சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தி பொருளாதார வட்டாரங்களில் மிகமுக்கியமாகப் பேசப்படுகிறது. அதாவது சீனா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக வளர்ந்துள்ளது என்பதே அச்செய்தி. குறிப்பாகப் பல்லாண்டு காலமாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கிய ஜப்பான் நாட்டைத் தாண்டியதாக சீனாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி அமைந்துள்ளது; அதாவது சீனாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆண்டிற்கு 10 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. அதே சமயத்தில் ஜப்பானின் வளர்ச்சியோ 2 சதவிகிதத்தை எட்டிப்பிடிக்க முடியுமா என்ற ஏக்க நிலையிலேயே உள்ளது போன்றவை அதன் முக்கிய அம்சங்கள்.
சீனாவின் ஒட்டுமொத்த உற்பத்திக் குறியீடு 1337 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவிற்கு உள்ளது. ஆனால் ஜப்பானின் ஒட்டுமொத்தப் பொருளுற்பத்தி குறியீடோ 1288 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவிலேயே உள்ளது. இதே வேகத்தில் வளருமானால் 2027 - ம் ஆண்டில் சீனா உலகின் முதற்பெரும் பொருளாதார சக்தியாக, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறிவிடும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர்.
ஒரு நாட்டின் நாணயத்தின் பொருள் வாங்கும் தன்மையை (Purchasing Power Parity) கணக்கிற்கொண்டு பார்த்தால் சீனா ஜப்பானை 2001 - ம் ஆண்டிலேயே பின்னுக்குத் தள்ளிவிட்டது. உலகிலேயே இரும்புத்தாது மற்றும் செம்பு போன்ற உலோகங்களை அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் முதற்பெரும் நாடாக சீனா உள்ளது. உலகின் முதற்பெரும் எரிபொருளான கச்சா எண்ணெய்யை வாங்கும் இரண்டாவது பெரிய நாடாகவும் அது ஆகியுள்ளது.
‘பிரமிக்கத்தக்க வளர்ச்சி’
இத்தகைய சீனாவின் ‘பிரமிக்கத்தக்க’ வளர்ச்சி பலரால் குறிப்பாகத் திருத்தல்வாத சக்திகளால் மிகப்பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. எப்போதுமே சோசலிச சித்தாந்தத்தின் வலுவினையும் அது உறுதியாக அமுல்படுத்தப்பட்டால் முதலாளித்துவ உலகம் சந்தித்துக் கொண்டுள்ள பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியது அவசியமில்லை; அது ஒட்டுமொத்தமாக மக்கள் அனைவரின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யவல்லது என்பன போன்ற அதன் அடிப்படைத் தன்மைகளையும் உயர்த்திப்பிடிக்காது, சோசலிச நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்திக் குறுக்கு வழியில் தங்களது செல்வாக்கைப் பராமரித்தும் தக்க வைத்தும் கொண்டிருந்தவையே அந்தத் திருத்தல்வாதக் கட்சிகள். இப்போதும் சீனாவின் இந்த வளர்ச்சியை அவை தங்களது அத்தகைய முயற்சிக்கு உதவ வல்லதாக நிச்சயம் எடுத்துக்கொள்ளவே செய்யும்.
ஓரிடத்தில் சந்திக்கும் திருத்தல் வாதமும்முதலாளித்துவமும்
ஒருபுறம் திருத்தவாத சக்திகள் இவ்வாறானதாகத் தங்களது நிலையினை வைத்திருக்கும் சூழ்நிலையில் உலக முதலாளித்துவ சக்திகளோ சீனாவின் இந்த வளர்ச்சியை உலகின் முன் குறிப்பிடத்தக்கதாகக் காட்டி அதற்குக் காரணங்கள் எனப் பல சோசலிசக் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன. அதாவது சீனாவின் வளர்ச்சி திருத்தல்வாதிகள் முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் இவ்விரு சக்திகளையும் ஒன்று சேர்க்கும் ஒரு தளமாக அமைந்துள்ளது.
