Powered By Blogger

Monday, February 28, 2011

கல்விக்கட்டண உயர்வினை எதிர்த்த இங்கிலாந்து மாணவர் போராட்டம்:



சளைக்காத மாணவர் இயக்கத்தின் முன் பலிக்காமல் போன ஆட்சியாளரின் தந்திரங்கள்
பிரான்ஸையே உலுக்கி எடுத்த உழைப்பாளர் மற்றும் மாணவர் போராட்டங்கள் ஓய்ந்தது போல் காட்சியளித்தாலும் நீறுபூத்த நெருப்பாக இருந்து கொண்டுள்ளன. அந்நிலையில் லண்டன் மாநகரையே இங்கிலாந்து நாட்டின் மாணவர் போராட்டங்கள் உலுக்கி எடுத்துக் கொண்டுள்ளன. இது ஐரோப்பாக் கண்டமே ஒரு வகையான மகத்தான எழுச்சியினால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் தோற்றத்தை உருவாக்கியுள்ளது.


2010 நவம்பர் 10ம் நாள் பயிற்சிக் கட்டண உயர்வினை எதிர்த்து ஒரு மாணவர் எழுச்சி லண்டன் நகரில் உருவெடுத்தது. 50,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் அணிதிரண்டு கட்டண உயர்வை எதிர்த்த கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் அணிவகுத்து வரும் பாதை லண்டன் மாநகரக் காவல்துறைக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால் காவல்துறை அந்த ஊர்வலத்தை இடையில் தடுத்து நிறுத்தியது. இலக்கைச் சென்றடைய முடியாத மாணவர்கள் அப்போது இங்கிலாந்தை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி அலுவலகத்தைத் தாக்கியதாக பத்திரிக்கைச் செய்திகள் கூறின.
அடுத்துக் கல்விக் கட்டண உயர்வு குறித்த மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட நாளான 9.12.2010 அன்று ஒரு பெரும் மாணவர் கிளர்ச்சி லண்டன் நகரை மீண்டும் உலுக்கி எடுத்தது. இந்த முறை காவல் துறையினரால் யூகித்து அறிய முடியாத வகையில் அணிவகுப்பு மாணவர் அமைப்புகளால் திட்டமிடப்பட்டது. ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட பாடல்கள் இசைத்த வண்ணம் சென்ற ஊர்தி ஒன்று மாணவர்களை வழிநடத்தியது. காவல் துறையினர் ஒவ்வொரு முனையாக மாணவர் ஊர்வலத்தைத் தடுக்கத் தடுக்க அங்கிருந்து மாற்றுப் பாதையில் அந்த ஊர்தியை வழி நடத்தி ஊர்வலத்தை நகர் முழுவதும் வியாபித்த ஒன்றாக அணிவகுப்பை ஏற்பாடு செய்தவர்கள் ஆக்கினர்.
மாணவர் ஊர்வலத்தில் எந்தச் சாக்கை முன்வைத்தும் கட்டண உயர்வைக் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம், புரட்சி ஓங்குக போன்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. எழுச்சி குறித்துப் பேசிய மாணவர் தலைவர்கள் இது ஒரு குறிப்பிட்ட விஷ‌யத்திற்காக உருவாக்கப்பட்டு அத்துடன் முடிந்து போகக்கூடிய விஷ‌யமல்ல. இது முடிவல்ல ஆரம்பம் என்று முழங்கினர்.
வேறுபட்ட இயக்கம்
இதுவரை ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் உருவான மாணவர் இயக்கங்களுக்கும் இந்த இயக்கத்திற்கும் இருந்த பெரிய வேறுபாடு இதில் இருந்த திட்டமிடுதல் ஆகும். இதன் மற்றொரு முக்கிய அம்சம் மாணவர் போராட்டத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவும் ஆகும். பிரான்ஸ்ல் உழைக்கும் மக்களின் போராட்டத்தில் மாணவர்களும், மாணவர் போராட்டத்தில் உழைக்கும் மக்களும் கலந்து கொள்ளும் வழக்கம் பல காலமாகவே இருந்து வருகிறது. ஆனால் இங்கிலாந்தில் இவ்வியக்கத்திற்குக் கிட்டிய மக்கள் ஆதரவு ஒரு புதிய போக்காகும்.
