அன்றாடத் தேவைகளுக்காகப் போராடுவது என்றிருந்த தொழிலாளர் இயக்கம் மார்க்சியத் தத்துவத்தின் வழிகாட்டுதலின் மூலம் சமுதாய மாற்ற இயக்கமாக உருவானதும் அது எதிர்கொண்ட பிரச்னைகளும்
உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கம் மே தினத்தை தனது கடந்த கால செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து படிப்பினைகள் எடுத்து எதிர்கால செயல்பாட்டிற்கான திட்டத்தினை வகுத்தெக்கவே அனுஷ்டிக்கிறது. எந்தத் திட்டத்திற்கும் ஒரு வழிகாட்டும் குறிக்கோள் அவசியம். அந்த அடிப்படையில் மே தினத்தின் குறிக்கோள் உழைக்கும் வர்க்கத்தின் கூலி அடிமைத் தளையினை உடைத்தெறிந்துவிட்டு அதன் விடுதலையைச் சாதிப்பதே.
உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கம் மே தினத்தை தனது கடந்த கால செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து படிப்பினைகள் எடுத்து எதிர்கால செயல்பாட்டிற்கான திட்டத்தினை வகுத்தெக்கவே அனுஷ்டிக்கிறது. எந்தத் திட்டத்திற்கும் ஒரு வழிகாட்டும் குறிக்கோள் அவசியம். அந்த அடிப்படையில் மே தினத்தின் குறிக்கோள் உழைக்கும் வர்க்கத்தின் கூலி அடிமைத் தளையினை உடைத்தெறிந்துவிட்டு அதன் விடுதலையைச் சாதிப்பதே.
முதலாளித்துவ நுகத்தடியிலிருந்தான தொழிலாளிவர்க்க விடுதலையைச் சாதிப்பதற்கு அதனைச் சாதிக்க வேண்டும் என்ற அதன் விருப்பம் மட்டுமே போதாது. ஏனெனில் முதலாளித்துவ ஆட்சி சுரண்டலின் மூலம் ஆதாயம் ஈட்டும் அவ்வர்க்கத்தின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கவில்லை. அது தன் வர்க்க ஆட்சியை தக்கவைப்பதற்காக ஒரு அரசமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் அதன் ஆட்சி தங்குதடையின்றி நடைபெற வழிவகுத்துச் செயல்படுகிறது. அவ்வாறு அமைப்பு ரீதியாக வேரூன்றி நிற்கும் முதலாளி வர்க்க ஆட்சியை அசைத்துப் புரட்டி அதனை வேரோடும் வேரடி மண்ணோடும் தூக்கியயறிவதற்கு உழைக்கும் வர்க்கத்திற்கும் அமைப்புகள் வேண்டும். அமைப்பு ரீதியான செயல்பாடின்றி உழைக்கும் வர்க்க விடுதலை குறித்த பேச்சுகள் யாவும் கற்பனாவாதப் பேச்சுகளாகவே இருக்கும்.
வர்க்க அமைப்புகள் வலிந்து கட்டப்படுபவையல்ல
உழைக்கும் வர்க்க அமைப்புகள் என்று நாம் கூறும் போது அந்த அமைப்புகள் செயற்கையாக உழைக்கும் வர்க்க உணர்வு பெற்றவர்களால் வலிந்து கட்டப்படுபவை என்ற எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது. உழைக்கும் வர்க்க அமைப்புகள் உருவாவதற்கான பின்னணியை முதலாளி வர்க்கமே உருவாக்கிக் கொடுக்கிறது.
முதலாளித்துவம் தொழிலாளரை ஒரு கூரையின் கீழ் வேலை செய்பவர்களாக ஆக்குகிறது. சுரண்டல் அவர்களை ஒன்று படுத்துகிறது. அவர்கள் ஒன்றுபட்டு எதுவும் செய்யாதவர்களாக இருந்தால் நிலவும் சுரண்டலும் அது இருக்கும் நிலையிலேயே இருந்து விடாது. எனவே உழைக்கும் வர்க்கம் தற்போதுள்ள தனது வேலைச் சூழ்நிலையையும் சுரண்டலின் பரிமாணத்தையும் இன்னும் கொடூரமாகாமல் வைத்திருப்பதற்காகக் கூடப் போராடவே வேண்டியுள்ளது. அத்தகைய போராட வேண்டிய நிர்ப்பந்தமே உழைக்கும் வர்க்கத்தை ஒன்றுபடுத்தும் சக்தியாகும். அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை அதன் வாழ்க்கைத் தேவையை அடிப்படையாகக் கொண்ட போராட்ட ஒற்றுமையாகும். இந்தப் பின்னணியில் தான் உழைக்கும் வர்க்க அமைப்புகள் தாமாகவே தொழிற்சங்கங்கள் என்ற வடிவத்தில் உருவாயின.
