கம்யூனிஸ்ட் அறிக்கையில் மாமேதை மார்க்ஸ் கூறினார் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலும் அதை யொட்டிய தொலைத்தொடர்பு சாதனங்களின் முன்னேற்றத்திலும் முதலாளித்துவம் ஆற்றிய சாதனைகள் சமூகத்தின் முகத் தோற்றத்தையே மாற்றியது என்று. அவ்வாறு விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சியில் மாபெரும் பங்கினை ஆற்றிய முதலாளித்துவம் இன்று விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதைக் கூறினால் சராசரி மனநிலை உள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள்.
உற்பத்தி சக்தியின் வளர்ச்சியை முடக்கும் உற்பத்தி உறவு
மேலே கூறிப்பிட்டவாறு கூறியதால் மார்க்ஸ் முதலாளித்துவத்தின் உண்மையான உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று நாம் கூற வரவில்லை. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அபரிமிதமானதாக ஆகும் போது நிலவும் உற்பத்தி உறவுகள் அதற்குந்த வகையிலானதாக மாற்றப்பட வேண்டும். அவ்வாறு மாற்றப்படாவிட்டால் அது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் முட்டுக்கட்டை போட்டு சமூகத்தின் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தவே செய்யும். அதாவது விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் உள்ளடக்கத்தைக் கொண்டதாக முதலாளி தொழிலாளி உற்பத்தி உறவும் முதலாளித்துவத்தின் லாப நோக்க உற்பத்தி முறையும் ஆகிவிடும் என்ற கருத்தை முதன்முதலில் வெளியிட்டவர் மாமேதை மார்க்ஸே ஆவார். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் உற்பத்தி சக்திகளில் பாய்ச்சல் போன்ற வளர்ச்சியினை ஏற்படுத்தவே செய்யும்; அதனைப் பயன்படுத்தத் திராணியற்றதாக முதலாளித்துவம் மாறிவிடும் என்பதை அவர் 150 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தார்.
ஆட்குறைப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் விஞ்ஞானம்
உண்மையில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கே இன்றைய முதலாளித்துவம் முட்டுக்கட்டை போடுகிறது என்பதில்லை. அதன் உற்பத்திமுறை அதிகபட்ச லாபம் ஈட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அத்தகைய அதிகபட்ச லாபத்தை உறுதி செய்யக்கூடிய விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளை அது ஊக்குவிக்கவே செய்கிறது. ஆனால் அதன் நோக்கம் அத்தகைய விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகள் அவர்கள் உருவாக்கும் பொருட்களில் சம்பந்தப்பட்டுள்ள உழைப்புத் திறனை அதாவது உழைப்பாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கப் பயன்படுமானால் அத்தகைய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மிகுந்த மகிழ்ச்சியுடன் முதலாளித்துவம் செய்யும் என்பதே.
அதாவது தேசியச் செல்வம், இயற்கை வளங்கள், தொழில் ரீதியாகப் பின்தங்கிய நாடுகளைச் சூறையாடுதல் ஆகிய பல நடவடிக்கைகளின் மூலம் அதிகபட்ச லாபத்தை ஈட்டிமுடித்த நிலையில் முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த விருப்பமே தற்போது தொழிலாளருக்கு அது கொடுக்கும் சம்பளத்தை எவ்வளவுதூரம் குறைக்க முடியுமோ அவ்வளவுதூரம் குறைத்து லாபம் ஈட்டுவது என்பதாகவே உள்ளது. எனவே அதற்குப் பயன்படும் விஞ்ஞானங்களின் வளர்ச்சியிலேயே அதன் முழுக்கவனமும் சமீப காலங்களில் இருக்கிறது.
அன்று வளர்க்கும் இன்று முடக்கும் முதலாளித்துவம்
ஒரு காலத்தில் இன்றுள்ளதை விட ஓரளவு சமாளிக்க முடிந்த அளவு நெருக்கடியில் முதலாளித்துவம் இருந்தது. அப்போது சோசலிச சமூக அமைப்பும் உலகின் மூன்றில் ஒரு பங்கில் இருந்தது. அக்கால கட்டத்தில் சோசலிசத்தின் சவாலைச் சமாளிப்பதற்காக முதலாளித்துவம் பொதுநல அரசு என்ற முழக்கத்தையும் ஒட்டுமொத்தமாகவே விஞ்ஞான வளர்ச்சி முழுவதையும் பராமரிக்கும் கடமையினை அது தன் தலைமேல் சுமத்திக் கொண்டிருப்பது போன்ற பொய்த் தோற்றத்தையும் காட்டியது. அதற்காக பல முதலாளித்துவ அரசுகள் நிதி ஒதுக்கீடுகளை ஓரளவு மருத்துவ ஆராய்ச்சிகள் போன்றவற்றிற்கும் ஒதுக்கின. அது மனிதகுலம் முழுமைக்கும் பயன்படுவதாக இருந்தது.
