ஒரு நாட்டின் தொழில்கள் தேசியமயமாக்கப் படுவதற்கும், சமூக மயமாக்கப்படுவதற்கும் இடையில் மிகப்பெரும் வேறுபாடுகள் உள்ளன. உலகின் அனைத்து நாடுகளிலும் ஏதாவது சில தொழில்கள் தேசிய மயமாக்கப் பட்டவையாகவே உள்ளன. அவ்வாறு சில தொழில்கள் தேசிய மயமாக்கப்பட்டு அரசுத் துறையில் இருப்பது அரசாங்கங்களுக்கு அவசியமாகவும் உள்ளது.
அதாவது தேவையற்ற போட்டிகளைத் தவிர்த்து பாரபட்சமின்றி அனைத்து முதலாளித்துவத் தொழில்களின் வளர்ச்சிக்கும் தேவையான ஆதார வசதிகளைக் குறைந்த செலவில் செய்து தருவது முதலாளித்துவ அரசுகளுக்கு அவசியமாக உள்ளது. அதைத் தேசிய மயமாக்கப்பட்ட நிறுவனங்கள் செய்கின்றன.
ஆனால் இவ்வாறு முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் தேசிய மயத்தையும் அரசுத்துறையில் இருக்கும் தொழில்களையும் சோசலிசத்தின் சுவடுகள் என்று கம்யூனிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் கட்சிகள் கூட நமது நாட்டில் தவறாகக் கருதுகின்றன. இங்கு மட்டுமல்ல அப்போக்கு வெவ்வேறுபட்ட அளவுகளில் உலகின் பல நாடுகளிலும் நிலவுகிறது.
குறிப்பாக நமது நாட்டில் விடுதலை பெற்ற அரசாங்கம் அனைத்துத் தொழில்களின் வளர்ச்சிக்குமென போக்குவரத்து, செய்தித் தொடர்பு, இரும்பு - எஃகு மற்றும் மின் உற்பத்தி போன்றவற்றை அரசுத்துறையில் உருவாக்கி குறைந்த செலவில் அதனை முதலாளிகளுக்கு வழங்கி வந்தது. இதனை நமது நாட்டின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்கள் செய்தார்.
ரஷ்யாவின் சோசலிசப் பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்திய தோழர் ஸ்டாலின் கொண்டு வந்த ஏழாண்டுத் திட்டங்களோடு இதனை ஒப்பிட்டு சோசலிசத்தின் சுவடுகள் இவை என்று இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரில் செயல்பட்டவர்கள் கூறிவந்தனர். ஆர்வ மிகுதியில் அவர்களில் சிலர் இவற்றை இந்தியாவின் கோவில்கள் என்று கூட வர்ணித்தனர்.
இதுபோன்ற ஆதார வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்த இந்திய முதலாளித்துவம் ஒரு கட்டத்தில் இந்தத் தொழில்களிலும் முதலீடு செய்யத் தங்களுக்கு வழிதிறந்துவிட வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கியது. அந்நிலையில் தொடர்ச்சியாக முதலாளித்துவத் தொழில்களின் வளர்ச்சிக்குப் பெரும் தொகைகளை மானியங்களாகவும் தேசப்பாதுகாப்பிற்கு என்ற பெயரில் இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் செலவு செய்து அதனால் நிதிப் பற்றாக்குறையில் இருந்த அரசாங்கங்கள் இந்த அரசுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு வழங்கி அதன் மூலமாகக் கிட்டும் வருவாயைக் கொண்டு அதனை ஈடுகட்டவும் முனைந்தன.
அவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குதற்கான காரணங்களாக அவற்றில் நிலவிய நிர்வாகத் திறமை குறைவு, அவற்றில் பல நஷ்டத்தில் இயங்கும் போக்கு ஆகியவற்றைச் சுட்டிக் காட்டின. இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரில் செயல்பட்டவர்கள் ஒரு வியத்தில் இடைவிடாமல் எதற்காகவாவது தொடர்ந்து போராடினார்கள் என்றால், அப்போராட்டம் இந்த அரசுத் துறையிலிருந்த தொழில்களை தனியார்மயமாக்கக் கூடாது என்பதற்காகத்தான் என்று ஓரளவிற்கேனும் கூற முடியும்.
