Powered By Blogger

Wednesday, April 20, 2011

இன்றைய முதலாளித்துவம் பராமரிப்பது ஜனநாயக முகத் தோற்றமே தவிர உள்ளடக்கமல்ல


இந்திய அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஒரு சுயேட்சையான அமைப்பு இந்தியத் தேர்தல் ஆணையம். ஜனநாயகத்தின் முதுகெலும்பு என முதலாளித்துவ ஜனநாயகம் கருதும் தேர்தல்கள், சுதந்திரமாக முறை கேடுகளின்றி நடைபெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அது உருவாக்கப் பட்டது.




தேர்தல் முறைகேடுகள் காலங்காலமாக நடந்து வந்தாலும் எப்போதும் அவை ஒரே வகையினதாக இருக்கவில்லை. அளவிலும், பரிமாணத்திலும் அவை வேறுபட்டுக் கொண்டேயிருக்கின்றன. கள்ள ஓட்டு, வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் போன்றவை ஒரு காலத்தில் முக்கியமான முறைகேடுகளாக இருந்தன.


எப்போதுமே பணத்தின் பங்கும் பாத்திரமும் தேர்தல் அரசியலில் முக்கிய பங்கினை வகிக்கவே செய்தது. வட இந்தியாவில் தேர்தல் வன்முறைகள் இருந்த அளவிற்குத் தென் மாநிலங்களில் பொதுவாக இருந்ததில்லை. குறிப்பாகத் தமிழ்நாட்டில் தேர்தல் வன்முறை அதிக அளவு எப்போதுமே இருந்ததில்லை.


இருந்தாலும் கள்ள ஓட்டுப் போடுவது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு எப்போதுமே இங்கும் நடந்துள்ளது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இப்போக்குகள் வளர்ந்து தமிழ் நாட்டின் தேர்தல் அரசியல் மிகமிகக் கேவலமான ஒரு கட்டத்திற்கு வந்துள்ளது. இன்று தேர்தல் வெற்றிகளைச் சாதிப்பது ஆளும் கட்சிகளின் சாதனைகளல்ல; அவர்கள் வாக்காளர்களுக்கு வழங்கவிருக்கும் பணமே என்ற நிலை தோன்றியுள்ளது.

முறைகேடுகள் மூலமான வெற்றிகள்தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த இடைத் தேர்தல்கள், நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல், சென்னை மாநகராட்சிக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தல் இவை அனைத்திலுமே ஆளும் கட்சி பெற்ற வெற்றி முறைகேடுகளால் பெறப்பட்டதே. அனைத்து முறைகேடுகளிலும் கேடுகெட்ட முறைகேடாக விளங்குவது இன்று நிலவும் வாக்கிற்குப் பணம் கொடுக்கும் போக்கே.

மிரண்டுபோன வாக்காளர்மதுரை மேற்கு, மத்தியத் தொகுதிகளில் ஆளும்கட்சியினால் வெள்ளோட்டம் விடப்பட்ட வாக்கிற்குப் பணம் வழங்கும் நடைமுறை பலவகைச் சோதனைக்கும் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு இப்போது முழுமை பெற்றதாக ஆகியுள்ளது. அவ்வாறு ஆக்கியது ஆளும் கட்சியே. திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலின் போதே அது அந்தச் ‘சாதனை’யை ஆற்றியது. ஒரு வாக்கிற்கு ரூபாய் 5,000 என்ற அளவிற்குப் பணம் வழங்கப் பட்டதால் எதிர்க்கட்சி வேட்பாளர் மட்டுமல்ல பணம் வாங்கிய வாக்காளர்களே கூடத் திருமங்கலம் தொகுதியில் மிரண்டு போய் விட்டனர். அதனால் எதிர்க் கட்சியினர் அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று என்னதான் கூறினாலும் இவ்வளவு பணம் கொடுத்தவன் மாற்றி வாக்களித்தால் சும்மா விடமாட்டான் என்ற மிரட்சி ஏறக்குறைய பணம் பெற்ற அனைத்து வாக்காளரிடமும் ஏற்பட்டு விட்டது.

பொய் வழக்குகள்

இந்த முறைகேட்டைத் தடுக்க எதையுமே செய்யாததோடு அதனைத் தடுக்க முயன்றவர்கள் மீது தமிழக அரசின் காவல்துறை பொய் வழக்குகள் போட்டதைக் கண்டு வாக்காளர்கள் இன்னும் மிரண்டு போய் விட்டனர். பணம் கொடுத்தவர்கள் வாக்காளர்களிடம் செல் போன் எண்களைப் பெற்றுக் கொண்டது அவர்கள் மனதில் மேலும் கதிகலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் மனச்சாட்சிக்கு விரோதமாகப் பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகத் திருமங்கலம் தொகுதியில் வாக்களித்தனர். எந்த அளவுகோலைக் கொண்டு பார்த்தாலும் ஆளும் கட்சி திருமங்கலம் இடைத் தேர்தலில் பெற்ற வெற்றி முழுக்க முழுக்கப் போலியானது.

