Powered By Blogger

Thursday, April 21, 2011

உலக அளவிலும் இந்தியாவிலும் தொழிலாளர் இயக்கங்கள் எதிர்கொண்டிருக்கும் பின்னடைவுகளும் அதற்கான காரணங்களும்

உலகின் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் தொழிலாளரின் நடைமுறைப் பிரச்னைகளுக்காகவே பாடுபடும் தன்மையைக் கொண்டவையாகவே பல காலமாக உள்ளன. அமெரிக்காவில் ரொனால்டு ரீகனும் இங்கிலாந்தில் மார்க்ரட் தாச்சரும் அறிமுகம் செய்த புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்படும் வரை மேலை நாட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் ஊதியம் ஒரு சராசரி மனிதனின் சராசரி வாழ்க்கைத் தேவைகளை ஈடுகட்டும் அளவிற்கு இருந்தது. அதனால் தாங்கள் கூலி அடிமைகள் என்ற உணர்வோ அதனைத் தூக்கியயறிய சமுதாய மாற்றம் அவசியம் என்ற எண்ணமோ பரந்த அளவில் தொழிலாளருக்கும் அவர்களை வழிநடத்திய தொழிற்சங்கங்களுக்கும் இருக்கவில்லை.



புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தாராளவாதக் கொள்கை கொஞ்சநஞ்சமிருந்த பொதுத்துறையையும் அதன்மூலம் அரசு செய்துவந்த சமூக ரீதியான செலவினங்களையும் கட்டுப்படுத்தி எங்கும் தனியார்மயம், எதையும் சந்தைச் சக்திகளின் செயல்பாட்டிற்கே விட்டுவிடுதல், அரசின் தலையீட்டை அறவே எடுத்துவிடுதல் என்ற கொள்கைகளைக் கடைப்பிடித்ததால் கொஞ்சநஞ்சமிருந்த வேலைப்பாதுகாப்பு, வாழ்க்கைச் சம்பளம் போன்ற அனைத்து விசயங்களும் காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டன.

குறிப்பாக அமெரிக்க நாட்டு முதலாளித்துவம் நுகர்பொருள் உற்பத்தி செய்யும், உற்பத்தித்துறையைக் கைவிட்டுவிட்டு முழுக்க முழுக்க ஊக வணிக பங்குச் சந்தையில் தனது நிதி மூலதனத்தை முதலீடு செய்து குறுக்கு வழியில் பொருளீட்டுவதையே தனது தாரக மந்திரமாகக் கருதி செயல்படத் தொடங்கியது. அதன் நுகர்பொருள் தேவையினை ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் தங்களது நுகர்பொருள் ஏற்றுமதிகள் மூலம் பூர்த்தி செய்தன. உற்பத்தித் துறையைப் பொறுத்தவரையில் இராணுவ தளவாட உற்பத்தி மட்டும் அமெரிக்காவில் நடைபெறும் ஓரே பொருளுற்பத்தி என்றாகிவிட்டது. இதனால் மொத்தம் மொத்தமாக வேலை இழப்புகள் ஆலை மூடல்கள் ஏற்பட்டன. அரசியல் உணர்வு அறவே இல்லாது நடத்தப்பட்ட அமெரிக்காவின் தொழிற்சங்கங்கள் இத்தகைய நிலையினைக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எனவே இந்நிலையில் என்ன செய்வது என்று நினைத்துப் பார்க்கவும் திட்டமிடவும் கூடத் திராணியற்றவையாக அவை இருந்தன.

பிற ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரையிலும் கூட நிலைமை இதிலிருந்து பெரிதும் மாறுபட்டதாக இல்லை. பொதுவாக அங்கு பெரிய தொழிற்சாலைகளும், அதன் தொழிலாளருக்குப் பல உதிரிப் பலன்களும் கிட்டி வந்தன. ஜப்பான் போன்ற நாடுகளில் ஒருவகை ஒப்பந்தத் தொழிலாளர் முறையும் பீஸ்ரேட் முறையும் அமலில் இருந்தன. அதாவது தரப்பரிசோதனை செய்வதற்கு மட்டும் நிரந்தரத் தொழிலாளர் என்று உயர் தொழில்நுட்பம் கற்ற ஒரு சிறு எண்ணிக்கையிலான தரமான நிரந்தர ஊதியம் பெறக்கூடிய தொழிலாளரை வைத்துக் கொண்டு பிற அனைத்து வேலைகளையும் ஒப்பந்தத் தொழிலில் , பீஸ்ரேட்டில் வழங்கிக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் நடைமுறையை ஜப்பானிய முதலாளிகள் கடைப்பிடித்தனர். இதனால் மிகக் குறைந்த உற்பத்திச் செலவில் நுகர்பொருள்களை உற்பத்தி செய்து அமெரிக்க ஐரோப்பிய நாட்டுச் சந்தைகளில் ஜப்பான் குவிக்கத் தொடங்கியது.

