கடந்த ஜீலை 25 - ம் நாள் திருத்தங்கலுக்கு அருகாமையில் உள்ள ஆனைக்கூட்டம் கிராமத்தில் இலக்கு இளைஞர் மன்றத்தின் சார்பாக கல்விக் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியின் பால் அக்கறை கொண்ட பொது மக்களோடு உழைக்கும் மக்கள் போரட்டக் கமிட்டி, மாணவர் ஜனநாயக இயக்கத் தோழர்களும் பெரிய எண்ணிக்கையில் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
இலக்கு இளைஞர் மன்றத்தின் முக்கிய உறுப்பினர்களான சுரேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் கருத்தரங்கினை ஏற்பாடு செய்வதிலும் அதனைச் சிறப்புற நடத்துவதிலும் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையிலிருந்து அவ்வட்டாரத்தில் கல்வி மேம்பாட்டிற்காகவும் அறிவுப் பரவலாக்கலுக்காகவும் சிறப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைப்பொன்றினைச் சேர்ந்த திரு.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டு கருத்தரங்கைச் சிறப்பித்தார்.
எழுப்பப்பட்ட கேள்விகள்
8 - வது வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி, பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டம் படித்த போதிய பயிற்சியில்லாத ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் நியமிக்கும் போக்கு, பொதுவாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலம் ஒரு பாடம் என்ற ரீதியில் கூட முறையாகக் கற்பிக்கப்படாத நிலை, இதனால் சரியான அடித்தளமின்றி வேலைவாய்ப்புச் சந்தையின் அனைத்து மட்டங்களிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களும் சிரமங்களும், தேவைப்படும் தன்னம்பிக்கை ஊட்டப்படாததால் நகர்ப்புற மாணவர்களுடனான போட்டியில் கிராமப்புற மாணவர்கள் பின்தங்கி நிற்கும் நிலை ஆகியவை பல கேள்விகளாக எழுப்பப்பட்டு அவற்றிற்கு விடை காணும் வகையில் கருத்தரங்கில் விவாதங்கள் வரவேற்கப்பட்டன.
கூட்டத்தில் துவக்கவுரையாற்றிய இலக்கு இளைஞர் மன்ற அமைப்பாளர் சுரேஷ் இலக்கு இளைஞர் மன்றம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையும் அதன் இலக்கினையும் விளக்கிப் பேசினார். அந்த அமைப்பினை மகாகவி பாரதியின் கவிதைகளால் உந்தப்பட்டு தனது நண்பர்களையும் தோழர்களையும் ஒருமுகப்படுத்தி உருவாக்கிய அனுபவத்தை விளக்கியதோடு அந்த அமைப்பு கிராமப்புற மாணவர்களுக்காக ஆக்கபூர்வமான காரியங்கள் சிலவற்றையாவது செய்தாக வேண்டும் என்பதனை அதன் இலக்காகக் கைக்கொண்டதையும் விளக்கிப் பேசினார். அத்துடன் இந்தக் கருத்தரங்கிற்காக அணுகிய பல கல்வித் துறையோடு தொடர்புடையவர்களின் கூற்றுகளைச் சுவையுடன் அனைவருக்கும் பயன்தரத்தக்க விதத்தில் நினைவு கூர்ந்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கிய ஆதவன் தனிப்பயிற்சிப் பள்ளியின் நிறுவனர் திரு.ராஜேஷ் கல்வியின் மேன்மையினை அத்தனை தூரம் அறியாத மக்களின் குழந்தைகளுக்கு தன்னுடைய நிறுவனத்தைப் போன்ற ஒரு தனிப்பயிற்சி நிறுவனத்தின் மூலமாக அவர்களுடைய தேவையை முழுமையாகக் கணக்கில் கொண்டு கல்வி புகட்டுவது ஒரு அலாதியான அனுபவம். ஆசிரியப் பணியினை சிறப்புற ஆற்றிய ஒரு மனநிலையை இந்த அனுபவம் தனக்கு உணர்த்துகிறது என்று எடுத்துரைத்தார்.
முயற்சி செய்தால் கிராமம் நகரம் என்ற வேறுபாடின்றி எந்த இடத்திலும் நவீன பயிற்றுவிக்கும் முறைகளைக் கொண்டுவர முடியும் என்பதை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை கிராமத்தில் கணிணி மற்றும் இணையதளத்தின் மூலமாகக் கல்வி கற்கும் வகையில் ஒரு எலக்ட்ரானிக் நூலகத்தை அங்குள்ளோர் நிறுவியிருப்பதை எடுத்துக்காட்டாக முன்வைத்து திரு.ஜெயக்குமார் கருத்துரை வழங்கினார்.
