Powered By Blogger

Thursday, April 21, 2011

தில்லுமுல்லுகளின் மொத்த வடிவங்களாக விளங்கும் நமது நியாயவிலைக் கடைகள்விவரம் புரியாதோரால் புகழப்படும் கொடுமை

தேர்தல் பிரச்சாரம் இந்தமுறை பெரும்பாலும் மின்னணு ஊடகங்கள் மூலமாகவே நடைபெறுகிறது. அவ்வகையில் நடைபெறும் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் ஒரு கோடியே 83 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி மாதம் தோறும் வழங்கப்படுகிறது. இது வெளிப்படையாகவே ஏழை எளியவருக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள ஒரு மிகப் பெரும் நிவாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.


அவர் மட்டும் அல்ல தெரிந்தோ தெரியாமலோ அகில இந்தியப் பத்திரிக்கைகள் முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை நியாயவிலைக் கடைகள் மூலமான பொருள் விநியோகம் தமிழகத்தில் நடைபெறுவது போல் இந்தியா முழுவதும் நடைபெற வேண்டும் என்று கூறுகின்றனர். அதாவது தமிழகத்தில் அது மிகவும் நேர்த்தியாக நடைபெறுகிறது என்று பொருள்படும் விதத்தில் கூறுகின்றனர். தமிழகத்தில் இத்திட்டம் செயல்படும் லட்சணத்தை பார்ப்பவர்களுக்கு இனிப்பே இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்று சொல்வார்களே அது நினைவிற்கு வருகிறது.

மாதந்தோறும் மாமூல்
பெரிதும் பாராட்டப்படும் தமிழகத்தின் நியாய விலைக் கடைகளில் உண்மையில் நிலவும் அவலங்களைக் கண்ணுறும் நமக்கு ஆளைப் பார்த்து மயங்காதே அது ஊது காமாலை என்றே கூறத் தோன்றுகிறது. இப்போது தமிழக நியாய விலைக் கடைகளில் நிலவும் யதார்த்தங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.


தமிழ்நாட்டின் ஒவ்வொரு நியாயவிலைக் கடையில் இருந்தும் மாதம் தோறும் ஒரு கணிசமான தொகை அரசு அதிகாரிகளுக்கு கையூட்டாக போகிறது. அது ஒரு கடைக்கு 15,000 ரூபாய் என்ற அளவிற்கு உள்ளதாக தினமலர் நாளிதழ் சில மாதங்களுக்கு முன்பு வெளிப்படையாகவே எழுதியது. அதனைப் பல மட்டங்களிலுள்ள அரசு அதிகாரிகள் பகிர்ந்து கொள்கின்றனர். அதுதவிர நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அவ்வட்டாரங்களில் செயல்படும் பெரும் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ச்சியாக நன்கொடைகள் வழங்குபவர்களாகவும் உள்ளனர். மிக அதிகம் ஊதியம் பெறுபவர்களாக இருந்து அவர்கள் அதைச் செய்தார்கள் என்றால் அதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ மிகமிகக் குறைவு. மாதத்திற்கு 3,000 ரூபாய் என்றிருந்த அவர்களது ஊதியம் தற்போது ரூ 4,000 என்று மாற்றப் பட்டுள்ளது.

பணியமரத் துடிப்பதேன்
இவ்வாறு முறையாக நடத்தப்படுவதாக பலரால் கருதப்படும் நியாயவிலைக் கடைகளிலிருந்து மூடை மூடைகளாக லாரிகளில் அரிசி கடத்தப்படுகிறது. அது பிடிபடும் செய்திகளும் அவ்வப்போது செய்தித் தாள்களின் மூலம் வருகின்றன. அவ்வப்போது குடிமைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பல நியாய விலைக்கடை ஊழியர்கள் கைது செய்யப்படும் செய்திகளும் பத்திரிக்கைகளில் வருகின்றன. சம்பளம் மிகக் குறைவு அதிகாரிகளுக்கு மாதம் தோறும் கையூட்டுக் கொடுக்க வேண்டும். அரசியல் வாதிகளுக்கும் நன்கொடை கொடுக்க வேண்டும். இத்தனை பிடுங்கல்களுக்கு மத்தியிலும் நியாயவிலைக் கடை ஊழியர்களாகப் பணியமர்வதற்கு பலர் துடிக்கிறார்கள். இது எதனால் என்பது நமக்கு புரியாத புதிராக இருக்கிறது.

