Powered By Blogger

Monday, December 20, 2010

நீண்டுகொண்டே போகும் இச்சகம் பாடுவோர் பட்டியல்... கல்விமானுக்குரிய கெளரவத்தை நிரூபித்தார் பேரா.கராசிமா



நாடாளுமன்ற ஜனநாயகம் இரண்டு முக்கிய விசயங்களை அடிப்படையாகக் கொண்டது. ஒன்று அதன் நிரந்தர அங்கங்களான போலீஸ், ராணுவம், நிர்வாகம், நீதி அமைப்பு ஆகியவற்றிற்கென்று தனித்தனி அலுவல்களை வகுத்துக் கொடுப்பது. இரண்டு அவற்றில் ஒன்றின் அதிகாரவட்டத்திற்குள் மற்றொன்று மூக்கை நுழைக்கக் கூடாது என்ற அடிப்படையைப் பேணிப் பராமரிப்பது. அதாவது அவற்றின் தனித்தனி அதிகாரங்களைப் பராமரிப்பது.

ஆனால் நடைமுறையில் இந்த இரண்டு விசயங்களும் முழு அளவில் முதலாளித்துவ ஜனநாயகங்கள் எவற்றாலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. நிர்வாகத்தின் தலையீடு குறிப்பாக நீதி அமைப்பின் மேல் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். வளர்ச்சியடைந்தவை என்று கூறப்படும் ஜனநாயகங்களில் அத்தலையீடு அளவு ரீதியாகக் குறைவாகவும் அத்தனை வெளிப்படையாக இல்லாமலும் இருக்கும். வளர்ச்சியடையாத ஜனநாயகங்களில் அளவு ரீதியாக அதிக அளவிலும் பல சமயங்களில் மறைக்க இயலாத அளவிற்கு வெட்டவெளிச்சமாகவும் இருக்கும்.
இந்த மூன்று நிரந்தர அங்கங்களில் முதல் அங்கமான போலீஸூம் இராணுவமுமே உண்மையில் எப்போதுமே அரசாக விளங்கும். இது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விதி. ஏனெனில் அரசுகளின் தோற்றம் வர்க்கங்கள் சமூகத்தில் உருவான பின்பு ஏற்பட்டதே. அளவில் சிறியதாகவும் பொருளாதாரம் மற்றும் அதிகார ரீதியாக வலுவானதாகவும் இருக்கும் ஒரு வர்க்கம் மிகப்பெரும்பான்மையானதாக இருக்கும் மற்றொரு வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கு என உருவாக்கப்பட்டதே அரசு. எனவே அரசு எந்திரங்களில் அடக்குமுறைத் தன்மை வாய்ந்ததாக இருக்கும் காவல்துறையும் இராணுவமுமே மிகமிக அடிப்படைத்தன்மை வாய்ந்தவை. நெருக்கடிச் சூழ்நிலைகளில் அவை மட்டுமே அரசாக இருக்கும் அல்லது ஆகிவிடும்.
இதற்கு அடுத்ததாக இருக்கும் நிர்வாகத்தின், நீதி அமைப்பின் மீதான தலையீடு தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கும். அதன் உச்சகட்டமாக நீதி அமைப்பு நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதாக ஆகும் போக்கு பல ஜனநாயகங்கள் என்று கூறப்படும் சமூக அமைப்புகளில் இப்போதும் இருந்து கொண்டேயுள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் நிர்வாகம் அதிகாரம் படைத்ததாக இருப்பது மட்டுமல்ல. நீதி அமைப்பு உள்பட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கும் அதிகாரமும் அதன் கைவசமே உள்ளதனாலும் ஆகும்.
குடும்பத்தில் தொடங்கி ஸ்தாபனங்கள் வரை யார் கையில் நிதி உள்ளதோ அவரே சக்தி வாய்ந்தவராக இருப்பார் என்பதே எழுதப்படாத நியதி. இந்த நிதி ஆதாரம் மூலமான கட்டுப்பாடு கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளக் கூடிய கட்சிகளுக்குள்ளும் கூட இருக்கும். உரிய விழிப்புணர்வுடன் அப்போக்கு களையப்படாவிட்டால் உண்மையான கம்யூனிஸ்ட் இயக்கமாக வளர விரும்பும் அமைப்புகளும் கூட அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று கூறிக்கொள்ளக் கூடிய பல கட்சிகளில் அனைத்து வெகுஜன அமைப்புகளிலும் செல்வாக்கு மிக்கதாக விளங்குவது தொழிற்சங்கமாகும். ஏனெனில் அக்கட்சியின் மாணவர், இளைஞர், மகளிர், விவசாயிகள் அமைப்புகளைக் காட்டிலும் சந்தா மூலமாகவும் நன்கொடைகள் மூலமாகவும் கட்சிக்குப் பொருளாதார ரீதியில் மிக அதிகம் உதவக் கூடிய அமைப்பு அதுவே. அந்தப்பண வலிமையே அதற்கு வழங்கப்படும் கூடுதல் முக்கியத்துவத்திற்குக் காரணம்.
கல்விமான்கள் காயப்பட்டுவிடக் கூடாது
நிர்வாகத்தின் இத்தகைய தலையீடு குறிப்பாகக் கல்வி சார்ந்த அமைப்புகளைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகவே மருத்துவ, தொழில்நுட்ப, கலைக் கல்வித் துறைகளைப் பராமரிப்பது அரசு நிர்வாகத்தின் நேரடி அதிகாரத்தில் வைத்திருக்கப்படாமல் அவை கல்விமான்களைக் கொண்டே பராமரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு இந்திய மருத்துவ கவுன்சில், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவற்றால் பராமரிக்கப்படும் முறை பெயரளவிலேனும் அமலில் உள்ளது.
