அம்பலப்படுத்தும் முதலாளித்துவ அவலங்கள்
சமீபத்தில் டெல்லியில் நடந்ததாக ஒரு செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகியது. அதாவது ஒரு கணவன் தனது மனைவியைக் கொன்று அவளது உடலைக் கெடாமல் பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டி ஒன்றைக் கடையில் வாங்கி அதில் பல தினங்கள் வைத்திருந்தான் என்பதே அச்செய்தி. இருந்தாலும் கூட அப்பெட்டியிலிருந்தும் துர்நாற்றம் கிளம்புவதை அவனால் தடுக்க முடியவில்லை. அதை வைத்தே அவனைக் கைது செய்து விட்டார்கள்.
எத்தனை பாதுகாப்பு வசதிகள் செய்து பராமரித்தாலும் இறந்துவிட்ட மனித உடலில் இருந்து துர்நாற்றம் கிளம்புவதைத் தவிர்க்க முடியாது. அதீத முயற்சிகளை மேற்கொண்டு அதற்கான சாதனங்களை வடிவமைத்து அத்துர்நாற்றம் கிளம்பும் காலத்தை வேண்டுமானால் தள்ளிப்போட முடியுமே தவிர நாற்றம் வராமல் நிரந்தரமாகத் தடுக்க ஒரு வழியுமில்லை.
அதையொத்த விதத்தில் தான் சமூகத்திற்குக் கொடுப்பதற்கென்று உயிரோட்டமுள்ள ஆக்கபூர்வமான எதையும் கொண்டிராது இறந்துவிட்ட நிலையில் இருக்கும் முதலாளித்துவமும் உலக அளவிலும் இந்திய அளவிலும் சகிக்க முடியாத துர்நாற்றங்களை வெளிவிட்டுக் கொண்டுள்ளது. அதனை அவ்வாறு வெளிப்படுத்தும் இறந்துவிட்ட பிணத்தை வைத்திருக்கும் குளிர்பதனப் பெட்டியின் துளைகள் துவாரங்களாக விக்கிலீக்கும் ராடியா டேப்பும் செயல்பட்டு வெளிப்படையாக ஜனநாயக அடிப்படைகளில் செயல்படுவது போல் தோற்றம் காட்டிக் கொண்டிருக்கும் உலக மற்றும் உள்ளூர் முதலாளித்துவ அமைப்புகளை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளன.
தண்டனைக்குத் தப்பிய குற்றவாளிகள்
மனித குலத்தை அழிக்கவல்ல பேரழிவுச் சாதனங்களை வைத்திருக்கிறார் என்ற சாக்கில் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசைன் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டினைத் தன் கைவசம் உள்ள பிரச்சார சாதனங்கள் மூலமாக உலகெங்கும் பரவவிட்டு அவ்வாயுதங்களை அழிப்பதெற்கென்ற பெயரில் அந்நாட்டின் மீது படையெடுத்து தாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஆயுதங்கள் எத்தனை நவீன ரகத்தைச் சேர்ந்தவை என்பதை உலகெங்கும் பறைசாற்றி உலகின் பல நாடுகளிடையே அவற்றிற்கான விளம்பரத்தையும் அமெரிக்கா செய்து முடித்தது.
அதன் பின்னர் இறுதியாக அப்படிப்பட்ட உயிரியல் மனிதக் கொல்லிகள் எவற்றையும் சதாம் உசைன் உருவாக்கி வளர்த்து வைத்திருக்கவில்லை என்பது தெரியவந்தது. ஒரு பொய்யினை அடிப்படையாக வைத்து இத்தகைய யுத்தத்தையும் அதன் விளைவாக ஈராக் மற்றும் அமெரிக்க மக்களின் பல மனித உயிர்களையும் இறுதியாக சதாம் உசைனின் உயிரையும் பறித்த பின் அவற்றைச் செய்த குற்றவாளிகளான அமெரிக்க, ஆங்கில முதலாளிகளின் நம்பகமான தரகர்களும் அந்நாடுகளின் அதிபர், பிரதமர்களாக இருந்தவர்களுமான ஜார்ஜ்.டபிள்யு.புஷ்ஷிம் டோனி பிளேரும் ஆகியுள்ளனர். அதாவது தண்டனைக்குத் தப்பிய குற்றவாளிகளாக இன்று அவர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
கட்சி மாறியது காட்சி மாறவில்லை
அவ்விரு நாடுகளும் தற்போது ஆப்கானிஸ்தானத்தில் ஒரு யுத்தத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்பான தாலிபானை அழிப்பதற்காக மேற்கொள்கிறோம் என்ற பெயரில் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் தற்போது அந்த யுத்தத்தை நடத்துபவர்கள் ஜார்ஜ்.டபிள்யு.புஷ் மற்றும் டோனி பிளேர் ஆகியவர்கள் அல்ல. அவர்கள் அவ்விருவரின் தவறான செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி மக்கள் மத்தியில் அவர்களைக் குற்றவாளிகளாக நிறுத்தி அதன்மூலம் ஏற்பட்ட அவர்கள் மீதான தப்பபிப்பிராயத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த பாரக் ஓபாமாவும், டேவிட் காமருனும் ஆவர். இதில் விநோதம் என்னவென்றால் ஜார்ஜ்.டபிள்யு.புஷ் மீதும் டோனி பிளேர் மீதும் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை பாரக் ஓபாமாவும், டேவிட் காமருனும் ஏற்படுத்துவதற்குப் பயன்பட்ட விசயங்களில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்களும் முக்கியமானவை.