தமிழக முதல்வர் கூறியுள்ள ஒரு கோடியே 83 லட்சம் ஏழை மக்களுக்கு கிலோ 1 ரூபாய் வீதம் அரிசி வழங்கப்படுகிறது என்ற கூற்றில் ஒரு கோடியே 83 லட்சம் என்பது குறிப்பாகப் பார்க்கப்பட வேண்டியதாகும். உண்மையில் அந்த எண்ணிக்கையில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் இந்த ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசியை வாங்குவதில்லை.

அரிசியின் தரம் குறைவாக இருப்பதால் உள்ளபடியே சிலர் அவர்களது வருமானம் குறைந்ததாக இருந்த போதிலும் கூட அதை வாங்காதிருக்கின்றனர். அது ஒட்டுமொத்த அட்டைகள் வைத்திருப்பவர் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே இருக்கும். அப்படியானால் அதுபோக மீதி உள்ள பலரும் அதனைப் பெறுவதற்கு உரிமை உள்ள குடும்ப அட்டையை வைத்திருந்தும் அதனை வாங்காதிருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன? ஒரு குடும்பம் என்றால் சராசரியாக 3 உறுப்பினர்களைக் கொண்டதாகவாவது அது இருக்கும். 1 கோடியே 83 லட்சம் என்றால் அதனை 3 மடங்காக பெருக்கிப் பார்த்தால் ஏறக்குறைய ஐந்தரைக் கோடி மக்கள் தொகை நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ ஒரு ரூபாய் அரிசி பெறுபவர்களாக வருவர். அதாவது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக வருவர். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த ஜனத்தொகை 2011 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி நமது ஜனத்தொகை 7 கோடி என்றால் அதில் ஏறக்குறைய 75 சதவீதம் என்ற அளவிற்கு அது வரும்.

ஒரு சமயம் நீளும் மறுசமயம் குறையும் வறுமைக் கோடு
இந்தப் புள்ளி விவரத்தைக் கொடுக்கும் தமிழக முதல்வரை அல்லது அரசியல் வாதிகளை தமிழகம் எந்த அளவு வளர்ந்துள்ளது என்று கேட்டால் அல்லது குறிப்பாக எத்தனை சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர் என்று வினவினால் அவர்கள் 25 சதவீதம் பேரே என்று கூடக் கூறத் தயங்க மாட்டார்கள். பொதுவாக வளர்ச்சி குறித்த கேள்வி வரும்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோரின் எண்ணிக்கையை குறைத்துக் கூறும் நமது ஆட்சியாளர்கள் தேர்தல் காலத்தில் தனது சாதனைகள் என்ற கண்ணோட்டத்தில் சில விசயங்களை முன்வைக்கும் போது அவர்களையே அறியாமல் 75 சதவீதம் பேரை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாகக் கருதி குடிமைப் பொருள் வழங்குவதாகக் கூறுகின்றனர்.