கேள்வி, பதில் மூலமாகக் கருத்தரங்கம் மிகவும் உயிரோட்டமுள்ள முறையில் மூன்றரை மணி நேரத்திற்கு மேல் சிறப்புற நடைபெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்டு மாணவர் ஜனநாயக இயக்கத்தின் ஆலோசகர் தோழர் ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார்.
அவர் தனது உரையில் முன்வைத்த முக்கியக் கருத்துக்கள்:
யதார்த்தத்தில் இன்று கிராமப்புற நகர்ப்புற மாணவர்கள் என்ற பிரிவு இல்லை. மாறாக தனியார் பள்ளிகளில் கல்வி பயில வாய்ப்புள்ள வசதி படைத்த மாணவர்கள், அரசுப்பள்ளிகளில் மட்டுமே பயில வாய்ப்புள்ள வசதியில்லாத மாணவர்கள் என்ற நிலையே நிலவுகிறது.
இருவகைக் கல்வி
கிராமப்புறங்களிலிருந்தும் இன்று நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நிறைய உள்ளனர். அவர்களை ஏற்றிச் செல்வதற்காகப் பல கிராமப்புறங்களில் காலை வேலைகளில் பஸ்களும் வேன்களும் வந்து செல்வதை அனைத்து இடங்களிலும் நாம் பார்க்கிறோம். நாம் பெறும் கல்வியில் ஒரு பெரும் செங்குத்தான பிளவு தற்போது தோன்றி வளர்ந்து வருகிறது.
அதாவது வேலைவாய்ப்புச் சந்தையில் விலைபோகுமளவிற்கு மாணவர்களைத் தயார் செய்யும் ஒருகல்வி, இத்தனை சதவீதம் கல்வி கற்றவர்கள் இருக்கிறார்கள் என்று உலகிற்குக் கணக்குக் காட்டுவதற்காகக் கையொப்பம் இடுபவர்களைத் தயார் செய்வதற்கான மற்றொரு வகைக்கல்வி என்ற இருவகைக் கல்வி நிலைகொண்டு விட்டது. இதில் முதல்வகைக் கல்வி பெரும்பாலும் தனியார் பள்ளிகளிலும் ஒருசில அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் வழங்கப்படும் கல்வி; கையெழுத்துப் போடுபவர்களை உருவாக்கும் ரகத்தைச் சேர்ந்த கல்வியே பெரும்பாலும் அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி.
மாணவர்களுக்கு ஈடுபாட்டுடன் கற்பித்து அவர்களின் ஈடுபாட்டையும் கொண்டுவருவதாகக் கல்வி இருக்க வேண்டும். நமது வீட்டில் நம் பிள்ளைகளுக்குத் தேவை என்ன என்பதை அறிந்து அதற்குகந்த வகையில் ஒவ்வொரு பிள்ளையும் விரும்புவதை வழங்கி அவர்களைப் பராமரிப்பது போல தங்களிடம் பயிலும் மாணவர்களின் தேவை மற்றும் போதாமைகளை உணர்ந்து அதற்குகந்த வகையில் கற்பிப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
மேலை நாடுகளில் பாடத் திட்டங்கள் குறைவாக இருந்தாலும் அதை முழுமையாகச் செயல் முறைப்படுத்தும் அளவிற்கு மாணவர்களை அங்குள்ள ஆசிரியர்கள் தயார் செய்கிறார்கள். பிள்ளைகளின் போதாமைகளை வகுப்பறைக்கே வந்து மாணவருடன் மாணவராக அமர்ந்து தெரிந்துகொள்ள பெற்றோர் வற்புறுத்தப் படுகிறார்கள். அத்தகைய நடைமுறையின் மூலம் மாணவர்களின் போதாமைகள் ஆசிரியர் பெற்றோர் ஆகியோரின் கூட்டு முயற்சியில் சரி செய்யப்படுகின்றன.
கல்வி என்பது ஒரு வாழ்க்கை; கற்றுக்கொள்வதற்கு வயது வரம்பு என்பது கிடையாது. அதைப்போல் மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. எனவே அந்த வகையில் ஆசிரியர் மட்டுமல்ல மாணவர்களும் பல விசயங்களை ஆசிரியர்களுக்கு கற்பிப்பவர்களே. இத்தகைய சூழலில் நமது கல்வி நிலையங்கள் இருந்தால் நமது மாணவர்கள் பள்ளிக்குச் செல்லப் பயப்படமாட்டார்கள்.