எங்கோ போய்விட்ட சமூக சிரத்தையற்ற தன்மை
வழக்கமாகப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் போன்றவற்றில் மிதமிஞ்சிய கேளிக்கை உணர்வு ததும்ப உற்சாகத்துடன் மாணவர்களும் இளைஞர்களும் ஈடுபடுவதை மட்டுமே பார்த்து வந்த லண்டன் நகர மக்களுக்கு இதுபோல் ஒரு கோரிக்கையை மையமாக வைத்து மாணவர்கள் அணிதிரண்டு தெருவில் இறங்கிப் போராடுவது ஒரு புது விச­யமாகத் தோன்றுகிறது.
அதனால் தான் பத்திரிக்கைகள் சமூக விசஷ‌யங்களில் மாணவர்களுக்கு இருந்த சிரத்தையற்ற தன்மை எங்கே போய்விட்டது என்று கேள்வி கேட்கின்றன. அதாவது சமூகச் சிரத்தையற்ற மாணவர்களின் போக்கு ஒரு வரவேற்கத் தகுந்த அம்சம் என்பது போலவும் அந்த நல்ல அம்சம் இப்போது இல்லாமல் போய்விட்டது ஏன் எனவும் முதலாளித்துவப் பத்திரிக்கை உலகம் ஆச்சரியத்துடன் வினவத் தொடங்கியுள்ளது.
அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் இளவரசர் சார்லஸ் அவரது மனைவி கமிலா ஆகிய இருவரும் சென்ற காரினை கிளர்ச்சிக்காரர்கள் தாக்கினர் என்ற செய்தியை இடைவிடாமல் பி.பி.சி. உள்ளிட்ட ஊடகங்கள் ஒலிபரப்பிப் பிரச்னையைத் திசைதிருப்பத் தொடங்கின.
ஏதோ வன்முறையில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இந்தக் கிளர்ச்சியினை ஏற்பாடு செய்தது போலவும் அந்த அடிப்படையிலேயே தாக்குதல் நடந்தது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். அதுவும் இங்கிலாந்து மன்னர் குடும்பத்தை முன்னுக்கு இழுத்து அதன் பிரபலத் தன்மையை நன்கு பயன்படுத்தி இந்தத் திசை திருப்பல் வேலையைத் திறம்படச் செய்தனர்.
கட்டண உயர்வு ஏன்?
இந்நிலையில் மாணவர் எழுச்சி இவ்வாறு ஐரோப்பாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருப்பதன் பின்னணி என்ன? அவ்வப்போது இலக்கேதுமற்ற கிளர்ச்சி நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவர் சமூகம் தற்போது திட்டமிட்டுச் செயல்படும் அளவிற்குச் சென்றுள்ளது எதனால்? இது ஆரம்பமே என்று வர்ணிக்கப்படும் இப்போராட்டத்தின் இறுதி இலக்காக அவர்கள் நினைப்பது எது? எப்போதும் இல்லாத அளவிற்கு மாணவர் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகி வளர்ந்து வருவதன் பின்னணி என்ன? ஆகிய கேள்விகளைத் தீர்க்கமாக அலசிப் பார்க்க வேண்டியது நமது கடமையாகும்.
இவற்றில் முதல் கேள்வியைப் பொறுத்தவரையில் வெளிப்படையாகப் பயிற்சிக் கட்டண உயர்வினை எதிர்த்ததே இப்போராட்டம் என்று ஊடகங்கள் சித்தரித்தாலும் அந்த கட்டண உயர்வு எதற்காக அரசால் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது என்பது பார்க்கப்பட வேண்டிய விசஷ‌யமாகும்.
அதாவது மக்களின் நலன் சார்ந்த விச­யங்களுக்காக இங்கிலாந்து அரசு இதுவரை செய்து வந்த நிதி ஒதுக்கீட்டைத் தற்போது மிகக் கடுமையாகக் குறைந்துள்ளது. அதன் பங்கும் பகுதியுமாகவே கல்விக் கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிந்திய இங்கிலாந்து நாட்டின் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்குப் பொதுச் செலவினங்கள் அரசால் குறைக்கப் பட்டுள்ளன. அந்தப் பின்னணியில் தான் இப்போராட்டங்கள் கிளர்ந்தெழுந்துள்ளன.
மக்கள் ஆதரவிற்கான காரணம்
எந்தக் காரணம் இவ்வாறு பொதுச் செலவினங்களை இங்கிலாந்து அரசு குறைப்பதற்கு அடிப்படையானதாக இருக்கிறதோ அந்தக் காரணமே மக்கள் ஆதரவு இப்போராட்டத்திற்குப் பெருகி எழுந்துள்ளதற்கும் அடிப்படைக் காரணமாகும்.