இருந்தாலும் கூட இந்த யுத்தங்களை மையமாக வைத்தே பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த பாரக் ஓபாமாவும், டேவிட் காமருனும் ஜார்ஜ்.டபிள்யு.புஷ்ஷிம் டோனி பிளேயரும் செய்ததையே மீண்டும் செய்து கொண்டுள்ளனர். அதனால் தான் நாம் ஏற்கனவே கூறினோம் அமெரிக்க, ஆங்கில முதலாளிகளின் தரகர்களாகவே ஜார்ஜ்.டபிள்யு. புஷும் , டோனி பிளேயரும் ஈராக், ஆப்கன் யுத்தங்களில் செயல்பட்டனர் என்று. அதே தரகர் பாத்திரத்தை வகிப்பவர்கள் என்ற நிலையில் தான் ஓபாமாவும், காமருனும் தற்போது இந்த ஆப்கன் யுத்தத்தை நடத்திக் கொண்டுள்ளனர்.
நிரந்தர எஜமானர் முதலாளிகள்
இவர்களைப் போன்ற ஆட்சியாளர்களுக்கு அடிப்படையான கொள்கை, கோட்பாடுகள் என்று எவையும் கிடையாது. இவர்களின் நிரந்தர எஜமானர்களான முதலாளிகளின் மனம் குளிரச் செயல்படுவது ஒன்றேதான் இவர்களது அடிப்படையானதும் நிரந்தரமானதுமான கொள்கை. இடையில் ஒருவருக்கொருவர் இவர்கள் சுமத்திக் கொள்ளும் குற்றச்சாட்டுகள் மூலமாகக் கிளப்பப்படும் புகை மூட்டத்தில் உண்மைகளைச் சரியாகப் பார்க்க முடியாமல் மதிமயங்கி ஒருமுறை இந்தக் கட்சிக்கும், மறுமுறை அந்தக் கட்சிக்கும் வாக்களிக்கும் அப்பாவிகளாக சாதாரண அமெரிக்க மற்றும் ஆங்கில நாட்டின் மக்கள் உள்ளனர்.
தாலிபான் அமெரிக்காவின் உருவாக்கமே
ஆப்கானிஸ்தானத்தில் எந்த அமைப்பை எதிர்த்து இவ்விரு நாடுகளும் இன்று போரை நடத்திக் கொண்டுள்ளனவோ அந்த அமைப்பிற்குப் புத்துயிரும் புதுவாழ்வும் கொடுத்து உருவாக்கியதே அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் என்பதை பெரும்பாலான மக்கள் இப்போது மறந்திருப்பார்கள். மக்களின் மறதி இந்த ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் ஒரு மாபெரும் வரப்பிரசாதம். அதனை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற் காகத்தான் பல்வேறு அர்த்தமும் பொருத்தமுமற்ற அறிவுடன் தொடர்பில்லாத உணர்வுகளை மட்டும் தூண்டிவிடக் கூடிய பல செய்திகளை நமது ஊடகங்கள் இடை விடாமல் பரப்புகின்றன.
அதாவது ரஷ்யா ராணுவ ரீதியாகத் தலையிட்டு
ஆப்கானிஸ்தானத்தில் ரஷ்யர்களுக்குச் சாதகமான ஒரு ஆட்சியை நிறுவிய நிலையில் அதனை அகற்றவே இஸ்லாம் விரோத ரஷ்யாவிற்கு எதிரானது என்ற அடிப்படையில் தாலிபான் அமைப்பு உருவெடுத்துச் செயல்படத் தொடங்கியது. இன்று எந்த ஆயுதங்களை வைத்துத் தாலிபான்கள் அமெரிக்க, ஆங்கில வீரர்களை வீழ்த்துகின்றனரோ அவற்றில் பல அமெரிக்க அரசால் தாலிபான்களுக்கு அக்கால கட்டத்தில் வழங்கப்பட்டவை.
அமெரிக்கர்கள் அப்போது தாலிபான்களுக்கு அளித்த பயிற்சியும் தற்போது அமெரிக்க, ஆங்கில இராணுவ வீரர்களைக் கொல்லவே பயன்படுகிறது.
சுதேசிமயமாக்கப்படும் யுத்தம்
எப்போதுமே ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தொடங்கிய பின் படிப்படியாக அந்த யுத்தத்தைத் தொடங்கும் ஏகாதிபத்திய அரசுகள் அவற்றின் மீது இவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்த அந்நியர்கள் என்ற முத்திரை விழுந்து அதன் விளைவாக உள்நாட்டு மக்களின் வெறுப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகப் படிப்படியாக அப்போர்களை சுதேசி மயமாக்க முயல்வர். அதாவது அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளிலேயே பொருத்தமான சில கைப்பாவைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனைத்துப் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளையும் செய்து அந்த ஏகாதிபத்தியங்களின் உள்நாட்டு ஏஜெண்டுகளாக அவர்களைச் செயல்பட வைத்துத் தங்கள் நோக்கை நிறைவேற்றிக் கொள்வர்.அந்த அடிப்படையில் தான் லான்லால் என்றொரு கைப்பாவை அமெரிக்கர்களால் வியட்நாமில் ஆட்சியாளனாக நியமிக்கப்பட்டான். அதைப்போல தற்போது ஆப்கானிஸ்தானத்திலும் கார்சாய் என்றொருவன் நியமிக்கப் பட்டிருக்கிறான். எவ்வாறு சிற்பியால் செய்யப்பட்ட ஒரு கற்சிலைக்குப் பல்வேறு சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மந்திர உச்சாடனங்களையும் செய்து அதற்குக் கடவுள் என்ற தோற்றத்தை மத ஆச்சாரியர்கள் உருவாக்குகிறார்களோ அதைப்போலவே இதுபோன்ற கைப்பாவைத் தரகர்களுக்கு ஒரு முறையான ஆட்சியாளன் என்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேர்தல்கள் போன்ற சடங்குகளையும் அந்நாடுகளில் ஏகாதிபத்தியங்கள் நடத்துகின்றன.