முதலாளித்துவச் சிந்தனையாளர்களின் கருத்து சீனாவின் இத்தகைய வளர்ச்சி டெங்சியோபிங்கினால் வடிவமைக்கப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக அமுல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவானதே என்பதாகும். அதாவது சீன மக்கள் குடியரசை அமைத்த மாமேதை மாவோவின் கொள்கைகளால் இத்தகைய பெரிய வளர்ச்சியைக் கொண்டுவர முடியவில்லை; ஆனால் டெங்சியோபிங்கின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இதனைச் சாதித்துள்ளன என்று அவர்கள் கூறவருகின்றனர். சோசலிசம் மற்றும் மாவோ எதிர்ப்புப் பிரச்சாரங்களில் முழுமூச்சுடன் ஈடுபடும் அவர்கள் மாவோவின் திட்டங்கள் சீனாவில் இத்தகைய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவரத் தவறியதோடு பொருளாதார வளர்ச்சிக்கு பல இடையூறுகளையும் ஏற்படுத்தின என்றும் கூறத் தொடங்கியுள்ளனர். அதாவது மாவோவின் பெரும் பாய்ச்சல் (Great Leaf Forward) என்ற பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமும் அவர் கொண்டுவந்த கலாச்சாரப் புரட்சியும் சீனாவின் வளர்ச்சியைச் சீரழிப்பவையாகவே இருந்தன; அதிலிருந்து சீனப் பொருளாதாரத்தை மீட்டு இன்றைய அபரிமித வளர்ச்சியினை உறுதி செய்தவர் டெங்சியோபிங் - கே என்று அவர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய அவர்களின் கூற்றுகளுக்கு இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரில் செயல்படும் அமைப்புகள் எவையும் எதிர்க்கருத்து எதையும் இதுவரை முன்வைக்கவில்லை. அதன் மூலமாக அந்த முதலாளித்துவச் சிந்தனையாளர்களின் கருத்துக்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை என்ற பொய்த்தோற்றம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் வளர்ச்சி குறித்த இந்தப் படப்பிடிப்பில் சில விசித்திரமான கோணங்களும் உள்ளன. அதாவது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி, 2027 - ல் அமெரிக்காவையும் புறந்தள்ளப் போகும் மகத்தான வளர்ச்சி போன்ற படப்பிடிப்புகளோடு ஒத்துவராத வேறொரு பரிமாணமும் சீனப் பொருளாதாரம் குறித்து முன்வைக்கப்படுகிறது. அதாவது ஒரு பொருளாதார சக்தி என்ற நிலையில் இரண்டாவது நிலையில் இருந்து 3 - வது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஜப்பான் இப்போதும் முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளால் ஒரு வளர்ச்சியடைந்த நாடு என்ற வரையறைக்குள்ளேயே வருகிறது.
மூன்றாம் இடத்தில் வளர்ந்த நாடு, இரண்டாம் இடத்தில்வளரும் நாடு
ஆனால் அதே சமயத்தில் பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானைப் புறந்தள்ளிய சீனா இப்போதும் ஒரு வளர்முக நாடு என்ற வரையறைக்குள்ளேயே உள்ளது. அதாவது அது ஒட்டுமொத்த மனித வளர்ச்சிக் குறியீட்டில் ஆசர்பைசான் போன்ற நாடுகளுக்குச் சற்று மேலானதாக அதாவது உலகின் 127 -வது இடத்திலேயே சீனா உள்ளது. அதன் தனிநபர் வருமானம் ஜப்பானைக் காட்டிலும் 10 மடங்கு பின்தங்கி ஆண்டிற்கு 3300 - க்கும் குறைவான டாலர்கள் என்ற விதத்திலேயே உள்ளது. அமெரிக்காவின் தனிநபர் வருவாய் 42000 டாலர்கள் என்ற அளவிற்கும் ஜப்பானின் சராசரி தனிமனித வருவாய் 33000 டாலர்கள் என்றுமுள்ள நிலையில் சீனாவின் வருவாய் 3300 டாலர்கள் என்ற அளவிலேயே உள்ளது.சீனா உலக அளவில் கருதப்படக் கூடிய பத்துப்பதினைந்து பெரும் பணக்காரர்களை உருவாக்கியுள்ளது. இருந்தாலும் அதன் மிகமிகப் பெரும்பாலான மக்கள் இப்போதும் வறிய நிலையிலேயே வாழ்ந்து கொண்டுள்ளனர் என்ற வியங்களும் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களால் முன்னிறுத்தப் படுகின்றன.
ஏற்றுமதியே தீர்மானிக்கும் சக்தி
ஜப்பான் இவ்வாறு இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கான காரணம் அது ஏற்றுமதி வர்த்தகத்தில் எதிர் கொண்டிருக்கக் கூடிய எதிர்மறைப் போக்கே. அத்தகைய எதிர்மறைப் போக்கை ஜப்பானின் நாணயமான பயன். அமெரிக்க டாலரோடு ஒப்பிடும் போது வலுவானதாக உள்ளதே உருவாக்கியுள்ளது. அதனால் ஏற்றுமதி பெருக வாய்ப்பின்றி ஏற்றுமதியைச் சார்ந்த அதன் பொருளாதாரம் பாதிப்பிலுள்ளது.
மறுபுறம் சீனாவின் தற்போதய வளர்ச்சிக்குக் காரணம் அதன் ஏற்றுமதி வர்த்தகமே. உலகப் பொருளாதாரத்தில் உற்பத்தித்தேக்க நெருக்கடி தோன்றிய சூழ்நிலையில் அது ஓரளவு பாதிக்கப்பட்டாலும் சீனாவின் பாதிப்பு ஜப்பானின் பாதிப்பளவிற்கு இல்லை. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பொருட்கள் அனைத்தின் விலையையும் அதன் சந்தையே தீர்மானிக்கிறது. முதலாளித்துவ நாடுகளின் நாணயங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
செயற்கையான நாணய மதிப்புக் குறைப்பு
அந்த அடிப்படையில் பார்த்தால் சீனாவின் நாணயம் அமெரிக்க டாலரோடு ஒப்பிடும் போது தற்போதுள்ளதைக் காட்டிலும் வலுவானதாக இருக்க வேண்டும். ஏனெனில் சீனாவின் டாலர் கையிருப்பும் அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களில் அது செய்திருக்கும் முதலீடுகளும் மிகப் பெருமளவு உள்ளன. இருந்தாலும் ஏற்றுமதியைத் தக்க வைக்கவும் பராமரிக்கவும் அது தனது நாணயத்தின் மதிப்பினை உரிய அளவிற்கு அதிகரிக்கவில்லை. செயற்கை முறைகளின் மூலம் டாலர் கையிருப்பு அதிகமிருந்தும் சீன நாணயத்தின் மதிப்பு அமெரிக்க டாலரைப் பொறுத்தவரை இருக்க வேண்டிய அளவிற்கு இல்லாமல் குறைந்த மதிப்புடையதாகவே பராமரிக்கப்படுகிறது.