இயல்பாகவே அத்துறைகளில் ‘கம்யூனிஸ்ட்களின்’ தொழிற்சங்கங்களும் வலுமிக்கவைகளாக இருந்தன. அதற்கு ஒரு முக்கியக் காரணம் அரசுத்துறை என்ற ரீதியில் அவை கண்துடைப்பிற்காகவாவது தொழிலாளர் சட்டங்களை மதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன என்பதே. இந்தக் காலகட்டத்தில் தற்போது வளரும் தனியார் துறை சார்ந்த தொழில்களில் தொழிற்சங்கம் என்பது அறவே இல்லாமல் போயுள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் என பெயரளவிற்கேனும் காட்டப்பட முடிந்தவையாக இத்தகைய வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பி.எஸ்.என்.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் இருந்தன.
முக்கிய முழக்கம்
இத்தொழிற் சங்கங்களின் ஒரு முக்கிய முழக்கம் தேசியமயமாக்கப்பட்ட நிறுவனங்களைக் காப்போம் என்பதாக இருந்தது. இது அச்சங்கங்களின் ஒரு நிரந்தர முழக்கமாகவும் விளங்கியது அவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பது என்பதை உருப்படியாகச் செய்ய வேண்டுமென்றால் அதன் நிர்வாகத்தின் போக்குகளையும் முறைகேடுகள் எவையும் நடக்கின்றனவா என்பதையும் இடைவிடாமல் கண்காணிப்பது அவசியமாகும்.
அவ்வாறு கண்காணிப்பதற்குத் தேவையான வாய்ப்புகளும் இத்தொழிற் சங்கங்களுக்கு இருக்கவே செய்கின்றன. இந்நிறுவனங்களை நிர்வகிக்கும் இயக்குனர்களில் தொழிலாளரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இயக்குனர்களும் இச்சங்கங்களின் சார்பாக நியமிக்கப் படுகின்றனர்.
குறிப்பாக நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் இந்தத் தொழிலாளர் இயக்குனர் கண்ணோட்டம் முழுமையாகச் செயல்பட்டு வருகிறது வங்கிகளின் நிதிநிலை அறிக்கைத் தயாரிப்பு உள்பட அதன் பல நடவடிக்கைகளை நேரடியாகத் தெரிந்து கொள்ளும் அனைத்து வாய்ப்புகளும் இந்தத் தொழிலாளர் இயக்குனர்களுக்கு உள்ளன.
அங்கீகாரம் வழங்கும் அநேக வாய்ப்புகள்
அதையயாத்த பல்வேறு வாய்ப்புகள் தொலைத் தொடர்பு நிறுவனங்களிலும் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களுக்கு அந்நிறுவனத்தின் உண்மைநிலையினைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. தற்போது தொழிற்சங்கங்களின் அங்கீகாரமும் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொலைத் தொடர்புத் துறையில் நடைபெறுகிறது. அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் அனைத்து உயர்மட்ட அளவிலான பேச்சு வார்த்தைகளில் பங்கேற்கவும் செய்கிறது. நிறுவனங்களின் நிதி நிலைமையை அறிந்து கொள்ளும் வாய்ப்புகளும் அவற்றிற்குத் தாராளமாக உள்ளன.
இப்போது பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக விளங்குவது சி.பி.ஐ(எம்). கட்சியின் வழிகாட்டுதலில் செயல்படும் அதன் ஒரு முக்கிய வெகுஜன அங்கமாக விளங்கும் பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயிஸ் யூனியன் என்ற அமைப்பாகும். இத்துறையில் செயல்படும் தொழிற்சங்க அமைப்புகளிலேயே மிகவும் புரட்சிகரமானதுபோலவும் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளைப் பெற்றுத் தருவதில் முனைப்புடன் இருப்பது போலவும் காட்டிக் கொள்ளும் அமைப்பு இது.
தலையாய மோசடி
இந்த நிலையில்தான் இதுவரை இந்தியாவில் நடைபெற்ற மோசடிகளிலெல்லாம் தலையாய மோசடியாக வர்ணிக்கப்படும் 2ஜி அலைக்கற்றை விற்பனையில் நிகழ்ந்துள்ள மோசடி உள்ளது. இதனால் பி.எஸ்.என்.எல். க்கு ஏற்பட்ட நட்டம் 1,76,000 கோடி ரூபாய் என அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரி அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதன் விளைவாக அந்த ஒளிக்கற்றை ஏலம் விடப்பட்ட போது அமைச்சராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த மந்திரியான ராசா தற்போது பதவி விலக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இறுதியில் அவர் கைது செய்யபட்டும் உள்ளார்.
இத்தகைய பெரிய வருவாயிழப்பினைச் சந்தித்த பின்னர் ஆண்டுதோறும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்த உற்பத்தியுடன் இணைந்த போனஸ் தொகை இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்பது அதற்கான காரணமாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஒட்டுமொத்த விசயத்திலும் அந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாகச் செயல்படும் ஒரு பொறுப்புள்ள இடதுசாரித் தொழிற்சங்கம் எவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டுமோ அவ்வாறு நடந்து கொண்டதா என்று பார்ப்பது மிகவும் அவசியமாகும்.