ஏனெனில் அந்தத் துறையில் ஒட்டுமொத்த மக்கள் நலனைப் பராமரிப்பதில் அக்கறை கொண்ட சோசலிச சோவியத் யூனியன் மிகப்பெரும் வளர்ச்சிகளை பெரிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து செய்துகொண்டிருந்தது. ஆனால் இவ்விரு ஒன்றுக்கொன்று முரண்பட்ட அமைப்புகளும் அவ்வாராய்ச்சிகளையும் அவற்றிற்கான ஒதுக்கீடுகளையும் செய்வதிலும் கூட அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டவையாய் இருந்தன.
ஒரு மருத்துவ ஆராய்ச்சி மூலமான கண்டுபிடிப்பு நடைபெற்றால் அதன் பலன் சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டதாக சோசலிச சமூக அமைப்புகள் இருந்தன. ஆனால் அதுபோன்ற கண்டுபிடிப்புகளை உள்நாட்டில் பயன்படுத்தி அதன் பலன்களை அடைய முடிந்த அளவிற்கு வசதி படைத்தவர்களுக்கு கொண்டு சென்று அதனைக் காசாக்குவதையும் அந்தக் கண்டுபிடிப்புகளின் பலன்களை உலகம் முழுவதும் விற்பனைப் பொருளாக்கி அதில் அதிகபட்ச லாபம் ஈட்டுவதையும் அத்தகைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கான காரணமாக முதலாளித்துவம் கொண்டிருந்தது.
அதாவது சோசலிச சமூக அமைப்பில் அனைத்து மக்களுக்கும் பயன்படத்தக்க கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. முதலாளித்துவ அமைப்பில் அவற்றைப் பயன்படுத்த வசதியும் சக்தியும் கொண்டவர்களுக்கு மட்டும் பயன்படத்தக்க தீவிர சிகிச்சை முறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவற்றிற்கு உதவும் ஆராய்ச்சிகளுக்கே முன்னுரிமை தரப்பட்டது.
இத்தகைய லாப நோக்கை அடிப்படையாகக் கொண்ட மருத்துவக் கண்டுபிடிப்புகளை அமல்படுத்தி உலகம் முழுவதும் உள்ள வசதி படைத்த நோயாளிகளைக் கவர்ந்து வியாபார மனநிலையுடன் சிகிச்சைகள் நடத்திச் சம்பாதிப்பதில் அமெரிக்கா உலக நாடுகளின் சிகரமாக விளங்கியது.
இச்சூழ்நிலையில் கூட இங்கிலாந்து போன்ற நாடுகள் சில மரபுகளைக் கொண்டவைகளாக இருந்தன. மருத்துவத்திற்குப் பயன்படும் கண்டுபிடிப்புகளைப் பிறர் பயன்படுத்த புனைவுரிமைத்தொகை (Royalty) வசூலிப்பதை அந்நாடுகளின் பல விஞ்ஞானிகள் விரும்பவில்லை. மனிதகுலம் முழுவதின் நலனுக்காக அத்தகைய கண்டுபிடிப்புகள் இருப்பதால் அவற்றை எந்த வகையான புனைவுரிமைத் தொகையையும் வழங்காமல் பலரும் பயன்படுத்தலாம் என்ற உயர்ந்த நெறி இங்கிலாந்து நாட்டின் விஞ்ஞானிகளால் ஓரளவு கடைப்பிடிக்கப்பட்டது.