ஜப்பான் 1980- ம் ஆண்டு எதிர்கொண்ட அதன் ரியல் எஸ்டேட் பொருளாதார நெருக்கடிக்கு பின்னரே அதன் வளர்ச்சியில் பெரும் தேக்க நிலை ஏற்பட்டது. அதாவது உலகின் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் அனைத்தும் சந்தித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ நெருக்கடிகளிலிருந்து முன்பு அது தப்பித்துக் கொண்டிருந்தது போல் தொடர்ச்சியாக அதனால் தப்பித்துக் கொண்டிருக்க முடியவில்லை.
ஜப்பானின் உற்பத்திமுறை
முன்பு அது தப்பித்துக் கொண்டிருந்ததற்கான காரணம் தரக்கட்டுப்பாடு போன்றவற்றில் மட்டும் நிரந்தரத் தொழிலாளரை நியமித்து உரிய ஊதியம் வழங்கிய அந்நாட்டின் நிறுவனங்கள் பிற அனைத்து வேலைகளையும் பீஸ்ரேட் மற்றும் ஒப்பந்த முறைகளின் மூலமே செய்து வந்தன. நமது நாட்டில் சிவகாசி போன்ற பகுதிகளில் ஆண், பெண், சிறுவர் அனைவரும் எவ்வாறு வீடுகளிலேயே தீப்பெட்டிக் குச்சி அடுக்குதல் போன்ற வேலைகளைச் செய்து வருகின்றனரோ அதேபோலவே ஜப்பானில் கடிகாரம், டிரான்சிஸ்டர் போன்ற நுகர் பொருட்களை உற்பத்தி செய்து வந்தனர்.
இது வளர்ச்சியடைந்த பிற முதலாளித்துவ நாடுகளின் நடைமுறையான பெரிய தொழிற்சாலைகள் அவற்றில் ஏராளமான தொழிலாளர் என்ற கண்ணோட்டத்தோடு பொருந்தி வராததாகும். இந்த அடிப்படையில் கார்கள், இருசக்கர வாகனங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கடிகாரங்கள், புகைப்படக் கருவிகள் போன்றவற்றை மிக மலிவாகத் தயாரித்து அவற்றைக் கொண்டு ஐரோப்பிய, அமெரிக்கச் சந்தைகளின் மீது படையெடுத்துக் கூடுதல் லாபம் ஈட்டி ஜப்பான் ஒரு மிகப்பெரும் பொருளாதார சக்தியாக உலக அளவில் விளங்கியது.
தற்போது ஜப்பான் கடைப்பிடித்த அந்த முறையே சிறிய பெரிய அளவுகளில் உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு அவற்றைப் பயன்படுத்தும் நாடுகள் அவற்றைக் கண்டுபிடித்த நாடுகளின் நிறுவனங்களுக்கு புனைவுரிமைத் தொகை வழங்க வேண்டும் என்ற உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தமும் ஜப்பானை மிகப் பெருமளவிற்குப் பாதித்தது. ஏனெனில் ஜப்பான் சிறந்து விளங்கியது பல உயர்தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களின் உற்பத்தியில்தான். ஆனால் அவற்றின் கண்டுபிடிப்புகள் அந்நாட்டு நிறுவனங்களால் செய்யப்பட்டவையில்லை.
இரு நாடுகளின் மக்களும் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்
ஜப்பானில் தற்போது தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி மக்களைப் பொறுத்தவரை பல பரிதாபகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் வயதானவர்களை மிக அதிகம் கொண்ட நாடு. ஆனால் அப்படிப்பட்ட வயதானவர்கள் பலர் தற்போது எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அடையாளம் தெரியாமல் எங்கோ அவர்கள் சென்று மறைந்து விட்டார்கள். அந்த அளவிற்கு முதியவர்களைப் பராமரிக்கத் திராணியற்றதாக ஜப்பானின் முதலாளித்துவ சமூக அமைப்பு ஆகியுள்ளது.
சீனாவிலும் சராசரி மக்களின் நிலை மிகவும் அவலம் நிறைந்ததாகவே உள்ளது. லஞ்சமும் ஊழலும் சீன சமூகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளன. திருட்டு, கொள்ளை போன்ற நடவடிக்கைகள் பெரிதும் அதிகரித்துக் கொண்டுள்ளன. ஆளும் ‘கம்யூனிஸ்ட்’ கட்சியின் வட்டாரத் தலைவர்கள் நடத்தும் ஊழல் மிகப்பெருமளவு அதிகரித்துள்ளது.