இந்தப் போட்டியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பல அமெரிக்க , ஐரோப்பிய நிறுவனங்கள் ஆலை மூடல்களைச் செய்தன. எனவே அந்நாட்டு முதலாளிகளும்
புது தாராளவாதக் கொள்கைகளை மிக வேகமாக கடைப்பிடித்துத் தொழிலாளர் ஊதியத்தைக் குறைக்கவும் அதன் மூலம் போட்டியில் நிற்க முடிந்தவர்களாக தங்களை ஆக்கிக் கொள்ளவும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்களது நாடுகளின் அரசுகளை நிர்ப்பந்தித்தனர். அதன் விளைவாகப் பல ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளரும் மிகப்பெரிய சம்பளக் குறைப்பு , வேலையிழப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

பிரான்ஸ் நாட்டில் மட்டும் புது தாராளவாதக் கொள்கைகள் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் கொண்டுவரப்படுவது அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளரின் கடுமையான எதிர்ப்பிற்கு ஆளானது. இன்றும் அங்கு தற்போது அமலில் உள்ள ஒரு முன்னேறிய ஓய்வூதியம் வழங்கும் நடைமுறையிலிருந்து பின்வாங்க அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கட்சிகளின் அரசுகள் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அவற்றால் அதில் வெற்றிபெற முடியவில்லை. அந்தத் திசை வழியிலான பிரெஞ்ச் அரசின் நடவடிக்கைகள் மிகக் கடுமையான தொழிலாளர் மற்றும் மாணவர் பகுதியினரின் எதிர்ப்பினை எதிர்கொண்டுள்ளன. இருப்பினும் ஒட்டு மொத்தத்தில் அரசியல் உணர்வும் சமுதாய மாற்றச் சிந்தனையும் இன்றி பலகாலம் செயல்பட்டதற்கான விலையினை இப்போது ஐரோப்பிய , அமெரிக்க நாடுகளின் தொழிற்சங்கங்கள் கொடுத்துக் கொண்டுள்ளன.

இருப்பினும் நமது நாட்டின் நிலைமைக்கும் அந்நாடுகளில் நிலவும் நிலைமைக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. அதாவது இங்கிருப்பது போல் ஜாதிக்கு ஒருகட்சி ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தொழிற்சங்கம் என்ற கேவலமான நிலை அங்கில்லை. பல துண்டுதுக்கானி கையூட்டுத் தொழிற்சங்கங்களினால் தொழிலாளர் ஒற்றுமை துண்டாடப்படாமல் பெரும்பாலும் ஒருசில சக்தி வாய்ந்த தொழிற்சங்கங்களின் கீழ் அந்நாட்டின் தொழிலாளர்கள் அணிதிரண்டு நிற்கின்றனர்.