கட்டுப்படுத்தப்படும் பொதுச் செலவினம்
அப்படிப்பட்ட இங்கிலாந்து நாட்டில் தற்போது நிலவும் நிலைமை மிகவும் கவலை க்கிடமாக உள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கிலாந்து அதனுடைய செலவினங்களை 25 சதவிகிதம் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிந்திய அதன் வரலாற்றில் மிக அதிக பொதுச் செலவுக் குறைப்பினை அது இப்போது செய்துள்ளது. அதனால் பல அடிப்படையான விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்குச் செலவிடுவதை அது நிறுத்தத் தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் பொறியியல் வல்லுனர்கள் ஆகியோரைக் கொண்டவையாக இருந்த அந்நாட்டின் ஆக்ஸ்போஃர்டு சையரில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சி நிலையங்கள் இதனால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
இடம் பெயறும் உயிரியல் விஞ்ஞானிகள்
அவற்றில் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருப்பது மருத்துவ ரீதியான ஆராய்ச்சிகளாகும். புற்றுநோய், எச்.ஐ.வி., பார்க்கின்சன், பறவைக் காய்ச்சல், சூப்பர் பக் போன்ற நோய்களுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஏறக்குறைய நிறுத்தப்படும் அபாய நிலையில் உள்ளன. அதனால் பல விஞ்ஞானிகள் அந்நாட்டை விட்டு அவர்கள் நிபுணர்களாக இருக்கக்கூடிய துறைசார்ந்த ஆராய்ச்சிகளுக்குப் பணம் ஒதுக்கும் நாடுகளை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக ஆக்ஸ் போஃர்டு பல்கலைக்கழக விஞ்ஞானியான ஆட்ரியன் ஓவன் - இருக்கும் இடத்தைவிட்டு நகல முடியாமல் ஒரு தாவரத்தைப்போல் இருக்கக்கூடிய நோயாளிகளுக்குப் பயன்படத்தக்க மருந்தினைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தவர். அவர் உலகம் முழுவதும் நன்கறியப்பட்ட விஞ்ஞானி. தற்போது இங்கிலாந்து அரசாங்கம் அவ்வாராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தப் பணம் செலவிட முன்வராததால் அவர் கனடா செல்லும் முடிவிற்கு வந்துள்ளார்.
செர்ன் என்ற இடத்தில் உள்ள விஞ்ஞான தொழில்நுட்ப மேம்பாட்டுக் கவுன்சில் என்ற ஆராய்ச்சி நிறுவனம் வானியல், அணு இயற்பியல், பார்டிக்கில் இயற்பியல் குறித்த ஆராய்ச்சிகளை நடத்தும் மிகப் பிரபல நிறுவனம். அந்நிறுவனத்திற்கு ஈரோப்பியன் யூனியனைச் சேர்ந்த நாடுகள் அனைத்தும் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்க வேண்டும். அப்படி ஒரு ஒப்பந்தம் அவைகளுக்கிடையே உள்ளது. இங்கிலாந்து தற்போது அதற்கும் அது வாக்களித்த தொகையைத் தரமுடியாது எனக் கூப்பாடு போடுகிறது. அதற்கான ஒதுக்கீட்டிலிருந்து 135 மில்லியன் பவுண்டு தொகையைக் குறைக்க அது முடிவெடுத்துள்ளது.
இயற்பியலும் தப்பவில்லை
இதுதவிர லார்க் ஹால்ட்ரன் கொலைடர் என்ற ஒரு அதிநவீனக் கருவிக் கட்டமைப்பைக் கொண்டு தற்போது பிரபலமாக நிலவிக் கொண்டுள்ள பிக் பேங்க் தத்துவத்தினைச் செயல்முறை ரீதியாக நிகழ்த்திப் பரிசோதிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் பலவும் முன் வந்தன. அவ்வாராய்ச்சி சில கட்டங்களைத் தாண்டியுள்ள நிலையில் தற்போது அதற்குத் தேவைப்படும் நிதியினைத்தரப் பல நாடுகள் தயாராக இல்லை. அதனால் அதுவும் கிடப்பில் போடப்படும் அபாயம் தோன்றியுள்ளது. அதைப்போல் ஐரோப்பிய மாலிக்குலார் பயாலஜி சோதனைச் சாலை நிறுவனமும் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் சமூகம் முழுவதன் வளர்ச்சிக்கும் பயன்படும் உயிரியல், வேதியியல் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யத் தற்போதய முதலாளித்துவ அரசுகள் முன்வர மறுக்கின்றன.