கூடுதல் குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி கொடுப்பது போன்ற விசயங்களுக்குக் கையூட்டுப் பெறும் போக்கு பெருகி வளர்ந்து வருகிறது. அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலத் தேவைகளுக்கென விவசாய நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பிடுங்கப்படும் போக்கு பல இடங்களில் விவசாயிகளின் பெரிய எழுச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. அவை குறித்த விசயங்களை வெளி உலகத்திற்கு முழு அளவில் தெரியவிடாமல் பல சமயங்களில் நாசூக்காகவும் சில சமயங்களில் ஊடகங்களின் குரல்வளையை நெரித்தும் சீன அரசு மூடி மறைக்கிறது. சமீபத்தில் ஹூக்குல் என்ற மிகப்பெரும் இணையதள நிறுவனத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த சீன அரசு மேற்கொண்ட முயற்சியும் அதையயாட்டித் தோன்றிய சர்ச்சையும் இதற்கான எடுத்துக் காட்டாகும்.
ஜப்பானில் ஏற்பட்டது போல் சீனாவிலும் ரியல் எஸ்டேட் விற்பனையில் பெரும் நெருக்கடி தோன்றவே செய்தது. ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களின் பங்குகள் பெருமளவு சரிந்தன. ஆனால் தன்னுடைய நாணய மதிப்பு உயர்ந்து அதன் விளைவாக ஏற்றுமதி பாதிக்காமல் இருக்க எத்தகைய செயற்கை நடவடிக்கைகளை சீனா தற்போதும் கடைப்பிடித்துக் கொண்டுள்ளதோ அதுபோன்ற செயற்கை நடவடிக்கைகளின் மூலமாகவே அதையும் சீன அரசு சமாளித்தது. அதாவது அது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தையே நிறுத்தி வைத்து அதிலிருந்து ஓரளவு தப்பித்துக் கொண்டது.
ஜப்பான், சீனா ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரங்களுமே தற்போது ஏற்றுமதியை மையமாகக் கொண்டவையே. ஆனால் சீனா ஜப்பானைக் காட்டிலும் அதன் உற்பத்திப் பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்வதால் பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையையும் சந்தித்து அதன் ஏற்றுமதி வர்த்தகத்தைப் பாதுகாக்க முடிந்துள்ளது. ஆனால் ஜப்பானால் அதைச் செய்ய முடியவில்லை.
கருகிய நிலையிலும் மணம் பரப்பும் சோசலிசம்
இவ்விசயத்தில் சீனாவிற்குச் சாதகமாக இருக்கக்கூடிய மற்றொரு அம்சம் அந்நாட்டில் முன்பிருந்த சோசலிசப் பொருளாதாரக் கட்டமைப்பாகும். இடைத்தரகர் அமைப்பு பெருமளவு இல்லாத நிலை, சோசலிச வேலைக் கலாச்சாரம் ஆகியவை சீனா பல நுகர்பொருட்களை மிகக்குறைந்த செலவில் உற்பத்தி செய்ய அதற்கு உதவி செய்கிறது. காலங்காலமாக முதலாளித்துவமாக இருந்த ஜப்பானின் பொருளாதாரத்திற்கு இத்தகைய சாதக அம்சங்கள் இல்லை.
ஆனால் ஜப்பானுக்கு இருக்கும் ஒரு சாதக அம்சம் சீனாவிற்கு இல்லை. அது ஜப்பான் நாட்டு மக்களிடையே இருக்கும் சீனாவைக் காட்டிலும் கூடுதலான சராசரித் தனிநபர் வருமானமும் அதன் விளைவான ஓரளவு மக்களிடம் பரந்த அளவில் உள்ள வாங்கும் சக்தியுமாகும். ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டால் சீனாவின் தற்போதய பொருளாதார வளர்ச்சி புஷ்வானமாகிவிடும்.
டெங்சியோ பிங் உருவாக்கியது முதலாளிகளின்தேவையையே
சீனாவில் முன்பிருந்த சோசலிசப் பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரமாக மாற்றப்பட்டதே டெங்சியோபிங் கொண்டு வந்த சீர்திருத்தத்தின் மையமான உள்ளடக்கம். சந்தைப் பொருளாதாரத்தின் மறுபெயரே முதலாளித்துவப் பொருளாதாரம். அவ்விசயத்தில் சீனா உள்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியைச் சார்ந்திராது அமெரிக்க ஐரோப்பிய நாட்டு மக்களின் வாங்கும் சக்தியைப் பெரிதும் சார்ந்த ஏற்றுமதிப் பொருளாதாரத்தை கண்ணும் கருத்துமாக வளர்த்ததே அதன் தற்போதய வளர்ச்சியின் அடிப்படை. டெங்சியோபிங் அறிமுகம் செய்த இந்த முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு செவ்வனே செயல்படப் பல முதலாளிகள் தேவை.
30 ஆண்டுகளுக்கு முன்பு முதலாளித்துவம் சிந்தனை அளவில் கூட மக்கள் மத்தியில் வந்துவிடக் கூடாது என்ற கருத்து மேலோங்கியிருந்த அந்நாட்டிற்கு ‘மாமேதை’ டெங்சியோபிங் தலைமையேற்றபின் இன்று முதலாளிகளை உருவாக்க வேண்டிய ‘வரலாற்றுத்’ தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அது விடுதலை பெற்ற காலம் முதல் மாவோவின் காலம் முடிவிற்கு வந்த சில ஆண்டுகளுப் பின்னரும் அங்கு சோசலிசப் பொருளாதாரக் கட்டமைப்பே இருந்தது. அந்த அமைப்பில் முதலாளிகள் என்று யாரும் இல்லை. அப்படிப்பட்ட முதலாளிகள் டெங்சியோபிங்கின் சீர்திருத்தம் அமலுக்கு வந்த பின் செயற்கையாக உருவாக்கப் பட்டனர்.