வாய்ப்புகள்
இப்பிரச்னையினால் ஏற்பட்டுள்ள இழப்பு இத்தனை அதிகமானது என்பது இப்போது வெளிவந்திருந்தாலும் இதில் 60,000 கோடிக்கு நிகரான இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்பது விற்பனை செய்யப்பட்ட அந்த வேளையிலேயே வெளிவந்துவிட்டது. ஒரு நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற இடத்தில் இருந்து செயல்படும் அமைப்பிற்கு இந்த ஊழல் உடனடியாகவும் துல்லியமாகவும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரிந்திருக்காமலிருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இத்தனை வசதிகள் இருந்தும் அதனைத் தெரிந்திராமல் அது இருந்திருந்தால் அதன் தலைவர்கள் தொழிற்சங்கம் நடத்துவதற்கே அருகதையற்றவர்கள் என்பதே அதன் பொருளாக இருக்க முடியும்.
ஆனால் இத்தனை பிரமாண்டமான ஊழல் 2008ம் ஆண்டில் நடந்தபோது பி.எஸ்.என்.எல்.ன் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருந்த சி.பி.ஐ(எம்) ன் வழிகாட்டுதலில் செயல்படும் பி.எஸ்.என்.எல்.இ.யு. சங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அதற்கு எதிர்ச் சங்கமாக இருந்த சி.பி.ஐ. கட்சியின் வழிகாட்டுதலில் செயல்படும் சங்கமாவது இதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்ற கருத்தைப் பெயரளவிற்காவது முன்வைத்தது. அலைக்கற்றையின் விலை நிர்ணயத்தை ஏலம் விட்டுத்தான் தீர்மானிக்க முடியும் அதுவே உலக அளவில் கடைப் பிடிக்கப்படும் நடைமுறையாக உள்ளது என்பதையும் அந்த அமைப்பின் தமிழகத் தலைவர்களில் ஒருவரான மதிவாணன் வற்புறுத்தினார். நடந்துள்ள ஊழலின் அளவு 60,000 கோடி ரூபாய் அளவிற்கானதாகக் கூட இருக்க முடியும் என்பதையும் அவர் கூறினார். அந்நிலையில் பி.எஸ்.என்.எல்.இ.யு. சங்கம் இதனைக் கண்டு கொள்ளாதிருந்தது மட்டுமின்றி அவ்வாறிருந்ததற்காக ஒரு பாராட்டுப் பத்திரத்தையும் தமிழக முதல்வரிடமிருந்து பெற்றது.
கண்காணிக்கத் தவறியது ஏன்?
இந்த நடவடிக்கை மூலம் தங்களால் இந்தியாவின் கோவில்கள் என வர்ணிக்கப்பட்ட நிறுவனங்களில் தலையாய நிறுவனமாக விளங்கும் பி.எஸ்.என்.எல் ன் வருவாய் இந்த அளவிற்குக் கொள்ளை போனதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் என்ற ரீதியில் பி.எஸ்.என்.எல்.இ.யு. வேறெதையும் செய்யவில்லை. ஒரு சராசரித் தொழிற்சங்கம் செய்திருக்க வேண்டிய கண்காணிப்புப் பணியினைக் கூட அது செய்யவில்லை. அதற்குக் காரணமும் பின்னணியும் இல்லாமலும் இல்லை. அவை என்ன?
கூட்டாளியும் கூட்டுக் களவாணித் தனமும்
முதற்கண் அந்த அமைப்பிற்கு வழிகாட்டியாக இருந்த சி.பி.ஐ(எம்). கட்சி இந்த ஊழலுக்கு மூல காரணமாக இருந்த அமைச்சர் ராசாவின் கட்சியான தி.மு.க. வுடன் தேர்தல் கூட்டணியில் இருந்தது; சங்க அங்கீகாரத்தைப் பெறுவதற்காக பி.எஸ்.என்.எல். அமைப்பில் நடந்த தேர்தலில் தனது வெற்றிக்காக அமைச்சர் ராசாவின் கட்சியான தி.மு.க.வின் தெப்பு(TEPU) என்ற பெயரில் செயல்பட்ட தொலைத் தொடர்புத் தொழிற் சங்கத்துடன் பி.எஸ்.என்.எல்.இ.யு. கூட்டுச் சேர்ந்துமிருந்தது. இவையே சி.பி.ஐ(எம்) ன் பி.எஸ்.என்.எல்.இ.யு. தொழிற்சங்கத்தின் அப்பட்டமான கடமை தவறிய போக்கிற்கான மிகமுக்கியக் காரணங்கள் ஆகும்.