அன்றாடப் பிரச்னைகளுக்கான அமைப்பு நிரந்தரத் தீர்வைத் தராது
ஆனால் இத்தகைய தொழிற் சங்கங்கள் தொழிலாளி வர்க்கத்தின் அன்றாட நடைமுறைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டவை. தொழிற்சங்கங்கள் அன்றாடத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட நடைமுறை ரீதியிலான போராட்டங்களின் மூலம் மட்டும் அதன் பிரச்னைகள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வினைக் கொண்டுவர முடியாது. அதாவது கூலியடிமைத் தளையிலிருந்தான அதன் விடுதலையைச் சாதிக்க முடியாது. அதனைச் சாதிப்பதற்கு பாட்டாளி வர்க்க அரசியல் அவசியம். அந்த அரசியல் உணர்வு தொழிற்சங்க இயக்கத்திற்குள் வெளியிலிருந்துதான் கொண்டு செல்லப்பட வேண்டும்.
உழைக்கும் வர்க்க விடுதலையும் வர்க்க பேதமற்ற சமூகமும்
அத்தகைய அரசியல் உணர்வை வளர்த்து வகுத்தெடுப்பதும் அதனை தொழிற்சங்க இயக்கத்திற்குள் கொண்டு செல்வதும் அத்தனை எளிதான காரியமல்ல. பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கை அதன் தனிப்பட்ட அன்றாட நலனை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அது தன்னுடைய நலனுக்காக மட்டும் வாழும் , தனது உழைப்பைச் செலவிடும் வர்க்கமல்ல. அது சமூகத்தின் ஒட்டுமொத்த பொருட் தேவையையும் நிறைவேற்ற அல்லும் பகலும் அயராது பாடுபட்டுவிட்டு அதற்கெனக் கூலி என்ற பெயரில் தூக்கியெறியப்படும் அதன் அன்றாட உயிர் வாழும் தேவையை மட்டும் நிறைவேற்றப் போதுமானதாக இருக்கும் தொகையினைக் கொண்டு அனுதினமும் தியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பது. எனவே அதன் விடுதலையில் அதனுடையது மட்டுமல்ல; சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலையுமே அடங்கி உள்ளது. சமூக உற்பத்தி முழுவதையும் நடத்தும் அதன் கரங்களிலேயே சமூகத்தின் ஆட்சியதிகாரம் இருக்க வேண்டும். அவ்வாறு ஆட்சியதிகாரம் அதன் கரங்களில் வரும்போது அது சமூக உற்பத்தியை லாப நோக்கிலிருந்து மீட்டு சமூகத் தேவைகளை நிறைவேற்ற என்ற ரீதியில் உற்பத்தியின் இலக்கை மாற்றி திட்டவட்டமாகச் செயல்படும் போது முதலாளிவர்க்கம் இல்லாமல் போய்விடுகிறது. அது மட்டுமல்ல அத்துடன் சுரண்டப்படும் உழைப்பாளி வர்க்கமும் இல்லாததாகி சமூகம் வர்க்க பேதமற்றதாக ஆகிவிகிறது.
தனிச்சொத்தினைக் காப்பதற்காக என்று சமூகத்தில் உருவாகிய அரசு உள்பட அத்தனை தேவையற்ற அமைப்புகளும் சமூகம் வர்க்கங்களற்றதாக ஆகும் சூழ்நிலையில் தேவையற்றவையாகி உலர்ந்து உதிர்ந்துவிடும். இந்தப் புரிதலை அடிப்படையாகக் கொண்டதே தொழிலாளி வர்க்க அரசியல் உணர்வாகும்.