கார்சாய்
அதே அடிப்படையில் அங்கு நடக்கும் தேர்தல் பற்றியும் அதில் கார்சாய் வெற்றி பெறுவதற்கு உள்ள சாதக பாதக அம்சங்கள் குறித்தும் நமது நடுநிலைப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டு அனைத்துமே இயல்பான முறையில் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதன்பின் தங்களது நடுநிலைத் தன்மையைப் பறையறிவிக்கும் விதத்தில் தேர்தல்கள் அத்தனை முறையாக நடை பெறவில்லை என்பது போன்ற தீனக் குரல்களிலான குறிப்புகளையும் பத்திரிக்கைகள் அவ்வப்போது வெளியிடுகின்றன.
கொள்ளையர்கள்
இந்த அடிப்படையில் திரு உருவேற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்ட கார்சாய் போன்றவர்கள் நிச்சயமாக அவர்களது சுயலாப நோக்கங்களுக்குத் தவிர வேறெதற்காகவும் இப்பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது உலகறிந்த விசயம். ஏனெனில் ஊருக்கும் உலகிற்கும் அவர்கள் குறித்த பொய்த்தோற்றம் எத்தனை ஆடம்பரமாக உருவாக்கிக் காட்டப்பட்டாலும் அவர்கள் எதற்காகத் தரகர்களாக ஏகாதிபத்தியங்களால் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் அனுபவிக்கும் பதவிகள் மிகவும் தற்காலிகமானவை என்பதையும் அவர்கள் அறிவார்கள். எனவே அவர்களுக்கு ஏகாதிபத்தியங்களிடமிருந்து வரும் பணம் அதுதவிர ஆட்சியாளர்களாக இருப்பதால் அவர்களால் கொள்ளையடிப்பதற்கு அந்நாட்டிலுள்ள சாதனங்கள் செல்வங்கள் ஆகிய அனைத்தின் மூலமும் கிடைக்க வாய்ப்புள்ள பணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அதிகபட்சம் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்து ஒரு நாள் நாட்டை விட்டுத் துரத்தியடிக்கப்படும் நிலை ஏற்படும்போது அவ்வாறு சம்பாதித்தவற்றை எங்கு கொண்டு சென்று ஆடம்பரமாக வாழ முடியுமோ அங்கு கொண்டு சென்று வாழத் தொடங்கி விடுவார்கள்.
அதுவரை எப்படிச் சம்பாதிப்பது என்பதை மட்டுமே எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் அந்த 30 வெள்ளிக் காசுகள் தான் அவர்களின் அத்தனை துரோகச் செயல்பாடுகளுக்குமான ஒரே உந்து சக்தி. நின்று நிதானமாக யோசித்தால் கார்சாய் போன்றவர்கள் இதுபோன்ற நோக்கங்களுக்காகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எந்தப் புத்தியுள்ள மனிதனும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதனைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தெளிவற்ற குழப்ப நிலையைத் தோற்றுவிக்கும் புகை மூட்டத்தை உருவாக்குவதற்குத்தான் ஆளும் வர்க்கப் பிரச்சார சாதனங்கள் இருக்கின்றன.
விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள்
ஆனால் தற்போது விக்கிலீக் மூலம் இத்தனை நாட்களாக அமெரிக்க ஆங்கில ஏகாதிபத்தியங்களால் திறமையாக மூடிமறைக்கப்பட்ட ஆப்கன் யுத்தம் குறித்த பல உண்மைகள் அமெரிக்க, ஆங்கில ஆட்சியாளர்களின் உரையாடல்கள் மூலம் வெளிவந்துள்ளன.
அதாவது வெற்றி பெறுவதற்கான எந்த வாய்ப்பினையும் கொண்டிராததாக ஆப்கன் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது; அதனை நடத்தும் அமெரிக்க, ஆங்கிலத் துருப்புகளுக்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்தித் தருவதற்காக அவர்களால் நியமிக்கப்பட்ட கார்சாய் ஊழலின் உறைவிடமாக உள்ளான்; வியட்நாம் யுத்தத்தின் போது சைகோனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட அமெரிக்காவின் வியட்நாமியக் கருங்காலிகள் எவ்வளவு ஊழல் மயமாக இருந்தனரோ அவ்வளவு ஊழல் மயமாகக் கார்சாயும் அவரது கூட்டத்தினரும் உள்ளனர் என்பதை விக்கிலீக் மூலம் வெளிவந்த உரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
ஆனால் இந்த யுத்தத்தில் வெற்றி நிச்சயம் என்று நம்ப வைக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான அமெரிக்க, ஆங்கில உழைக்கும் மக்களின் பிள்ளைகள் போரில் ஈடுபடுத்தப்பட்டுக் கொண்டுள்ளனர். அமெரிக்க மக்கள் மத்தியில் அமெரிக்க, ஆங்கில அரசுகளின் ராணுவ வலிமை ஆப்கானிஸ்தானத்தில் தாலிபான்களுக்கெதிரான ஒரு வெற்றியை நிச்சயம் உருவாக்கித்தரும் என்ற நம்பிக்கையும் அத்துடன் கூட தாலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ஒரு
தீர்க்கமான தீவிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற பொய்த் தோற்றமும் வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது.
அம்பலமாகும் பல பொய்கள்
இந்தத் திட்டவட்டமாகக் கட்டியமைத்து உருவாக்கப்பட்ட பொய்களை ஒரு நொடியில் விக்கலீகில் இருந்து வெளியான உரையாடல்கள் அம்பலப்படுத்தி அமெரிக்க, ஆங்கில ஆட்சியாளர்களை அந்நாடுகளின் மக்கள் முன்பு அம்மணமாக நிறுத்தியுள்ளன.
இதன் மூலம் அவர்களது இன்றைய பொய்கள் மட்டும் அம்பலமாகவில்லை. வியட்நாம் யுத்தம் நடந்தபோது கம்யூனிஸப் பரவலைத் தடுப்பதற்காகத் தாங்கள் அந்த யுத்தத்தை நடத்துகிறோம் என்று கம்யூனிஸம் குறித்த உண்மையான புரிதலற்ற மக்களிடம் ஒரு பொய்ப் பிரச்சாரத்தைஅவர்கள் செய்ததும் அந்த ‘உன்னதப்’ பணியில் பல வியட்நாம் மக்களும் தங்களுக்கு ஆதரவாகத் திரண்டெழுந்து வந்துள்ளனர்; அவர்களைக் கொண்டே சைகோனில் லான்லாலின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளது என்று அவர்கள் அன்று உரைத்த மாபெரும் பொய்களும் இன்று அம்பலமாகியுள்ளன.
விக்கிலீக் வெளிப்படுத்தியுள்ள பல உண்மைகளில் இதுஒரு சிறு துளி. அதாவது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்ற உண்மை. இதுதவிர வெளியில் பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்கள் அந்நாடுகளில் செயல்படும் விதம் குறித்து எத்தனை பகட்டான தங்க முலாம் பூசியது போன்ற அறிவுப்புகளை அமெரிக்க, ஆங்கில ஆட்சியாளர்கள் செய்தாலும் அந்த ஆட்சியாளர்கள் குறித்து அவர்களின் மனதில் உள்ள கருத்துக்கள் இந்த உரையாடல்கள் மூலம் வெளிவந்துள்ளன. இந்த ஆட்சியாளர்களின் அறிவிக்கப்பட்ட நிலைகளில் எத்தனை உள் நோக்கங்கள் இருந்துள்ளன என்பதும் வெளிவந்துள்ளது.
ராடியா டேப்புகள்
அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் தில்லு முல்லுகள் விக்கிலீக் மூலமாக இவ்வாறு அம்பலமாகியுள்ள நிலையில் நமது நாட்டு முதலாளிகளின் திரைமறைவுச் செயல்பாடுகளை ராடியா
டேப்புகள் வெளிப்படுத்திக் கொண்டுள்ளன. நமது நாட்டின் பொது மக்களும் வாக்காளர்களும் நம்மால் தேர்ந்தெடுக்கபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரைக் கொண்டவையாக இருக்கும் கட்சிகள் ஆட்சி அமைக்கின்றன; அவ்வாறு எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பெரும்பான்மை தேவைப்படும் அளவிற்கு பிற கட்சியினரைத் தங்களோடு சேர்த்துக் கொண்டு சில பெரிய கட்சிகள் ஆட்சியமைக்கின்றன; அவ்வாறு ஆட்சியமைக்கும் கட்சிகள் அவர்களில் திறமையானவர்களை மந்திரிப் பதவிகளுக்கு பரிந்துரை செய்கின்றன. அவ்வாறு பரிந்துரை செய்யப்படுபவர்களுக்குப் பொருத்தமான துறைகள் அதாவது அமைச்சரகங்கள் ஒதுக்கப்படுகின்றன என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
முழுக்க முழுக்கத் திறமைகளின் அடிப்படையில் அல்லது கட்சிகள் கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை வைத்து அமைச்சரகங்கள் ஒதுக்கப்படுவதில்லை; மேலும் அந்த அடிப்படையில் ஒவ்வொரு கட்சிக்குமான அமைச்சர்களின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப் படுவதில்லை என்பது தற்போது ஓரளவு மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது. இருந்தாலும் பொதுவாக மக்கள் கொண்டிருக்கும் ஒரு ஜனநாயக அமைப்பின் ஆட்சிகள் அமைக்கப்படுவது அமைச்சரகங்கள் ஒதுக்கப்படுவது குறித்த கருத்துக்கள் ஏறக்குறைய நாம் மேலே விவரித்த விதத்திலேயே உள்ளன.
அமைச்சரகங்கள் யாரால் தீர்மானிக்கப் படுகின்றன
இவ்வாறு மக்களும் வாக்காளர்களும் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கையில் யார் யார் எந்தெந்தத் துறை அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பது எவ்வாறு முதலாளித்துவ நிறுவனங்களால் தீர்மானிக்கப் படுகிறது என்பது ராடியா டேப்புகள் மூலமாக வெளிவந்துள்ளது. அதுதவிர நம்மால் மிக உயர்வாக மதிக்கவும் கருதவும் படும் காட்சி ஊடகத்துறையைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் நம்ப முடியாத அளவிற்கு எவ்வளவு தூரம் இந்தத் திரை மறைவு வேலைகளுக்கு உதவி புரிபவர்களாக இருக்கின்றனர் என்பதும் இந்த ஒலிநாடாக்கள் மூலம் வெளிவந்துள்ளது.
இந்தத் திரைமறைவு வேலைகளைச் செய்வதற்காகவே ஐந்தாம் படைத் தன்மைவாய்ந்த முதலாளிகளுக்கு வெளி உலகிற்குத் தெரியாமல் உதவி புரியும் லாபியிஸ்ட் என்று கூறப்படும் தனி நபர்கள் எவ்வாறு நிறுவன அடிப்படையில் செயல்பட்டு வருகிறார்கள் என்பதும் ராடியா டேப்புகள் மூலமாக அம்பலமாகியுள்ளன.