அதாவது உலகையே உலுக்கி எடுத்த 2008ல் உருவான முதலாளித்துவ உற்பத்தித் தேக்க நெருக்கடியே அரசைப் பொதுச் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கைக்கு இட்டுச் சென்றது. அதாவது வர்த்தகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட வங்கிகள் பலவற்றைப் பொதுப் பணத்தைச் செலவிட்டு மீட்ட இங்கிலாந்து அரசு, சமூகத்தின் பொதுவான நலன்களான கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி போன்றவற்றிற்கான செலவுகளை அப்பட்டமாகக் குறைக்கத் தொடங்கியது.
அதன் விளைவாகவே,மனிதகுலம் முழுவதற்கும் பயன்படத்தக்க உயிரியல் ஆராய்ச்சிகள் கைவிடப்பட்டன. அதனால் புகழ்பெற்ற பல உயிரியல் விஞ்ஞானிகள் இங்கிலாந்திலிருந்து கனடா போன்ற நாடுகளுக்கு இடம் பெயரத் தொடங்கினர். பல ஆராய்ச்சி நிலையங்களில் கடுமையான ஆட்குறைப்பு செய்யப்பட்டது. ஏறக்குறைய 5 லட்சம் பொதுத்துறை வேலை வாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டது.
என்னதான் வர்த்தகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட நிறுவனங்களுக்குப் பொதுப் பணத்தை வாரி வாரி வழங்கினாலும் வங்கிகள் போன்ற, அப்பணத்தை உதவியாக அடைந்த நிறுவனங்கள் அதனைப் புது வேலை வாய்ப்புகளை உருவாக்கப் பயன்படுத்தவில்லை. மாறாக அதனை இன்னும் அதிக வர்த்தகப் பந்தய நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் குறுக்கு வழியில் அதிக ஆதாயம் ஈட்டவும், தங்களது நிறுவனங்களின் மேல்தட்டு நிர்வாகத்தில் இருந்த கொழுத்த பூனைகளுக்கு நெருக்கடி காரணமாகக் கொடுபடாதிருந்த பலன்களை வழங்குவதற்குமே பயன்படுத்தின.
அதாவது இவ்வாறு வேலை வாய்ப்புகள் பறிபோனதும் புது வேலை வாய்ப்புகள் உருவாகததும் இங்கிலாந்து நாட்டின் பொது மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அதன் காரணமாகவே மக்களின் ஆதரவு இந்த மாணவர் போராட்டத்திற்கு மிக அதிகமாகத் திரண்டது.
சோசலிச எதிர்ப்புப் பிரச்சாரம்
பனிப்போர் காலகட்டத்தில் சோசலிசத்தை நோக்கிய சமுதாய மாற்றக் கண்ணோட்டம் ஆழமாக வேரூன்றுவதைத் தடுக்கப் பல்வேறு விச­மப் பிரச்சாரங்கள் ஐரோப்பிய நாடுகளின் ஆளும் வர்க்கங்களால் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டன. சோவியத் யூனியனில் சோசலிசம் நடைமுறைப் படுத்தப்பட்ட விதமும், சோசலிச அமைப்பின் அரசு வடிவம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக இருந்ததும் திரித்தும், புரட்டியும் மக்கள் முன் கொண்டுவரப்பட்டது. சோசலிச சமூக அமைப்பு சுதந்திரத்திற்கு எதிரான சர்வாதிகாரத் தன்மை வாய்ந்தது என்ற கருத்து வெற்றிகரமாக அறிவு ஜீவிகள் மற்றும் மாணவர் மனங்களில் மிக ஆழமாகப் பதிக்கப்பட்டது.
இரண்டாவது உலக யுத்தத்தில் ஹிட்லரின் ஐந்தாம் படைப்போக்குகளை இல்லாமல் செய்வதற்காக ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதில் நேர்ந்த பல உயிரிழப்புகள் அப்போது அங்கு நிலவிய புறச் சூழ்நிலைகளோடு தொடர்பு படுத்திப் பார்க்கப்படாமல் அப்பட்டமாக கொலைவெறி பிடித்த ஒருவரால் நடத்தப்பட்ட மனிதக் கொலைகளே என்ற பொய்ச் சித்திரம் இடைவிடாத முதலாளித்துவப் பிரச்சாரத்தின் மூலம் பெருமளவு நிலை நாட்டப்பட்டது.