சூப்பர் பக்
இந்த நிலையில் பாக்டீரியா தாக்குதல்களினால் ஏற்படுத்தப்படும் பல்லாயிரக் கணக்கான மனித உயிரிழப்புகளைத் தவிர்க்க ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதமாக வந்த பாக்டீரியா தாக்குதலைத் தடுக்கும் மருந்துகள் தற்போது செயலிழந்தவைகளாகி வருகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த மருந்துகளுக்கெதிரான தங்களது எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொண்டு பல பாக்டீரியாக்கள் மிக சக்திவாய்ந்த விதத்தில் வளர்ந்து கொண்டுவருகின்றன என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக அறுவைச் சிகிச்சைகள் மூலமாக குணப்படுத்தும் ஆங்கில மருத்துவத்தின் ஒரு தனித்தன்மையையே இதனால் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம் உருவாகி உள்ளது. இந்த சூப்பர்பக் வளர்வதற்கு மிக ஏதுவான தளமாக இந்தியா போன்ற நாடுகள் உள்ளன என்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதனை இந்திய விஞ்ஞானிகள் ‘தேசிய உணர்வுடன்’ மறுக்கவும் செய்கின்றனர்.
இந்த நுண் கிருமியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபடத் தங்கள் நாட்டு விஞ்ஞானிகள் தயாராக இருந்தாலும் அத்தகைய ஆராய்ச்சிக்குத் தங்களால் நிதியேதும் ஒதுக்க முடியாது என்று இங்கிலாந்து போன்ற நாடுகளின் அரசுகள் கைவிரிக்கின்றன. அந்நாடுகள் இன்றைய நிலையில் அதிக அளவு பொருளாதார வளர்ச்சியைக் கொண்டவையாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகள் இதற்கு உதவ முன்வரவேண்டும்; அவ்வாறு முன்வந்தால் தாங்கள் ஆராய்ச்சியைத் தொடரத் தயார் என்று கூறுகின்றன.
ஈவிரக்கமற்ற சுரண்டலைத் தயக்கமின்றிக் கட்டவிழ்த்துவிட்டு பொருளீட்டும், எந்த வகையான குறைந்தபட்ச நெறிமுறைக் கண்ணோட்டமும் சமூகநலக் கருத்தும் இல்லாத நமது நாட்டு முதலாளிகளா இதற்கு உதவ முன்வருவார்கள்? அதற்கு உதவ முன்வராமல் இருப்பதற்காகத் தான் இவர்கள் தேசிய வெறியுணர்வினைத் தூண்டிவிட்டு இந்தக் கிருமியின் வளர்ச்சிக்குத் தாங்கள் ஒருபோதும் காரணமல்ல என்று அடித்துக் கூறத் தொடங்கியுள்ளனர்.
வரலாற்றுப் பின்னணி
அதாவது நிலவுடைமைக் காலத்தில் நிலவிய பின்தங்கிய நிலையிலிருந்து சமூகத்தை விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவியுடன் முதலாளித்துவம் பெரிதும் முன்னேற்றியது. மாமேதை மார்க்சின் வார்த்தைகளில் கூறுவதானால் விஞ்ஞான தொழில் நுட்பத்தின் உதவியால் மலிவான விலையில் மக்களின் உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்து அந்த மலிவான விலை என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தால் உலகின் பின்தங்கிய நாடுகள் அனைத்தையும் முதலாளித்துவம் தாக்கித் தகர்த்தது. அக்காலகட்டத்தில் ஏற்பட்ட விஞ்ஞானத்தின் வெகு வேகமான அணிவகுப்பு இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பின்னர் தன்னுடைய உற்பத்திப் பொருட்களின் விற்பனை மூலம் மட்டுமின்றி பின்தங்கிய நாடுகளில் கிடைக்கும் மலிவான உழைப்புத் திறனையும் பயன்படுத்தி அது அதிகபட்ச லாபம் ஈட்டத் தொடங்கியது.
அதன் மூலமாகப் பின்தங்கிய நாடுகளிலும் எந்திரத் தொழில் உற்பத்திமுறை அறிமுகமாகியது. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்பு உலகின் மூன்றில் ஒருபங்கு நாடுகள் சோசலிச மயமாகி ஒரு வலுவான சோசலிச முகாம் ஏற்பட்ட நிலையில் அதுவரை பல ஏகாதிபத்திய நாடுகளின் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்றன. அதாவது சோசலிச சோவியத் யூனியன் ஒரு மகத்தான சமூக மற்றும் ராணுவ சக்தியாக உருவெடுத்ததும் இங்கிலாந்து போன்ற பல காலனிகளைக் கொண்டிருந்த நாடுகள் பலவீனமடைந்ததும் இராணுவ ரீதியாக தங்களின் சக்திக்கு அதிகமாக அவை கொண்டிருந்த காலனிகளைப் பராமரிக்க முடியாது என்ற நிலை அவற்றிற்குத் தோன்றியதும், காலனி நாடுகளில் குமுறிக் கொண்டிருந்த தேசவிடுதலை இயக்கங்களுக்கு சோசலிச சோவியத் யூனியன் வழங்கிய தார்மீக ஆதரவும் இத்தகைய தேச விடுதலைகளைச் சாத்தியமாக்கின.
