Powered By Blogger

Wednesday, April 20, 2011

கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் நாகர்கோவில் கூட்டம்

நாகர் கோவில் வருவாய்த் துறை ஊழியர் சங்கக் கட்டிடத்தில் கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டம் ஒன்று 19.03.2011 அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்)., சி.எம்.பி., சி.டபிள்யு.பி., எஸ்.யு.சி.ஐ., சி.பி.ஐ(எம்.எல்.கே.என்.ஆர்). போன்ற பல கம்யூனிஸ்ட் கட்சிகளின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதுதவிர அனிலி, இலைகள் இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகளிலிருந்தும் தோழர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முக்கியமான தோழர்கள் பிரசாத், தங்கநாடார், சுலிஸ், மகிழ்ச்சி, ராபின்சன், ஜெபமணி, சுதன், அசன் ஆகியோராவர். தோழர் போஸ் அவர்களின் ஏற்பாட்டில் பல நாள் தயாரிப்புகளுக்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கூட்டம் அதன் முதல் நடவடிக்கையாக கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்த விவாதத்தை நடத்தத் தீர்மானித்தது. அந்தச் சிறப்புமிகு பொறுப்பைத் தமிழக முற்போக்கு வாசகர் வட்டாரத்தில் நன்கு அறிமுகமானவரும் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற முற்போக்கு எழுத்தாளருமான தோழர் பொன்னீலனிடம் ஒப்படைத்தது.



கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல் பகுதி மீதான விவாதத்தைத் தோழர் பொன்னீலன் அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிமையாக முன்வைத்தார். இதுவரை எழுதப்பட்ட மனித குலத்தின் வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்பதில் தொடங்கி எவ்வாறு முதலாளித்துவ உற்பத்திமுறை உலகளாவிய உற்பத்தி முறையாகத் தேசிய வரையரைகளை உடைத்தெறிந்து வளர்ந்தது என்பதையும் இனிமேல் வாழவும், வளரவும் போகின்ற ஒரே உற்பத்தி முறை அதுதான் என்பதை நிறுவியது என்பதையும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் காணப்படும் மேற்கோள்களுடன் அவர் விளக்கினார். அன்றுதொட்டுச் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள் யாவும் வர்க்க முரண்பாட்டின் பிரதிபலிப்புகளாகவே பார்க்கப்பட வேண்டியவையாக எவ்வாறு ஆயிற்று என்பதையும் அவர் விளக்கினார்.

சைவ , சமண மதங்களுக்கு இடையேயான போராட்டங்களும் அந்த வெளிச்சத்திலேயே பார்க்கப்பட வேண்டியவை என்பதையும் ராஜ ராஜ சோழன் எவ்வாறு ஆலயங்கள் கட்டி ஆலயங்களில் இருக்கும் கடவுளர்களுக்கு நாட்டின் நிலங்கள் அனைத்தும் சொந்தம் ஆனால் அந்தக் கடவுளே தனக்குச் சொந்தம் என்று கூறி நிலங்களின் மீதான தனது மேலாதிக்காத்தை நிறுவி விவசாயிகளின் நில உரிமையைப் பறித்தான் என்பதையும் அதனை எதிர்த்து சமணர்கள் எவ்வாறு விவசாயிகளை அவனுக்கு எதிராக அணிதிரட்டினர் என்பதையும் எடுத்துரைத்தார்.


கலை, இசை, நாட்டியம் ஆகியவற்றையே தங்களது முழுநேரப் பணியாகக் கொண்டிருந்த தேவ அடியார்கள் பின்னர் எவ்வாறு தேவடியாள் என்ற விலை மாதுகளின் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதையும் எடுத்துரைத்தார். முதலாளித்துவ வளர்ச்சியின் காரணமாக எவ்வாறு பழைய சமூகத்தின் உறவு முறைகளும் நெறிகளும் தகர்தெறியப்பட்டன என்பதை கம்யூனிஸ்ட் அறிக்கையின் மேற்கோள்களுடன் அவர் விளக்கினார்.

அவரது உரைக்குப் பின்பு தோழர்கள் ஜெபமணி, மகிழ்ச்சி, பிரான்சிஸ், சுதன், முருகன், தங்கநாடார் போன்றவர்கள் தங்களது கருத்துக்களையும்இதுபோன்ற நிகழ்ச்சிகள் மென்மேலும் தொடரவேண்டும் என்ற ஆவலினையும் வெளிப்படுத்தினர். சுதன் மார்க்சிய இலக்கியங்களைப் படிப்பது அவற்றை விவாதிப்பது என்ற முன்பிருந்த போக்கு தற்போது இளைய தலைமுறையினரிடம் இல்லாமல் போயிருக்கிறது. அந்தத் தலைமுறை இடைவெளியை அகற்ற பொன்னீலன் போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


விஞ்ஞானங்களின் விஞ்ஞானம்
அக்கூட்டத்தில் விருந்தினராகக் கலந்து கொண்ட கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ்
பிளாட்பார்ம் ன் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான தோழர் ஆனந்தன் அந்நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கினார்.