பெற்றோரின் பொறுப்பு
முன்னாள் குடியரசுத் தலைவர்களான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் அப்துல் கலாமும் பிரசித்தி பெற்ற தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் அல்ல. அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களே. ஒரு காலத்தில் அனைத்து மக்களின் பயிற்றகமாகவும் அரசுப் பள்ளிகள் இருந்தன. அந்தநிலை இன்று சீரழிந்து கையொப்பம் இடுபவர்களைத் தயாரிப்பதற்காக என்ற அளவிற்கு அரசுப்பள்ளிகள் ஆகிவருகின்றன என்றால் அதற்கு பெற்றோராகிய நாமும் ஒரு காரணமே.
அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்து வருகிறதென்றால் நாம் விற்காததை விற்றாவது நமது பிள்ளைகளை நல்ல கல்வி கிடைப்பதாக நாம் நம்பும் தனியார் பள்ளிகளில் பணம் செலுத்திப் படிக்க அனுப்புகிறோம். நமது வரிப்பணத்தில் நிறுவப்பெற்றுப் பராமரிக்கப்படும் அரசுப்பள்ளிகள் உரிய வகையில் நல்ல கல்வி கற்பிக்கும் நிலையங்களாக இருப்பதைக் கண்காணிப்பது நமது கடமை என்ற எண்ணம் நமக்கு இல்லாமல் போய்விடுகிறது. கண்காணிப்பு இல்லாவிட்டால் எந்த நிறுவனமும் சீரழியவே செய்யும்.
உண்மையான ஜனநாயகம்
உண்மையான ஜனநாயகம் மக்களின் பங்கேற்பின் மூலம் பொது விசயங்களை ஆற்றுவதே. மேளாக்கள் போல் நடைபெறும் தேர்தல்களில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப் படுவோரின் மூலமாகச் செயல்படுவதல்ல. கிராமப்புறக் கல்வி மேம்பாட்டுக் குழுக்கள் போன்றவற்றில் பொதுமக்கள் மென்மேலும் பங்கேற்க வேண்டும். அதில் நிரந்தர உறுப்பினர்களாக அரசால் நியமிக்கப்படும் வட்டாட்சியர் போன்றவர்கள் சம்பிரதாயத்திற்கு அதில் கலந்து கொள்பவர்களே தவிர கல்வி நிலையங்களின் மேம்பாட்டில் அக்கறை உடையவர்கள் அல்ல.
அக்குழுக்களில் கல்வியின் பால் அக்கறையுள்ள பொதுமக்களும் பெற்றோரும் மென்மேலும் பங்கேற்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஒருவகையான தனிநபர்வாதக் கலாச்சாரத்தைக் கொண்டவர்களாக இருக்கும் சூழ்நிலையில் இலக்கு அமைப்பினை நிறுவியவர்கள் தாங்கள் படித்த, வாழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் பின்தங்கிவிடக் கூடாது என்ற அக்கறையுடன் செயல்படுவது பெருமகிழ்ச்சிக்குரியது.
இதுபோன்ற இளைஞர்கள் அனைத்து ஊர்களிலும் அணிதிரட்டப்பட வேண்டும். அவர்களை அணிதிரட்டி இதுபோன்ற கருத்தரங்குகளை அனைத்துப் பகுதிகளிலும் நடத்த வேண்டும். அவர்களைப் போன்ற உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள் தான் சோர்ந்து கிடக்கும் மக்களிடம் நம்பிக்கையினை ஊட்டமுடியும். அதன்மூலம் கல்வியின்பால் அக்கறையுள்ளவர்கள் அடையாளம் கண்டுகொள்ளப் படவேண்டும். அவர்களைக் கொண்டு பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமப்புற கல்வி மேம்பாட்டுக்குழு ஆகியவற்றை நிரப்பி அவற்றைப் பயனுள்ள அமைப்புகளாக்க வேண்டும். குறைந்த பட்சம் கல்வித் துறையிலாவது மக்கள் பங்கேற்புடன் கூடிய உண்மையான ஜனநாயகத்தை நாம் நிலைநாட்ட முயல வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகையில் அவர்கள் படித்தவற்றை நினைவுகூர வைக்கும் வகையிலான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே, அவ்வாறு தேர்ச்சி பெற்ற பின்னரே முழுமையான ஆசிரியர்களாக நியமனம் பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களுக்குச் சம்பளத்துடன் பயிற்சிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் பல ஆண்டுகளுக்குப் பின்பு நியமனம் பெறுவது அவர்களின் குற்றத்தினால் அல்ல. உரிய காலத்தில் வேலை வாய்ப்புகளை அரசு அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்காததால் தான்.