கொலைகார முதலாளித்துவத்தின் ஆட்சியில் வாங்கும் சக்தியாரிடம்
பெரும்பாலும் அரசு நிர்வாகத்தில் இருந்த நேர்மையற்ற நபர்களே அத்தகைய முதலாளிகளாக உருவாயினர். பல அரசு நிறுவனங்களை அவர்கள் அடிமாட்டு விலைக்கு வாங்க அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு வளர்ச்சியடைந்த முதலாளிகளிடம் மரபு ரீதியாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் முதலாளிகளிடமிருந்த அந்தக் குறைந்தபட்ச நேர்மை கூட இல்லை. அதாவது சீனாவில் தற்போது வளர்ந்துவரும் முதலாளித்துவம் சமூகச் சொத்துக்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்ட கொலைகார முதலாளித்துவமாகும்.
அப்படி வளர்ந்த மிகமிகக் குறைந்த எண்ணிக்கையில் அதாவது பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் தெரிவர் என்ற அளவிற்குக் குறைவாக இருக்கக்கூடிய முதலாளிகள் மற்றும் அவர்களால் முன்முயற்சி எடுத்து நடத்தப்படும் முதலாளித்துவ நிறுவனங்களின் மேல்மட்ட நிர்வாகிகள் ஆகியவர்களிடம் மட்டுமே தற்போது சீனாவின் பிற உற்பத்திப் பொருட்களை வாங்கும் சக்தி உள்ளது. ஆனால் அவர்கள் மிகச் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்களால் வாங்கப்படும் அடிப்படையான நுகர்பொருட்கள் கருதப்படும் அளவிற்குக் கூட இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆடம்பரப் பொருட்களை வாங்கும் சக்தி அவர்களிடம் மட்டுமே உள்ளது. எனவே கார் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டுமே சீனாவின் உள்நாட்டுச் சந்தையில் ஓரளவு விற்பனை வாய்ப்பு உள்ளது.
ஜி.டி.பி - யை மையமாகக் கொண்ட வளர்ச்சி
பொதுவாகவே முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வளர்ச்சியின் அடிப்படையாக ஒட்டுமொத்த உள்நாட்டுப் பொருளுற்பத்தி அதாவது ஜி.டி.பி - யே பார்க்கப்படுகிறது. எனவே அதனை உயர்த்த முதலீடுகள் வரவேற்கப் படுகின்றன.
சீனாவிலும் கூட இந்தியா உட்படப் பல வெளிநாடுகளின் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. அதனால் அந்நிய முதலீடுகளும் பெருமளவு அதிகரித்துக் கொண்டுள்ளன. அந்த ஒட்டுமொத்த உள்நாட்டுப் பொருளுற்பத்தியின் வளர்ச்சி பெருமளவு முதலாளிகளுக்கும் - அமெரிக்கச் சொல்லாடலின் படி கொழுத்த பூனைகளான - முதலாளித்துவ நிறுவனங்களின் மேல்மட்ட நிர்வாகிகளுக்குமே பெரும் பலன் தரக்கூடியதாக உள்ளது. ஆனால் முதலாளித்துவப் பொருளாதார வல்லுனர்கள் அந்த வருமானத்தில் ஏற்படும் கசிவு பிற சாதாரண மக்களிடமும் ஓரளவு வாங்கும் சக்தியை உருவாக்கும் என்று நம்புகின்றனர்.
கசிவு எனும் கண்ணோட்டம்
அத்தகைய முதலாளித்துவ நிறுவனங்களில் உற்பத்தி நடைபெற்று அவர்கள் ஈட்டும் லாபத்தின் மீதான வரி மற்றும் அவர்களின் உற்பத்திப் பொருள் மீது விதிக்கப்படும் வரி போன்றவை அரசுக்கு வருவதன் மூலம் அரசு பொதுநல நடவடிக்கைகளுக்குச் செலவிட ஓரளவு வருவாய் பெற்றதாக ஆகும் வாய்ப்பினைக் கொண்டிருக்கும்; அந்த அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள மக்களின் நலன்களை அப்பணத்தைக் கொண்டு பராமரிக்க முடியும்; இதன் மூலம் முதலாளித்துவ அமைப்பில் எப்போதுமே பெருகி வளர்ந்துவரும் போராட்ட மனநிலையைச் சமாளிக்க முடியும் என்பது முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களின் கருத்து.
ஆனால் தற்போது முதலீடுகளை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் முதலீட்டாளர்களுக்கு அவர்கள் தொழிற்சாலைகள் தொடங்கத் தேவையான இடத்தைக் கையகப்படுத்திக் கொடுப்பதிலிருந்து தொழிற்சாலை நடத்தத் தேவையான மின்சாரம் போன்ற பிற ஆதார வசதிகள் செய்து தருவதுவரை அனைத்திற்கும் பெரும் தொகைகள் மானியமாக வழங்கப்படுவதால் அதனுடன் ஒப்பிடுகையில் இந்த வரிகள் மூலமாக அரசிற்கு வரும் வருமானம் அற்பமானதாக ஆகி விடுகிறது.
எதில் வளர்ச்சி
ஏற்றுமதி சார்ந்த பொருட்கள் மிக அதிகமாக உற்பத்தியாவதால் அதற்குத் தேவைப்படும் மற்றொரு ஆதார வசதியான போக்குவரத்து வசதிகளே சீனாவில் தற்போது அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றொரு துறையாக விளங்குகிறது. தற்போது உற்பத்தித்தேக்க நெருக்கடி சீனா நுகர்பொருள் ஏற்றுமதி செய்துவந்த நாடுகளில் தோன்றியுள்ளது. மேலும் அந்த நெருக்கடி இதற்கு முன்பு தோன்றிய நெருக்கடிகளைப் போலில்லாமல் பல காலம் நீடிக்கும் தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது. அதனால் ஏற்றுமதி மூலமான சீனாவின் தற்போதய 10 சதவிகித வளர்ச்சி நீண்டகால அடிப்படையில் பராமரிக்கவியலாத ஒன்றாக ஆகியுள்ளது. அதனால்தான் நெருக்கடி தோன்றுவதற்கு முன்பு 18 சதவிகிதம் என்ற அளவில் இருந்த சீனாவின் வளர்ச்சி தற்போது 10 சதவிகிதமாக ஆகியுள்ளது.
சீனாவில் தற்போது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் தோன்றியுள்ள நெருக்கடி வேறு துறைகளுக்கும் பரவ வெகு நாட்கள் ஆகாது. இந்த நிலையிலும் கூட சீனா பல பொருளாதார நிபுணர்கள் கூறுவது போல 2027 - ல் அமெரிக்காவை விட வளர்ச்சி பெற்ற நாடாக ஆகும் வாய்ப்பினைக் கொண்டதாகவே உள்ளது. ஆனால் அதற்கான காரணம் அமெரிக்காவின் வளர்ச்சி படிப்படியாகக் குறைந்து வருவதால் ஆனதாக இருக்குமே தவிர டெங்சியோபிங் முன்வைத்த பொருளாதார சீர்திருத்தக் கொள்கையால் சாதிக்கப்பட்டதாக இராது.
அடிப்படைத் தேவைகளின் பூர்த்தியை இலக்காக் கொண்டபெரும் பாய்ச்சல் திட்டம்
சோசலிசப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான அம்சம் ஒட்டுமொத்த உள்நாட்டுப் பொருளுற்பத்தியை அதாவது ஜி.டி.பி - யைச் சார்ந்ததல்ல. அதன் உற்பத்திமுறை மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கருத்திற்கொண்டதாகும். அதன் உற்பத்தி இலக்கைத் தீர்மானிப்பதும் மக்களின் தேவைகளே. அத்தேவைகளைப் பூர்த்தி செய்யவே சோசலிசப் பொருளாதாரத்தில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அந்த நோக்கைக் கருத்திற் கொண்டுதான் குறுகிய காலத்தில் மக்களுக்குப் பயன்படும் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறைந்த தொழிற்துறை நாடாக்க வேண்டும். என்பதற்காக மாவோ பெரும் பாய்ச்சல் (Great Leaf Forward) என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார்.
அத்திட்டம் அமலில் இருந்த காலத்தில் ஏறக்குறைய 6 லட்சம் இரும்பு உலைகள் அந்நாட்டில் மக்களின் பங்கேற்பினால் உருவாக்கப்பட்டன. தேசிய, பிராந்திய, பகுதி ரீதியாக விவசாயத்தை மேம்படுத்துவதற்காகப் பல நீர்ப்பாசனத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
மக்கள் விதைப்பு, அறுவடை போன்ற தீவிர விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிராத காலத்தில் பெரும் பாய்ச்சல் திட்டம் கொண்டுவரப்பட்டது. பொதுவாக அக்காலகட்டத்தில் சீன மக்கள் குறைந்த அளவு சக்தி தரக்கூடிய உணவையும், உணவுப்பொருட்களையும் உண்பதே வழக்கம். ஆனால் இத்தகைய கடினமான கூட்டு உழைப்பில் அவர்கள் அக்காலகட்டத்தில் ஈடுபட்டதால் கடின உழைப்பில் ஈடுபடுபவர்களுக்குத் தேவைப்படும் அளவிற்கு போதிய அதிக சக்தி தரும் உணவுப்பொருள் இருப்பு அப்போது சீனாவில் இல்லை. அதனால் போதிய உணவும் ஓய்வுமில்லாத நிலையில் அத்தகைய நீர்ப்பாசனத் திட்டங்களை மக்கள் கூட்டு உழைப்பின் மூலம் கொண்டுவந்தனர். இத்தனை சிரமத்தை எதிர்கொண்டும் அவர்கள் அத்தகைய கடும் உழைப்பில் ஈடுபட்டதற்குக் காரணம் அத்திட்டங்கள் விவசாயிகள் அனைவருக்கும் அதாவது தாங்கள் பங்கும் பகுதியுமாக உள்ள ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயன்படப்போகிறது என்ற அவர்களின் நம்பிக்கையே.
கட்சி நிர்வாகிகள், அறிவு ஜீவிகளின் பங்கேற்பு
மேலும் அத்தகைய கூட்டு உழைப்பில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைவர், தொண்டர் என்ற பாகுபாடின்றி அனைவரும் மக்களோடு மக்களாக இணைந்து கலந்துகொண்டனர். உணவுப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு மாவோ மாதக்கணக்கில் மாமிச உணவைத் தவிர்த்தார். பல தோழர்கள் அவரிடம் வற்புறுத்திய போதும் கூட்டு உழைப்பில் ஈடுபடுவோர் உண்பதைவிட கூடுதலான உணவினை அத்தகைய உழைப்பில் ஈடுபட்டிருந்த அவரது மகளுக்கு வழங்கவும் அவர் அனுமதிக்கவில்லை. அத்தைகய கூட்டு உழைப்பில் தேவையான உணவு கொடுக்கப்பட முடியாததால் கம்யூனிஸ்ட் கட்சியின் சில செயலாளர்கள் கூட உயிரிழந்தனர்.
இதுதவிர கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் பெரிய எண்ணிக்கையில் அத்திட்டத்தில் பங்கேற்றனர். அத்திட்டங்களினால் எதிர்காலத்தில் பலன்பெறும் வாய்ப்புகள் கொண்டவர்களாக இருந்த சீன விவசாயிகள் இவ்வாறு அனைவரும் தங்களுக்கான உழைப்பில் ஈடுபடுவதைக் கண்டு பற்றாக்குறையின் விளைவாக ஏற்பட்ட தங்களது துன்பத்தை மறந்து உவகையுடன் உழைப்பில் ஈடுபட்டனர்.
ஏனெனில் அப்போது நிலவிய சோசலிசப் பொருளாதாரம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை எப்படியாவது கூட்டிக்காட்ட வேண்டும் என்பதாக இல்லை. அதற்குப் பதிலாகத் தேவைக்கு உற்பத்தி, உற்பத்தியின் பலன் சமமாக மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படல் என்ற சோசலிசப் பொருளாதார விதியின் அடிப்படையிலானதாக இருந்தது. ஆனால் தற்போது உள்நாட்டு மக்கள் அவர்களின் விளைநிலங்களின் இழப்பு, வாழ்வாதாரங்கள் பறிபோதல், கொலைகாரத் தன்மைவாய்ந்த முதலாளிகளின் வளர்ச்சி, சிரத்தையற்ற நிர்வாக முறையின் காரணமாக அடிக்கடி நிகழும் விபத்துக்கள், சுற்றுச் சூழலின் மாசுபாடு ஆகியவற்றை ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி சாதிக்கப்படுவதற்கான விலையாகக் கொடுக்க வேண்டியுள்ளது.
அதனால் ஏற்பட்டுள்ள சீனாவின் தற்போதைய நெருக்கடி இதைக் காட்டிலும் கடுமையான நெருக்கடிகளை எதிர்காலத்தில் நிச்சயம் சந்திக்க வேண்டியிருக்கும். இதையே முன்பிருந்த சோசலிசப் பொருளாதாரத்தை விடப் பலமடங்கு வளர்ச்சியைக் கொண்டு வந்த பொருளாதாரம் என்றும் அதற்குக் காரணம் டெங்சியோபிங்கின் சீர்திருத்தக் கொள்கைகளே என்றும் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் வாயாரப் புகழ்கின்றனர்.
நம்பிக்கையை உருவாக்க தத்துவம், தலைமை எதுவுமில்லை
உண்மையில் இதன் மூலம் எந்த சோசலிசப் பொருளாதாரம் உருவாக்கிய சாதக அம்சங்களைக் கொண்டு மலிவான விலையில் நுகர்பொருள் உற்பத்தி செய்து வெளிநாட்டுச் சந்தைகளில் விற்று, பெருவளர்ச்சி ஏற்பட்டுள்ளதென சீன ஆட்சியாளர்களால் காட்ட முடிந்ததோ அந்த சோசலிசப் பொருளாதாரத்தின் மிச்சம் மீதியிருக்கும் கட்டமைப்பும் நிலை குலைந்து முற்றிலும் நிர்மூலமாகும் அபாயம் தோன்றியுள்ளது. அந்நிலையில் மாவோவைப் போல் எந்த நெருக்கடியையும் மக்களைக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் அணிதிரட்டி எத்தனை எதிர்மறை நிலையிலும் நம்பிக்கையூட்டி வளர்ச்சியைப் பராமரிக்கும் தலைமை இல்லை. மாவோவிற்கு அத்தகைய வழியினைக் காட்டிய மார்க்சியமும் தற்போதைய ஆட்சியாளர்களால் பாழ்படுத்தப் பட்டுள்ளது. மக்களை அணிதிரட்டி நம்பிக்கையூட்டி எதையும் செய்யத் திராணியற்றதாகவே பெயரில் மட்டும் கம்யூனிஸத்தை வைத்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.