யார் யார் எந்தெந்தத் துறைக்கு மந்திரிகளாக வரவேண்டும் என்பதற்காக முதலாளித்துவ நிறுவனங்கள் வேலை செய்வதோடு யார் யார் எந்தெந்தத் துறைக்கு அமைச்சர்களாக வரக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் வேலை செய்கிறார்கள் என்பதும் இதன்மூலம் வெளிவந்துள்ளது. அமைச்சர்களாக வர வாய்ப்புள்ளவர்கள் எனப் பெயர் அடிபடுபவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் தலைவர்களின் உறவினர்களைக் கொண்டோ அல்லது அக்கட்சியில் தலைவர்களிடம் செல்வாக்கு மிக்க தனிநபர்களைக் கொண்டோ எவ்வாறு அக்குறிப்பிட்ட நபர்கள் அமைச்சர்களாக ஆகாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை அவை செய்கின்றன என்பதையும் ராடியா டேப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
பணமே இலக்கு
ஆனால் இந்தத் திரைமறைவு வேலைகள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தின் ஓரே மற்றும் ஒட்டுமொத்த இலக்கும் பணம் சம்பாதிப்பது தான் என்பதும் வெளிவந்துள்ளது. இந்த ஒலி நாடாக்கள் மூலமாக நாட்டு மக்கள் அனைவரின் கண்களையும் திறக்க வைக்கும் விதத்தில் ஆட்சியாளர்களால் நடத்தப்படும் பல்வேறு ஊழல்களும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக 2ஜி அலைக்கற்றை விற்பனை செய்யப்பட்டதில் அரசிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 1,76,000 கோடி ரூபாய் என்பதை இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரி வெளியிட்டாலும் அது நடைபெற்ற பின்னணி மற்றும் சூழ்நிலைகள் ஆகியவற்றை விளக்குபவையாக ராடியா ஒலி நாடாக்கள் விளங்குகின்றன. அமைச்சரகங்கள் சிலருக்கு ஒதுக்கப்படக் கூடாது என்பதற்காக கையூட்டுகள் அதற்காக உதவி செய்யும் கட்சித் தலைவர்களின் உறவினர்களுக்கு அவர்களின் பினாமிகளின் மூலம் எவ்வாறெல்லாம் சென்று சேர்ந்துள்ளன என்பதும் இந்த ஒலி நாடாக்களின் மூலமாக வெளிவந்துள்ளது.
பண ரீதியாக மட்டுமல்ல பொருள் ரீதியாகவும் லஞ்சம்
நகர்ப் புறங்களின் மதிப்புமிக்க வீட்டு மனைகளை மிகக் குறைந்த மதிப்பீட்டில் விற்பனை செய்வது போன்ற யுக்திகள் எல்லாம் எவ்வாறு பெரு முதலாளித்துவ நிறுவனங்களால் இதற்காகக் கையாளப் பட்டுள்ளன என்பதையும் இந்த ஒலி நாடாக்கள் வெளிப்படுத்துகின்றன. ஒட்டு மொத்தத்தில் மக்கள் கண்களுக்கு வராமலேயே நமது அமைப்பில், அரசியலில், நிர்வாகத்தில், பத்திரிக்கைத் துறையில் புரையோடிப் போயிருக்கும் பல அவலங்கள் இந்த ஒலி நாடாக்கள் மூலமாக அம்பலமாகியிருக்கின்றன. அந்த வகையில் இந்த ஒலி நாடாக்கள் ஒரு மிகப் பெரும் சேவையை அதாவது மக்களின் மூடிக்கிடக்கும் கண்களைத் திறக்கும் வேலையினைச் செய்துள்ளன.
பொதுவாக சோசலிச நாடுகளுக்கும் முதலாளித்துவ அமைப்பிற்கும் இடையிலான ஒரு மிகப்பெரும் வேறுபாடாக முன் வைக்கப்படுவதும் மிகப் பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்படுவதுமான கருத்து ஒன்று உண்டு. அது சுதந்திரம் என்ற கண்ணோட்டத்தை மையமாகக் கொண்டது. அதாவது முதலாளித்துவ நாடுகளில் குறிப்பாக கருத்து மற்றும் பத்திரிக்கைச் சுதந்திரம் சோசலிச நாடுகளில் இருப்பதைக் காட்டிலும் மிகமிகக் கூடுதலாக உள்ளது என்பதே அக்கருத்தாகும்.
இக்கருத்தைப் பராமரிக்கவும் நிலை நாட்டவும் பேருதவி செய்தது சோசலிசம் குறித்து மார்க்சிய மாமேதைகளான மார்க்ஸ், லெனின் போன்றவர்கள் முன் வைத்ததும் தோழர் ஸ்டாலினால் நடைமுறைப் படுத்தப்பட்டதுமான பட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்ற சரியான கண்ணோட்டமாகும். ஒரு சர்வாதிகார அமைப்பில் அதாவது தன்னைத் தானே சர்வாதிகாரம் என்று அழைத்துக் கொள்ளும் அமைப்பில் இருப்பதைக் காட்டிலும் மேலான கருத்து மற்றும் பத்திரிக்கைச் சுதந்திரங்கள் அவ்வாறு தன்னை அழைத்துக் கொள்ளாத முதலாளித்துவ அமைப்பில் இருக்க வாய்ப்புண்டு என்பது ஒரு பொதுவான புரிதல் தானே.
அறிவு ஜீவிகளின் அச்சம்
எனவே குறிப்பாக அறிவு ஜீவிகள் மத்தியில் சோசலிச அமைப்பின் மீதான ஒரு உள்ளீடான வெறுப்பு எப்போதும் இருந்து கொண்டே வந்துள்ளது. அவர்களைப் பொறுத்தவரை ஆயிரத்தெட்டு சமூக ரீதியான நன்மைகளை அதாவது ஏற்றத் தாழ்வைப் போக்குவது, இடைத்தரகர் அமைப்புகளை ஒழிப்பது, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, கல்வி பொதுசுகாதாரம் போன்றவை அனைவருக்கும் கிட்டுமாறு செய்வது போன்ற எத்தனை எத்தனையோ சமூகப் பலன்களை வழங்கும் தன்மை கொண்டதாக சோசலிச அமைப்பு இருந்தாலும் அவை அனைத்தையும் காட்டிலும் மிக முக்கியமானது கருத்து மற்றும் பத்திரிக்கைச் சுதந்திரமே என்பதே அறிவு ஜீவிகளின் கருத்தாக அப்போதும் இருந்தது; இப்போதும் இருக்கிறது.
உண்மைக்குக் கிடைத்த பரிசு
தற்போது மேற் குறிப்பிடப்பட்ட பத்திரிக்கைச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவ்வப்போது சமூக அமைப்பிலும் ஆட்சியிலும் நடக்கும் கோளாறுகள் பத்திரிக்கைகளால் கொண்டுவரப்படாவிட்டாலும் ஒரு விபத்து போல் விக்கிலீக் ஏற்படுத்தியுள்ள தகவல் கசிவு, ராடியா ஒலி நாடாக்கள் வெளிப்படுத்திய பெரிய இடங்களில் பெரிய மனிதர்களுக்கிடையில் நடைபெற்ற உரையாடல்கள் மூலமான செய்திக்கசிவு ஆகியவை பல அப்பட்டமான மூடிமறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன.