அவர் தனது உரையில் கம்யூனிஸ்ட் அறிக்கை கடந்த 2000 ஆண்டுகளின் மனிதகுல வரலாற்றின் ஒரு சாதனையாக வெளிவந்த நூல். 20வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் 2000 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த நூல்களாகக் கருதப்பட்ட டார்வினின் பரிணாமக் கொள்கையை விளக்கும்
மற்றும் பிராய்டின் சைக்கோ அனாலிசிஸ் ஆகிய நூல்களுடன் சேர்த்து வைத்துப் பார்க்கப்பட்டதொரு நூல் அது என்பதையும் ஒரு வகையில் பார்த்தால் கம்யூனிஸ்ட் அறிக்கை தவிர மற்ற இரண்டு நூல்களும் உயிரியல் மற்றும் உளவியல் போன்ற தனிப்பட்ட விஞ்ஞானங்கள் குறித்தவையாக இருந்த வேளையில் கம்யூனிஸ்ட் அறிக்கை மட்டுமே அனைத்து விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக சமூகத்தின் கருத்துக்கள் சிந்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையையே மாற்ற வல்லதாக இருந்த நூல் என்பதையும் அந்த வகையில் அது மற்ற இரண்டு நூல்களைக் காட்டிலும் கூடச் சிறந்ததாகக் கருதப்பட வேண்டியதாகும் என்பதையும் எடுத்துரைத்தார்.
மாதிரி அமைப்புச் சட்டம்

கம்யூனிஸ்ட் அறிக்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மாதிரி அமைப்புச் சட்டம் என்பதையும் இன்றுவரை அதனை விஞ்சிய அமைப்புச் சட்டம் எதுவும் உருவாகாததால் அதுவே அத்தகைய மாதிரியாக இன்றளவும் நீடித்துக் கொண்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார். கம்யூனிஸ்ட் அறிக்கையை முழுமையாகப் புரிந்து படித்தால் அது இயக்கவியல் பொருள் முதல் வாதத்தையும் வரலாற்றியல் பொருள் முதல் வாதத்தையும் ஒருசேரப் படித்ததற்கு சமம் என்று அவர் தனது உரையில் கூறினார்.

தள்ளிப் போடலாம் தவிர்க்க முடியாது

கம்யூனிஸ்ட் அறிக்கையில் உயர்த்திப் பிடிக்க வேண்டிய அம்சங்கள் சமூக மாற்றம் வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி என்பதும், நமது சமூகத்தில் நிகழும் அனைத்துப் போராட்டங்களும் வர்க்க அடிப்படையைக் கொண்டவையே என்பதுமாகும். முதலாளித்துவம் ஒழுங்கற்ற உற்பத்தி முறையைக் கொண்டது அதனால் மக்கள் வாங்கும் சக்தியைத் தாண்டியும் அதன் உற்பத்தி செல்லக் கூடியது. அதன் விளைவாக ஆலை மூடல்கள் போன்றவை தோன்ற வழிவகுத்து சமூகத்தில் உழைப்பாளர் எழுச்சியை ஏற்படுத்த வல்லது. அந்நெருக்கடிகளின் தாக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் உழைக்கும் வர்க்கம் நெருக்கடியின் அடிப்படையையும் தன்மையையும் ஆழமாக உணரும் வாய்ப்பினைக் கொண்டிருக்கிறது. பிரச்னைகளுக்கானத் தீர்வு அந்த அமைப்பையே அகற்றி சமூக உற்பத்தியை லாப நோக்கத்திலிருந்து விடுவித்து மக்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டதாக ஆக்குவதிலேயே உள்ளது என்ற அரசியல் கருத்தைத் தொழிலாளி வர்க்கம் உணரும் நிலைக்கு உந்தப்படும் நிலையும் தவிர்க்க முடியாமல் தோன்றும் வாய்ப்பினைக் கொண்டது. அதன் விளைவாக சமூக மாற்றம் என்பது நடந்தே தீரும். சமூக மாற்றத்தைச் சிறிதளவு ஒத்திப் போடவோ சிலகாலம் தள்ளி வைக்கவோ முடியுமே தவிர அதனைத் தவிர்க்க முடியாது.