அதாவது தனது கூட்டாளிகளின் களவாணித் தனத்தைக் கண்டு கொள்ளாத கூட்டுக் களவாணித்தனம் அச்சங்கத்திடம் இருந்துள்ளது. அதாவது ராசா தொலைத் தொடர்பு அமைச்சராக இருப்பதால் அவர் செய்யும் ஊழல்களைக் கண்டு கொள்ளாதிருந்தால் அவ்வாறு கண்டு கொள்ளாதிருந்து அவற்றிற்கு ஒரு வகையில் உடந்தையாகவும் இருந்தால் அதன் நன்றிக் கடனாக ஊழியர்களுக்கு பொருளாதார ரீதியாக எதையாவது பெற்றுத் தந்து அதனைத் தங்கள் சாதனை என்று கூறிக் கொள்ளலாம் என்பதிலேயே இச்சங்கம் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளது. அச்சாதனைகளை முன்வைத்து அதன்மூலம் அடுத்துவரும் அங்கீகாரத்திற்கான தேர்தலில் தங்களது வெற்றி வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதும் அதன் உபாயமாக இருந்துள்ளது.
இதுதவிர அச்சங்கத்திற்கு வழிகாட்டும் அரசியல் கட்சியான சி.பி.ஐ(எம்). அதன் தமிழகக் கூட்டணியின் தலைவராக இருந்த தி.மு.க. தலைமையை சந்தோசத்தில் வைத்திருந்து அதன் மூலம் சில அற்பப் பலன்களை அடைந்து அவற்றைத் தங்கள் சாதனைகளாக அரசியல் அரங்கில் அறிவித்து நாடாளுமன்ற அரசியலில் தனது நலனை மேம்படுத்திக் கொள்வதற்கு விரும்பியது.
விவரங்கள் சங்கங்களுக்கே தெரியும்
இவையே ஸ்பெக்ட்ரம் ஊழலை பி.எஸ்.என்.எல்.இ.யு. கண்டு கொள்ளாதிருந்ததற்கான எப்படிப் பார்த்தாலும் இல்லை என்று கூற முடியாத வெளிப்படையாகத் தெரியும் குறைந்தபட்சக் காரணங்களாகும். இதைத் தவிர வேறு பலன்களை அத்தொழிற் சங்கத்தின் தலைமை ஒரு பொதுத்துறை நிறுவனம் கொள்ளை போவதற்கான விலையாகப் பெற்றிருந்தாலும் கூட அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை.
பொதுவாக ஒரு தொழிற்சாலையில் அல்லது தொழிற்துறையில் நடைபெறும் ஊழல்களையும் மோசடிகளையும் எதிர்க்கும் நடவடிக்கைகள் அத்துறையில் செயல்படும் தொழிற்சங்கங்களால் தான் நடத்தப்படும். ஏனெனில் அச்சங்கங்களுக்கே அவை குறித்த முழு விவரங்களும் தெரியும். அங்கு நடைபெறும் முறைகேடுகள் பற்றிய புள்ளி விபரங்கள் கூட அத்தொழிற் சங்கங்கள் மூலமாகவே அதனை வழிகாட்டும் கட்சிக்குச் செல்லும். அதனை மையமாக வைத்தே கட்சியின் அத்துறை குறித்த அரசியல் கணிப்புகளும் உருவாகும்.
அம்பலப்படுத்தப் பயன்படாத அங்கீகாரம்
ஆனால் இந்த விசயத்தில் நடைபெற்ற ஊழல் குறித்த தணிக்கைக் குழுவின் அறிக்கை வெளிவந்து அனைத்து அரசியல் கட்சிகளும் அதனைக் கையிலெடுத்த பின்னரும் கூட அது குறித்த தெளிவான விளக்கங்கள் யாரிடமிருந்து மக்களுக்கு வரவேண்டுமோ அதனிடமிருந்து அதாவது அந்தத் துறையைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களிடமிருந்து இதுவரை மக்களுக்கு வரவில்லை.
மீண்டும் மீண்டும் என்.எஃப்.டி.இ.ன் மதிவாணன் மட்டுமே ஊடகங்களில் தோன்றி இந்த ஊழல் குறித்துப் பேசுகிறாரே தவிர அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான பி.எஸ்.என்.எல்.இ.யு ன் எந்த நிர்வாகியும் இதுகுறித்த விளக்கங்களை இன்றுவரை ஊடகங்களில் தோன்றி முன்வைக்கவில்லை.
