Powered By Blogger

Monday, February 28, 2011

பிப்ரவரி 27 தியாகி சந்திர சேகர் ஆசாத்தின் நினைவு நாள்



இந்திய மண்ணின் விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த தியாகி சந்திர சேகர் ஆசாத்தின் நினைவு நாள்

அவரது உன்னத வாழ்க்கையை நினைவு கூர்கிறது மாற்றுக்கருத்து
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தங்களது அளப்பரிய தியாகங்களால் மின்னும் நட்சத்திரங்களாக விளங்கியவர் பலர் இருந்தனர். அவர்களில் சிலரது தியாகங்கள் யாராலும் மறைக்கவியலாதவாறு பிரபலம் பெற்றன. ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் தூக்கிலிடுதல் போன்ற கொடூர நடவடிக்கைகளால் அத்தகைய பிரபலத் தன்மை அவர்களது வரலாற்றிற்குக் கிட்டியது. அந்த ஒளிப் பிரவாகத்தில் கூசிப் போன கண்களுக்கு அதையொத்த பல தியாக வரலாறுகள் அவ்வளவு தூரம் புலப்படாது போய்விட்டன. அத்தகைய மகத்தான மறைக்கப்பட்ட தியாக வரலாறுகளில் ஒன்றுதான் தியாகி சந்திர சேகர் ஆசாத்தின் வரலாறாகும்.
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் செயல்பட்ட ஹிந்துஸ்தான் சோ­லிஸ்ட் ரிபப்ளிக்கன் ஆர்மி என்ற அமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவராக விளங்கியவர் சந்திர சேகர் ஆசாத் ஆவார். தனது 15,ஆவது வயதில் அதாவது பள்ளிப் பருவத்திலேயே ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டமைக்காகக் கைது செய்யப்பட்ட சந்திர சேகர் சீத்தாராம் திவாரி, நீதிமன்ற விசாரணையின் போது தனது இயற்பெயரைத் துறந்து தனக்குத் தானே ஆசாத் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார். விடுதலை என்ற பொருள் கொண்ட அப்பெயரை உச்சரித்ததற்காக வெள்ளை நீதிமன்றம் அவருக்கு விதித்த 15 சவுக்கடிகள் என்ற தண்டனையை ஒவ்வொரு அடி அவர் மேல் விழுந்த போதும் பாரத அன்னை வாழ்க! என்ற முழக்கத்துடன் அதனை எதிர் கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் காந்தியடிகளால் இடையில் நிறுத்தப்பட்டது விடுதலைப் போரில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய பலரைப் பயங்கரவாத நடவடிக்கைகள் பக்கம் தள்ளியது. அவ்வாறு தள்ளப்பட்டவரில் ஆசாத்தும் ஒருவர்.