அல்தூசர் போன்ற சிந்தனையாளர்கள் சமூக மாற்றம் வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி என்பதை முதலாளி வர்க்கம் அதனை மென்மேலும் தள்ளிப்போடும் வகையில் கடைப்பிடிக்கும் பல்வேறு நடவடிக்கைகளைக் கொண்டு மறுதலித்தாலும் வரலாற்று ரீதியில் கணிக்கப்படும் காலம் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் சமூக மாற்றம் வரலாற்றின் தவிர்க்க முடியாத விதியே என்பது அசலும் நகலும் நிரூபணமான ஒன்றே. முதலாளித்துவம் முடிவேதுமில்லாமல் அதன் கோல் போஸ்ட்டை இடைவிடாது நகர்த்திச் சென்று கொண்டே இருக்க முடியாது.

ஜாதியப் போராட்டங்களில் வர்க்க அடிப்படை

பின் நவீனத்துவம் என்ற பெயரில் அடிப்படை முரண்பாடு என்ற ஒன்றே இல்லை என்று கூறுவது அபத்தமானதும் எதிர்ப்புரட்சித் தன்மை வாய்ந்ததுமாகும். அது ஜாதி-மதப் போராட்டங்கள் போன்றவை அதனதன் வழிகளில் தனித்தன்மை வாய்ந்தவை. எனவே அவை வேறெந்த அடிப்படையான முரண்பாட்டோடும் பொருத்திப் பார்க்க முடிந்தவை அல்ல என்ற கருத்தை முன் வைக்கிறது. கம்யூனிஸ்ட் அறிக்கையின் வெளிச்சத்தில் ஜாதியம் சார்ந்த போராட்டங்களுக்குள்ளும் வர்க்க அடிப்படை இருப்பதைப் பார்க்க முடியும். அதாவது பின் நவீனத்துவம் முன்வைக்கும் கருத்திற்கு மாறாக முரண்பாடுகள் அனைத்திற்கும் அடிப்படையானதொரு மையமான முரண்பாடு இருப்பதை இவ்வாறு பார்ப்பதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு கம்யூனிஸ்டுகளாகிய நாம் ஒவ்வொன்றையும் பார்க்க முயல வேண்டும்.

இன்று இன்னும் பொருத்தமுடையதாக...முதலாளித்துவம் தனது வாழ்நாளை நீட்டிப்பதற்காக தொழிலாளி வர்க்க இயக்கங்களுக்கு அடிபணிந்து வழங்கிய பல சலுகைகளையும் தற்போது திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. வேலைக்கு நியமி, அயரும் வரை சுரண்டு, சோர்வுற்ற நிலையில் வேலையை விட்டுத் தூக்கியெறி என்ற கொடூரமான நிலையினை உழைக்கும் வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் தற்போதைய உலகமயச் சூழ்நிலையில் திணித்துள்ளது. அந்த நிலை கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு கருத்தையும் மிகச் சரியானதென நிரூபித்து இடைக் காலத்தில் இருந்ததை விட இன்று கம்யூனிஸ்ட் அறிக்கையை இன்னும் பொருத்தமுடையதாக ஆக்கியுள்ளது என்ற கருத்தை முன்வைத்தார். இறுதியாக இந்தப் பொறுப்புமிக்க அமைப்பு மார்க்சிய இலக்கியங்களைப் படிப்பதோடு நின்று விடாமல் தனது சக்திக்கு உகந்த வகைகளில் மக்கள் இயக்கங்களையும் கையிலெடுக்க வேண்டும். ஏனெனில் மார்க்சியக் கருத்துக்கள் நடைமுறையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதவை என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.


அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளிலுமிருக்கும் கம்யூனிஸ்ட்களின் சித்தாந்த ரீதியான ஒற்றுமையின் தேவையை வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இக்கூட்டம் ஒரு புதுப் போக்கை நிலை நாட்டுவதாக அமைந்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த அணுகுமுறை பின்பற்றப் பட்டால் அது ஒரு இயக்க அடிப்படையிலான ஆக்கபூர்வ இடதுசாரி மாற்றை முன் வைக்கவல்லதாக நிச்சயம் அமையும். இந்நிலையில் இவ்வமைப்பின் அடுத்த கூட்டம் கம்யூனிஸ்ட் அறிக்கையின் இரண்டாவது பகுதியை விவாதிப்பதற்காக 24.04.2011 சனிக் கிழமையன்று தக்கலையில் கூடும் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment