மீண்டும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதாவது ஏற்கனவே தலைதூக்கி இடையில் நீதிமன்றத் தீர்ப்பினால் மட்டுப்பட்டிருந்த கல்லூரியை மதவாதிகள் கையகப்படுத்தும் பிரச்னை மீண்டும் தலை தூக்கியுள்ளது. கல்லூரியின் முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் அவர்களைச் செயலராகக் கொண்ட ஆட்சிமன்றக் குழு, மதுரை ராமநாதபுரம் மண்டிலப் பேராயரைத் தலைவராகக் கொண்ட ஆட்சிமன்றக்குழு என இரண்டு ஆட்சிமன்றக் குழுக்கள் தற்போதும் தாங்களே உண்மையான ஆட்சிமன்றக் குழுக்களெனக் கூறிக் கொண்டுள்ளன. அது குறித்த கேள்வி நீதிமன்றத்தில் கிடப்பில் இருக்கிறது. அந்நிலையில் பேராயர் தலைமையிலான ஆட்சிமன்றக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரைக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் என்று கல்லூரிக் கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருக்கிறார். அதனை ஒட்டியே இப்பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது.
ஒரு பிரச்னை குறித்த நீதிமன்றத் தீர்ப்பு வராத நிலையில் கல்லூரிக் கல்வித்துறை இயக்குனரகம் எப்படி இந்த அறிவிப்பினைச் செய்தது என்பதே ஒரு ஆச்சரியமான வியம். அநேகமாக சிறுபான்மையினர் உரிமை என்ற பெயரில் நிலவுவதும் பல சமயங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமான கண்ணோட்டம் பேராயருக்குத் தெரிந்த வெறெந்தக் கைவந்த கலையும் இடைத் தலையீடு செய்யாதிருந்திருக்கும் பட்சத்தில் அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.
குழுவினருக்கிடையிலான போராட்டமல்ல
பழைய முதல்வரின் பதவிக்காலம் முடிந்து விட்டது; அவருக்கு நீதிமன்றமே பணி நீட்டிப்பு செய்ய மறுத்துவிட்டது. அந்த நிலையில் கல்லூரி செவ்வனே இயங்கப் பழைய முதல்வர் தலைமையிலான ஆட்சிமன்றக் குழு தீர்மானித்த ஒருவர் தான் மீண்டும் முதல்வராக இருக்க வேண்டும் என்று கருத வேண்டிய அவசியமில்லை. அந்நிலையில் பேராயர் தலைமையிலான ஆட்சிமன்றக் குழு நியமித்த ஒருவராவது முதல்வராக வந்து மாணவர்கள் கல்வி பெறுவதற்குப் பாதிப்பு எதுவுமின்றி கல்லூரி இயங்கினால் அதில் தவறென்ன என்ற கேள்வி இயல்பாகவே ஒருவரிடம் எழலாம். அந்நிலையில் அவர்கள் நம்மை ஏன் இப்பிரச்னையில் பழைய முதல்வருக்கு ஆதரவான நிலையினை நீங்கள் எடுக்கிறீர்கள் என்ற கேள்விக்குறியுடன் பார்க்கவும் வாய்ப்புண்டு. அந்நிலையில் அதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய கடமையும் நமக்குண்டு.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் கல்லூரியில் நடந்த பிரச்னைகள் அனைத்தையுமே இரு குழுவினருக்கு இடையிலான பிரச்னை என்று பார்த்தவர்களே அதிகம். அவ்வாறு பார்த்த சில அமைப்புகளும் கூட உண்டு. ஆனால் அப்போதும் இப்போதும் அப்பிரச்னையைக் கல்வியைப் பாதிக்கும் பிரச்னை என்று உறுதியாகப் பார்த்து வந்தது நமது இதழ் ஒன்றுதான். வெளிப்படையாகச் சொல்லப் போனால் பேராயரின் சதிக் கும்பலிடம் இருந்து கல்லூரியை மீட்பதற்காக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டிருந்த பல ஆசிரியர்களும் கூட இதைக் கல்விக்கான ஒரு போராட்டமாகப் பார்த்தார்களா என்பது சந்தேகமே. பல சமயங்களில் அவர்களிடமும் ஒரு குழு மனநிலை வேலை செய்ததையே நாம் கண்ணுற முடிந்தது. அந்தச் சூழ்நிலையிலும் கூட நமது கருத்து எவ்வித மாற்றமும் இன்றி அப்போராட்டத்தைக் கல்விக்கான போராட்டமாகவே கருதுவதாக இருந்தது.