வெட்கமற்ற அறிவிப்பு

இவை அனைத்தும் கண்ணுக்குக் கண்ணாகத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிந்தே இருந்தது. அது குறித்து அப்போது எழுந்த கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மென்று விழுங்கிக் கொண்டு பதில் கூறினர். சுதந்திரமாகத் தேர்தல்கள் நடைபெறத் தேவையானவற்றை சுயேட்சையான அதிகாரங்களுடன் செய்யக் கடமைப் பட்டிருந்த தேர்தல் ஆணையம் அப்பட்டமாகவும் முழுக்க முழுக்க முறைகேடாகவும் பெறப்பட்ட இந்த வெற்றியை ஆளும் கட்சியின் வெற்றியென வெட்கமின்றி அதிகார பூர்வமாக அறிவித்தது.

விக்கி லீக்

தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரும் தலை குனிவை ஏற்படுத்திய இந்த விசயம் இப்போது மாவட்டம் தாண்டி, மாநிலம் தாண்டி, நமது நாட்டையும் தாண்டி உலக அளவில் பிரபலமாகி தேர்தல் ஆணையத்தின் தலைகுனிவு குன்றிலிட்ட விளக்காகப் பிரகாசிக்கும் சூழ்நிலையைத் தோற்றுவித்து விட்டது. அதனைத் திறம்படவும் நயம்படவும் செய்துள்ளது விக்கி லீக் ஆகும். இந்த அவமானத்தை வெளியில் தெரியாமல் மூடி மறைத்துவிட நமது அரசு இயந்திரமும், அதிகார வர்க்கமும் மேற்கொண்ட முயற்சிகளை விக்கி லீக் வெளிப்படுத்திய உண்மைகள் தவிடு பொடியாக்கி விட்டன.

இன்னொரு நாளிதழ்ஒரு வாக்கிற்கு 5,000 ரூபாய் கொடுக்கப்பட்டது என்பதில் தொடங்கி அப்பணம் எந்தெந்த முறைகளிலெல்லாம் கொடுக்கப் பட்டது என்பது வரை அனைத்தும் விக்கி லீக் கேபிளில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட செய்திகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது. நாளிதழ்களுக்கு நடுவில் இந்தத் தொகை வைக்கப்பட்டு சில வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாம். அதைக் கண்ட வாக்காளர்களில் சிலர் எங்களுக்கு இன்னொரு நாளிதழ் தாருங்களேன் என்று கேட்டார்களாம்.


வளர்ந்த முறைகேடு வளராத ஆணையம்


இது போன்ற செய்திகள் வெளிவந்து உலகில் ‘முதற்பெரும் ஜனநாயகத்தின்’ உண்மை நிலை அம்பலமாகியுள்ள இந்தச் சூழ்நிலை ஒரு விசயத்தைத் தெளிவு படுத்தியுள்ளது. அதாவது முறைகேடுகள் வளர்ந்துள்ள அளவிற்கு அவற்றைச் சந்திப்பதற்கென்று இருக்கக் கூடிய தேர்தல் ஆணையம் வளர்க்கப்படவில்லை.


முறைகேடுகள் குணாம்ச ரீதியாக அடுத்த கட்டத்திற்கே வந்துவிட்டன. அதாவது இப்போது வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியம் இல்லை. கள்ள ஓட்டை முழுமையாக நம்பி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வெளிப்படையாக அனைத்தும் சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொண்டே உள்ளூரப் பணத்தின் வலிமையால் மக்களின் தீர்ப்பை விலைக்கு வாங்கி விடலாம். அதன்மூலம் தேர்தல் வெற்றிகள் எளிதில் சாதிக்கப்பட முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது.

தேர்தல் மற்றும் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை சிறிதளவாவது பராமரிக்கப்பட வேண்டும் என்றால் குறைந்த பட்சம் திருமங்கலம் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் பெற்ற வெற்றி செல்லுபடி ஆகாது என்றாவது அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அறிவித்திருந்தால் இன்று உலக அளவில் தமிழ்நாட்டில் நிலவும் தேர்தல் முறை எத்தனை அசிங்கமானது என்பதாவது அம்பலமாகாமல் இருந்திருக்கும்.