பல ஐரோப்பிய நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒரு தத்துவம் என்ற ரீதியில் மார்க்சிசத்தை அதன் அனைத்து அம்சங்களிலும் பொருத்திக் காட்டுவதில் தவறிழைத்தன. அது அந்தந்த நாட்டு ஆளும் வர்க்கங்களின் இத்தகையப் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பேருதவி செய்தது. அதன் காரணமாக மாணவர் சமூகத்தை சமூகமாற்றப் பாதையை நோக்கி அக்கட்சிகளால் திருப்ப முடியவில்லை. குறிப்பாக மார்க்சிசத்தை ஒரு வாழ்க்கைக் கண்ணோட்டமாக அவர்களால் முன்னிறுத்த முடியவில்லை.
எந்திரகதியில் பின்பற்றப்பட்ட அணுகுமுறை
இந்தப் போக்குகளிலிருந்து ஓரளவு மாறுபட்டு பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளின் மாணவர் இயக்கங்கள் அந்நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளால் வழி நடத்தப்பட்டன. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சரியாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டு அது அந்நாட்டு மக்களை சமூக மாற்றத் திசை வழியில் வழிநடத்தி சமூக மாற்றத்தைச் சாதித்தது.அதனால் அது ஐரோப்பிய நாடுகளின் பல கம்யூனிஸ்ட் கட்சிகளால் அப்படியே எந்திரகதியில் பின்பற்றப்பட்டது. ஒவ்வொரு நாட்டின் சூழ்நிலைகளையும் ஆக்கபூர்வ விதத்தில் பயன்படுத்தி அந்தந்த நாட்டின் தனித்தன்மைகளுக்கு உகந்த விதத்தில் அந்நாடுகளில் புரட்சியை அக்கட்சிகள் கட்டி அமைப்பதை அப்போக்கு தடுத்துவிட்டது.
குருச்சேவ் செய்த குளறுபடி
தோழர் ஸ்டாலினுக்குப் பின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு வந்த குருச்சேவ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சக்திவாய்ந்த சோசலிச முகாம் ஒன்று ஏற்பட்டுவிட்டதால் இனி வரும் காலங்களில் அமைதியான நாடாளுமன்ற முறைகளின் மூலமே சோசலிசம் பல நாடுகளில் ஏற்பட முடியும் என்ற அபத்தமான கருத்தை முன் வைத்தார். அது எந்திரகதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த இக்கட்சிகளைப் புதிய கோணங்களில் சூழ்நிலைகளைப் பார்க்கவிடாமல் செய்து செக்கு மாட்டுத்தனமாகச் செயல்படும் போக்கை உருவாக்கி விட்டது. அதனாலும் அதையொத்த காரணங்களாலுமே 1968 மே மாதத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற மாணவர்களின் மகத்தான எழுச்சியை சமூகமாற்ற நிகழ்வாக மாற்ற அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியினால் முடியாமற் போனது.
அந்த எழுச்சியை அதன் தர்க்க ரீதியான இலக்கான ஒட்டுமொத்த சமூக மாற்றம் என்பதை நோக்கி வழிநடத்த திராணியற்றதாக பிரான்ஸ் நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிவிட்ட நிலையில் அந்த மாணவர் இயக்கம் உற்சாகத்தை இழந்து பிசுபிசுத்துப் போனது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளின் சமூகமாற்றச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட மாணவர் பேரெழுச்சிகளும் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டன. உலகின் புரட்சிகர இயக்கங்களை வழிநடத்தக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பெரும் தலைவர்கள் எவரும் அதற்குப் பின்னரும் இல்லாததால் மாணவர் சமூகத்தை அவர்களால் ஈர்க்க முடியவில்லை.
