவனைச் சிந்திக்கவும் விவாதிக்கவும் வைக்கிறது.
தன் மகனே தன்னை எப்போது தற்கொலை செய்வாய் என்று கேட்கும் வேளையில் செயற்கையாக ஊடகங்களாலும், அரசியல் வாதிகளாலும் உருவாக்கப்பட்ட ஒரு சூழ்நிலையே அவனை அவ்வாறு கேட்கவைக்கிறது என்பது புரியாமல் ஒருவகை வேதனை கலந்த எரிச்சலுடன் கதாநாயகன் தன் மகனை அடித்து விரட்டுவது உருக்கமாக இருக்கிறது. ஊடகங்கள் கதாநாயகன் பேசாதிருப்பதற்கு ஒரு விளக்கம் அவன் கழிக்கும் மலம் குறித்துக்கூட ஒரு விளக்கம் என மாற்றி மாற்றி விளக்கங்கள் தருவது சிரிக்க மட்டுமல்ல; சிந்திக்கவும் வைக்கும் ஒரு நல்ல நையாண்டி.
ஒட்டுமொத்தத்தில் தத்ரூபமான இன்றைய விவசாயிகளின் நிலை, சுயவிளம்பரத்தை மட்டும் மையமாக வைத்து அரசாங்கங்களால் அறிவிக்கப்படும் விவசாயிகளுக்கான உதவிகள், அனைத்தையுமே வியாபார யுக்தியாகப் பயன்படுத்தும் ஆரோக்கியமற்ற ஊடக வளர்ச்சி இவையனைத்தும் நகைச்சுவையைக் காட்டிலும் உருக்கத்துடன் பார்ப்பவர் மனதைத் தொடும் விதத்தில் தெளிவாகச் சித்தரிக்கப் படுகின்றன. பூடகமாகவும், உள்பொருளாகவும் எதுவும் கூறப்படவில்லை. பார்ப்பவர் அனைவரும் சளிக்காமல் பார்க்க முடிந்ததாக விறுவிறுப்பாகப் படம் போகிறது. அமீர்கானின் தயாரிப்பில் இது அடுத்ததொரு மைல்கல்.
கட்டுரையில் ஆன்லன் டிரேடிங் மற்றும் உலகமயமாக்கல் இந்திய விவசாயிகளை எப்படி பாதிக்கிறதுன்னு சொல்லவில்லை
ReplyDelete