ஆமாம் சாமி அதிகார வர்க்கம்நமது அமைப்பில் அதிகார வர்க்கம் ஆட்சியாளர்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் ஆமாம் சாமி போட்டே பழக்கப் பட்டுவிட்டது. இல்லையயனில் ஒரு முறைகேட்டை நேரடியாகத் தெரிந்து கொண்டவர்கள் என்ற ரீதியில் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் ஆணையம் இந்த வாக்கிற்குப் பணம் வழங்கும் அவலத்தைத் தடுக்கும் அளவிற்கு உரிய முறையில் வலிமைப் படுத்தப்பட வேண்டும் என்பதையும் அத்தகைய முறைகேடுகளின் மூலம் பெறும் வெற்றிகள் செல்லுபடி ஆகாதவை என்று அறிவிக்கும் அளவிற்கு புது அதிகாரங்கள் அதற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியிருக்க வேண்டும்.


அதைவிடுத்துத் தற்போது தேர்தல் ஆணையம் அரைத்த மாவையே மிக வேகமாக அரைக்கத் தொடங்கியுள்ளது. அவை ஒரு பலனையும் தரப் போவதில்லை என்பது ஊரறிந்த விசயம். வாக்கிற்குப் பணம் கொடுப்பதைப் பலர் கண்ணில் படாமல் செய்து முடிக்கத் தற்போது தமிழக ஆளும் கட்சி உருவாக்கி இருப்பது போன்ற ஒரு இயந்திரத்தை உருவாக்கி அதன்மூலம் செயல் படுத்தினால் அதனை நேர்த்தியாகச் செய்துவிட முடியும்.

அதனைச் செய்யும் வேட்பாளரின் ஒட்டுமொத்தச் செலவினத்தில் வாக்கிற்கென கொடுக்கப்பட்ட மிகப்பெரும் அந்தப் பணம் கணக்கில் வராமலேயும் போய்விடும். அதனைத் தடுக்க வழிவகை இன்றி தற்போது பறக்கும் படைகள் அமைத்து எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்குச் செல்கிறார் என்று காட்டும் வகையில் தேர்தல் ஆணையம் மேற்பூச்சு நடவடிக்கைகளைச் செய்து கொண்டுள்ளது.

கண்டு கொள்ளாததன் காரணம்இந்த முறைகேடு தேர்தல் நடத்திய அதிகாரிகளுக்கு மட்டும் தான் தெரிந்திருக்கும் என்பதில்லை. விக்கி லீக்கிற்குத் தெரிந்து உலகம் முழுவதும் அம்பலமாக்கப்பட்டுச் சந்தி சிரிக்கும் இவ்விசயம் தேர்தல் ஆணையத்தின் தலைமைக்குத் தெரியாதிருப்பதற்கு வாய்ப்பேயில்லை. இருந்தாலும் அது இந்த விசயத்தில் உரிய முறையில் நடந்து கொள்ளாதிருந்ததற்கான காரணம் தற்போதைய முதலாளித்துவ அரசுகள் பராமரிக்க விரும்புவது ஜனநாயக முகத் தோற்றத்தை மட்டுமேயன்றி ஜனநாயகத்தின் உள்ளடக்கத்தையல்ல என்பதை அது புரிந்து கொண்டது தான். மேலும் தேர்தல் ஆணையத்தின் சுயேட்சைத் தன்மையும் பெயரளவிற்கானதே தவிர உண்மையானதல்ல; எனவே இவ்விசயத்தில் இந்த முறைகேட்டைச் செய்த தி.மு.கழகம் மத்தியில் ஆளும் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியாகவும் இருந்ததால் அதை அவ்வளவு தூரம் கண்கொள்ளத் தேவையில்லை என்று அது கருதியதும் இந்த அலட்சியப் போக்கிற்கு ஒரு காரணமாக இருந்திருக்கும்.

ஒரு வகையில் உலகின் வெளிச்சத்திற்கே வராமல் அமுங்கிப் போயிருக்கும் இந்த விசயம் வெளிக் கொணரப்பட்டுத் தமிழக ஆளும் கட்சியின் தேர்தல் வெற்றிகளின் பின்னணி இதுதான் என்பதை உலக அளவில் பட்டியலிடப்பட்டு அம்பலமானதற்கு விக்கி லீக் கேபிள்களுக்கு நாம் மனதார நன்றி கூற வேண்டும்.


இப்பிரச்னையைத் தீர்க்க அல்ல; அதன் விளிம்பையாவது தொடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் இனிமேலாவது மேற்கொள்ளுமா?

No comments:

Post a Comment