இதன் பின்னணியில் உள்ள கண்ணோட்டம் உண்மையிலேயே உயர்வானது. அதாவது எந்திரகதியில் செயல்படும் தன்மைவாய்ந்த அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு அதிகார வர்க்க மனநிலையே மிதமிஞ்சியிருக்கும். உணர்வு படுத்தப்படாத பாமர மக்களை எவ்வகை ஜனநாயக மனநிலையுமின்றி அதிகாரம் செய்து பழகிப்போன அரசு நிர்வாகத்தில் உள்ளோர் சமூகத்தின் அனைத்துப் பகுதியினரையும் அவ்வாறே நடத்த விரும்புவர்.
ஆனால் கல்வித்துறையில் இருப்போர் மற்றும் அத்துறையை நிர்வகிப்போரை அவ்வாறு நடத்துவது அனுமதிக்க முடியாத ஒன்றாகும். எந்திர கதியிலான அதிகாரவர்க்க அணுகுமுறை கல்வித்துறையிலிருக்கும் அறிஞர்களையும் கல்விமான்களையும் நிர்வகிக்க அனுமதிக்கப்பட்டால் அது அவர்களைக் காயப்படுத்திவிடும்; சில சமயங்களில் மன ரீதியாக ஊனமும் கூடப் படுத்திவிடும். அதனால்தான் கல்விமான்களால் கல்வித்துறைகள் நிர்வகிக்கப்படும் நடைமுறை உருவாக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் பார்த்தால் மட்டுமே சமீபத்தில் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு குறித்து தற்போது பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் பல விசயங்களைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது தற்போது ஹிந்து பத்திரிக்கையில் அடுத்தடுத்து வெளிவந்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மையத் தலைவரின் அறிக்கை, அந்த அறிக்கையில் உள்ள சில விசயங்கள் உண்மைக்கு மாறானவை என்று கூறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தரின் இடைத்தலையீட்டு விளக்கம், ஐ.ஏ.டி.ஆர். அமைப்புத் தலைவரின் அறிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கும் அவ்வமைப்பின் இரு உதவித் தலைவர்களின் அறிக்கை ஆகியவற்றையும், அவை வெளியிடப்பட்டுள்ளதன் பின்னணியையும் புரிந்து கொள்ள முடியும்.
தமிழக மக்களில் விசயமறிந்த பகுதியினர் உலகத்தமிழ் ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு மட்டுமே தமிழ் குறித்த எட்டு மாநாடுகளை 1968 - ல் தொடங்கி 1995 - வரை நடத்திக் கொண்டிருந்தது என்பதை அறிவர். ஆனால் சமீபத்தில் கோவையில் நடந்த மாநாடு மட்டும் உலகத்தமிழ் மாநாடு என்ற பெயரில் நடைபெறவில்லை; மாறாகச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடந்தது. இதையும் அவர்கள் அறிவர்.
அதற்கான காரணம் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவரும் அந்நாட்டின் மிகமுக்கியப் பல்கலைக்கழகமான டோக்கியோ பல்கலைக்காகத்தின் ஒய்வுபெற்ற பேராசிரியருமான, உலகத்தமிழ் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கராசிமா அவர்கள் அதனை நடத்த முன்வராததேயாகும். இதனைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இதுவே தமிழின் பெயரில் ஒரு மாநாட்டை செம்மொழி என்ற அந்தஸ்து தமிழுக்கு வழங்கப்பட்டதைப் பயன்படுத்தி செம்மொழி மாநாடு என்ற பெயரில் தமிழக அரசு மிகுந்த பொருட்செலவில் நடத்தியதன் பின்னணி.
ஏன் முன்வரவில்லை
உலகத்தமிழ் மாநாடாக அதனை நடத்த ஐ.ஏ.டி.ஆர் - ன் தலைவர் கராசிமா ஏன் முன்வரவில்லை என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்த நிலையில் ஒரு பொறுப்புள்ள பேராசிரியர் என்ற ரீதியில் அதற்கான தன்னிலை விளக்கத்தை திரு.கராசிமா அவர்கள் ஹிந்து இதழில் 23.07.2010 - ல் ஒரு கட்டுரை மூலம் கூறியிருந்தார். அதாவது இதுபோன்ற சர்வதேச அளவிலான தமிழ் அறிஞர்களைக் கொண்டு அவர்களின் ஆழ்ந்த தீர்க்கமான கருத்துக்களைச் சமர்ப்பிக்கும் தன்மையும் தரமும் வாய்ந்ததாக தமிழ் மொழிக்கான ஒரு மாநாட்டினை நடத்த வேண்டுமானால் குறைந்தபட்சம் ஓராண்டு காலமாவது அதன் தயாரிப்புகளுக்கு வேண்டும்; அந்த அடிப்படையில் அத்தகையதொரு மாநாட்டை 2010 டிசம்பர் மாதத்திலோ அல்லது 2011 ஜனவரி மாதத்திலோ தான் நடத்த முடியும் என்பது அவரது தீர்க்கமான கருத்தாக இருந்துள்ளது. ஆனால் அம்மாநாட்டை நடத்த விரும்பிய தமிழக அரசோ 2011 - ல் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் 2010 ஜீன் மாதத்திற்குள் இதனை முடித்துவிட வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. 6 மாத காலத் தயாரிப்பில் உரிய, அறிவு செறிந்த, கோட்பாட்டுத் தரத்துடன் அதனை நடத்த முடியாது என்று திரு.கராசிமா தமிழக அரசுக்குப் பதிலளித்திருக்கிறார்.