செகுவேரா
சித்தாந்த ரீதியாகப் பெரும் வழங்கல்களைச் செய்யாத போதிலும் தனது அர்ப்பணிப்புமிக்க செயல் பாட்டினாலும் தீரச் செயல்களாலும் சேகுவேரா உணர்வு பெற்ற மாணவர் பகுதியின் ஒரு முன்மாதிரியாக உருவானார். உலகில் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று செயல்பட்ட அனைத்துக் கட்சிகளும் ஒரு வகையான வழக்கமான நடவடிக்கைகளில் மூழ்கிக் கிடந்தன; அறிவுத் துறையிலும் உலக நிகழ்வுகளிலும் ஏற்பட்ட அனைத்துக் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கும் மார்க்சியக் கோணத்திலிருந்தான தங்களது ஆய்வினை முன்வைப்பது குறித்து அவை நினைத்துப் பார்க்கக் கூட இல்லை. அதனால் தங்களது மாணவர் அமைப்புகள் மூலமாக அவற்றைப் பரந்த அளவில் மாணவர் மத்தியில் விவாதப் பொருளாகஆக்கத் திராணியற்றவைகளாகவும்அவை ஆகிவிட்டன. அந்நிலை சமூகமாற்றத் தன்மை பொருந்திய மாணவர் இயக்கங்கள் உருவாகததற்கான முதற்பெரும் காரணமாக இருந்தது.
முடிந்துவிட்ட அத்தியாயம் போல்
அதற்குப்பின் நடந்த சமூக நிகழ்வுகளும் எதிர்ப்புரட்சித் தன்மைகள் கொண்டவைகளாகவே இருந்தன. முதலாளித்துவ ஊடகங்களால் சோவியத் யூனியனிலும் பிற சோசலிஸ்ட் நாடுகளிலும் சோசலிசத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சி, பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது போன்றவற்றிற்கு கொடுக்கப்பட்ட அதீத முக்கியத்துவம், கோயபெல்சியன் பாணியில் செய்யப்பட்ட இடைவிடாத பொய்ப்பிரச்சாரம் ஆகியவற்றின் மூலம் படிப்படியாகச் சோசலிசத்தை மனிதகுல வரலாற்றில் முடிந்து போய்விட்ட ஒரு அத்தியாயம் என்பதைப் போல் ஆளும் வர்க்கங்கள் சித்தரிப்பதில் ஓரளவிற்கு வெற்றி கண்டுவிட்டன.
அதன் பின்னர் அமெரிக்கா போன்ற நாடுகளின் மாணவர் இயக்கங்களும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, யுத்த எதிர்ப்பு போன்ற வி­சயங்களை மையம் கொண்டவையாகவே இருந்தன. பிரான்ஸ் தவிர்த்த பிற ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத்தக்க எந்த இயக்கமும் இக்கால கட்டத்தில் இல்லாமல் போனது. அதாவது ஒருவகை அமைதி நீறுபூத்த நெருப்பையயாத்த அமைதி எங்கும் நிலவியது. பிரான்ஸ் நாட்டில் மட்டும் எப்போதுமே உழைக்கும் மக்களின் அனைத்துப் போராட்டங்களிலும் மாணவர் சமூகம் ஒருங்கிணைந்து நிற்கும் உயரிய போக்கு தொடர்ந்து கொண்டிருந்தது.
அதற்குப்பின் மாணவர்கள் மீது தற்காலிகமாகச் சில பொருளாதாரச் சுமைகளை அவ்வப்போது அனைத்து உலக நாடுகளின் அரசுகளுமே ஏற்றி வைப்பது நடந்துள்ளது. அவற்றை எதிர்த்து மாணவர் போராட்டங்கள் அவ்வப்போது எழுந்தாலும் அவை மாணவரின் கோபத்தைத் தற்காலிகமாகத் தட்டியெழுப்பிவிட்டு ஒரு சில கிளர்ச்சிகளுக்கு இட்டுச் சென்ற பின்னர் அடங்கிவிடும் தன்மை கொண்டவையாகவே இருந்தன. அதுதவிர அவர்களின் சமூக ரீதியான உணர்வுகள் சமீப காலம் வரை பெரும்பாலும் சுற்றுப்புறச் சூழல் பாழ்படுவது போன்ற விச யங்களை மையமாக வைத்தவையாகவே இருந்துள்ளன. இந்தநிலை மாறி இப்போது மட்டுமே திட்டமிட்டு நடத்தப்படும் பல போராட்டங்கள் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தலை தூக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
உலகளாவிய சுரண்டல்
இவ்வாறு திட்டமிட்ட விதத்தில் மாணவர் போராட்டம் நடைபெறுவதற்கான பின்னணியைப் புதிய தாராளவாதக் கொள்கைகளும் அவை அமுல் படுத்தப்பட்ட விதமுமே உருவாக்கின. புதிய தாராளவாதக் கொள்கையைக் கட்டியமைத்தவர்களில் ஒருவராக பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சிப் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் இருந்தார். அவரது புதிய தாராளாவாதக் கொள்கை கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என்றபெயரில் பொதுத்துறையை இல்லாமல் செய்தது. தனியார் துறைக்கு முன்னுரிமை அளிப்பதிலும், தாராளவாதக் கொள்கையை மையமாக வைத்தும் கொண்டுவரப்பட்ட உலகமயம் உலகளாவிய முதலாளித்துவச் சுரண்டலுக்கு வழி வகுத்தது.அது உலக அளவில் முதலாளித்துவ நாடுகள் அவற்றின் பொருளாதார வலுவிற்குகந்த விதத்தில் உலகில் எங்கெல்லாம் மலிவான உழைப்புத் திறன் கிடைக்கிறதோ அதையயல்லாம் பயன்படுத்தி பகாசுர லாபம் ஈட்டவும் வழிவகுத்தது.
வேலைக்கு உதவிய வெளிநாட்டுப் பட்டங்கள்
அதனை இந்தியா போன்ற அதிக எண்ணிக்கையில் தொழில்நுட்ப அறிவு பொருந்திய இளைஞர்களைக் கொண்ட நாடுகள் பயன்படுத்தத் தொடங்கின. இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பலர் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் சென்று வேலை செய்யும் சூழ்நிலை உருவாகியது. அந்நிய நாடுகளில் சென்று வேலை செய்யும் வாய்ப்பினை எளிதில் பெறுவதற்காகத் தங்களை அனைத்து விதங்களிலும் தயார் படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் மூன்றாவது உலக நாடுகளின் நடுத்தர வர்க்கத்து மாணவர்கள் பெருமளவு ஈடுபடத் தொடங்கினர்.
அதற்குப் பெரும் வாய்ப்பளிப்பவையாக அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் படித்துப் பெறும் பட்டங்கள் இருந்தன. இதன் மூலமாக ஐரோப்பிய நாடுகளின் கல்வி நிறுவனங்கள் முழுக்க முழுக்க வியாபார ரீதியில் நடத்தப்படும் போக்கு தொடங்கியது. இங்கிலாந்து நாட்டின் கீர்த்திமிகு ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களில் கூட வணிகமயப் போக்கு தலைதூக்கியது. இதனால் ஓரளவு படிப்பதற்கு வாய்ப்புள்ளவர்களாக இருந்த இங்கிலாந்து நாட்டின் மத்தியதர, கீழ்த்தட்டு மத்திய தரவர்க்க மக்களின் பிள்ளைகள் கூட எளிதில் உயர்கல்வி பெற முடியாத சூழ்நிலை உருவாகியது.
இங்கிலாந்து அரசும் சளைத்ததல்ல
கல்விக்கான அரசின் ஒதுக்கீட்டில் கொண்டு வரப்பட்டுள்ள குறைப்பு தற்போது தோன்றியதல்ல. புதிய தாராளவாதக் கொள்கை அமுலாவதற்கு முன்பே அது தொடங்கிவிட்டது. இங்கிலாந்து தவிர்த்த பிற நாடுகளின் மாணவர்கள் ஆங்கிலத்தில் மொழி, விஞ்ஞானம், மற்றும் சமூக விஞ்ஞானம் சார்ந்த நூல்களைப் படித்து பயன் பெறுவதற்கென்று ஒரு காலத்தில் இ.எல்.பி.எஸ். என்ற நிறுவனம் பல நூல்களை அரசு மானியம் பெற்று அச்சிட்டுக் குறைந்த விலைக்கு விற்றுவந்தது. படிப்படியாக அவ்வாறு அதற்கு ஒதுக்கீடு செய்வதிலிருந்து பிரிட்டிஷ் அரசு அதனை விடுவித்துக் கொண்டது. அதைத் தொடர்ந்தே தற்போது கல்விக்கான ஒதுக்கீட்டைப் பெரிதும் குறைத்துப் பயிற்றுவிப்புக் கட்டணத்தை இங்கிலாந்து அரசு அதிக அளவிற்குக் கூட்டியுள்ளது.