நமது நாட்டின் அவலநிலை
நமது நாட்டிலோ, ஒட்டுமொத்த ஜனத்தொகையில் 2 சதவீதம் பேரே நிறுவன ரீதியாக ஒருங்குதிரட்டப்பட்ட தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். மிகப்பெரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் விவசாயக் கூலித் தொழிலாளராகவும் உதிரித் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களாகவும் உள்ளனர். நிறுவன ரீதியாக ஒருங்குதிரட்டப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மத்தியில் மட்டுமே தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் உள்ளன. அங்கும் ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்ற நடைமுறை இல்லை. தொழிலாளர் ஒற்றுமையை துண்டுதுண்டாகக் கூறுபோடும் விதத்தில் பல தொழிற்சங்கங்கள் உள்ளன. அவற்றை அப்பட்டமான முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் என்று பெயரளவில் கூறிக் கொண்டு மூலதனத்திற்கு உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையில் சமரசத்தை கொண்டுவர விரும்புபவையாக செயல்படும் கட்சிகளே வழி நடத்துகின்றன. எனவே சந்தர்ப்பவாத, பொருளாதாரவாத, காரியவாத போக்குகளின் அடிப்படையிலேயே அத்தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. அதிலும் குறிப்பாக உலகமயம் ஏற்பட்ட பின்பு இந்திய முதலாளிகள் உலகமயத்தின் அப்பாவிப் பலி கிடாய்களாகிவிட்டனர் என்ற கருத்தோட்டத்தைக் கொண்டவையாக ஆகிவிட்ட கம்யூனிஸ்ட்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்). போன்ற கட்சிகள் நிறுவன ரீதியாக ஒருங்கு திரட்டப்பட்ட உற்பத்தித்துறை சார்ந்த தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கச் செயல்பாடுகளை ஏறக்குறைய கைவிட்டுவிட்டன. தற்போது அரசு ஊழியர் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே செயல்படுபவையாக அக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உள்ளன.
உடைமை வர்க்க ஏஜெண்டுகள் தொழிற்சங்க நிர்வாகிகளின் பட்டியலில்
அப்பட்டமான நாடாளுமன்றவாதக் கட்சிகளாக ஆகிவிட்ட அக்கட்சிகள் தொழிலாளி வர்க்க அரசியல் உணர்வை சராசரி தொழிற்சங்க உறுப்பினர் மத்தியில் கொண்டு செல்வதை அறவே விட்டுவிட்டன. ஒரு காலத்தில் தொழிற்சங்க அரங்கில் ஆக்கபூர்வ விளைவுகளை ஏற்படுத்திய அக்கட்சிகள் பின்பற்றிய நடைமுறைகள் கூடத் தற்போது மோசமான சீரழிவினை ஏற்படுத்துபவையாக ஆகியுள்ளன. அதாவது தொழிற்சங்க நிர்வாகத்தை நடத்தும் பொறுப்பாளர்களை சராசரி மனநிலையில் உள்ள தொழிலாளர்களே தேர்ந்தெடுத்தால் அவர்கள் அரசியல் உணர்வும் அர்ப்பணிப்புத் தன்மையும் கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்பதால் அத்தொழிற்சங்கத்தை வழிநடத்தும் கம்யூனிஸ்ட் கட்சி அந்த நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து தொழிலாளரின் தேர்விற்கு வைக்கும் நடைமுறை இக்கட்சிகளால் பின்பற்றப்பட்டது. அதாவது வாக்களிப்போரின் தலையை எண்ணித் தலைமையைத் தீர்மானிக்கும் சம்பிரதாயவாத முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் சமூக விசயங்களின் பாலான புரிதலை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப் படுத்தப்படும் உழைக்கும் வர்க்க ஜனநாயகத்திற்கும் பெரிய வேறுபாடு உண்டு. அத்தகைய உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே இந்த கட்சி அமைப்பு நிர்வாகிகள் பட்டியல் தயாரித்துக் கொடுக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

ஒரு காலத்தில் வெளியே நடக்கும் உழைக்கும் வர்க்க இயக்கங்களை நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பதற்காகவே நாடாளுமன்றங்களில் போட்டியிடவும் பங்கேற்கவும் செய்கிறோம் என்ற அணுகுமுறையை ஓரளவேனும் கடைப்பிடிப்பவையாக இக்கட்சிகள் இருந்தன. அப்போது வர்க்கப் போராட்டங்களில் இக்கட்சிகளின் ஈடுபாடும் ஓரளவு இருந்தது. அப்போது சரியானவர்கள் சரியான பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஓரளவு சரியானவர்களைக் கொண்ட பட்டியலை கட்சி சங்கப் பொறுப்பாளர்களாக ஆக்குவதற்காகத் தொழிற் சங்கங்களுக்குக் கொடுத்து வந்தது.