ஆனால் அவ்வாறு விடுதலை பெற்ற நாடுகளில் பல முதலாளித்துவ நாடுகளாகவே மாறின. அந்நாடுகளின் முதலாளித்துவ அரசுகள் அந்நாட்டுத் தேசிய முதலாளிகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய திட்டங்களை வகுத்துக்கொடுத்து உள்நாட்டு முதலாளித்துவம் துரித வளர்ச்சியைக் குறுகிய காலத்திற்குள் எட்ட வழிவகை செய்தன.
முற்றிலும் தங்களது உற்பத்திப் பொருட்களின் சந்தைகளாக இருந்த அந்த நாடுகள் அவ்வாறு இல்லாமல் போனது மட்டுமின்றி சில தொழில்களில் தங்களுக்கு போட்டியாளர்களாகவும் அவை ஆகிய நிலை பொருளாதார ரீதியாகப் பெரும் வளர்ச்சியை எட்டியிருந்த ஏகாதிபத்திய நாடுகளைக் கடுமையாகப் பாதித்தது.
அதுவரை எந்திரத்தொழில் உற்பத்தி முறையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அந்நாட்டு அரசுகளுக்கு வேறொரு புதுச் சிக்கலும் தோன்றியது. அதுவரை வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் தங்களது உணவுத்தேவைக்கு தங்களது காலனிகளாக இருந்த பல்வேறு பின்தங்கிய நாடுகளையே நம்பியிருந்தன. திடீரென அந்நாடுகளில் பல விடுதலை பெற்றவையாக ஆனதால் அந்நாடுகள் தங்களை மட்டும் சார்ந்திராது தொழில் வளர்ச்சி போன்றவற்றிற்கு அமைப்பு ரீதியாக அடிப்படையில் வேறுபட்ட சோசலிச நாடுகளையும் சார்ந்திருக்கத் தொடங்கியதால் அவற்றுடன் ஒப்பந்தங்கள் போட்டு உறவினை அவை பராமரிக்க ஆரம்பித்ததால் தங்களது உணவுத் தேவைகளுக்கு முழுக்க முழுக்கத் தங்களது முன்னாள் காலனிகளாக இருந்த நாடுகளை நம்பிருக்க முடியாது என்ற சூழ்நிலை ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏற்பட்டது.
அந்நிலையில் அந்நாடுகள் விஞ்ஞான ரீதியான தீவிர உற்பத்தி முறைகளை விவசாயத்தில் தங்கள் நாடுகளில் அமுல்படுத்தத் தொடங்கின. அதாவது குறுகிய கால வித்துக்கள், செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்திக் குறைந்த இடத்தில் அதிக அளவு விளைச்சலைச் சாத்தியமாக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அமுல்படுத்தின
.
அதைப் போலவே தொழில் உற்பத்தித் துறையிலும் இனிமேல் பரந்த அளவில் பெரிய பெரிய தொழில்களைத் தொடங்கி ஏராளமான தொழிலாளரை அவற்றில் ஈடுபடுத்தி அதன் ஏராளமான உற்பத்திப் பொருட்களை உலகெங்கும் விற்று ஆதாயம் ஈட்ட முடியாது என்ற நிலை தோன்றியதால் பொருட்களைச் சிறிதும் விரையமாக்காமல் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தினை ( Material Saving Technology) அமுல்படுத்தத் தொடங்கின.
கிழிந்து கொண்டிருக்கும் முகமூடி
அன்றுதொட்டு முதலாளித்துவம் வேலை செய்யும் தொழிலாளரின் எண்ணிக்கையினைக் குறைக்கவும் தொழிலாளர் உழைப்புத் திறனை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்தில் அதிநவீன எந்திரங்களைக் கண்டுபிடிப்பதிலும் கவனம் செலுத்தியது. அதன் விளைவாகத் தோன்றியவையே கணிணி, ரோபோடிக்ஸ் போன்ற விஞ்ஞானங்களாகும்.