முதல் மாநாடு
அத்துடன் ஒரு கல்விமானுக்கு இருக்கக்கூடிய விருப்பு வெறுப்பற்ற நடுநிலைத் தன்மையோடு அவர் உலகத்தமிழ் ஆராய்ச்சிப் பேரவை தோன்றி வளர்ந்த வரலாற்றோடு இன்று அவ்வமைப்பு எதிர் கொண்டிருக்கும் நிலையையும் தமிழக மக்களுக்கு அக்கட்டுரையின் மூலம் தெளிவுபடுத்தியிருந்தார். 1964 - ம் ஆண்டு புது டெல்லியில் கூட்டப்பட்ட கீழ்த்திசை நாட்டைச் சேர்ந்தவர்களின் சர்வதேச மாநாடு எவ்வாறு 1968 - ல் சென்னையில் நடைபெற்ற முதல் உலகத்தமிழ் மாநாட்டிற்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது என்பதை அவர் அக்கட்டுரையில் கூறியிருந்தார்.
1967 - ல் ஏற்பட்ட சி.என்.அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பிரகடனப்படுத்திய திராவிட எழுச்சியைப் பிரதிபலிப்பதாக அம்மாநாடு இருந்ததையும் அவர் அக்கட்டுரையில் கூறியிருந்தார். அம்மாநாட்டிற்கான அணிதிரட்டல் திராவிட எழுச்சியைப் பிரதிபலிப்பதாக இருந்த போதும் அறிவு சார்ந்த விதத்திலும் அறிவுசால் கோட்பாட்டின் அடிப்படையிலும் அம்மாநாடு எவ்வாறு சிறப்பாக இருந்தது என்பதையும் அதில் எடுத்துக் காட்டியிருந்தார்.
கிடப்பில் போடப்பட்ட தொகுப்புகள்
அதன் பின்னர் மதுரையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற 5 - வது உலகத்தமிழ் மாநாடு தொடங்கி தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து உலகத்தமிழ் மாநாடுகளும் எவ்வாறு அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் நோக்கம் கொண்டவைகளாக இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளாலும் நடத்தப்பட்டன என்பதையும் அவர் யாரையும் புண்படுத்தாத கண்ணியம் மிக்க மொழியில் எடுத்துக் கூறியிருந்தார். இவ்வாறு தமிழ் மொழியின் பெயரிலான மாநாடுகளில் கட்சி அரசியல் செலுத்திய மேலாதிக்கம் மொழி வளர்ச்சியைக் கருத்திற்கொள்ளாது எவ்வாறு கட்சி அரசியலை முன்னிலைப் படுத்தியது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டினையும் முன் வைத்திருந்தார். அதாவது 1995 - ல் தஞ்சையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புகள் எவ்வாறு நூலகங்களுக்கும் மற்ற பிற அறிவுசால் நிறுவனங்களுக்கும் கொடுக்கவும் விற்கவும் படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன என்பதையும் கூறியிருந்தார்.
பெரும் மாநாடுகளைக் காட்டிலும் அதிகப் பலன் தரும் சிறு கூட்டங்கள்
இத்தகைய பெரிய மாநாடுகள் அவ்வப்போது தேவை என்றாலும் மொழி வளர்ச்சி என்ற கோணத்திலிருந்து பார்த்தால் மொழி அறிஞர்களைக் கொண்ட சிறுசிறு கூட்டங்கள் மொழியின் வளர்ச்சிக்கு உண்மையில் உதவுபவையாக எவ்வாறு இருந்துள்ளன என்பதை டொரொன்டோ பல்கலைக்கழகம் நடத்திய தமிழாய்வுக் கருத்தரங்கத்தை மேற்கோள் காட்டி அக்கட்டுரையில் அவர் நிறுவியிருந்தார். அதைப் போலவே சில பட்டறைகள், கருத்தரங்குகள் போன்றவை தமிழின் பல்வேறு துறைகள் குறித்துக் கடந்த பத்தாண்டுகளில் உலகின் பல இடங்களில் சிறிய அளவில் நடத்தப்பட்டாலும் அவை எவ்வாறு மொழியின் வளர்ச்சி என்ற ரீதியில் பயனுள்ளவையாக இருந்துள்ளன என்பதையும் அதில் அவர் கோடிட்டுக் காட்டியிருந்தார்.