ஆனால் இன்று வர்க்கப் போராட்டப் பாதையை அறவே கைவிட்டுவிட்டு வர்க்கக் கட்சியாக ஓரளவு தோற்றம் காட்டிக் கொண்டிருந்த அதன் தன்மையும் மாறி சீரழிந்த மற்ற முதலாளித்துவக் கட்சிகளோடு சேர்ந்துவிட்ட பின்னர் இக்கட்சிகளின் தலைமைகள் தயாரிக்கும் பட்டியல்களில் கட்சிக்கு அதிகபட்சம் நிதி வசூல் செய்து தருபவர் யாரோ அவரையே தொழிற்சங்கப் பொறுப்பாளர் பட்டியலில் இடம்பெறத் தகுதியானவர் என்று தீர்மானிப்பதாக ஆகிவிட்டது. அந்த அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்தக்காரர் முதலாளிகள் போன்றவர்களோடு சுமூகமான உறவு வைத்திருப்பவர்களே அப்பட்டியலில் பெரும்பாலும் தற்போது இடம் பெறுகின்றனர்.

பதவிக்காகக் கலிசடைச் சங்கங்களுடன் கூட்டு

சில பொதுத்துறை நிறுவனங்களில் ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்ற அடிப்படையில் தேர்தல் வைத்து சங்கங்கள் அங்கீகரிக்கப்படும் நடைமுறை உள்ளது. அங்கெல்லாம் இடதுசாரி ஒற்றுமை என்ற கோட்பாடு ரீதியான நிலைக்கு எள்ளளவும் இடம் கொடுக்காமல் தாங்கள் பெரும்பான்மை பெற வேண்டும் என்பதற்காக அனைத்துவகை கலிசடைத் தொழிற்சங்கங்களோடும் இந்தக் “கம்யூனிஸ்ட்” தொழிற்சங்கங்கள் கூட்டும் உறவும் வைத்துக் கொள்ளும் போக்கு தலை விரித்தாடுகிறது. இவ்வாறு அவர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு அவர்களுக்குப் பல பதவிகளை வழங்கிய பின் கோரிக்கைகளைக் கைவிடும் வேளைகளில் அவர்களையும் சேர்த்து இழுத்துச் செல்வதால் இந்த நிலைமை நேர்கிறது என்று அதையே சாக்காகக் கூறும் சந்தர்ப்பவாத நடைமுறையும் இக்கட்சிகளால் பின்பற்றப்படுகிறது.

மாதம் தோறும் பொதுத்துறை நிர்வாகங்கள் கூட்டும் தொழிலாளர் பிரச்னைகளை முன்வைக்கும் கூட்டங்களில் பங்கேற்பதற்குப் பெற்றுள்ள உரிமை போன்றவைகள் இச்சங்கங்களை அதிகார வர்க்க அமைப்புகளாக ஆக்கிவிட்டன. பரந்த அளவில் தொழிலாளருக்கு அரசியல் உணர்வூட்டும் கல்வியோ தொழிலாளரைத் தொழிற்சங்க முடிவுகளை எடுப்பதில் முக்கிய பங்காற்றுபவர்களாக ஆக்கும் போக்கோ இல்லாத நிலையில் கூட்டுத் தலைமைக்குப் பதிலாக தனிநபர் தலைமைகளே இச்சங்கங்களில் தலைதூக்குகின்றன.

அதன் விளைவாக ஏமாற்று, தந்திரங்கள் போன்றவை தொழிற்சங்கத் திறமைகளாக கருதப்படும் போக்கு உருவாகி விட்டது. நிர்வாகத்துடன் வைத்துள்ள நல்லுறவே தீர்மானிக்கும் தன்மையதாக ஆகி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சில சலுகைகளை நாம் பெற்றுக் கொள்வோம் நிர்வாகம் அதற்கு வேண்டியவர்கள் சிலருக்குத் தேவையானவற்றைச் செய்து கொள்ளட்டும் என்ற கூட்டுக் களவானித்தனம் நடைமுறை உபாயம் என்ற பெயரில் இச்சங்கங்களால் செயல் படுத்தப்படுகிறது.