கடைசி வைக்கோல்
இவ்வாறு ஒருபுறம் ஆராய்ச்சி நிலையங்களை மூடுதல், அரசுத்துறை வேலை வாய்ப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளதால் பெரிதும் நெருக்கடிகளாகியுள்ள சூழ்நிலையில் தங்களது தகுதியை மிகப்பெரிதாக வளர்த்துக் கொண்டால் மட்டுமே ஓரளவிலான வேலை வாய்ப்பையேனும் பெற முடியும் என்ற சூழ்நிலைக்கு ஐரோப்பிய மாணவர் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அந்நிலையில் இங்கிலாந்து அரசு கொண்டு வந்த இக்கட்டண உயர்வு ஒட்டகத்தின் முதுகில் விழுந்துள்ள கடைசி வைக்கோலாக அமைந்து விட்டது.
இதுபோன்ற நெருக்கடி நிலை உக்கிரமடைவதற்கு முன்பே இனவெறி வாதத்தைத் தூண்டி வேறு நாடுகளிலிருந்து வேலைக்கு வருவோரே தாங்கள் படும் கஷ்டங்களுக்குக் காரணம் என்ற எண்ணத்தை மாணவர் உட்பட ஒட்டுமொத்த சமூகப் பகுதியினரிடமும் ஏற்படுத்த இங்கிலாந்து நாட்டின் முதலாளித்துவ ஊடகங்கள் மிகப்பெருமளவு முயன்றன. ஒரு அதிதீவிர வெள்ளை இனவாத அமைப்பையும் முதலாளித்துவ சக்திகள் நிதிஉதவி செய்து உருவாக்கின.
பலிக்காத முயற்சிகள்
ஆனால் இந்நடவடிக்கைகள் அனைத்தும் நெருக்கடியின் உக்கிரத்தின் முன் நிற்க முடியாதவைகளாகி விட்டன. ஆட்சியாளர்களின் முயற்சிகள், பொய்கள் அனைத்தும் ஒரு விசயத்தை மூடிமறைப்பதை நோக்கமாகக் கொண்டவையாக இருந்தன. அதாவது முதலாளித்துவ லாப வெறியே இந்த நெருக்கடி, வேலையிழப்பு, கல்வியின் மீது தாக்குதல் இவை அனைத்திற்கும் மூல காரணம் என்பதை மூடிமறைப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. ஆனால் அவர்களின் முயற்சி பலகாலமாகப் பலித்ததைப் போல் இப்போது பலிக்கவில்லை. அதனால் தான் மாணவர் கிளர்ச்சியின் ஒரு முக்கிய முழக்கம் முழுமையான சமூக மாற்றம் என்பதாக இருந்தது. முதலாளித்துவ ஊடகங்கள் எத்தனை விதங்களில் மூடிமறைத்தாலும் அந்த முழக்கத்தின் எதிரொலியை அவற்றால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இவ்வாறு ஒரு ஏமாற்று வாதத்தை அடுத்து மற்றொரு ஏமாற்று வாதத்தை முன்வைத்து உற்பத்தி முறையின் அடிப்படை முரண்பாடான சமூக ரீதியிலான உற்பத்தி, தனிநபர் ரீதியான அபகரிப்பு என்பதையும் அது தோற்றுவிக்கும் நெருக்கடிகளையும் வெளியில் தெரியாமல் பலகாலம் பாதுகாத்து வந்த முதலாளித்துவம் தற்போது அதனைச் செய்யமுடியாமல் ஏறக்குறைய முழுமையாக பொதுவாக மக்கள் மற்றும் மாணவர் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது.
ஆரம்பம் மட்டுமே
எனவேதான் தானாகவே பொங்கி எழும் ஒன்றிரண்டு போராட்டங்களின் மூலம் தீர்க்க முடியாததே தற்போதைய பிரச்னை என்பதை மாணவர் சமூகம் உணர்ந்து கொண்டுள்ளது. அதன் காரணமாகவே இப்போராட்டம் வெறும் ஆரம்பம் மட்டுமே முடிவல்ல என்று அது அறிவித்துள்ளது.
முதலாளித்துவத்தின் அதிகபட்ச லாப வெறியினை இலக்காகக் கொண்டஅதன் செயல்பாட்டைச் செயற்கையான தலையீடுகளின் மூலம் முதலாளித்துவ அரசுகள் மட்டுப்படுத்தி வைக்க முயன்றன. ஆனால் யாருடைய விருப்பு வெறுப்புகளுக்கும் உட்படாது செயல்படும் விதி என்ற ரீதியில் அது முதலாளித்துவ அரசுகளின் அத்தனை செயற்கைத் தலையீடுகளையும் தாண்டி தனது கோர முகத்தை வெளிப்படுத்தி சமூகமாற்றம் வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி என்று மார்க்ஸ் முன்வைத்த கருத்தினை மறு பேச்சுக்கிடமின்றித் தற்போது நிரூபித்து வருகிறது.