ஒரு வகையில் பார்த்தால் பார்த்தீர்களா இதுதான் சுதந்திரம் எத்தனை மூடி மறைத்தாலும் உண்மைகள் எவ்வாறு இச்சுதந்திர அமைப்பில் வெளிவந்துள்ளன. இதுதான் இந்த அமைப்பின் சிறப்பு என்று இந்த நிகழ்வுகளை முதலாளித்துவ ஆட்சியாளர்கள் கொண்டாட வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. மாறாக விக்கிலீக் நிறுவனத் தலைவரைக் கற்பழிப்புக் குற்றவாளி என்று குற்றம் சாட்டிக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மிகுந்த சிரமத்திற்குப் பின்பு தற்போது அவர் ஜாமீனில் வெளி வந்திருக்கிறார். எந்த நாட்டின் சட்டங்கள் கற்பழிப்புக் குற்றவாளி என ஒருவரைக் காட்டுவதற்கு மிக அதிக ரத்துக்களைக் கொண்டதாக உள்ளதோ அந்த நாட்டின் அதாவது ஸ்வீடன் நாட்டின் சட்டங்களின் படி அவர் குற்றவாளியாக்கப் பட்டுள்ளார்.
அதைப்போல் இந்த ஒலி நாடாக்களைப் பத்திரிக்கைகள் வெளியிட்டதைக் கண்டித்து பெரும் பெரும் முதலாளிகள் நீதிமன்றங்களை அணுகியுள்ளனர். அவர்கள் ஒலி நாடாக்களினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் உண்மையாவை அல்ல என்ற அடிப்படையில் நீதிமன்றங்களை அணுகவில்லை.
நடந்த உரையாடல்களின் உண்மைத் தன்மையைச் சந்தேகித்தோ, மோசடித் தனமாக, பொய்யாக அவை தயாரிக்கப்பட்டுள்ளன என்று குற்றம் சுமத்தியோ நீதிமன்றங்களை அணுகாத அவர்கள் தாங்கள் தனிப்பட்ட முறையில் பேசியவைகளை எவ்வாறு அவை வெளிக்கொணரலாம் என்ற வாதத்தின் அடிப்படையில் நீதி மன்றங்களை அணுகியுள்ளனர்.
வெளிவந்தவை சமூக நலன் சார்ந்தவையே
சில தனிப்பட்ட உரையாடல்களை வெளிக் கொணர்வதை எந்த நாகரீக சமூகமும் ஏற்றுக் கொள்ளாது என்பது உண்மைதான். அப்படிப்பட்ட தனிநபர் உரையாடல்கள் தனிப்பட்ட மனிதர்களின் படுக்கையறைக்குள் நடைபெறுபவை போன்றவை.
ஆனால் இந்த ஒலி நாடாக்களின் மூலமாக வெளிப்பட்டுள்ள உரையாடல்களோ அப்பட்டமாகவே சமூகத்தின் பொது நலன் சம்பந்தப்பட்டவை. பொதுமக்கள் கவனத்திற்கும் கருத்திற்கும் கட்டாயம் கொண்டுவரப்பட வேண்டியவை. அதாவது நமது ஊடகங்களும் தனிப்பட்ட பெரு முதலாளிகளால் நடத்தப்படுவதால் தங்கள் பல்லைக் குத்தி தாங்களே முகர்ந்து பார்க்கக் கூடாது என்ற அடிப்படையில் பலகாலம் மூடி மறைக்கப்பட்டவை. ஆனால் அவற்றைத் தனிப்பட்ட உரையாடல்கள் என்றே நமது முதலாளிகள் கருதுகிறார்கள்.
மனம் புழுங்கும் முதலாளிகள் மனம் நெகிழும் பிரதமர்
தாங்க முடியாத விலை உயர்வு, வேலையின்மை போன்ற கொடுமைகளால் அல்லாடும் பலகோடிக் கணக்கான மக்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத நமது நாட்டின் ஆட்சியதிகாரத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ள பிரதமர் போன்றவர்களும் இதனால் முதலாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் மனச் சஞ்சலத்தை உணர்ந்து கொள்கிறார்கள்; வேதனைப்படுகிறார்கள். அவற்றைப் பத்திரிக்கைகளுக்கு அவர்கள் கொடுக்கும் நேர் காணல்களில் வெளிப்படுத்தவும் செய்கிறார்கள்.
தாக்குதலுக்கு ஆளாகும் இணைய தளங்கள்
ஏன் சுதந்திர வர்த்தகம், சுதந்திரமான கருத்துப் பரிவர்த்தனை, எங்கும் சுதந்திரம் எதிலும் சுதந்திரம் என்ற கருத்துக்களின் நிலைக்களனான முதலாளித்துவ அமைப்பின் ஆட்சியாளர்கள் இவ்வாறு சமூகத்தின் மத்தியில் அம்பலமாக வேண்டிய அதிர்ச்சி தரும் கருத்துக்கள் அம்பலமானதைக் கண்டு அஞ்சுகிறார்கள்? அதனை வெளிப்படுத்தியவர்கள் மீது பொய் வழக்குகள் போடுகிறார்கள்? மக்களின் கண்களில் மண்ணைத்தூவி திரைமறைவுச் செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் குவிக்க விரும்பும் முதலாளிகளின் வேதனையைப் புரிந்து கொள்ளுகிறார்கள். அவ்வேதனையைத் தாங்களும் பிரதிபலிக்கிறார்கள்?