இதுபோன்ற கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திப் பல வேலை வாய்ப்புகளைப் பறித்து அதன்மூலம் தற்காலிகமாக அதிகபட்ச லாபம் ஈட்ட முடிந்ததாக அப்போதைய முதலாளித்துவம் இருந்தாலும் அது வேலையில்லாதோர் எண்ணிக்கையை அதிகமாக்கியதால் சமூகத்தில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து அதனால் சந்தை நெருக்கடி தோன்றியது. அது உற்பத்தித் தேக்கத்தினை அதன் விளைவாகக் கொண்டுவந்தது. முன்பிருந்ததைக் காட்டிலும் கூடுதல் நெருக்கடிகளுக்கு முதலாளித்துவ நாடுகள் ஆளாயின.
இவ்வாறு இந்த அளவிற்கு நெருக்கடி முற்றும் வரை பொதுவாகவே விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வழிவகுத்த சாதகமான அமைப்பு என்று தன்னைப்பற்றிப் பாவனைக் காட்டிக் கொண்டிருந்த முதலாளித்துவத்தின் விஞ்ஞானத்தின் ஆதரவாளன் என்ற முகமூடி அதற்குப்பின் கிழியத் தொடங்கியது.
அதற்கு முன்பே கூட பல முதலாளித்துவ ஏகபோக நிறுவனங்கள் தங்களின் ஆராய்ச்சி நிலையங்கள் மூலமாக நிகழ்த்திய புதுக் கண்டுபிடிப்புகள் பலவற்றை அவற்றை அமுலாக்கினால் குறைந்த செலவில் பொருளுற்பத்தி செய்யும் நிலை தோன்றி அவற்றைச் சந்தைகளில் கொண்டுவந்து குவிக்கும் நிலை ஏற்பட்டு அதனால் அவற்றைக் குறைந்த விலைக்கு விற்க நேர்ந்து தாங்கள் அதிகபட்ச லாபம் ஈட்ட முடியாமல் போகும் என்ற எண்ணத்தில் யாருக்கும் தெரியாமல் கிடப்பில் போடும் வேலையைச் செய்தன.
வேறுபட்ட அணுகுமுறைகள்
இங்குதான் முதலாளித்துவ, சோசலிச அமைப்புகளுக்கிடையிலான முற்றிலும் முரண்பட்ட விஞ்ஞானம், தொழில்நுட்பம் குறித்த அணுகுமுறைகள் உள்ளன. அதாவது சோசலிச சமூக அமைப்பில் இயற்கையில் பொதிந்துள்ள பல நியதிகளைக் கண்டுகொண்டு அவற்றை மனித குலத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஒட்டுமொத்த மனிதகுலமும் கடுமையான உடல் உழைப்பிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் இலகுவான, மகிழ்வான வாழ்க்கையை உறுதி செய்யும் சூழ்நிலையை விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் ஆற்றின.
கணிணி, ரோபோ போன்றவைகளும் கூட வேலை நேரத்தைக் குறைக்கவும், சுரங்கங்கள் போன்ற மனித உயிருக்கு ஊறு விளைவிக்கும் இடங்களில் பயன்படுத்தப்படவும் உதவின. ஆனால் முதலாளித்துவ நாடுகளில் அவை வேலை வாய்ப்புகளைப் பறிக்கவே பயன்படுகின்றன.
இதற்கு மிகமுக்கியக் காரணம் சோசலிசப் பொருளுற்பத்தி முறையின் உற்பத்தி நோக்கம் அனைத்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பதாக இருப்பதும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் உற்பத்தி நோக்கம் அதிகபட்ச லாபம் ஈட்டுவது என்பதாக இருப்பதுமேயாகும். முதலாளித்துவ நாடுகளில் மனிதனின் சிந்தனைத்திறன், உழைப்புத்திறன், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், மருத்துவக் கண்டுபிடிப்புகள் ஆகிய அனைத்தும் சந்தைச் சரக்குகளே.
ஆனால் சோசலிச சமூக அமைப்பில் இவை அனைத்தும் சமூகத்தின் பொருளாதார ரீதியான கருத்து ரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படும் சாதனங்களே. அவ்வாறே அவை கருதப்படுகின்றன. கூடுதல் ஊதியம் முதலாளித்துவ சமூக அமைப்பில் ஒரு மனிதனின் மேன்மையினைப் பறைசாற்றுகிறது. ஆனால் சமூக அங்கீகாரம் சோசலிச சமூக அமைப்பில் ஒரு உழைப்பாளியைக் கெளரவித்தது.