ஆசிரியர் அமைப்புகள் வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடாது கல்வி மேம்பாடு போன்ற விசயங்களுக்காகவும் தேவைப்பட்டால் அரசிற்கு எதிராகவும் கூடப் போராட வேண்டும். உரிய ஆதார வசதிகள் இல்லாமை, போதிய ஆசிரியர் நியமனமின்மை ஆகியவற்றிற்காகவும் போராட வேண்டும். தொடர்ச்சியாகத் தங்களது கற்பிக்கும் திறனும் பாடத்திட்ட மேம்பாடும் அதிகரிக்கும் விதத்தில் பயிற்சி வகுப்புகள் உரிய தரமான பேராசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டுமெனக் கோரிக்கை எழுப்ப வேண்டும்.
பாடத்திட்டக் குறைப்பினைக் கோருதல், தேர்ச்சி பெறும் மதிப்பெண்கள் பெறுமளவிற்கு மட்டும் பாடம் நடத்துதல் போன்ற தற்போதைய ஆசிரியர் மத்தியில் நிலவும் அவலங்கள் போக்கப்படும் விதத்தில் அவை செயல்பட வேண்டும். ஆங்கிலம் ஒரு மொழி என்ற ரீதியில் முறையாகக் கற்பிக்கப் படாததே உயர் கல்வியிலும் வேலைவாய்ப்புச் சந்தையில் விலை போவதிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் பின்தங்கியிருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம். பாடப்புத்தகங்களில் பாடங்களை அடுத்து இடம் பெற்றுள்ள பயிற்சிகளை ஓரளவு சரிவரக் கற்பித்தால் கூட மாணவர்களின் ஆங்கில அறிவு பன்மடங்கு மேம்படும்.
அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்துள்ளது குறித்துக் கேள்வி எழுப்பினால் நாங்கள் கல்விக்குத் தேவைப்படும் அனைத்தையும் செய்யத்தானே செய்கிறோம் என்று அரசினர் கூறுவர். இன்றுள்ள ஆட்சியாளர் நேற்றைய ஆட்சியாளருடன் தங்களை ஒப்பிட்டு எத்தனை ஆயிரம் புது ஆசிரியர்கள் தங்களது ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பட்டியலிடுவர். எத்தனை நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளன என்பதையும் பெருமையுடன் தம்பட்டமடித்துச் சொல்வர். ஆனால் பள்ளிகளில் கற்பித்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
வேலியே பயிரை மேய்வது போல் நல்ல முறையில் பள்ளிகளில் பாடம் கற்பிக்கப்படுவதை உத்திரவாதப் படுத்துவதற்காக உள்ள மாவட்ட மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரிகளே 8ம் வகுப்பு வரை தேர்வு இல்லாவிட்டாலும் கூட குறைந்தபட்ச மதிப்பெண் பெறும் அளவிற்காவது அனைத்து மாணவர்களையும் தயார் செய்யுங்கள் என்று கூறாமல் பெயரளவிற்கு நடத்தப்படும் தேர்வுகளில் அனைத்து மாணவர்களும் குறைந்தபட்ச மதிப்பெண் பெருமளவிற்குத் தேர்வு எழுதியுள்ளனர் என்று பொய்யாகக் காட்டுவதற்காக அந்தத் தேர்வுத்தாளில் நீங்களாகவேணும் ஒரு வரைபடத்தை பூர்த்தி செய்து கட்டுங்கள் என்பது போன்ற முறைகேடுகளை ஆசிரியர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவர்களாக உள்ளனர்.
அவ்வாறு அக்கறையும் சிரத்தையுமின்றிப் பல ஆசிரியர்களும் அவர்களைக் கண்காணிக்கும் கல்வி அதிகாரிகளும் இருப்பதற்குக் காரணம் அரசிற்கு கல்வியும் அறிவும் மக்களுக்குச் சென்று சேர்வதில் அக்கறை ஏதுமில்லை என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளதே. நாம் ஏற்கனவே வலியுறுத்திய விதத்தில் கல்வித் துறையிலேனும் மக்கள் பங்கேற்புடனான உண்மையான ஜனநாயகம் செயல்படுத்தப்பட்டுப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் கிராமப்புறக் கல்விக் குழுவினரும் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் கேள்வி கேட்கும் நிலைமை உருவாக்கப்பட்டால் மட்டுமே இன்றுள்ள நிலை மாறும்; அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் உயரும்.
No comments:
Post a Comment