அத்துடன் இன்று தமிழக ஆளுங்கட்சிகளின் அரசியல் மேலாதிக்கம் செல்வாக்கு செலுத்துபவைகளாக உலகத்தமிழ் மாநாடு போன்ற பெரிய அளவிலான மாநாடுகள் ஆகிவருவதால் அவை தமிழ் வளர்ச்சியைப் பொறுத்தவரையில் ஆக்கபூர்வமான உயரிய பங்கினை ஆற்ற இயலாதவையாக ஆகி வருவதையும் எடுத்துக்கூறி உலகத்தமிழ் ஆராய்ச்சி மையம் எட்ட வேண்டிய உயரத்தை எட்டி அது ஆற்ற வேண்டிய வரலாற்றுப் பணியினை ஆற்றி முடித்து விட்டது; எனவே இனி அரசியல் தலையீடற்ற கல்வி மான்களைக் கொண்ட ஒரு புது அமைப்பாக அது மாற்றப்பட்டு அதன் செயல்பாடு முழுக்க முழுக்க அறிவு சார்ந்த விதத்திலானதாக ஆக வேண்டும் என்ற அவரது விருப்பத்தினையும் தெரிவித்திருந்தார். அதனைச் செய்ய முன்வருமாறு இளைய தலைமுறை தமிழ் அறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் அறைகூவல் விடுத்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் கூறியிருந்த விசயங்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத வேறொரு நாட்டுப் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற சிறப்புமிகு பேராசிரியர் ஒருவரின் முழுக்க முழுக்க நடுநிலைத்தன்மை வாய்ந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காத ஒன்றாகவே படிப்பவர் அனைவருக்கும் பட்டது. இது எழுதப்பட்ட விதம் எள்ளளவு கூட யாரையும் புண்படுத்தும் தன்மை வாய்ந்ததாகவோ ஒருதலைப் பட்சமானதாகவோ இருக்கவில்லை. மேலும் அரசியல் குறித்த ஒரு குருட்டுத்தனமான வெறுப்பும் அதில் இருக்கவில்லை. 1968 - ல் முதல் உலகத்தமிழ் மாநாட்டின் போது முதல் தி.மு.க. அரசு அமைந்த பின்னணியில் தமிழகத்தில் நிலவிய எழுச்சி மனநிலை குறித்து எந்த எதிர்மறை மனநிலையும் அவரிடம் இருக்கவில்லை என்பதையே அது பிரதிபலித்தது.
ஆனால் எழுத்துக்கள் எவ்வளவு நடுநிலைத் தன்மையைக் கொண்டவையாக இருந்த போதும் சில விசயங்கள் சிலரைச் சுடவே செய்கின்றன. ஏனெனில் அவை உண்மையாய் இருப்பதனால் அவர்களைச் சுடுகின்றன. அதனை 25.07.2010 அன்று தஞ்சைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் இடைத் தலையீட்டு அறிக்கையில் காணமுடிந்தது. அது கராசிமா கட்டுரையின் சில கருத்துக்களைக் கபடத்தன்மை வாய்ந்தது என்று கூடக் குற்றம் சாட்டியிருந்தது.
இடைத் தலையீட்டு அறிக்கை
அதாவது கராசிமா அவரது கட்டுரையில் 1995 - ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் சமர்ப்பிக்கபட்ட கட்டுரைகளைக் கொண்ட தொகுப்புகள் 2005 - ம் ஆண்டே தயாராகிவிட்டது என்றும் அவற்றை வெளியிடுமாறு அடுத்தடுத்துப் பலமுறை தான் கேட்டுக்கொண்ட பின்னரும் கூட வெளியிடப்படாமல் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலேயே வைக்கப்பட்டிருந்தன என்றும் கூறியிருந்தார். அது கபடத்தன்மை வாய்ந்ததாக தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரால் வர்ணிக்கப்பட்டது.
அதாவது அந்தத் தொகுப்புகளின் வெளியீடு குறித்த அரசாணை 23.09.2009 அன்றே வெளியிடப் பட்டுவிட்டதாகவும் அந்த ஆணை வெளியிடப்படுவதற்கு முன்பே அதாவது 28.07.2008 - லேயே தமிழ்ப் பல்கலைக்கழகம் அத்தொகுப்புகளை சர்வதேசத் தமிழாய்வு நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டதாகவும், பள்ளிக் கல்வித்துறை 22.02.2010 அன்று அன்றைய அரசாணையின் மூலம் 23.09.2009 - ம் தேதிய அரசாணையை அமலாக்கத் தொடங்கி விட்டதாகவும் துணைவேந்தர் தனது விளக்கத்தில் கூறியிருக்கிறார்.
எழும் கேள்விகள்
இது தவிர்க்க முடியாமல் பல கேள்விகளைப் படிப்பவர் மனதில் ஏற்படுத்துகிறது. அதாவது ஒரு அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பே அதனை விநியோகிக்க முடியுமென்றால் அவ்வரசாணையைக் குறிப்பிட்டுக் காட்டுவதன் நோக்கமென்ன? பரந்த அளவில் அனைவரிடமும் அத்தொகுப்புகள் சென்றுசேர வழிவகுப்பது 22.02.2010 அரசாணையே. அந்த ஆணை முதலமைச்சர் உலகத்தமிழ் மாநாடாக இம்மாநாட்டை நடத்த கராசிமாவைக் கேட்டுக் கொண்டதற்குப் பின்பு அதாவது 2010 ஜனவரிக்குப் பின்பு தான் வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே 23.09.2010 அரசாணை இல்லாமலே கூட தொகுப்புகளை அமைப்புகளுக்கு விநியோகிக்க முடியும் என்பது 28.07.2008 அன்று ஐ.ஏ.டி.ஆர். அமைப்பிற்கு தொகுப்புகள் விநியோகிக்கப் பட்டதிலிருந்தே தெளிவாகிறது. அப்படியிருந்தும் 2005 - ல் கராசிமா கேட்டுகொண்ட போதே அவை வெளியிடப்படாததன் காரணம் என்ன?
அதாவது அரசு இதுபோன்ற தமிழாராய்ச்சி நூல்களை வெளியிடுவதில் அக்கறையுடன் தான் இருந்தது என்பதைக் காட்டுவதற்கு அரசாணை குறித்துக் கூறுவது அவசியமாக இருக்கிறது என்பதற்காகவே இங்கு அரசாணை குறிப்பிடப்படுகிறது என்றே தோன்றுகிறது. மேலும் தமிழ் வளர்ச்சிக்காகவே இருக்கும் ஒரு பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நூல்களை வெளியிடுவதில் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தாமதித்தது ஏன் என்ற கேள்வி இயற்கையாகவே நம் மனதில் எழுகிறது. ஒட்டுமொத்தத்தில் இத்தகைய தொழில்நுட்ப ரீதியிலான பதில்கள் இதுபோன்ற மாநாடுகள் தமிழ் வளர்ச்சிக்கென அடிப்படையில் நடத்தப்படுவதில்லை; மாறாக அரசியல் செல்வாக்கை மேம்படுத்தும் நோக்குடனேயே நடத்தப்படுகின்றன என்ற கருத்தை ஆதாரப்பூர்வமாக மறுப்பனவாக இல்லை.