இந்தப் புரிதல் எடுத்த எடுப்பிலேயே தொழிலாளிவர்க்க அணிகளிலிருந்து உருவாகிவிடவில்லை. அநியாயம் அதர்மம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூகம் இருப்பதை உணர்ந்து அந்த அவல நிலையிலிருந்து அதனை விடுவிப்பதற்காகத் தங்களது சிந்தனைத்திறன் முழுவதையும் ஆக்கபூர்வ வகையில் செலவு செய்தவர்களின் கருத்துக்கள் கண்ணோட்டங்கள் ஆகியவற்றின் சாராம்சத்தை உள்வாங்கி சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தினை இயக்கவியல் போக்கே வழி நடத்துகிறது என்று தனது ஆராய்ச்சி மூலம் கண்டுகொண்டு அதனை உலகிற்கு வழங்கிய ஹெகலின் இயக்கவியல் கண்ணோட்ட வெளிச்சத்தில் அதனைப் பார்த்து சமூகத்தைச் சூழ்ந்துள்ள சுரண்டலும் அது சார்ந்த அநியாய அதர்மங்களும் நீங்க வேண்டுமென்பது நல்ல மனிதர்கள் மற்றும் சமுதாய நலன் கருதிச் சிந்திப்போரின் உன்னத விருப்பங்கள் மட்டுமல்ல; அது வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி என்று கண்டுகொண்ட வர்க்க ரீதியில் பார்த்தால் மத்தியதர வர்க்க அறிவு ஜீவிகள் என்ற வரையறைக்குள் வரும் மார்க்ஸ் , எங்கெல்ஸ் போன்றவர்களின் விஞ்ஞானபூர்வக் கருத்துக்கள் மூலமாகவே இந்த தொழிலாளிவர்க்க அரசியல் உணர்வு , தத்துவம் மூலமான புரிதல் உருவெடுத்தது. அது இந்த சமூக மாற்றத்தை சாத்தியப்படுத்தும் வகையில் நடைமுறை ரீதியானதும் கூட என்று காட்டியதன் மூலம் அதனை அந்த மாபெரும் தலைவர்கள் ஒரு உன்னத உயரத்திற்கு எடுத்துச் சென்றனர்.
சூழ்நிலையே மனநிலையை உருவாக்குகிறது
படிப்பறிவற்று பாமர நிலையிலிருக்கும் உழைக்கும் வர்க்கம் எவ்வாறு இதனை புரிந்து கொள்ளவும் கைக்கொள்ளவும் முடியும் என்பது இங்கு எழும் முக்கிய கேள்வி. எந்தவொரு கருத்தையும் அறிந்து கொள்வதற்கு விடாமுயற்சியும் அனுபவமும் அடிப்படைக் கல்வியும் மட்டுமே போதாது. இவையனைத்தையும் தாண்டி அந்தத் தத்துவத்தின் சமூக ரீதியான பொருத்தமும் அதனை நடைமுறை ரீதியில் செயல்படுத்துகையில் எதிர்கொள்ள வேண்டிவரும் எதிர்ப்புகளையும் இடர்களையும் துணிவுடன் எதிர்கொள்ளத் தேவையான மனநிலையும் வேண்டும். அம்மனநிலை ஏற்படுவதற்கு எதிராக இருப்பது நாம் துணிவுடன் இதில் ஈடுபட்டால் இதை இழந்துவிடுவோம் அதை இழந்துவிடுவோம் என்ற நம்மிடம் உருவாகும் எண்ணப்போக்கே.
ஆனால் தங்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை; முதலாளித்துவச் சுரண்டல் தங்கள் கரங்களில் பூட்டியுள்ள கைவிலங்குகளைத் தவிர என்ற நிலையிலிருக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கு இந்த மனநிலை ஏற்படுவது அத்தனை சிரமமானதல்ல. அதனிடம் எளிதில் உருவாகும் வாய்ப்பைக் கொண்டதாக இருக்கும் தியாக சிந்தையுடன் கூடிய கூட்டுவாதக் கலாச்சாரத்திற்கு இந்த உயர்ந்த சிந்தனைகளை அறிந்து கொள்வது சிரமமானது அல்ல என்று மட்டுமல்ல அது தேவையானது என்பதால் எளிதானது என்பதையும் அம்மாமேதைகள் உணர்ந்திருந்தனர். எனவே ஒட்டுமொத்த சமூக விடுதலையை சாதிக்கும் தத்துவத்தை நடைமுறை ரீதியில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினைக் கொண்டதாக இருக்கும் உழைக்கும் வர்க்கமே சமூக முன்னேற்றத்தை ஒரு கட்டத்திற்கு மேல் வளர்த்தெடுக்க வழியற்றதாகி தேக்க நிலையில் வைத்திருக்கும் முதலாளித்துவத்தை தூக்கியெறியும் சமூகமாற்றப் போராட்டத்திற்கு தலைமை தாங்க வல்லது என்ற முடிவிற்கும் அம்மேதைகளும் அவர்களது பொருத்தமான சீடர்களும் வந்தனர்.