நாம் ஏற்கனவே எழுப்பிய பல கேள்விகளுக்கான பதில் இங்கே தான் உள்ளது. அதாவது இந்த குறைந்த விலை அரிசி தேவைப் படாதவர்கள் பலரை அதனைப் பெற உரிமையுள்ளவர்கள் என ஆக்கி அதனை வெளிச் சந்தையில் அதிக விலைக்கு விற்க அனுமதித்து அதன் மூலம் தங்களுக்கு கையூட்டுக் கிடைப்பதை குடிமைப் பொருள் வினியோகத் துறை அதிகாரிகளும் வருவாய்த் துறையை சேர்ந்த அதிகாரிகளும் சாத்தியமாக்கிக் கொள்கின்றனர். அவ்வாறு அரசு அதிகார வர்க்கம் என்ற நெல்லுக்கு இவ்வாறு இறைக்கப்படும் நீர் நன்கொடைகளாக அரசியல் வாதிகளான புல்லுக்கும் ஆங்கே பொசிகிறது.

அளவு, எடையின் குறைவு
இவ்வாறு தங்களின் முறைகேடான சம்பாத்தியத்திற்காக நப்பாசை ஊட்டப்பட்டு பயிற்றுவிக்கப்படும் நியாய விலைக் கடை ஊழியர்கள் தாங்களாகவும் பல ஊழல் நடவடிக்கைகளைச் செய்யத் தொடங்கி விடுகின்றனர். வினியோகத்திற்காக வரும் குடிமைப் பொருள்கள் நிரப்பப்பட்டிருக்கும் பைகளில் இருந்து ஆங்காங்கே திருடப்படுவதால் அதில் இருக்கும் பொருட்கள் குறைவதாகவும் அதனை ஈடுகட்டத் தாங்கள் அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கும் போது அளவில் குறைக்க வேண்டியுள்ளது என்றும் சாக்குக் கூறி அனைவருக்கும் பொருட்களின் அளவைக் குறைத்து வழங்கி அதில் சம்பாதிக்கத் தொடங்கி விடுகின்றனர். மேலும் நியாயவிலைக் கடைக்கு வரும் ஓரளவு நல்ல அரிசியை வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்கும் நியாயவிலைக் கடை ஊழியர்கள், கடைக்கு வரும் மோசமான நாற்றமெடுக்கும் அரிசியை அட்டை தாரர்களுக்கு வழங்குகின்றனர். அதுதவிர கோதுமை பச்சரிசி போன்ற பொருட்கள் வரும்போது அவற்றின் இருப்பே இல்லை என்று பொய் கூறி மொத்தம் மொத்தமாக அவற்றை வெளியில் விற்று விடுகின்றனர்.

இதுபோன்ற பொருட்களை வாங்குகின்றவர்கள் ஒட்டுமொத்த அட்டைதாரர்களின் எண்ணிக்கையில் குறைவான பகுதியினராக இருப்பதால் அவர்களது எதிர்ப்புக் குரல் எடுபடுவதில்லை. பல இடங்களில் அவ்வட்டாரக் கேடிகளுக்கும் காலிகளுக்கும் அவ்வப்போது பணம் அல்லது பொருள் கொடுத்து நியாய விலைக் கடை ஊழியர்கள் தங்களுக்குச் சாதகமானவர்களாக வைத்திருப்பதால் அவர்களை கொண்டு மிரட்டியும் எதிர்ப்புக் குரல் எழுப்பும் சாதாரண மக்களை பல நியாயவிலைக் கடை ஊழியர்கள் அச்சுறுத்தி அடக்கி விடுகின்றனர்.


இதையும் தாண்டி சில அரசியல் அமைப்புகள் நியாயவிலைக் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அதன் ஊழியர்கள் கையும் களவுமாக பிடிபடும் சூழ்நிலையை உருவாக்கினால் ஊழியர்கள் தற்காலிகப் பணி நீக்கமும் செய்யப் படுகின்றனர். நிர்வாகம் மிகவும் நேர்மையாக நடைபெறுகிறது என்று வெளி உலகிற்கு காட்டுவதற்காக அத்தகைய பணி நீக்கங்கள் பத்திரிக்கைச் செய்திகளாகவும் வெளிவர ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. ஆனால் வெகு விரைவில் மேலதிகாரிகளின் ஆதரவோடு அவர்கள் மீண்டும் வேறு எங்காவது பணியமர்த்தவும் படுகின்றனர். ஊழலில் ஈடுபட்ட அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டு விட்டனர் என்பது நமது நடுநிலைப் பத்திரிக்கைகளால் செய்தியாக வெளியிடப் படுவதில்லை.