அடுத்தபடியாக 7.8.2010 - ல் செம்மொழி மாநாட்டின் துணைத் தலைவர்கள் இருவர் திரு.கராசிமா அவர்களின் கட்டுரைக்கு மறுப்பளிக்கும் கட்டுரை ஒன்றினை ஹிந்து நாளிதழில் எழுதியிருந்தனர். அக்கட்டுரை இந்த மாநாடு எத்தனை சிறப்பாக நடைபெற்றது என்ற புகழாரத்தோடு தொடங்கியது. தமிழகத்தில் உலகத்தமிழ் மாநாடு எப்போதுமே இணைத்தன்மை வாய்ந்த இரு கூட்டங்களாகவே நடைபெற்றுள்ளது; அதாவது ஒருபுறம் அறிஞர் பெருமக்களைக் கொண்ட கூட்டமாகவும் மறுபக்கம் பொதுமக்கள் கலந்து கொள்ளும் கூட்டமாகவுமே அனைத்துக் காலங்களிலும் நடைபெற்றுள்ளது என்று அக்கட்டுரை கூறுகிறது. மேலும் இந்த முறை அறிவுசால் நடவடிக்கைகள் பொது நிகழ்ச்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட விதத்திலேயே நடைபெற்றன என்றும் அக்கட்டுரையில் அவ்விரு அறிஞர் பெருமக்களும் எடுத்துரைத்துள்ளனர்.
மேலும் அவ்விரு துணைத் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.வி.சி.குழந்தைசாமி அவர்கள் 1999 பிப்ரவரி 18 - ம் தேதிய கடிதத்தின் மூலம் தமிழ் நாட்டில் 9 - வது உலகத்தமிழ் மாநாட்டினை நடத்த முன்வருமாறு கராசிமாவைக் கேட்டுக் கொண்டதாகவும் அரசியல் காரணங்களுக்காக இம்மாநாடுகள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்றன என்ற வறட்டுப்பிடிவாதக் கண்ணோட்டத்துடன் இரண்டு முறை தமிழகத்தில் மாநாடுகள் நடத்துவது சரியில்லை என்று கராசிமா கூறிவிட்டதாகவும் கூறியுள்ளார். அத்துடன் முதல்வரே கேட்டுக் கொண்ட நிலையிலும் இம்மாநாட்டிற்கு ஒத்துழைப்புத்தர கராசிமா மறுத்துவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
நிரந்தரக் கட்டிடம் என்ற குதிரையின் முன் கட்டப்பட்ட காரட்
தமிழக அரசு முன்வைத்த ஜூன் 2010 - க்கும் கராசிமா முன்வைத்த டிசம்பர் 2010 - க்கும் இடையிலிருக்கக்கூடிய 6 மாத காலம் மிகச்சிறிய காலமே; அது உலகத்தமிழ் மாநாடு நடத்துவதை மறுப்பதற்குப் போதிய காரணம் ஆகாது என்றும் தமிழக அரசினை உலகத்தமிழ் ஆராய்ச்சி அமைப்பிற்கென ஒரு நிரந்தரக் கட்டிடத்தை கட்டித்தருமாறு கூட இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்யும் அழைப்பினை ஏற்றுக் கொள்வதன் மூலம் செய்திருக்க முடியும் என்றும் டாக்டர் வி.சி. குழந்தைசாமி கூறியுள்ளார். அத்தகைய உறுதி மொழியை அரசு தரத் தயாராக இருந்தும் கராசிமா அதனைத் தனது நடவடிக்கை மூலம் பெறத் தவறியதோடு அது நிறைவேறவிடாமலும் செய்து விட்டார் என்றும் அக்கட்டுரையில் கட்டுரையாளர் இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் மாநாடு நடத்த ஒத்துழைப்புத் தராதது கராசிமா - வின் தனிப்பட்ட முடிவு; அத்தகைய முடிவினை எடுக்க அவருக்கு அனுமதி வழங்கியது யார்? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். இவ்விசயத்தில் அவர் மத்தியக் கவுன்சிலையும் நிர்வாகக் கவுன்சிலையும் கலந்து ஆலோசிக்கவில்லை; இந்நிலையில் மாற்றப்பட வேண்டியது உலகத்தமிழ் ஆராய்ச்சி அமைப்பல்ல; அதன் தலைமைப் பொறுப்பிலிருக்கும் கராசிமா - வே என்றும் கூறியுள்ளனர்.
இவர்களது கூற்றிலிருந்தும் தெரிய வருவது பேராசிரியர் கராசிமா எப்போதுமே மொழி வளர்ச்சி என்ற கண்ணோட்டத்திலேயே உறுதியாக இருந்திருக்கிறார்; அரசியல் செல்வாக்கிற்காக மொழியின் பெயரில் நடைபெறும் மாநாடுகள் திசைதிருப்பப் படும்போது ஒரு கல்விமான் என்ற ரீதியில் அதன் பாலான அவருடைய தயக்கத்தினைத் தவறாமல் அனைத்து சமயங்களிலும் தெரியப்படுத்தியே வந்திருக்கிறார் என்பதே. மேலும் இக்கட்டுரையாளர்கள் மாநாடு மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியினைத் தருவதாகவும் அமைந்தது என்று கூறியுள்ளதும் பொருளற்றதாக உள்ளது.