இதனால் இன்று முதலாளித்துவம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் சக்தியாக ஆகியுள்ளது. அதற்குக் காரணம் அதன் அதிகபட்ச லாபம் எனும் உற்பத்தி நோக்கமே. அதன் விளைவே நாம் இக்கட்டுரையின் ஆரம்பப் பத்திகளில் விவரித்தவாறு பல ஐரோப்பிய யூனியன் நாடுகள் மனிதகுலம் முழுவதற்கும் பயன்படத்தக்க விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சிகளைக் கைவிடத் தொடங்கியிருப்பதாகும்.
அன்றைய அதன் காலனியிடம் உதவிகோரும் ஏகாதிபத்தியம்
இன்று தோன்றியுள்ள நிலை இன்னும் பல வியங்களையும் தோலுரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது இங்கிலாந்து போன்ற ஏகாதிபத்திய நாடுகள் ஒரு காலத்தில் அந்நாடுகளின் காலனிகளாக இருந்த இந்தியா போன்ற நாடுகளிடம் பொருளாதார ரீதியாக நீங்கள் உதவ முன்வந்தால் சூப்பர் பக் போன்ற கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சிகளைத் தாங்கள் மேற்கொள்ளத் தயார் என்று கூறியிருப்பதாகும். இந்தியா ஒரு பின்தங்கிய அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடு என்ற கருத்தினை இப்போதும் கொண்டிருப்பவர்களின் கண்களைத் திறக்க இந்த வளர்ச்சிப் போக்காவது உதவட்டும்.
முதலாளித்துவம் மேலை நாடுகளில் ஏற்படுத்தியது போன்றதொரு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலுமான முன்னேற்றத்தினையும் வளர்ச்சியினையும் நெருக்கடி சூழ்ந்த நிலையில் வளரத் தளைப்பட்ட இந்திய முதலாளித்துவம் கொண்டுவரவில்லை. அது எந்தவொரு புதுக் கண்டுபிடிப்பினை அறிமுகம் செய்வதிலும் மிதமிஞ்சிய முன்னெச்சரிக்கையுடனேயே இருந்தது.
குறைந்தக் கூலிக்குக் கூடுதலாக வேலையாட்கள் கிட்டும் நிலை நமது நாட்டில் இருந்ததால் ஒரு குறிப்பிட்ட உற்பத்திக்கு ஆட்களை நியமித்துச் செய்வதால் ஆகும் செலவையும் அதே உற்பத்தியை நடத்துவதற்கு வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை அறிமுகம் செய்தால் ஆகும் செலவையும் ஒப்பிட்டு இவை இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ அதையே தேர்ந்தெடுத்து உற்பத்தியினை நடத்தும் முறையை அது கடைப்பிடித்தது.
நியதியற்ற சுரண்டல்
மிகக்குறைந்த ஊதியம், உதிரிப் பலன்கள் வழங்காத போக்கு, ஒப்பந்தத் தொழில்முறை போன்ற முறைகளையயல்லாம் கடைப்பிடித்து தொழிலாளரை ஒட்டஒட்டச் சுரண்டி வளர்ந்ததே நமது நாட்டைப் போன்ற நாடுகளின் முதலாளித்துவங்களாகும். மேலை நாட்டு முதலாளிகள் ஓரளவு கடைப்பிடிக்கும் நியதிகள் நெறிகள் ஆகியவற்றைக் கூடக் கடைப்பிடிக்காமல் நிர்க்கதியான நிலையில் தொழிலாளரை வைத்துச் சுரண்டுவதற்கு நமது நாட்டின் ஊழல் மலிந்த நிர்வாகமும், காலம் தாமதித்து கட்டையில் ஏறும் சூழ்நிலையில் மட்டுமே நீதி கிடைக்கும் என்ற நிலையில் உள்ள நீதி அமைப்பும் உதவின.