கூடா நட்பு
இந்தக் கோளாறை மறைத்து ஈடுகட்டும் விதத்தில் சி.பி.ஐ(எம்). கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் யெச்சூரி இப்பிரச்னை குறித்து தான் முன்பே கடிதம் எழுதியதாக மீண்டும் மீண்டும் கூறிக் கொள்கிறார்.
இப்போதும் கூட பி.எஸ்.என்.எல்.இ.யு. இப்பிரச்னையை முழுமையாகக் கையிலெடுக்கவில்லை. வேறுவழியின்றி இந்த ஊழல் குறித்து பாவனைக்காக அப்பட்டமாக இது பிரபலமாகிவிட்ட இன்றைய நிலையில் அவ்வாறு செய்யாவிட்டால் அம்பலமாகி விடுவோம் என்பதற்காகச் சில ஆர்ப்பாட்டங்களை மட்டும் அது நடத்தியது. இப்போதும் கூட எந்த தெப்பு தொழிற்சங்கம் இன்றுவரை அமைச்சர் ராசாவின் ஊழலை மூடி மறைப்பதில் முழு மூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டுள்ளதோ அந்த அமைப்புடன் நடந்து முடிந்த தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் வெற்றிக்காக உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் தொழிற்சங்கங்கள் அவர்களது தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் அதாவது கோட்பாடு ரீதியாக அவர்கள் எடுக்கும் நிலைபாடுகளை மையமாக வைத்து தொழிலாளர்களின் முன்னேறிய பகுதியினரைஅடையானம் கண்டு அவர்களை அரசியல் மயப்படுத்தி அதன்மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக அவர்களை ஆக்கி சமூக மாற்றச் சூழ்நிலையை வலுப்படுத்துவது என்ற அடிப்படையில் செயல்படக் கூடியவை.
தொழிற்சங்கத்திலும் நாடாளுமன்ற வாதம்
ஆனால் பி.எஸ்.என்.எல்.இ.யு. சங்கத்தைப் பொறுத்தவரை கோட்பாடு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்குமளவிற்கே இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கும் விவகாரத்தில் நடந்து கொண்டுள்ளது. அதன் நடவடிக்கைகள் சராசரித் தொழிற் சங்கங்களின் அளவிற்குக் கூட தொழிலாளர் நலனில் அக்கறையில்லாத தொழிற்சங்கமாகவே அதனை அம்பலப்படுத்தியுள்ளது.
இத்தனை பெரிய வருவாயிழப்பின் காரணமாகத்தான் பி.எஸ்.என்.எல். நஷ்டத்தில் இயங்குகிறது என்பது பகிரங்கப்படுத்தப்பட்டு அதனால் தான் அதன் தொழிலாளர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த போனஸ் தொகையும் இந்த ஆண்டு மறுக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையான விசயம் கூட அச்சங்கத்தால் முன்னிலைப் படுத்தப்படவில்லை. அவ்வாறு அது போன்ற விசயங்களை முன்னிலைப்படுத்தித் தொழிலாளர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன்மூலம் தொழிலாளரை வென்றெடுக்கும் சரியான முறையைக் கூட கைவிட்டுவிட்டுத் தொழில் நுட்ப ரீதியிலான அதன் வெற்றிக்காக அமைச்சரின் ஊழலை வெளிப்படுத்தாமல் அதற்குத் துணைநிற்கும் தெப்பு போன்ற தொழிற்சங்க அமைப்புகளுடன் கைகோர்த்துச் செயல்பட்டு எப்படியாவது அங்கீகாரத்தைத் தக்கவைக்க வேண்டும் என்ற அப்பட்டமான சந்தர்ப்பவாதப் போக்கிலேயே அது செயல்பட்டது.
உண்மையான உழைக்கும் வர்க்க அமைப்புகளைப் பொறுத்தவரை அங்கீகாரம் என்பது துறை குறித்த தகவல்களை அறிய சங்கத்திற்குள்ள வாய்ப்பினையும், அங்கீகாரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் உழைக்கும் வர்க்க நலனை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதற்குக் கிடைத்துள்ளதொரு வாய்ப்பு என்பதைத் தவிர அதற்கு வேறெந்த முக்கியத்துவமும் இல்லை. அதைச் செய்யத் திராணியில்லாததாக ஒரு அமைப்பு ஆகும் போது அதன் பின் அங்கீகாரத்தால் அச்சங்கத் தலைமைக்குக் கிட்டுவது ஒருவகை தொழிலாளர் துரைத்தனமே தவிர வேறெந்த தொழிலாளர் நலன் சம்பந்தப்பட்ட விசயமும் அல்ல.
No comments:
Post a Comment