அதிகபட்ச லாபத்திற்காக எதையும் செய்யும் முதலாளி வர்க்கம்

நிறுவனமயமாகியுள்ள தொழிற்சாலைகளில் பல தற்போது ஜப்பானிய உக்தியை மிகப் பெருமளவு பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன. நிரந்தரத் தொழிலாளர் என உயர் தொழில்நுட்பம் கற்ற ஒரு சிலரை மட்டும் வைத்துக் கொண்டு பிற அடிப்படைத் தொழில்கள் அனைத்தையும் ஒப்பந்தத்திற்கு விடும்போக்கு வளர்ந்து நிலைபெற்று வருகிறது. ஒப்பந்தக்காரர்கள் தொழிலாளருக்கு மிகக் குறைந்த கூலி கொடுத்துக் கடுமையாக சுரண்டி அதன்மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து பெரிய நிறுவனங்கள் தாமாகவே அவர்களுக்குத் தேவைப்படும் எந்திர உறுப்புகளைச் செய்தால் எந்த விலை வருமோ அதைக்காட்டிலும் குறைந்த விலையில் பெரிய நிறுவனங்களுக்குக் கொடுக்கின்றனர். அந்த ஒப்பந்தம் எடுத்துச் சுரண்டும் முதலாளிகள் சிறு முதலாளிகள் என்ற இக்கம்யூனிஸ்ட் கட்சிகளின் வரையறையில் வந்து விடுகின்றனர். அதாவது அவர்கள் இவர்களது நேசசக்திப் பட்டியலில் வந்து விடுகின்றனர்.

நிறுவன ரீதியாக திரட்டப்பட்டவைகளாக இருந்த பல தொழிற்சாலைகள் கூட தற்போது இந்திய முதலாளிகளின் சதியினால் பல துண்டுகளாக ஆக்கப்பட்டு எந்தவகை உரிமைகளும் சலுகைகளும் இல்லாதவர்களாக அங்கு வேலை செய்யும் தொழிலாளரை ஆக்கிவிட்டன. மும்பை போன்ற பகுதிகளிலிருந்த பல பெரும்பெரும் துணி நெசவாலைகள் துண்டாடப்பட்டு தற்போது சூரத் போன்ற இடங்களில் பவர்லூம்களாக ஆகிவிட்டன. தினக்கூலி, உதிரிப்பலன்கள் எதுவும் இல்லாமை, தொழிற்சங்க ரீதியான செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி போன்றவை இதன்மூலம் எளிதில் நடை பெற்று வருகின்றன. தென் மாநிலங்களில் நூற்பாலைகள் அனைத்திலும் சுமங்கலித்திட்டம் என்ற பெயரில் இளம் பெண் பிள்ளைகளை நூற்பாலைத் தொழிலில் கொத்தடிமைத்தனமான சுரண்டலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு மூன்றாண்டுகளுக்கான கூலி 5,0000 என்ற அளவிற்கே வழங்கப்படுகிறது. பட்டாசு, தீப்பெட்டி, அச்சு போன்ற தொழில்களிலும் ஒப்பந்த முறையும், பீஸ்ரேட் முறையும் கோலோச்சும் கொடுமை நிலவுகிறது. இத்தொழில்கள் எவையுமே தொழிற்சங்க செயல்பாட்டு வரையறைக்குள் வராதவையாக உள்ளன.

தற்போது அந்நிய மூலதனத்தைக் கொண்டு உருவாக்கப்படும் தொழிற்சாலைகளிலும் தகவல் தொழில் நுட்பத் தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்கங்கள் என்பதே நினைத்துப் பார்க்க முடியாதவையாக ஆக்கப்பட்டுவிட்டன. போர்க்குணமிக்க தொழிற்சங்கங்கள் என்று கருதப்பட்ட பல சங்கங்கள் இன்று சீரழிந்து செயல்பாடிழந்து சின்னாபின்னமாகியிருக்கும் நிலை தொழிலாளர் மத்தியில் உருவாக்கியுள்ள அவநம்பிக்கை தொழிற்சங்கங்களை உருவாக்கிப் போராடுவதன் மூலமே பெருகிவரும் நமது பிரச்னைகளுக்குத் தீர்வு உள்ளது என்ற நம்பிக்கையைப் பொதுவாகச் சீர்குலைத்துள்ளது. ஆங்காங்கே இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் வேலை செய்பவரை அறிவுப்பூர்வமாக அணுகி அவர்களை அணிதிட்டத் திராணியற்றவையாக இத்தொழிற்சங்கத் தலைமைகள் உள்ளன. 8 மணிநேர வேலை , வேலைப்பாதுகாப்பு என்பது அறவே இல்லாது வெளிப்படையாகப் பார்த்தால் கூடுதல் ஊதியம் போல் தோன்றினாலும் அவர்களுக்கு கொடுபடாத ஊதியம் கொடுக்கப்படுவதைப் போல் 10 மடங்கிற்கு மேல் இருக்கும் என்ற அடிப்படையிலேயே தகவல் தொழில் நுட்பத்துறை சார்ந்த தொழில்கள் நடத்தப் படுகின்றன.