இவ்வாறு வளர்ந்ததால் தான் தொழிலதிபர் மிட்டல் ஆர்செலார் என்ற பிரெஞ்ச் நாட்டின் இரும்பு எஃகு நிறுவனத்தை வாங்கியபோது பிரெஞ்ச் நாட்டு முதலாளிகள் தங்களின் வெறுப்பினை வெளிப்படுத்தினர். “நாங்கள் முதல் தரமான வாசனைத் திரவியத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் யூதிகொலான் போன்ற மிகமிகச் சாதாரணப் பொருட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தவர்களே மிட்டல் போன்றவர்கள்; அவர்களுக்கு நாங்கள் எங்கள் நிறுவனத்தை விற்கப்போவதில்லை” என்று கூறினார்கள். ஆனாலும் படிப்படியாக இந்திய முதலாளிகளின் வலுவினையும் சக்தியையும் அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களை வழிக்குக் கொண்டுவந்தது.
இன்று இங்கிலாந்து நாட்டின் விஞ்ஞானிகள் கனடா போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்வது ஒரு கருதப்பட வேண்டிய செய்தியாக உள்ளது. ஆனால் உரிய ஊதியம், போதிய ஆராய்ச்சி வாய்ப்புகள் இவற்றிற்கே செலவு செய்ய இந்திய முதலாளிகள் முன்வராதபோக்கு போன்றவற்றால் எண்ணிறந்த விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுனர்களும் நாள்தோறும் அன்னிய நாடுகளுக்கு ஆராய்ச்சிப் படிப்புகளுக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் செல்வது வாடிக்கையாகவும் நடைமுறை வழக்கமாகவும் நமது நாட்டில் பலகாலம் இருந்து வருகிறது. அத்தகைய அன்னிய நாடுகளை நோக்கிய மூளைக்கசிவு (Brain Drain) கருதப்பட வேண்டிய ஒரு செய்தியாக நமது நாட்டில் அன்றும் இருந்ததில்லை; இன்றும் இருக்கவில்லை.
பொது விஞ்ஞானத்தின் வளர்ச்சியை வளர்ச்சியடைந்த நாடுகளின் முதலாளித்துவ அரசுகள் அவற்றின் வளர்ச்சியினால் கைக்கொள்ள முடிந்தவையாக இருந்தன. அத்தகைய மரபுகளையும் நியதிகளையும் அவை பலகாலம் கைவிடவில்லை. ஆனால் அவற்றிற்கு முட்டுக்கட்டைப் போடும் நிலைக்கு அத்தகைய முதலாளிகளே தற்போது வந்துள்ளனர். இந்நிலையில் அவற்றின் வளர்ச்சிக்கு பன்யா மனநிலை கொண்ட இந்திய முதலாளிகளா கைகொடுத்து உதவப் போகிறார்கள்?
சோசலிசம் தான் ஓரே பற்றுக்கோடு
இந்நிலையில் சமூகத்திற்குப் பெரிதும் தேவைப்படும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு பேருதவிபுரியவல்லதாக இருந்தது உலகின் மூன்றில் ஒரு பகுதியில் இருந்து இன்று மறைந்து ஒரு தற்காலிகப் பின்னடைவினைச் சந்தித்துக் கொண்டுள்ள சோசலிச அமைப்பே. உலகில் தற்போது நிலவும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மட்டுமல்ல; முதலாளித்துவ மேலை நாடுகளின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் தோன்றியுள்ள இந்தத் தேக்கநிலையிலிருந்தும் சமூகத்தை விடுவிக்கவல்லதும் அந்த அமைப்பே. இதுவே இன்று தோன்றியுள்ள நிலை. இந்நிலை உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை சோசலிசத்தின் பால் அவர்களது பார்வையை நிச்சயம் திருப்ப வைக்கும்; திருப்ப வைக்க வேண்டும்.
//இதுதவிர லார்க் ஹால்ட்ரன் கொலைடர் என்ற ஒரு அதிநவீனக் கருவிக் கட்டமைப்பைக் கொண்டு தற்போது பிரபலமாக நிலவிக் கொண்டுள்ள பிக் பேங்க் தத்துவத்தினைச் செயல்முறை ரீதியாக நிகழ்த்திப் பரிசோதிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் பலவும் முன் வந்தன. அவ்வாராய்ச்சி சில கட்டங்களைத் தாண்டியுள்ள நிலையில் தற்போது அதற்குத் தேவைப்படும் நிதியினைத்தரப் பல நாடுகள் தயாராக இல்லை. அதனால் அதுவும் கிடப்பில் போடப்படும் அபாயம் தோன்றியுள்ளது. //
ReplyDeleteமிக முக்கிய பாயிண்டுகள் கொண்ட சிறப்பான கட்டுரை