விக்கிலீக்கின் அஸ்ஸான்ச் மட்டுமல்ல; விக்கிலீக் மூலம் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசுகளின் உள் நோக்கங்களையும், தில்லு முல்லுகளையும் அம்பலப்படுத்தி விக்கிலீக் வெளியிட்ட விபரங்களை வெளியிட்ட இணைய தளங்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றன. அமேசான் போன்ற அந்த இணைய தளங்கள் இனிமேல் தொடர்ந்து அத்தகைய தகவல்களை வெளியிடும் இணைய தளங்களாக இயங்குமா என்பதே தற்போது சந்தேகத்திற்குரியதாகியுள்ளது. பிரபல அமெரிக்கப் பத்திரிக்கையாளர் நாட்டன் வினவியிருப்பது போல இப்போது அமேசானின் செயல்பாட்டில் முட்டுக்கட்டை போடும் அமெரிக்க செனட்டர்கள் இதுபோன்ற விவரங்களை வெளியிடுபவை நியுயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகளாக இருந்தால் அவற்றில் அவை வெளிவருவதையும் தடுப்பார்களா என்று கேட்டுள்ளார்.
ராடியா ஒலி நாடாக்களில் வெளிவந்துள்ள விவரங்கள் சமூக ரீதியாக எத்தனை அதிர்ச்சி தரத்தக்கவை என்பதை உணராது ஏதோ ஒரு துப்பறியும் கதையைக் கேட்போர் மனநிலையில் இந்தியாவின் படித்த மத்தியதர வர்க்கம் இவ்வியத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நம்மைவிடப் பொது அறிவிலும் சமூக உணர்விலும் மேலோங்கியுள்ள ஐரோப்பாவின் பொது மக்கள் விக்கிலீக்குக்கு ஆதரவாக அணிதிரளத் தொடங்கியுள்ளனர்.
இந்த விக்கிலீக், ராடியா ஒலி நாடா நிகழ்வுகள் ஒரு மிக ஆழமான உண்மையை மக்கள் முன்பு நிறுத்தியுள்ளன. அதாவது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது உண்மையான ஒரு சுதந்திர சமூக அமைப்பு அல்ல என்ற ஆழமான அழுத்தமான உண்மையை அவை வெளிப்படுத்தியுள்ளன.
நாம் சுவாசிப்பது முதலாளித்துவ சுதந்திரக் காற்றே
முதலாளிகளின் நலன்களையும் அவர்களைப் பாதுகாக்கும் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளையும் நலன்களையும் அடிப்படையில் பாதிக்காத விதத்தில் செய்திகளையும் தகவல்களையும் தருவதற்கும் பெறுதவற்கும் மட்டுமான உரிமை படைத்தவர்களாகவே முதலாளித்துவத்தின் ‘முழுமையான சுதந்திரக் காற்றை’ சுவாசிக்கும் உரிமை படைத்துள்ளவர்களென வர்ணிக்கப்படும் நாம் உள்ளோம்.
ஆனால் முதலாளித்துவத்தின் அத்தகைய அடிப்படையான நலன்களோ மோசடிகள் மூலம் மட்டுமே பாதுகாக்கப்பட முடியும் என்ற நிலையிலேயே உள்ளன. அந்த மோசடிகளைப் பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் என்ற போர்வைக்குள் மூடிமறைத்து ஆட்சியாளர்கள் காப்பாற்றுகின்றனர்.
நமது நாட்டில் ராணுவத்திற்காகச் செலவிடப்படும் லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் எவ்வாறு செலவிடப்படுகின்றன என்பது குறித்து நாடாளுமன்றத்தில் கூடக் கேள்வி எழுப்ப முடியாது. அவ்வாறு கேள்வி எழுப்புவது ஒரு பெரும் குற்றம் போல் கருதப்படும். அவ்வாறு கேள்வி எழுப்பியவர்களை மாபெரும் ‘சோசலிஸ்ட்களான’ ஜார்ஜ் பெர்னான்டஸ் போன்றவர்கள் கூடக் கடுமையாகச் சாடுவர். அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கார்கில் போர் நடைபெற்ற காலத்தில் இறந்த இராணுவ வீரர்களுக்கான சவப் பெட்டிகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாகக் கேள்வி எழுந்தபோது அவர் கேள்வி எழுப்பியவர்களை எப்படியெல்லாம் சாடினார் என்பதை நாம் அறிவோம்.
பல்லாயிரக்கணக்கான கோடிக் கணக்கில் ராணுவ தளவாடங்கள் வாங்கப்படும் போது அவற்றிற்காக வழங்கப்படும் கமிசன்களே ஆயிரக்கணக்கான கோடிகளாக இருக்கும். அதைக் கேள்வி கேட்கும் உரிமையை தேசப் பாதுகாப்பு என்ற போர்வைக்குள் மூடிமறைத்துப் பறித்துவிட்டு அது பரவலாக காலங்காலமாக நடைபெற இவர்கள் வழிவகுக்கிறார்கள். கமிசன் பெறுவதற்காகவே உபயோக மற்றவையும் உடனடிப் பயன்பாட்டிற்கு உதவாதவையுமான பல்வேறு ஆயுதங்கள் வாங்கப்படுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதே பாதுகாக்கப் பட்டவை என்ற கண்ணோட்டத்தை வைத்துத்தான் மேற்கூறியுள்ளவற்றை வெளியிட்ட இராஜ துரோக குற்றத்தைச் செய்தவர் என்று விக்கிலீக்கின் அதிபர் அஜான்ஜ் அமெரிக்க ஆட்சியாளர்களால் பழி சுமத்தப்படுகிறார்.
பொருளாதாரத்தில் ஊழல் பணம் வகிக்கும் பங்கு
இது ஊழல் தானே; முதலாளித்துவத்தின் ஒரு உபபொருள் தானே. ஒரு உபபொருளை மையமாக வைத்து அந்த அமைப்பையே பழிப்பது எப்படி சரியாக இருக்கும் என்று சிலர் வினவலாம். ஆனால் இதுவரை சந்தித்திராத மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவம் தற்போது அதனுடைய பொருளாதாரத்தை உயிரோட்டமுள்ளதாகக் காட்டுவதற்குப் பயன்பட்டுக் கொண்டிருப்பது பங்கு வர்த்தகச் சூதாட்டத்திலும் ரியல் எஸ்டேட் போன்றவற்றிலும் மிகப்பெரிய அளவில் பங்காற்றிக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகளின் ஊழல்கள் மூலமாக பெறப்படும் பணமே.