தங்களது துணிச்சலான நடவடிக்கைகளின் மூலம் சோர்வுற்றிருந்த இளைஞர் சமூகத்தைத் தட்டியெழுப்ப விரும்பிய ஆசாத் போன்றவர்களை வெள்ளை அரசு மிகக் கடுமையான அடக்கு முறைகள் மூலம் வேட்டையாடியது. அடக்கு முறைகளைத் துச்சமெனக் கருதி தங்களது நடவடிக்கைகளைத் தொடர்ந்த நிலையிலும் அவர்களுக்குக் கிடைத்த அனுபவம் புகட்டிய படிப்பினையை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. அப்படிப்பினை வரலாற்றின் ஒரு விதியினை, அதாவது ஏகாதிபத்தியத் தளையிலிருந்தான இந்திய மண்ணின் உண்மை விடுதலை விவசாயிகள் மற்றும் தொழிலாளர் பங்கேற்பின்றிச் சாதிக்கப்பட முடியாது என்ற படிப்பினையை அவர்கள் மனதில் ஆழப்பதித்தது. அது மட்டுமின்றி வெள்ளையரிடமிருந்து பெறும் நமது விடுதலை சுதேசி முதலாளிக் கொள்ளையரின் கைகளில் சென்று சேர்ந்து விடக்கூடாது என்றும் அவர்கள் கருதினர். அதன் காரணமாகவே அவர்கள் தாங்கள் உருவாக்கிய அமைப்பிற்கு சமூகத்தின் அடிப்படை மாற்றத்தை வலியுறுத்தும் முகமாக ஹிந்துஸ்தான் சோ­சலிஸ்ட் ரிபப்ளிக்கன் ஆர்மி என்ற பெயரினைச் சூட்டினர்.
செயல்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த அவர்கள் சரியான புரிதலின்றி மேலோட்டமாக உணர்ச்சி வசப்பட்டு அறிவித்ததே அவர்களது சோ­லிஸக் கண்ணோட்டம் என்பதே அக்கால கட்டத்தில் அவ்விளைஞர்கள் குறித்த பலரது புரிதலாக இருந்தது. அத்தகைய புரிதலின் அடிப்படையில் காந்தி இர்வின் பேச்சுவார்த்தைகளின் போது அரசியல் கைதிகளுக்கான பொது மன்னிப்பைத் தங்களை ஒத்தவர்களுக்கும் வலியுறுத்திக் கோருவதற்காக பண்டித ஜவஹர்லால் நேருவைச் சந்திக்கச் சென்ற சந்திர சேகர் ஆசாத்திடம் நேரு வினவினாராம் நீங்கள் கொண்டுவர விரும்பும் சோ­லிசம் எத்தகையது என்று. எவ்விதத் தயக்கமுமின்றி ஆசாத் நேருவிடம் கூறினாராம். நாங்கள் கொண்டுவர விரும்புவது விஞ்ஞான சோசலிசம்; அதனால் தான் கார்ல் மார்க்ஸின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதை எங்கள் அமைப்பில் சேர்வதற்கான முன் நிபந்தனையாகத் நாங்கள் வைத்திருக்கிறோம் என்று.
சோசலிசக் கண்ணோட்டத்தினால் கவரப்பட்ட பின்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்களுக்கிருந்த நம்பிக்கை அகன்று விட்டது. அதே சமயத்தில் காந்தியடிகள் வலியுறுத்திய சாத்வீக வாதம் உண்மையான விடுதலையைச் சாதித்துத் தரும் என்று நம்பிக்கையும் அவர்களிடம் ஏற்படவில்லை. ஆளும் வர்க்கங்கங்களின் அடக்குமுறை நடவடிக்கைகள் சமூக ரீதியாகவே ஒரு பெரும் எழுச்சியை உருவாக்கும்; ஆளும் வர்க்க வன்முறைக்கு எதிரான எதிர் வன்முறையைக் கொண்டதாகவே அது இருக்கும் என்றே அவர்கள் கருதினர். உணர்ச்சியோடு சோசலிசக் கருத்துக்களைக் கற்றறியும் ஆர்வத்தைக் கொண்டவர்களாகவும் அவர்கள் விளங்கினர். அக்கருத்துக்களைக் கற்றறிவதற்குத் தேவையான அளவு ஆங்கில அறிவு பெறாதவராக இருந்த போதும் ஆசாத் அக்கருத்துக்களை பகத்சிங் போன்றவர்களை வாசித்து மொழி பெயர்த்துக் கூறச் சொல்லி அறியும் ஆவல் கொண்டவராக விளங்கினார். சித்தாந்தம் மட்டுமல்ல; அதனை நடைமுறைப் படுத்துவது குறித்த முதல்தர அறிவினைப் பெறுவதற்காக பிரித்வி சிங் என்ற தோழரை சோவியத் யூனியனுக்கு அனுப்பவும் ஆசாத் திட்டமிட்டார்.
அது குறித்து சுகதேவுடன் (இவர் பகத்சிங்குடன் தூக்கிலிடப்பட்ட சுகதேவ் அல்ல) அலகாபாத்தில் உள்ள ஆல்பெர்ட் பூங்காவில் பேசிக் கொண்டிருந்த போது தான் வெள்ளை அரசின் காவல்துறை அவரைச் சுற்றி வளைத்துச் சுட்டுக் கொன்றது.
கம்யூனிஸ சித்தாந்தத்தின் அரவணைப்பிற்குள் வந்ததால் தான் பல பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் அவர்கள் கைகொண்ட ரகசிய நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு தோன்றிய எந்திரகதியிலான சிந்தனைப் போக்கும் அது அவர்களிடம் தோற்றுவித்திருந்த ஒருவகை பாசிஸ மனநிலையும் சந்திர சேகர் ஆசாத் போன்றவர்களிடம் இல்லாதிருந்தது. பல சமயங்களில் இந்து மறுமலர்ச்சி வாதம் போன்ற மதவாதப் போக்குகள் தோற்றுவித்த குருட்டுத்தனமான நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்ட மனப் போக்கே அத்தகைய எந்திர கதியிலான சிந்தனைப் போக்கை பல பயங்கரவாத அமைப்புப் பின்னணியைக் கொண்டிருந்தவர்களிடம் ஏற்படுத்தியது. அப்போக்கை அறவே களைய வேண்டும் என்பதற்காகவே ஆசாத் தலைமையில் இயங்கிய எச்.எஸ்.ஆர்.ஏ. அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் மத அடையாளங்கள் இல்லாதிருப்பது வற்புறுத்தப்பட்டது. பகத்சிங் தனது சீக்கிய மத அடையாளங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதும் அந்த அடிப்படையில் தான்.
அத்தகைய எந்திர கதியிலான சிந்தனைப் போக்கிலிருந்து ஆசாத் விடுபட்டிருந்ததே அவரைத் தாயன்பும், சகோதர பாசமும் மிக்க தலைவராகவும் மிளிரச் செய்தது. பகத்சிங்கை அவர் தனது சொந்த சகோதரன் போலவே பாவித்தார். பாராளுமன்றத்தில் குண்டு வீசுவதற்குப் பகத்சிங்கை அனுப்ப அவர் மிகவும் தயங்கினார். சாண்டர்ஸ் கொலை வழக்கில் அவர் சிக்கிக் கொள்வார் என அஞ்சினார். தனது உயிர் குறித்து எள்ளளவு கூடக் கவலைப் படாத அவரது உள்ளம் பகத்சிங்கின் இன்னுயிரைக் காக்கப் போராடியது. தான் தலைமறைவாக இருந்த ஒரு வீட்டில் பெண் பிள்ளை ஒருவரை மணமுடித்துக் கொடுக்கவியலாது அவ்வீட்டினர் அல்லலுற்ற நிலையைக் கண்ணுற்ற அவர், தன்தலைக்கு வெள்ளை அரசால் வைக்கப் பட்டிருந்த விலையினைப் பெற்றாவது அப்பெண் பிள்ளையின் திருமணத்தை முடியுங்கள் என அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
இத்தகைய மகத்தான நற்குணங்கள் கொண்டவராக இருந்த அந்த மாமனிதர்,தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தேச விடுதலைக்குத் தத்தம் செய்த தியாகி, வீர்பத்ர திவாரி என்ற போலீஸூக்குத் துப்புக் கொடுப்பவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு நாட் போவர் என்பனின் தலைமையிலான வெள்ளைப் போலீஸ் படையினால் சுற்றி வளைக்கப்பட்டு அலகாபாத்தின் ஆல்பெர்ட் பூங்காவில் அவர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களில் பலரைப் படுகாயப் படுத்திய பின்னர் வீர மரணம் அடைந்தார். அந்தத் துயர சம்பவம் 1931ம் ஆண்டு பிப்ரவரி 27 ம் நாள் நடைபெற்றது. பல காலம் வெள்ளைப் போலீஸார் கைக்குச் சிக்காது அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஆசாத்தைக் கொன்றுவிட்ட களிப்பில் வெள்ளைப் போலீஸார் திளைத்திருந்த வேளையில் அலகாபாத் நகர மக்கள் ஆசாத்தின் குருதியினால் தோய்ந்த அவர் சுடப்பட்ட இடத்தின் மண்ணைச் சேகரித்து அவரின் நினைவைப் போற்றிப் பாதுகாக்கும் உண்மையான திருப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். அவர் மீது மக்கள் கொண்டிருந்த அபிமானத்தைக் கண்டு பீதியுற்ற வெள்ளை அரசு யாருக்கும் தெரியாத வகையில் ரசூலாபாத் என்ற இடத்திற்கு அவரது உடலை எடுத்துச் சென்று தகனம் செய்தது. அன்றுதொட்டுத் தாக்குதலின் போது அவர் மறைந்து கொள்ள இடமளித்த மரம் மக்களின் வழிபாட்டுப் பொருளாக ஆனது. அதைக் காணச் சகிக்காத வெள்ளை அரசு அம்மரத்தை வெட்டிச் சாய்த்தது. அவ்விடத்தில் வேர்விட்டுத் தளைத்த மற்றொரு மரத்தடியில் ஆசாத்தின் வீரத் திருவுருவம் இப்போது சிலையாக நின்று கொண்டிருக்கிறது.
அடிமைச் சவுக்கடியின் வேதனையை உள்ளார்ந்து உணர்ந்து அதற்கு எதிராகத் தனது அப்போதைய சிந்தனைகளுக்குகந்த விதத்தில் போராடத் தொடங்கி, அனுபவம் கற்றுக் கொடுத்த பாடத்தினை உதாசீனம் செய்யாது அதிலிருந்து படிப்பினை எடுத்துச் செயல்பட ஆரம்பித்து அதன் மூலம் சமூகத்தின் உண்மையான விடுதலை மார்க்சியக் கருத்தோட்டத்தின் அடிப்படையில் தான் சாதிக்கப்பட முடியும் என்றறிந்து அதனைச் செயல்படுத்த வல்ல அமைப்பிற்கு உருக்கொடுத்து சமூக விடுதலைக்கு அடித்தளமிட்டுத் தனது வீரத்தாலும் தியாகத்தாலும் இன்றும் நமது இளைஞர் சமூகத்தின் உத்வேகமாகவும் உன்னத எடுத்துக் காட்டாகவும் விளங்கும் தியாகி சந்திர சேகர் ஆசாத்தை மாற்றுக் கருத்து அவரது நினைவு தினத்தில் மனதார நினைவு கூர்கிறது. அவரது நினைவை அகற்ற நினைக்கும் ஆளும் வர்க்கச் சதியினை தனது எழுத்துக்கள் மூலம் முறியடித்து என்றென்றும் அவரது நினைவு மங்காது மக்களது மனதில் நீடித்து நிலைபெறத் தன்னாலியன்ற அனைத்தையும் செய்ய நமது இதழ் உறுதி ஏற்கிறது.

No comments:

Post a Comment