அதைப்போல் முதலாளித்துவ நெருக்கடி தோற்றுவிக்கும் வேதனைகளினால் உந்தப்படும் மக்களைத் திசை திருப்புவதற்காக முதலாளித்துவ அரசுகள் மேற்கொள்ளும் சித்து விளையாட்டுகள் அனைத்தும் அம்பலமாகி இன்று அந்த அரசுகளைத் தூக்கி எறிவதே ஓரே வழி என்ற நிலையினை மக்கட் பகுதியினர் பொதுவாக உணர்ந்து வருகின்றனர். குறிப்பாக இதுவரையிலும் உறங்கிக்கிடந்த மாணவர் சமூகம் இப்போது அதை உணர்ந்து யோசித்து திட்டமிட்டு செயல்படத் தொடங்கியுள்ளது. அதையே திட்டமிட்ட விதத்தில் அவர்கள் நடத்திய இரண்டாவது கட்டப் போராட்டம் நிரூபித்துள்ளது.
இப்போதும் திசை திருப்பல்
இந்நிலையிலும் கூட இங்கிலாந்து நாட்டின் ஊடகங்கள் இந்தக் கட்டண உயர்விற்குப் பொறுப்பாக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைக் காட்டி அதன் முன்னாள் பிரதமரும் புதிய தாராளவாதக் கொள்கையின் தூணாக விளங்கியவருமான மார்க்ரெட் தாட்சர் காலத்தில் அவரது ஆட்சியை எதிர்த்து அப்போது நடைபெற்ற இயக்கங்களோடு இதனை ஒப்பிட்டுப் பிரச்னையைத் திசை திருப்பப் பார்க்கின்றன. அதாவது பிரச்னைக்குக் காரணம் முதலாளித்துவமல்ல. கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரச்னைகளைக் கையாளும் முறைதான் என்று காட்ட முயல்கின்றன.
முதலாளித்துவத்திற்குச் சேவை செய்யும் அனைத்துக் கட்சிகளும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு தொனியிலும் ஆட்சிக்கு வந்ததற்குப் பின்பு, முன்பு ஆட்சி செய்தவர்கள் பின்பற்றிய அதே வழியைப் பின்பற்றிக் கொண்டே மற்றொரு தொனியிலும் செயல்படும் நடைமுறையைக் கொண்டவையாக உள்ளன என்பதை ஒருங்கு திரண்டுள்ள மாணவர் சமூகம் வெகு விரைவில் அடையாளம் கண்டு கொள்ளும் என்பது உறுதி.
சோவியத் யூனியனிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்ட சோசலிசத்தின் வீழ்ச்சியும் அதற்குப் பின்னும் கூட முதலாளித்துவம் நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியாமல் தடுமாறித் தத்தளிக்கும் நிலையும் மேலை நாட்டு உணர்வுபெற்ற உழைக்கும் மக்களிடம் சுயமாக கம்யூனிஸ்ட் அமைப்புகளில் முன்பு நிலவிய எந்திர கதியிலான சிந்தனைப் போக்கிலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கும் ஒரு போக்கினை உருவாக்கியுள்ளது. அச்சிந்தனைப் போக்கு இயக்கவியல் ரீதியிலான வாத, எதிர்வாதங்களின் மூலம் நிச்சயம் ஒரு சரியான சமூகமாற்றச் சிந்தனையை உருவாக்கும் என்பதும் உறுதி.
அச்சிந்தனை நிச்சயமாக ஆளும் வர்க்கத்துடன் ஒருங்கிணைந்து நின்று இன்றைய முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்கும் அரசு எந்திரத்திற்கு எதிரான, அதனை அகற்றும் தன்மைவாய்ந்த அமைப்பு ஒன்று உருவாவதற்கு வழிவகுக்கும் என்பதும் உறுதி. சமூக மாற்றத்தை முன்னறிவிக்கும் தற்போதைய இது போன்ற போராட்ட இடி முழக்கங்கள் இத்தகைய வளர்ச்சிப் போக்குகள் உருவாகியுள்ளதையே கோடிட்டுக் காட்டுகின்றன.

No comments:

Post a Comment