மனக் கோட்டையில் விழுந்த பேரிடி
இந்தக் கண்ணோட்டம் உழைக்கும் வர்க்க இயக்கத்திற்குள் வந்த பின்னர்தான் நம்பிக்கையூட்டும் ஒரு ஒளிக்கீற்று உழைக்கும் வர்க்க இயக்கத்திற்குள் வந்தது. இந்தக் கண்ணோட்டம் உழைக்கும் வர்க்க இயக்கத்தில் வேரூன்றிய வேளையில்தான் தொழிற் சங்கங்களை தொழிலாளரின் அன்றாடத் தேவைகளுக்காகப் பாடுபடுபவை என்ற செயல்பாட்டு வளையத்திற்குள் கட்டிப்போட்டு அவ்வப்போது சில உதிரிப் பலன்களையும் உரிமை என்ற பெயரில் சில சட்டச் சரத்துக்களையும் வழங்கி முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பில் அதனை ஒரு அங்கமாக ஆக்கிக் கொண்டு சுரண்டலினால் ஏற்படும் உழைக்கும் வர்க்கத்தின் அதிருப்திக்கு ஒரு வடிகால் ஏற்படுத்தித் தருவதாக வைத்துக்கொள்ள விரும்பிய முதலாளிவர்க்கத்தின் மனக்கோட்டையில் ஒரு பேரிடி விழுந்தது.
இத்தகைய அரசியல் உணர்வூட்டப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு எதிராக நடைமுறை ரீதியான தொழிலாளர் பிரச்னைகளுக்காக மட்டும் செயல்படுபவையாகவும் பல தொழிற்சங்கங்கள் இருந்தன. உழைக்கும் வர்க்கத்தின் உறுதியேற்கும் தினமான மேதினத்தை அனுஷ்டிப்பதிலும் இவ்விரு மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்ட தொழிற்சங்கங்களுக்கிடையில் பெரும் வேறுபாடு இருந்தது. தொழிலாளி வர்க்க விடுதலையைச் சாதிப்பதற்கு உகந்த சமுதாய மாற்றத்தை கொண்டுவர உறுதியேற்கும் தினமாக மேலே கூறிய உழைக்கும் வர்க்க அரசியல் உணர்வூட்டப்பட்ட தொழிற்சங்கங்கள் செயல்பட்டன. அதே வேளையில் தொழிலாளரின் நடைமுறைப் பிரச்னைகளுக்காகவே தொழிற்சங்கம் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தொழிற்சங்கங்களோ மேதினத்தை ஒரு கேளிக்கை தினமாகக் கொண்டாடத் தொடங்கின.
தம்மைத் தாமே மாற்றாமல் சுற்றியுள்ள உலகை மாற்ற முடியாது
உழைக்கும் வர்க்க அரசியல் உணர்வூட்டப்பட்ட தொழிற்சங்கங்கள் கம்யூனிஸப் பாடசாலைகளாக நடத்தப்பட வேண்டும் என்று மாமேதை மார்க்ஸ் கூறினார். இந்தச் சீரழிந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் இருக்க வேண்டியிருப்பதால் அதன் பல சீரழிந்த போக்குகள் தொழிலாளி வர்க்கத்திடமும் தோன்றி வளர்வதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன; முதலாளி வர்க்கம் அதிகபட்ச லாபம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதே இந்த அமைப்பு. அதன் குறைந்தபட்ச முதலீடு போட்டு அதிகபட்ச லாபம் ஈட்ட வேண்டும் என்ற ஆவல் இச்சமூகத்தில் சராசரியாக உள்ள தொழிலாளரிடமும் வேறொரு வடிவத்தில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறைந்த அளவு வேலை செய்து அதிகச் சம்பளம் பெற வேண்டும் என்பது போன்ற விருப்பங்கள் சராசரித் தொழிலாளரிடமும் தோன்றும் வாய்ப்பு பெருமளவு இருக்கவே செய்கிறது. இது தொழிலாளரின் வர்க்கத் தன்மைக்கு எதிரானதான ஏமாற்றும் போக்கினை கொண்டது. பெரிய அளவில் ஏமாற்றுகிறவனே மிகச் சிறிய அளவில் ஏமாற்றப்படுகிறான் என்பதால் முதலாளித்துவ அமைப்பில் இது பெரிதாகத் தெரிவதில்லை.