தவறு செய் வெளியில் தெரியாமல் செய்
நியாய விலைக் கடைகளில் பணியமர்த்தப் படுபவர்களுக்கு குடிமைப் பொருள் வினியோகக் கழக அதிகாரிகளால் கூறப்படும் அறிவுரையே குடிமைப் பொருட்களை குறைந்து வழங்குவது போன்ற முறைகேடுகளைச் செய்யாமல் இந்த வேலையில் நீங்கள் நீடிக்க முடியாது. ஆனால் அவ்வாறு செய்கையில் அவற்றை வெளிப்படையாகத் தெரியாமல் செய்யுங்கள் என்றே கூறுகின்றனர்.


அதனால் அரிசி பெறும் உரிமையுள்ள அதே சமயத்தில் அரிசி வாங்காதவர்கள் யார் யார் என்று கடை ஊழியர்களுக்குத் தெரியும். அவர்கள் அவர்களுக்குத் தேவைப்படும் சீனி போன்ற பொருட்கள் வாங்க வரும் போது அவர்களது அட்டையில் அரிசியும் வழங்கப்பட்டு விட்டதாகக் குறித்து விடுகின்றனர். அவ்வாறு ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் வாங்காமல் செல்கின்றனர் என்பதைத் தனியே குறித்து வைத்து அதனை 20 ஆல் பெருக்கி அவ்வளவு அரிசியைக் கடத்தி விற்கின்றனர்.

அத்தகைய விற்பனையில் வரும் பணத்தின் ஒரு பகுதியை அதிகாரிகள் அனைவரும் பிரித்துக் கொள்வதற்கு மாதம் தோறும் மாமூலாகக் கொடுக்கின்றனர். இதனைத் திறம்படச் செய்ய முடியாதவர்கள் நியாயவிலைக் கடை ஊழியர்களாக நீடிக்க முடியாது.

எனவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து பலகாலம் அவ்வலுவலகத்தால் நேர்காணல் கடிதம் அனுப்பப்படாத பலர் சமீபத்தில் நியாய விலைக்கடை ஊழியர் வேலைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் சிலரை இத்தகைய தில்லு முல்லு வேலைக்குப் பயன்பட மாட்டார்கள் எனப் பார்த்த மாத்திரத்திலேயே நேர்காணல் செய்த அதிகாரிகள் கண்டு கொண்டனர். அவர்களிடம் அதிகாரிகள் கூறிய அறிவுரையே இவ்வேலையில் நீங்கள் தாக்குப் பிடிக்க முடியாது; எனவே எங்களது அறிவுரை நீங்கள் இவ்வேலையை ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்பது தான்.


அதையும் தாண்டி இல்லை நாங்கள் இந்த வேலையில் சேரவே விரும்புகிறோம் என்று கூறிய சில பெண்களிடம் அவர்கள் கேட்ட கேள்விகள் “நாங்கள் சோதனைக்குக் கடைக்கு வரும் போது கடையில் இருப்புக் குறைந்தால், அவ்வாறு குறையும் பொருளின் இழப்பை வெளிச்சந்தை விலைக்கு நீங்கள் ஈடுகட்ட வேண்டும். அவ்வாறு ஈடுகட்ட வேண்டுமென்றால் உங்கள் கணவர் நல்லதொரு வேலையில் இருக்க வேண்டும்” என்பதாகும்.