மக்களோடு மக்களாகக் கூட்டு உழைப்பில் ஈடுபட்டுத் தங்களது இன்னுயிர்களை இழந்த அன்றிருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களைப் போலில்லாமல் தற்போதய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்குப் பழகிப்போன ஒட்டுண்ணிகளாக ஆகியுள்ளனர். அதனால் மக்களால் வெறுத்தொதுக்கப் படுபவர்களாக ஆகியுள்ளனர். இத்தகைய கட்சி மற்றும் அரசு எந்திரங்களைக் கொண்டு தற்போது உலகளவில் பூதகரமாக வளர்ந்துவரும் முதலாளித்துவ நெருக்கடி சீனாவில் எதிர் காலத்தில் தோற்றுவிக்கவிருக்கும் தாக்கத்தை அவர்களால் சிறிதளவு கூட எதிர்கொள்ள முடியாது.
முதலும் இறுதியுமான அமைப்பு முதலாளித்துவமல்ல
முதலாளித்துவம் தான் இனிமேல் நின்று நிலவப்போகும் ஓரே சமூக அமைப்பு என்ற அறிவியல் உண்மைக்குப் புறம்பான கருத்தை நிலைநாட்டுவதையே ஓரே பிடிமானமாக முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் கொண்டுள்ளனர். அதனைத் தக்கவைக்கப் பல தந்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மாவோவின் பெரும் பாய்ச்சல் திட்டம் அமல்படுத்தப்பட்ட சூழ்நிலையில் அத்திட்டத்தின் விளைவாக ஏற்பட்ட சோசலிசத் தன்மை வாய்ந்த பொருளாதார வளர்ச்சியை ஏறெடுத்தும் பார்க்காமல் அதனால் மக்கள் எதிர்கொண்ட கஷ்டங்களையும் உயிரிழப்புகளையும் மட்டும் அவர்கள் இன்றும் முன்னிலைப் படுத்துகின்றனர். அதிலும் கூடச் சிறிதளவும் நாணயமின்றி பெரும் பாய்ச்சல் திட்டத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளை மிகப்பெரிதாகக் காட்டுவதற்காக இயற்கையாக ஆண்டுதோறும் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் சேர்த்துப் பெரிதுபடுத்திக் காட்டி உலகம் முழுவதும் பெரும் பாய்ச்சல் குறித்து ஒரு பெரும் பீதியை இப்போதும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
சோவியத் யூனியனிலும் பிற சோசலிஸ்ட் நாடுகளிலும் சோசலிசம் வீழ்ச்சியடைந்த போது அதற்கான காரணம் ஸ்டாலினுக்குப் பின் வந்த தலைவர்கள் அந்நாடுகளை சோசலிசப் பாதையிலிருந்து தடம் புரளச் செய்ததே என்ற உண்மையை மூடிமறைத்து அது சோசலிசத்தின் வீழ்ச்சியே என்று காட்டுகின்றனர். தற்போது அப்பட்டமான முதலாளித்துவப் பாதையில் சீனப் பொருளாதாரத்தை வழிநடத்தத் தொடங்கிய டெங்சியோபிங்கின் கருத்துக்களுக்குப் பட்டுக்குஞ்சம் கட்டிச் சீர்திருத்தம் என்று பெயரிட்டு அது மிகப்பெரும் வளர்ச்சியைச் சீனாவில் ஏற்படுத்தி உலகின் இரண்டாவது பெரும் தொழில் வளர்ச்சியடைந்த நாடாகச் சீனாவை ஆகியுள்ளது என்று சித்தரித்துக் காட்டுகின்றனர். அதாவது கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தப்படும் ஒரு நாட்டின் வளர்ச்சியையும் நாங்கள் மக்கள் முன் வைக்கவே செய்கிறோம் என்று காட்ட முயல்கின்றனர். அதாவது இதன் மூலம் தங்களது போலி நடுநிலைத் தன்மையைப் பராமரிக்க விரும்புகின்றனர்.
உண்மையில் மரபு ரீதியாகவே முதலாளித்துவமாக இருக்கும் ஜப்பானும் புதிதாக முதலாளித்துவத்திற்கு டெங்சியோபிங்கினால் மாற்றம் செய்யப்பட்டுள்ள சீனாவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிரம்பித்ததும்பும் பலதரப்பட்ட நெருக்கடிகளுக்கான வாய்ப்புகளைக் கொண்டவையாகவே உள்ளன. ஏனெனில் அவற்றின் பாதை நெருக்கடியிலிருந்து தப்பிக்கவே முடியாத முதலாளித்துவப் பாதை. எனவே அவற்றின் முன் பூதகரமாக எழுந்து நிற்கப்போவது வளர்ச்சி என்பதைக் காட்டிலும் புதுப்புது வகை நெருக்கடிகளே. அதாவது மாவோவின் காலம் வரை மக்கள் கண்களுக்குத் தென்பட்டிராத வாழ்க்கை சூனியமானது என்ற விரக்தி மனநிலை தற்போதே சீன மக்களிடம் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. எதிர்காலம் நிச்சயமில்லாதது என்ற முறியடிக்கப்பட்டவர்களிடம் தோன்றும் மனநிலை வெகு வேகமாகச் சீன சமூகத்தில் வளர்ந்து கொண்டுள்ளது. எனவே சீனாவின் இந்த வளர்ச்சியில் மகிழ்ச்சியடைவதற்கு இடதுசாரிகள் மற்றும் கம்யூனிஸ்ட்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
No comments:
Post a Comment