இதுதான் முதலாளித்துவத்தின் உயிர்நாடியாகிப் போன பங்கு வர்த்தகச் சூதாட்டத்தை ஜீவனுள்ளதாக இப்போதும் வைத்திருக்கிறது. மற்றபடி பொருளுற்பத்தித்துறை போன்றவை மக்களின் வாங்கும் சக்தி கடுமையாகக் குறைந்துள்ளதன் காரணமாகப் பெரிதும் முடங்கிப் போயுள்ளன. அதனால் உருவாகும் உற்பத்தித் தேக்க நெருக்கடியிலிருந்து மீண்டெழ முடியாமலேயே உலக முதலாளித்துவம் முக்கியும் முணகியும் கொண்டுள்ளது.
வெளிப்படும் வெறுமை
பொருளாதார ரீதியாக முதலாளித்துவ உற்பத்திமுறை கலாவதியாகிப் போய்விட்டது என்பது மிக நீண்ட காலத்திற்கு முன்பே அம்பலமாகிவிட்டது. அடுத்தடுத்து வந்த உற்பத்தித் தேக்க நெருக்கடிகள் தற்போது அது அதன் மூன்றாவது மிகத் தீவரமடைந்துள்ள நெருக்கடிக் காலகட்டத்தில் இருக்கிறது என்பதையும் பொருளாதார ரீதியாக அது திவாலாகிப் போயிருப்பதையும் சாதாரண மக்களில் பலரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. அதை உணர்ந்த முதலாளித்துவ அடிவருடிகளும் அதன் கருத்து உற்பத்தியாளர்களும் மிகவும் வேகமாகவும் ஆழமாகவும் காலூன்றி நிற்க முயல்வது முதலாளித்துவ நாடுகள் மிகப் பெரிதாக முன்னிறுத்தும் கருத்துச் சுதந்திரம், பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற கண்ணோட்டங்களில் தான்.
ஆனால் விக்கிலீக், ராடியா ஒலி நாடாக்கள் மூலம் வெளிவந்துள்ள உண்மைகள் அக்கண்ணோட்டங்கள் பொய்யானவை; பல உண்மைகள் பலகாலமாக மக்களின் கண்களுக்குப் படாமல் மூடிமறைக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பனவற்றை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் அதனை வெளிப்படுத்தியவர்களை குற்றவாளிகளாகப் பாவிப்பதன் மூலம் முதலாளித்துவத்தின் முழுமையான வெறுமையும் ஆட்சியாளர்களின் கையாலாகாத தன்மையும் வெளிப்பட்டுள்ளன.
நாம் வாழும் அமைப்பு முதலாளித்துவ சர்வாதிகாரமே
உண்மையில் முதலாளித்துவம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும், அதையும் தாண்டி அது வெளிவந்துவிட்டால் அவ்வாறு அதனை வெளியிடுபவர்களைத் தண்டிக்கும் ஒரு சர்வாதிகார அமைப்பே என்பது இதன் மூலமாக அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சமூகத்தின் மிகமிகப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களுக்குச் சுதந்திரத்தை வழங்குவதாகும். சோசலிச அமைப்பில் இருப்பவர்களும் முதலாளித்துவ சமூகத்தில் முன்னர் வாழ்ந்ததால் சிந்தனை மட்டத்தில் அவர்களிடம் தேங்கியிருந்த முதலாளித்துவ சிந்தனைக்கும், மிக அற்பமான அளவில் அவ்வமைப்பில் இருந்த உடமையாளர்களுக்கும் மட்டுமே அது சர்வாதிகாரமாக இருந்தது. அந்த அடிப்படையில் முதலாளித்துவத்தைக் காட்டிலும் மிகப்பெரும் சுதந்திரத்தை சாதாரண மக்களுக்கு வழங்கிய சமூக அமைப்பாகவே சோசலிசம் இருந்தது. இதற்கு நேர் எதிராக மிகப்பெரும்பான்மையினரான பாடுபடும் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்குப் பொறுப்பற்ற விதத்தில் கோமாளித் தனமாக பெரிய இடத்தில் உள்ளவர்களைத் தோன்றும் போதெல்லாம் வசைபாடும் அர்த்தமற்ற ‘சுதந்திரத்தை’ வழங்கிவிட்டு சமூகத்தின் மேன்மைக்குப் பயன்படும் உண்மைகளைப் பேசுவதற்கான உரிமைகளை அறவே அளிக்காத மோசமான அடிமைத் தனத்தை அவர்கள் மேல் திணிக்கும் கொடுமையான சர்வாதிகாரமாகவே முதலாளித்துவம் விளங்குகிறது. அத்துடன் விரல்விட்டு எண்ணக்கூடிய உடமை வர்க்கத்தினர் மக்களைச் சுரண்டவும் சூறையாடவும் அங்கீகரிக்கப்படாத வழிமுறைகள் மூலமாகக் கூட மோசடிகள் செய்து சம்பாதிக்கவும் முழுமையான வாய்ப்பினையும், சுதந்திரத்தையும் வழங்கும் கொடுமையான அமைப்பாகவும் அது விளங்குகிறது. இவ்வாறு முதலாளித்துவம் சுதந்திரம் என்ற பெயரில் அது அதன் கடைசிப் பற்றுக் கோடாகக் கொண்டிருக்கும் பனிக்கம்பமும் இன்று உருகி ஒன்றுமில்லாததாக ஆகிக்கொண்டிருப்பதையே விக்கிலீக்கும் ராடியா ஒலி நாடாக்களும் வெளிப்படுத்துகின்றன.
No comments:
Post a Comment