பொருட்களின் எடை மற்றும் இருப்பு ஏன் குறையப் போகிறது என்று சில பெண்கள் கேட்ட போது நான் தாசில்தார் வீட்டிலிருந்து வருகிறேன் எனக்கு இத்தனை கிலோ சீனி வழங்குங்கள் என்று கேட்டால் உங்களால் வழங்காமல் இருக்க முடியாது. அவ்வாறு வழங்கினால் அது குறையும். அதனை ஈடுகட்ட நீங்கள் வேறு எவருக்கேனும் சீனி கொடுக்காமல் அவர்களது அட்டையில் கொடுத்து விட்டதாகக் குறிக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் இந்தக் குறைவைச் சரி செய்யும் முன்பு சோதனைக்கு நாங்கள் வந்து விட்டால் நீங்கள் மாட்டிக் கொள்ளத் தானே செய்வீர்கள் என்பதாகும்.

இந்த லட்சணத்தில் செயல்படும் தமிழகத்தின் நியாய விலைக் கடைகள் தான் விவரம் தெரியாதவர்களால் புகழப் படுகின்றன. அரசு அதிகாரிகள், கட்சிகளின் வட்டாரப் பிரமுகர்கள் ஆகியவர்கள் ஊழல் செய்து கொழுப்பதற்கு மேலே நாம் விவரித்த வழி வகைகளைச் செய்து கொடுத்துவிட்டுத் தமிழக முதல்வர் கூறுகிறார் 1 கோடியே 83 லட்சம் குடும்பங்களுக்கு 1 கிலோ ஒரு ரூபாய் அரிசி வழங்கி அவர்களது உணவுப் பிரச்னையைத் தீர்த்துள்ளதாக.

மறைமுக மானியம்
தொழிலாளர் மறுநாள் தனது ஆலையில் வந்து வேலை செய்வதற்குத் தேவையான தெம்பையும் திராணியையும் பராமரிப்பதற்குப் போதுமான அளவு பணமே ஒரு முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளருக்கு ஊதியமாக வழங்கப் படுகிறது. தங்களது பல்லாண்டு காலப் போராட்டங்களின் மூலம் ஒப்பந்தச் சம்பளம் பெற்று இந்த விதிக்கு விதிவிலக்காக அமைப்பு ரீதியாக ஒருங்கு திரட்டப்பட்ட தொழில்களில் வேலை செய்பவர்கள் மக்கள் தொகையில் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் பெருமையடித்துக் கொள்ளும் இந்த 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டமும் ஒப்பந்த சம்பளம் பெறாத கோடான கோடி தொழிலாளருக்கு முதலாளிகள் குறைந்த சம்பளம் கொடுத்துச் சுரண்டி அதிக லாபம் ஈட்டுவதற்கே பயன்படுகிறது. அதாவது இந்தத் திட்டத்திற்கு அரசு ஒதுக்கும் தொகை முதலாளிகளுக்கு மறைமுக மானியமாகவே ஆகிறது.

தேனி நகரில் பாரஸ்ட் ரோடு 6வது தெருவில் இருக்கும் நியாயவிலைக் கடை எண் 12ன் விற்பனையாளர் பலகாலமாக கடைக்கு வரும் நல்ல அரிசியை கள்ளத் தனமாக வெளிச்சந்தையில் விற்றும் புழுத்த அரிசியை அட்டைதாரர்களுக்கு வினியோகித்தும் வந்தார். இதனை எதிர்த்து 21.03.2011 அன்று ஒன்றுதிரண்ட அட்டைதாரர்களை ஒருங்கு திரட்டி தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் வரை கூட்டிச் சென்று அங்கு மாவட்டக் குடிமைப் பொருள் அதிகாரியிடம் அவர்களது புகார்களை கூறச் செய்து அவர்களுக்கு உடனடியாக நல்ல அரிசி வழங்கப் படுவதற்கு சி.டபிள்யு.பி. தோழர்கள் ஜெயராமன், மாரி, பரமேஸ்வரன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இப்பிரச்னையின் நிரந்தரத் தீர்வுக்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ள விருக்கின்றனர்.

No comments:

Post a Comment