ஆனால் இக்கண்ணோட்டம் கலாச்சார ரீதியாகப் போராடி முறியடிக்கப்படாமல் பரந்த அளவில் தொழிலாளர் மத்தியில் நிலவ அனுமதிக்கப்பட்டதால் ரஷ்ய மண்ணில் தோன்றிய முதல் சோசலிச அமைப்பே இதன்மூலம் நிர்மூலமானது. கோர்ப்பச்சேவ் போன்ற உழைக்கும் வர்க்கத்தின் துரோகிகள் சோவியத் தொழிலாளி வர்க்கத்திடம் நிலவிய சோம்பேறித்தனத்தையும் குடிபோதைப் பழக்கவழக்கங்களையுமே அவர்கள் கொண்டுவந்த முதலாளித்துவ சீர்த்திருத்தங்களுக்கு ஆதரவான குற்றச்சாட்டுகளாக வைத்தனர்.
இந்தப் போக்குகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை நன்குணர்ந்தே மாமேதை மார்க்ஸ் கூறினார் “தொழிலாளர் தம்மைத்தாமே மாற்றிக் கொள்ளாமல் தம்மைச் சுற்றியுள்ள உலகை மாற்ற முடியாது” என்று. அதாவது உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவத் தன்னலவாத , ஏமாற்று மற்றும் வஞ்சகத் தனமான போக்குகளைக் களைந்துவிட்டு நேர்மைத் தன்மையுடன் கூடிய ஒரு கூட்டுவாதக் கலாச்சாரத்தை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை சுருங்கக் கூறி விளங்க வைத்த வாசகங்களே அவை.
தொழிற்சங்கங்களை அரசியல் வழிப்படுத்திய லெனினின் திட்டம்
நடைமுறை ரீதியில் தொழிற்சங்கங்களை தொழிலாளி வர்க்க அரசியல் உணர்வூட்டப்பட்டவையாக எவ்வாறு ஆக்குவது என்பதை ஆக்கபூர்வ நியதிகளை வகுத்தெடுத்து அவற்றின் மூலம் நிலைநாட்டியவர் மாமேதை லெனின் ஆவார். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் ஏதாவதொரு வெகுஜன அமைப்பில் உறுப்பினராகக் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நியதியை அவர் வகுத்தெடுத்தார். அதன் மூலமாக தொழிற்சங்கங்களுக்கு அரசியல் வழிகாட்டும் அரும்பணியை அதில் உறுப்பினராக இருக்கும் கட்சி ஊழியர் மேற்கொள்வதோடு தொழிலாளிவர்க்க மனநிலையை ஒவ்வொரு தருணத்திலும் கட்சிக்கு எடுத்துச் சென்று அதனடிப்படையில் போராட்டத் திட்டங்களை வகுத்தெடுக்க லெனின் உருவாக்கிய இந்த நியதி வழிகோலியது.
இத்தகைய வழிகாட்டுதலின் கீழ் தொழிலாளி வர்க்க அரசியல் வழிநடத்திய தொழிற்சங்கங்களே பல காலம் உலகில் ஆதிக்கம் செலுத்திய தொழிற்சங்கங்களாக விளங்கின. அவற்றிற்கு வழிகாட்டும் சர்வதேச அமைப்பாக உலக தொழிலாளரின் சம்மேளனம்(WFTU) விளங்கியது. இப்போக்கு தொழிலாளி வர்க்க விடுதலைப் பயணத்தில் மைல் கற்களாக விளங்கிய சோசலிச சமூக அமைப்புகள் உலகெங்கிலும் உருவாக வழிவகுத்தது. ஒரு சக்திவாய்ந்த சோசலிச முகாமே அதனால் உருவாகி உலக ஏகாதிபத்தியங்களின் காலனியாதிக்கப் போக்குகளுக்கெதிரான ஒரு பெரும் எதிர் நீரோட்டத்தை அது உருவாக்கியது. உலகத் தொழிலாளி வர்க்கத்தின் சமுதாய மாற்ற போராட்டங்களின் அரணாக சோசலிச முகாமும் உலகத் தொழிலாளர் சம்மேளனமும் விளங்கின.