வெள்ளையர் ஆட்சி நமது நாட்டில் வேரூன்றியக் காலம் தொட்டே அது அறிமுகம் செய்த எந்திரத் தொழிலுற்பத்தி முறைக்குத் தேவையானது என்ற அடிப்படையில் கல்விப் பரவலாக்கல் நாடு முழுவதும் நடைபெற்றது. அதில் கிறிஸ்தவ மிசனரிகளின் பங்கு பெருமளவிற்கு இருந்தது. குறிப்பாகத் தென் மாநிலங்களில் கல்விப் பரவலாக்கல் அவர்கள் நிறுவிய கல்வி நிலையங்கள் மூலமே பெரிதும் நடைபெற்றது.
கல்விப்பணி அன்றும் இன்றும்
அன்று அவர்கள் செய்த கல்விப் பணிக்கும் இன்று அந்நிறுவனங்களின் நிலைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது. அன்று மக்கள் சேவையின் ஒரு பகுதி என்ற நிலையில் அவர்கள் கல்வியினைக் கையிலெடுத்து, கல்வியின் அவசியத்தை உணர்ந்து படிக்க விரும்புவோர் எண்ணிக்கை கற்பனைக் கெட்டாத அளவிற்குக் குறைவாக இருந்த நிலையில் பொது மக்களிடம் பரந்த அளவில் பிரச்சாரம் செய்து பெற்றோரிடம் நயந்து பேசி அவர்களது பிள்ளைகளைக் கல்வி நிலையங்களில் கொண்டு வந்து சேர்த்தனர்.
பெண்கள் கல்வி என்பது எண்ணிப் பார்க்க முடியாத நிலையிலிருந்த அந்தக் கால கட்டத்தில் பல கிறிஸ்தவ மிசனரிகள் கடும் முயற்சிகள் செய்து சில பெண்களையும் கூடக் கல்வி நிலையங்களில் சேர்ப்பதில் வெற்றி கண்டனர். வேலூரில் அக்காலகட்டத்தில் நிறுவப்பட்ட மருத்துவப் பள்ளி (School of Medicine) யில் சேரக் கூடப் பெண்கள் தயாராக இல்லை என்று யாராவது இன்று கூறினால் அதனை பலரும் நம்பக்கூட மறுப்பர். ஆனால் உண்மையில் நிலை அவ்வாறே அப்போது இருந்திருக்கிறது. பல பெண்களை மிசனரிகள் நயந்து பேசியே மருத்துவக் கல்வி போன்ற இன்று பெரிதும் மதிக்கப்படும் கல்வியில் அன்று சேர்த்துள்ளனர்.
இவ்வாறு ஒரு அப்பழுக்கற்ற சேவை மனப்பான்மை அதற்காக எத்தகைய உழைப்பையும் மனமுவந்து ஆற்ற முன்வரும் மனப் போக்கு ஆகியவற்றுடன் அவர்கள் இருந்ததால் அக்காலகட்ட கிறிஸ்தவ மிசனரிகள் உயர்ந்த மனித குணங்களின் உன்னத வடிவங்களாக விளங்கினர். அவர்களை உள்ளடக்கியிருந்த கிறித்தவ மதமே அன்று பெரிதும் சேவையை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அதாவது அவர்கள் உருவாக்கிய நிறுவனங்களில் மனித மதிப்புகள், தாராளவாத சிந்தனைகள், ஜனநாயகப் பண்புகள் பெரிதும் தலை நிமிர்ந்து நின்றன. மத உணர்வு அந்த அளவிற்கு மேலோங்கி நிற்கவில்லை.
அனைத்து மக்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனம்
அமெரிக்கன் கல்லூரியைப் பொறுத்தவரையிலும் கூட அதன் பழைய மாணவர்களில் பலருக்கு கிறித்தவ மதத் தலைவர் ஒருவருக்கு இந்தக் கல்லூரியில் பங்குண்டு என்பது தெரியாது. கல்லூரியில் பணியாற்றுபவர்களிலும் கிறித்தவர்கள் அல்லாத சிறப்பு மிகு பேராசிரியர்கள் பலர் இருந்தனர். சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்கன் கல்லூரி மதுரையின் அனைத்து மக்களின் கல்விக்காவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகவே இருந்தது.
கடந்த 2, 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட ஏறக்குறைய கல்லூரி அதையொத்த விதத்தில் தான் இருந்து வந்தது. கல்விக்காகச் செலவிடும் பொறுப்பினை மத்திய, மாநில அரசுகள் படிப்படியாகக் கைகழுவி விலக விரும்பியதன் விளைவாகத் தோன்றிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டே ஏறக்குறைய என்ற சொல்லாடலை நாம் இங்கு பயன்படுத்துகிறோம். அதாவது கல்லூரியின் நிர்வாகச் செலவினங்களைச் சந்திப்பதற்காகவும் கல்வித் தரத்தினைச் சோதனைச் சாலை மற்றும் நூலக வசதிகளுடன் பராமரிப்பதற்காகவும் சுயநிதிப் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு அதில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டண வசூல் செய்யப்படுவதை ஒட்டி முன்பிருந்த அதன் நிலை மாறியிருப்பதைக் கருத்திற்கொண்டே ஏறக்குறைய என்று கூறுகிறோம்.
அவ்வாறு செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தை தனது கட்டுக்குள் கொண்டுவரப் பேராயர் துடிப்பது ஏன்? திடீரென அவருக்கு உதயமாகிவிட்ட கல்விச் சேவை ஆர்வமா? அல்லது மிகவும் குறுகிய மத ரீதியான கண்ணோட்டத்தின் அடிப்படையில் அது கிறித்தவ மதத்தினரின் தனிச்சொத்து என்றும் அதனை அவ்வாறு கிறித்தவத் திருச்சபையின் சொத்தாக ஆக்கி தான் கிறித்தவ மதத்திற்கு பொருள் சேர்க்கும் ‘சேவையை’ செய்வதாகக் காட்டும் பாவனையினாலா? அதாவது இதுகாறும் பலர் செய்யாத காரியத்தைத் தான் செய்யப் போகிறேன் என்ற முகத்திரையில் கற்பனைக்கெட்டாத அளவிற்கு உயர்ந்து வரும் நகர்ப்புறச் சொத்துக்களின் விலை மதிப்பினை மனதிற்கொண்டு அந்நிறுவனத்தில் கற்பிக்கப்படும் கல்வியின் மீது அக்கறையில்லாமல் கல்லூரி அமைந்திருக்கும் இடத்தின் தற்போதைய மதிப்பு அவரது நாக்கில் சுரக்கச் செய்துள்ள ஈரத்தின் விளைவாகவா?
பேராயர் கல்விமானா?
கடந்த காலங்களில் இருந்த பேராயர்களில் பலர் பெரும் கல்வி மான்களாகவும் இருந்திருக்கிறார்கள். தற்போதைய பேராயர் அப்படிப்பட்ட ஊரும் உலகமும் அறிந்த ஒரு கல்விமானா? அல்லது பேராயர்களுக்குக் கட்டாயம் இருக்க வேண்டிய கடந்த காலங்களில் பலரிடமும் இருந்த மக்களுக்கான கல்வி மற்றும் மருத்துவச் சேவைக் குணங்கள் அவரிடம் நிறைந்துள்ளனவா? தற்போதைய பேராயர் இவ்விரு குணங்களும் நிறைந்துள்ளவர் என்று உண்மைக்கு மதிப்பளிப்பவர் எவராவது கூற முன் வருவார்களா? அவ்வாறிருக்கையில் இக்கல்வி நிலைய விசயத்தில் ஏராளமான பொருட்செலவினைச் செய்து அவர் தலையிடுவதன் மர்மமென்ன?
அதாவது இதுபோன்ற நிறுவனங்களை நிறுவிய கிறிஸ்தவ மிசனரிகளுக்கும் இன்றைய கிறிஸ்தவ மதத் தலைவர்களில் பலருக்கும் அவர்கள் ஓரே மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. அப்பழுக்கற்ற மக்கள் சேவையே அன்றைய கிறித்தவ மிசனரிகளின் நெறியாக இருந்தது. ஆனால் இன்று அப்பழுக்கற்ற அனைத்து மக்களுக்குமான சேவை என்பது இன்றைய தற்போதைய மதுரை இராமநாதபுரம் திருமண்டிலப் பேராயர் போன்ற மதத் தலைவர்களிடம் அறவே இல்லை. முன்பிருந்த மிசனரிகளைப் போல் அனைத்து மக்களுக்குமான கல்வி, மருத்துவச் சேவை என்ற வகையில் அவர்கள் சிந்திப்பது கூட இல்லை. மாறாக அவர்கள் தங்களைக் கிறிஸ்தவ மக்களுக்கானவர்கள், அவர்கள் நலனை மட்டுமே கருதுபவர்கள் என்றே காட்டிக் கொள்கிறார்கள்.
ஆனால் நடைமுறையில் அவர்களில் பலர் அவ்வாறு காட்டிக்கொண்டு தங்களது குடும்பத்தைச் சேர்ந்த மக்களின் நலனுக்காக இருப்பவர்களாகவே உள்ளனர். இந்தப் போக்கின் வெளிப்படையான வடிவம் மதுரைப் பேராயர் ஆவார். அதற்கு எடுத்துக்காட்டு அந்நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்துப் பள்ளிகள் கல்லூரிகள் செவிலியர் பயிற்சிப் பள்ளி போன்றவைகள் அனைத்திலும் அவரது பிள்ளைகளும் உறவினர்களும் தலைமைப் பொறுப்புகளில் இருப்பதே.
மறக்கப்பட்ட மக்கள் சேவை
அன்று கிறிஸ்தவ மிசனரிகள் மட்டுமல்ல அவர்களது பிராச்சாரங்களால் ஈர்க்கப்பட்டுக் கிறித்தவ மதத்தில் சேர்ந்தவர்களிடமும் மக்கள் சேவை வலியுறுத்தப்பட்டது. அவர்களும் பெருமளவு ஏழை எளியவர்களுக்கான கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு உதவி புரியும் தன்மை கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் இன்று இக்கல்வி நிலையங்களில் இருக்கும், உருவாகும் வேலை வாய்ப்புகளே பலரால் கருதப்படக் கூடியவையாக ஆகிவிட்டன. இப்படிப்பட்ட சீரழிவுப் போக்குகளினால் தற்போது மதத்திற்குள் நடைபெறுவது மதத்தை மையமாகக் கொண்ட அரசியலாக ஆகிவிட்டது. அதாவது மத அரசியல் தலை விரித்தாடுகிறது. பொதுத் தேர்தல்களில் போட்டியிடுவோர் செய்வதைப் போன்று பணம் செலவழித்துப் பலர் பேராயர் ஆகின்றனர்.
குடும்ப நிர்வாகம்
இந்தப் பின்னணியில் தற்போதைய பேராயர் கைக்கு அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் வருமானால் அங்கு கற்பிக்கப்படும் கல்வியின் தரம் அதற்குக் கொடுக்கப்படும் விலை ஆகியவை எதிர் காலத்தில் எப்படியிருக்கும் என்பது ஒரு கேள்விக் குரியதாக ஆகிவிடும். ஓராண்டே பதவிக்காலம் இருக்கும் ஒருவரைத் தற்காலிகமாக நியமித்து அதன்பின்னர் ஏற்கனவே கல்லூரியின் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ள பேராயரின் உறவினர்களைக் கொண்டு கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர், நிதிக் காப்பாளர் போன்ற பொறுப்புகளை நிரப்புவது அவருக்கு மிகக் கடினமான காரியமல்ல. அந்த நிலை ஏற்பட்டுவிட்டால் ஆட்சிமன்றக் குழுவின் முக்கியப் பொறுப்புகளான தலைவர், செயலர் ஆகிய இரு பொறுப்புகளும் அவரது குடும்பத்தினரின் கைவசம் எளிதில் வந்துவிடும்.
கிறித்தவ சபையில் உள்ள ஏழை எளிய மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வாரம் ஒருமுறை ஜெபத்திற்கு வந்துவிட்டு எந்தவகை எதிர்பார்ப்புமின்றி சென்றுவிடக் கூடியவர்கள். அவர்கள் தவிர சபையின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்களை முழுமையான தனது கட்டுப்பாட்டிலும் ஆதிக்கத்திலும் வைக்கப் பேராயருக்கு இடமாற்றம் என்ற அச்சுறுத்தும் ஆயுதம் எப்போதும் கைவசம் இருக்கிறது.
கல்வியின் விலை
இந்த நிலையில் கல்லூரியில் பெறப்படும் கல்விக்கான விலை எவ்வளவாக ஆகும் என்பதை யாராலும் கூறமுடியாது. கல்லூரி முழுக்க முழுக்கக் கிறித்தவ மதத்தின் சொத்து என்ற நிலை ஏற்பட்டு அதைப் பயன்படுத்திக் கல்வி முழுவதையுமே பேராயர் கூட்டம் வணிகமயமாக்கி விட்டாலும் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இருக்காது. அதற்காகப் பெரும் தொகைகளைக் கட்டணமாகச் செலுத்துவது கல்வி பெற விரும்புவோர் அனைவரின் சுமையாகி விடும். அப்போது பேராயரும் அவரது கூட்டமும் பதில் கூற வேண்டியவர்கள் கல்விக் கட்டணச் சுமையினால் பாதிக்கப்படும் அனைத்துப் பொது மக்களுமாக இருக்க மாட்டார்கள்; அக்கேள்வி எழும் போது கிறித்தவ மக்களுக்கு மட்டுமே தான் கட்டுப்பட்டவன் என்ற நிலையினை எடுக்கப் பேராயர் எள்ளளவும் தயங்க மாட்டார். தற்போதைய பேராயர் அவர்களிடம் உருவாக்கியுள்ள மதத்திற்குப் பொருள் சேர்க்கிறார் என்ற மனநிலை அளவுகோலாகி விட்டால் அவரது செயல்கள் மிக எளிதாக கிறித்தவ மக்களில், சபை விசயங்களில் ஆர்வமும் அக்கறையும் காட்டும் பகுதியினரை எளிதில் திருப்திப்படுத்தி விடும்.
இந்தச் சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்பதற்காகவே நாம் கல்லூரி பேராயரின் கைக்குச் சென்றுவிடக் கூடாது என்று கருதுகிறோம். கிறித்தவ மதம் முன்வைத்த கிறித்தவ மத மதிப்புகள் அதாவது மனிதாபிமான மதிப்புகள் பராமரிக்கப்படும் அதே நேரத்தில் இந்நிறுவனம் இதை நிறுவிய கிறித்தவ மிசனரிகள் எண்ணிய விதத்தில் அனைத்து மக்களுக்குமான ஒரு நிறுவனமாகவே விளங்க வேண்டும்.
அதாவது கல்லூரியில் முன்பு நிலவியதைப் போன்று மத வேறுபாடுகள் கடந்து கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் பொறுப்புகள் தகுதி, அனுபவம், திறமை ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். இக்கல்லூரி நிறுவப்பட்ட அதே காலத்தில் நிறுவப்பட்ட டெல்லியின் செயின்ட் ஸ்டீபன்ஸ் போன்ற கல்லூரிகளில் எவ்வாறு பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்துத் தகுதியும், திறமையும் மிக்கவர்களைக் கல்லூரியின் முதல்வர்களாக நியமிக்கின்றனரோ அவ்வாறே இங்கும் நியமிக்கப்படும் சூழ்நிலை கொண்டுவரப்பட வேண்டும். அத்தகைய நிலை உருவாகும் போதுதான் கடந்த காலத்தில் விளங்கியதைப் போல் குறைந்த செலவில் அனைத்து மக்களுக்கும் தரமான கல்வியை வழங்கும் கல்லூரியாக மதுரை அமெரிக்கன் கல்லூரி தலை நிமிர்ந்து நிற்கும்.
எட்டி உதைக்கப்பட்ட ஏணி
இந்தச் சூழ்நிலையைக் கொண்டுவருவதற்கான ஒரு அரிய வாய்ப்பு டாக்டர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் மீண்டும் நீதிமன்ற ஆணையின் படி முதல்வராகப் பணியமர்த்தப் பட்டபோது உருவாகியது. துரதிர்ஷ்ட வசமாக அவரும் கல்லூரி மீட்புப் போராட்டத்தில் அவருடன் இருந்த பேராசிரியர்களும் அதனைச் செய்யத் தவறிவிட்டனர். அதாவது நடந்த போராட்டம் கல்வியின் பாதுகாப்பிற்கானது, கல்வியை மதத் தலைவரின் பிடியிலிருந்து காப்பதற்காக நடைபெற்றது என்பதை நிலைநாட்டத் தவறிவிட்டனர்.
அன்று அப்போராட்டத்தில் மிகப்பெரும் பின்பலமாக நின்ற மாணவர் சமூகத்தை எங்கே அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அனைத்து வியங்களிலும் அவர்கள் தலையிடத் தொடங்கி விடுவார்களோ என்ற எண்ணத்தில் அவர்களை ஓரம்கட்டிச் செயல்படத் தொடங்கி விட்டனர். வெளிப்படையாகக் கல்லூரி பேராயர் கையில் சென்றால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதைப் பொது மக்களிடம் கொண்டு சென்று மக்கள் ஆதரவைக் கல்வியின் பாதுகாப்பிற்காகத் திரட்டவும் தவறிவிட்டனர்.
ஆசிரியர் அலுவலரின் பிரச்னை மட்டுமா?
கல்லூரியின் பிரச்னை என்பது அவர்களது பார்வையில் அதில் வேலை செய்யும் ஆசிரியர், அலுவலர் ஆகியவரை மட்டும் பாதிக்கும் ஒன்றாகக் கருதப்பட்டு விட்டது. அது மக்களுக்குக் குறைந்த செலவில் தரமான கல்வி கிட்டுவதைப் பாதிக்கும் ஒன்று என்பதை அவர்கள் கருத்திற்கொள்ளத் தவறிவிட்டனர்.
பல்கலைக்கழக அளவில் செயல்படும் ஆசிரியர் அமைப்புகளையும் அவர்களை வழி நடத்தும் அரசியல் கட்சியின் மாணவர் அமைப்புகளையும் அவர்கள் தற்போது பெரிதும் நம்பத் தொடங்கியுள்ளனர். தேர்தல் ஆதாயக் கண்ணோட்டமான சிறுபான்மையினர் நலன் என்பதைத் தாண்டி அவை எவ்வளவு தூரம் பேராயருக்கு எதிராகவும் கல்விக்காகவும் வரப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இந்த ஆசிரியர் அமைப்புகள் கல்வியைக் காட்டிலும் ஆசிரியர்களின் பொருளாதார நலன் குறித்த வியங்களில் பெரும் அக்கறை காட்டி வருபவை என்பதை மறந்துவிட முடியாது.
இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்களின் பரிந்துரையின் பேரில் தற்போது குழு ஒன்று அமைக்கப்பட்டு அது கல்லூரியின் பிரச்சனைகளைப் பரிசீலிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே தவிர வேறெதுவுமல்ல. ஏனெனில் பேராயரால் நியமிக்கப்பட்டவரே முதல்வராக நீடிப்பார் என்பதில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட குழு பெரிதாக எதையும் செய்துவிட முடியாது. வேறு வழியின்றி இதனை ஒரு பற்றுக் கோடாகப் பிடித்துத் தொங்கும் நிலைக்கு முன்னாள் முதல்வரும் அவரது ஆதரவாளர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே ஆசிரியர், அலுவலர் அமைப்புகள் மாணவர் சமூகத்துடன் கைகோர்த்து மக்களுக்கு குறைந்த செலவில் தரமான கல்வியை வழங்கும் வாய்ப்பு எவ்வாறு பேராயர் கைக்குக் கல்லூரி செல்வதனால் பறிபோகும் என்பதைத் தெளிவுபடுத்திச் செயல்பட முன்வர வேண்டும். அதற்கு முன் தேவையாக மதச் சார்பற்ற கல்வி ஆதரவுப் போக்கு மக்கள் மத்தியில் எந்தத் தயக்கமுமின்றி கொண்டு செல்லப்பட வேண்டும். ஆசிரியர்களால் மாணவர் மத்தியில் நிலை நாட்டப்பட வேண்டியது அறிவினை மையமாகக் கொண்ட தார்மீக ரீதியான மேலாண்மையே தவிர நிர்வாக அச்சுறுத்தல், அக மதிப்பீட்டு ஆயுதம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலமாக நிலைநாட்டப்படும் மேலாண்மையல்ல. அதனை உணர்ந்து கல்வி வாழ்க்கையில் அனைத்து வகையான சம உரிமைகளுடனும் கைகோர்த்துச் செல்ல வேண்டியவர்களே ஆசிரியர்களும் மாணவர்களும் என்ற ஜனநாயக உறவினைப் பராமரிக்க ஆசிரியர் சமூகம் மனமுவந்து முன்வர வேண்டும்.
அந்த அடிப்படையில் இதை மக்களுக்கான ஒரு பிரச்னையாக ஆக்குவதன் மூலமே வாக்கு வங்கி அரசியலையும், கையூட்டையும் கருத்திற்கொண்டு கல்லூரிக் கல்வி இயக்குனரகம் போன்ற அமைப்புகள் தற்போது எடுத்துள்ள பேராயரிடம் கல்லூரியை ஒப்படைக்கும் முடிவினை மாற்றச் செய்ய முடியும்
No comments:
Post a Comment