இருந்தாலும் இவற்றை எடுத்துச் சொல்லி அவர்களை தொழிற்சங்க வட்டத்திற்குள் கொண்டுவர எந்தப் பெரிய தொழிற்சங்கமும் இன்றுவரை முன்வராத நிலையே நிலவுகிறது. தொழிலாளரிடம் நிலவும் இந்த அவநம்பிக்கைப் போக்கைத் துடைத்தெறிந்துவிட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று கருதப்படுபவை எவற்றிலேனும் தொழிற்சங்கம் உருவாக்கும் யுக்தி மேற்கொள்ளப்பட்டால் அவை அரசின் எத்தகைய காட்டுத்தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதற்கு குர்காவுன் நிகழ்வுகள் சுவரில் எழுதிய சித்திரம் போல் பூதாகரமாக எழுந்து நிற்கின்றன.

தொழிற் சங்கங்களும் வழக்கறிஞர் அலுவலகங்களும்

தொழிற்சங்க இயக்கம் நிலைபெற்று இருக்கும் அரசின் சேவைத் துறைகளில் அத்துறைசார்ந்த தொழிற்சங்கங்கள் சமூக நலனையும் மனதிற்கொண்டு நடத்தப்படும் மக்கள் ஆதரவு மனநிலையோடு நடத்தப்படுவது மிகவும் அவசியம். இல்லாவிடில் அவை அந்தந்தத் துறைகள் சார்ந்தவர்களின் நலன்களை மட்டும் உயர்த்திப் பிடிக்கும் வழக்கறிஞர் அலுவலகங்களாக ஆகிவிடும். பொதுவாகத் தொழிலாளர் இயக்கங்கள் சமூக நலனுக்கு எதிரானவையாக ஆவதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும் நடைமுறை ரீதியில் தொழிலாளரின் கூட்டு வலிமை அவ்வப்போது சந்தர்ப்பவாதத் தலைமைகளால் பிற மக்கட் பகுதியினருக்கு சங்கடம் விளைவிக்கும் விதத்திலும் நடத்தப் படுகிறது.

இன்று அரசுத் துறையில் உள்ள பல சங்கங்கள் இவ்வாறு வழி நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். இந்த முதலாளித்துவ அமைப்பில் உடமை வர்க்கங்களுக்காக இருப்பதே அரசு நிர்வாகம். அதில் வேலை செய்பவர்களும் உடமை வர்க்கத்திற்கு வளைந்து கொடுக்கும் மனநிலையுடனேயே பெரும்பாலும் இருப்பர். அச்சங்கங்களை ஒரு சரியான இடதுசாரிக் கண்ணோட்டம் வழி நடத்தவில்லை என்றால் உடமை வர்க்க நலன்களுக்கு உறுதுணையாக இருப்பவையாகவே அந்த அமைப்புகள் ஆகிவிடும். அந்நிலையில் மக்கள் இயக்கங்கள் அரசு நிர்வாகங்களின் உடமை வர்க்கச் சார்பு நிலையை எதிர்த்து நடத்தப்படும் போது அரசு நிர்வாகம் மட்டுமல்ல இடதுசாரி அரசியல் கண்ணோட்டத்தோடு வழி நடத்தப்படாத தொழிற்சங்கங்களும் நிர்வாகத்தின் பங்கும் பகுதியுமாக மக்கள் இயக்கங்களுக்கு எதிராக நிற்கும் எதிர்மறை நிலை தோன்றிவிடும்.