ஒரு மாநாட்டில் மக்கள் மகிழ்வுறுகிறார்களா என்பது குறித்துக் கவலைப்பட வேண்டியது அவர்களிடமிருந்து எப்படியாவது வாக்குகளைப் பெற வேண்டும் என்று ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்குகளாகக் காத்திருக்கும் அரசியல் வாதிகளே தவிர கல்விமான்கள் அல்ல. உலகத்தமிழ் ஆராய்ச்சி மையம் என்று பெயர் வைத்துக்கொண்டு தொடர்ந்து இரண்டுமுறை தமிழகத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு மாநாடு நடத்துவது மொழி வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தை முதன்மையாகக் கொண்டிருப்பவர்களுக்கு உடன்பாடின்மையை ஏற்படுத்தியதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?. ஒன்றைக் கேட்டுக் கொள்பவர் யாராக இருந்தாலும் கல்விமான்களைப் பொறுத்தவரை அவர்கள் அறிவு எதைச் சரியயன்று சொல்கிறதோ அதையே மனதிற்பதித்து யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்என்றே இருக்க வேண்டும். அதுவே அறிவுசால் பெருமக்களுக்கு இருக்கவேண்டிய ஆனால் தமிழகக் கல்விமான்களுக்கு இல்லாமல் போய்விட்ட இலக்கணம்.
எது ஜனநாயக நடைமுறை
மத்திய கவுன்சிலையும் நிர்வாகக் குழுவினரையும் அவர் கலந்தாலோசித்தாரா என்ற கேள்வி ஏதோ ஜனநாயக நடைமுறையைக் கராசிமா கடைப்பிடிக்கவில்லை என்ற தொனியில் எழுப்பப்படுகிறது. மாநாட்டை நடத்தக் கேட்டுக் கொள்பவர் இவ்விரு கவுன்சில்கள் ஒன்றின் உறுப்பினராக இருந்து அவர் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்து மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பதாக உள்ளது என்பதை நிரூபிக்கும் விதத்தில் பெரும்பான்மையினரிடம் ஒப்புதல் பெற்றுக் கூட்டத்தைக் கூட்ட வற்புறுத்தும் போது அதற்கு கராசிமா மறுத்திருந்தால் அப்போது அவரை ஜனநாயக நடைமுறையை மீறியவர் எனக் கூற முடியும்.
மாறாக இக்கட்டுரையில் செம்மொழி மாநாட்டின் உதவித் தலைவர்கள் இருவரும் கூறும் விதத்தில் வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பெரும்பான்மைக் கவுன்சில் உறுப்பினர்களிடம் கையயாப்பம் பெற்று அதைத் தமிழக முதல்வரிடம் கொடுத்த அவர்கள் ஜனநாயக முறைப்படி தலைவர் கராசிமாவிடம் அதைக் கொடுத்துக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கக் கேட்டிருக்கலாமே?. மேலும் இதே கருத்தை அது தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவருடையதாகவும் இருந்திருந்தால் தமிழ் நாட்டைச் சேர்ந்திராத வேறொரு நாட்டு அறிஞர் மூலமாகக்கூடக் கூற வைத்திருக்கலாமே. அப்போது அது விருப்பு வெறுப்பற்ற ஒன்று; நியாயத்தைத் தவிர வேறெதற்கும் அடிபணியாதத் தன்மையைக் கொண்டது என யாரும் சொல்லாமலேயே அனைவராலும் புரிந்து கொள்ளப் பட்டிருக்குமே.
இறுதியாக அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் இவ்விருவரும் கூறியிருக்கும் கருத்தான மாற்றப்பட வேண்டியது ஐ.ஏ.டி.ஆர். அமைப்பல்ல அதன் தலைவரே என்ற கருத்து எத்தனை ஜனநாயகப்பூர்வமானது? இதனை முன்வைப்பதற்கு எத்தனை பொதுக்குழு நிர்வாகக்குழு உறுப்பினர்களின் வாய் மூலமான அல்லது எழுத்து மூலமான ஒப்புதல்களை இவர்கள் பெற்றனர் என யாரும் கேட்கலாமல்லவா?
உண்மையில் அவரது கட்டுரையின் மூலம் ஒரு கல்விமான் என்ற ரீதியில் கராசிமா உயர்ந்து நின்றார் என்றால் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இடைத்தலையீட்டு அறிக்கை மற்றும் 7.8.2010 - ல் ஹிந்து நாளிதழில் வெளியான செம்மொழி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உபதலைவர்களின் கட்டுரை ஆகியவற்றைப் படித்த பின்னர் படிப்பவர் மனதில் விருப்பு வெறுப்பற்ற நடுநிலைத்தன்மை மற்றும் அறிவுசால் போக்குகளில் சிறிதளவும் சமரசம் செய்துகொள்ளாத கல்விமானாக கராசிமா முன்பிருந்ததைக் காட்டிலும் இன்னும் உயர்ந்தே நிற்கிறார்.