மேலைநாட்டு ஆளும் வர்க்கத்தின் யுக்திகள்
இக்கால கட்டத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் இத்தகைய சோசலிச ரீதியிலான கருத்தோட்டம் தங்கள் நாட்டின் தொழிலாளி வர்க்கத்தை பற்றவிடாது தடுப்பதற்காக பல தந்திரமான நடவடிக்கைகளைக் கையாண்டன. அதில் முக்கியமானது உலகம் முழுவதிலும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் முதலாளி வர்க்கம் தனது சுரண்டலின் மூலம் ஈட்டிய கொள்ளை லாபத்தின் ஒரு பகுதியைத் தங்களது நாடுகளின் தொழிலாளி வர்க்கத்திற்கு வாழ்க்கைச் சம்பளம் என்ற பெயரில் வழங்கியதாகும். அதனால் ஓரளவு வசதியான வாழ்க்கை நடத்த முடிந்த மேலைநாட்டுத் தொழிலாளி வர்க்கம் எத்தனை கூடுதல் ஊதியம் பெற்றாலும் தாங்கள் முதலாளித்துவ சமூக அமைப்பில் கூலி அடிமைகளே என்ற வெளிப்படையான உண்மையை மறந்து விட்டன. அது அந்நாடுகளின் தொழிலாளி வர்க்கத்தின் உள்ளார்ந்த புரட்சிகர மனநிலையில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியது. உலகின் வேறு பல நாடுகளிலும் அந்நாடுகளின் முதலாளி வர்க்கங்கள் உழைக்கும் வர்க்கத்திற்கு சிற்சில உதிரிப் பலன்களை வழங்கி அதனை மார்க்ஸ் கண்ட இழப்பதற்கு ஒன்றுமில்லாத தொழிலாளி வர்க்கம் என்ற நிலை இல்லாததாக ஆகச் செய்தன. சொத்துடமை மனநிலையின் கூறுகளை உழைக்கும் வர்க்கத்தின் மனதில் உருவாக்கவல்ல பல திட்டங்களை அவை அறிமுகம் செய்தன.
ஸ்டாலினின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட தேக்கநிலை
இதே வேளையில் சோசலிச நாடுகளிலும் தோழர் ஸ்டாலினின் மறைவுக்குப்பின்பு உழைக்கும் வர்க்க அரசியல் உணர்வைப் பராமரிப்பதில் தேக்கநிலை ஏற்பட்டது. தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வினையும் உழைக்கும் வர்க்கக் கலாச்சாரமான குறிப்பாக சோசலிச அமைப்பில் நிலவவேண்டிய “என்னால் முடிந்த அனைத்தையும் நான் சமூகத்திற்கு செய்கிறேன் சமூகம் எனக்கு எதைத் தருகிறதோ அதை நான் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்” என்ற கலாச்சாரத்தை எடுத்துக் கூறவும் பராமரிக்கவும் திராணியில்லாதவையாக தோழர் ஸ்டாலினுக்குப்பின் சோவியத் மண்ணில் வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகள் மாறிவிட்டன. சீரழிந்த முதலாளித்துவக் கலாச்சாரப் போக்குகளான ஊக்கத்தொகை வழங்கி உற்பத்தியை அதிகரிப்பது போன்ற திட்டங்களை அத்தலைமைகள் கொண்டு வந்தன. அதன் மூலம் அவை பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தைக் கொண்டுவராததோடு தன்னலவாத முதலாளித்துவக் கலாச்சாரத்தை உழைக்கும் வர்க்கத்தின் மனதில் விதைக்கவும் வளர்த்துவிடவும் செய்தன.
சீன மண்ணுக்கேற்ற விதத்தில் அங்கு சோசலிசக் கருத்துக்களின் அடிப்படையில் சமூக மாற்றத்தை நிறுவிய தோழர் மாவோவிற்குப் பின் அங்கு தோன்றிய டெங்சியோபிங் போன்றவர்களின் தலைமைகளும் முதலாளித்துவப் பாதையைப் பின்பற்றத் தொடங்கின. பூனை கறுப்பாய் இருந்தால் என்ன வெள்ளையாய் இருந்தால் என்ன அது எலியைப் பிடிக்கிறதா என்பதே முக்கியம் என்ற ஒரு வகையான கொச்சையான காரியவாதம் டெங்சியோபிங்ன் தலைமையினால் முன்வைக்கப்பட்டது.
திட்டமிடுதலும் , உணர்வு மட்டத்தைப் பராமரிப்பதும் சோசலிஸத்தின் அத்தியாவசியத் தேவை
இத்தகைய போக்குகளின் விளைவாகவும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு உலக ஏகாதிபத்திய சக்திகள் செய்த சூழ்ச்சிகளாலும் உலக சோசலிச அமைப்பு தகர்ந்து போனது. உலக முதலாளித்துவத்திற்கு பெரு மகிழ்ச்சியினை ஊட்டிய அந்த சோக நிகழ்வு உணர்வுபெற்ற உழைக்கும் வர்க்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு பேரிழப்பின் மூலம் அதிக விலை கொடுத்துப் பெற்ற படிப்பினையாகவே அமைந்தது.
சோசலிசம் ஒரு புது மனிதனை உருவாக்கும் முயற்சி.
மனித குலத்தின் இதுவரை எழுதப்பட்ட வரலாறே வர்க்கப் போராட்டத்தின் வரலாறு என்று மாமேதை மார்க்ஸ் கூறினார். அந்தச் சூழ்நிலையை மாற்றி வர்க்கங்களே இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கும் முயற்சியே அதன் சோசலிச ரீதியிலான சமூகமாற்ற எழுச்சியாகும். அதை நிலை நாட்டவும் நெருக்கடியின்றி பராமரிக்கவும் இரண்டு விசயங்கள் மிகமுக்கியமான முன்தேவைகளாகும். ஒன்று உருவான சோசலிச அமைப்பு பறிபோகாமல் பாதுகாக்கும் விதத்தில் உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் விழிப்புணர்வினைப் பராமரிப்பது மற்றும் அனைத்து வளர்ச்சிப் போக்குகளுக்கும் உகந்த விதத்தில் அதனை மேம்படுத்துவது. இரண்டு முதலாளித்துவ சமூக அமைப்பில் உள்ளதைப்போல் லாபம் ஈட்டவேண்டும் என்ற உந்து சக்தி அச்சமூக அமைப்பை வழி நடத்தாததால் அதன் பொருளாதாரம் சோசலிச ரீதியிலான திட்டமிடுதலைக் கட்டாயமாக்குகிறது. அதனைச் சரியாகச் செய்வது, சோசலிசப் பொருளாதாரத்தைப் பாரமரிப்பது இந்த இரண்டும் சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டுமானால் அதனைப் பராமரிக்க சீரிய உழைக்கும் வர்க்கத் தலைமை இருக்க வேண்டும். ஒரு கயிற்றில் நடப்பது போன்ற முன்னெச்சரிக்கையுடன் பராமரிக்கப்பட வேண்டியிருந்த இவ்விரு விசயங்களிலும் தோன்றிய தவறுகளே படிப்படியாக பூதாகரமாக வளர்ந்து அந்த அமைப்பையே நிர்மூலமாக்கி விட்டது.
மேலும் தோழர் ஸ்டாலினுக்குப் பின் உலக அளவில் உழைக்கும் வர்க்க அரசுகளை அந்தந்த நாடுகளின் முதலாளித்துவ சூதுகளையும் சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தி முறியடித்து வழிநடத்தப் பொதுவான வழியினைக் காட்டவல்ல உழைக்கும் வர்க்கத் தலைமை இல்லாமல் போய்விட்டது. அதனால் உலகின் பல முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் அவற்றின் புற ரீதியான வளர்ச்சிப் போக்குகள் சோசலிச சமூக அமைப்பை நிறுவுவதற்குத் தேவையான புறச் சூழ்நிலைகளை உருவாக்கிய போதிலும் அந்நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தை வழிநடத்தி சோசலிச சமுதாய மாற்றத்தைக் கொண்டுவரத் தவறிவிட்டன. அதன் விளைவாக ஒரு முகாம் என்று கூறும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் பல சோசலிச நாடுகள் இருந்த போதிலும் அந்த சோசலிச முகாம் அதிக எண்ணிக்கை கொண்ட முதலாளித்துவ நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டதாக இருந்ததே தவிர சோசலிச முகாம் முதலாளித்துவ முகாமை சுற்றி வளைத்திருக்கவில்லை.
பின்னடைவு புகட்டும் மிகப் பெரிய படிப்பினை
இந்தச் சூழ்நிலையில் மனிதனை, சமூகத்தை அதில் நிலவும் ஒவ்வொரு அம்சத்திற்கும் எதிரான மாற்று அம்சத்தை முன்வைத்து அடிப்படையிலேயே அதனை மாற்றும் சோசலிச முயற்சிக்கு ஏற்பட்ட இத்தகைய பின்னடைவு மாமேதை மார்க்ஸினால் உருவாக்கப்பட்டு அவரது பொருத்தமான சீடர்களான எங்கெல்ஸ் , லெனின் , ஸ்டாலின் , மாவோ போன்றவர்களால் புடம் போட்டு வளர்க்கப்பட்ட உழைக்கும் வர்க்க அரசியல் உணர்வு பெற்றவர்களை முற்றாக நிலைகுலையச் செய்யவல்லவையல்ல. ஏனெனில் எந்த சமூகத்தின் எந்த முதலாளி தொழிலாளி என்ற நேர் விரோதத் தன்மை வாய்ந்த முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மாமேதை மார்க்ஸ் புரட்சிகர சமூகமாற்றக் கண்ணோட்டத்தை வகுத்தெடுத்தாரோ அந்த முரண்பாடு சமூகத்தில் இல்லாமல் போகவில்லை. முதலாளி வர்க்கம் அதன் புதைகுழியைத் தோண்டவல்ல உழைக்கும் வர்க்கத்தினை மிக அதிக எண்ணிக்கையில் இன்றும் உருவாக்கிக் கொண்டே உள்ளது. உலக அளவில் மிக அதிக வேகத்தில் சிறு உடமையாளர்கள் அழித்தொழிக்கப்பட்டு பட்டாளி மயமாக்கப்படும் போக்கு முன்னெப்போதும் கண்டிராத வேகத்தில் இன்றைய உலகமயச் சூழ்நிலையில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. முதலாளித்துவச் சந்தை நெருக்கடி முற்றி அதன் நிலைத்தன்மை நிலைகுலைந்து முதலாளித்துவ அரசுகளின் தில்லுமுல்லுத் திட்டங்களாலும் ஊக வணிகம் போன்ற சூதாட்டப் போக்குகளைக் கொண்டும் காலம் தள்ளும் நிலையிலேயே இன்றைய முதலாளித்துவம் உள்ளது. எனவே நிலவும் புறச்சூழ்நிலை சமுதாய மாற்றத்தின் உடனடித் தேவையை வேண்டுவதாகவும் வற்புறுத்துவதாகவும் உள்ளது. மிக அடிப்படைத் தன்மை வாய்ந்தவைகளான இந்தப் போக்குகளை மையமாக வைத்து இதற்குமுன் நிலவிய சோசலிச அமைப்பின் வீழ்ச்சியின் அனைத்து அம்சங்களிலிருந்தும் உரிய படிப்பினை எடுத்துக் கொண்டு சமூக மாற்ற எழுச்சியினை நிச்சயம் தட்டியயழுப்ப முடியும் என்ற உறுதி உழைக்கும் வர்க்க அரசியல் உணர்வு பெற்ற அனைவருக்கும் உண்டு.
அந்த வரலாற்றுப் பணியை செய்து முடிப்பதற்கு உகந்தவையாக இன்றுள்ள உழைக்கும் வர்க்க அமைப்புகள் உள்ளனவா என்பதைப் பார்ப்பதும் அவற்றை உரியமுறையில் வளர்த்தெடுப்பதுமே இன்றைய தேவையும் அவசியமும் ஆகும்.
No comments:
Post a Comment