ஊழல் ஊழியரைப் பாதுகாக்கவே ஊழியர் சங்கங்கள்

மேலும் ஊழலை உருவாக்கி ஊட்டி வளர்ப்பதே சமூகத்தில் உடமை வர்க்கத்தினர் தான். அரசு நிர்வாகத்தை தங்களுக்குச் சாதகமாக வைத்திருப்பதற்காகப் பற்பல தனிப்பட்ட முதலாளிகள் அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழியர்களையும் நிர்வாகிகளையும் ஊழல் மயமாக்கி வைத்திருப்பது கண்கூடான விசயம். அவ்வப்போது நிர்வாகம் முறையாகத்தான் நடக்கிறது என்றுகாட்டுவதற்காக சில ஊழியர்களின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போலவும் அதற்காக இருக்கும் அரசு நிர்வாக அமைப்புகள் பாவனை காட்டுவதுண்டு. அப்போதெல்லாம் அந்த ஊழல் ஊழியருக்கு ஆதரவாக உள் விசாரணை உள்பட அனைத்திலும் ஈடுபடுவது இந்த அரசு ஊழியர் தொழிற்சங்கங்களே. இன்று பாவனைப் போராட்டங்கள் தவிர வேறு உழைக்கும் வர்க்க இயக்கங்கள் எதுவும் பெரிதாக நடைபெறாத நிலையில் தொழிற்சங்கங்களின் மிக முக்கியப்பணி இதுபோன்ற ஊழல் ஊழியர்களை பாதுகாப்பதற்கான செயல்படாகவே பெரும்பாலும் உள்ளது. இதுதான் இன்று உழைக்கும் வர்க்க அமைப்புகள் என்ற பெயரில் தொழிற்சங்கங்கள் செயல்படும் நிலை.

குரல் கொடுத்தால் திரண்டெழும் நிலையில் மேலை நாட்டு உழைப்பாளிகள்
மேலை நாடுகளைப் பொறுத்தவரை அங்குள்ள தொழிலாளர் தார்மீக முதுகெலும்பு உடையவர்களாக இருப்பதால் தற்போது பொருளாதார நெருக்கடி புதிய தாராளவாதக் கொள்கைகள் ஆகியவற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவற்றிற்கு எதிராக யாரேனும் குரல் கொடுத்தால் உடனே திரண்டெழும் மனநிலையுடன் உ ள்ளனர். ஆனால் அங்குள்ள தொழிற்சங்க அமைப்புகளோ மிகப் பெரியவைகளாக இருந்த போதிலும் வந்துள்ள இந்தக் கோரத்தாக்குதலின் பரிமாணத்தினாலும் தொடர்ச்சியாக வர்க்க சமரச சக்திகளாக செயல்பட்டு அதுவே அவர்களின் செயல்பாட்டுமுறை என்று ஆகிவிட்டதாலும் இன்றைய உடனடி தேவையாக மாறியுள்ள சமூக மாற்றத்திற்காக குரல் கொடுக்க திராணியற்றவையாக உள்ளன.

ஒட்டுமொத்தப் பிரச்னையும் முதலாளித்துவ உற்பத்தி முறையிலிருந்தே உருவாகிறது என்பதைக் கோர்வையாக அனைத்து அம்சங்களிலும் விளக்கிச் சொல்லி விளங்க வைக்கும் இடதுசாரி அமைப்புகள் அங்கு இல்லாததால் அழைப்புகள் வரும் போதெல்லாம் செவிமடுத்து சியாட்டிலில் டபிள்யு.டி.ஓவை எதிர்த்து நடைபெற்றது போன்ற போராட்டங்களிலும் பிரான்ஸில் சர்கோசி அரசாங்கம் கொண்டுவர முயலும் பல புதிய தாராளவாதக் கொள்கைகளை எதிர்த்து நடைபெற்றவை போன்ற போராட்டங்களிலும் ஈடுபடுகிறார்களே தவிர இப்பிரச்னைகளிலிருந்தான நிரந்தரத் தீர்வைத் தரவல்ல பட்டாளி வர்க்க விடுதலைப் பாதை அவர்களுக்குக் காட்டப்படாததால் அதை நோக்கி செல்ல முடியாதவர்களாக அவர்கள் இருக்கின்றனர்.

1 comment:

  1. இந்தியாவிலும் பெரும்பாலான தொழிற்சங்ககள் வர்க்க சமரச கட்சிகளாகி போயின

    ReplyDelete