மொத்தத்தில் நாம் இக்கட்டுரையின் ஆரம்பப் பத்திகளில் விவரித்த நடுநிலை அமைப்புகளின் மீதான அரசு நிர்வாகத்தின் தலையீடு கராசிமா விசயத்திலும் கையாளப்பட்டுள்ளது என்பதே இதன்மூலம் நிரூபணமாகிறது. நூற்றுக்கணக்கான கோடிகளை சுயவிளம்பர நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட செம்மொழி மாநாட்டிற்குச் செலவு செய்த தமிழக அரசு அதில் பத்தில் ஒரு பகுதியே ஐ.எ.டி.ஆர். அமைப்பிற்கு நிரந்தரக் கட்டிடத்தை கட்டித்தரப் போதுமானதாக இருந்தபோதும் நிபந்தனையின்றி அதனைக் கொடுக்க முன்வரவில்லை. அதைக் கொடுப்பதற்கு முன் நிபந்தனையாக மொழி வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி சுயலாப அரசியல் நோக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மாநாடு நடைபெற அதன் தலைவர் அனுமதி வழங்க வேண்டும் என்பதையே முன்வைத்துள்ளது.
எழுதப்படாத நியதியாகிவிட்ட சுயவிளம்பரம்
தன்வசமுள்ள நிதி ஆதாரத்தைக் கொண்டு உலகத்தமிழ் ஆராய்ச்சி மையம் போன்ற அமைப்புகளுக்குக் கட்டிடம் கட்டித் தருகிறேன், இடம் ஒதுக்குகிறேன் ஆனால் இதையயல்லாம் எப்போது செய்வேன் என்றால் எனது சுயவிளம்பரத்திற்குப் பயன்படும் போது மட்டுமே என்று நிர்ப்பந்தம் கொடுத்துப் பணிய வைக்கவும் அத்தகைய அதிகார அத்துமீறலுக்கும் பண வலிமைக்கும் அடிபணியாத ஒரு கல்விமான் மீது கல்விமான்களைக் கொண்டே குற்றம் சுமத்தச் செய்யவும் தன்னால் முடியும் என்று அரசு நிர்வாகம் காட்டியுள்ளதே இங்கு நிரூபணம் ஆகிறது.
இந்த மாநாடு மட்டுமல்ல பெரிய மனிதர்களுக்கென எடுக்கப்படும் அனைத்து விழாக்களும், மணி மண்டபங்களும் கூட அரசியல் ஆதாய நோக்குடன் சுயவிளம்பரம் செய்வதற்கு வசதியாகவே தமிழகத்தில் காலங்காலமாக நடைபெறுகின்றன. நெஞ்சு வரையிலான சிலைகளும் வெட்டி ஒட்டப்பட்ட அந்த அறிஞர்கள் குறித்த பத்திரிக்கைச் செய்திகளும் மட்டுமே அந்த மணி மண்டபங்களில் பெரும்பாலும் உள்ளன.
அடுத்து அவற்றைக் கட்டியது யார் ஆட்சியில் எந்த முதல்வர் அதனைத் திறந்து வைத்தார் என்பன போன்ற விசயங்கள் அங்கு இடம்பெறுகின்றன. விழா எடுக்கவோ சிலை வைக்கவோ ஒரு தலைவர் கிடைத்தால் அதன்மூலம் மூன்று வகை ஆதாயங்கள் ஆளுங்கட்சிக்குக் கிடைக்கின்றன. ஒன்று விழா மூலமான விளம்பரம், இரண்டு அதை யார் நிறுவினார்கள் என்ற நிரந்தரக் கல்வெட்டு அல்லது அடிக்கல் மூலமான நிரந்தர விளம்பரம், மூன்று அந்தத் தலைவரது தொண்டர்களின் ஆதரவு என்ற இந்த மூன்று வகை ஆதாயங்கள் கிடைக்கின்றன.
மன்னராட்சிக் காலத்தில் அவர்கள் குறித்த ஒரு பிரமிப்பை மக்களிடையே உருவாக்க வேண்டும் என்பதற்காக அரசர்கள், பல திருவிழாக்களையும் அவர்கள் வீட்டு வைபவங்களையும் நடத்தினர். அதனை ஒத்த விதத்திலேயே மொழியின் பெயரில் நடத்தப்படும் மாநாடுகளும், தலைவர்களை நினைவுபடுத்துவது என்ற சாக்கில் அவர்களுக்காகக் கட்டப்பட்டும் மண்டபங்களும் தற்போதைய ஆட்சியாளர்களால் உருவாக்கப்படுகின்றன. அதாவது அவற்றைக் கண்டு மக்கள் பிரமிக்கவேண்டும் என்ற மனநிலையுடனேயே செய்யப்படுகின்றன.
உண்மையிலேயே தமிழுக்காக இருப்பவர்கள் என்று காட்டுவதற்காக நடுநிலைத்தன்மை வாய்ந்தவர்கள் சிலரை அவர்கள் உருவாக்கும் அமைப்புகளுக்குப் பொறுப்பேற்பவர்களாக நியமிக்கின்றனர்; அவர்களைத் தங்களது செல்வாக்கு, பண, அதிகார பலங்களாலும் பதவி ஆசையை ஊட்டியும் தாங்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வருபவர்களாக ஆக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். பணத்தின் மூலம் அரசு நிர்வாகம் அரசின் பிற அங்கங்களின் மீது மேலாதிக்கம் செலுத்துகிறது. அதைப்போல் ஐ.ஏ.டி.ஆர். போன்ற அமைப்புகளின் மீதும் அது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
அதற்கு அடிபணியாது நிமிர்ந்து நின்று கல்வி மானுக்குரிய கம்பீரத்தையும் கண்ணியத்தையும் உண்மையைத் தவிர வேறெதற்கும் அடிபணியாத உறுதித் தன்மையையும் தற்போது அதனை விட்டு விலகிச் சென்றுள்ள பேராசிரியர் நொபுரு கராசிமா பிரதிபலித்துள்ளார். அதன்மூலம் உண்மையிலேயே அறிவுசால் பெருமக்களைத் தவிர வேறுயாருக்கும் மசிந்து கொடுக்காத மாவீரனுக்குரிய மரியாதையைப் பெற அருகதையுள்ளவராக அவர் ஆகிறார்.
தமிழகத்தின் தற்போதைய வருந்தத்தக்க நிலை எதுவென்றால் அத்தகைய கல்விமான்களைப் பாராட்டக் கூடிய கல்விமான்கள் யாரும் இல்லாமல் போய்விட்டனர் என்பதே. அது மட்டுமல்ல நன்கறியப்பட்ட கல்விமான்கள் சிலரும் கூட அவர் எடுத்த நிலையை விமர்சிக்க ஆட்சியாளர்களுக்குப் பயன்படத் தயாராகவும் உள்ளனர் என்பதே. இல்லாவிடில் அவர் மாநாட்டை உடனடியாக நடத்த முன்வராததற்குக் காரணங்களாக முன்வைத்த -
1. அவை அரசியல் உள்நோக்கோடு நடத்தப்படுகின்றன.
2. அதற்குப் பயன்படும் விதத்தில் தமிழ்நாட்டில் இருமுறை தொடர்ந்து நடத்தத் தேவையில்லை.
3. இதுபோன்ற மாநாடுகளைத் தமிழ் வளர்ச்சிக்கு என்ற ரீதியில் நடத்தக் கால அவகாசம் தேவை.
4. உலக சம்ஸ்கிருத மாநாடு போன்றவை நடத்த இரண்டாண்டு கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
5. அரசியல் விளம்பரத்திற்குப் பயன்படும் தற்போது நடைபெற்றது போன்ற பெரிய மாநாடுகள் நடத்துவதற்குப் பதிலாக குறைந்த எண்ணிக்கையில் சிறந்த கல்விமான்களைக் கொண்டு குறைந்த செலவில் பல கூட்டங்கள் நடத்தலாம். மொழி வளர்ச்சி என்ற ரீதியில் அவை மிகவும் பலன் தரக் கூடியவைகளாக உள்ளன -
என்பன போன்ற விவாதங்களுக்கான ஆக்கப்பூர்வமான எதிர்க்காரணங்களை அறிவு ஜீவிகளுக்குரிய இலக்கணத்தோடு முன்வைத்திருப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக பதிலளித்த கல்விமான்கள் அதைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக
1. அவரே பதவியை விட்டு அகற்றப்பட வேண்டியவர்.
2. உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்திற்குக் கட்டிடம் கிடைப்பது அவரால் கெட்டுப்போய் விட்டது.
3. யாரைக் கேட்டு மாநாடு நடத்த முன்வராத முடிவை எடுத்தார்.
என்ற கேள்விகளையே அந்தக் கல்விமான்கள் எழுப்பியுள்ளனர். உண்மையில் இக்கேள்விகள் அரசு நிர்வாகத்தில் இருப்போர் எழுப்பும் கேள்விகளை ஒத்தவையாக இருக்கின்றனவேயன்றி மொழி மற்றும் அறிவு வளர்ச்சியில் அக்கறை கொண்ட கல்விமான்கள் எழுப்பும் கேள்விகளைப் போன்றவையாக இல்லை.
ஜனநாயக உலகம் முழுவதும் அரசு நிர்வாக எந்திரத்தால் கல்விமான்களும் அறிவாளிகளும் காயப்படுத்தப் பட்டுவிடக் கூடாது என்பதற்காக கல்வி நிறுவனங்களை ஆட்சி செய்யும் அமைப்புகள் கல்விமான்களைக் கொண்டே நடத்தப்பட வேண்டும் என்ற நியதியை வலியுறுத்துகையில் நமது மாநிலத்தில் ஊரறிந்த கல்விமான்களே சக கல்விமான் விசயத்தில் அரசின் நிர்வாக எந்திரம் போல் செயல்படும் அவலநிலை நிலவுகிறது.
கல்விமான் போர்வையும் அதிகாரவர்க்க மனநிலையும்
இதுதவிர பேரா.கராசிமா அவர்கள் வேறு மொழி பேசுபவர்; வேறொரு நாட்டைச் சேர்ந்தவர். தமிழின் பால் அவருக்குள்ள ஈடுபாடு மற்றும் ஆர்வம் காரணமாக உலகத்தமிழ் ஆராய்ச்சி மைய அமைப்பிற்குத் தலைவராக இருக்க இசைந்து செயல்பட்டவர். இங்குள்ள அரசியல் விசயங்கள் அவரது அக்கறைக்கு அப்பாற்பட்டவை. உண்மையான கல்விமான்கள் ஒப்புக்கொள்ளக் கூடிய மிகச் சரியான காரணங்கள் இருந்தாலொழிய பதவி நீக்கம் செய்யப்பட வேண்டியவர் அவரே என்பது போன்ற எதிர்மறைக் கருத்துக்களை முன்வைப்பது சரியான பண்பல்ல என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய விசயம். ஆனாலும் தமிழகக் கல்விமான்கள் அது போன்ற கருத்துக்களைத் தலை நிமிர்ந்து முன் வைக்கின்றனர். இப்போக்கு எங்கே பாரதிக்கு முன்பிருந்த புலவர்கள் அரசர்களுக்கு இச்சகம் பாடிக் காலம் தள்ளினார்களே அத்தகைய சூழ்நிலைக்குத் தமிழகத்தைத் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment